Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
செப்டம்பர் 2008
நஞ்சை விதைக்கும் நாஞ்சில் நாடன்
கதிர்நிலவன்


நாஞ்சில் நாடன் எனும் பெயரைத் தமிழிலக்கிய உலகில் யாரும் உச்சரிக்காமல் இருக்க முடியாது. நவீன கால முன்னணிப் படைப்பாளர்களில் ஒருவர். ‘சதுரங்கக் குதிரைகள்' ‘எட்டுத் திக்கும் மத யானையும்' அவரின் புகழ்பெற்ற படைப்புகளாகும். அவரது புதினமாகிய தலைகீழ் விகிதங்களைத் திரையுலகம் சொல்ல நினைத்தது. அது ‘சொல்ல மறந்த கதை’யாக தமிழர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இவர் நாஞ்சில் வட்டாரச் சொல்லாடல்களைத் தன் எழுத்தில் வடித்தவர் மட்டுமல்ல; சுப்பிரமணியன் என்கிற தன் பெயரையே நாஞ்சில் நாடனாக மாற்றியவர். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு போல, நாஞ்சில் நாட்டின் மீதான மிகைப்பற்றே, இவர்க்கு நாஞ்சில் நாட்டைத் தனி மாநிலமாக்கிடத் தூண்டி விட்டுள்ளது.

இவர் ‘ஆனந்த விகடன்’ ஏட்டில் ‘தீதும் நன்றும்’ என்ற பெயரில் ஒரு தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அந்தக் கட்டுரையில் (3-9-08) நன்றாய் ஒரு தீதைச் சொல்கிறார்: “சின்ன மாவட்டங்கள் அமைவதோ, நிர்வாகக் காரணங்களுக்காக மாநிலங்கள் பிரிவதோ வரவேற்கத் தகுந்தவைதான். சமீபத்தில் உத்ராஞ்சல், ஜார்கண்ட், சத்தீஸ்கர் எனப் புதிய மாநிலங்கள் உத்திரப் பிரதேசத்தில் இருந்தும், பீகாரில் இருந்தும், மத்தியப் பிரதேசத்தில் இருந்தும் பிரிக்கப்பட்டதை அறிவீர்கள். ஆந்திராவில் தெலுங்கானா கோரிக்கை இருப்பதும், மராத்தியத்தில் கொங்க, விதர்பா, மரத்வாடா என்ற நிலைகள் உள்ளதும் நமக்குத் தெரியும். தமிழ்நாட்டைக்கூட இரண்டாக மூன்றாகப் பிரித்துக் கொள்வதில் எந்த பாவமும் இல்லை. எதற்கெடுத்தாலும், நாகர்கோயில்காரன் எதற்கு சென்னையில் போய் முகாமிட்டு நெரிசல்படுத்த வேண்டும்? மேலும் முடி சூட்டிக் கொள்ள நம்மிடம் இளவரசுப் பஞ்சம் இருக்கிறதா என்ன?” என்று வினா எழுப்பியுள்ளார்.

மாநில அரசு மாவட்டங்களைப் பிரிப்பதையும், தில்லி அரசு மாநிலங்களைப் பிரிப்பதையும் ஒன்றாகக் கருதி ‘நிர்வாகக் காரணங்கள்’ என்று புதிய பெயர் சூட்டுகிறார் நாஞ்சில் நாடன். முதலில் அவரது ‘தேசம்’ எதுவென்று அறிந்து கொண்டால் தான் இதற்கு முழு விடை சொல்ல முடியும். பண்டைய தமிழ் இலக்கிய வரலாற்றைக் கற்றுத் தெளிந்துள்ள நாஞ்சில் நாடனுக்கு நவீன அரசியல் சொல்லாடலான ‘மொழி வழித் தேசம்’ குறித்தும், அதன் தாயகக் கோட்பாட்டுரிமை குறித்தும் எதுவும் அறிந்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. கண்ணுக்குத் தெரியாத, புலன்களால் உணரப் பெறாத சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இருந்த இந்திய மனம் என்று அக்கட்டுரையில் நாஞ்சில் நாடன் புளகாங்கிதம் அடைவதன் மூலம் வெள்ளையர்கள் விற்பனைச் சந்தைக்காக உருவாக்கிய இந்தியத் தேசியமே தனது தேசம் என்பதை ஒப்புக் கொள்கிறார்.

ஒவ்வொரு தேசத்தின் மீதும் மொழியின் முகவரி எழுதப்பட்டிருக்கும். எல்லைக் கோடுகள் வரையப்பட்டிருக்கும். இந்தியத் தேசத்திற்கு மொழியின் முகவரியோ, எல்லைக் கோடுகளோ கிடையாது. ஆனால், நமது தேசத்திற்கு மொழியின் முகவரி இருப்பதால்தான் தமிழ்த் தேசம் என்று அழைக்கிறோம். எல்லைக் கோடுகள் வரையப்பட்டிருப்பதால்தான் தமிழ்நாடு என்று கூறுகிறோம்.

