Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
டிசம்பர் 2008
காசுமீரத்தை நசுக்கும் இந்துத்துவமும் இந்தியத்துவமும்
அதிரடி 1953
தியாகு

நம் பிள்ளைகளுக்குக் கோபம் வந்தால் வீட்டுக்குள் இருப்பவற்றை எடுத்து வெளியே வீசுவார்களாம்; பார்ப்பனப் பிள்ளைக்குக் கோபம் வந்தால் மட்டும் வெளியே கிடப்பவற்றை எடுத்து வீட்டுக்குள் போட்டுக் கொள்ளுமாம். இதை யார் எப்போது சொன்னார்களோ தெரியாது, பார்ப்பனிய அணுகுமுறையை இது நன்கு விளங்கச் செய்கிறது: இந்தியப் பார்ப்பன-பனியா அரசின் அணுகுமுறையும் இவ்வாறானதே. அதன் ஆதிக்க விரிவாக்க நோக்கத்துக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தையே சான்றாகக் கொள்ளலாம். இச் சட்டத்தின் முதல் உறுப்பு (Article 1) இப்படிச் சொல்கிறது.

1. ஒன்றியத்தின் பெயரும் ஆட்சிப் புலமும்

1. இந்தியா, அதாவது பாரதம், அரச மாநிலங்களின் ஒன்றியமாகத் திகழும்.
2. அரச மாநிலங்களும் அவற்றின் ஆட்சிப் புலங் களும் முதல் அட்டவணையில் குறித்துரைத்தவாறு அமையும்.
3. இந்தியாவின் ஆட்சிப் புலம் பின்வருவன வற்றால் ஆனதாய் இருக்கும் -
அ) அரச மாநிலங்களின் ஆட்சிப் புலங்கள்;
ஆ) முதல் அட்டவணையில் குறித்துரைக்கப் படும் ஒன்றிய ஆட்சிப்புலங்கள்;
இ) ஈட்டிச் சேர்க்கக் கூடிய வேறு ஆட்சிப் புலங்கள்.

இந்தியாவின் ஆட்சிப்புலமானது (தமிழ்நாடு போன்ற) அரச மாநிலங்களையும் (புதுவை போன்ற) ஒன்றிய ஆட்சிப்புலங்களையும் உறுப்பு களாகக் கொண்டிருக்கும் என்று வரையறுப்பதோடு நிறைவடையவில்லை இந்திய அரசமைப்பு. கூறு (3) உட்கறு (இ) ஈட்டிச் சேர்க்கக் கூடிய ஆட்சிப் புலங்களையும் இந்திய ஆட்சிப் புலத்தில் சேர்த்துக் கொள்ள வழிவகை செய்கிறது. இது ஆதிக்க விவாக்கத்துக்கான சட்ட வழிவகையே தவிர வேறில்லை.

நாடு பிடிக்கும் அரசமைப்பு

இந்தியாவைச் சுற்றி ஆளற்ற நிலப்பரப்புகள் ஏதுமில்லாத போது புதிய புலங்களை ஈட்டிச் சேர்ப்பதற்கு வழிவகை செய்ய வேண்டிய தேவை என்ன? சிக்கிம், பூடான், நேபாளம், மியான்மர், இலங்கை... போன்ற நாடுகளில் ஒன்று அல்லது அதன் ஒரு பகுதி சனநாயக முறையில் முடி வெடுத்து இந்தியாவில் இணைய முன்வருவதாக இருந்தால் அதற்கு வழிவகை செய்ய வேண்டுமே, அதற்காகத்தான் இந்த ஏற்பாடு என்று விளக்கம் தரப்படலாம். அப்படியானால், இதற்கு ஈடாக மற்றொரு வழிவகையும் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதாவது இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதி சனநாயக முறையில் முடிவெடுத்துப் பிந்து செல்ல விரும்பினால் அதற்கும் இடமளித்திருக்க வேண்டும்.

இந்தியா ஈட்டலாமே தவிர எதையும் இழக்கலாகாதாம். இப்படி ஈட்டிச் சேர்ப்பதற்கும் கூட, சேர்க்கப்படும் பகுதி மக்களின் விருப்பம் ஒரு நிபந்தனையன்று. இந்திய நாடாளுமன்றம் அப்படிச் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்தால் போதும், சேர்த்துக் கொண்டு விடலாம். 1975இல் சிக்கிமை இந்தியா விழுங்கியது இப்படித்தான். 1974இல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததே, இப்படி விட்டுக் கொடுப்பதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நேரான வழிவகை ஏதுமில்லை.

