Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
செப்டம்பர் 2008
அறிவோம் அம்பேத்கர்! - 8
வே. பாரதி


பிரித்தானியருக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியார் தலைமைப் பங்கு வகித்தார். அவரால் பிரித்தானியருக்கு எதிராக வெகுமக்களைத் திரட்ட முடிந்தது. தென்னாப்பிரிக்காவில் போராடிப் பெற்ற அனுபவங்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க அவருக்குப் பெரிதும் உதவின. தென்னாப்பிரிக்கப் போராட்டத்தில் தமிழர்களே முதன்மைப் பங்கு வகித்தார்கள். அப்போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த தமிழ்ப் பெண் தில்லையாடி வள்ளியம்மையை மறக்க முடியாது அல்லவா? தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு இனத்தவரையும் திரட்ட வேண்டிய தேவை எழுந்த போது அவரவர்களின் மொழியில்தான் அவரவர்களையும் திரட்ட முடியும் என்பதைப் பட்டறிந்தார். காந்தியார் அங்கே சிறையில் இருந்த போது தமிழில் எழுதப் படிக்கக் கற்க முற்பட்டார். தமிழில் கையொப்பமிடவும் பழகினார்.

இந்திய தேசியக் காங்கிரசு இயக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பு வகித்த காந்தியார் இயக்கத்தை அந்தந்த மக்களின் மொழிவழி மாற்றியமைத்தார். அப்படித்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஆந்திரக் காங்கிரஸ் கமிட்டி போன்றவை பிறந்தன. மறுபுறம் காந்தியாருக்கு முன் காங்கிரசுக் கட்சி அரசியல் விடுதலை இயக்கமாக மட்டுமே செயல்பட்டு வந்தது. சமூக விடுதலை குறித்த எந்தத் திட்டமும் இயக்கச் செயல்பாடுகளில் இடம் பெற்றதில்லை. சொல்லப்போனால், அரசியல் விடுதலைக்குள் சமூக விடுதலைக்கான கூறுகள் எதுவும் வந்துவிடாதபடி காங்கிரசுக்காரர்கள் மிகக் கவனமாக இருந்தனர்.

காந்தியார் வந்த பின் சாதியமைப்பின் கொடிய வெளிப்பாடான தீண்டாமை குறித்துக் கவனம் செலுத்தினார். தீண்டாமை ஒரு பாவச் செயல், பெருங்குற்றம், மனிதத் தன்மையற்ற செயல் என அறிவித்தார். மக்களைத் திரட்ட வேண்டுமெனில் முதலில் அவர்கள் மொழியை மதிக்க வேண்டும். மக்கள் மொழி கொண்டுதான் அவர்களிடம் விடுதலை உணர்வை விதைத்து வளர்க்க முடியும். மக்களிடம் நிலவுகிற ஏற்றத்தாழ்வுகளை, சமத்துவமின்மையைக் களைய முற்பட்டால்தான் அவர்கள் அவ்வேறுபாடுகளிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு ஓருணர்வில் திரள்வார்கள். இது காந்தியாருக்கு வானத்திலிருந்து வந்த போதனை அன்று; போராட்ட அனுபவம் தந்த படிப்பினையே. அந்த நேரத்தில் இது மிக முக்கியமான அரசியல் மாற்றமாக அமைந்தது. இதன் விளைவுகளை அறிந்து கொண்டால்தான் அம்பேத்கரின் வரலாற்றுப் பங்கைச் சரியாக உள்வாங்கிக் கொள்ள முடியும்.

1917ஆம் ஆண்டில்தான் காங்கிரசுக் கட்சி முதன்முதலாகத் தீண்டப்படாதோருக்காகக் கீழ்வரும் தீர்மானம் இயற்றியது: ‘‘காலங்காலமாக இந்திய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவின் மீது கடுமையும் இன்னலும் நிறைந்த கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் சுமத்தப்பட்டு வந்துள்ளன; இக்கட்டுப்பாடுகளை எல்லாம் அறவே நீக்குதலே நீதியும் நேர்மையும் கொண்ட சமுதாயக் கடமை என்று இந்திய மக்களுக்குக் காங்கிரசுக் கட்சி வலியுறுத்த விரும்புகிறது.’’

