Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஜனவரி 2009
அறிவோம் அம்பேத்கர்!
வே. பாரதி

தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்

நாசிக் போராட்டம் நடைபெற்ற அதே காலத்தில் "தீண்டப் படாதோர் அனைத்திந்திய மாநாடு' நடத்த அதன் தலைவர்கள் திட்ட மிட்டனர். கே.ஜி. நட்கூலி தலைமையில் நாகபுரியில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. பூனாவின் தாழ்த்தப்பட்டோர் தலைவரான காம்ப்ளேவுடனும் கலந்து பேசி மாநாட்டினை அம்பேத்கர் தலைமையில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. பிரித்தானியர் ஏற்பாடு செய்த வட்டமேசை மாநாட்டுக்கும் அம்பேத்கரையே அனுப்புவதெனவும் அக்குழு முடிவு செய்தது.

நாகபுரி மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமை உரை :

“ஒரு தனிமனிதனுக்கு ஓர் உயிர்தான் இருக்கிறது என்ற அடித்தளத் தின் மீது குடியரசுக் கோட்பாடு இயங்குகிறது. ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் அவனால் இயன்றளவுக்கு முன்னேறுவதற்கான முழு வாய்ப்பையும் தர வேண்டும். ஆனால் இந்தியாவில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகவுள்ள ஆதிக்க வாதச் சிறுகும்பல் இக்கொள்கைக் கெதிரான எண்ணங்களையும் செயல் களையும் கொண்டிருக்கிறது. சமூகம் என்பதும் அரசியல் என்பதும் ஒன்றோ டொன்று தொடர்பு இல்லாததாகவும் மனிதனின் தனித்தனிச் செயற்பாட்டுத் தளங்களாகவும் இருக்கின்றன என்று எண்ணுவது தவறாகும். ஆதிக்கம் செய்து கொண்டிருக்கும் இந்திய மேட்டுக்குடியினர், மேலும் அதிகாரம் வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தீண்டாமை எனும் பாவம் தொடர்வதற்கு இவர் களே காரணமாவார்கள். தீண்டாமை யின் பெயரால் ஆறுகோடி மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும் நாகரிகத்தின் கலாசாரத்தின் பயன் களும் மறுக்கப்பட்டிருக்கின்றன. இதே போன்று பெரும் எண்ணிக்கை யில் உள்ள இந்நாட்டின் ஆதிக்குடி களும் மலைவாழ் மக்களும் நாடோடி களாகக் காட்டுமிராண்டி நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும்படி வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நசுக்கப்பட்டுக் கிடக்கும் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கு அரசியல் சட்டத்தில் போதிய பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டும். தீண்டப்படாத வகுப்பினரின் மக்கள்தொகை விகிதாச் சாரத்துக்கு ஏற்பச் சட்டசபைகளில் இடம் ஒதுக்கித் தரப்பட வேண்டும்.''

ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்ததால் காங்கிரசு வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. காங்கிர சின் தன்மையை தமது பட்டறிவால் நன்கு அறிந்து கொண்டவர் அம்பேத்கர். காங்கிரசின் பெருவளர்ச்சிக்கு எதிராகத் தமது அரசியல் செயல்பாடுகள் அமைந்திருப்பது மட்டும் போதுமானதல்ல என்பதை அம்பேத்கர் அறிவார். தாழ்த்தப் பட்ட மக்களின் சமூக, அரசியல், பொருளியல் உரிமைகளை வென்றெடுக்கக் கிடைக்கிற எந்த வாய்ப்பையும் அவரால் நழுவ விட இயலாது. இந்திய விடுதலையின் அடையாளமான காங்கிரசு இயக்கம் சமூக விடுதலையின் அடையாளமான சாதி ஒழிப்பை அடுத்துக் கெடுத்தது. இந்நிலையில் புதிய அரசமைப்பு வரைவுக்கான வட்டமேசை மாநாட்டில் ஊமை களின் குரலாய்த் தமது குரல் ஒலிக்க வேண்டிய தேவையினால் அம்பேத்கர் அதில் கலந்து கொள்ள முடிவெடுத்தார்.

வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வது தேச விடுதலைக்குச் செய்யும் துரோகம் என்பதுபோல் காங்கிரசு படம் காட்டியது. மிகச் சிறுபான்மையினராக இருக்கிற தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளோ, உரிமைக் கோரிக்கைகளோ நாட்டின் அடையாளமாகி விடாமல், மற்ற பெரும்பான்மை மக்களின், குறிப்பாகப் பார்ப்பனர்கள், உயர்சாதி இந்துக்கள், முதலாளிகளின் கோரிக்கைதான் நாட்டின் அடையாளமாகப் பேசப்பட்டது. அம்பேத்கர் நசுங்கிக் கிடக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரே தலைவர் - இயல்பாகவே அவரின் வேட்கை அம்மக்களின் குரலாகத்தான் இருக்குமே தவிர தம் எதிரிகளின் குரலாக எப்படி அமையும்?

