Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
ஆகஸ்டு 2008
கடல் மேல் இறக்க வைத்தான்
- சிவா


ஆறுகாட்டுத் துறை - நாகை மாவட்டம் வேதாரண்யம் (மரைக்காடு) நகரத்திலிருந்து சற்றொப்ப ஆறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கடலோரச் சிற்றூர். இவ்வூர் மீனவர்கள் என்றும் போலவே அன்றும் - 11-07-2008 வெள்ளி இரவு - மீன் பிடிக்கச் சென்றனர். முரளி (20), நாராயணசாமி (22), வாசகன் (24) மூவரும் முரளிக்குச் சொந்தமான படகில் சென்றனர். அது ‘லம்பார்டு இஞ்சின்’ பொருத்திய கண்ணாடியிழைப் படகு. வழக்கம் போல் வலையைக் கடலுக்குள் வீசி விட்டு உணவு முடித்து மூவரும் உறங்கிப் போயினர். பெரிய கப்பல் ஒன்றின் பக்கத்தில் அவர்களின் படகு நின்றிருந்தது. ஏதோ ஓசை கேட்டுத் திடீரென்று விழித்துப் பார்த்தபோது.... ‘ஐயோ, சிலோன் நேவி!’

Fisherwomen சிங்களக் கடற்படையினர் தங்களை நோக்கி விரைந்து வரக் கண்டு மிரட்சியுற்று மூவரும் கைகளைத் தூக்கிக் காட்டினர். அதற்குள் சிங்களப் படையினர் சரமாரியாகச் சுட்ட 21 குண்டுகள் சீறி வந்து தாக்க, வாசகன் உடல் சிதைந்து அக்கணமே பிணமானார். நாராயணசாமியின் கையிலும் இடுப்பிலும் தொடையிலும் குண்டுகள் பாய, அவர் சிறிது நேரம் போராடி உயிரிழந்தார். கையிலும் மார்பு ஓரத்திலும் குண்டடிபட்டு வீழ்ந்த முரளி மட்டும் சாகவில்லை. கொலைவெறிச் சிங்களப் படையினர் அருகில் வந்து படகில் குதித்து மூவரும் வீழ்த்தப்பட்டதை உறுதி செய்து கொண்ட பிறகுதான் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

கடுங்காயங்களோடு உயிர் பிழைத்த முரளி தன் கைபேசியைக் கொண்டு ஊருடன் தொடர்பெடுத்து நடந்தவற்றைத் தெரியப்படுத்தினார். நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போதும் முரளி உடல் வலியையும் சோர்வையும் மீறிப் படகின் இஞ்சினை இயக்க முயன்று.... முடியாமல் சாய்ந்து விட்டார். செய்தியறிந்து ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் படகுகளில் புறப்பட்டு அந்தப் பேரிருளில் முரளியின் படகைத் தேடிச் சென்றனர். முரளி சொல்லியிருந்த அடையாளங்களை வைத்து, குறிப்பாக ஒரு பெரிய கப்பலின் அருகில் (அது சேதுக் கால்வாய் தோண்டுவதற்கான கப்பல்) படகு நிற்பதை வைத்து நெருங்கிச் சென்றவர்கள்.... உடைந்த படகிலிருந்து வந்து கொண்டிருந்த முனகல் ஒலி கேட்டுக் கண்டுபிடித்து விட்டனர்.

இரண்டு பிணங்களோடும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முரளியோடும் உடைந்த படகோடும் அவர்கள் விரைந்து கரைசேர்ந்த போது விடிந்து கொண்டிருந்தது. கீழ்வானத்தில் சீறிச் சிவந்து கதிரவன் எழுந்து கொண்டிருந்தான். வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து முரளியைத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேதாரண்யம் மருத்துவமனையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் மீனவர் கூட்டம் அலைமோதி நின்றது. துயரத்தின் அழுத்தம் சொற்களாய் வெடித்த போது...

“இதக் கேக்க நாதியில்லையா?”

