Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
ஆகஸ்டு 2008
தீர்ந்தன ஆண்டுகள் பதினேழு
திறக்கட்டும் சிறைக் கதவு!
தியாகு


ராசீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் அடைபட்டுள்ள எழுவரையும் விடுதலை செய்யக் கோரி பங்குனி இதழில் ஆசிரியவுரை எழுதியிருந்தோம். அதன் பிறகான கடந்த ஐந்து மாத காலத்தில் இந்தக் கோரிக்கை மேலும் வலுவடைந்துள்ளது. இது குறித்தான விவாதங்கள் ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. இந்த எழுவரில் பேரறிவாளன் (அறிவு), சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தூக்குக் கைதிகள். நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் ஆயுள் கைதிகள் (வாழ்நாள் சிறையாளிகள்).

அறிவு எழுதிய தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் நூல் வடிவம் பெற்று மூன்றாம் பதிப்பு வரை வெளிவந்துள்ளது. இதுவே An Appeal from the Death Row என்ற தலைப்பில் ஆங்கில நூலாகவும் வெளிவந்துள்ளது. இந்த முறையீட்டு மடலில் அறிவு தன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றை ஆணித்தரமான வாதங்களால் அறுத்தெறிய முற்படுகிறார்.

பெண் என்ற முறையில் நளினியின் விடுதலைக்காகச் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கவிஞர் தாமரையை அமைப்பாளராகக் கொண்ட நளினி விடுதலை கோரும் கையெழுத்து இயக்கம் தமிழகத்தின் முதன்மையான கலை இலக்கியப் படைப்பாளிகள் ஐந்நூறுக்கு மேற்பட்டோரிடம் நளினி விடுதலை கோரும் விண்ணப்பத்தில் கையொப்பம் திரட்டியது. அந்த விண்ணப்பமும், கையொப்பமிட்டோர் பட்டியலும் சென்ற 19.07.2008இல் தமிழக முதல்வரிடம் கையளிக்கப்பட்டன. இடைக்காலத்தில் இராசீவ் காந்தியின் மகள் பிரியங்கா வேலூர்ச் சிறையில் நளினியைச் சந்தித்துப் பேசிச் சென்றார்.

நளினியின் விடுதலை கோரித் தமிழக மக்கள் உரிமைக் கழகம் ஒரு விரிவான கையெழுத்து இயக்கத்தை நடத்தியுள்ளது. நளினி விடுதலைக்காகச் சென்னையில் அக்கழகம் நடத்தவிருந்த மாநாட்டைத் தமிழகக் காவல்துறை தனக்கே உரிய வழியில் தடுத்து விட்டது. அம்மாநாட்டிற்காகச் சென்னை வந்த மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச். சுரேஷ் பத்திரிகையாளர் சந்திப்பில் நளினியின் விடுதலைக்காகக் குரல் கொடுத்துச் சென்றார்.

நளினியை விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிப் பேராணை (ரிட்) வழக்குத் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. நளினியை விடுதலை செய்யக் கூடாது என்று சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் பேசி வருகின்றனர். நளினி விடுதலை வழக்கில் சு.சாமியும் தன் வாதத்தை முன் வைப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. முஸ்லீம் கைதிகள் விடுதலை மாநாட்டிற்காகவும், அரசியல் கைதிகள் விடுதலைக் குழுவின் தமிழகக் கிளைத் தொடக்கத்திற்காகவும் சென்னை வந்த பேராசிரியர் அமீத் பட்டாச்சார்யா, பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கீலானி ஆகியோரும் அரசியல் கைதிகள் விடுதலைக்காகவும் அதே தன்மையில் எழுவர் விடுதலைக்காகவும் குரல் கொடுத்தனர்.

ஒருபுறம் எழுவர் விடுதலைக்கான கோரிக்கைக் குரல் பல்வேறு முனைகளிலிருந்தும் எழுந்து வலுப்பட்டு கொண்டிருக்கும்போதே எதிர்க்குரலும் ஒலிக்காமலில்லை. சு.சாமியும் தமிழ்நாட்டுக் காங்கிரசுக்காரர்கள் சிலரும் மட்டுமல்ல, சில ஆங்கில ஊடகங்களும் கூட “அய்யோ, இராசீவ் கொலையாளிகளை விடுதலை செய்வதா?” என்று அதிர்ச்சிக் குரல் எழுப்பி வருகின்றன. எழுவர் விடுதலையை எதிர்க்கக் கூடியவர்களில் ஒரு சிலர் விவரமறியாதவர்கள். ஆனால், மற்றவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள். இவர்களுக்கு இராசீவ் கொலை நினைவுகள் செத்துவிடக் கூடாது என்ற கவலை. அந்த நினைவுகளை முதலாக வைத்து புலி எதிர்ப்பு, ஈழ எதிர்ப்பு, தமிழ் எதிர்ப்பு அரசியல் நடத்தி ஆதாயம் எடுக்க விரும்புகிறார்கள். காங்கிரசுக்காரர்கள் ஒரு கட்டத்தில் திமுக எதிர்ப்பு அரசியலுக்கு இதைப் பயன்படுத்திக் கொண்டதையும் நாம் மறக்கவில்லை.

ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் - ‘டைம்ஸ் நௌ' போன்றவை - நளினியைக் குறிப்பிடும்போதெல்லாம் இராசீவ் கொலையாளி நளினி, இராசீவைக் கொல்லச் சதிச்செயல் புரிந்த நளினி என்றெல்லாம் சகட்டுமேனிக்கு அடைமொழி சேர்த்தே குறிப்பிடுகின்றன. இதன் உச்சக்கட்டமாக ‘இராசீவைக் கொல்ல வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த நால்வரில் மிச்சமுள்ள ஒரே ஒருத்தி’ என்று ‘டைம்ஸ் நௌ' நளினியைப் படம் பிடிக்கிறது. இது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, இராசீவ் கொலையில் அரசுத்தரப்பு தொடுத்த வழக்கிற்கும் மாறானது என்ற உறுத்தலே இவர்களுக்கு இல்லை.

