 |
நூல் மதிப்புரை
தமிழினம் காக்கத் தடையை நீக்கு!
சிறப்பாசிரியர்
தியாகு
வெளியீட்டாளர் - ஆசிரியர்:
சிவ.காளிதாசன்
தொடர்புக்கு:
சிவ.காளிதாசன்
1434 (36/22), இராணி அண்ணா நகர்,
சென்னை - 600 078
பேசி: 9283222988
மின்னஞ்சல்: [email protected]
ஓரிதழ் ரூ.8
ஓராண்டு ரூ.100
ஆறாண்டு ரூ.500
புரவலர் ரூ.1000
|
இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிற இனப்படுகொலைக் கொடுமைக்கு உள்ளாகி ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களில் பூவும் பிஞ்சும் போன்ற குழந்தைகள் கூட கொல்லப்பட்டுப் பூண்டற்றுப் போகிற அளவுக்கு நிலைமை நாளுக்கு நாள் பெருகி வருவதால் ஏற்கெனவே கண்ணீர்க் கடலில் மிதக்கும் இலங்கைத் தமிழர்கள், சிங்கள இராணுவத்தின் தாக்குதலையும் கண்டு, எங்களுக்கு அபயமளித்துக் காப்பாற்ற இந்த உலகில் நாதியே கிடையாதா? என்ற கவலையில், வாடி வதங்கி, இதற்கோர் விடிவு எப்போது ஏற்படும் என்று விழி கலங்கி வழிபார்த்து நிற்கின்றனர்''.
சென்ற அக்டோபர் 14ஆம் நாள் சென்னையில் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் இயற்றிய முதல் தீர்மானத்தின் முதற்பாதி இது. (தினத்தந்தி 15-10-2008 - அழுத்தம் நமது).
இலங்கையில் நடப்பது என்ன? என்ற வினாவிற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவரும் சேர்ந்து இனப் படுகொலை என்று விடையளித்திருக்கிறார்கள். திமுக, பாமக, தமிழர் தேசிய இயக்கம், திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் இப்படி விடையளிப்பது புதிய செய்தியன்று. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும் கூட அண்மைக் காலமாக இப்படிச் சொல்லி வருவதோடு, இனப் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதைக் கண்டித்து உண்ணாநிலைப் போராட்டமும் நடத்தியது. இலங்கை இராணுவத்தை சிங்கள இராணுவம் என்று வரையறுத்து, அதன் தாக்குதலை இனப்படுகொலை என்று விவரிக்கும் தீர்மானத்தை சிபிஎம் கட்சியும் காங்கிரசுக் கட்சியும் ஏற்றுக் கொண்டிருப்பது ஒரு புதிய முன்னேற்றமாகும்.
குறிப்பாக, சிபிஎம் கடந்த காலத்தில் இன ஒடுக்குமுறை என்பதையே ஏற்றுக் கொள்ளப் பிடிவாதமாக மறுத்து வந்தது. இப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இனப் படுகொலையைக் கண்டிக்க முன்வந்திருப்பது நன்று. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகளில் மதிமுகவின் நிலைப்பாடு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், “உள்நாட்டுச் சண்டை என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்'' என்று தன் அறிக்கையில் கூறியுள்ளார். (மாலை முரசு, 9-10-2008). ஆக, அங்கே நடப்பது இனப் படுகொலை என்பதைத் தமிழகத்தின் பொருட்படுத்தத்தக்க அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுவிட்டன. நோயைப் பொறுத்ததே மருந்து, சிக்கலைப் பொறுத்ததே தீர்வு என்பதையும் அனைவரும் ஏற்றுக்கொள்வர். இனப் படுகொலைக்கு என்ன தீர்வு? இன விடுதலைதானே!
