Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஜூலை 2009


வளர்ந்து வரும் வல்லரசுகளின் பிடியில் இலங்கைக் கைப்பாவைகள்
ரிச்சர்டு டிக்சன் / தமிழில்: நலங்கிள்ளி

ஆசிய ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கோர் உயிர்களை விழுங்கிய போது நாம் அனைவரும் அழுதோம்.

ஆசிய ஆழிப்பேரலை இலங்கைக் கடற்கரையைத் தாக்கியதுதான் தாமதம், முப்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்தனர். அவர்கள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சில நிமிடங்களில் மூச்சு அடங்கியது. அவர்களின் கடைசி அத்தியாயம் மிகச் சுருக்கமாக முடிவுற்றது.

பெரிய ஒளிபரப்புக் குழுமங்களைச் சேர்ந்த செய்தித் தொலைக்காட்சிகள் ஆழிப்பேரலைக் கொடுமைகளை நாளில் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாளும் காட்டிக் கொண்டிருந்தன. ஊடக நாயகர்களும், விளையாட்டு வீரர்களும் உதவி கேட்டனர். நாமும் நன்கொடைகள் திரட்டி, அவற்றை நமது தேவாலயங்களுக்கும் பள்ளிகளுக்கும் சென்று ஒப்படைத்தோம். தன்னாட்டுத் தமிழ்ச் சிறுபான்மையினரை இன்றுங்கூட இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நாட்டுக்குச் சுதந்திர உலகத்தின் தேசங்கள் அனைத்தும் உதவிகளைக் கோடிக் கணக்கில் வாரி வழங்கின.

ஆனால் இலங்கையின் கொலைக் களங்களில் ஆயிரக்கணக்கான பெண்களும் சிறுவர்களும் வலியால் துடிதுடித்து மெல்லச் செத்துக் கொண்டிருந்த போது உலகம் அமைதி காத்தது.

மற்றொரு கொடுமை அண்மையில் இலங்கைத் தமிழர்களைத் தாக்கியது. பல மறைமுகத் திட்டங்களுடன் நடத்தப்பட்ட போர்தான் அது. அது மாந்தக்குல வரலாற்றில் நடந்துள்ள மிகக் கொடூரமான போர்களில் ஒன்று; அது ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ்க் குடிகளின் உயிரைப் பறித்து, முப்பதாயிரம் பேரை முடமாக்கிப் போட்டது. இந்தப் போர் கண்ணீர்த்துளி போன்ற இந்தத் தீவில் ஒழித்துக் கட்டியுள்ள உயிர்கள் ஆசிய ஆழிப்பேரலை பறித்த உயிர்களைக் காட்டிலும் அதிகம்.

ஆண் பெண்களும் குழந்தைகளும் மாதக் கணக்கில் உணவும் மருந்துமின்றிப் பதுங்கு குழிகளுக்குள் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் பொது இடங்களிலும் அப்பாவி மக்களைச் சீன எஃப் 7 வானூர்திகளும், ருசிய எம்ஐஜி வானூர்திகளும் குண்டுபோட்டுக் கொன்று குவித்தன. கனரகப் பீரங்கிகளும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களும் ஆதரவோ பாதுகாப்போ அற்றுப் போன மக்களைத் தாக்கின. எனவே பலரும் வலிக் கொடுமையை அனுபவித்துத் துடிதுடித்து மடிந்து போயினர். இதில் படுகாயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர் களுங்கூட குண்டுவீசிக் கொல்லப்பட்டனர். நோயுற்று உதவிநாடி ஏங்கிக் கிடந்தவர்களுக்கு உணவும் மருந்தும் வேண்டுமென்றே மறுக்கப் பட்டன. பெண்களும் குழந்தைகளும் கொடுமைக்கு மேல் கொடுமைகள் படவேண்டிய தாயிற்று.

மனிதர்களே உருவாக்கிய இந்த ஆழிப் பேரலையை - சில உலக ஆற்றல்கள் சேர்ந்து இயக்கிய இந்தப் பெருங்கொடுமையை - மேற்கத்திய செய்தித் தொலைக்காட்சிகள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஏழ்மையை ஒழிக்க வேண்டு மென ஓயாது பேசி வரும் ஊடக நாயகர்களும் விளையாட்டு வீரர்களும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்ற ஒற்றை விரலும் உயர்த்தவில்லை.

ஐ.நா.வின் ஊழல் தலைவர்கள் தங்கள் கடமை களைச் செய்யத் தவறினர்; ஆபத்து சூழ்ந்திருந் தோரைக் காப்பாற்றுவதற்குப் பதில் ஆகாத மனிதர்கள் இசைத்த கூடாப் பண்களுக்கு ஆட்டமாடிக் கொண்டிருந்தனர்.

ஆபத்து சூழ்ந்திருந்தோரைக் காப்பாற்றும் கடமை கொண்ட ஐ.நா.வும் ஏனைய பன்னாட்டு நிறுவனங்களும் ஆயிரக்கணக்கோர் உயிரைக் குடித்த ஒரு மாய விளையாட்டில் தங்களுக்கும் பங்கிருப்பது போல் நடந்து கொண்டார்கள். அழிவைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல்கள் பலருக்கு இருந்தும் செயல்பட மனமின்றி வாளாவிருந்தனர்.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சில நாடுகளின் தானாதிபதிகளும் (ராசதந்திரிகளும்?) தலைவர்களும் பேசிய முறையும் நடந்து கொண்ட விதமும் அவர்கள் அனைவரும் விண்வெளியி லிருந்து வந்த அயலவர் யாரோ எழுதிக் கொடுத்த ஒரு திரைக்கதையில் நடித்துக் கொண்டிருக்கிறார் களோ என்ற ஐயமே பலருக்கும் ஏற்பட்டது.

