Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
பிப்ரவரி 2009
குறுக்கு விசாரணைக் கூண்டில் சிபிஎம் - ஈழத் தமிழர்கள் மீது ஏனிந்தத் தீராப்பகைமை?
செங்காட்டான்

"என்னைப் போல் உத்தமர் எவரும் இல்லை' என்று பீற்றித் திரிவதில் சி.பி.எம். கட்சியை வெல்ல யாராலும் முடியாது. குறிப்பாக "இலங்கைத் தமிழர் பிரச்சினை' என்று சொல்லப்படும் ஈழத் தமிழர் இனச் சிக்கலில் அன்று முதல் இன்று வரை "நானே சரி, என்னைத் தவிர யாரும் சரியில்லை' என்று மார்தட்டுகிறார்கள் மார்க்சியக் கட்சியினர். தமிழீழத்தில் சிங்கள அரசின் இனக் கொலைப் போர் தீவிரமடைந்து, அதனால் கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் தமிழீழ ஆதரவு எழுச்சி தோன்றி தமிழக மக்களின் அனைத்துப் பிரிவினரும் தெருவில் இறங்கிப் போராடி வரும் நிலையிலும் சிபிஎம்மின் பீற்றலும் பிதற்றலும் ஓய்ந்த பாடில்லை. எனவே, நாம் சிபிஎம்மைக் கூண்டில் ஏற்றி குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழக சிபிஎம்மின் தமிழ் நாளேடான "தீக்கதிர்' 2009 சனவரி 29 "திசை திருப்பும் கோஷங்கள் தீர்வுக்கு வழியாகாது' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆசிரியர் உரையை இந்தக் குறுக்கு விசாரணைக்கு அடிப்படையாகக் கொள்கிறோம்.

Vanni அன்பான சிபிஎம் தோழர்களே!

1) ‘இலங்கைத் தமிழர் பிரச்சனை’ என்று தீக்கதிர் ஆசிரியர் உரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களின் கட்சித் தீர்மானங்கள், அறிக்கைகள், தலைவர்களின் உரைகள், எழுத்துக்கள், எல்லா வற்றிலும் ‘இலங்கைத் தமிழர் பிரச்சனை’ என்றே குறிப்பிடுகிறீர்கள். ஆனால் அது என்ன பிரச்சனை, தேசிய இனப் பிரச்சனையா, வர்க்கப் பிரச்சனையா, மனிதாபிமானப் பிரச்சனையா என்பதை மட்டும் வரையறுத்துச் சொல்ல மறுக்கிறீர்களே, ஏன்?

2) தமிழீழ மக்கள் மீது சிங்கள அரசு நடத்தி வரும் போரின் தன்மை என்ன? சென்ற அக்டோபர் 14இல் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டு தீர் மானங்கள் இயற்றினீர் கள். முதல் தீர்மானமே ‘இனக் கொலைப்போரை நிறுத்த வேண்டும்’ என்பதுதான். இந்தத் தீர்மானத்திலிருந்து உங்கள் கட்சி இன்று வரை விலகிக் கொள்ள வில்லை. அப்படி யானால் மகிந்த இராச பட்சேயின் அரசு நடத்தி வருவது இனப் படுகொலைப் போரே என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

3) அக்டோபர் 14 அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முதல் தீர் மானம் முப்பது ஆண்டு களாகத் தொடர்ந்து நடக்கும் இனப்படு கொலையைக் கண்டிக் கிறது. அதாவது செய வர்த்தனா, பிரேம தாசா, சந்திரிகா, இரணில் விக்கரமசிங்கா, இராச பட்சே ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் இனக் கொலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று பொருள். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பது உண்மையானால், சந்திரிகா ஆட்சிக் காலத்தில் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டுமென்று உங்கள் தலைவர் உமாநாத் அறிக்கை வெளியிட்டதற்காகத் தற்குற்றாய்வு (சுயவிமர்சனம்) செய்து கொள்வீர்களா?

4) அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொண்ட நீங்கள் உங்கள் கட்சியின் தீர்மானங் களிலோ, தீக்கதிர் ஆசிரியர் உரைகளிலோ வேறு இடங்களிலோ இனப்படுகொலை என்ற வரையறையைக் குறிப்பிடுவதில்லையே, ஏன்?

5) இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடப்பது இனப்படுகொலைதான் என்றால் அதற்குத் தீர்வு இன விடுதலை தவிர வேறென்ன?

6) இன்றுள்ள “சர்வதேசச் சூழலில் இந்திய அரசு அண்டை நாடுகளுடன் தலையிடுவதற்குச் சில வரம்புகள் உண்டு” என்று, தீக்கதிர் தலையங்கம் எடுத்துக் காட்டுகிறது. அது என்ன ‘சர்வதேசச் சூழல்'? இந்திய அரசு தமிழர்களுக்கு ஆதரவாகத் தலையிடுவதை வரம்புக்குட்படுத்தும் சர்வதேசச் சூழல் சிங்கள அரசுக்கு ஆதரவாக வரம்பின்றித் தலையிடுவதை மட்டும் அனுமதிப்பது எப்படி என்பதை விளக்குவீர்களா?

7) 1987இல் கைச்சாத்திடப் பெற்ற இந்திய - இலங்கை ஒப்பந்தம் எனப்படும் இராசீவ் - செய வர்த்தனா உடன்பாட் டின்படி அமைதிப் படை என்ற பெயரில் ஈழத்தின் மீது இந்தியா நடத்திய ஆக்கிரமிப் பையும் தலையீடாக நீங்கள் கருதவில்லையா?

8) அக்டோபர் 14 அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் இரண் டாவது தீர்மானம் இந்திய அரசு இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்வதை நிறுத்தக் கோருகிறது. இந்தத் தீர்மானத்தை உங்கள் கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கையில் உள் நாட்டுப் போர் நடந்து வரும் சூழலில், போரின் ஒரு தரப் பாகிய இலங்கை அரசுக்குப் படைக் கருவிகளும் படைப் பயிற்சிகளும் தருவது தலையீடு ஆகாதா?

9) “இலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான் என்று குற்றம் சாட்டி, இந்தி அரசே மறைமுகப் போரை நிறுத்து” என்று வேறொரு குரல் கேட்பதாக தீக்கதிர் ஆசிரியர் உரையில் சொல்கிறீர்கள். இது உங்கள் கருத்து அல்லவென்றால் சிங்கள அரசு நடத்தும் இனக் கொலைப் போரில் இந்தியா முனைப்பாகப் பங்கு வகித்து வருவது குறித்து உங்கள் பார்வை என்ன?

10) இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தெரிவித்த கருத்தை ஏற்புடன் எடுத்துக் காட்டுகிறீர்கள். இராணுவத் தீர்வை மறுத்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்று அவர் கூறியதை அதே போல் எடுத்துக் காட்டுகிறீர்கள். அப்படியானால் இந்தச் சிக்கலில் இந்திய அரசு சொல்வதுதான் உங்கள் நிலைப்பாடா?

11) “இறுதித் தீர்வுக்கான வழி இராணுவ நடவடிக்கை அல்ல, அரசியல் தீர்வே என்பதை உணர்ந்து செயலாற்ற இலங்கை அரசு பிரணாப் முகர்ஜியின் பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டால் நிலைமை மாறும்” என்று ஒரு மாபெரும் அறிவுரை வழங்கியுள்ளீர்கள். இதன் பொருள் என்ன என்பதைப் படித்தவர்களும் பாமரர்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் அன்புகூர்ந்து விண்டுரைப்பீர்களா?

12) இராணுவத் தீர்வு என்பதும், அரசியல் தீர்வு என்பதும் தீர்வு காண்பதற்கான வழிகளைக் குறிக்குமே தவிர என்ன தீர்வு என்பதைக் குறிக்க மாட்டா. நீங்கள் சொல்லும் இறுதித் தீர்வுதான் என்ன? சிக்கல் என்ன என்பதையே வரையறுக்காத நீங்கள் சிக்கலுக்கு எப்படித் தீர்வு சொல்வீர்கள்?