இனப்படுகொலை புரியும் சிங்கள அரசிடமிருந்து விடுதலை பெற்றுத் தனியரசு அமைத்துக் கொள்ளும் தமிழீழ மக்களின் தன்-தீர்வுரிமையை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்வதுதான் ஏரணப் பொருத்தமுள்ள முடிவாக இருக்கும். இனப் படுகொலைதான் என்று ஒப்புக்கொண்டு விட்டு விடுதலையல்லாத வேறு தீர்வுகளை - மாநில சுயாட்சி, கூடுதல் அதிகாரம், மாகாண சபை போன்ற... ஒன்றுபட்ட இலங்கைக்கும் இலங்கையின் அரசமைப்புக்கும் உட்பட்ட விதவிதமான தீர்வுகளை - முன்மொழிவது நேர்மையற்ற செயலாகவே இருக்கும். ஒருவர்க்குப் புற்றுநோய் என்று தெரிந்தே புளித்த கீரையை மருந்தாகத் தருவதைப் போலத்தான்! அனைத்துக் கட்சிக் கூட்டம் இயற்றிய இரண்டாம் தீர்மானம் சொல்கிறது:
“இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடு என்ற முறையில் நல்லெண்ண அடிப்படையில் இந்திய அரசால் வழங்கப்படும் இவ்வகை உதவிகள் இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தித் தமிழர்களை அழித்திடவே இலங்கை அரசால் பயன்படுத்தப்படுவதால் அவற்றை மத்திய அரசு உடனடியாக நிறுத்திட வேண்டுமென்று இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.''
இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி வழங்கி வருவதில் நல்லெண்ணம் துளியுமில்லை. ஏனென்றால் எந்த வேற்று நாட்டு வன்தாக்குதலையும் எதிர்த்து இலங்கை போரிட்டுக் கொண்டிருக்கவில்லை. முதல் தீர்மானம் சுட்டிக்காட்டுவது போல் 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருவது சிங்கள அரசு தமிழர்கள் மீது தொடுத்துள்ள இன அழிப்புப் போரே தவிர வேறன்று.
இது தெரிந்தே தில்லிஅரசு கொழும்பு அரசுக்கு ஆயுத உதவி வழங்கி வருவதை நல்லெண்ணம் என்பது இடக்கரடக்கலா? வஞ்சப் புகழ்ச்சியா?
எது எப்படியிருப்பினும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் கோரியிருப்பது வரவேற்கத்தக்கது. புதிதாக உதவி செய்யக் கூடாது என்று கோரும் போதே, ஏற்கெனவே கொடுத்த உதவியைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும்.
ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியும் செய்யக் கூடாது. சென்ற செப்டெம்பர் 8 அதிகாலையில் வவுனியா படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படையினர் 20 பேர் கொல்லப்பட்டனர், 40க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் - ஏ.கே. தாகூர், சிந்தாமணி ரவுட்; இவர்கள் இந்தியர்கள் - இந்திய அரசால் சிங்கள அரசின் போர் முயற்சிக்குத் துணை செய்ய அனுப்பி வைக்கப்பட்ட தொலைநிலைமானிப் (ரேடார்) பொறியாளர்கள். இந்தியாவிலிருந்து சென்று சிங்கள அரசின் போர் முயற்சிக்குத் துணை செய்து வரும் 256 பேர் - படைத் துறையின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் - இலங்கையில் இருப்பதை இந்திய அரசே ஒப்புக்கொண்டு விட்டது.
இந்தியா இலங்கைக்கு அனுப்பியுள்ள படைத்துறையினர் அனைவரையும் திருப்பியழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துக் கட்சிகளும் இப்போதாவது எழுப்ப வேண்டும். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இலங்கையின் படைத்துறையினர், காவல் துறையினர் எவர்க்கும் எவ்வகைப் பயிற்சியும் தரக் கூடாது என்றும் வலியுறுத்த வேண்டும். ஆயுத உதவியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையிலேயே இதெல்லாம் அடக்கம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கருதியிருக்கலாம். ஆனால் ஒவ்வொன்றையும் உடைத்துப் பிரித்து ஓங்கிச் சொன்னால்தான் தில்லிக்காரர்களுக்குச் சற்றாவது உறைக்கும் என்பதை நினைவிற்கொள்க!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூன்றாம் தீர்மானம் “இந்தத் தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவும் இலங்கையில் 2 வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வரா விட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும்'' என்று எச்சரிக்கை விடுத்திருப்பது நன்று.