ஐநா தலைமைச் செயலர் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாயை மூடிக் கொண்டனர்; பேச வேண்டிய தருணத்திலும் பெரிதாக ஒன்றும் பேசவில்லை. ஐநா தலைமை அலுவலர் விசய நம்பியாரும், ஏனைய ஐநா பேராளர்களும் பேச்சு நடத்திப் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்காக அவ்வப்போது இலங்கை சென்றனர்.

ஆனால் தங்களுக்கெனச் சொந்தத் திட்டங்களோடு சென்றதால் தோற்றனர்.

அவர்கள் தாங்கள் ஏற்றிருந்த பங்கில் படுதோல்வி அடைந்தனர்; மாந்த குலத்துக்கு எதிராகக் குற்றங்கள் இழைத்த ஓர் ஆட்சிக்கு முழு ஆதரவு நல்கினர்.

இலங்கையில் போரைத் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருந்த சில இந்தியத் தலைவர்கள் அவ்வப்போது இலங்கை சென்றனர். போரை நிறுத்துவதற்கு அன்று, பொதுமக்கள் இழப்புகள் பற்றிப் பேசுவதற்கும் அன்று, போர் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், இலங்கை ஆட்சியாளர்களைப் பாராட்டுவதற்குந்தான் சென்றனர். கலகத் தலைவனின் தலையைத் தாம்பாளத்தில் வைத்துத் தருவார்களா? அவர் இறப்புக்குச் சான்றாக ஓர் ஆவணம் கிடைக்குமா? என்றெல்லாந்தான் அவர்கள் எப்போதும் கதைத்தார்கள். இதெல்லாம் எதற்காக? கலகத் தலைவனே குறி என்றும், மற்றபடிப் போர் நடத்துவது எல்லாம் இந்தப் பகுதியிலான இராணுவத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கோ, இலங்கைக் கடலில் கண்டறியப்பட்டுள்ள எண்ணெய் இருப்புகள் இந்தியாவுக்கு எட்ட வேண்டும் என்பதற்கோ அல்ல என்றும் உலகின் தலையில் மிளகாய் அரைக்கத்தான்.

மனித உரிமைகளின் மெய்க் காவலராக வந்த ஒரே மனிதர் மாண்புமிகு டேவிட் மிலிபேண்டு ஆவார். பொதுமக்களுக்கு எதிராகக் கனரக ஆயுதங்களும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டு மரணங்கள் நிகழ்ந்திருப்பது பற்றி அவர் இலங்கை அதிகாரிகளுடன் மோதினார். எப்போதும் போலவே டேவிட் மிலிபேண்டும் சரி, இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசும் வேறு எவரானாலும் சரி, அவரவர் தோலின் நிறத்தைப் பொறுத்து வெள்ளைப் புலிகள் / பழுப்புப் புலிகள் / மஞ்சள் புலிகள் என அழைக்கப்படுகின்றனர்.

பயங்கரவாதத்தின் மீதான போர் முடிவுற்றாலும் கொலைகள் நின்றபாடில்லை

இலங்கை ஆட்சியாளர்கள் கலகத் தலைவனைக் கொன்று அவரது குழுவை அழித்துவிட்டதாக அறிவித்து விட்டனர். அவர்களைப் பொறுத்த வரை, பயங்கரவாதம் இப்போது இலங்கையை விட்டுத் துடைத்தெறியப் பட்டாயிற்று.

ஆனால் கள உண்மைகள் நமக்குச் சொல்லும் கதையே வேறு. போர் நின்று விட்டாலும் கொலைகள் நின்றபாடில்லை. இலங்கை அரசு தமிழர்களுடன் இன்னும் கணக்கு முடிக்கவில்லை. தமிழன், தமிழச்சி, அது தமிழ்க் குழந்தை என ஒவ்வொருவரையும் ஐயத்துக்குரியவராகக் கருதுகிறது. நெருக்கடி நிலை கால விதிகளின்படி இலங்கைப் படைகளுக்குத் தாங்கள் ஐயப்படும் எவரையும் தளைப்படுத்தவோ கொல்லவோ உரிமை உண்டு. இலங்கையில் தமிழராக வாழ்வது கொடும் பாம்புகள் நெளியும் படுபாதாளத்தின் மீது கட்டிய மெல்லிய கயிற்றில் நடந்து செல்வதற்கு ஒப்பானது.

பயங்கரவாதத்தின் மீதான போர் என்பதும், மாந்தநேய நடவடிக்கைகள் எனப்படுவதும் இப்போது முடிந்து விட்டாலும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக் கின்றன. போர்க் குறிக்கோள்கள் நியாயமான வையா என இப்போது கேட்க வேண்டும். இந்தப் புவியில் எந்த ஓர் அரசும் ஒரே ஒரு கலகத் தலைவரின் தலையைக் கொய்வதற்காக மட்டும் ஐம்பதாயிரம் மக்களைக் குண்டு போட்டுக் கொன்று முப்பதாயிரம் மக்களை முடமாக்கி, சிங்கப்பூரைப் போல் இரு மடங்கு உருவளவு கொண்ட ஒரு பகுதியை நாசம் செய்யாது.

தமிழர் கொலைகள் ‘இலங்கை’ 1948இல் விடுதலை பெற்றதும் தொடங்கின. இந்தத் தீவில் வாழும் தமிழ்ச் சமூகத்தின் குறைகளில் கவனம் செலுத்தும் ஓர் ஆக்கத் திட்டத்தை இலங்கை முன்வைக்கும் வரை இது தொடரும்.