அம்பேத்கருக்கு முன்னிருந்த தாழ்த்தப்பட்டோர் தலைவர்கள் இந்தியாவுக்கு அரசியல் சுதந்திரம் வேண்டாம் என்றே பேசி வந்தனர். சுதந்திரம் இன்றியமை யாதது. ஆனால் சமூக சமத்துவ மும் அரசியல் உரிமைகளும் முழுமையாக நிறைவு செய்யப் பட்டதாக அது அமைய வேண்டும் என்பது அதனினும் இன்றியமையாதது என்பதே அண்ணலின் நிலை. இதற் காகவே வட்டமேசை மாநாட் டில் கலந்துகொண்டு தம் மக்களின் குரலை ஒலிக்க அண்ணல் அம்பேத்கர் தீர்மானித்தார்.

1930 அக்டோபர் 2ஆம் நாள் தாழ்த்தப்பட்ட மக்கள், தலைவர் அம்பேத்கருக்கு வழியனுப்பு விழா எடுத்தனர். பணமுடிப்பும் வரவேற்பு மடலும் அளித்தனர். டாக்டர் சோலங்கி, போலே உள்ளிட்ட மற்ற முன்னணித் தலைவர்கள் அம்பேத்கரை வழியனுப்பி, மாநாட்டில் தம் மக்களின் உரிமைகள் குறித்து முழங்கிட அம்பேத்கரே உரியவர் என்பதை வெளிப்படுத்தி உரையாற்றினர். என்றைக்குமில்லாதவாறு உலக அரங்கில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை எதிரொலிக்க இருக்கிறது. ஒரு நாட்டின் அரசமைப்பை உருவாக்கும் பங்கு தாழ்த்தப்பட்டோருக்குக் கிட்டியிருக்கிறது. அந்த அரசமைப்பின் வழியிலும் தமது அரசியல், சமூக உரிமைகள் நிலைநாட்டப்படுவதற்காகத் தலைவர் அங்கே உரையாற்ற இருக்கிறார். அம்மக்களின் அந்நேரத்திய பெரு மகிழ்ச்சிக்கு இதைவிடக் காரணம் வேண்டுமா?

1930 செப்டெம்பர் 6ஆம் நாள் இந்திய வைசிராய் வழியாக மாநாட்டிற்கான அழைப்பினை அம்பேத்கர் பெற்றார். அக்டோபர் 4ஆம் நாள் பம்பாயிலிருந்து எஸ்.எஸ். இந்திய வைஸ்ராய் கப்பலில் இலண்டக்குப் புறப்பட்டார். நவம்பர் 12ஆம் நாள் வட்டமேசை மாநாடு தொடங்கியது. பிரித்தானிய அரசு இலண்டனில் வட்டமேசை மாநாட்டினைக் கூட்டியது. இந்தியப் பிரதிநிதிகள், பிரித்தானிய அரசின் பிரதிநிதிகள், பிரித்தானிய அரசியல் கட்சி களின் பிரதிநிதிகள் அதில் கலந்துகொண்டனர்.

89 உறுப்பினர்களைக் கொண்டதாக வட்ட மேசை மாநாடு அமைந்திருந்தது. பிரித் தானிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் 16 பேர்; இந்தியப் பிரதிநிதிகள் 53 பேர்; இந்திய சமஸ்தானங்களின் பிரதிநிதிகள் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் தீண்டப்படாத மக்களின் பிரதிநிதிகளாக அண்ணல் அம்பேத்கரும், ரெட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டனர். வட்ட மேசை மாநாடு செயின்ட் ஜேம்ஸ் அரண் மனைக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 17 முதல் 21 வரை பொது விவாதம் நடை பெற்றது. சாப்ரு, ஜெயகர், மூஞ்சே, ஜின்னா, பிக்கனீர் சிற்றரசர், என்.எம். ஜோஷி, சர்மிர்சா ஆகியோர் உரை யாற்றினர். அம்பேத்கர் படிப்புக்கு உதவிய அரசரும், ஓர் ஆசிரியரும் கூட அவையில் இருந்தனர். இத்தனை பேரின் மத்தியில் சமூகப் புறக் கணிப்புகளானாலும் தீண் டாமையாலும் கொடுமைக் காளாகி வாழ்ந்து வருகிற இலட்சக்கணக்கான மக்களுக்கான ஒற்றைக் குரல் ஒலித்தது:

“இந்தியாவில் உள்ள தீண்டப்படாத வகுப்பு மக்கள் இப்போது இருக்கின்ற அரசுக்குப் பதிலாக மக்களால் மக்களுக்காக மக்களின் ஓர் அரசு அமைய வேண்டும் என விரும்புகின்றனர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி பற்றித் தீண்டப்படாதவர்கள் கொண்டிருந்த கருத்தில் ஏற்பட்டுள்ள இப்புதிய மாற்றம் வியப்பளிக்கக்கூடியதுதான்; ஆனால் பெருஞ்சிறப்புக்குரிய முடிவாகும். இப்போதுள்ள எங்கள் நிலையையும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னைய எங்களின் அவல நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது முன்னேறுவதற்குப் பதிலாக அதற்கு நாள் குறிப்பதிலேயே நாட்களைக் கழித்துவிட்டோம். ஆங்கிலேயர் வருவதற்கு முன் தீண்டாமை காரணமாக நாங்கள் வெறுத்தொதுக்கத்தக்க நிலையில் வைக்கப்பட்டிருந்தோம். இந்த நிலையை அகற்றிட ஆங்கிலேயர் ஆட்சி ஏதேனும் செய்ததா?