தமிழ் இலக்கியத்தின் மூல நூலான தொல்காப்பியம் தமிழ்நாட்டின் எல்லையை ‘வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என வரையறுத்துக் கூறுகிறது. தமிழ் நாட்டகம் எனப் பரிபாடலிலும், தமிழகம் என புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிலும் தமிழ்நாடு தமிழ் நன்னாடு என சிலப்பதிகாரத்திலும் சுட்டப்படுவதன் மூலம் இது வரலாற்று வழியில் உருப்பெற்று, வளர்ந்துள்ள ‘தமிழ்த் தேசம்’ என்று நம்மால் அறியமுடிகிறது. இந்தியத் தேசியத்திற்கு இத்தகையதொரு வரலாற்றுச் சான்று இல்லாத காரணத்தால் தான் கண்ணுக்குத் தெரியாத, புலன்களால் உணரப் பெறாத சத்தியத்துக்குக் கட்டுப்பட்டுள்ள இந்திய மனத்திலிருந்து இந்திய தேசத்தை நாஞ்சில் நாடன் காண முற்படுகிறார்.

‘இந்தியத் தேசம்’ என்பது வெள்ளையர்களால் உருவான விபத்து. வெள்ளையர்களை வெளியேற்றுவதற்கு எதிர்வகை தேசியமாக அது பயன்படுத்தப்பட்டது. அது தொடர்ந்து நீடிக்க முடியாத காரணத்தால்தான் மொழிவழித் தேசியக் கோரிக்கை வலுப்பெற்று 1956இல் மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கேற்ற வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படவில்லை. அது நாடுகளின் ஒன்றியம் என்ற பொருளுக்குப் பதிலாக மாநிலங்களின் ஒன்றியம் என்று மொழிவழி தேசங்களுக்கு விளக்கம் தந்தது. மொழிவழித் தேசியத்திற்கான இறையாண்மையை இந்திய அரசு தனக்குரியதாக மாற்றிக் கொண்டது. ஒரு தேசத்தின் பரப்பளவைக் கூட்டவோ, குறைக்கவோ, எல்லைகளை மாற்றவோ, தனக்கு மட்டுமே உரிமை இருப்பதாகப் பிரகடனப்படுத்தியது. அதனை நிரூபிக்கும் வகையில் தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத் தீவு சிங்கள இனவெறி அரசுக்குத் தாரை வார்க்கப்பட்டது.

மாநில அரசு என்று அழைக்கப்படும் தமிழக அரசுக்கு இறையாண்மை இருக்கும்பட்சத்தில், நிர்வாக வசதி கருதி மாவட்டங்களைக் கூட, மாநிலங்களாக பிரிவினை செய்து கூடுதல் அதிகாரம் அளிக்கலாம். இழந்த எல்லைகளை மீட்டிடவும், இருக்கும் எல்லைகளைக் காத்திடவும் ஒரு ‘இறையாண்மை’யுள்ள அரசால் மட்டுமே முடியும். அதே செயலை அதிகாரக் குவிமையமாய்த் திகழும் இந்திய அரசு செய்வதை ஏற்க முடியாது. ஏனெனில், மொழிவழி அல்லாத, ஒரு மொழி பேசும் தேசிய இனத்திற்குள் மாநிலப் பிரிவினை என்பது அத்தேசிய இனத்தைச் சிதைப்பதோடு அதன் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி விடும்.

இதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகளை நம்மால் கூற முடியும். தமிழீழத்தின் தாயகப் பகுதிகளான வடக்கையும், கிழக்கையும், தனி மாகாணங்களாக சிங்கள அரசு பிரித்திருப்பதற்குக் காரணம் தமிழீழ மக்களின் தாகமான தமிழீழத் தாயகத்தைக் கூறுபடுத்துவதற்குத்தான். காசுமீர் தேசிய இனத்தின் தாயகப் பகுதிகளான ஜம்மு காசுமீரையும் ஆசாத் காசுமீரையும் இந்திய - பாகிஸ்தான் அரசுகள் பிரித்து வைத்திருப்பதற்கு அடிப்படையே காஷ்மீர் மக்கள் தனித்தேசிய இனம் என்பதை மறுப்பதற்குத்தான். நாஞ்சில் நாடன் கூறும் ஜார்கண்ட், சட்டீஸ்கர், உத்தராஞ்சல் போன்ற புதிய மாநிலங்களெல்லாம் தனித்தனி மொழி பேசக்கூடிய பகுதிகளாகும்.

தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கை என்பது தெலுங்கு தேசிய இனத்தைக் கூறுபடுத்துகின்ற முயற்சியே! இந்தியத் துணைக்கண்டத்தில் மொழிவழி மாநிலக் கோரிக்கை என்பதே முதன்முதலாக ஆந்திராவில் தான் கிளர்ச்சி வடிவில் ஒலித்தது. குறிப்பாக, ‘விசலாந்திரா’ முழக்கமே தெலுங்கானா பகுதியில்தான் வலுப்பெற்றது. தமிழ்நாட்டிலும் கூட வடதமிழ்நாடு, தென் தமிழ்நாடு பிரிக்கப்பட வேண்டுமென்று மெல்லியதாய் சிலர் குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் வடக்கு, தெற்குப் பகுதியில் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தும் சாதியினரின் குரலாக இது ஒலிப்பதால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் இதைப் பொருட்படுத்துவதில்லை.

