Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
செப்டம்பர் 2008
உலகின் வருங்காலம் - 9
வணக்கம் புவியே, உன் விலை என்ன?
பாலா


1991-3 வாக்கில் அறிவியலர்கள் ஒன்றுசேர்ந்து அரிசோனாவில் தனிச் சோதனை ஒன்றை மேற்கொண்டனர். முதன் முதலாக மாந்த உருவாக்கத்தில் திணைமவியல் அமைப்பு ஒன்றைப் படைக்க முற்பட்டனர். அந்தத் திட்டத்தின் பெயர் உயிர்க்கோளம் 2. அதற்காக 900 கோடி ரூபாய் வாரி இறைக்கப்பட்டது. இருந்தும், அந்த அமைப்புள் வாழ்ந்த எட்டு பேருக்குக்கூட அதனால் வாழ்வாதார ஆக்சிஜன் அளவுகளை நிலைநிறுத்த முடியவில்லை. அந்தச் சோதனை கண்ட தோல்வி நமது ஆழ் அனுமானங்கள் இரண்டுக்கு அறைகூவல் விடுக்கிறது.

முதல் அனுமானம், 'நாம் இயற்கையினும் மேம்பட்டவர்கள்' என்பதாகும். மலைகளை அழித்தல், நோய்களுடன் போராடுதல், மரபணுக்கள் புனைதல் போன்ற செயல்களை வைத்து நாம் அப்படி நம்புகிறோம் போலும். ஆனால் சோதனை காட்டுவதோ வேறு. இயற்கை பற்றிய நம் புரிதல் முன்னெப்போதையும் விட பெரிதும் மேம்பட்டதாய் இருக்கலாம் என்றாலும் திணைமவியல் அமைப்புகளுக்கு இடையிலான சிக்கல்மிகு உறவுகள் என வரும் போது அது தன் குழந்தைப் பருவத்தில்தான் உள்ளது. இயற்கை குறித்த நம் ஒட்டுமொத்த அணுகுமுறையும் மாற்றத்துக்கு உள்ளாக வேண்டியுள்ளது. வென்டல் பெர்ரி சொல்வது போல், 'நாம் அதன் செயல்வழிகளில் ஒத்துழைக்கவும் அதன் எல்லைகளுக்குப் பணியவும் கற்றுக் கொள்ள வேண்டும்... அகந்தையை விட்டொழிக்க வேண்டும். வீறச்சம் காட்ட வேண்டும்.'

இரண்டாம் அனுமானம், 'இயற்கைத் தொண்டுகள் இலவயம்' என்பதாகும். எந்தப் பொருளில் என்றால், அவற்றை ஏந்தொகை காட்ட வேண்டும் என்பதில்லை. காட்டாக, மொத்த உள்நாட்டு உற்பத்தி புவியின் ஆக்சிஜன் உற்பத்தியைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இயற்கையே மதிப்பு உண்டாக்குகிறது. நேடியாகச் சமுதாயத்துக்குப் பாயும் உயிரியல் தொண்டுகளின் மதிப்பு ஆண்டுக்கு 1,62,000 கோடி கோடி ரூபாய் என அண்மையில் மதிப்பிடப்பட்டுள்ளது ஆண்டுக்கு மொத்த உலக உற்பத்தியாகிய 1,75,000 கோடி கோடி ரூபாய் என்னும் தோராய மதிப்புக்கு மிகவும் நெருங்கியது. சொத்துக்களுக்கு ஆண்டுக்கு 1,62,000 கோடி கோடி ரூபாய் 'வட்டி' கொடுத்திருந்தால் உலக இயற்கை முதலீடு 18,00,000-22,50,000 கோடி கோடி ரூபாய் என்ற அளவில் மதிப்பிடப்படும். அது உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் தலையிலும் கோடிக்கணக்கான ரூபாயைச் சுமத்தும். ஆனால் அது வெறும் கட்டுப்பெட்டியான மதிப்பீடே. ஏனென்றால் 'எந்த ஒன்றின்றி நம்மால் வாழ முடியாதோ, எந்த ஒன்றை நம்மால் மாற்றீடு செய்ய முடியாதோ, அதன் மதிப்பு வரம்பற்றது.'

புவிக்கு அதன் மீது வாழும் உயிர்களைக் காப்பதற்குள்ள வல்லமையை நாம் குறைத்து விட்ட நிலையில், இயற்கைத் தொண்டுகளின் மெய்மதிப்பு மறைவிடங்களிலிருந்து வெளிப்பட்டு எந்தொகைகளில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. அது மாற்றத்துக்கு வினையூக்கியாகச் செயல்படக் கூடும்.