தமிழக அரசுக்கு இறையாண்மை இல்லை, அயலுறவுத்துறை என்பது இந்திய அரசில்தானே தவிர, தமிழக அரசில் கிடையாது. நாடாளுமன்றத் திலும் தமிழகத்தின் குரலுக்குப் பெரும்பான்மை கிட்ட வழியே இல்லை என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவது தவிர இந்திய அரசை நெருக்குவதற்கு வேறு வழியில்லை. இந்த எச்சரிக்கைக்கு உரிய பலன் கிடைக்கா விட்டால் நடுவணரசில் இடம்பெற்றுள்ள தமிழக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். அப்படியும் தில்லி அசைய மறுத்தால் தமிழக அரசும் பதவி விலக வேண்டும். “ஈழத்தில் தமிழினம் அழியும் போது இந்த அரசு தேவைதானா?'' என்று தமிழக முதல்வர் ஏற்கெனவே கேட்டிருப்பதை நாம் மறக்கவில்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நான்காம் தீர்மானம் “போர் நிறுத்தம் செய்யப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக இடம்பெயர்ந்து வாழ்வதற்கும், உணவு, உறையுள், மருந்து போன்றவற்றை வழங்குவதோடு, மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் செய்வதற்கும் மத்திய அரசு முன்வர வேண்டும்'' என்று கேட்டுக் கொள்கிறது.
போர்நிறுத்தம் உடனே ஏற்பட்டால் நல்லது. ஐந்தாண்டு காலம் நீடித்த போர்நிறுத்தத்தை ஒருதரப்பாக மீறியது சிங்கள அரசுதான். கொழும்பில் ‘சார்க்' மாநாடு நடைபெற்றபோது புலி கள் அறிவித்த போர்நிறுத்தத்தையும் அது ஏற்க மறுத்தது. எனவே சிங்கள அரசு போரை நிறுத்துமாறு செய்வதற்கு இந்திய அரசு நெருக்குதல் தர வேண்டும். ஆனால் போர்நிறுத்தம் உடனே ஏற்படவில்லை என்றாலும் மனிதாபிமான உதவிகள் செய்வதைத் தள்ளிப்போடத் தேவையில்லை.
இவ்வாறு மனிதாபிமான உதவிகள் செய்வதற்கு செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்பு களின் துணையினை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது ஐந்தாம் தீர்மானம். இந்திய அரசு இந்தத் தீர்மானத்தை உடனே ஏற்றுச் செயலாக்கத் தடையேதும் இருக்க முடியாது. தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும் சுட்டுக் கொல்வதுமான கொடுமைகளைக் கண்டிப்பது அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ஆறாம் இறுதித் தீர்மானம். இதற்கு மத்திய அரசு நீடித்த, நிலையான தீர்வு காண வேண்டும் என்று இத்தீர்மானம் கேட்டுக் கொள்கிறது.
எது நீடித்த, நிலையான தீர்வு என்று சுட்டப் பெறாத நிலையில், இந்திய - இலங்கைக் கடற்படைகளின் சுற்றுக்காவல் என்று சூழ்ச்சித் திட்டத்தைச் செயலாக்கவே தில்லியும் கொழும்பும் இத்தீர்மானத்தைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. கச்சத் தீவு ஒப்பந்தத்தை நீக்கம் செய்து அத்தீவை மீட்பது, மீனவர்களுக்குப் படைக் கருவிகளும் பயிற்சியும் கொடுத்து மீனவர் பாதுகாப்புப் படை அமைப்பது... என்ற வழிகளிலேயே நீடித்த, நிலையான தீர்வு காண முடியும் என்பது நம் நிலைப்பாடு.