தமிழ்நாட்டின் சில பகுதிகள் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நிலை காணப்பட்டால் அதைச் சீர்படுத்துவதற்குப் போராடுவது ஏற்கத்தக்கது. அதைவிடுத்து, அப்பகுதிகளைத் துண்டாடுவதால் ஒரு பயனும் ஏற்படாது. இப்போதுள்ள தமிழகச் சட்டமன்றமே நிதி ஆதாரங்களுக்குத் தில்லிக்குக் காவடி தூக்கும் நிலையில், புதிதாக உருவாக்கக் கோரும் செந்தமிழ்நாடு, வட தமிழ்நாடு சட்டமன்றங்கள் எதனைச் சாதிக்க இயலும்?

நாகர்கோயில்காரன் சென்னையில் போய் நெரிசல்படுவதாக நாஞ்சில் நாடன் மிகவும் வருத்தப்படுகிறார். இவர் கூறும் அதே சென்னைக்காரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க தில்லிக்குப் போய் நெரிசல்படுகிறாரே! அதை என்னவென்று சொல்வார். உடனே, இந்தியாவின் தலைநகராக சென்னையை மாற்றவேண்டுமென கோரிக்கை விடுப்பாரா? கர்நாடகக்காரன், கேரளத்துக்காரன், காரைக்குடி தமிழன், தேவகோட்டை தமிழனென்று ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரிந்து நீருக்குச் சண்டையிட்டுக் கொள்வதாகப் பொத்தாம் பொதுவாகச் சாடுகிறார். இதன் மூலம் இதற்கு என்ன தீர்வு சொல்கிறார் என்று தெரியவில்லை.

மாநிலத்திற்குள் பிரிவினை ஏற்பட்ட பிறகு, கரூர்க்காரன் திருச்சிக்குத் தண்ணீர் விட மாட்டோம் எனச் சொல்லும் நிலை வராதா? என்று மீண்டுமொரு முறை தனக்குத் தானே கேள்வி எழுப்பி, மாநிலத்திற்குள் பிரிவினை தேவையில்லையெனத் கூற முன் வருகிறாரா? எல்லாம் குழப்பத்தின் உச்சம். அது மட்டுமின்றி, இந்தியத் தேசத்திற்கு வலு சேர்க்கும் விதமாக

“இமயத்தில் ஒருவன் இருமினான் என்றால்
குமரியில் இருந்து மருந்து கொண்டு ஓடினான்”

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல் வரிகளை வேறு கையாள்கிறார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இறுதிநாளில் தமிழ்த் தேசியக் கவியாக வாழ்ந்து மடிந்தவர். அவர் தொடக்க காலத்தில் பேராயக் கட்சியுடனும், பாரதி கவிதா மண்டலத்தில் இணைந்திருந்த சூழலில் பாடப்பட்ட பாடலை எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாகக் காட்டுவது தவறான பார்வையாகும்.

இன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உயிரோடிருந்தால்,

“குமரியில் மீனவன் குண்டடிபட்டுத் துடிக்கிறான் என்றால்
இமயத்து மனிதன் அதைக் கண்டு சிரிக்கிறான் - என்றுதான் பாடியிருப்பார். இறுதியாக நாஞ்சில் நாடன் கூறுகிறார்: "நாம் ஒன்றாக நின்று வேற்றுமைகளுக்குள்ளும் ஒற்றுமையாக நின்று ‘காசி' என்று நினைத்தால் உடனே ‘இராமேசுவரம்' நினைவுக்கு வருவதைப் போல கூட்டாக உய்யப் போகிறோமா? அல்லது தன் படை சுட்டு சாகப் போகிறோமா?'' என்கிறார்.

தமிழ்த் தேசியர்க்கு நாஞ்சில் நாடு என்றாலே 50 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குமரி மக்களின் போராட்டம்தான் நினைவுக்கு வரும். தெற்கெல்லை போராட்டம் என்று சொன்னாலே வடக்கெல்லை போராட்டமும் நினைவுக்கு வந்து விடும். ஆனால் நாஞ்சில் மண்ணில் பிறந்தவருக்கு காசியும், இராமேசுவரமும் நினைவுக்கு வருவது ஆச்சரியமளிக்கிறது. இந்துக்களுக்கு வடக்கே காசி, தெற்கே இராமேசுவரம் என்று ஆர்.எஸ்.எஸ். பாரதீய சனதா கும்பல் அகண்ட பாரதக் கனவோடு பரப்புரை செய்து வருவதை நாம் அறிவோம். அக்கனவுக்குள் எப்படி நாஞ்சில் நாடன் சிக்கிக் கொண்டார் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com