பிரித்தானியர் ஆட்சி அமைவதற்கு முன் - கிராமங்களிலுள்ள கிணறுகளில் நாங்கள் தண்ணீர் எடுக்க முடியாது. கிணற்றில் நீர் எடுக்கும் உரிமையை பிரித்தானிய அரசு எமக்குப் பெற்றுத் தந்ததா? நாங்கள் கோவிலுக்குள் நுழைய முடியாது. இப்போது நாங்கள் நுழையும் நிலை வந்துவிட்டதா? நாங்கள் காவல்துறையில் சேர்ந்து பணியாற்றிடத் தடை இருந்தது. இப்போது பிரித்தானிய அரசு எங்களைக் காவல்துறையில் சேர்த்துக்கொள்கிறதா? இராணுவத்தில் பணிபுரிய எங்களுக்கு அனுமதி கிடையாது. இப்போது இராணுவப் பணி எமக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதா? இவற்றில் எந்தவொரு கேள்விக்கும் இந்த அவையினர் ஆம் என்று பதில் சொல்ல முடியாத நிலைதானே இருக்கிறது! ஆறாத புண்ணாகவே இன்னும் எங்கள் இன்னல்கள் இருக்கின்றன. அவை ஆற்றப்படாமல் அப்படியே நீடிக் கின்றன. ஆனால் பிரித்தானியர் ஆட்சியில் 150 ஆண்டுக்காலம் உருண்டோடி விட்டது.'' மேலும் இந்தியாவின் சாதிய அமைப்பைக் குறிக்கும் வகையில்...

“இந்திய சமுதாயம் என்பது ஏறுமுகமாக அமைந்த மதிப்பும், இறங்குமுகமாக அமைந்த வெறுப்பும் கொண்ட சாதிமுறை அமைப்பைக் கொண்டுள்ளது. மக்களாட்சி அரசாங்கத்திற்கு இன்றியமையாத தாக உள்ள சமத்துவம், சகோதர நேயம் ஆகிய உணர்வுகள் வளர் வதற்கு இந்தச் சமுதாய அமைப்பு முறையில் இடமே கிடையாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய சமுதாயத்தில் அறிவாற்றல் மிக்கக் கூட்டத்தினர் முக்கியப் பங்கு பெற்றிருந்த போதி லும், அவர்கள் உயர் வகுப்பிலிருந்தே வந்துள்ளனர். இந்திய நாட்டு மக்களின் சார்பாகப் பேசும் இந்தக் கற்றறிந்த கூட்டத்தார் அரசியல் இயக்கத்திற்குத் தலைமை தாங்கி நடத்தியிருக்கின்ற போதிலும், தமது குறுகிய சாதிப்பித்தையோ, தனிமைப்படுத்திக் கொள்ளும் போக்கையோ உதறித் தள்ளியவர்கள் அல்லர்.

வேறு வகையில் சொல்வதானால் அரசு சக்கரம் இந்தியச் சமுதாயத் தின் இந்தப் போக்கையும் மனநிலையையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என ஒடுக்கப்பட்ட வகுப்பினர் வலியுறுத்திக் கூற விரும்புகின்றனர் என்பதாகும். இவ்வாறு அமையாவிட்டால் நீங்கள் உருவாக்கவிருக்கும் அரசியலமைப்புச் சட்டம் எத்தனை சமச் சீர்மையுடையதாக இருந்த போதிலும் குறையுள்ளதாகவும் இந்தியச் சமுதாயத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாததாகவும் போய்விடும்.''

பொதுவிவாதம் முடிந்த பின் மாநாட்டில் ஒன்பது துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. கூட்டாட்சி அமைப்புக்கான துணைக் குழு ஒன்றில் தவிர மற்ற அனைத்திலும் அம்பேத்கர் உறுப்பினராக இடம்பெற்றார். சிறுபான்மையோர் துணைக் குழு, மாநில அரசியலமைப்புத் துணைக் குழு, அரசு ஊழியத் துணைக் குழு, கூட்டாட்சி அமைப்புத் துணைக் குழு, இராணுவத் துணைக் குழு, வாக்குரிமைத் துணைக் குழு என அனைத்திலும் இந்திய, பிரித் தானிய அறிஞர்கள், அரசர் களுக்கு நிகராக இன்னும் அறிவார்ந்த அணுகுமுறையிலும், உறுதியிலும் எல்லோருக்கும் மேலாக அம்பேத்கர் பணியாற்றினார்.

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக மாநாடு கூட்டப்பட்டாலும் அதுவே இறுதி வரைவாக எடுத்துக் கொள்ளப்படாது என்பது தொடக்கத்திலேயே பிரித்தானி யர்களால் அறிவிக்கப்பட்டது. எல்லோருடைய கருத்துக்களை யும் குறித்துப் பதிவு செய்து கொள்வதே முதன்மையான நோக்கமாக அமைந்தது. அவ்வகையில் அம்பேத்கர் தன் பங்கைச் சிறப்பாகச் செய்தார். புதிய அரசமைப்பு சமூகத்தின் அனைத்துச் சிறுபான்மை மக்களின் சமத்துவத்தை, உரிமை வேட்கைகளை நிறைவு செய்வ தாக இருக்க வேண்டும். குறிப் பாக, தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான சமூகப் புறக்கணிப்புகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதை மீறுவதைத் தண்டனைக்கு உள்ளாக்குவதன் மூலம் அவர் களுக்குச் சட்டப் பாதுகாப்பு வேண்டும். இவைதான் அம்பேத்கரின் சாரமான நோக்கம் ஆகும்.