தமிழர் படுகொலைக்கு உலகின் மறுமொழி யாது?

இலங்கை குறித்து வாக்களிக்க 47 நாடுகள் ஒன்று கூடின. பெரும்பான்மை நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. அவை யாவும் இலங்கை யில் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஓர் உள் நாட்டு விவகாரம் என்னும் நிலைப்பாட்டை எடுத் தன. தமிழ்ப் புலிகளை வென்றதற்காக இலங்கை அரசைப் பாராட்டியும் நிகழ்ந்திருக்கக் கூடிய போர்க் குற்றங்களை விசாரிக்க எழுந்த வேண்டு கோள்களைப் புறக்கணித்தும் வாக்களித்தன.

ஐநா மனித உரிமை மன்றம் இப்போது அதன் நம்பகத் தன்மையை இழந்து தன் இருப்புக்கான நோக்கத்தை அறவே பறிகொடுத்து நிற்கிறது.

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த பெரும் பான்மை நாடுகளைப் பொறுத்தவரை, அவர்கள் செய்தி மிகத் தெளிவானது: “தமிழர்களுக்கு இலங்கை என்ன செய்கிறது என்பது எங்களுக்குப் பொருட்டன்று. நாங்கள் இலங்கை அரசுடன் தோளோடு தோள் நிற்போம். ஏனென்றால் எங்கள் மறைவிடங்களிலும் எலும்புக்கூடுகள் உண்டு. அவர்கள் அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லட்டும்; பட்டினி போட்டுச் சாகடிக்கட்டும்; காயமுற்றோருக்கு மருந்து தர மறுக்கட்டும்; தமிழர்கள் அனைவரையும் கொன்று, கூட்டம் கூட்டமாய்ப் புதைக்கட்டும். நாங்கள் அப்போதும் இந்தத் திகில் தீவை ஆதரித்து நிற்போம். ஏனென்றால் இந்த வட்டாரத்தில் எங்களுக்கென்று சொந்த நலன்கள் உண்டு, மறைமுகத் திட்டங்கள் உண்டு”.

இதுதான் இன்றைய உலகின் நிலை. இனி இந்த நாடுகளில் பலவும் மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. இவற்றின் கவன மெல்லாம் தங்கள் பேராசையை நிறைவு செய்து கொள்வதில்தான்.

நான் பலநேரம் கேட்டுப் பார்ப்பதுண்டு. பெரும்பான்மையினர் சிறுபான்மையினரின் உயிர்களைப் பாதுகாப்பது பற்றி எவ்வித அக்கறையுமின்றி, தங்கள் சொந்த நலன்களைப் பேணும் நோக்குடன் அழிவுக் கொள்கைகளில் கவனம் செலுத்தும் நெருக்கடிச் சூழல்களில் வாக்கெடுப்பு என்பது சீரிய கருத்தாக இருக்குமா?

வீடே பற்றி எரிகிறது, பெரும்பான்மை யினருக்கோ அதில் எவ்வித அக்கறையுமில்லை, அப்போது போய் வாக்கெடுப்பு நடத்துவதும், பின்னர் உயிர்களைப் பாதுகாக்கச் செல்ல வேண்டியதில்லை என முடிவெடுப்பதும் அறிவுடைமையாகாது. மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்து பயணிகளைக் காப்பாற்ற நாம் வாக்கெடுப்பு நடத்துவதில்லை. அப்படியே நடத்தி னாலும், கவனம் எல்லாம் உயிர்களை எப்படிக் காப்பாற்றலாம் என்பதில் இருக்குமே தவிர, உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமா? கூடாதா? என்பதிலன்று.

இலங்கையில் நாசி பாணி வெட்டவெளிச் சிறை களில் துன்புறுத்தப்படும் அப்பாவி மக்களுக்கு உதவு வது பற்றி மனித உரிமைகள் மன்றம் இப்போது விவாதித்துக் கொண்டிருக்க வேண்டும். எந்த நாடும் தன் விருப்பம் போல் சிறுபான்மையினரைத் துடைத்தெறியலாம் என இப்போது பச்சை விளக்கு காட்டியிருப்பது மாந்தக்குலத்துக்கே தலைக்குனிவு.

நம்மால் இந்தக் குருதிப் பெருக்கைத் தடுத்திருக்க முடியுமா?

இதற்கு விடை: ‘முடியு’ம். ஆனால் இந்தப் போரில் ஆதாயமடைந்தோர் பலர் என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் அழிந்துங்கூட பலரும் போரை நிறுத்த முடியவில்லை. அது இறுதி வரை தொடர்ந்து நடைபெறட்டும் என முடிவெடுத்த னர். காலங்காலமாகவே நல்லுறவு கொண்டிராத இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தடாலடியாக நண்பர்களாயின. தாங்கள் வெறித் தனமாகத் தேடிக் கொண்டிருக்கும் இறைச்சித் துண்டைப் பகிர்ந்து கொள்ள உடன்பாடு கண்ட வல்லூறுகளைப் போல் நடந்து கொண்டன.

என்ன நடந்து கொண்டிருக்கிறது என அனைவருக்கும் தெரியும். உலகத் தலைவர்கள் இழப்பு எண்ணிக்கையை மசமசப்பான கிரிக்கெட் வர்ணனையைப் போல் கேட்டுக் கொண்டிருந்த னர். அங்குமிங்கும் அவர்களில் சிலர் “ஒப்புக்குச் சப்பாணியாக அறிக்கைகள் விட்டனர். எழுந்து நின்று, கொலைகளை நிறுத்து” எனச் சொல்லும் துணிவு எவருக்கும் இல்லை. அவர்களுக்கு அதிகாரம் இருந்தும் அதைச் செய்யவில்லை.