இறுதியாக, “30 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிற இனப் படுகொலைக் கொடுமைக்கு'' முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? இதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் காட்டும் வழி என்ன? முதல் தீர்மானத்தின் இரண்டாம் பாதி சொல்கிறது: “இந்தப் போர் நிறுத்தப்பட்டு ஈழத்தில் அமைதியும் சுகவாழ்வும் திரும்புவதற்கேற்ற நடவடிக்கைகளை இந்தியப் பேரரசு உடனடியாக எடுத்து அதனை நிறைவேற்றிட வேண்டுமென்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.''
இந்தியப் பேரரசு என்ன செய்ய வேண்டுமென்று குறிப்பாக எதையும் இத்தீர்மானம் சுட்டிக் காட்டவில்லை. எதையாவது செய்யுங்கள், எப்படியாவது செய்யுங்கள் என்று இந்திய அரசிடம் மன்றாடுவது தவிர வேறு வழி இல்லை என்று தமிழகத் தலைவர்கள் நினைக்கிறார்களா?
அக்டோபர் 14: அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களும் இருவாரக் கெடுவும் அறிவிக்கப்பட்ட பின் இந்திய அரசு இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? அவற்றுக்குச் சிங்கள அரசின் எதிர்வினைகள் என்ன? என்று பார்ப்போம்:
அக்டோபர் 15: இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன்சிங் இலங்கையில் இப்போது நிலவும் சூழல் குறித்துக் கவலை தெரிவிக்கிறார். இராணுவத் தீர்வு வேண்டாம், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என்று இலங்கை அரசுக்கு அறிவுரை சொல்கிறார். இலங்கையில் இராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவால் கூற முடியாது, இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் நாம் தலையிட முடியாது என்று காங்கிரசுச் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி கூறுகிறார். போர் தொடரும் என இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவிக்கிறது.
அக்டோபர் 16: இந்தியத் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் ஜெயசிங்கா அறிவிக்கிறார்.இலங்கைப் பிரச்சினைக்குச் சமரசத் தீர்வு ஏற்பட இந்தியா முழு முயற்சி எடுக்கும் என்று இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி அறிவிக்கிறார். தமிழ்நாட்டில் சில தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் காரணத்துக்காகப் போரை நிறுத்த முடியாது என்று இலங்கை அதிபர் இராசபட்சர் அறிவிக்கிறார்.
அக்டோபர் 17: தில்லியில் இலங்கைத் தூதர் ஜெயசிங்காவை இந்திய அயலுறவுத் துறைச் செயலர் சிவசங்கர மேனன் அழைத்து, இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யுமாறும், இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளுமாறும், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்களை நிறுத்துமாறும் அறிவுரை வழங்குகிறார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விளக்கமளிக்க அந்நாட்டு அரசின் உயர்நிலைக் குழு தில்லி வரும் என கொழும்பிலிருந்து அறிவிப்பு வருகிறது. இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா தலையிடாது என்று இலங்கை அமைச்சர் லட்சுமண்யப அபயவர்த்தனா நம்பிக்கை தெரிவிக்கிறார்.
அக்டோபர் 18: மன்மோகன் சிங் தொலைபேசியில் இராசபட்சருடன் உரையாடி, தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளாமல் அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணவும், இடம் பெயர்ந்துள்ள அப்பாவி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும், இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கவும் வலியுறுத்துகிறார். மன்மோகனின் கோரிக்கையை இராசபட்சர் ஏற்றுக் கொண்டதாக இந்தியத் தலைமையமைச்சரின் அலுவலகச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கை செல்வார் என்று தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 19: தோல்வியிலிருந்து தப்பிக்கவே விடுதலைப் புலிகள் இந்தியத் தலைவர்களின் உதவியை நாடியிருப்பதாக இலங்கை அதிபரின் சகோதரரும் இராணுவச் செயலாளருமான கோட்டபய இராச பட்சர் சொல்கிறார். கடந்த மூன்றாண்டுகளில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அறிவிக்கிறார். இதை எழுதுகிற நேரம் வரை நமக்குத் தெரிந்து நடந்திருப்பவை இவையே. தமிழக மக்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் விதத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் எழுப்பிய மூன்று முக்கியக் கோரிக்கைகள்: 1) போரை நிறுத்த வேண்டும்; 2) இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்த வேண்டும்; 3) போரினால் அலைக்கழிக்கப்படும் தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து, பிற உதவிப் பொருள் வழங்க வேண்டும்.