ஒரு பொருள் எனக்குச் சொந்தம் என்றால் அதனை விற்கவோ இலவயமாகக் கொடுக்கவோ எனக்கு உரிமை உண்டல்லவா, அதே போல் இந்திய அரசு தன் இறைமைக்கு உட்பட்ட பகுதியாகக் கச்சத் தீவை விட்டுக் கொடுக்க உரிமை உண்டு என்று வேண்டு மானால் விளக்கம் தரப்படலாம். கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு உடைமை மாற்றம் செய்து கொடுத்ததே தவிர, இது ஓர் ஆட்சிப் புலம் விரும்பிப் பிந்து சென்ற நேர்வன்று. பிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்தீர்வுமைக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை. இவ்வகையில் இது சனநாயகப் புறம்பான அரசமைப்பு ஆகும்.

தேசிய இனங்களின் சிறைக்கூடம்

வந்தாரை வாட வைக்கும் இந்தியச் சிறைக்குள் நுழைய மட்டுமே சட்டத்தில் இடமுண்டு. அந்தச் சிறையிலிருந்து வெளியே செல்லச் சட்ட வழிவகை ஏதுமில்லை. இதுதான் இந்திய அரசமைப்பு. இதுதான் இந்தியா! தேசிய இனங்களின் சிறைக் கூடம்! காசுமீர மக்களை ஆசை காட்டி இந்தியச் சிறைக்குள் இழுப்பது இந்தியத்துவ அணுகுமுறை, அவர்களைக் கட்டாயமாக இழுத்து வந்து இந்தியச் சிறையில் அடைப்பது இந்துத்துவ அணுகுமுறை. இரண்டுக்கும் நோக்கம் ஒன்று, வழிமுறைகள் வேறு. இரண்டையும் கூட்டினால், இந்திய வல்லாதிக்கத்தின் ‘சாம பேத தான தண்ட’ உத்திகள் புலப்படும்.

இந்தியத்துவத்தின் ஆளுருவம் சவகர்லால் நேரு என்றால், காசுமீரத்துவத்தின் ஆளுருவம் சேக் அப்துல்லா. நேருவையும் அவன் சமயச் சார்பின்மைக் கொள்கை யையும் நம்பியவர். இந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி எப்படியாவது காசுமீரத்தை இந்தியச் சிறைக்குள் இழுத்துவிட நேரு செய்த முயற்சி, இதில் இந்துத்துவம் வகித்த பங்கு... இவை குறித்தெல்லாம் முதல் பகுதியில் பார்த்தோம். சாம பேத தான உத்திகள் பலிக்காத போது இந்திய அரசு எப்படித் தண்டத்தைக் கையிலெடுத்தது என்பதை இந்தப் பகுதியில் பார்ப்போம்.

அரிமாவுக்குச் சிறை

1953 ஆகஸ்டு 9 - காசுமீர மக்கள் இந்த நாளை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். அன்றுதான் அம்மக்களின் தனிப் பெரும் தலைவர் சேக் அப்துல்லா சம்மு - காசுமீரத்தின் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். அந்நாள் குல்மார்கில் வைத்துத் தளைப்படுத்தப்பட்டவர் 11 ஆண்டு காலம் சிறையிலிருந்தார் - 1958இல் ஒரு நான்கு மாத இடைவெளி தவிர! இந்தியக் குடியரசின் வரலாற்றில் வழக்கு விசாரணையே இல்லாமல் இவ்வளவு நீண்ட காலம் - ஓர் ஆயுள் தண்டனைக் கைதியைப் போல் - சிறையிலடைக்கப்பட்ட அரசியல் தலைவர் வேறு யாருமில்லை. இதற்கு அவர் செய்த குற்றம் என்ன?

குற்றச்சாட்டுகள்

சம்மு - காசுமீரத்தின் அப்போதைய ஆளுநர் (‘சதார் - இ - யாசத்’) கரண்சிங் தலைமையமைச்சர் பதவியிலிருந்து சேக் அப்துல்லாவை நீக்கம் செய்வதற்குச் சொன்ன காரணம் ‘அமைச்சரவையில் பிணக்குள்ளது’ என்பதே. அவரைத் தளைப்படுத்திச் சிறையில் அடைப்பதற்குச் சொன்ன காரணம் ‘சம்மு-காசுமீரத்தைப் பாகிஸ்தானில் இணைக்கத் திட்டமிட்டார்’ என்பதே. அவர் துணைத் தலைமையமைச்சர் பக்சி குலாம் முகமது, அமைச்சர் டி.பி.தார் ஆகியோரைத் தளைப் படுத்தவும், காசுமீரத்தைச் சுதந்தர நாடாக அறிவிக்கவும் திட்டமிட்டிருந்தார் என்றொரு செய்தியும் பரப்பப்பட்டது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் ஒருபோதும் மெய்ப்பிக்கப்படவே இல்லை.