நடைபெற்றுக் கொண்டிருந்த இறப்பு எண்ணிக்கையை அவ்வப்போது ஐநா தனது புள்ளிவிவரப் பலகையில் குறிப்பு வைத்துக் கொண்டிருந்தது. புள்ளிவிவரம் நாளொன்றுக்கு ஆயிரம் என உயர்ந்தும் அவர்கள் மௌனம் காத்தார்கள். அவர்கள் அது பற்றி வாயைத் திறந்து பேசினார்களில்லை.

அமெரிக்கத் துணைக்கோள்கள் கொலைகளைப் படமெடுத்துக் கொண்டிருந்தன. ஆனால் குருதிப் பெருக்கைத் தடுக்க எந்த முயற்சியும் இல்லை. தேசங்களின் இதயங்கள் கற்களாயின. ஆதரவற் றோர் அழிந்து போயினர். ஆக, பேராசைக்காரர் களுக்குக் கொண்டாட்டமே.

மனித உரிமை காப்பர்களும் கொழுத்த சம்பளம் பெறும் தானாதிபதிகளும் இலங்கையில் நடந் தேறும் கொடூரங்களைக் கேட்டுக் கொண்டிருந்த னர் - பெருவிருந்து உண்டபடி. அவர்களுக்கு இந்தக் கதைகள் சலிப்புத் தட்டுவனவாக இருந்தன. வல்லுநர்களும் ஆய்வாளர்களும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு ஏதும் செய்வதற்குப் பதிலாகத் தங்கள் ஆய்வுத் தாள்களை வெளியிடுவதிலேயே குறியாக இருந்தனர்.

மேலை நாடுகள் பலவும் குரலெழுப்பினாலும், அவற்றின் அறிக்கைகள் வலுவற்றிருந்தன. ஆட்சியைத் தடுத்து நிறுத்த அவற்றால் இயலவில்லை.

வன்னியில் இறந்து கொண்டிருந்தவர்களின் உறவினர்கள் உலகின் பெருநகரங்களில் தெருவி லிறங்கினர். அரச அரசியர் முன்னால் மண்டியிட்டு அழுதனர். பல வழியிலும் போராடிப் பார்த்தனர். நாம் அவர்கள் அழுகுரலுக்குக் காது கொடுக்க வில்லை. மாறாக, அவர்கள் நம் தெருக்களை மறித்ததால் நாம் அவர்களை மிகவும் நச்சு பிடித்தவர்களாகக் கருதினோம். அவர்கள் தங்கள் செய்தியை சேர்ப்பிக்க இயன்றதனைத்தும் செய்து பார்த்தார்கள். ஆனால் அவர்கள் அழுகுரல் விழுந்ததோ நமது செவிட்டுச் செவிகளில். நாம் அதற்குக் காது கொடுத்துச் செயல்பட்டிருப்போமே யானால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருப்போம்.

நமது வானொலி நிகழ்ச்சிகள் இந்தக் கிளர்ச்சி களுக்கான காரணங்களை ஆராயவில்லை. ஆனால் நாம் இந்தக் கிளர்ச்சிக்காரர்களை வீதிகளிலிருந்து வெளியேற்றுவது எப்படி எனப் பேசினோம். நமக்கு இப்போது மகிழ்ச்சிதான். ஏனென்றால் தமிழர்ப் போராட்டங்கள் ஏதும் இனி இல்லை. அவர்கள் யாரைப் பாதுகாக்க நினைத்தார்களே, அவர்களில் பலரும் இப்போது செத்து விட்டனர்.

இந்தப் போர் பல நாடுகளின் முழு ஆதரவுடன் நடத்தப்பட்டது என்பது வெள்ளிடை மலை, போராளிகள் தாங்கள் சரணடைவதாக அறிவித்த பிறகேனும் இந்நாடுகள் இலங்கை அரசிடம் சொல்லிக் குருதிப் பெருக்கை நிறுத்தியிருக்க முடியும். ஆனால் எவருக்கும் அக்கறையில்லை. ஏனென்றால் அனைத்தும் அவர்கள் திட்டங்களின் படியே நடந்தேறின. இந்தப் போரின் பங்காளிகள் இந்தப் போர் முடிவுக்கு வருமுன்னே தத்தமது ஆதாயங்களை அறுவடை செய்யத் தொடங்கி விட்டனர்.

இந்தப் போரின் பயனாளி யார்?

இலங்கைப் பகுதியில் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளத் துடிக்கும் இந்தியாவும் சீனமும் இலங்கை அரசைத் தமது கைப்பாவையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இலங்கையிலிருந்து பையப்பையத் துடைத்தெறியப் பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழ்ச் சமூகத்தினர் தவிர ஒவ்வொருவருக்கும் இப்போது மகிழ்ச்சியே.

இலங்கையில் கடந்த 60 ஆண்டுக்கு மேலாகத் தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சிங்களத் தீவிரவாதிகளின் காட்டில் நல்ல மழை.

சீனம் இவ்வுலகின் குழம்பிய, குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறது. ‘அது பலசாலி’ எனக் கருதிய ஒருவருக்குக் கொலைகார ஆயுதங்களை வாரி வழங்கியதன் வாயிலாக மீண்டும் ஒரு முறைதன் குறிக்கோளை அடைந்து விட்டது. சீனம் தென் இலங்கையில் பல கட்டமைப்புப் பணிகளைத் தொடங்கி விட்டது. இவற்றில் ஒன்றாகிய துறைமுகம் முக்கியமாகச் சீனக் கடற்படைக்குப் பயன்படும்.