“நாங்க புடிச்ச மீன்களத் திருடுனாங்க. வலைகள அறுத்தாங்க. பாவிங்க இப்ப எங்கப் புள்ளைகளச் சுட்டுப் பொசுக்கிட்டாங்களே!”

“மூணு இளங்குருத்துக்களை சாச்சுட்டாங்களே! இன்னும் கல்யாணங்கூட கட்டலையே!”

“மீன்காரர்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?”

“நாங்க கடலுக்குப் போகாம வேற எங்க போய்ப் பொழைக்கிறது? நம்ம எல்லைக்குள்ள மீன்பிடிச்சாலும் இப்படிச் சுடுறாங்களே!”

“இந்தியாவோட கடலோரக் காவல்படை, கடற்படை எதுவும் எங்க புள்ளைங்களக் காப்பத்தலியே!”

அழுது புலம்பியவர்கள் சிலர். பேச நா எழாமல் வாயடைத்து நின்றவர்கள் பலர். அனைவரின் சோகத்திலும் கோபம் கலந்திருந்தது. கொலைகாரச் சிங்களப் படையினர் மீதும், தொடர்ந்து நடைபெறும் இந்தக் கொடுமையைத் தடுக்கத் துப்பில்லாத இந்திய அரசின் மீதும், கோபத்தால் குமுறினார்கள். ஒரு சிலர் தமிழக அரசையும் சாடினர். 12-07-2008 சனிக்கிழமை முழுக்க அரசியல் தலைவர்கள் ஆறுதல் சொல்வதற்காக ஆறுகாட்டுத் துறைக்குச் சென்று கொண்டிருந்தார்கள். தமிழக அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரோடும் சட்டப் பேரவை உறுப்பினரோடும் கட்சிப் பொறுப்பாளர்களோடும் சென்று... இறந்தவர்கள், காயமடைந்தவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறித் தமிழக அரசின் சார்பில் இழப்பீட்டுத் தொகையும் வழங்கினார்.

12-07-2008 சனி மாலை தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு வேதாராண்யம் வந்து, செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். சிங்களக் கடற்படை அட்டூழியத்தைத் தடுக்கச் செய்ய வேண்டியவை பற்றி விளக்கினார். ஒரு நாட்டின் மீனவர்களைப் பிறிதொரு நாட்டின் கடற்படை சுட்டுக் கொல்வது - அதுவும் திரும்பத் திரும்ப இதையே செய்வது - வேறெங்குமில்லாத கொடுமை. இந்தியக் கடலோரக் காவல்படையாலோ கடற்படையாலோ இதைத் தடுக்க முடியவில்லை. இந்தியப் படை இதைத் தடுக்க முயன்றதுகூட இல்லை என்பதே உண்மை. தமிழக அரசினாலும் அரசியல் தலைவர்களாலும் செய்ய முடிந்ததெல்லாம் இந்திய அரசை வேண்டிக் கொள்வது, வலியுறுத்துவது, மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது, அதிகம் போனால் எச்சரிப்பது என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. முன்பொரு முறை இதே போன்ற படுகொலை நிகழ்ந்த போது ‘மீனவர் கைகள் மீன்பிடித்துக் கொண்டு மட்டும் இருப்பதற்கல்ல’ என்று தமிழக முதல்வர் எச்சரித்தார்.

முதல்வர் சொன்னதன் பொருள்... மீனவர்கள் திருப்பியடித்துத் தங்களைத் தற்காத்துக் கொள்வார்கள் என்பதாகத்தான் இருக்க முடியும். சுடுகிறவனை எதிர்த்துச் சுடுவதற்குக் கருவி வேண்டும். கருவிப் பயிற்சியும் வேண்டும். “ஆயுதம் ஏந்தட்டும் மீனவர் கைகள்!'' என்று அப்போதே தமிழ்த் தேசம் ஆசிரியவுரை தீட்டியது. சென்ற சூன் 8ஆம் நாள் ஈரோட்டில் நடைபெற்ற தமிழக எல்லைக்காப்பு எல்லைமீட்பு மாநாட்டிலும் தமிழக மீனவர் தற்காப்புப் படை அமைக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தித் தீர்மானம் இயற்றினோம்.