13) இறுதித் தீர்வு விடுதலைதான் எனக் கொண்டால் இராணுவ வழியில் அந்த இலக்கை அடைவது இராணுவத் தீர்வாக இருக்கும். அரசியல் வகையில் அடைவது அரசியல் தீர்வாக இருக்கும். எனவே இராணுவத் தீர்வு, அரசியல் தீர்வு என்பதெல்லாம் வழிமுறை பற்றியதே தவிர அடைய வேண்டிய இலக்கு பற்றியது அல்ல என்பதை மறைத்துக் குழப்பம் செய்வோரின் கூட்டத்தில் நீங்களும் சேர்ந்து கொண்டது ஏன்?

14) தமிழீழ விடுதலையை ஆதரிக்கவில்லை என்பதைப் பலமுறை தெளிவுபடுத்தி உள்ளீர்கள். தமிழீழ மக்கள் விரும்புவது விடுதலையைத்தான் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? ஒரு தேசிய இனம் விரும்பும் தீர்வை ஏற்க மறுத்து விரும்பாத தீர்வைத் திணிக்கச் சொல்வது எவ்வகையான சனநாயகம்? எவ்வகையான மார்க்சிய-லெனினியம்?

15) விடுதலைக்கு மாற்றாக நீங்கள் முன்மொழி யும் தீர்வுதான் என்ன? இப்போது திடீரென்று ‘சுயாட்சி உரிமை’ என்று முழக்கம் தருகிறீர்கள். இதன் பொருள் என்ன என்பதை அன்புகூர்ந்து விளக்குவீர்களா? சுயாட்சி என்றால் என்ன? சுயாட்சி உரிமை என்றால் என்ன? சுயாட்சி என்பது அதிகாரப் பரவலாக்கமா? அல்லது அதிகாரப் பகிர்வா?

16) நீங்கள் கேட்பது சுயாட்சி உரிமைதானே தவிர சுயாட்சி அல்ல என்று புரிந்து கொள்ளலாமா? இதுதான் நீங்கள் கூறும் அரசியல் தீர்வென்றால் இதை அடைவதற்கு நீங்கள் முன்மொழியும் வழிமுறை என்ன?

17) சுயாட்சி என்றாலும் சரி, சுயாட்சி உரிமை என்றாலும் சரி, எதற்கும் சிறீலங்கா குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் ஒற்றையாட்சி முறையில் எள்முனையளவும் இடமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

18) இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அங்குள்ள தமிழ் மக்கள் சுயாட்சி உரிமை பெறுவதற்கான பாதையை வரைந்து காட்டுவீர்களா?

19) அமைதிப் பேச்சு நடைபெற வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறீர்கள். இப்படி விருப்பம் தெரிவிப்பதில் தவறில்லை என்னும் அதேபோது, யாரும் யாரும் எது பற்றிப் பேசுவது என்று தெளிவுபடுத்த வேண்டாமா? சிங்கள அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என்பதே உங்கள் குறிக்கோள் என்றால் அதை வெளிப்படையாகச் சொல்லலாமே? விடுதலைப் புலிகளோடு பேசுவதில் உடன்பாடு இல்லையென் றால் வேறு யாரோடு பேசச் சொல்கிறீர்கள்?

20) விடுதலைப் புலிகள் இருக்கட்டும், அவர்கள் ஆயுதப் போராளிகள். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 இல் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசச் சொல்லலாம்தானே? இலங்கை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடனடியாக அமைதி ஏற்படுத்துவது குறித்தும், இறுதியாக அரசியல் தீர்வு காண்பது குறித்தும் பேச்சு நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவீர்களா?