இந்தியா ஏற்கெனவே இலங்கைக் கடலில் எண்ணெய் ஆய்வுகளுக்கான வரைவுத் திட்டத்தைத் தொடங்கி விட்டது. வடக்கு, கிழக்கு இலங்கையில் பல கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்குவதற்குத் தன் வல்லுனர்களை அனுப்பத் தொடங்கி விட்டது.

சீனமும் பாகிஸ்தானும் பல கொலைகார ஆயுதங்களை வழங்கின என்றாலும், அவர்கள் போருக்கான திரைக்கதையை எழுதுவதிலோ, அரங்கேற்றுவதிலோ ஈடுபடவில்லை.

இலங்கை அதிபர் தாம் இந்தியாவின் போரை இலங்கையில் நடத்தியதாக அண்மையில் ஒப்புக் கொண்டுள்ளார். முன்னாள் இந்தியத் தூதர்களில் ஒருவர் குருதிக் கறைபடிந்த கைகளுடன் நிற்கும் இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்தைக் கண்டு கொள்ளவில்லை என வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கையில் போர் நடந்தது கலகத் தலைவரின் தலைக்காக அன்று. கலகத் தலைவனின் உடலை வைத்துக் கொண்டு அதனைப் பரபரப்பான செய்தி ஆக்கியதும் சரி, இந்த வெற்றி உரைகள் அனைத்தும் சரி, முட்டாள்தனமான காரியங்களே அல்ல. அவை உள்ளபடியே கொடும் பாம்புகளை யெல்லாம் தங்கள் சமுக்காளங்களின் கீழே ஒளித்து வைக்கப் பார்க்கும் பேர்வழிகள் வேண்டுமென்றே செய்து முடித்த காரியங்கள்.

இலங்கையில் போர்க் குற்றங்கள்

சதாம் உசேன் குர்திய மக்களுக்குச் செய்த வற்றைக் காட்டிலும் இலங்கைப் படைகள் செய்த போர்க் குற்றங்கள் அதிகம்.

வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த போராளிகள் ஒழிக்கப்பட்டனர். காயமுற்ற ஆயிரக்கணக்கான குடிமக்கள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். மோசமான போர்க் குற்றங் கள் நிகழ்த்தப்பட்டன. குற்றம் செய்தவர்கள் இலங்கைப் படையினர் மட்டுமல்ல. சில இந்தியப் பாதுகாப்பு வல்லுநர்களும், இலங்கை - இந்திய அரசியல்வாதிகளும் ஐநா அதிகாரிகளும் கூட குற்றவாளிகளே.

தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் (கொத்துக் குண்டுகளும் பாஸ்பரஸ் குண்டுகளும்) அப்பாவி ஆண் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டன. செஞ்சிலுவைத் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். தாக்குண்ட மருத்துவமனைகளே மீண்டும் மீண்டும் தாக்கப் பட்டன. பேராற்றல் வாய்ந்த குண்டுகளால் கட்டடங்களும் சொத்துகளும் அழிக்கப்பட்டன.

அப்பாவிக் குடிமக்கள் மாதக் கணக்கில் பதுங்கு குழிகளுக்குள் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களுக்கு உணவும் மருந்தும் மறுக்கப்பட்டன.

இலங்கை இந்நிலையிலும் சான்றுகளை மறைத்து வருகிறது

ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோரைக் கொன்று குவிந்திருப்பதை, முப்பதாயிரம் பேரைப் படுகாயமுறச் செய்திருப்பதை, 3 லட்சம் மக்களை வெட்டவெளிச் சிறையில் முடக்கி வைத்திருப்பதை எவரும் உண்மையான மாந்தநேயச் செயல்பாடு என்றோ, மீட்பு நடவடிக்கை என்றோ நம்ப மாட்டார்கள். முதலில் இந்த மக்கள் ஒருபோதும் பிணைக்கைதிகளாக வாழ்ந்ததில்லை.

மோசமான போர்க் குற்றங்கள் நிகழ்த்தப் பட்டிருப்பதும் இலங்கைக்குத் தெரியும். அவர்கள் இப்போது தங்கள் அட்டூழியங்களை மறைப் பதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

போர்ப் பகுதியிலிருந்து வெளியேறிய மக்களே இந்தப் போர்க் குற்றங்களுக்கு முக்கியச் சாட்சிகள். அவர்கள் தங்களுக்கும் தங்கள் பாச உறவுகளுக்கும் நடந்த அனைத்தையும் பார்த்தவர்கள். இலங்கைப் படைகள் இதழாளர்களையும் தொண்டர்களையும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் (உஇம) முகாம்களுக்குள் நுழைய விடாது தடுப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று படையினர் தாங்கள் செய்த குற்றங்களை மறைக்க விரும்புவதே ஆகும்.

வன்னியில் காயமுற்றோருக்கு ஊழியம் செய்த மூன்று மருத்துவர்களையும் பன்னாட்டுச் சமூகம் மெய்த் தீரர்களாகக் கருதுகிறது. இலங்கை அரசு அவர்கள் முயற்சிகளைப் பாராட்டுவதற்குப் பதிலாக அவர்களைச் சிறையிலடைத்துப் போர்க் குற்றங்களை மறைக்கப் பார்க்கிறது.