தமிழக அரசைப் பொறுத்த வரை 17 ஆண்டுச் சிறைப்பாட்டுக்குப் பிறகும் நளினியை விடுதலை செய்யப் பிடிவாதமாக மறுத்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆனால் தமிழக முதல்வர் தம்மைச் சந்தித்த நளினி விடுதலை கோரும் கையெழுத்து இயக்கக் குழுவினரிடம்... தாம் நளினி விடுதலையை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் இந்த வழக்கில் இந்திய அரசு ஒப்புதலின்றித் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். ஆனால், நடுவண் அரசின் ஒப்புதலை பெறுவதற்காகத் தமிழக அரசு எம்முயற்சியும் செய்ததாக நாமறியோம். தமிழக முதல்வர் சொல்வது உண்மை என்றால், அவரது தயக்கம் சட்டத்தின் பாற்பட்டதாக இருப்பதை விடவும் அரசியலின் பாற்பட்டதாகவே தெரிகிறது. இந்தச் சிக்கலில் காங்கிரசோடு உரசல் ஏதும் நேர்ந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அவர் மனத்தில் ஓங்கி நிற்பதாய் இருக்கலாம்.

அறிஞர் அண்ணா நூற்றாண்டை ஒட்டித் தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும், 8 ஆண்டு கழித்த ஆயுள் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், மற்ற வகைக் கைதிகளுக்கும் சிறப்புக் கழிவுகள் தர வேண்டும் என்ற மனிதநேயக் கோரிக்கை எழுந்து வருகிறது. கடந்த காலத்திய நடைமுறையை வைத்துப் பார்த்தால், அண்ணா நூற்றாண்டை முன்னிட்டுத் தமிழக அரசு இவ்வகையில் ஒரு சில செய்திடும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் சில பல காரணங்களைக் காட்டி குறிப்பிட்ட சிலவகைச் சிறைப்பட்டோரை மட்டும் இந்தச் சலுகையிலிருந்து விலக்கி விடும் என்ற அச்சமும் உள்ளது. 2006 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10ஆண்டு கழித்து முடித்த ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட போது நளினியும் அவருடைய வழக்குக் கூட்டாளிகளும் 15 ஆண்டு கழித்து முடித்திருந்த நிலையிலும் விடுதலை செய்யப்படவில்லை என்பதை நினைவிற் கொண்டுள்ளோம்.

2007ஆம் ஆண்டிலும் இதே நடைமுறைதான் கையாளப்பட்டது. அப்போது சொல்லப்பட்ட அதே காரணங்கள் இப்போதும் சொல்லப்படலாம். வாழ்நாள் சிறையாளிகள் தொடர்பான இந்தப் பாகுபட்ட அணுகுமுறை தூக்குச் சிறையாளிகள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்டு அதற்கும் சில சட்டக் காரணங்கள் சொல்லப்படலாம். இந்தப் பின்னணியில் எழுவர் விடுதலைக் கோரிக்கைத் தொடர்பான குழப்பங்களைப் போக்கித் தெளிவுண்டாக்குவதும் தயக்கங்களை வென்று செயல்படத் தூண்டுவதுமான கடமை நமக்குள்ளது.

இராசீவ் கொலை வழக்கில் நீதிமன்றச் செயல்முறை என்பது 1999இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புடன் முடிவடைகிறது. இதற்கு மேல் எந்த நீதிமன்றத்திற்கும் மேல்முறையீடு செய்யவோ, வேறு வகையில் இவ்வழக்கை எடுத்துச் செல்லவோ வாய்ப்பில்லை. ஆனால், இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட எழுவரின் விடுதலைக்குமான கோரிக்கையை எழுப்பும்போது நீதிமன்றத் தீர்ப்பின் நிறைகுறைகளை மக்கள் மன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் உரிமை நமக்குண்டு. இவ்வகையில் இராசீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின் முதன்மைக் கூறுகள் சிலவற்றைத் திறனாய்வு செய்வோம்.

இராசீவ் காந்தியைக் கொலை செய்தது விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயலாக விவரிக்கப்பட்டதும், எனவே அந்தக் கொலைக் குற்றத்திற்குப் பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், சுருங்கச் சொன்னால் தடா பயன்படுத்தப்பட்டதும், புலனாய்வு தடா சட்டத்தின்படி நடைபெற்றதும், அதே தடா சட்டத்தின்படி நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் தடா சிறப்பு நீதிமன்றம் கூண்டிலேற்றப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்ததும் தெரிந்த செய்திகளே. உச்ச நீதிமன்றம் பயங்கரவாதக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதா? இல்லை.

இராசீவ் கொலை தடா சட்ட வரையறையின்படி பயங்கரவாதச் செயலோ சீர்குலைவு நடவடிக்கையோ ஆகாது என்று மூத்த வழக்குரைஞர் நடராசன் ஆணித்தரமாக வாதிட்டார். அந்த வாதுரையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூவரும் (தாமஸ், வாத்வா, காத்ரி) ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். எனவே, அவர்கள் அனைத்து எதிரிகளையும் தடாச் சட்டப் பிரிவுகளின்படியான குற்றச்சாட்டுகளிலிருந்து அறவே விடுவித்து விட்டனர். இராசீவ் கொலை பயங்கரவாதச் செயல் ஆகாது, எனவே, தடாச் சட்டப் பிரிவுகளுக்கு உட்படாது எனும் போது, தடா சட்டத்தின்படி நடைபெற்ற புலன் விசாரணையில், அதே சட்டத்தின்படி பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் உள்ளிட்ட சான்றுரைகள் எப்படிப் பொருந்தும்? தடா சட்டத்தின் வரம்பெல்லைக்குட்படாத ஒரு வழக்கைத் தடா சிறப்பு நீதிமன்றத்தில் தடா விசாரணை முறைப்படி விசாரித்துத் தீர்ப்பு வழங்கியது எப்படிச் செல்லுபடியாகும்? இந்த வினாக்களின் தொடர்ச்சியாக வழக்கை மறுபுலனாய்வுக்கும் மறுவிசாரணைக்கும் திருப்பி அனுப்பிருக்க வேண்டாமா?