காட்டாக, மாநில அரசமைப்புத் துணைக்குழு விவாதத்தின்போது 1930 திசம்பர் 4ஆம் நாள் முதல் அமர்வில் அம்பேத்கர் சொன்னார்: “... மாநிலத் தன்னாட்சி பற்றி நாம் யோசிக்கும் வேளையில் சிறுபான்மை வகுப்பினர், ஒடுக்கப்பட்ட வகுப்பினர் ஆகியோர் நலன்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத்தக்க வகையில் மாநிலங்களின் தன்னாட்சி அமையும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமையவிருக்கும் இந்தியாவில், சில மாநிலங்களில் சில வகுப்பார் பெரும்பான்மை யோராக இருப்பார்கள். ஆனால் அதேவேளையில் எல்லா மாநிலங் களிலும் என்னைச் சார்ந்தவர் களான ஒடுக்கப்பட்ட மக்கள் சிறுபான்மையினராகவே இருப்பார்கள். இந்த மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்படும் போதும், நிர்வாக ஒழுங்கீனம் ஏற்படும்போதும், மேல்முறையீடு செய்வதற்கு உரிமை இல்லாத போதும் ஏழை எளியவர்களான இந்த மக்கள் மீது எவ்விதக் கட்டுப்பாடும், தடையும், வரை யறையும் இல்லாத வகையில் ஆதிக்கம் செலுத்துவதற்குப் பெரும்பான்மையோரைக் கொண்ட மாநிலங்களை எவ்வாறு அனுமதிப்போம் என்பதுதான் விளங்கவில்லை. எனவே, மாநிலப் பெரும் பான்மை மக்கள், சிறுபான்மை யோருக்குத் தொல்லை கொடுத்து இக்கட்டான சூழ்நிலையில் அவர்களை வைக்கும்போது தலையிட்டுப் பாதுகாப்பதற்குரிய அதிகார மன்றம் ஒன்று மாநிலத் தன்னாட்சிக்கு அப்பால் இருக்க வேண்டும்.''

ஒவ்வொரு துணைக்குழு விலும் அம்பேத்கர் மேற்சொன்ன கருத்துகளின் தளத்தில் நின்றே அனைத்தையும் அணுகினார். ஒவ்வொன்றையும் நாம் கற்க வேண்டும். குறிப்பாக, இங்கே "சிறுபான்மையோர் துணைக்குழு'வில் உரையாற்றியதையும், அம்பேத்கரும் ரெட்டைமலை சீனிவாசனும் அக்குழுவிற்கு அளித்த “வருங்காலத் தன்னாட்சி இந்தியாவின் அரசிய லமைப்புச் சட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் அரசியல் காப்புரிமைக்கான ஒரு திட்டம்'' எனும் அறிக்கையையும் நாம் எடுத்துக் கொள்வோம்.

சிறுபான்மைத் துணைக்குழுவில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவர்களுக்கு இழைக்கப்படுகிற சமூக அநீதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அறிக்கையில் பட்டியலிட்டார். இந்தியா உருவாக்கும் வருங்கால அரசியலமைப்பில் பெரும் பான்மையோர் ஆட்சி என்பது சாதி இந்துக்களின், பார்ப்பனர்களின் ஆட்சியாகத்தான் அமையும். தாழ்த்தப்பட்ட மக்களை மனிதராகவே ஏற்காத எதிரிகளிடம் ஆட்சியை ஒப்படைப்பது தற்கொலைதானே தவிர வேறல்ல. அரசமைப்பு சிறுபான்மையோருக்கு, குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பளிப்பது அல்ல அம்பேத்கர் கேட்டது! மற்ற வகுப்பாருக்கு இணையான அதிகாரப் பங்கு வேண்டும்; ஆளுகிறவர்களாகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் இணைந்திருக்க வேண்டும்.

இந்தியாவில் மற்றச் சிறுபான்மையோரை விடவும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளும் புறக்கணிப்புகளும் ஏராளம். இந்திய அரசாங்கச் சட்டம், குடிமகன் ஒவ்வொருவரும் சாதி, மத, நிற வேறுபாட்டைக் காரணம் காட்டி அரசுத் துறைகளி லான பணிகளை மறுக்கக் கூடாது என்றது. ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் யாராவது காவல்துறைப் பணிக்கு விண்ணப்பித்தால் தீண்டத் தகாதவர்களுக்கு இப்பணியில் இடமில்லை என அரசாங்க அதிகாரிகள் வெளிப்படையாகவே சொல்லினர். 1892ஆம் ஆண்டுவரையில் சென்னை, பம்பாய் மாநிலங்களின் இராணுவத்தில் தாழ்த்தப்பட்ட மக்களே முழுமையும் இருந்தனர். ஆனால் அதே ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் இராணுவத்தில் நியமிக்கப்படக்கூடாது எனும் விதியே இயற்றப்பட்டது. இதற்கெதிராகச் சட்ட மேலவையில் கேள்வி எழுப்பப்பட்டபோது, இந்தப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்களை நியமிக்க முடியாத துயர நிலை இருப்பதாகவே பதில் கிடைத்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியான அம்பேத்கர் தம் மக்களின் குறிப்பான இவ்வகை அடிமை நிலையை வெளிப்படுத்தினார்.