போர் இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இந்நிலையிலும் இதழாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் போர்ப் பகுதிக்குள் செல்ல அனுமதியில்லை. போர் முடிந்ததாகவும் எல்லாக் குடிமக்களும் மீட்கப்பட்டு விட்டதாகவும் இலங்கை அறிவித்த நிலையிலும், கொலைக் களங் களில் ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றுக் கிடந்தனர், அச்சமுற்ற குடிமக்கள் பலர் பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்தனர்.

இலங்கைப் படையினருக்கு மனிதக் குவி யலைப் போட்டுப் புதைக்கும் தொழில்நுட்பம் காலாவதியாகி விட்டது. இப்போதுங்கூட இலங்கை அதிகாரிகள் இதழாளர்களையோ ஊழியர்களையோ போர்ப் பகுதிக்குள் அனுமதிப்பதில்லை. ஆயிரக்கணக்கான பிணங் களை அகற்ற இராணுவத்திற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது.

கலகத் தலைவனின் உடலுக்கு எரியூட்டிச் சாம்பலைக் கடலில் வீசியது எப்படி என இலங்கை ஆயுதப் படைகளின் தலைமை அண்மையில் செய்துள்ள அறிவிப்பு உணர்த்தும் செய்தி என்னவென்றால், இதே நுட்பத்தைத்தான் அவர்கள் மரித்துப் போன மற்ற உடல்களுக்கும் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு சான்றுகளைத் துடைத்தெறியும் பொருட்டு நடமாடும் தகன அடுப்புகளைப் பயன்படுத்திப் பிணங்களை எரிக்கக் கூடும்.

மோதலில் மடிந்தோரின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், இந்தக் காரியத்தைச் செய்து முடிக்க அவர்களுக்குச் சிறிது காலம் கண்டிப்பாகத் தேவைப்படும். எல்லாம் முடிந்த பிறகு, நமது பிபிசி நிருபர்களை அங்கு அழைத்துச் செல்வார்கள், அவர்களும் நமக்குத் தாங்கள் வன்னியில் கண்ட அழகான நீல வானத்தையும் தங்க மணல் கடற்கரைகளையும் வருணித்துச் சொல்வார்கள்.

போர்க் குற்றச் சான்றுகள் ஏற்கெனவே சேகரிக்கப்பட்டாயிற்று

இது வரலாற்றில் சர்ச்சைக்குரிய போர்களில் ஒன்று. இலங்கைப் படையினர் நிருபர்களையும் இதழாளர்களையும் போர்ப் பகுதிக்குள் நுழைய விடவில்லை என்ற போதிலும், மடிந்து கொண்டிருக்கும் மக்களின் ஒளிப்படங்களும் காணொளிகளும் (வீடியோக்களும்) உலகெங்கு முள்ள தனியாட்களுக்கும் நிறுவனங்களுக்கும் தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டன.

வன்னியில் தொலைத்தொடர்பு அமைப்புகள் கடைசி நிமிடம் வரை இயங்கிக் கொண்டிருந்தன. உயர் தெண்டிறத் துணைக்கோள் படிமங்கள் (ஏண்ஞ்ட் ழ்ங்ள்ர்ப்ன்ற்ண்ர்ய் நஹற்ங்ப்ப்ண்ற்ங் ஐம்ஹஞ்ங்ள்) மக்களுக்கு எதிராகக் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை மெய்ப் பிக்கின்றன. போரின் கடைசிக் கணங்களைப் பல தொழில்நுட்பச் சாதனங்களும் படம் பிடித்துள் ளன.

இலங்கை அதிகாரிகள் உஇம முகாம்களில் அடைக்கப்பட்டோரின் வாயை அடைத்துக் கொண்டிருப்பது கால விரயமே. ஏனென்றால் கடைசி நாள் வரை போர்ப் பகுதிக்குள் மாட்டிக் கொண்டிருந்த பலரும் கடல் கடந்து சென்று விட்டனர். பலர் வெளிநாட்டுக் கரையை அடைந்து விட்டனர்.

இலங்கைப் படைகள் போர்க் குற்றங்கள் இழைத்துள்ளன என்பதற்கு ஆயிரக்கணக்கான சான்றுகள் ஏற்கெனவே உள்ளன. இந்தக் குற்றங் களுக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப் பட வேண்டும்.

தமிழ்க் குடிகளுக்குக் கொடுவதை முகாம்

இலங்கைப் படையினர் ஐம்பதாயிரத்துக்கு மேற் பட்டோரைக் குண்டு போட்டுக் கொன்று குவித்த னர். இப்போது 3 லட்சம் பேரை நாசி பாணி வெட்டவெளிச் சிறை முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்தக் கேடுகெட்ட முகாம் களில் அன்றாடம் 10-14 இறப்பு கள் நடந்து வருகின்றன. இறப்ப வர்களில் பெரும்பாலோர் சிறுவர்களும் முதியவர்களுமே ஆவர். அடைபட்டவர்கள் எவருக்கும் உறவினர்களைப் பார்க்க அனுமதியில்லை. பாசத்துக்குரிய உறவுகளிட மிருந்து உணவோ உடையோ பெறுவதற்கும் அனுமதியில்லை.

இந்த முகாம்களில் பாலியல் வல்லுறவுகளும் சித்திரவதை களும் நடைபெற்று வருவதை அண்மையில் ஸ்கை நியூஸ் பதிவு செய்துள்ளது. இளைஞர்கள் அன்றாடம் காணாமல் போகின்றனர். பிணங்கள் முகாம் களுக்கு வெளியே வீசி எறியப் படுகின்றன.