1920ஆம் ஆண்டில் காங்கிரசுப் பேரியக்கம் காந்தியார் தலைமையின்கீழ் வந்தது. அப்போது நாகபுரி மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானம் இப்படிக் கூறியது: ‘‘...இந்துக்களில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் இடையிலான பூசல்களுக்கு முடிவு காண இந்துச் சமுதாய மக்களை வலியுறுத்துவதுடன் ஒடுக்கப்பட்ட மக்களை நடத்தும் முறைகளில் செம்மையான சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் இந்து மதத்திலிருந்து தீண்டாமை என்னும் பேரிழிவை அறவே அகற்றவும், இந்துமதத் தலைவர்களைக் காங்கிரசுக் கட்சி பணிவோடு வேண்டிக் கொள்கிறது.’’

1920 திசம்பர் 21ஆம் நாள் காந்தியார் தமது ‘யங் இந்தியா’ இதழில் எழுதினார்: ‘‘அரசாங்கத்துக்கு எதிரான ஒத்துழையாமை வெற்றி பெற ஆளப்படுவோரிடையே ஒத்துழைப்பு அவசியத் தேவையாகும். தீண்டாமை எனும் பாவம் ஒழிக்கப்படாவிட்டால் ஓராண்டு அல்ல, நூறாண்டு ஆனாலும் தன்னாட்சி பெற இயலாது.’’

காந்தியார் தீண்டாமை ஒழிப்பு குறித்துப் பேசினாரே தவிர சாதிஒழிப்பு குறித்து ஒருபோதும் பேசியதில்லை. ஏன், தீண்டாமை ஒழிப்பில்கூட காந்தியாரின் காங்கிரசை நம்ப முடியாது என்பதை அம்பேத்கர் அறிந்து கொண்டார். அம்பேத்கரைப் பொறுத்தவரை தீண்டாமை ஒழிப்பின் மீதான அக்கறை விடுதலை நோக்கத்திற்கான உத்தி அன்று. அது அவர் வாழ்வின் ஓர் அங்கம்!

தீண்டப்படாத மக்களுக்காகக் காந்தியாரும் காங்கிரசும் செய்த பணிகளை அம்பேத்கர் ஆய்வுக்குட்படுத்தினார். 1922ஆம் ஆண்டு காங்கிரசால் கொண்டுவரப்பட்ட பர்தோலித் திட்டம் அம்பேத்கரின் கூரிய குற்றாய்விற்கு உள்ளாயிற்று. 1921ஆம் ஆண்டு நடைபெற்ற அகமதாபாத் மாநாட்டில் சட்டமறுப்புப் போராட்டமே ஆயுதவழிப் போராட்டத்திற்குச் சிறந்த மாற்றுவழி எனக் கருதிய காங்கிரசு அச்சட்ட மறுப்பு இயக்கத்தில் மக்கள் பெருந்திரளாகப் பங்கு கொள்ள வேண்டும் என அறிவித்தது. இதற்குச் செயல்வடிவம் கொடுக்கவும், மக்களை அணியப்படுத்தவும் 1922 பிப்ரவரியில் பர்தோலியில் காங்கிரசுச் செயற்குழு கூடியது. இறுதியாகச் செயல்திட்டத்தை வகுத்து அறிவித்தது: கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும்; கைநூற்பு, கைநெசவு வழிக் கதர் உற்பத்திக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; தேசியப் பள்ளிகளைத் தொடங்க வேண்டும் - இந்த வரிசையில் தாழ்த்தப்பட்டோருக்கான அறிவிப்பையும் அதன்கீழ் தரப்பட்ட குறிப்பையும் காண்போம்:

“தாழ்த்தப்பட்ட மக்களை மேம்பட்ட வாழ்வுக்கு இட்டுச் செல்லும் முகத்தான், அவர்களது சமுதாய, உள, தார்மீகப் பான்மைகளை மேம்படுத்தி அவர்களது குழந்தைகளைத் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்ப ஊக்குவிப்பதுடன், ஏனையோருக்குக் கிடைத்து வரும் அன்றாட வாழ்க்கை வசதிகளை அவர்களுக்கும் கிடைக்கப் பெறமுயல வேண்டும். குறிப்பு: தீண்டத்தகாதவர்களுக்கு எதிரான காழ்ப்புணர்வு மிகுந்து விளங்கும் பகுதிகளில் காங்கிரசுக் கட்சியின் செலவிலேயே புதிய பள்ளிகள் திறக்கவும், புதிய கிணறுகள் தோண்டிப் பராமரிக்கவும் மேற்கொண்டு, தீண்டாதோர் குழந்தைகளோடு ஏனைய குழந்தைகளும் இப்பள்ளிகளில் கலந்து படிக்குமாறு செய்யவும், புதிய கிணறுகளைப் பொதுக் கிணறுகளாய்ப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.”

1922 பிப்ரவரி 20ஆம் நாள் தில்லியில் நடைபெற்ற காங்கிரசுப் பொதுக்குழுவில் இச்செயல் திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. அதன்பின் 1922 சூன் மாதத்தில் இலட்சுமணபுரியில் செயற்குழு கூடியது. காங்கிரசு வகுத்த செயல்திட்டம் குறித்துப் பரிந்துரைத் திட சிரத்ததானந்த அடிகளார், அம்மையார் சரோசினி நாயுடு, ஐ.கே. யாஜினிக், ஜி.பி. தேஷ்பாண்டே ஆகியோரைக் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக 2 இலட்ச ரூபாய் நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டது. அது 5 இலட்சம் எனத் திருத்தம் செய்யப்பட்டது. திட்டத்திற்கான தொகை 5 இலட்சமாக உயர்த்தப்பட்டதற்குக் காரணம் சிரத்ததானந்த அடிகள். தீண்டப்படாதோர் மீது அக்கரையோடும் தீண்டாமை ஒழிப்புச் செயல்களில் முனைப்போடும் இயங்கி வந்தவர். தீண்டாமை ஒழிப்பே முதன்மைச் செயல் திட்டம் எனக் காங்கிரசு பேசினாலும் அது நடைமுறையில் கடைசிச் செயல் திட்டமாகவே இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக 5 இலட்சம் ஒதுக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவாதம் நடைபெற்றது. ஆனால், காதித் திட்டத்திற்கு மேலும் நிதி திரட்ட அனைத்து முனைப்பான வழிகளையும் காங்கிரசு மேற்கொண்டது.

காங்கிரசுக்குத் தீண்டப்படாதோர் சிக்கல் உளப்பூர்வமானதல்ல என்பதை அவர் உணர்ந்தார். சிரத்ததானந்த அடிகள் கொண்டுவந்த தீர்மானத் திருத்தம் காங்கிரசாரால் அலட்சியம் செய்யப்பட்டது. தீண்டாமையை வேரோடு களைவதில் காட்ட வேண்டிய அக்கறையைவிட காங்கிரசாருக்கு மற்ற அரசியல் திட்டங்கள்தான் பெரிதாகத் தெரிகின்றன. காங்கிரசாரோடு சேர்ந்து எவ்வித ஆக்கப் பணியும் செய்ய இயலாது எனக் கருதி சிரத்ததானந்த அடிகள் துணைக்குழுவிலிருந்து விலகிக் கொண்டார்.