1928ஆம் ஆண்டு பம்பாய் மாகாண அரசு ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை ஆராயத் துணைக்குழு ஒன்றினை அமைத்தது. அத்துணைக் குழு தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதார நிலையிலும், சமூக நடை முறைகளிலும் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை வெளியிட்டது. அந்த அறிக்கையை அம்பேத்கர் சிறுபான்மையோர் துணைக்குழுவில் படித்துக் காட்டினார். அதன் தொடர்ச்சியாக இப்படிச் சொன்னார்:

“...ஒடுக்கப்பட்டோராகிய நாங்கள், எங்களுக்கும் இந்துக்களுக்குமிடையே முழுப் பிரிவினை வேண்டும் எனக் கோரு கிறோம். இதுதான் முதன்மையாகச் செய்யப்பட வேண்டியது. அரசியல் காரணங்களுக்காக நாங்கள் இந்துக்கள் என்று அழைக்கப் படுகின்றோமே தவிர, சமுதாயத்திலே இந்துக்கள் அவர்களுடைய சகோதரர்களாக எங்களைக் கருதுவதில்லை. எங்கள் எண்ணிக்கை யாலும் ஓட்டுரிமை பலத்தாலும் கிடைத்த அரசியல் பலன்களை அவரவர்கள் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள்; ஆனால் அதற்குக் கைமாறாக நாங்கள் பெற்றது ஒன்றுமில்லை! அவர்கள் இந்துக்கள் என்று அழைக்கப்படாத மற்றச் சமூகத்தினரை நடத்துவதைவிட மிக மோசமான நிலையில் எங்களை நடத்துவதைத்தான் கண்டிக்கிறோம். ஆகவே, இந்தப் பிரிவினையே முதலாவதாக செய்யப்பட வேண்டியதாகும்.''

சுயராஜ்ஜியமானாலும் "டொமினியன்' அந்தஸ்தானாலும் - இதில் எவ்வகை எதிர்காலத்தை இந்தியா பெற்றாலும் அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வில் என்ன மாற்றம் வரும் என்பது குறித்தே அம்பேத்கர் அதிகம் கவலைப்பட்டார். ஆளுகிறவர்கள் யாரானாலும், நாம் மனிதர்களாக மதிப்போடும் உரிமைகளோடும் வாழும் வழி என்ன என்பதிலேயே அம்பேத்கர் கருத்தாய் இருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் அடிமைநிலை பிரித்தானியர் ஆட்சியில் இருந்தது. பிரித்தானியர் ஆட்சிக்கு எதிராக முனைப்போடு போராடும் "சுதந்திரம்' கேட்போரினாலும் அந்த அடிமைநிலை கவனமாகக் காக்கப்பட்டது. ஆக, ஆட்சி மாற்றம் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் துளி மாற்றத் தையும் ஏற்படுத்தாது. அம்பேத்கர் இது குறித்து சிறுபான்மையோர் துணைக்குழுவில் முடிவாக முழங்கினார்:

“...பெரும்பான்மை வகுப்பார் கேட்கும் டொமினியன் அந்தஸ்துள்ள ஆட்சிக்குரிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கு வதற்கு அனைத்துச் சிறுபான்மை வகுப்பாரும் தங்களுக்கு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினாலும் சரி, அல்லது மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசாங்கம் என்று நாம் விரும்புவது போன்ற அரசு அமைய வேண்டுமானாலும் சரி, சிறுபான்மை வகுப்பாரின் அனைத்துப் பயத்தையும் பெரும்பான்மை வகுப்பார் போக்குவதற்கு முன்வர வேண்டும் என்பேன். இல்லாவிட்டால் டொமினியன் அந்தஸ்து என்னும் சுயாட்சி அரசைக் கேட்பதன் மூலம் ஏற்படக்கூடிய கேடுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை ஒளிவு மறைவின்றித் தெரிவித்துக் கொள்கிறேன்...''