நேருவின் நாடகம்

சேக் அப்துல்லாவைப் பதவி நீக்கம் செய்து சிறையிலடைத்து விட்டு அவடத்தில் பக்சி குலாம் முகமதுவைத் தலைமையமைச்சர் ஆக்கிய நடவடிக்கை ‘காசுமீர அதிரடி - 1953’ எனப்படும். நேரு இந்தக் காசுமீர அதிரடியில் தனக்கு எவ்விதப் பங்கும் இல்லை என்று சாதித்தார். ‘இது உள்ளூர் நிகழ்வு’ என்றார். சேக்கைச் சிறைப் படுத்தும் முடிவை காசுமீரத் தலைவர்கள் தாமே எடுத்ததாக அவர் காட்ட முயன்றார். ஆனால் நேருவின் நாடகத்தைக் காசுமீர மக்கள் நம்பவில்லை. எல்லாம் இந்திய அரசின் கட்டளைப்படியே நடைபெற்றன என்பதும், சேக் அப்துல்லா மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதும், அடுத்துவந்த காலத்தில் வரலாற்றுச் சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்பட் டாயிற்று. அபிரண்ட்லைன் திங்களிருமுறை ஏட்டின் 2008 ஆகஸ்டு 29, செப்டெம்பர் 12 இதழ்களில் ஏ.ஜி. நூரானி இப்பொருள் குறித்து எழுதியுள்ள இரு கட்டுரைகளில் இந்தச் சான்றுகள் சிலவற்றை எடுத்துக் காட்டியுள்ளார்.

உளவுத் தலைவரின் சாட்சியம்

உளவுப் பிவின் (ஐஆ) தலைவராக இருந்த பி.என். மல்லிக் தன் நினைவுக் குறிப்புகளில் (நேருவுடன் என் ஆண்டுகள்: காசுமீர்) எழுதியுள்ளார்:

“சேக் அப்துல்லா அப்போது சம்மு - காசுமீரத்தை பாகிஸ்தானில் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் என்ற முடிவுக்கு வருவது தவறாகும். ஒரு சிறப்புத் தகுநிலை - விடுதலைக்குச் சற்றே குறைவான ஒரு தகுநிலை - வேண்டும் என்பதற்காகவே அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார். பாகிஸ்தானில் தனக்கு இடமே இருக்காது என்பது அவருக்குத் தெயும். 1953 சூனில் குலாம் முகைதீன் கறா பாகிஸ்தானுக்கு ஆதரவாய் வெளிப்படையாகப் பேசியபோது அவரைச் சிறையிலடைத்தவர் சேக்.”

இந்த மல்லிக் அப்போது இந்தியாவின் முதன்மை உளவு அமைப்பின் தலைவராக இருந்தவர் மட்டுமல்ல, நேருவின் நம்பிக்கைக்குய உள்வட்டத்திலும் இடம் பெற்றிருந்தவர். சேக் அப்துல்லாவைப் பதவி நீக்கம் செய்து சிறையிலடைக்கும் முடிவை நேரு முதலில் மல்லிக்கிடமும், தன் தனிச் செயலர் எம்.ஏ. மத்தாயிடமும் தெவித்தாராம். சிறிநகல் இந்தியப் படை நிறுத்தப்பட்டிருந் தது. ஆளுநர் கரண்சிங் மகாராசா அசிங் வழிவந்தவர்; சேக்கிடம் பகைமை கொண்டவர். அதிகார வர்க்கத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாகள் பலர் இருந்தனர். இத்தனைத் தடைகளையும் மீறி சேக் அப்துல்லா சுதந்தரப் பிரகடனம் செய்யவோ, காசுமீரத்தைக் கொண்டு போய் பாகிஸ்தானில் இணைக்கவோ, இந்திய ஆதரவு அமைச்சர்களைத் தளைப்படுத்தவோ வாய்ப்பே இல்லை என்பதை மல்லிக் ஒப்புக் கொள்கிறார்.

சொல்லப்படாத கதை

நேருவின் நம்பிக்கைக்குய உள்வட்டத்தில் லெப்டினண்ட் - ஜெனரல் பி.எம்.கவுல் என்ற படை யதிகாயும் இடம் பெற்றிருந்தார். இவர் எழுதிய ‘சொல்லப்படாத கதை’ என்ற நூல் 1962 இந்திய - சீன எல்லைப் போல் ஏற்பட்ட படுதோல்வி குறித்து அரசு மறைத்த பல உண்மைகளை வெளிப்படுத்தியதால் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஒரு கட்டத் தில் இந்நூலை அரசு தடைசெய்த தாகக் கூட செய்தி வந்தது என்று நினைவு.