தடா சட்டப் பிரிவுகளின்படியான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அதே தடா சட்டத்தின்படி காவல்துறையால் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் உள்ளிட்ட சான்றுகளை ஏற்றுக் கொண்டது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள அடிப்படைக் குறைபாடு ஆகும். ஒரு கொலை வழக்கில், குறிப்பாக இதுபோன்ற, அரசியல் கொலை வழக்கில், குற்ற நோக்கத்தை நிறுவுவது முகாமையானது. இராசீவ் கொலை ஓர் அரசியல் குற்றம், அந்தக் குற்றத்தைத் திட்டமிட்டு நிகழ்த்தியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது அரசுத் தரப்பு வழக்காகும்.

புலிப்படைத் தலைவர் பிரபாகரன், புலிப்படையின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பெண்கள் பிரிவின் துணைத் தலைவர் அகிலா ஆகியோர் சதித் திட்டத்தின் மூலவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். அதாவது இராசீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பகைமைதான் இராசீவ் கொலையில் முடிந்தது என்று பொருள். இந்தப் பகைமைப் பின்னணி குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது? தீர்ப்பின் முன்னுரை சொல்கிறது:

“இந்தியத் தலைமை அமைச்சர் பதவியிலிருந்த போது திரு. இராசீவ் காந்தி தமிழ் பேசும் இனச் சிறுபான்மையினருக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையிலான பூசல்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு 22.07.1987இல் இந்திய - இலங்கை உடன்பாட்டில் ஒப்பமிட்டார். இதன்படி இந்திய அரசு குறிப்பிட்ட பங்கினை ஏற்றுக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அந்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டது."

(While in office as Prime Minister of India Shri Rajiv Gandhi, to bring about a settlement of disputes between Tamil-speaking ethnic minority and Government of Sri Lanka, signed the Indo-Sri Lankan Accord on 22.07.1987 under which the Government of India took upon itself certain role. LTTE was among the signatories to that accord -
- 1999 SCC (Cri), பக்கம் 692.

இந்திய - இலங்கை உடன்படிக்கையில் விடுதலைப்புலிகள் கையொப்பமிட்டார்களாம்! புலிகள் சார்பில் கையொப்பமிட்டது யார்? நீதிபதி தாமஸ் எழுதுகிறார்: “இலங்கை அதிபரும் (திரு ஜெயவர்த்தனா) இந்தியப் பிரதமரும் (திரு இராசீவ் காந்தி) புது தில்லியில் சந்தித்தனர். இதில் கலந்து கொள்ள வேலுப்பிள்ளை பிரபாகரனும் அழைக்கப்பட்டார். மேற்சொன்ன மூவரும் ஓர் உடன்படிக்கையில் ஒப்பமிட்டனர். இதன்படி இந்திய அமைதிக் காப்புப் படை என்ற அணியை உருவாக்கவும் மற்றவற்றுக்கும் இந்திய அரசு ஒப்புக் கொண்டது...”

(The President of Sri Lanka (Mr Jayawardene) and the Prime Minister of India (Sri Rajiv Gandhi) met together at New Delhi and Veluppillai Prabhakaran was also invited to be involved. An accord was signed by the aforesaid three persons by which the Indian Government agreed, inter alia, to form a cadre called Indian peace - keeping force (IPKF for Short).)
- 1999 SCC (Cri) பக்கம் 724.

இந்திய - இலங்கை உடன்படிக்கையில் ஜெயவர்த்தனா, இராசீவ் காந்தி, பிரபாகரன் ஆகிய மூவரும் ஒப்பமிட்டார்களாம்! இந்திய - இலங்கை உடன்படிக்கை கொழும்பில் - தில்லியில் அல்ல - கைச்சாத்திடப்பட்ட போது பிரபாகரன் தில்லி அசோகா விடுதியில் இந்திய அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் அந்த உடன்படிக்கையில் ஒப்பமிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் ஒப்பமிடுவதற்கு அது இந்திய - இலங்கை - தமிழீழ உடன்படிக்கையன்று, வெறும் இந்திய - இலங்கை உடன்படிக்கைதான்! இந்த எளிய உண்மை கூடவா மெத்தப்படித்த உச்ச நீதிமன்ற நீதிபதிக்குத் தெரியவில்லை? உச்ச நீதிமன்ற நீதிபதியின் வரலாற்று ‘அறிவை’ என்னென்பது! இப்படிப்பட்ட நீதிபதிகளால் இராசீவ் கொலை என்னும் அரசியல் குற்றச் செயல் பின்னணியை எப்படிச் சரியாக உள்வாங்க முடியும்?

இராசீவுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான பகைமைக்குரிய பழியைப் புலிகள் மீது சுமத்துவதே உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுத் திரிபில் மறைந்துள்ள அரசியல். இந்த அரசியல் நீதிபதிகளின் மனத்தில் ஓங்கி நிற்பதால் அவர்கள் சமன் செய்து சீர்தூக்கும் தன்மையை இழந்து விடுகிறார்கள். திலீபனின் பட்டினிப் போர் இந்திய அமைதிப் படைக்கு எதிராக நடைபெற்றது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வதும் வரலாற்றுப் பிழையே எனினும் நம் இப்போதைய திறனாய்வுக்குத் தேவையில்லை என்பதால் ஒதுக்கி விடுவோம்.