தாழ்த்தப்பட்ட மக்கள் மற்ற வகுப்பாரோடு சமத்துவ - அதிகாரம் பெற்றவர்கள் என எழுத்தில் பதிவாவது மட்டும் போதாது. அது நடைமுறையில் ஆதிக்கவாதிகளால் மீறப்படும்போது சட்டவிரோதம் ஆக்கப்பட வேண்டும். அதற்கேற்ற தண்டனைகளை உறுதி செய்ய வேண்டும். இவை அல்லாமல் வெறும் ஏட்டில் இனிப்பு என்று எழுதுவதால் இனித்து விடுமா என்ன? நாளை இந்தியாவை யார் ஆண்டாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டுமானால் அவர்களுக்கு எதிரான கொடுமைகளுக்குத் தண்டனைகளைச் சட்டத்தில் உறுதி செய்தாக வேண்டும். அது மட்டுமன்று, சட்டத்தை ஆக்குகிற, கையாளுகிற அவையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்தாக வேண்டும். அண்ணல் அம்பேத்கரும் ரெட்டைமலை சீனிவாசனும் தந்த திட்ட அறிக்கை இதற்கான வழிவகைகளை எடுத்துரைத்தது. ஒவ்வொரு தீண்டாமைக் குற்றத்தையும் பட்டியலிட்டு அதற்கான தண்டனைகளைப் பல்வேறு அரசமைப்புகளைப் படித்தாய்ந்து இரு தலைவர்களாலும் குறிக்கப்பட்டிருந்தது.

புதிய அரசமைப்பில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைக்காப்பு ஆவணமாகவே அவர்களின் அறிக்கையைக் கருதலாம். அறிக்கையின் முகவுரையாக “தன்னாட்சி பெற்ற இந்தியாவில் பெரும் பான்மையினர் ஆட்சியின் கீழ் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை உட்படுத்திக் கொள்ள சம்மதிப்பதற்கான நிபந்தனைகள்'' என்றே குறிப்பிட்டிருந்தார்கள். அதில் சிலவற்றை மட்டும் சுருக்கமாகக் காண்போம்:

அனைத்துக் குடிமக்களும் சட்டத்தின் முன் சமமானவர்கள்; அனைவரும் சம குடியுரிமை களைப் பெற்றுள்ளார்கள். நடைமுறையிலுள்ள சட்டம், ஒழுங்கு முறை, ஆணை, வழக்காறு அல்லது சட்டத்தின் பொருள் விளக்கம் ஆகிய எதன் பெயராலும் இழைக்கப்படும் தண்டனையோ, தீங்கோ, குறைபாடோ அல்லது தீண்டாமையின் காரணமாக நாட்டின் எந்தக் குடிமகனிடமும் காட்டப்படும் பாகுபாடோ இந்த அரசியல் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளி லிருந்து இந்தியாவில் எவ்வித விளைவினையும் ஏற்படுத்தும் தன்மையை இழக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் அரசமைப்பு வழங்குகிற ஒத்த உரிமைகளை அனுபவிக்கும் போது வைதிகக் கூட்டத்தார் எதிர்ப்புத் தெரிவித்துக் கலகம் செய்வர். அப்படிச் செய்வார்க ளாயின் உடல்வலி மற்றும் அபராதத்தின் மூலம் தண்டிக்கப் பட வேண்டும்.

சட்டப்படி அனைத்து வகுப்பினருக்கும் மறுக்கப்படும் சலுகைகளைத் தவிர, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏதேனும் மறுக்கப்படுமானால்- அவர்களை ஐந்தாண்டு காலம் வரையில் நீடிக்கத்தக்கச் சிறைத் தண் டனைக்கும் அபராதத்திற்கும் உள்ளாக்க வேண்டும். அவர்களை ஐந்தாண்டு காலம் வரையில் நீடிக்கத்தக்க சிறைத் தண்டனைக்கும் அபராதத்திற்கும் உள்ளாக்க வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்கள் செய்ய முனைகின்ற எந்தச் செயலும் வைதிகர் மனத்திற்கு உகந்ததாக இல்லாமற் போனால் அத்தகைய செயலை முறியடிப்ப தற்கு அவர்கள் பயன்படுத்தும் கொடிய வல்லமை வாய்ந்த ஆயுதம்தான் சமூகப் புறக்கணிப்பு ஆகும்.

சட்டப்படி செய்யத் தகுந்த எந்த ஒரு செயலையும் செய்த அல்லது சட்டப்படியாகச் செய்யக்கூடாத எந்தச் செயலை யும் செய்யத் தவறிய எவரை யேனும் சமூகப் புறக்கணிப்பு செய்திடும், செய்யத் தூண்டும், அதற்கு ஆதரவு அளிக்கும், காரணமாகும் அல்லது புறக் கணிப்பு செய்வதாக பயமுறுத் தும் யாராயினும் அவருக்கு ஏழாண்டு அல்லது ஐந்தாண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டினையும் தண்டனையாக விதிக்கலாம்.

சிவில் மற்றும் இராணுவப் பணிகளில் சேர்வதற்கும், நாட்டின் அனைத்து வகுப்பைச் சார்ந்த குடிமக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் போதுமான அளவில் கொடுக்கப்பட வேண்டும் என்னும் வகையிலான நிபந்தனைகளுக்கும் எல்லை வரையறைகளுக்கும் உட்பட்டு, அனைத்துக் கல்வி நிறுவனங் களிலும் சேர்வதற்கு உரிமை வேண்டும்.

தீண்டாமை நிலைமை முன்பு எவ்வாறு இருந்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாது மற்ற குடிமக்கள் அனுபவிப்பது போலவே உடலுக்கும் உடைமைகளுக்குமான பாதுகாப்பினை அனைத் துச் சட்டங்களின், நடவடிக்கை களின் முழுமையான சமமான உதவிகளுக்கு ஒத்த உரிமை வழங்கப்பட வேண்டும். மற்ற குடிகளைப் போலவே சட்டப்படி தண்டனை, உடல் வலிகள் மற்றும் அபராதங்களுக்கும் கட்டுப்படுவதைத் தவிர வேறு எவருக்கும் கட்டுப்படாத உரிமைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சட்ட முறையிலான காப்புவாசகமாக இடம்பெற வேண்டும்.