இந்த பி.என்.கவுல் தனது நூலில் ‘காசுமீர அதிரடி - 1953’ பற்றியும் எழுதியுள்ளார். காசுமீரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியப் படையினருக்கு முன்கூட்டித் தகவல் தந்து வரப்போகும் கவிழ்ப்புக்கு அணியப்படுத்தும் பொறுப்பை அப்போது பிகேடியராக இருந்த கவுலிடம்தான் நேரு ஒப்படைத்தார். இதை அவரே தன் நூலில் பதிவு செய்துள்ளார்.

தில்லியின் கட்டளை

அதிரடியை அவசரகோலமாய்ச் செய்து விடாமல் இந்திய அரசின் அரசியல் தேவைகளுக்கு ஏற்பச் செய்யும்படி பார்த்துக் கொள்வதற்காக நேரு தன் சொந்தப் பிரதிநிதியாக அஜித் பிரசாத் ஜெயின் என்ற அதிகாயை சிறிநகருக்கு அனுப்பி வைத்தார். இவர் நேருவின் குறிப்பாணைகளோடு அங்கு சென்றார். இவரும் ‘காசுமீர்’ என்ற தலைப்பிலேயே ஒரு நூல் எழுதியுள்ளார். நேருவின் ஒப்புதல் பெறாமல் சேக் கைது செய்யப்பட்டதாக கவுல் சொல்வதை ஜெயின் மறுக்கிறார். முடிவில் சேக்கைக் கைது செய்ய வேண்டியிருக்கும் என்பது நேருவுக்குத் தெயும் என்றும், அந்த நடவடிக்கையைத் தடுக்காமலிருக்க அவர் அணியமாய் இருந்தார் என்றும் ஜெயின் எழுதுகிறார்.

மல்லிக், கவுல், ஜெயின்... இந்த மூன்று பேரும் நேருவின் ஆட்கள்; அவரது கட்டளைப்படி செயல்பட்டவர்கள். என்ன நடந்தது என்று விளக்குவதில் மூவன் கூற்றுகளுக்கிடையிலும் வேறுபாடுகள் இருந்தபோதிலும், தில்லியின் கட்டளைப்படியே யாவும் நடைபெற்றன என்பதில் வேறுபாட்டுக்கோ ஐயப் பாட்டுக்கோ இடமே இல்லை.

சூத்திரதாரி நேரு

சூது நிறைந்த சூழ்ச்சிக்காரர் நேரு. அவர் தன் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள வெவ்வேறு ஆட்களைக் கருவிகளாகப் பயன்படுத்தும்போது எல்லாரிடமும் எல்லாவற்றையும் சொல்லியிருக்க மாட்டார் என்பதே அந்த ஆட்கள் சொல்லும் கதைகள் வேறுபடுவதற்குக் காரணமாய் இருக்கலாம். ஆனால் இவர்களில் யாரும் 1953 காசுமீர அதிரடியின் சூத்திரதா நேருவே என்பதை மறுக்கவில்லை. ஆனால் நேரு தனது பங்கை மறுக்கவும் மறைக்கவும் இயன்ற தனைத்தும் செய்தார். சேக்கைத் தளைப்படுத்திய அதே நாளில் அவர் இந்தியக் குடியரசுத் தலைவடம் சொன்னார்: “இந்த உள் நிகழ்வுகளில் நாம் எவ்வகையிலும் குறுக்கிட விரும்பவில்லை.”

மறுநாள் இந்திய நாடாளுமன்றத்திலும் நேரு இதே கதையைத் திருப்பிச் சொன்னார்: “நமது அறிவுரையை அவர்கள் கேட்கவும் இல்லை, நாம் வழங்கவும் இல்லை.” 1953 ஆகஸ்டு 22ஆம் நாள் மாநில முதலமைச்சர் களுக்கும் நேரு இதையே சொன்னார் என்பதோடு, சேக் அப்துல்லாவைச் சிறைப்படுத்தியதை நியாயப்படுத்தவும் செய்தார்.

இந்திரா வேதனை

காசுமீர அதிரடி - 1953 நடைபெற்ற போது இந்திரா காந்தி சுவிட்சர்லாந்து நாட்டின் சூச் நகல் இருந்தார். ஆகஸ்டு 9இல் மகளுக்கு எழுதிய மடலிலும் நேரு, “எனக்கு எதுவும் தெயாது” என்றே சாதித்தார். ஆகஸ்டு 10ஆம் நாள் இந்திரா காசுமீர நிகழ்வுகள் குறித்துத் தன் வேதனையைச் சொல்லித் தந்தைக்கு எழுதினார். சேக்கைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்தியதில் இந்திராவுக்கு உடன்பாடு இல்லை. அவர் நாடு திரும்பியவுடன் சேக்கைச் சிறையில் சந்திக்க விரும்பினார். நேருவின் தனிச் செயலர் எம்.ஒ. மத்தாய் “வேண்டாம் இந்திராஜி” என்று எழுதிய கமுக்க மடலை நூரானி சான்று காட்டுகிறார். சேக் அப்துல்லா பாகிஸ்தானில் இணையத் திட்ட மிட்டார் என்ற குற்றச்சாட்டு எந்த அளவுக்குப் பொய்யானது என்பதை மத்தாயின் இந்தக் கடிதம் வெளிப்படுத்துகிறது:

“சேக் மீது யார் இப்படிக் குற்றம் சுமத்தினாலும் அது அவருக்கு அநீதி செய்வது மட்டு மல்ல, நமது நோக்கத்தையே பாழடிப்பதும் ஆகும்.” ஆனால் “கடந்த சில மாதங் களில் சேக் அப்துல்லாவின் சொல் லும் செயலும் காசுமீர முசுலீம் மக்களிடையே பாகிஸ் தானுக்கு ஆதரவான சக்திகளுக்கு நேரடி யாகவும் சுற்றடியாகவும் ஊக்க மளித்துள்ளன” என்கிறார் மத்தாய். அன்றும் இன்றும் காசுமீரத்தில் பாகிஸ்தான் ஆதரவு என்றால் இந்திய எதிர்ப்பு என்று பொருள். சேக்கின் சொல்லும் செயலும் என்று மத்தாய் சொல்வது காசுமீரத்தின் ஓர்மையைக் காக்க சேக் எடுத்த முயற்சிகளைக் குறிக்கும். இந்த முயற்சிகள் காசுமீரத்தை விழுங்கத் துடித்த இந்தியத்துவ, இந்துத்துவ ஆற்றல்களுக்கு இந்திய எதிர்ப்பாக வும் பாகிஸ்தான் ஆதரவாகவும் தெரிந்ததில் வியப்பில்லை.

கூட்டாட்சியும் தன்னாட்சியும்

காசுமீரப் பள்ளத்தாக்கு, சம்மு, லடாக், பூஞ்ச், கில்ஜிட் ஆகிய ஐந்து அலகுகளைக் கொண்ட ஒரு கூட்டாட்சி அரசை அமைப்பதும், இதை இந்தியக் குடியரசின் ஒரு தன்னாட்சி அலகாக வைத்துக் கொள்வதுமே சேக் அப்துல்லாவின் திட்டம் என்று 1953 ஏப்ரல் 27இல் ஆங்கில நாளேடு "இந்து' செய்தி வெளியிட்டது. 1952 சூன் 19ஆம் நாள் மிர்சா அப்சல் பெக், மவுலானா மசூதி, டி.பி.தார் ஆகிய காசுமீரத் தலைவர்களைச் சந்தித்த போது நேரு சொன்னார்: “நீங்கள் உங்கள் அரசமைப்பை இறுதியாக்கு வதற்கு முன்பே, இந்தியாவுடன் காசுமீரத்தின் உறவு என்ன என்பதை முழுமையாகத் தெளிவு படுத்த வேண்டும்.” குடியரசுத் தலைவர் இராசேந் திர பிரசாத்திடமும் “முதலில் முடிவு காண வேண்டிய சிக்கல் இதுவே” என்றார். இறுதியாக வும் நிரந்தரமாகவும் காசுமீரத்தை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள நேரு காட்டிய இந்த அவசரம் சேக்கிற்குக் கவலையளித்தது.

1952 சூலை 24 தில்லி உடன்பாட்டைப் பற்றி இத்தொடன் முதல் பகுதியில் குறிப்பிட்டோம். காசுமீரத்து அரசமைப்புப் பேரவை காசுமீரத்துக் கான அரசமைப்புச் சட்டத்தை இறுதியாக்கும் வரையிலான இடைக்கால ஏற்பாடுதான் இந்த உடன்பாடு என்பது சேக்கின் நிலைப்பாடு. ஆனால் இந்த உடன்பாட்டைப் பயன்படுத்தி இந்தியாவுடனான காசுமீரத்தின் இணைப்பை இறுதியாக்க நேரு நெருக்க லானார். இந்த நெருக்குதலுக்கு சேக் பணிவதாய் இல்லை.

சேக்கின் வட்டத்தில் இடம் பெற்ற பக்சி குலாம் முகமது, டி.பி.தார், ஜி.எம். சாதிக் ஆகியோரை ஒற்றர்களாகப் பயன்படுத்தினார் நேரு. ஆனால் அவர்கள் ஒற்றாடித் தெந்து கொள்ள வேண்டிய இரகசியம் எதுவும் இருக்கவில்லை. சேக்கின் நோக்கம் வெளிப்படையானது. அதற்கான அவன் முயற்சிகளும் வெளிப்படையானவை. அவர் எந்தச் சதியிலும் ஈடுபடவில்லை. சூழ்ச்சி வலை பின்னிக் கொண்டிருந்தவர் நேருவே.