கச்சத்தீவு குறித்து: கச்சத் தீவை மீட்போம்! என்று மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருப்பதால் மட்டும் அதை மீட்டுவிட முடியாது. 1974ஆம் ஆண்டு இந்திரா காந்தியும் சிறிமா பண்டாரநாயக்காவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இந்திய அரசு நீக்கம் செய்யக் கோர வேண்டும். இந்தக் கோரிக்கையை அது ஏற்காவிட்டால் வரிகொடா இயக்கம் உள்ளிட்ட தீவிரமான போராட்டங்கள் நடத்த வேண்டும். இந்திய அரசு அடிப்படையில் சிங்கள ஆதரவு அரசாகவும் தமிழர் எதிர்ப்பு அரசாகவும் இருப்பதால் மிகக் கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். நடத்த நம்மால் முடியாது என்றால் கச்சத் தீவை மீட்பது பற்றி உதட்டளவில் மட்டுமே பேசிக் கொண்டிருக்கலாம். வேறொன்றும் செய்ய முடியாது.

இந்த விளக்கங்களுக்கு மேல் செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கும் தோழர் தியாகு விடையளித்தார். மறுநாள் 13.07.2008 காலை மரைக்காட்டில் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் நடத்திய ஈரோட்டு மாநாட்டுத் தீர்மான விளக்கக் கூட்டத்திலும் மீனவர் படுகொலையைக் கண்டித்துப் பலரும் பேசினர். முந்தைய நாளில்கூட சிங்களக் கடற்படையினர் வானை நோக்கிச் சுட்டு நம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துரத்திய நிகழ்வைச் சுட்டிக் காட்டினர். நிறைவுரை ஆற்றிய ததேவிஇ பொதுச் செயலாளர்... மீனவர்களைப் பாதுகாக்கவும் கச்சத் தீவை மீட்கவும் செய்ய வேண்டியது என்ன என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

அன்று மாலை 4.30 மணியளவில் தோழர் தியாகு, ததேவிஇ அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சிவ. காளிதாசன், மோ. ஸ்டாலின் நினைவுப் படிப்பகத் தோழர் அமரன், தமிழ்த்தேசம் வாசகர் வட்டத் தோழர்கள் ஆறு. வேதரெத்தினம், பொன். சிதம்பரம், இரெ. இராம கிருட்டிணன் (மகஇக), தமிழ் ஓசை - தமிழ்த்தேசம் முகவர் சிவ. இராமலிங்கம் ஆகியோர் ஒரு குழுவாக ஆறுகாட்டுத்துறைக்குப் புறப்பட்டோம். சுட்டுக் கொல்லப்பட்ட நாராயணசாமியின் வீட்டுக்கு முதலில் சென்றோம். அப்பா சுப்பையன், அம்மா செல்வி, அண்ணன் முருகானந்தம் (27) ஆகியோரைப் பார்த்து ஆறுதல் சொன்னோம். அம்மாவால் நேராக நிற்கக்கூட முடியவில்லை. அப்பா, அண்ணன் இருவருக்கும் கூலிக்கு மீன் பிடிக்கப் போவதுதான் தொழில். முருகானந்தம் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு எங்கேயாவது வேலை கிடைக்குமா என்று அப்பா பரிதாபமாய்க் கேட்கிறார். கொலையுண்ட மகனைப் பற்றி வலியும் பெருமையுமாய்ச் சொல்கிறார்:

“என் சின்ன மகன்தான் இந்தக் குடும்பத்திற்கு அதிகம் உழைத்தவன். அவனால் வேலை செஞ்சு மூணு குடும்பத்தக் காப்பாத்த முடியும். அவ்வளவு பலசாலி, பாவிங்க அவன் உடம்பையே சிதைச்சுட்டானுங்களே!”

அண்ணன் முருகானந்தம் சொல்கிறார் : “என் தம்பியால் கடலில் நீந்திக் கூட வர முடியும், தெரியுமா? அவ்வளவு தெறமை உள்ளவன், பலமுள்ளவன்...”