இயற்கைத் தொண்டின் விலை என்ன?

கார்பன் பற்றுவரவு

கார்பன் உமிழும் எவரும் அதற்கு விலை கொடுக்க வேண்டுமெனச் சுமார் பத்தாண்டு முன்பு நாம் சொல்லியிருப்போனால் கேட்பவர் சிரித்திருப்பார். அது இனிமேல் முடியாது. அசைவளிக்கப்பட்ட அளவுகளை விட அதிகம் கார்பனை உமிழ்பவர்கள் 'பாவிகள்' என்றும், அந்தப் பாவங்களுக்கு அவர்கள் விலை கொடுக்க வேண்டும் என்றும் முன்வைக்கப்படும் வாதுரை வேகவேகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அது நடப்பதேன்?

புவி தன் வளிமண்டலத்தில் உள்ள பசுமையக வாயுக்களின் உதவியுடன் வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட அளவில் நிலைநிறுத்திப் பல உயிர்களையும் காத்து வருகிறது. அது நுண்மையான சரியீட்டுச் செயலாகும். அதனால்தான் புவியில் பெரும்பாலான பகுதிகள் அதிகம் சூடாவதும் இல்லை, அதிகம் குளிர்ச்சியடைவதும் இல்லை. பசுமையக வாயுக்கள், குறிப்பாக கார்பன் வளிமண்டலத்தில் திரளத் திரள இந்த நுண்மைச் சரியீடு கெடுகிறது. அதனால் புவிச் சூடு அதிகமாகிக் கடல் மட்டங்கள் உயர்கின்றன; அடிக்கடி வலுவான சூறாவளிகள் வீசுகின்றன; நிலங்கள் வறள்கின்றன; நம்ப முடியாதபடி பருவப் போக்குகள் மாறுகின்றன. புவி இத்தனை ஆண்டுக் காலம் செய்து வந்த ஒர் இலவய உயிரியல் தொண்டுக்கு, அதாவது ஒரு குறிப்பிட்ட அளவில் வெப்பநிலையை நிலைநிறுத்துவதற்கு நாம் திடீரென விலை கொடுக்க வேண்டியுள்ளது.

தட்பவெப்ப மாற்றத்தைத் திருப்பி விடுவதற்கு உலகின் பல நாடுகளும் ஒர் ஒப்பந்ததத்துக்கு வந்துள்ளன. 2012க்குள் கார்பன் உமிழ்வுகளை 1990 அளவுக்குக் கீழ் குறைத்துக் காட்டுவதாக ஒப்புக் கொண்டுள்ளன. ஒரு நாடு இந்த அளவுக்குக் கீழ் கார்பன் உமிழ்வுகளைக் குறைக்காமல் கார்பன் பற்று வைத்திருந்தால் அது கார்பன் வரவு வைத்துள்ள நாட்டிடமிருந்து அந்த வரவை விலைக்கு வாங்கும். கார்பன் வரவு வைத்துள்ள நாடு என்றால் அது தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, காடுகளைப் பாதுகாப்பது அல்லது உண்டாக்குவது போன்ற நடவடிக்கைகளால் 1 டன் கார்பன் உமிழ்வைக் குறைத்து விட்டது எனப் பொருள். இன்றைய கணக்குப்படி, 1 டன் கார்பன் உமிழ்வின் விலை 1,400 ரூபாய்.

இயற்கை ஆற்றும் இந்த உயிரியல் தொண்டை நாம் எப்படி நோக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை மறுசிந்தனை அது. முதல் முறையாக, இயற்கை முதலீட்டை எந்தொகைகளில் கொண்டு வர முயன்றுள்ளோம். இயற்கைத் தொண்டுகள் தேய்ந்து வரும் நிலையில், அவற்றின் மதிப்பை இனியும் எவரும் மறுக்கவியலாது. இவர்களில் சாதாரணக் குடியாட்களும் அடக்கம். காட்டாக, ஒரு நடுத்தரக் குடும்பம் தூய நீர் வேண்டி நீர்த் தூய்மையாக்கிகள், தாது நீர் வாங்குவதற்கும், ஆழ்கிணறு தோண்டுவதற்கும் செலவிடும் தொகை அதிகரித்து வருகிறது. காற்றில் பல்வேறு வேதிப்பொருள்களின் உமிழ்வுகளால் இடர்ப்பாட்டுக்கு உள்ளாகியுள்ள மற்றோர் இயற்கைத் தொண்டு தூய காற்று. யார் கண்டது, எதிர்காலத்தில் தூய காற்று வேண்டி காற்றுத் தூய்மையாக்கி, முகமூடி, ஆக்சிஜன் தொட்டி போன்றவை வாங்குவதற்கு நாம் காசு கொடுக்க வேண்டியிருக்கலாம்.