21) தமிழீழ மக்களின் சார்பாகப் பேச புலிகளையும் ஏற்க மாட்டீர்கள்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஏற்க மாட்டீர்கள் என்றால் வேறு யாரைத்தான் ஏற்றுக் கொள்வீர்கள்? அதிபர் இராச பட்சேயும் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவும் பேச்சு நடத்த வேண்டும் என்பதுதான் உங்கள் கோரிக்கையா? அல்லது கருணா, பிள்ளையான், ஆனந்த சங்கரி வகையறாக்களுடன் பேச்சு நடத்தச் சொல்கிறீர்களா? இவர்களோடு இராசபட்சே பேசிக் கொண்டுதானே இருக்கிறார்? அவ்வளவு சிரமம் ஏன், இராசபட்சே தன் இளவல்கள் ஃபசில், கோத்தபயா ஆகியோருடன் பேச்சு நடத்தி சிக்கலைத் தீர்க்கலாம்தானே?

22) விடுதலைப் புலிகளையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ ஏற்றுக் கொள்ளாமலே பேச்சு வார்த்தை, பேச்சு வார்த்தை என்று வாயடிப்பதன் உண்மைப் பொருள் உருப்படியான எவருடனும் பேசாதே என்பதும், அடித்து நொறுக்கி முடிவு கட்டு என்பதும்தானே? இவ்வாறு இராசபட்சே எதை முன்மொழிகிறாரோ அதையே நீங்கள் வழி மொழிகிறீர்கள் என்பது தவிர வேறென்ன?

23) அல்ல அல்ல, விடுதலைப் புலிகளோடுதான் பேசச் சொல்கிறோம் என்று கூறுவீர்களானால், பேசுவதற்கு வசதியாக புலிகள் மீதான தடையை நீக்குமாறு கேட்பீர்களா?

24) “ஆயுதம் தாங்கிய போராட்டத்தை வழிமுறையாகக் கைக்கொண்டுள்ள விடுதலைப் புலிகளையும் இராணுவத் தாக்குதலை மேற் கொண்டுள்ள இலங்கை அரசையும், அவற்றின் ஆயுத மோதலுக்கு இடையே அகப்பட்டுத் திண்டாடும் அப்பாவித் தமிழ் மக்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம்” என்று தீக்கதிர் தலையங்கம் சொல்கிறது. அதாவது புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று நேராகச் சொல்லாமல், இராணுவப் படையினரை குறுக்கே நிறுத்தி மறைமுகமாகச் சொல்கிறீர்கள். இதிலும் இந்திய சிங்கள அரசுகளின் குரலையே எதிரொலிக்கிறீர்கள் என்பது புரிகிறதா?

25) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறு, விடுதலைப் புலிகளின் வரலாறு ஆகிய வற்றின் அடிப்படையில் புலிகளை மக்களிட மிருந்து வேறுபடுத்திக் காட்ட உங்களால் முடியுமா?

26) “இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் தற்போது முன்வைக்கப்படும் கோரிக்கைகளும் கோஷங்களும் தடம்புரண்டு திசைமாறிச் செல்வது” குறித்து தீக்கதிர் தலையங்கத்தில் கவலைப்படுகிறீர்கள். தடம் எது? திசை எது?

27) போரை உடனே நிறுத்தும்படி கோருவதும், இந்திய அரசைக் குற்றம் சாட்டுவதும் உங்களுக்குப் பிடிக்கவில்லை. இவற்றை ‘திசை திருப்பும் கோஷங்கள்’ என்று சாடுகிறீர்கள். திசை திருப்பாத முழக்கங்கள் எவை என்று நீங்களே சொல்வீர்களா?

28) இது கடைசிக் கேள்வி. இறுதியாகப் பார்க்குமிடத்து ஈழத் தமிழர் போராட்டம் குறித்து உங்கள் நிலைப்பாடும் இராசபட்சே - மன்மோகன் சிங் நிலைப்பாடும் ஒன்றே எனத் தெரிகிறதல்லவா? உங்களின் இந்தத் தமிழர் விரோதப் போக்கினைக் கைவிட்டு என்றாவது திருந்துவீர்களா? ஈழத் தமிழர்களின் மீது ஏனிந்தத் தீராப் பகைமை?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com