இந்த மூன்றும் உடனடிக் கோரிக்கைகள், அவசரக் கோரிக்கைகள். இந்த மூன்று கோரிக்கைகள் பற்றியும் இந்தியத் தலைமையமைச்சர் மூச்சும் விடவில்லை என்பதை மேலே கண்ட செய்தியிலிருந்து அறியலாம். "இராணுவத் தீர்வு வேண்டாம், அரசியல் தீர்வு வேண்டும்' என்று மன்மோகனர் அறிவுரை சொல்வது எளிது. "அப்படியே ஆகட்டும்' என்று இராசபட்சர் தலையாட்டிவிட்டு இனக் கொலைப் போரைத் தொடர்ந்து நடத்துவதும் எளிதே. "போரை உடனடியாக நிறுத்துங்கள்' என்று மன்மோகனர் கேட்கவே இல்லை என்பதிலிருந்து போர் தொடர்வதையே இந்திய
அரசும் விரும்புகிறது எனத் தெரிகிறது.
"இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யாதீர்' என்ற கோரிக்கைக்கு இந்திய அரசிடமிருந்து மறுமொழியே இல்லை. அதாவது "அப்படித்தான் செய்வோம், கேட்க நீ யார்?' என்று சொல்லாமல் சொல்கின்றனர். மனிதாபிமான உதவிகள் செய்யும்படி இலங்கை அரசுக்கு அறிவுரை சொல்வதற்கு மேல் உருப்படியாக எந்த உதவியும் செய்ய இந்திய அரசு அணியமாய் இல்லை என்பது இந்த நேரம் வரையிலான நிலவரம். தமிழக மக்கள் எழுச்சியின் நெருக்குதலால் அடுத்த சில நாளில் இது மாறலாம், இந்திய அரசு உதவிப் பொருள்கள் அனுப்ப முன்வந்தாலும் வரலாம். ஆனால் இது போதவே போதாது.
ஏனென்றால் நடந்து கொண்டிருப்பது இனக்கொலைப் போர், இந்தப் போரை உடனே நிறுத்துமாறு செய்ய வேண்டும். இனக் கொலைப் போருக்கு இந்தியா உடந்தையாக இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இலங்கை அரசு உடனே போரை நிறுத்தும்படி இந்திய அரசு கோர வேண்டும். அது மறுத்தால் அந்நாட்டுடன் தூதரக உறவுகளை முறித்துக் கொள்வது, பொருளியல் தடை விதிப்பது, ஐ.நா. போன்ற அனைத்து நாட்டு அமைப்பு களிடம் இனக் கொலைப் போர் குறித்து முறையீடு செய்து, உலக அளவில் இலங்கை அரசைத் தனிமைப்படுத்துவது போன்ற பலவும் செய்ய முடியும்.
இந்திய அரசு இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை அறவே நிறுத்துவதோடு, முன்பே அளித்த படைக்கலன்கள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும், அனுப்பிய படைத்துறையினர் அனைவரையும் திருப்பியழைக்க வேண்டும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இலங்கைப் படைத்துறையினர்க்கு எவ்விதப் பயிற்சியும் தரக் கூடாது. மானிய உதவி, கடனுதவி போன்ற எந்தப் பெயரிலும் இந்தியா இலங்கைக்கு எவ் வகையிலும் கை கொடுக்கக் கூடாது. இந்தக் கோரிக்கைகளை இந்திய அரசிடம் தமிழக மக்கள் வலியுறுத்த வேண்டும். இதற்காக எல்லா வகையிலும் போராட வேண்டும். அதே போது இனக் கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இன ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை விடுவிக்கவும் வேண்டுமானால், இலங்கை நிகழ்வுகளின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும்.