வளங்களின் விலை

Anderson கார்பனின் தாக்கம் கதையின் ஒரு பக்கம் மட்டுமே. திரும்பப் புதுப்பிக்கவியலாத இயற்கை வளங்களைத் திறமற்றுப் பயன்படுத்துவது மறுபக்கமாகும். இயல்பான ஒரு காரைக் கருதிப் பார்ப்போம். அது நுகரும் எரிபொருள் ஆற்றலில் 80 விழுக்காடேனும் எந்திரச் சூட்டிலும் கழிவிலும் வெளியேறுகிறது. எவ்வளவு முயன்றாலும் 20 விழுக்காட்டைத்தான் சக்கரங்களைச் சுழற்றப் பயன்படுத்துகிறது. இதில் விளையும் விசையில் 95 விழுக்காடு காரைச் செலுத்துகிறது. ஆனால் வெறும் 5 விழுக்காடுதான் ஒட்டுனரைச் செலுத்துகிறது. அது முறையே அவரவர்களின் எடைகளின் தகவின்படி அமையும். அதாவது எரிபொருள் ஆற்றல் திறனில் 1 விழுக்காட்டையே காரால் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.

எண்ணெய் விலை பன்மடியாக உயர்ந்து செல்கிறது. இன்று ஒரு பீப்பாய் விலை 6,000 ரூபாய். சிறப்பு சிலிக்கானின் விலை கிலோவுக்கு 13,500 ரூபாயிருந்து 2,250 ரூபாய்க்குக் குறைந்துள்ளது. பொருளியலில் இத்தகைய படபடப்பான மாற்றங்கள் அன்றாட நிகழ்வுகளாக இருக்கப் போகின்றன. வளங்களை மட்டாகப் பயன்படுத்தும் நிலையை நோக்கிச் செல்லும் ஆட்களுக்கும் நிறுவனங்களுக்கும் போதுமான நிதி ஊக்கம் கிடைக்கும்.

அது வேளாண்மையிலும் நடக்கத் தொடங்கியுள்ளது. உலகு முழுதும் நீடித்துநிலைக்கும் வேளாண்மை பற்றி இரு பெரும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 50க்கு மேற்பட்ட நாடுகளில் ஒரு கோடியே இருபது லட்சத்துக்கு மேற்பட்ட பண்ணைகளில் 450க்கு மேற்பட்ட திட்டங்களை இந்த ஆய்வுகள் மேற்கொண்டன. உள்ளூர்த் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், மட்டாக உழுது மண்ணைப் பாதுகாத்தல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, மண் உட்ட மேலாண்மையை மேம்படுத்துதல் என மலிவாகவும் உள்ளூர் சார்ந்தும் செய்யத்தக்க நடைமுறைகள் 70 விழுக்காட்டுக்கு மேல் விளைச்சலைப் பெருக்கியுள்ளன. விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் போன்ற வேளாண் இடுபொருள்களின் விலை உயர்ந்த வண்ணம் இருக்கும் நிலையில், நீடித்த வேளாண்மை நோக்கி நகரும் உழவர்களுக்கு போதுமான ஊக்கம் கிடைக்கும்.

வள ஆக்கத்திறன்: அடுத்த தொழிற்புரட்சி

தொழில்துறை நாகரிகத்தின் முதற்கட்டம் உழைப்பு அக்கவளத்தைக் கடகடவென மேம்படுத்தியது. 1770இல் 200 ஆட்கள் செய்த வேலையை 1812க்குள் ஒரே ஒரு நூற்பவரே செய்து விட முடிந்தது. தொழில்துறை நாகரிகத்தின் அடுத்த கட்டம் அருகிச் செல்லும் வளங்களின் ஆக்கத்திறனை மேம்படுத்துவதாகும். இன்டர்ஓபேஸ் என்னும் கம்பளம் தயாரிக்கும் குழுமம் இதனை ஏற்கெனவே மிகத் திறமாகச் செய்யத் தொடங்கியுள்ளது.