பர்தோலித் திட்டம் கொணரப்பட்ட காலத்தில் காங்கிரசு பிரித்தானிய வல்லாதிக்கத்துக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தது. அதற்காக மக்களைத் திரட்டும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. பர்தோலித் திட்டம் இவ்வகையில் காங்கிரசுச் செயல் திட்டத்தில் இடைசெருகலே எனலாம். ஆனால் அதுவும்கூட காங்கிரசாரால் நிறைவேற்றப்பட்டதா? இல்லை. இந்து மகாசபையிடம் விடப்பட்டது. 1923 பிப்ரவரியில் பம்பாயில் கூடிய காங்கிரசுப் பொதுக்குழு தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் குறித்த சிக்கல்கள் பரிசீலனைக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் செயற்குழுவின் பொறுப்பில் விடப்படுவதாக அறிவித்தது. செயற்குழு 1923 ஏப்ரலில் பூனாவில் கூடி இயற்றிய தீர்மானம் வருமாறு:

“காங்கிரசுக் கட்சியின் கொள்கைகளின் பயனாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நடத்தப்படும் முறைகளில் சிறிதளவு முன்னேற்றம் எய்தப்பட்டுள்ளது என்பதையும், இந்தத் திசைவழியில் ஆற்றப்பட வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாய் எதிர்நோக்கியுள்ளன என்பதையும் செயற்குழு கருத்தில் கொண்டு, இப்பணியை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு இந்து சமுதாயத்தினுடையதே என்பதை வலியுறுத்தி, இத் தீமையை இந்து சமுதாயத்திலிருந்து அறவே ஒழிப்பதற்காகக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அனைத்திந்திய இந்து மகாசபையைக் கேட்டுக் கொள்வதெனத் தீர்மானிக்கிறது.”

காங்கிரசுத் தலைமை தன் கட்சியினருக்கு அறிவுறுத்திய செயல்திட்டங்களில் ஒன்று தீண்டாமை ஒழிப்புக்கான பர்தோலித் திட்டம் ஆகும். மற்ற அனைத்துச் செயல்திட்டங்களையும் தாமே முனைந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போது காங்கிரசாரால் தீண்டப்படாதோருக்கு இந்த ஒற்றைத் திட்டத்தைச் செயல்படுத்த மனமில்லாது போயிற்று. அதுவும் இப்பொறுப்பு இந்து மகா சபையிடம் ஒப்படைக்கப்பட்டதுதான் பெரிய வேடிக்கை!

இது குறித்து அம்பேத்கர் எழுதினார்: “தாழ்த்தப்பட்ட மக்களின் துயர்துடைப்புப் பணிகளை யார் பொறுப்பில் விட காங்கிரசுக் கட்சி முடிவு செய்தது பார்த்தீர்களா? இப் பொறுப்புகளை ஏற்பதற்கு முற்றிலும் தகுதியற்றதோர் அமைப்பு இந்து மகாசபை. இந்து மதத்தின் பழமை மரபுகள் அனைத்தையும் கட்டிக் காக்கப் போராடுவதையே குறிக்கோளாய்க் கொண்ட மதவெறியர் இயக்கம் அது. இந்து மகாசபை, ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கமன்று; இந்திய அரசியலில் இசுலாமியரின் செல்வாக்கினை எதிர்த்துப் போராடுவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்ட அரசியல் இயக்கம். தனது அரசியல் வலிமையைக் காத்துக் கொள்வதற்காகச் சமூகக் கட்டுக்கோப்பை நிலைநிறுத்த முனையுமுகத்தான் சாதிகளைப் பற்றியோ தீண்டாமை பற்றியோ பேசுவதைத் தவிர்த்து வரும் உத்தியை அவ்வியக்கம் பின்பற்றி வருகிறது. நண்டுக்கு நரியைக் காவல் வைப்பது போன்று, இத்தகையதோர் வெறியர் இயக்கத்தைத் தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப் பணிகளுக்காகக் காங்கிரசுக் கட்சி தேர்ந்தெடுத்தது எப்படி என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதாவது, காங்கிரசுக் கட்சி வேண்டாவெறுப்பாக அறிவித்த கண்துடைப்புத் திட்டத்தை எப்படியாவது கைகழுவக் காத்துக் கொண்டிருந்தது என்பதையே இது காட்டுகிறது...”

