Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
செப்டம்பர் 2008
பொருளியல் தொடர் - 19
சமூக உழைப்பு என்றால் என்ன?
தியாகு


நாம் இந்தப் பாடத்தின் தொடக்கத்தில் பேனா என்ற ஒரு சரக்கை எடுத்துக் கொண்டோம். அது - எழுதப் பயன்படுவதால் பயன்-மதிப்பாக இருக்கக் கண்டோம். இந்த எளிய உண்மையை விளங்கிக் கொள்வதில் நமக்கு எவ்வித இடர்ப்பாடும் இல்லை. ஆனால் போகப் போக... மாற்று-மதிப்பு, மதிப்பு, மதிப்பு வடிவம், அவ்வடிவத்தின் வளர்ச்சி என்று நம் பகுப்பாய்வு முன்னேறிய போது... புரிந்து கொள்வது கடினமாகி விட்டது. ஏதோ பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டாற் போல் இருந்தது அல்லவா?

சரக்கின் சூக்குமங்களைப் புரிந்து கொள்வதில் எழும் இடர்ப்பாட்டுக்கு என்ன காரணம்? அது பயன்-மதிப்பென்ற முறையில் தனக்குரிய தன்மைகளால் மனிதத் தேவைகளை நிறைவு செய்யவல்லது என்பதைப் போலவே, அந்தத் தன்மைகள் மனித உழைப்பின் பலனாய் வரப்பெற்றவை என்பதும் எளிய செய்திதான். மரம் மேசையாவதும் மண் பாண்டமாவதும் மனித உழைப்பினால்தான்! கல் சிலையாவதும் கரி மின்சாரமாவதும் கூட மனித உழைப்பினால்தான்! இயற்கைப் பொருள்கள் மனித உழைப்பினால் மாற்றப்பட்டு மனிதத் தேவைகளை நிறைவு செய்யப் பொருத்தமான முறையில் வடிவெடுக்கின்றன. இது பாமரர்க்கும் புரியக் கூடியதே.

மனித உழைப்பு என்பது என்ன? மனிதனின் மூளை, நரம்புகள், தசைகள் முதலானவற்றின் செலவீடே அது. உழைப்பின் பல்வேறு வகைகளும் மனித உயிரமைப்பின் பல்வேறு வகைப்பட்ட ஆக்கச் செயற்பாடுகளே. மனித உழைப்பின் ஆக்கம் என்ற முறையில் சரக்குகள் மதிப்பைப் பெற்றுள்ளன. அதாவது மதிப்புகளாக உள்ளன என்று பார்த்தோம். மதிப்பின் அளவு என்பது உழைப்பின் அளவைப் பொறுத்தது. உழைப்பின் அளவு அதன் நீட்சியை, அதாவது அது நீடிக்கும் காலத்தைப் பொறுத்தது. ஆனால் சரக்கின் ஆக்கத்துக்குத் தேவையான உழைப்பளவைச் சமூக அளவில் கணக்கிட வேண்டும் என்று பார்த்தோம். ஒருவர் தனக்காகவே உழைத்துக் கொண்டிருக்கும் வரை, அதாவது தன் ஆக்கப் பொருள்களைக் கொண்டு தன் தேவைகளையே நிறைவு செய்து கொண்டிருக்கும் வரை, அவரது உழைப்பு சமூகத் தன்மை உடையதாவதில்லை. அவர் படைக்கும் ஆக்கப் பொருள் பயன்-மதிப்பாக இருப்பினும் மதிப்பாவதில்லை, சரக்கு ஆவதில்லை.

உழைப்பின் ஆக்கப் பொருள் எப்போது சரக்காகிறதோ அப்போதிருந்தே நம் மண்டையைக் குடைய ஆரம்பித்து விடுகிறது. தச்சர் தனக்காக நாற்காலியோ, தன் குடும்பத்தினருக்காக ஊஞ்சலோ செய்து கொண்டிருக்கும் வரை அவரது உழைப்புக்குச் சமூகத் தன்மையில்லை. அவர் சந்தைக்காக நாற்காலி அல்லது ஊஞ்சல் செய்யும் போதுதான், அதாவது தனக்காக அல்லாமல் பிறர்க்காக (மற்றவர்களிடம் விற்பதற்காக) இவற்றில் ஒன்றைச் செய்யும் போதே அவரது உழைப்பு சமூக உழைப்பாகிறது, அதன் படைப்பு மதிப்பாகிறது; சரக்கு எனும் வடிவம் கொள்கிறது.

இயற்கைப் பொருளாக்க அமைப்பில் பயன்-மதிப்புகளே ஆக்கப்படுகின்றன. சரக்குப் பொருளாக்க அமைப்பில்தான் அவை மதிப்புகள் ஆகின்றன. மதிப்பைப் படைக்கும் உழைப்பு சமூகத் தன்மையுடையது. அல்லது, சமூக உழைப்பினால்தான் மதிப்பைப் படைக்க முடியும். உழவர் விளைவிக்கும் நெல் அவருக்கானதன்று, சந்தைக்கானது, அதாவது எடுத்துக்காட்டாக ஒரு நெசவாளருக்கானது, அதே போல் நெசவாளர் நெய்யும் துணி, சந்தைக்கானது, அதாவது ஓர் உழவர்க் கானது என்றால், உழவரின் உழைப்பும் நெசவாளரின் உழைப்பும் சமூகத் தன்மை பெறுகின்றன. உழவருக்கும் நெசவாளருக்கும் இடையிலான உறவு சமூக உறவு ஆகிறது. சமூகத்தில் ஒரே ஒரு உழவரும் ஒரே ஒரு நெசவாளரும் மட்டும் இல்லை, வெறும் உழவர்களும் நெசவாளர்களும் மட்டும் இல்லை, வேறு பலரும் உள்ளனர் என்பதை நினைவிற்கொள்க. இவர்கள் அனைவரும் சரக்குப் பொருளாக்குநர்கள் என்ற முறையில், இவர்களது உழைப்பு சமூகத் தன்மையுடையது. இவர்களுக் கிடையிலானது சமூக உறவு ஆகும். வேறு வகையில் சொன்னால், இவர்களது உழைப்பு சமூகத் தன்மையுடையதாக இருப்பதால்தான் அந்த உழைப்பின் ஆக்கங்கள் சரக்குகளாகின்றன.

உழைப்பின் ஆக்கப் பொருள் சரக்காவது சமூக உழைப்பைப் பொறுத்தது; அதாவது சமூகத் தன்மை கொண்ட உழைப்பால்தான் சரக்கைப் படைக்க இயலும். சரக்குப் பொருளாக்கம் செய்வோரின் சமூக உறவு, அவர்களது உழைப்பின் சமூகத் தன்மை நமக்கு நேராகப் புலப்படுவதில்லை. அதனை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை விலக்கிப் பார்க்க வேண்டி யுள்ளது. அது என்ன திரை? அடுத்த பகுதியில் பார்ப்போம்.

இலக்கணம்:

சரக்குகளை, அதாவது சமூகத்திற்கான பண்டங்களை ஆக்கும் உழைப்பே சமூக உழைப்பு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com