நாட்டின் மாநில, மத்திய சட்டமன்றங்களில் போதிய பிரதிநிதித் துவத்திற்கான உரிமை வேண்டும். அதோடு அவர்களின் சொந்த வகுப்பாரைத் தங்களின் பிரதிநிதிகளாக அ) வயது வந்தோர் வாக்குரிமை மூலமாகவும் ஆ) முதல் பத்தாண்டு காலத்திற்குத் தனி வாக்காளர் தொகுதி (Separate electorate) மூலமாகவும், இடஒதுக்கீடு செய்யப்பட்டத் தொகுதிகள் மூலமாகவும் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட வேண்டும்.

அதன் பின்னர் கூட்டு வாக்காளர் தொகுதி முறை வயது வந்தோர் வாக்குரிமையுடன் சேர்ந்து வந்தாலொழிய, அத்தகையக் கூட்டு வாக்காளர் தொகுதி முறை ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.

அரசு உயர் அதிகாரிகள், உயர் சாதி இந்துக்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதன் மூலம் தமது விருப்புரிமையைத் தவறாகப் பயன் படுத்துகின்றனர். நீதிக்கும், நேர்மைக்கும், நல்மனச் சான்றுக்கும் எதிராகச் செயல்படும் அத்தகையோரால் தாழ்த்தப்பட்ட மக்கள் துன்புற்றுள்ளனர். அதைத் தவிர்க்கும் வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட அனைத்து வகுப்பாருக்கும் அரசுப் பணிகளில் உரிய பங்கினை அளிக்க வேண்டும்.

அரசுப் பணிகளுக்கு ஆள் எடுப்பதற்கும், அம்முறையைச் சீர் செய்வதற்கும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைக்கப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தகுதித் திறன் சோதனைகளுக்கு உட்பட்டு - (அ) அனைத்து வகுப்பாரும் தங்களுக்குரிய போதுமான பிரதிநிதித்துவம் பெற்றிடும் வகையில் பணியமர்த்தம் செய்வதும் (ஆ) பல்வேறு வகுப்பாரின் தற்போதைய பிரதிநிதித்துவ அளவுக்கு ஏற்ப எந்த ஒரு குறிப்பிட்ட பணியிலும் அவ்வப்போது வேலையில் முன்னுரிமை வழங்கிச் சீர் செய்வதும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடமையாகும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் சமூக, அரசியல், பொருளியல் புறக்கணிப்புகளை ஆய்ந்து ஒவ்வொன்றையும் சுட்டிக் காட்டி அதற்குரிய தீர்வுச் சட்டத்தை சட்ட அறிஞர்களுக்கிணையான வாசக அமைப்போடு சுட்டிக்காட்டினார்கள். இங்கே நாம் தந்திருப்பது ஒரு சிலவற்றின் சுருக்கம் மட்டுமே. அவ்வறிக்கையின் இறுதியில் நிபந்தனை எண்: 8இல் அவர்கள் குறிப்பிட்டதாவது:

அரசு நடவடிக்கைகளின் மீது நமது செல்வாக்கு வலிமையைச் செலுத்துவதற்கு ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சட்டமன்றப் பிரதிநிதித்துவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாக இருப்பது போலவே அரசின் பொதுவான கொள்கையினை வகுப்பதற்கும் அவர் களுக்கு வாய்ப்பிருக்க வேண்டும் என்பது விரும்பத்தக்கது. அமைச் சரவையில் இடம்பெற்றால்தான் இதை அவர்கள் சாதிக்க முடியும். ஆகவே, இதர சிறுபான்மையினருக்கு அளிக்கப்படுவது போலவே, அமைச்சரவையில் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதை அவர்களுடைய தார்மிக உரிமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். இந்த நோக்கத்தினைக் கருத்தில் கொண்டு ஒடுக்கப்பட்ட வகுப்பினர், “அமைச்சரவையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு ஆளுநர் மற்றும் ஆளுநர் - தலைவர் ஏற்றவகை செய்ய வேண்டும் என்கிற கடப்பாடு அரசு அறிவுரைப் பத்திரத்தில் (Instrument of Instruction) இடம்பெற வேண்டும் என முன்மொழிகிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் மாநாட்டில் கலந்து கொண்டோரிடமும் அதன் தலைவரிடமும் இக்குறிப்பு அறிக்கையைச் சுற்றுக்கு விட்டார். விவாதங்களில் அம்பேத்கர் இறுதிச் சாற்றுரை போல் சொன்னதை ஈண்டு குறிப்பிடுவது அவரின் உறுதியை அறிய உதவும்:
“சிறுபான்மையினரும் மற்றும் தாழ்த்தப்பட்டோரும் தங்களது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலன்றி இந்தியாவிற்கான எந்தத் தன்னாட்சி அரசியலமைப்பினையும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்...