சூழ்ந்து நிற்கும் மீனவர்களும் ஆளுக்கு ஆள் பேசத் தொடங்குகிறார்கள் :
‘சிங்களவனுங்க வெறும் பொடிப்பசங்க. நின்னு மோதினா ஒரு ஆளு நாலு பேரை அடிப்போம். ஒரே அறைச்சல்ல சுருண்டுருவானுங்க. அவனுங்ககிட்ட ஆயுதம் இருக்கு. கொஞ்சம் அசைஞ்சாக்கூட சுட்டுடுவானுங்க. அதனால்தான் இப்படிப் பலியாகிறோம்.”

“திருப்பதிக்கு வந்த மகிந்த இராசபட்சே புலிகள் சுட்டுட்டு எங்கமேலப் போடுறாங்கன்னு சொல்றான். புலிகள் எங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ததில்லை. செய்யவும் மாட்டாங்க. புலிகள் இந்தப் பக்கம் இருந்தா சிங்களக்காரன் எட்டிக்கூட பார்க்க மாட்டான். புலிகள் எங்களுக்கு உதவி செய்வார்கள். அவங்களால எங்களுக்குப் பாதுகாப்புதான். ஆனால் இப்பல்லாம் அவங்க இந்தப் பக்கம் வருவதே இல்லை.”

நாராயணசாமியின் அம்மாவும் அண்ணனும் துயரம் தாளாமல் வீட்டுக்குள் அடைந்துவிட, அப்பாவிடம் மட்டும் விடைபெற்றுப் புறப்பட்டோம். அந்த நிலையிலும் அவர் “கலர் வாங்கிட்டு வர்றேன், சாப்பிட்டுப் போங்க” என்று சொன்ன போது நெகிழ்ந்து போனோம். வேண்டாம் என்று அவரது தோளைத் தொட்டு ஆற்றுப்படுத்தி விட்டுக் கிளம்பினோம். அடுத்து வடக்கே சென்று இரண்டு மூன்று தெரு கடந்து வாசகன் வீட்டை அடைந்தோம். அதிமுக மாவட்டச் செயலாளர் ஒ.எஸ். மணியன் உள்ளிட்ட சிலர் திண்ணையில் உட்கார்ந்திருந்தனர். நாங்கள் வந்திருப்பது தெரிந்ததும் எங்களை அழைத்து உட்கார வைத்துவிட்டுப் புறப்பட்டனர்.

வாசகனின் அப்பா பாலகிருட்டிணன், அண்ணன் முருகன், பாட்டி மற்றும் பலரும் சேர்ந்த பெரிய குடும்பம். அவர்களோடு ஊர் மக்களும் சேர்ந்து வாசகனைப் பற்றி நிறையப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களில் இருவர் - சிவலிங்கம், முருகன் - பொதுவாக மீனவர்களின் இப்போதைய நிலை குறித்து விரிவாகச் சொன்னார்கள். பலவும் எங்களுக்குப் புதிய செய்திகள் :

ஒரு விசைப்படகில் மீன்பிடிக்கப் போனால் குறைந்தது 15 ஆயிரம் ரூபாய்க்காவது மீன்பிடித்தாக வேண்டும். அதை விடக் குறைந்தால் கட்டுப்படியாகாது. இதற்காக இரண்டு மூன்று இரவுகள் கூட கடலிலேயே தங்க வேண்டியிருக்கும். இதற்குத் தகுந்த அளவில் அரிசி, தண்ணீர், வலை, உடை, எரிபொருள் எல்லாம் எடுத்துக் கொண்டு இஞ்சின் பொருத்திப் போவார்கள்.

“நாங்க ரொம்பப் படிக்கலன்னாலும் சிங்களன் வர்றத அவன் ‘போட்’ நம்பர வச்சுக் கண்டுபிடிச்சிருவோம். அதிவேகமா வர போட்டுக்குச் சிட்டுக் குருவின்னு பேரு. அவங்க வரும்போதே எங்க போட்டை நோக்கித் துப்பாக்கியை நீட்டியபடி வருவாங்க. வானத்தை நோக்கிச் சுட்டு பயமுறுத்துவாங்க. நாங்க எங்க படகுகளைக் கப்பல் பக்கம் கட்டிப் போட்டிருப்போம். இல்லன்னா ரெண்டு படகுங்கள நங்கூரம் பாச்சி நிறுத்தி வப்போம்.”