இராசீவ் கொலை வழக்கில் 41 பேருக்கு எதிராகச் சதிக் குற்றம் சுமத்தப்பட்டது. இவர்களில் மூவர் - பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா - பிடிபடவில்லை. சிவராசன், தனு, சுபா உள்ளிட்ட பன்னிருவர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டு இறந்துவிட்டனர். எஞ்சிய 26 பேர் மேல்தான் வழக்கு. சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் திரட்டி நீதிமன்றத்தில் முன்னிறுத்திய சான்றுகள் அனைத்தையும் அப்படியே நம்பி ஏற்றுக் கொண்டாலும் இந்த 26 பேரில் 25 பேருக்குக் கொலை நடந்து முடியும்வரை எதுவும் தெரியாது. உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்ட 19 பேரை நீக்கிவிட்டுப் பார்த்தால் இப்போது சிறையில் இருக்கும் எழுவரில் கொலை நடக்கப் போவது நளினி ஒருவருக்குத் தான் முன்கூட்டித் தெரியும் என்றாகிறது.

மற்ற அறுவரும் கொலைச் சதி புரிந்தவர்களுக்குப் பல்வேறு வகையிலும் உதவியவர்கள் என்பதுதான் சான்றுரைகளின் சாரம். அவர்கள் அப்படி உதவியது உண்மையாகவே இருக்கட்டும். விடுதலைப் புலிகளுக்கு இங்கே எத்தனையோ வேலைத் திட்டங்கள் இருந்தன, அவற்றை நிறைவேற்ற எத்தனையோ பேர் எத்தனையோ வழிகளில் உதவியிருக்கலாம் என்று நீதிபதிகளே ஒப்புக் கொள்கிறார்கள். அவர்களுக்கு இவர்கள் உதவினார்களா இல்லையா என்பதல்ல, எதில் உதவினார்கள், எதைச் செய்வதற்கு உதவினார்கள் என்பதுதான் முக்கிய வினா. அவர்கள் செய்த உதவி அவர்களுக்கே தெரியாமல் ஒரு குற்றச் செயலுக்குப் பயன்பட்டதாக வைத்துக் கொண்டாலும்கூட, அவர்களை எப்படி அதற்கு உடந்தை எனக் கொள்ள முடியும்?

சாந்தன், முருகன், இராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பான பணிகளுக்காகத் தமிழகம் வந்தவர்கள் என்பதையும், அறிவு, நளினி, இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு உதவியவர்கள் என்பதையும்தான் இந்த வழக்கில் சிறப்புப் புலனாய்வுக்குழு முன்னிறுத்தியுள்ள சான்றுகளும் சான்றுரைகளும் மெய்ப்பிக்கின்றன எனக் கருதலாம். ஆனால் இவர்களை இராசீவ் கொலைச் சதியில் தொடர்புபடுத்திக் காட்ட இந்தச் சான்றுகளும் சான்றுரைகளும் போதுமானவை அல்லவே அல்ல.

நளினியைப் பொறுத்த வரை, நீதிபதி தாமஸ் தன் தீர்ப்பில் இவ்வாறு சொல்கிறார்:

“...நளினியின் சகோதரர் எ-20 (பாக்கியநாதன்) அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் ஓர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்; அதாவது தனு இராசீவ் காந்தியைக் கொல்லப் போகிறார் என்பதை உண்மையில் சிறிபெரும்புதூரில்தான் உணர்ந்தேன் என்று எ-1 (நளினி) 23.05.1991 இலேயே பாக்கியநாதனிடம் கமுக்கமாய்த் தெரிவித்தாராம். அநேகமாய் இதுவே உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த இடத்திலிருந்து பின்வாங்க அவர் துணிந்திருக்க மாட்டார். ஏனென்றால் சதியின் ஆக்டோபஸ் பிடிக்குள் சிக்கிவிட்ட பின் அவரைப் போன்ற ஒரு பெண் அதிலிருந்து விடுபடுவது முடியாத காரியம். சிவராசனும் சாந்தனும் தங்கள் பக்கம் நிற்காதவர்களை எப்படி ஒழித்துக் கட்டினார்கள் என்பது நளினிக்குத் தெரியும். பத்மனாபா நிகழ்வு அவருக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும்.

அவர் மெல்லினத்தைச் சேர்ந்தவர் என்பதையும், சிவராசன் வகையறாவின் சிலந்தி வலையிலிருந்து தப்ப வழியற்ற அவரது இயலாமையையும் கருத்தில் கொண்டால், அவர் சிவராசனின் அனைத்துக் கட்டளைகளுக்கும் கீழ்ப் படியலானார் என்ற உண்மையை மட்டும் வைத்து, வழக்கில் சுட்டிய அரிதிலும் அரிதான வழக்கு களுக்கு உரித்தானதாக அவர் நடந்து கொண்ட முறையைக் கருதத் தேவையில்லை.”