காங்கிரசு இயக்கம் தீண்டப் படாத மக்களை இறுதியில் எதிரியின் முகாமுக்குள்ளேயே தள்ளி விடும் என்பது இதனால் தெளிவாயிற்று. காங்கிரசு இயக்கம் அகிம்சை, ஒத்துழையாமையையே கொள்கையாக ஏற்றிருந்தது. பிரித்தானிய அரசுடனான தனிப்பட்ட தொடர்புகள் அனைத்தையும் துறந்து வரிகொடா இயக்கத்தைத் தொடர்ந்து நடத்துவதென 1920ஆம் ஆண்டு நடைபெற்ற அதே நாகபுரி மாநாட்டில் அறிவித்தது. இவ்வழிமுறைகளுக்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும் என முடிவு செய்தது. இந்த வரையறைக்குள் நின்றுதான் காங்கிரசு இயக்கம் தொடர்ந்து இயங்கி வந்தது.

1930ஆம் ஆண்டு சத்தியாகிரக ஆண்டாகவே திகழ்ந்தது. காந்தியார் தமது வரிகொடா இயக்கத்தைத் தீவிரமாக்கினார். குறிப்பாக இந்திய மக்கள் தம் சொந்த மண்ணில் உப்புக்கும் வரி கொடுப்பதா எனக் கேள்வி எழுப்பினார். பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்கள் உணர்வை இதன் வழி தட்டியெழுப்பினார். 1930 மார்ச்சு 12ஆம் நாள் தொடங்கப்பட்ட தண்டி யாத்திரை வெகு மக்களைத் தன்னுணர்வோடு போராட்டத்தில் பங்கேற்க வைத்தது. பிரித்தானிய அரசு இதற்கெதிராகக் கடும் அடுக்குமுறையை ஏவியது. குதிரைக் காவலர் பட்டாளம், துப்பாக்கிச் சூடு, சிறைவாசம் ஆகிய அனைத்திற்கும் முகம் கொடுத்து மக்கள் காந்தியார் பின்னால் திரண்டார்கள். இப்போராட்டம் நாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது.

தண்டி யாத்திரை தொடங்குவதற்குப் பத்து நாள் முன்பு பம்பாய் மாகாணம் நாசிக்கில் அம்பேத்கர் தீண்டப்படாதோருக்கான காலாராம் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். நாசிக்கில் தீண்டப்படாத மக்கள் சத்தியாகிரகக் குழு ஒன்றை அமைத்தனர். குறிப்பிட்ட நாளுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களைக் காலாராம் கோவிலுள் அனுமதிக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் சத்தியாகிரகக் குழுவின் செயலாளரான பாவ்ராவ் கெய்க்வாடு தலைமையில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவோம் என கோவில் அறங்காவலர்களுக்குத் தெரிவித்தனர். சத்தியாகிரகக் குழு கோவிலுக்குள் இருக்கும் இராமனை வழிபடும் உரிமைக்காக அணி திரளுமாறு தாழ்த்தப்பட்ட மக்களிடம் அறிவித்தது. அம்பேத்கர் பம்பாயிலிருந்த போதே கடிதங்கள் வாயிலாகவும், முன்னணித் தோழர்களுக்கு வழிகாட்டுவதன் மூலமாகவும் போராட்டத்தை வளர்த்தெடுத்தார். சத்தியாகிரகக் குழுவின் அழைப்பை ஏற்று ஏறக்குறைய 15,000 தொண்டர்கள் போராட்டத்திற்குத் தம் மக்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் குழுமினர்.

1930ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் நாள் ஞாயிறன்று சத்தியாகிரகத்திற்கு நாள் அறிவிக்கப்பட்டது. அன்று காலை 10 மணிக்கு அப்பந்தலில் அம்பேத்கர் தலைமையில் மாநாடு நடைபெற்றது. அப்போதிருந்த நிலை அறிந்து சத்தியாகிரகப் போராட்டத்தை எவ்வகையில் முன்னெடுப்பது என்பது குறித்து மாநாடு கலந்து ஆலோசித்தது. மாநாடு நண்பகல் உணவுக்காகக் கலைந்து பிற்பகல் ஒன்றரை மணிக்குக் கூடியது.