அதாவது, தமிழீழ மக்கள் தம் விடுதலைக்காகப் போராடியும் போரிட்டும் வருகிறார்கள் என்ற உண்மையைக் கணக்கில் கொள்ள வேண்டும். அம்மக்கள் இந்தப் போராட்டத்தினூடாகத் தமக்கென்று ஒரு தேசிய விடுதலை இயக்கத்தையும் தேசியப் படையையும் கட்டியெழுப்பியுள்ளார்கள். அவர்களுக்கென்று ஒரு தேசியத் தலைவரும் உள்ளார். இந்த உண்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் "இலங்கைத் தமிழர் பிரச்சினை' என்றும் "இலங்கைத் தமிழர் துயரம்' என்றும் பொத்தம் பொதுவாகப் பேசிக் கொண்டிருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
பாருங்கள், மன்மோகனரின் பேச்சு, அறிக்கை எதிலும் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற பெயரே இல்லை. அப்படி யாரும் இல்லை என்று அவர் கற்பனை செய்துகொள்ள விரும்புகிறாரா, தெரியவில்லை. பேசித் தீர்க்கச் சொல்கிறாரே இவர், யாரோடு பேசுவதாம்? இதே இராசபட்சரின் அரசும், முந்தைய சிங்கள அரசுகளும் யாரோடு பேசின? யாரோடு போர் நிறுத்தம் செய்தன? என்பதெல்லாம் இந்திய அரசுக்குத் தெரியாதா?
இந்திய அரசுதான் இப்படிப் பூனையைப் போல் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டாகி விட்டதாக நம்புகிறது என்றால், தமிழக அரசும் அதையே செய்யலாமா? அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களில் ஒன்றில் கூட விடுதலைப் புலிகள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. ஏன்? அப்படி யாரும் இல்லையா? அல்லது இந்தச் சிக்கலுக்கும் புலிகளுக்கும் தொடர்பே இல்லையா? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சகோதரக் கொலைகளை எதிர்த்து முதல்வர் பேசினாரே, அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தங்கள் தீர்மானங்களில் பிரபாகரனையும் புலிகளையும் ‘சகோதரக் கொலை’ செய்து விட்டது நியாயமா?
‘இந்திய அரசு தலையிட வேண்டும்' என்ற கோரிக்கையை எழுப்புகிற பலருக்கு இந்தக் கோரிக்கையின் உட்பொருள் விளங்கவில்லையோ எனத் தோன்றுகிறது. முதலாவதாக, இந்திய அரசு ஏற்கெனவே தலையிட்டுத்தான் உள்ளது. ஆனால் இந்தத் தலையீடு சிங்கள அரசின் இனக்கொலைப் போருக்கு ஆதரவான தலையீடு, தமிழர்களுக்கு எதிரான தலையீடு. இந்தத் தலையீட்டை நிறுத்து என்பதே நம் கோரிக்கை. இனக்கொலைப் போருக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் இந்திய அரசைத் தலையிடச் செய்ய வேண்டும் என விரும்புவதிலும், அதற்காகப் போராடுவதிலும் தவறில்லை. ஆனால் இந்திய அரசு இந்த வகையில் தலையிடுவதற்குத் தமிழீழ மக்களின் ஒப்புதல் தேவை.
இந்த ஒப்புதலைப் பெற வேண்டுமானால், இந்திய அரசு முதலில் அம்மக்களின் தேசியத் தன்-தீர்வுரிமையையும், அவ்வுரிமையின் அடிப்படையிலான விடுதலைப் போராட்டத்தையும் அறிந்தேற்க வேண்டும். இப்படிச் செய்தால் அம்மக்களின் முன்னணிப் படையாகத் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இந்திய அரசு பேசலாம். அரசியல் தீர்வு காணுங்கள் என்று இலங்கை அரசுக்கு அறிவுரை சொல்வது போலவே புலிகளுக்கும் சொல்லலாம். அவர்களிடம் கேட்க வேண்டியவற்றையும் தாராளமாகக் கேட்கலாம்.