... என்னைப் பொறுத்தவரையில் புதிய அரசியலமைப்பில் நாங்கள் பாதுகாக்கப்படுகிறோம் என்று எங்களுக்கு உறுதிமொழி அளிக்கப் பட்டாலன்றி, பொறுப்பாட்சிக் கொள்கை சம்பந்தப்பட்ட எந்த அரசியலமைப்பிற்கும் எங்களது சம்மதத்தைத் தர முடியாது என்பதை இக்குழுவின் கூட்டத்தில் நான் பேசிய நேரத்தில் தெளிவாக்கி யிருப்பதாக எண்ணுகிறேன்.''

தாழ்த்தப்பட்ட மக்கள் தம் மீது இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக முணுமுணுத்தும், சக்திக்குட்பட்ட அளவில் போராடியும் வந்தனர். அண்ணல் அம்பேத்கரின் வழிகாட்டுதல்கள் வழியாகத் தமது இருப்பை இந்தியா முழுவதிலும் உணர்த்தியே வந்தனர். ஆனாலும் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் கலந்து கருத்தறிவித்ததன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகள் உலக அரங்கில் எதிரொலித்தன.

இது அம்மக்களிடையே எதிர்காலம் குறித்த நம்பிக்கையை, வெளிச்சத்தைக் கொடுத்தது. அம்பேத்கர் தமது அறிவாற்ற லாலும், உள்ள உறுதியினாலும் தாழ்த்தப் பட்டோரின் இந்திய நிலையைப் பட்டிய லிட்டது மட்டுமின்றி, இனி எவ்வகையிலும் இது தொடரக் கூடாது என்பதற்கான சட்ட வழிகளையும் பதிவு செய்தார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் அரசியல் சக்தியாகத் தம்மை உணர்ந்தார்கள் என்பது மிகையன்று. சமூகத்தின் ஒதுக்குப்புறத்தில் பிறந்து வாழ்ந்து வந்தாலும், தமது கதறல்களைக் கடல் தாண்டியும் ஒலிக்கச் செய்த அம்பேத்கரை அம்மக்கள் வணங்கிப் போற்றினார்கள்.

சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் பெற தேர்தல் முறையில் தனி வாக்காளர் தொகுதிக்கு வழிவகை செய்வதா, அல்லது கூட்டு வாக்காளர் தொகுதிக்கு வழி வகை செய்வதா என்பதில் கருத்து வேற்றுமை எழுந்தது. இதனால் வட்டமேசை மாநாடு ஒத்திவைக்கப் பட்டது. காங்கிரசுப் பேரியக்கம் மாநாட்டில் கலந்து கொள்ளாததும் இதற்கொரு காரணம் எனலாம். வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் அம்பேத்கர் பிரித்தானியருக்குச் சேவை செய்கிறார் எனப் பழி தூற்றினர் காங்கிரசார். மாநாட்டில் கலந்து கொள்ளாது ஒத்துழையாமையைக் கடைப் பிடிப்பதால் தாமே நியாயவான்கள் என்பதை நிலைநிறுத்தவும் அவர் கள் முற்பட்டனர். ஆனால் அதே காங்கிரசு இயக்கம் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டதே, ஏன்? இந்திய விடுதலைக்கான பெரும் சக்தியாகத் திகழ்ந்த காங்கிரசு ஒடுக்கும் பிரித்தானியர் கூட்டிய மாநாட்டில் கலந்துகொள்வது தவறில்லை என்றால், ஒடுக்கப்பட்டோரிலும் மிகக் கீழாக ஒடுக்குண்ட சிறுபான்மை மக்களின் தலைவர் அம்பேத்கர் கலந்து கொண்டது எப்படித் தவறாகும்?

ஒத்துழையாமைப் போராட் டங்களில் சிறை வைக்கப்பட்ட காங்கிரசாரை விடுதலை செய்வதாக மாநாட்டின் இறுதியில் பிரித் தானியப் பிரதமர் அறிவித்தார். வைசிராய் இர்வின் பிரபுவுட னான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 1931 மார்ச் 5ஆம் நாள் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடுவதாகவும், இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதாகவும் காந்தியார் அறிவித்தார்.

பேச்சுவார்த்தை தவிர காந்தி யாரின் அம்முடிவுக்கு ஒருவர் முக்கியக் காரணமானார்- அவர் அம்பேத்கர். முதல் வட்ட மேசை மாநாட்டில் காந்தியார் கலந்துகொள்ளாவிடினும் அதனைக் கூர்ந்து கவனித்தே வந்தார். குறிப்பாக, அம்பேத் கரின் ஒவ்வொரு உரையும் பதிலுரையும் காந்தியாரின் கவனத்திற்குள்ளாயின. அதற்கு பிரித்தானியத் தரப்பில் தரப்படும் முக்கியத்துவம் காந்தியாரை நடுங்கச் செய்தது. சனாதன தர்மத்தைக் குலைத்துப் போடும் வகையில் அம்பேத்கர் முன் வைத்த கருத்துரைகள் உலக அள வில் முக்கியத்துவம் பெற்றதால் காந்தியார் அச்சமுற்று தம் முடிவை மாற்றிக்கொண்டார்.

தொடரும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com