1990களின் நடுவில் அதன் நிறுவனர் ரே ஆன்டர்சன் என்பார் பால் ஆக்கன் எழுத்துகளைப் படிக்க நேரிட்டது. பால் ஆக்கன் தொழில்துறை நாகரிகம் குறித்து அடிப்படையாகச் செய்ய வேண்டிய மறுசிந்தனைக்கு அழைப்பு விடுத்தவர் ஆவார். இவர் பார்வையில் ஈர்க்கப் பெற்ற ரே ஆன்டர்சன் இன்டர்ஓபேஸ் குழுமத்தை நீடித்துநிலைக்கும் வழி நோக்கிச் செலுத்த உறுதியேற்றார். 2020க்குள் 'சுழித் திணைமவியல் சுவடு' ஏற்படுத்துவதைத் தமது கனவு இலக்காகக் கொண்டுள்ளார், என்னதான் கற்பனை செய்தாலும் உண்மையில் அது ஒரு துணிச்சலான கனவுதான்.

ஒன்டர்ஓபேஸ் முதல் சில ஆண்டுகளில் அமைப்பிலான கழிவைக் குறைத்தே சுமார் 13,000 கோடி ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளது. அன்று தொட்டு அது தான் நுகரும் ஆற்றல், நீர், பண்டங்கள் போன்ற முழுக்க மேற்சுழற்சி செய்யத்தக்க வளங்கள் அனைத்தையும் குறிப்பிடத்தகுந்த அளவுக்குக் குறைத்துள்ளது. பெரும்பாலான மறுசுழற்சிச் செயல்வழிகள் கீழ்ச்சுழற்சிகளே. இதன்படியான செயல்வழியிலிருந்து தரக்குறைவான பொருள்களையே உற்பத்தி செய்ய முடியும். மேற்சுழற்சி என்னும் செயல்வழியை இயற்கை எளிதாக நிறைவேற்றி மறுசுழற்சிச் செயல்வழியில் மேம்பட்ட பண்டத்தைப் படைக்கிறது.

புகைபோக்கிகள் இல்லாத, கழிவுக் கால்வாய்கள் இல்லாத ஒரு நாளை ரே ஆன்டர்சன் கற்பனை செய்கிறார். அப்போது இன்டர்பேஸ் நிலத்தகப்படுத்தக் கூடிய குப்பைகளைத் தோண்டி கம்பளப் பொருள்களைக் கிளறியெடுத்து மறுசுழற்சி செய்யும். புதைபடிவ எரிபொருள் விலையும் மூலப்பொருள்களின் விலையும் எதிர்காலத்தில் தொடர்ந்து அதிகரித்துச் செல்ல இருக்கும் நிலையில், இன்டர்ஓபேஸ் தன் எதிர்காலத்தைச் சரியானவற்றில் பணயம் வைக்கிறது.

ஏன் மாற வேண்டும்?

ரே ஆன்டர்சன் போன்றே பலரும் நேர்மை உணர்வினால் மாற அணியமாக இருக்கக் கூடும் என்றாலும் நமது இறுகிய சிந்தனை முறைகளில் மாற்றம் கொண்டு வருவதும் அறக் காரணங்களுக்காகச் செயல்படுவதும் நம்மில் பலருக்கும் கடினமாக இருக்கும். ஆனால் மாற்றத்துக்கு ஒரு பரிசும் கிடைக்குமானால் மாற்றம் கைகூடும். நம்மில் முழுச் சோம்பேறிகளுங்கூட விடிகாலை எழுந்து பல மைல் ஒட முடியும், அதனால் அவர்களுக்கு நலவாழ்வும் நல்தோற்றமும் வாய்க்கும் என்ற நம்பிக்கை இருக்குமானால்.

பொருளியல் அமைப்பு இயற்கையைத் தமது கணக்கு வழக்குகளில் சேர்த்துக் கொள்ளத் தொடங்கி விட்ட நிலையில், நீடித்துநிலைக்கும் செயற்பாடுகளுக்குப் பரிசும் தாங்கவொண்ணாத செயற்பாடுகளுக்கு தண்டனையும் அளிக்கப்படும் நிலையில், தனியாட்களும் நிறுவனங்களும் மாறுவதற்கு போதுமான காரணங்கள் உள்ளன எனலாம். இந்தத் தொடரின் அடுத்த கட்டுரையில், மாற்றம் தோற்றுவிக்கவல்ல தொழில் நுட்பங்களைப் பார்ப்போம்.

சான்றுகள்: இயற்கை முதலாளித்துவம், பால் ஆக்கன், ஆமோரி லோவின்ஸ், ஊல் ஹன்டர் லவிங்; புதுப்பித்துக் கொள்ளத்தக்க ஆற்றல் பற்றி அல் கோர் உரை. நடுவழித் திருத்தம், ரே ஆண்டர்சன்.

தமிழில்: நலங்கிள்ளி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com