“ஆனால், சில நேரம் தண்ணீர் திசைமாறிப் போகும்போது எல்லை தாண்டிப் போகவும் வாய்ப்புண்டு. தெரிந்து திரும்பி வருவதற்குள் சுற்றி வளைத்து நிறுத்திடுவாங்க. சரின்னு கையை மேலே ஒசத்தி நிற்போம். அவங்க போட்டோட எங்க போட்டைக் கயிற்றால் கட்டிடுவாங்க. நாங்க கயிற்றப் பிடிச்சபடி நிக்கணும். எங்கள அசைய விட மாட்டாங்க. சிங்களத்துலதான் பேசுவாங்க.”

“எங்களப் பிடிச்சு அவங்க கப்பலுக்குக் கொண்டு போயி அடைச்சு வைப்பாங்க. எங்க போட்ல இருக்கும் உயர்தரமான மீனையெல்லாம் வாரி எடுத்துக்குவாங்க. வலைங்களையும் எடுத்துக்குவாங்க. அப்புறம் எங்கள்ட்ட ஒங்கள வுட்டுடுவோம், சுனாமியால எங்க சொந்தமெல்லாம் செத்துப் போச்சுண்ணு அதிகாரிகிட்ட சொல்லும்பாங்க. அடிப்பாங்க, ஓடுங்கடாண்ணு வெரட்டுவாங்க.”

“சில பேர்ட்ட வலை இருந்தா கடலுக்குள்ள அரைப் பட்டினி கிடந்து மத்தவங்கள்ட்ட வாங்கி சமாளிச்சு மீன் பிடிப்போம். இல்லேன்னா உயிர் பொழச்சதே போதும்னு வெறுங்கையோடு திரும்பிடுவோம்.”

முரளி, நாராயணசாமி, வாசகன் மூவரும் கடலில் எல்லை தாண்டிப் போனார்களா?

Thiyagu with fishemen family “இல்லவே இல்ல. நம்ம கடல் எல்லைக்குள்ள தான் வலை விரிச்சிருந்தாங்க. அதனாலதான் முரளியால செல்லுல எங்களோட பேச முடிஞ்சுது. இல்லாட்டி நாங்க தேடிப் போயிருக்கவும் முடியாது. முரளியை உசுராவும் மத்த ரெண்டு பேரப் பிணமாவும் கொண்டு வந்திருக்கவும் முடியாது.”

சிவலிங்கத்தின் தெளிவான பார்வை எங்களை வியக்க வைத்தது.

“தமிழர்கள் இலங்கையில் கொல்லப்படுறாங்க. அதுக்கு இந்தியா ஆயுதம் கொடுக்குது. அதே துப்பாக்கிதான் எங்க மக்களையும் சுட்டுக் கொல்லுது. நாங்க இந்திய மக்களா இல்லையாங்கறதுக்கு இந்திய அரசாங்கம்தான் பதில் சொல்லணும்.”

“கச்சத் தீவைத் தாரைவார்த்துக் கொடுத்தாங்க இந்திரா காந்தி. ஏன் கொடுத்தாங்க? சீனாவோட எல்லைச் சண்டை நடந்துச்சு. பாகிஸ்தானோட எல்லைச் சண்டை நடந்துச்சு. வங்க தேசத்தையே பிரிச்சுக் கொடுத்தாங்க. இலங்கையோட மட்டும் எந்தச் சண்டையும் இல்லாம கச்சத் தீவைக் கொடுத்துட்டாங்க. இது இந்தியாவோட மெத்தனப் போக்கு. தமிழன்னா அலட்சியம். நம்ம மேல இந்தியாவுக்கு அக்கறை இல்ல.”