(In the confessional statement made by her brother A-20 (Bhagyanathan) he revealed one fact i.e A-1 (Nalini) had confided to him on 23.5.1991 itself that as a matter of fact she realised only at Sriperumbudur that Dhanu was going to kill Rajiv Gandhi. Perhaps that may be a true fact. But she would not have dared to retreat from the scene as she was tucked into the tentacles of the conspiracy octopus from where it was impossible for a woman like A-1 (Nalini) to get herself extricated. She knew how sivarasan and santhan had liquidated those who did not stand by them. Padmanabha’s episode would have been a lesson for her. Considering the fact that she belongs to the weaker sex and her helplessness in escaping from the cobweb of Sivarasan and company the mere fact that she became obedient to all the instructions of sivarasan need not be used for treating her conduct as amounting to “rarest of the rare cases” indicated in Bachan singh case.”) - 1999 SCC (Cri) பக்கம்.787-788

நீதிபதியின் பார்வையில் இதுதான் நளினியின் பங்கு என்றால் இது எவ்வகையில் சதிக்குற்றமாகும்? குற்றநோக்கமே இல்லாத நிலையில் சதிக் குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட்டதாகக் கொள்வது நீதியை தடம்புரளச் செய்து விடாதா? நீதிபதி தாமஸ் நளினியின் பங்கு தொடர்பான இந்தப் பார்வையின் தொடர்ச்சியாக அவரை சதிக் குற்றச்சாட்டிலிருந்து அறவே விடுவித்திருக்க வேண்டும். ஆனால் அவரது பங்கினை ‘அரிதிலும் அரிதான’ வழக்குகள் என்ற வகையினத்தில் சேர்க்க முடியாது என்ற அளவோடு நீதிபதி நிறத்திக் கொண்டு விடுகிறார்.

ஆகவே, நளினி உள்ளிட்ட எழுவருமே குற்ற மற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் ஏனைய 19 பேருடன் இவர்களையும் சேர்த்து விடுதலை செய்திருக்க வேண்டும். இராசீவ் கொலை வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள் என்ற செய்தி ‘தேசத்தின் கூட்டு உளச்சான்றை அதிர்ச்சியடையச் செய்திருக்கும் என்பதால் அப்படிச் செய்ய வில்லையா? இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை வழங்க ஒரு காரணமாக உச்ச நீதிமன்றம் எடுத்துக் காட்டிய ‘தேசத்தின் கூட்டு உளச் சான்று’ இராசீவ் கொலை வழக்குத் தீர்ப்பிலேயே வெளியில் சொல்லாமல் வேலை செய்திருப்பது புரிகிறது.

உண்மையில் 26 எதிரிகளுமே விடுவிக்கப்பட்டிருந்தாலும், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து விட்டதாக நீதிபதிகளோ அவர்கள் மதிக்கும் தேசிய உளச் சான்றோ பதறித் துடிக்க வேண்டியிருந்திருக்காது. ஏனென்றால் அப்போதும் 15 பேர் மீதான குற்றச்சாட்டு மிச்சமிருக்கும். இவர்களில் மூவர் தேடப்படுவதாலும் பன்னிருவர் மாண்டுபோய் விட்டதாலுமே கையில் கிடைத்த 26 பேரில் ஒரு ஏழு பேரையாவது தண்டித்து நிறைவுகாண வேண்டுமென்பது நீதியின் உளச்சான்றைக் கொன்றுவிடும். இறுதியாகப் பார்த்தால் இந்த வழக்கில் நடந்திருப்பது இதுவே.

உச்ச நீதிமன்றம் எழுவருக்கான குற்றத் தீர்ப்பை உறுதி செய்தபோது நால்வருக்குத் தூக்குத் தண்டனையையும் உறுதி செய்து விட்டது. நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனை தேவையில்லை என்பது நீதிபதி தாமசின் கருத்து. மற்ற இருவரும் இதை ஏற்கவில்லை. மொத்தத்தில் நால்வருக்குமான தூக்குத் தண்டனையை உறுதி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் முன்வைத்த காரணங்களைத் திரும்பிப் பார்ப்போம்.

கொலைத் தண்டனை விதிப்பதற்குரிய அரிதிலும் அரிதான வழக்கு எது என்பதை முடிவு செய்வதற்குக் குற்றம், குற்றவாளி ஆகிய இரு காரணிகளையும் உரிய கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிடுகின்றனர். குற்றவாளியின் தன்மையைப் பொறுத்த வரை, கொலைத் தண்டனை தொடர்பான பச்சன்சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சுட்டப்படும் மூன்று காரணிகளை அவர்கள் பட்டியலிடுகின்றனர்.

(1) குற்றஞ்சாட்டப்பட்டவரின் வயது; இளம் வயதினராகவோ, முதியவராகவோ இருப்பின் கொலைத் தண்டனை தவிர்க்கப்பட வேண்டும்.
(2) குற்றஞ்சாட்டப்பட்டவர் வன்முறைக் குற்றச் செயல்கள் புரிந்து சமூகத்திற்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்க மாட்டார் என்னும் நிகழ்தகவு (வாய்ப்பு).
(3) குற்றஞ்சாட்டப்பட்டவர் மற்றொருவரின் கட்டாயத்தினாலோ மேலாதிக்கத்தினாலோ செயல்பட்டார் என்பது.

நீதிபதி தாமஸ் இராசீவ் காந்தி கொலை வழக்கில் சதிக் குற்றவாளிகளைப் பொதுவாக நான்கு வகையினராகப் பிரிக்கலாம் என்கிறார்:
முதலாவதாக, இராசீவ் காந்தியைப் படுகொலை செய்ய முடிவெடுத்தத் தீவிர மையக் கருவைச் சேர்ந்தவர்கள். இரண்டாவதாக, இந்த வளையத்தில் சேர்ந்து சதிச் செயலில் முனைப்புடனும் மேற்பார்வை வகையிலும் மற்றவர்களைப் பங்காற்றத் தூண்டியவர்கள். மூன்றாவதாக, கொள்கையூட்டத்தின் விளைவாகவோ வேறுவழியிலோ தூண்டப்பட்டதால் சதியில் இணைந்தவர்கள். நான்காவதாக, உள்ளபடியே கொலைச் செயலில் பங்கேற்ற சதிகாரர்கள்.