உங்களுக்குப் புலிகளைப் பிடிக்கிறதோ இல்லையோ, அவர்கள் இலங்கை அரசியல் மற்றும் போர்க்களத்தில் வலுமிக்கதோர் ஆற்றல் என்பதை மறுக்க முடியாது. இன அழிப்பிலிருந்து தமிழீழ மக்களைக் காத்து நிற்கும் கேடயம் அவர்களே என்று அம்மக்கள் நம்புகிறார்கள், தமிழக மக்கள் நம்புகிறார்கள், உலகத் தமிழர்கள் நம்புகிறார்கள். உங்களுக்கு இந்த நம்பிக்கை இல்லை என்றால் தமிழீழ மக்களைக் காக்க வேறு யார் உள்ளார், சொல்லுங்கள்.
இந்திய அரசு இச்சிக்கலில் முழுமையாக ஈடுபட்டு ஒரு தீர்வுக்கு உதவ விரும்பினால் புலிகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் அதைச் செய்ய முடியாது. அது புலிகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் இந்த நாட்டில் புலிகள் தடை செய்யப் பட்டிருப்பதுதான் என்றால் அந்தத் தடையை நீக்கி விடுங்கள். பொய்க் காரணங்களைச் சொல்லி விதிக்கப்பட்ட அந்தத் தடையால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.
இந்திய அரசு தமிழீழ மக்களின் விடுதலைப் போராட் டத்தை அறிந்தேற்காமலும், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்காமலும் ‘இலங்கைப் பிரச்சனை'யில் தலையிடுவது என்பது சிங்கள அரசுக்குச் சார்பான, தமிழர்களுக்கு எதிரான தலையீடாக மட்டுமே அமையும்.
இதைத் தமிழக அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் உணர்ந்து உடனடியாக எழுப்ப வேண்டிய கோரிக்கை: இந்திய அரசே, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக! விடுதலைப் புலிகள் மீது எத்தனையோ காரணங்களுக்காக வருத்தம் கொண்டிருக்கும் தமிழகக் கட்சிகள், அமைப்புகளும் கூட இந்தத் தருணத்தில் தடை நீக்கக் கோரிக்கையை எழுப்புவதன் மூலமே இன அழிப்புப் போரை முறியடிப்பதில் துணை நிற்க முடியும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
இப்போதைய நெருக்கடி மிகுந்த சூழலில், புலிகளை ஆதரிக்காமலிருப்பது சிங்கள அரசை ஆதரிப்பது என்ற விளைவையே தரும். பிரபாகரனுக்கு உதவ மறுப்பது இராசபட்சருக்கு உதவுவதாகி விடும். தமிழீழ அரசியல் ஆற்றல்கள் பலவும் இந்த உண்மையை உணர்ந்ததால் கடந்த கால வேறுபாடுகளை மறந்து புலிகளின் பெரு முயற்சிக்குத் துணை நிற்கக் காண்கிறோம். தமிழகமும் இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
நம்மைப் பொறுத்த வரை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வருகிறோம். புலிகள் மீதான தடையை நீக்கு என்ற கோரிக்கைக்கான இயக்கத்தை மேலும் விரிவாக, மேலும் முனைப்புடன் முன்னெடுப் போம். தமிழினம் காக்கத் தடையை நீக்கு! என்பதைத் தமிழகத்தின் முழக்கமாக்கி, தமிழீழ மக்களின் பால் நமது தேசியக் கடமையைச் செவ்வனே செய்து முடிப்போம்!
800 டன் வாய்க்கரிசி?