1953 மே 18ஆம் நாள் தேசிய மாநாட்டுக் கட்சியின் செயற்குழு, தீர்வுக்கான வழிகளை ஆய்ந்து கண்டறிவதற்காக எண்மர் குழு ஒன்றை அமைத்தது. சேக் அப்துல்லா, ஜி.எம்.சாதிக், மவுலானா முகமது சயீத் மசூதி, சர்தார் புத் சிங், மிர்சா முகமது அப்சல் பெக், பண்டித கிர்தாலால் டோக்ரா, பக்சி குலாம் முகமது, பண்டித சாம்லால் சரஃப் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்கள். இந்தப் பெயர்களைப் படிக்கும் போதே சேக் தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியின் பல்சமூகத் தன்மை புலப்படும். 1953 சூன் 9ஆம் நாள் இறுதியாகக் கூடிப் பேசிய எண்மர் குழு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான காசுமீரப் பூசலுக்கு மதிப்பார்ந்த முறையிலும் அமைதியாகவும் தீர்வு காண நான்கு மாற்று வழிகள் இருப்பதாக முன்மொழிந்தது:

நான்கு வழிகள்

1. 1953 சூன் 4 கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்பில் விவத்த நிபந்தனைகளோடு ஒட்டுமொத்த வாக்கெடுப்பு நடத்தலாம். (ஐ.நா. பாதுகாப்பு மன்றம் முன்மொழிந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணை வதற்கு வாக்களிக்கலாம். ஆக, இரு வாய்ப்புகள் மட்டுமே. ஆனால் ஒட்டுமொத்த வாக்கெடுப்பு என்பது சுதந்தரம் என்னும் மூன்றாம் வாய்ப்பையும் தரும். இது அன்றைய கூட்டத்தில் மவுலானா மசூதி முன்மொழிந்ததாகும்.)
2. சம்மு-காசுமீரம் முழுமைக்கும் சுதந்தரம்.
3. அயலுறவுத் துறையில் மட்டும் கூட்டுக் கட்டுப்பாட்டுடன் சம்மு-காசுமீரம் முழுமைக்கும் சுதந்தரம். (இந்தியா, காசுமீரம் ஆகியவற்றின் கூட்டுக் கட்டுப்பாடே இங்கு குறிக்கப்படுகின்றது.)
4. வாக்கெடுப்பு நடக்கும் பகுதிக்கு சுதந்தரம் வழங்குவ தோடு கூடிய டிக்சன் திட்டம் (அதாவது சம்மு, காசுமீர் பள்ளத் தாக்கு, லடாக் ஆகிய ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒவ்வொரு வகையில் தீர்வு காணுதல்).

இந்த முன்மொழிவுகளில் நான்காவது மட்டும் நடைமுறைக் குகந்த நல்ல தீர்வு என்று வலியுறுத்தியவர் பக்சி. இவர் நேருவுக்கு வேண்டியவர், ஆகஸ்டு 9 அதிரடிக்குப் பின் சேக்கின் இடத்தில் தலைமையமைச்சராய்ப் பதவியேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மவுலானா சயீத் இந்த நான்கு முன்மொழிவுகளுக்கும் இதே வசையில் முன்னுமை தர வலியுறுத்தினார். ஒட்டுமொத்த வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணையம் குறித்தும் எண்மர் குழு விவாதித்தது. சோசலிச சோவியத் ஒன்றியமும் செஞ்சீனமும் இந்த ஆணையத்தில் இடம்பெறுவதை தேசிய மாநாட்டுத் தலைவர்கள் விரும்பினார்கள்.

நேருவின் அச்சம்

எண்மர் குழுக் கூட்டத்தின் விவாதங்கள், முன் மொழிவுகள் யாவும் இந்தியத் தலைமையமைச்சர் நேருவுக்கு உடனுக்குடன் தெவிக்கப்பட்டன. சேக்கும் அவர் கட்சியினரும் நேருவிடமிருந்து மறைப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் காசுமீரத் தின் இந்திய இணைப்பை இந்த முன்மொழிவுகள் ஆபத்துக்குள்ளாக்கி விடும் என்று அவர் அஞ்சினார். உடனடியாக மவுலானா அப்துல் கலாம் ஆசாதை சிறிநகருக்கு அனுப்பி வைத்தார். சேக்கிற்கு 1953 சூலை 9ஆம் நாள் ஆசாத் எழுதிய மடலில், இறுதி உடன்பாடு ஏற்படும் வரை இந்திய அரசமைப்பின் உறுப்பு 370-ஐ நிரந்தரமாக்க முன்வந்தார். இது ஏற்கெனவே இருப்பதுதான், எவ்வகையிலும் புதிய சலுகையன்று. உறுப்பு 370 நிரந்தரமன்று என மவுலானா மிரட்டுகிறார் என்பதே இதன் பொருள். இந்துத்துவம் உறுப்பு 370 கூடாது என்கிறது. இந்தியத்துவம் அது தற்காலிகமானதே எனக் காட்ட முற்படுகிறது. இவ்விரண்டுமே காசுமீர மக்களின் விருப்பம் பற்றிக் கவலைப்படவில்லை.