முதல் வகையினர் என்று வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா, சிவராசன், திருச்சி சாந்தன் ஆகியோரின் பெயர்களை நீதிபதி குறிப்பிடுகிறார். இயல்பாகவே இவர்கள் (பிடிபட்டுக் குற்றத் தீர்ப்பு பெற்றால்) கொலைத் தண்டனைக்குரியவர்கள் என்பது நீதிபதியின் கருத்து. சாந்தன், முருகன், அறிவு ஆகியோர் இரண்டாம் வகையினர் என்று நீதிபதி கணிக்கிறார். அவர் நளினியை நான்காம் வகையில் சேர்க்கிறார். இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோரை மூன்றாம் வகையில் சேர்த்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கிறார். நீதிபதியின் இந்த வகைப்படுத்தலை அப்படியே ஏற்றுக் கொண்டால், முதல் வகைக்கும் இரண்டாம் வகைக்கும் தண்டனையில் வேறுபாடு காட்ட வேண்டாமா? என்பது நம் கேள்வி.

முதல் வகையினர் கொலைத் தண்டனைக்குரியவர்கள் என்று நீதிபதி கருதினாலும், அவர்கள் கையில் கிடைக்காததால் இரண்டாம் வகையினர்க்கு அந்த உச்சத் தண்டனையை வழங்குவதாகத் தோன்றுகிறது. முதல் வகையினர் திட்டம் வகுத்தவர்கள், இரண்டாம் வகையினர் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்களே என்னும் போது, இரண்டு வகையினருக்குக் கொலைத் தண்டனை வழங்குவது இந்த வகைப்படுத்தலையே பொருளற்றதாக்கி விடுகிறது.

ஆக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எழுவரைக் குற்றவாளிகளாகக் கருதிய வகையிலும், நால்வருக்குத் தூக்குத் தண்டனையை உறுதி செய்த வகையிலும் பிழையானது. கொலை செய்யப்பட்டவர் முன்னாள் தலைமை அமைச்சர், உலகறிந்த தேசியத் தலைவர், அரசியல் செல்வாக்கு மிக்க நேரு குடும்ப வழித்தோன்றல் என்ற காரணிகளும், அவர் கொலை செய்யப்பட்ட விதமும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியும் பிற விளைவுகளும் நீதிபதிகளின் உள்ளத்தில் ஓங்கி நின்றதால்தான் இந்தப் பிழை நேர்ந்தது என்பதற்கான அகச் சான்றுகள் அவர்களின் தீர்ப்பிலேயே கானக் கிடைக்கின்றன.

காய்தல் உவத்தலற்ற நீதியின் தேவைகளை நிறைவு செய்யத் தவறிவிட்ட தீர்ப்புகளினால் தூக்குத் தண்டனையிலும் ஆயுள்தண்டனையிலுமாக நீண்ட பல ஆண்டுகளைக் கொடுஞ்சிறையில் கழித்துவிட்ட ஏழு மாந்த உயிர்களுக்கு மீட்சி தேடும் கோரிக்கை இது : எழுவரையும் விடுதலை செய்க!

இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161இன்படி தமிழக ஆளுநரின் பெயரால் தமிழக அரசுக்கும், உறுப்பு 72இன் படி குடியரசுத் தலைவரின் பெயரால் இந்திய அரசுக்கும் உள்ளது. ஏற்கெனவே நளினிக்கு மட்டும் தமிழக அரசு பரிந்துரைத்தவாறு தமிழக ஆளுநர் தண்டனைக் குறைப்பு வழங்கி விட்டார். ஆனால், ஆயுள் தண்டனையிலிருந்து அவருக்கு விடுதலை வந்தபாடில்லை. தூக்குத் தண்டனையிலிருக்கும் மூவரும் எத்தனையோ முறை ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் விண்ணப்பம் எழுதியும் மறுமொழி ஏதுமின்றித் தூக்குக் கைதிகளாகவே தொடர்கின்றனர். அரசமைப்புச் சட்ட உறுப்பு 161ஐப் பயன்படுத்தி இவர்களுக்கு விடுதலை வழங்குவது பற்றித் தமிழக அரசுக்கு இருந்துவரும் சில குழப்பங்களைப் போக்க முயல்வோம்.

கடந்த 2006ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு முழுமையாகப் பத்தாண்டு கழித்து முடித்த ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய ஆணையிட்டது. அரசமைப்புச் சட்ட உறுப்பு 161ஐப் பயன்படுத்தியே இவ்வாறு செய்யப்பட்டது. அப்போது நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் பதினைந்து ஆண்டுக்கு மேல் கழித்து முடித்திருந்தனர் என்றாலும் விடுதலை செய்யப்படவில்லை. இதற்கு அரசு காட்டிய காரணம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் விதி 435 (அ) (1) இதைத் தடுக்கிறது என்பதே. இந்தப் பிரிவின்படி மைய அரசின் காவல்துறை நிறுவனம் ஒன்று புலனாய்வு செய்திருக்குமானால் அந்த வழக்கில் மைய அரசைக் கலந்தாய்வு செய்த பிறகே தண்டனைக் குறைப்பு வழங்க முடியும்.

இராசீவ் கொலை வழக்கு மையப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ) புலனாய்வு செய்த ஒன்று என்பதால் தமிழக அரசு தன்னிச்சையாக இந்த நால்வரையும் விடுதலை செய்ய முடியாது என்பதாகும். ஆனால் இந்தச் சட்டப் பிரிவின்படி தமிழக அரசு இந்திய அரசைக் கலந்து கொண்டதா? இந்திய அரசு என்ன சொல்லிற்று? இதற்கெல்லாம் விடை கிடைக்கவில்லை. இது ஒருபுறமிருக்க அரசமைப்புச் சட்ட உறுப்பு 161ஐப் பயன்படுத்தித் தண்டனைக் குறைப்பு வழங்குவதற்குத் தமிழக அரசு இந்திய அரசை கலந்து கொள்ளத் தேவையில்லை என்பதே உண்மை. ஏனென்றால் அரசமைப்புச் சட்டம் வழங்கும் அதிகாரத்தைக் குற்ற நடைமுறைச் சட்டத்தின் எந்தப் பிரிவாலும் மறுக்கவோ, குறுக்கவோ முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் என்பது ஓர் ஆட்சி மன்றச் சட்டம் ஆகும்.

