Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
பிப்ரவரி 2009
பொதுமைச் சமூகத்தின் கூட்டுழைப்பு காட்டுவது என்ன?
தியாகு

உழைப்பின் ஆக்கங்கள் சரக்குகளாக மாறாதபோது சரக்குகளின் மாய்மாலம் என்பதற்கு இடமில்லை எனக் கண்டோம். ராபின்சன் குருசோ வின் கதையையும் அடிமைச் சமூகத்தின் பண்டப் பரிமாற்றத் தையும் சான்று காட்டி இதை விளக்கினோம். இந்தக் கோணத் தில் பொதுமைச் சமூகத்தில் என்ன நேர்கிறது என்று பார்ப்போம்.

மறைந்து போய்விட்ட ஆதிப் பொதுமை என்றாலும், மலரப் போகிற புதுமப் பொதுமை என்றாலும், பொதுமைச் சமூகம் பொதுவிலான உழைப்பு அல்லது நேரடிக் கூட்டுழைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மனித குலமனைத்தின் ஆதிச் சமூக வடிவம் பொதுமையே ஆகும். இந்தச் சமூக அமைப்பும் அதற்குரிய பொருளாக்க அமைப்பும் அழிந்து போய்விட்டன. இன்றைய உலகில் அவை எங்கும் காணக் கிடைப்பதில்லை என்றாலும் பல இடங்களில் அவற்றின் சிதிலங்கள் அல்லது மிச்சசொச்சங்களைக் கண்டுகொள்ள இயலும்.

தந்தைவழிச் சமுதாயத்தை மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். இவ்வகைச் சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்பமும் தன் சொந்தப் பயன்பாட்டுக்காக தானியம், கால்நடை, நூல், துணி, உடை ஆகியவற்றை ஆக்கம் செய்துகொள்கிறது. இந்தப் பண்டங்கள் எல்லாம் குடும்பத்தின் கூட்டு உழைப்பால் விளைந் தவை. அவை தமக்குள் சரக்குகள் அல்ல. பல்வேறுபட்ட பண்டங்களை ஆக்கித் தரும் உழவு, கால்நடை வளர்ப்பு, நூற்பு, நெசவு, தையல் ஆகிய உழைப்பு வகைகள் நேரடிச் சமுதாயச் செயல்களாகும். குடும்ப உறுப்பினர்களிடையே உழைப்புப் பிரிவினை உண்டுதான். இயற்கை நிலைமைகளைப் பொறுத்தும், வயது, பால் வேறுபாடுகளைப் பொறுத்தும் குடும்பத்துக்குள் வேலைப் பங்கீடு செய்யப்பட்டு, உழைப்பு நேரம் முறைப்படுத்தப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தனி உறுப்பினரின் உழைப்புச் சக்தியும் குடும்பத்தின் உழைப்புச் சக்தி முழுவதன் திட்டமான பகுதியாகவே இயங்குகிறது. ஒவ்வொரு தனியாளது உழைப்பும், அதாவது ஒவ்வொருவரது உழைப்புச் சக்தியின் செலவீடும் அது நீடிக்கும் காலத்தாலேயே அளவிடப்படுகிறது.

இந்தியாவின் தன்னிறைவுக் கிராம சமுதாயம் வலுவான பொதுமைச் சமூகக் கூறுகளைக் கொண்டதாக மதிக்கப்படுகிறது. இங்கே ஒரு கிராம சமுதாயத்தின் பண்டங்கள் அதை விட்டு வெளியே போகும்போது மட்டும் சரக்குகளாகின்றன. அதற்குள் அவை சரக்குகள் ஆவதில்லை. உழவர் விளைவிக்கும் தானியமும், நெசவாளர் நெய்திடும் துணியும், தச்சர் செய்திடும் வண்டியும், கொல்லர் வார்க்கும் கருவியும் அவரவரது உழைப்புச் சக்தியும் செலவிடப்படும் காலத்தை, அதாவது உழைப்பளவை மறைப்பதில்லை. இங்கே உழவருக்கும் நெச வாளருக்குமான சமூக உறவு தானியத்துக்கும் துணிக்குமான சமூக உறவாகக் காட்சியளிப்பதில்லை. சரக்குகளின் மாய் மாலத்துக்கு இடமே இல்லை.

புதுமப் பொதுமைச் சமூகம் என்பது வருங்காலததிற்குரியதே என்றாலும், அதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அங்கே ஆக்கக் கருவிகளும் ஆக்கப் பண்டங்களும் தனியுடைமையாக இருக்க மாட்டா... சமுதாய முழுவதன் கூட்டு உழைப்புச் சக்தியின் கூறாகவே ஒவ்வொரு தனியாளின் உழைப்புச் சக்தியும் செலவிடப்படும். இது ஆதிப் பொதுமைச் சமூகத்தில் உணராமல் செய்யப்படும், புதுமப் பொதுமைச் சமூகத்தில் உணர்ந்தே செய்யப்படும் என்பது தான் வேறுபாடு. பொதுமைச் சமூகத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் விரும்பியே கூட்டு வாழ்க்கையை ஏற்று நடத்துகிறவர்கள். இந்தக் கூட்டுச் சமூகத்தில் ஆண்டையும் இல்லை, அடிமையும் இல்லை. சுரண்டுகிறவனும் இல்லை, சுரண்டப்படுகிறவனும் இல்லை.

அனைவரும் உணர்வுப்பூர்வமாய் உழைக்கிற சமூகம் இது. இங்கே சமூகம் முழுவதன் உழைப்பும் ராபின்சன் குருசோவின் உழைப்புக்குரிய சிறப்பியல்புகளைக் கொண்டவை. எனவே இச்சமூகத்தின் மொத்த ஆக்கமும் சமூகத்துக்கே பயன்படுகிறது. எனவே அந்த ஆக்கம் எதுவும் சரக்காவதில்லை. சரக்குகளின் மாய்மாலமும் இல்லை.

இலக்கணம்:

உழைப்பின் ஆக்கங்கள் சரக்குகளாக மாறாதபோது சரக்குகளின் மாய்மாலம் என்பதற்கு இடமில்லை என்பதே பொதுமைச் சமூகத்தின் கூட்டுழைப்பு காட்டும் உண்மை ஆகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com