இறுதித் தீர்வுக்கு இரு உடன்பாடுகள்

சூலை 16இல் மவுலானாவிற்கு சேக் விடை மடல் எழுதி காசுமீரச் சிக்கலின் இறுதித் தீருóவுக்கு இரு உடன்பாடுகள் தேவை என்பதைச் சுட்டிக் காட்டினார். 1. தன்னாட்சி குறித்து இந்திய ஒன்றியத்துக்கும் காசுமீரத்துக்கும் இடையே உடன்பாடு, 2. சம்மு - காசுமீரத்தின் வருங்காலம் குறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உடன்பாடு.

ஆசாதும் சரி, அவருடைய தலைவர் நேருவும் சரி... இதை யெல்லாம் கருதிப் பார்க்கவே அணியமாய் இல்லை. அவர் களுக்கு வேண்டியதெல்லாம் காசுமீரத்தை இறுதியாகவும் நிரந்தரமாகவும் இந்தியாவுடன் இணைப்பதே. இதற்கு அவர்கள் தரக்கூடிய ஒரே விலை... காசுமீரத் தின் சிறப்புத் தகுநிலையை நிரந்தர மாக்குவதே. இந்தச் சிறப்புத் தகுநிலைக்கான வழிவகைதான் இந்திய அரசமைப்பின் உறுப்பு 370. இந்த உறுப்பினால் காசுமீரம் தன்னாட்சி பெற்றுவிடப் போவ தில்லை என்பது அப்போதே தெரிந்ததுதான். இப்போது கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலான பட்டறிவிலிருந்து உறுப்பு 370 தன்னாட்சி தந்து விட வில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

நேரு வகையறா காசுமீரத்தை இந்தியாவுடன் இறுதியாக இணைக்க விரும்பியதில் வியப்பில்லை. ஆனால் இதில் காசுமீர மக்களின் விருப்பம் என்ன? என்ற கேள்வியே அவர்களுக்குக் கசந்ததுதான் சேக் கிற்கும் காசுமீர மக்களுக்கும் அதிர்ச்சியளித்தது. இறுதியாகப் பார்த்தால், நேரு காசுமீரத்தை விழுங்கி ஏப்பம் விடும் முயற்சியில் சேக்கைத் தன் கையாளாகப் பயன்படுத்த முயன்றார். இந்த முயற்சி தோற்றபோது அவரைச் சிறைப்படுத்தி ‘அதிரடி’ நடவடிக்கையில் இறங்கினார்.

ஏமாற்றியவரும் ஏமாளிகளும்

1953 ஆகஸ்டு 9ஆம் நாள் சேக்கை அதிரடியாகப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்திவிட்டு, ஆகஸ்டு 20ஆம் நாள் பாகிஸ்தான் தலைமையமைச்சர் முகமது அலியுடன் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் நேரு மீண்டும் உறுதியளித்தார் - காசுமீரத்தில் பொதுசன வாக்கெடுப்பு நடத்தப் படும் என்று! மறுநாள் கரண்சிங்கிற்கு எழுதிய மடலில் நேரு சொன்னார்: “நமக்கும் பாகிஸ்தானுக்கும் ஏதோ ஒருவிதமான உடன்பாடு இல்லாமற் போனால், தவிர்க்க முடியாதவாறு இந்தப் பொருட்பாடு உடனடியாக ஐ.நா.வில் எழுப்பப்பட்டிருக்கும். அவர்கள் தங்களின் பிரதிநிதியைக் காசுமீரத்துக்கு அனுப்பியிருக்கக் கூடும். இதெல்லாம் கிளர்ச்சி தொடரவும் பற்றியெயவும் உதவியிருக்கும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் அப்படி அறிக்கை வெளியிட ஒப்புக் கொண் டோம்.”

சவகர்லால் நேரு காசுமீர மக்களை ஏமாற்றினார்! சேக் அப்துல்லாவை ஏமாற்றினார்! பாகிஸ்தானை ஏமாற்றினார்! ஐ.நா. அமைப்பையும் ஏமாற்றி னார்! சிக்கலைத் தீர்ப்பதில் தோல்வி கண்டு தம்மைத் தாமேயும் ஏமாற்றிக் கொண்டார்! இவரை சனநாயகப் பற்றாளர் என நம்புகிறவர்கள்தாம் ஆகப் பெரும் ஏமாளிகள்.