ஆட்சிமன்றச் சட்டத்தைக் காட்டிலும் அரசமைப்புச் சட்டமே முதன்மையானது என்பது ஓர் அடிப்படை கொள்கையாகும். பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது. தமிழக அரசு குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளைப் பயன்படுத்தித் தண்டனைக் குறைப்பு வழங்க முற்படும்போதுதான் விதி 435 போன்ற கட்டுத் திட்டங்களைப் பற்றி அது கவலைப்பட வேண்டும். அரசமைப்புச் சட்ட விதியைப் பயன்படுத்தும் போது இவ்வாறு கவலைப்படத் தேவையில்லை.

தமிழக அரசின் நிலைப்பாட்டில் மற்றொரு முரண்பாட்டையும் சுட்டிக் காட்ட வேண்டும். அரசமைப்புச் சட்ட உறுப்பு 161ஐப் பயன்படுத்தி 10 ஆண்டு கழித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்குக் குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளைக் குறுக்கிட அனுமதித்தால் அநேகமாய் யாரையுமே விடுதலை செய்ய முடியாமற் போக நேரிடும். ஏனென்றால் குற்றநடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433-அஇன்படி மரண தண்டனைக்குப் பதில் ஆயுள்தண்டனை பெற்ற கைதிகள் குறைந்தது 14 ஆண்டுகள் முழுமையாகச் சிறையில் கழித்திருக்க வேண்டும். இந்த விதி இருந்த போதிலும் அரசமைப்புச் சட்டத்தின் 161ஆவது உறுப்பு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி 10 ஆண்டு கழித்தவர்களைத் தமிழக அரசு விடுதலை செய்வதில் சட்டத் தவறு எதுவுமில்லை. ஏனென்றால் குற்றவியல் நடைமுறைச் சட்ட விதி 433-அ எவ்வகையிலும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161ஐக் கட்டுப்படுத்தாது. 1980ஆம் ஆண்டு மாருராம் வழக்குத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இதனைத் தெளிவாக்கி விட்டது.

மற்றவர்களின் விடுதலையைப் பொறுத்து 161க்கு 433-அ எப்படித் தடையாகாதோ, அதே போல் நளினி உள்ளிட்ட நால்வரின் விடுதலைக்கும் 161க்கு 435 தடையாகாது. இது தொடர்பாகத் தமிழக அரசின் சட்டத்துறை அரசுக்கு வழங்கியுள்ள அறிவுரை தவறானது மட்டுமல்ல, மாநில அரசின் அதிகாரத்தை விட்டுக் கொடுக்கக் கூடியதும் ஆகும். கூடுதல் அதிகாரங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் மாநில ஆட்சியாளர்கள் இருக்கிற அதிகாரத்தையும் விட்டுக் கொடுக்க ஒப்புக் கொள்ளலாமா? ஒரு புறம் அரசமைப்புச் சட்டம் 161இன் படி விடுதலை வழங்குவதில் குற்றநடைமுறைச் சட்ட விதியை குறுக்கீடாகக் காட்டும் ஆட்சியாளர்கள் அதே குற்ற நடைமுறைச் சட்டத்தின்படியாவது விடுதலை வழங்குகிறார்களா என்றால் அதுவுமில்லை.

நளினி உள்ளிட்ட நால்வரும் குற்றவியல் நடை முறைச் சட்ட விதிகளின்படி ஆயுள் கைதிகளின் முன் விடுதலைக்கான அறிவுரைக் கழகத் திட்டத்திற்கு முழுத் தகுதி படைத்தவர்கள். இவர்கள் தொடர்பாக அறிவுரைக் கழகத் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்று காட்டுவதற்காகப் பங்குனி இதழின் ஆசிரிய உரையில் ஜெயக்குமார் தொடர்பான ஆவணங்களை எடுத்துக் காட்டியிருந்தோம். இப்போது நளினி தொடர்பாகவே இத்திட்டம் எவ்வாறு செயல்பட்டுள்ளது எனக் காண்போம்.

கடந்த 28.12.2006இல் வேலூரில் கூடிய அறிவுரைக் கழகம் நளினியை முன்விடுதலை செய்வது குறித்து ஆய்வு செய்து கருத்துத் தெரிவித்துள்ளது. அந்தக் கருத்து இதுதான்:

(1) செய்த குற்றம் மிகக் கொடியது. அதில் உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பொது மக்களுமாகிய பலருடன் கூட நாட்டின் முன்னாள் தலைமை அமைச்சர் படுகொலை செய்யப்பட்டார்.
(2) முன்கூட்டித் திட்டமிட்டு நிகழ்த்திய குற்றச் செயலில் இவர் (நளினி) முனைப்புடன் பங்கு வகித்துள்ளார்.
(3) இவர் (நளினி) விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான எண்ணமுள்ளவராக இருந்துள்ளார். இப்போதும் சிக்கல் நீடிக்கிறது. குறிப்பாக, சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் பால் இவரது பற்றுதல் குறைந்து விட்டதா என்பதும், அவர்களின் நோக்கத்துக்கு ஆதரவாக இவர் மீண்டும் சட்டப்புறம்பான செயலில் ஈடுபட மாட்டாரா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. எனவே, முன்விடுதலைக்கு இவரது வழக்கைக் கருதிப் பார்க்கவில்லை.