பிற்பகல் 3 மணிக்கு நான்கு நான்கு பேராக வரிசையில் நின்று ஊர்வலம் செல்லத் தயாராயினர். ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்வரிசையில் இராணுவ பாணியில் பாண்டு வாத்திய இசை முழங்கி வந்தது. ஊர்வலத்தில் இராணுவப் பணியாற்றியிருந்த பலரும் இருந்தனர். இரண்டாவது அணியாகச் சாரணர் பிரிவு மக்கள் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து 500 பெண்கள், அவர்களுக்கும் பின்னால் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி பெற்றுத் தாமாக ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் தமது வழிபாட்டுரிமைக்காகத் திரண்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. ஆனாலும் ஊர்வலம் கட்டுப்பாட்டோடு அமைதி குலையாது நடந்தது. நாசிக் வரலாற்றிலேயே இவ்வளவு திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் நடந்ததில்லை.

ஊர்வலம் காலாராம் கோவிலின் கிழக்கு வாயிலை அடைந்தது. கோவிலின் அனைத்து வாசல்களும் மூடிவைக்கப்பட்டிருந்தன. அதனால் அனைவரும் கோதாவரிப் படித்துறைப் பக்கம் சென்றனர். ஊர்வலம் பொதுக்கூட்டமாக மாறியது. அன்றிரவு 11 மணிக்குத் தலைவர்கள் கூடிப் பேசி போராட்ட வழிமுறைகளைத் திட்டமிட்டு, அமைதியாக நடத்துவது என முடிவெடுத்தனர்.

1930 மார்ச்சு 3ஆம் நாள் காலை போராட்டம் தொடங்கியது. போராட்டத்தின் முதல் குழுவாக ஆண்கள் 125 பேரும் பெண்கள் 25 பேரும் கோவிலின் நான்கு வாயில்கள் முன்பும் நின்று கொண்டனர். கோவிலின் அருகிலும் தீண்டப்படாதவர்கள் சென்று விடாதபடி தடையரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அங்கே திரண்டிருந்தனர். கதவுகள், மூடப்பட்டிருந்ததால் அம் மக்கள் பக்திப் பாடல்களைப் பாடினர்; பசனை செய்தனர். தீண்டப்படாத மக்களின் குரலொலி காற்றில் தவழ்ந்து தடையரண்களையும் இரும்புக் கதவுகளையும் தாண்டி கருவறைக்குள் நுழைந்து, இராமனைத் தீண்டுவதை யாரால் தடுக்க முடியும்? ஆனால், மக்கள் நுழைவதைத் தடுக்க காவல் துறையினர் எச்சரிக்கையோடு காத்திருந்தனர். காவல்துறைக் கண்காணிப்பாளரான ரினால்ட்ஸ் தமது அலுவலகத்தையே கோவிலுக்கு எதிரே மாற்றி விட்டிருந்தார். முதல் வகுப்பு நீதிபதிகள் இரண்டு பேர் தேவையான நடவடிக்கை எடுக்க அங்கேயே காலை முதல் இருந்தனர்.

நாசிக் குடிமக்களின் கூட்டம் அன்றிரவு சங்கராச்சாரி டாக்டர் குற்றக்கோட்டி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாதி இந்துக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். கோவிலுள் செல்லாமல் அதன் வாயிற்கதவருகே கடவுளை வாழ்த்தியும் வணங்கியும் கொண்டிருக்கிற தாழ்த்தப்பட்ட இந்துக்களைக் கண்டு சாதி இந்துக்கள் கடுங்கோபமுற்றனர். அம்மக்கள் மீது கற்களையும் செருப்புகளையும் வீசி இழிவுபடுத்தினர்.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com