இந்த ஆசிரிய உரை அக்டோபர் 20இல் எழுதப்பட்டது. அன்று வரையிலான நிகழ்வுகளையும், நிலவரத்தையும் வைத்து இதை எழுதினோம். அதன் பிறகு இன்று (27-10-2008) வரை நிகழ்ந்திருப்பவற்றை கணக்கில் கொண்டு சிலவற்றை குறிப்பிட வேண்டியுள்ளது. இந்தியா தலையிட்டுப் போரை நிறுத்த வேண்டுமென்பது தமிழக அனைத்துக் கட்சிகளின் கோரிக்கை. ஆனால் போரை நிறுத்தும்படி இந்திய அரசு கேட்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தோம். இப்போது இராசபட்சரே வெளிப்படையாக அறிவித்துவிட்டார் - “இந்தியா போரை நிறுத்தச் சொல்லவில்லை'' என்று.
அனைத்துக் கட்சிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அக்டோபர் 24ஆம் நாள் கொட்டும் மழையில் கைகோத்து நின்ற ஆயிரக் கணக்கான தமிழர்கள் தமிழீழ மக்களுக்கு ஏதோ நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.
அக்டோபர் 26ஆம் நாள் இலங்கை அதிபரின் தூதராக பசில் இராசபட்சர் தில்லிக்கு வந்து அதிகாரிகளையும், அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்துப் பேசினார். சோனியா காந்தி தமிழக முதல்வருடன் தொலைபேசியில் உரையாடினார். மாலையில் பிரணாப் சென்னைக்கே பறந்து வந்து தமிழக முதல்வரைச் சந்தித்தார். இந்தப் பரபரப்பான நாளின் முடிவில் கிடைத்த பலன் என்னவென்றால்,
1. சிங்கள அரசு தமிழ் மக்கள் மீதான இனக்கொலைப் போரை நிறுத்தாது. அது மட்டுமல்ல பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர்புரியும் தேவையை இருதரப்புகளும் ஒப்புக்கொள்வதாக கூட்டறிக்கை சொல்வதிலிருந்து இந்தியா இப்போருக்கு தன் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
2. இந்திய அரசு சிங்கள அரசுக்குத் தொடர்ந்து படைக்கலன்களும், பயிற்சியும் தந்து உதவும்.
3. போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்தியா 800 டன் அரிசி மற்றும் உதவிப் பொருட்களை அனுப்பி வைக்கும். தமிழக முதல்வரும் இதை ஏற்றுக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் நாடகத்தை முடித்துத் திரையை இறக்கி விட்டார். அனைத்துக் கட்சிகளின் முடிவை மாற்றுவதற்கு அனைத்துக் கடசிகளையும் கலந்து பேசும் அரசியல் நாகரிகமோ, சனநாயக உணர்வோ இல்லாமற் போன அவலம் ஒருபுறமிருக்க, அவரே கூட போரையும் இந்திய இராணுவ உதவியையும் நிறுத்துவதற்காகக் கோரிக்கைகளை வலியுறுத்தவும் கூட இல்லை என்பது வேதனைக்குரியது.
தமிழீழ மக்களையும் தமிழக மக்களையும் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டுத் திட்டம் போட்டு வஞ்சித்து விட்டன என்பதே உண்மை. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பார்கள். சோனியா, மன்மோகன்சிங் கும்பலும், கருணாநிதி யாரும் செய்துள்ள மொத்தத் துரோகத்தை 800 டன் அரிசிக்குள் மறைத்து விட முடியாது.
இன அழிப்புப் போருக்கு ஊக்கமும் உதவியும் தந்து விட்டு அழிபடும் மக்களுக்கு நீங்கள் அனுப்பும் அரிசி செத்தவனுக்குப் போடும் வாய்க்கரிசியாக மட்டுமே இருக்க முடியும். தமிழினப் பகைவர்களே! உங்களுக்கு ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறோம்: தமிழீழ மக்கள் தங்களை நம்பிப் போராடுகிறார்களே தவிர உங்களை நம்பியல்ல. அவர்களோடு ஒருமைப்பாடு கொண்டு நிற்கும் நாமும் நம் மக்களை நம்பியே போராடுவோம் - இறுதி வெற்றி கிட்டும் வரை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|