செய்த குற்றம் மிகக் கொடியது என்பதையும் இலங்கையில் தொடர்ந்து சண்டை நடப்பதையும் கண்டுபிடித்துச் சொல்ல அறிவுரைக் கழகம் எதற்கு? இராசீவ் கொலைச் சதியில் நளினி சிக்கிக் கொண்டது பற்றி உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி தாமஸ் கூறியதை மேலே எடுத்துக் காட்டினோம். அதனுடன் நளினியின் பங்கு பற்றிய அறிவுரைக் கழகத்தின் கொடுஞ்சித்திரிப்பை ஒப்புநோக்கலாம். சிறையில் நளினி பெற்றுள்ள கல்வி (எம்.சி.ஏ), அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றம், அவரது மறுவாழ்வுக்கான வாய்ப்புகள், தாய் - தந்தையைப் பிரிந்து அயல்நாட்டில் வாழ்ந்து வரும் குழந்தையின் வருங்காலம் ஆகிய பொருத்தப்பாடுள்ள கூறுகளில் எதனையும் அறிவுரைக் கழகம் கருதிப் பார்த்ததற்கான பதிவே இல்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நளினி குறித்து நீதிபதி தாமஸ் கூறியதை அறிவுரைக் கழகத்துக்கும் அரசுக்கும் நினைவுபடுத்த வேண்டும்: “நாம் அலட்சியம் செய்யக் கூடாத இன்னொரு காரணியும் உள்ளது - இவர் ஒரு சிறிய பெண் குழந்தையின் தாய். சிறையில் பிறந்த அக் குழந்தைக்குத் தாயின் சீராட்டு கிடைத்திருக்காது. நீதிக்குத் தாய்தந்தை தெரியாது என்பது உன்னதக் கொள்கைதான். ஆனால், தண்டனையைத் தீர்மானிப்பதில் அது வல்லாட்சி புரிய விட முடியாது. அந்தச் சிறு குழந்தையின் தந்தைக்கு நாம் கொலைத் தண்டனையை உறுதி செய்திருக்கும் நிலையில், அதன் தாயைத் தூக்கிலிருந்து காப்பாற்றும் முயற்சி நீதியறத்துக்குப் புறம்பாகாது. குற்றமறியாத குழந்தை மீது அனாதை வாழ்வு சுமத்தப்படுவதைத் தடுத்து அதனைக் காக்க இம்முயற்சி உதவும்.” (1999 பக்கம் 788)

நளினிக்குத் தூக்குத் தண்டனை விதிக்காமலிருக்க நீதிபதி தாமஸ் அன்று கூறிய இந்த நியாயம்... 17 ஆண்டுச் சிறைப்பாட்டுக்குப் பின் அவரை விடுதலை செய்ய இன்று பொருந்தாதா? நளினியும் மற்றவர்களும் இன்னும் 10 ஆண்டோ 20 ஆண்டோ சிறையில் கழித்தபின் அறிவுரைக் கழகம் கூடினாலும், அப்போதும் குற்றம் கொடியதாகத் தான் கருதப்படும். கொல்லப்பட்டவர் முன்னாள் தலைமை அமைச்சராகத்தான் இருப்பார். இலங்கையில் சண்டை நடந்து கொண்டிருக்குமா என்பது மட்டும்தான் தெரியாது. அப்படியானால் இவர்கள் சாகும்வரை சிறையிலிருக்க வேண்டும் என்பதுதான் அறிவுரைக் கழகத்தின் கருத்தா? அரசின் முடிவும் இதுதானா? பிறகு ஏன் முன் விடுதலைக்கான அறிவுரைக் கழகக் கருத்தாய்வு, பரிந்துரை, அரசாணை என்ற சடங்குகள் எல்லாம்?

இதுதான் அரசின் நிலைப்பாடு என்றால், இதை மாற்றிக் கொள்ளப் போவதும் இல்லை என்றால், இது அரசியல் நிலைப்பாடாக இருக்க முடியுமே தவிர, மனித உரிமைப் பார்வையும் சீர்திருத்தக் கண்ணோட்டமும் தோய்ந்த சட்ட நிலைப்பாடாக இருக்க முடியாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161ஐப் பயன்படுத்தி ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது போலவே, தூக்குக் கைதிகளாகவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அறிவு, சாந்தன், முருகனையும் விடுதலை செய்ய முடியும், செய்ய வேண்டும். அவர்கள் 17 ஆண்டு தனிமைச் சிறையில் கழித்து முடித்தபின் ஆயுள் தண்டனை கழிக்கத் தொடங்குவது என்பது எண்ணிப் பார்க்கவியலாத கொடுமை. எனவே எழுவருக்கும் ஒரே தீர்வுதான் - விடுதலை!

அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும். 8 ஆண்டு சிறையில் கழித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாமும் வலியுறுத்துகிறோம். இந்தக் கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்கும் என நம்புகிறோம். அதே போது இந்தச் சிறப்பு அறிவிப்பிலிருந்து எக் காரணத்தை முன்னிட்டும், யாரையும் விலக்கிவிட வேண்டாம் எனக் கோருகிறோம். குறிப்பாக, ஏதாவது சாக்குபோக்குச் சொல்லி, இல்லாத பொல்லாத சட்ட விதிகளைத் துணைக்கழைத்து நம் எழுவருக்கு மட்டும் அது பொருந்தாமல் செய்துவிட வேண்டாம்.

எழுவர் விடுதலைக்குச் சட்டப்படியோ நியாயப்படியோ எவ்விதத் தடையுமில்லை என்பதால் இனியும் காலந்தாழ்த்தாமல் இதைச் செய்யக் கோருகிறோம். தமிழக அரசே! பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, செயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச் சந்திரன் ஆகிய எழுவரையும் உடனே விடுதலை செய்க!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com