சிங்களக் கடற்படை சுடும் போதெல்லாம் இலங்கை அரசு தமிழக மீனவர்கள் எல்லை கடப்பதாகச் சொல்வதும், இந்திய அரசு அதற்குத் தாளம் போடுவதும்... “நாங்க எல்லையே மீறிப் போனாலும் அதுக்காகச் சுடணுமா? உலகத்துல எங்கயாச்சும் இப்படி நடக்குதா? இதைக் கேட்கக் கூடவா இந்திய அரசால முடியாது? அப்புறம் என்ன அண்டை நாட்டு நட்புறவு?”

முருகன் சொல்கிறார் : “அடையாள அட்டை வச்சிருக்கோம். அதக் காட்டவும் செய்றோம். ஆனால் சிங்களன் நம்ம அட்டையைக் கிழிச்சுப் போட்டுருவான். இல்லன்னா கடல்ல வீசிட்டு, நீந்திப் போய் எடுத்துக்கச் சொல்வான். போட்ல வந்து குதிச்சவுடனே எங்க செல்போன், கத்தி, மீனு, வலை எல்லாத்தையும் புடுங்கிக்குவான். நம்ம போட்டையும் கவுக்கப் பார்ப்பான். சில நேரம் எங்காளுவ நீந்தியே கரைக்கு வந்ததெல்லாம் உண்டு. இதெல்லாம் சொன்னாப் புரியாது. பட்டாத்தான் தெரியும்.''

“தமிழக அரசு என்னா பண்ணுது? இப்ப கூட மதிவாணன் (அமைச்சர்) வந்து இலட்ச ரூவா தந்துட்டுப் போனாரு. அது சரி. ஆனா அடுத்து என்ன தீர்வு? நாங்க ஒரு ஆளு நாலுபேரை அடிக்கிற சக்தி இருக்கு. ஆனா அவனுவ துப்பாக்கியால சுட்டுப்புடுறானுவ! நாங்க என்ன செய்ய? இந்திய அரசும் தமிழக அரசும் எங்க பிரச்சனைக்கு முடிவு கட்டணும். இல்லன்னா நம்ம மீனவங்க கடல்ல செத்துப் போறதை அவங்களே விரும்பறதா அர்த்தம்.”

என்னதான் தீர்வு? சிவலிங்கம் சொல்கிறார் : “திருப்பித் தாக்கறதுதான். அதுக்கு ஆயுதம் வேண்டும். நம்ம புள்ளைங்க கையில துப்பாக்கி இருந்தா சிங்களன் கிட்ட வர மாட்டான். நாம வெறுங்கையா இருக்கறதாலதான் நம்ம மேல துப்பாக்கி தூக்கறானுவ. மீனை அள்ளிக்கிறானுவ. வலையை அறுக்கிறானுவ. நாங்க வேலைநிறுத்தம் செய்றோம். இன்னைக்குப் பாருங்க, யாரும் கடலுக்குப் போவல. எல்லா போட்டையும் மறிச்சுட்டோம். நம்ம அரசாங்கத்திலிருந்து வந்து ஆறுதல் சொல்றாங்க. செத்தவங்களுக்கு இலட்சம் ரூவா கொடுக்கிறாங்க. அதோட முடிஞ்சது. அப்புறம் வழக்கம்போல நாங்க துன்பப்பட வேண்டியதுதான்.”

இல்லை. இந்தத் துன்பம் தொடரத் தேவையில்லை. மீனவ மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள முடியும். அவர்களுக்கே இந்தத் தெளிவு இருக்கக் கண்டு வியந்தோம். ஆறுதல் சொல்லப் போனோம், அறிவுரை சொல்லத் தேவையில்லை என உணர்ந்தோம். நம் உறவு தொடரும் என்ற உறுதியோடு விடைபெற்றோம் - குருதியில் எழுதிய தமிழுறவு! வழியில் ஒரு மீனவர் வீட்டு வாசலில் பந்தல் போட்டிருந்தார்கள். ஏதோ சிறப்புக் கொண்டாட்டம்! ஒரு திரைப் பாடல் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது:

தரைமேல் பிறக்க வைத்தான் - எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இறக்க வைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்.

- சிவா
படங்கள் : அமரன்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com