காயமுற்றோருக்கும் நோயுற்றோருக்கும் போது மான மருத்துவ உதவி இல்லை. இந்நிலையிலும் இலங்கை அரசு பன்னாட்டுத் தொண்டு அமைப்புகள் எதையும் இந்த முகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை. இலங்கையில் தமிழினத்தின் அடித்தளங்களையே அழிக்கும் நோக்கில் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமென்றேதனித்தனி முகாம்களில் அடைக்கப்படுகின்றனர்.

இது மீண்டும் நடைபெற முடியுமா?

நாம் குற்றவாளிகளை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், எதிர்காலத்தில் இத்தகைய போர்களைக் கையாள்வதற்குரிய அதிகாரங்களு டன் ஐ.நா.வை மறுகட்டமைப்புச் செய்ய வேண்டும். இல்லையேல் இத்தகைய கொடுமை இலங்கையிலோ அல்லது உலகின் வேறு பகுதியிலோ மீண்டும் நடைபெறும்.

இலங்கைப் போரை ஒருங்கிணைத்து நடத்திக் காட்டியது இந்தியா. கொலைகார ஆயுதங்களை வழங்கியது சீனமும் பாகிஸ்தானும், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் ஐ.நா.வும் ஏனைய மேலைத் தேசங்களும் மௌனம் காத்தன.

இது போன்றஒன்று எதிர்காலத்தில் நடப்பதற்கு நாம் இசைவளிக்கப் போகிறோமா? சில நாடு களின் பேராசைக்காக இந்த அப்பாவிகள் இறக்கத்தான் வேண்டுமா?

ஊழல் அதிகாரிகளைக் கொண்ட ஐ.நா. தன் கடமைகளைச் செய்யாது தோற்றுவிட்டது. வேண்டுமென்றே மௌனம் காத்தது. குருதிப் பெருக்கைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றிருந் தும் அதற்கு ஆக்கவழி நடவடிக்கை எதையும் மேற்கொள்ளத் தவறியது.

இலங்கைத் தலைவர்கள் இந்த துயில் அரக்கர்கள் சிலரின் கைப்பாவைகள் ஆயினர். இந்தப் போரின் சூத்திரதாரிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டாக வேண்டும்.

எதிர்காலத்தில் எந்த மோதல்களையும் தீர்த்து வைப்பதில் ஐ.நா.வின் பங்கு இப்போது ஐயத்துக்கு இடமாகியுள்ளது. தன் சொந்தக் காலில் நின்று இத்தகைய குற்றங்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு பன்னாட்டு அமைப்பு நம் உடனடித் தேவை. அப்பாவிகள் கொன்று குவிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்குக் கிஞ்சிற்றும் அதிகாரமற்றஓர் அமைப்பை வைத்துக் கொண்டிருப்பதில் பொருளேதும் இல்லை.

தீவிரக் கண்காணிப்பில் இன்றைய இலங்கை

இலங்கையைப் பொறுத்தவரை, கலகத் தலைவனைக் கொன்றாயிற்று. விடுதலைப் புலி களை ஒழித்தாயிற்று. ஐம்பதாயிரத்துக்கு மேற் பட்ட மக்களைக் கொன்று குவித்தாயிற்று.

அவர்கள் சாதித்திருப்பது குறித்து அனைவருக் கும் மகிழ்ச்சியே என்றால், இன்னும் ஏன் கொலை கள் நடந்து கொண்டிருக்கின்றன? என்பதே வினா. தமிழர்கள் இன்றளவும் மிரட்டி ஒடுக்கப்படுகிறார் கள். அவர்களின் சொத்துக்கள் நாடு முழுதும் கொளுத்தப்படுகின்றன. சிங்களக் காடையர்கள் தெருக்களில் தமிழ்ப் பெண்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள்.

இந்தத் தீவு ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபது களில், எண்பதுகளில் அனுபவித்தது போன்ற மற்றொரு கலகத்தைக்கூட காணக்கூடும்.

அந்தக் காலங்களில், அவர்கள் தமிழர்களை வடக்குக்கும் கிழக்குக்கும் துரத்தினர். இன்று முழுத் தீவிலும் சீருடையணிந்த, ஆயுதந்தரித்த சிங்கள ஆண், பெண்கள் நிரம்பியிருப்பதால் தமிழர் கள் தங்கள் பாதுகாப்புத் தேடி ஓடி ஒளிய இடமே யில்லை.

மற்றொரு தமிழ்க் கலகம் நடக்கும் ஆபத்து

புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்துக்கு இலங்கை அன்னிய நாடன்று. இந்தச் சமூகத்தில் 90 விழுக் காட்டுக்கு மேற்பட்ட தமிழர்கள் வன்னியில் தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என்ன நடந்தது என்பதைக் கண்ணால் கண்டவர்கள். அவர்கள் தங்கள் உடன்பிறந்தான்களும் உடன்பிறந் தாள்களும் தாய் தந்தையரும் ஆதரவின்றி இறப்பதைக் கண்டார்கள். அவர்கள் தங்கள் பாசமிகு உறவுகளுடன் போரின் கடைசி நாள்கள் வரை உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என்ன நடந்து கொண்டிருந்தது எனத் தெரியும். அவர்களில் பலரின் உறவினர் களும் இந்தக் கேடுகெட்ட உஇம முகாம்களில் அடைபட்டுள்ளனர்.

பிரபாகரன்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படு கிறார்கள். அவர் என்ன செய்திருப்பினும், பற்பலக் கொடுமைகளையும் கண்ட பிறகுதான் அதையெல்லாம் செய்தார். தென் இலங்கையில் தமிழர்கள் உயிரோடு எரிக்கப்படக் கண்டார்; சிங்களக் காடையர்களால் தமிழர் தம் சொத்துக்கள் கொளுத்தப்படக் கண்டார்.

தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை தொடரு மானால், இந்தப் புலம்பெயர்த் தமிழ்ச் சமூகத்தி லிருந்து இன்னுமதிகப் பிரபாகரன்களை இப்படி உருவாக்கி விட்டோமே என இலங்கை, ஏன் இந்தியாவுங்கூட வருத்தப்படும் நாள் வரும்.

முதன்மையாக இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து வரும் பழந்தமிழ்ச் சிறுபான்மைச் சமூகம் இந்தப் புவிக்கோளில் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் ஒன்றாகும்.

இலங்கையின் எதிர்காலம் அதன் அரசு எடுக்க விருக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்ததே. இனவெறியையும் சமய மேலாண்மையையும் அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டுச் செய்யப்படும் சிங்களக் குடியேற்றங்கள் வாயிலாக முழு நாட்டையும் சிங்களமயமாக்கத் தொடர்ந்து நடைபெற்று வரும் முயற்சிகளும் மோதலைப் படிப்படியாகப் பெருக்கி, கொலைவெறிச் சூழலை உருவாக்கி விடும்.

இதன் விளைவு இலங் கையை நிலைகுலையச் செய்வதோடு மட்டும் நில்லாது உலகளாவிய முறையில் எதிரொலிக்க வும் செய்யும்.

முடிவுரை

அண்மையில் இலங்கை அதிபரும் அவர் தம் அமைச்சர் களும் தாங்கள் சீனாவிட மிருந்தும் பாகிஸ்தானிட மிருந்தும் பெற்ற ஆயுதங் களின் உதவியுடன் இந்தியப் போரை இலங்கையில் நடத்தி யுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் இழைத்த குற்றங்களில் பாதியை இப்போது இலங்கை அதிகாரிகள் சொல்லால் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஒன்றுக்கொன்று போட்டியாக வளர்ந்து வரும் இரு வல்லரசுகளின் கைப்பாவைகளாகிப் போனார்கள் இன்றைய இலங்கைத் தலைவர்கள். ஒரு காலத்தில் இலங்கையின் எல்லைகளுக்குள் கட்டுண்டு கிடந்த மோதல் இன்று ஒரு பன்னாட்டுச் சிக்கலாகி விட்டது. இலங்கையின் இராணுவத் திறன்களுக்கு இன்றைய அவர்களின் புது ஆண்டைகள் செயற்கையாகத் தினவேற்றி யுள்ளனர். ஒரு காலத்தில் மேற்கைப் பார்த்து அடக்க ஒடுக்கமாகப் பேசி வந்த ஒரு நாடு இன்று பல நாடுகளுக்கும் அறைகூவல் விடுக்கத் தொடங்கி யுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் இலங்கை மோதல் குறித்து முறைசார்க் கூட்டங்களில் விவாதிக்க சீனம் தெரிவித்த எதிர்ப்பு இலங்கைப் போரில் அதற்குள்ள பங்குக்கு அப்பட்டமான சான்றாகும்.

ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் இந்தியாவும் சீனமும் பாகிஸ்தானும் இலங்கையுடன் சேர்ந்து நின்றன. இலங்கைப் படையினர் இழைத்ததாகக் கருதப்படும் போர்க் குற்றங்கள் மீது போர்க் குற்ற வியல் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்பதற்கு எதிராக அவை வாக்களித்தன. எனவே அவற்றின் கைகள் இரத்தக் கறைபடிந்தவை என்பது வெட்ட வெளிச்சமாயிற்று.

மனித உரிமைக் காப்பர்களும், தத்தமது குடி மக்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்கப் பல போர் களை நடத்திய உலக ஆற்றல்களும் இன்று இலங்கையில் போரை ஒருங்கிணைத்து நடத்திக் காட்டியுள்ள கைதேர்ந்த மாய வித்தைக்காரர்களின் முகங்களைப் பார்த்து விட்டனர்.

போர்த் திட்டங்களை வகுத்து வழிகாட்டியது இந்தியா என்றாலும், போர்க் கருவிகளைத் தந்துதவியது சீனம் என்றாலும், இலங்கைத் தமிழóக் குடிமக்களைப் படுகொலை செய்தது இலங்கை ஆயுதப் படையினரே. பையப் பையத் தமது சிறுபான்மையினரைத் துடைத்தெறிவதில் பேர் போன ஒரு நாடு தங்கள் புது ஆண்டைகளின் ஆசி யுடன் அப்பாவித் தமிழர்களுக்குப் பெரு மளவுப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு இதுவே தக்க தருணமெனக் கண்டது.

பல்லாயிரக்கணக்கானோர் இறப்பதற்குக் காரணமாக இருந்துள்ள இலங்கையும் அதன் புதிய நண்பர்களும் சர்ச்சைக்குரிய இந்த நாசி பாணி வெட்டவெளிச் சிறைமுகாம்களை நடத்த விடலாமா என்று நாகரிக உலகு முடிவெடுக்க இதுவே தக்க தருணம்.

நாம் அனைவரும் இந்தப் போரில் பல உயிர் களை காக்கத் தவறி விட்டோம். ஆனால் இப்போதுங்கூட காலம் கடந்து விடவில்லை. இன்றளவிலும் குத்து முட்கம்பி வேய்ந்த வெட்டவெளிச் சிறை முகாம்களில் துன்புறுத்தப் பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவிகளை நம்மால் கட்டாயம் காப்பாற்ற முடியும்.


மின்னஞ்சல்: [email protected]


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com