இந்துத்துவ மூர்க்கம்

இந்த வகையில் நேருவுக்கும் இந்துத்துவ ஆற்றல்களுக்கும் இருந்த ஒரே ஒரு வேறுபாடு - இறுதி இணைப்பு எப்போது? எப்படி? என்பதில்தான். காசுமீருக்குத் தன்னாட்சி என்பதை இந்துத்துவ ஆற்றல்கள் ஒப்புக்கும் கூட கருதிப் பார்க்க அணியமாய் இல்லை. சிறப்புத் தகுநிலை வழங்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 370ஐயும் அவர்கள் எதிர்த்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை மற்ற அரச மாநிலங்களைப் போலவே காசுமீரத்தையும் அறவே கட்டிப் போட நினைத்தார்கள். இதற்கு சேக் அப்துல்லா தடையெனக் கண்டு அவரை மூர்க்கமாய் எதிர்த்தார்கள். மகாராசா அசிங், இந்தியத் தலைமையமைச்சர் வல்லபாய் படேல், உளவுப் பிவுத் தலைவர் மல்லிக் இவர்களெல்லாம் சேக்கை வலுக்குன்றச் செய்ய அவரவர் வழியில் முயன்றார்கள்.

சங் பவாரம் பற்றிச் சொல்லவே தேவையில்லை. காசுமீரத்தின் தன்னாட்சிக்கு இந்துத்துவ ஆற்றல்கள் அப்பட்டமாகவும் மூர்க்கமாகவும் காட்டிய எதிர்ப்பு நேர்எதிர் விளைவையே தோற்றுவித்தது - காசுமீர மக்களின் விடுதலை வேட்கை வளர்ந்தது. ஜன சங்கம், ஆர்எஸ்எஸ், பிரஜா பசத் ஆகிய இந்துத்துவ அமைப்புகள் சேக் அப்துல்லாவைப் பதவி நீக்கம் செய்யக் கோக் கிளர்ச்சி செய்தன. இந்தக் கிளர்ச்சியை எதிர்ப்பது போலவும் சேக் அப்துல்லாவை ஆதப்பது போலவும் பேசிக் கொண்டிருந்த நேரு முடிவில் அவர்களது ஆசையையே நிறைவேற்றி வைத்தார். இந்தியத்துவமும் சரி, இந்துத்துவமும் சரி, காசுமீர மக்களைப் பொருட்படுத்தவே இல்லை. அம்மக்களின் தனிப்பெரும் தலைவரைச் சிறையி லடைத்தாவது அவர்களின் விடுதலையுணர்வை ஒடுக்க எண்ணின. சேக்கைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்தியதை எதிர்த்து அவர்கள் கிளர்ந் தெழுந்தார்கள். விபீடண வேலை செய்து பதவிக்கு வந்த பக்சியின் வீடே தாக்கப்பட்டது. அவர் அரண்டு போய்ப் பதவி விலக எண்ணினார். சாதிக்தான் அவரைத் தடுத்து விட்டார்.

ஏராளமானோர் தளைப்படுத்தப்பட்டனர். அடக்குமுறையில் 800 பேர் வரை கொல்லப்பட்டனர். 1954இல் ‘பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு’ அடிப்படை அரசியல் உரிமை களைக் கட்டுப்படுத்தும் சட்டங் கள் இயற்ற காசுமீரச் சட்ட மன்றத்துக்கு அதிகாரமளிக்கப் பட்டது.

அதிரடி ஏன்?

காசுமீர அதிரடி - 1953 ஏன்? என்ற வினாவிற்கு சேக் அப்துல்லாவே பிற்காலத்தில் விடையளித்தார்: “1953இல் பண்டித சவகர்லால் என்னிடம் இந்திய இணைப்புக்கு காசுமீர அரசமைப்புப் பேரவை யின் ஏற்பிசைவைப் பெறுமாறு சொன்னபோது எங்கள் உறவில் இறுதி முறிவு வந்துற்றது. அவரது போக்கில் ஏற்பட்ட இந்த மாற்றம் கண்டு நான் திகைத் தேன். ஏனென்றால் கடந்த காலத்தில்... இப்படி எதுவும் செய்ய வேண்டாம் என்று எனக்கு வலுத்த அறிவுரை வழங்கியவர் அவரே. இதுதான் நான் காசுமீரத் தலைமையமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கும், வழக்கு விசாரணையின்றி நீண்ட காலம் சிறையிலடைக்கப்படுவதற்கும் இட்டுச் சென்றது.” (1970 சூன் 8ஆம் நாள் சம்மு, காசுமீர் அரச மாநில மக்கள் பேரவையின் இரண்டாம் அமர்வில் ஆற்றிய உரை.)

1953 காசுமீர அதிரடி... நேருவுக்கும் சேக்கிற்குமான நட்பை முறித்தது மட்டுமல்ல, இந்தியா மீது காசுமீர மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் இறுதியாக முறித்துப் போட்டது.
(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com