Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
ஆகஸ்டு 2008
திரை புதிது! திசை புதிது! : நிலவன்

ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் விளைச்சலே! சாதனை புரிந்தாலும் சாக்கடையில் வீழ்ந்தாலும் அவன் கடந்து வரும் சமூகச் சூழ்நிலைகளே இறுதியாக அதனைத் தீர்மானிக்கின்றன. அடிப்படையில் எல்லா மனிதர்க்குள்ளும் அன்பும் ஈரமும் உண்டு. அதனால்தான் சமூகக் கண்ணோட்டத்தில் கொடியவர்களாய்த் தெரிகிறவர்களும் கூட நட்புக்கும் காதலுக்கும் அடிமையாகி விடுகிறார்கள். நட்பும் காதலும் உன்னதமானவைதான் எனினும் எல்லா நண்பர்களும் காதலர்களும் எப்போதும் உண்மையாய் இருந்து விடுவதில்லை என்பதே மெய். ஆனால், அது தருகிற வலி கொடிது. இதன் சிறந்த திரைப் பதிவு - சுப்ரமணியபுரம். அழகர், பரமன் எனும் இரண்டு இளைஞர்களை மையமாய்க் கொண்டு 1980ஆம் ஆண்டில் நடைபெறுவதாய் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இயல்பின் வேரைப் பிடித்து விட்டதனால் இப்படம் நம் மனதிற்கு மிக நெருக்கமாகிறது.

Subramaniyapuram ஐந்து நண்பர்கள் கொண்ட குழுவில் குறிப்பாக அழகரும் பரமனும் அடிதடிக்குப் பெயர் போனவர்கள். சித்தன் என்பவரின் ‘சவுண்ட் சர்வீஸ்’தான் அவர்களுக்கான குட்டிச்சுவர். கட்சியில் மாவட்டத் தலைவர் பதவிக்காகப் பசியோடு காத்திருக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினரின் தம்பி கனகுவுக்கு நன்றியோடிருப்பவர்கள். அப்பதவி கை நழுவிப் பழனிச்சாமி என்பவருக்குக் கிடைத்து விட்டதில் ஆத்திரமடைகிறார் கனகு. பழனிச்சாமியைக் கொல்லப் பரமனையும் அழகரையும் ஏவி விடுகிறார். காசியைத் துணையாக்கிக் கொண்டு நட்புக்காக அக் கொலையைச் செய்து முடிக்கின்றனர். இதன் நடுவில் கனகுவின் அண்ணன் மகள் துளசியும் அழகரும் காதலர்கள்.

கொலைக் குற்றத்தைத் தாமே ஏற்று நீதிமன்றத்தில் சரணடைகின்றனர். காப்பாற்றுவதாக வாக்குத் தந்த கனகு தந்திரமாக விலகுகிறார். சிறைக்குள் கிடைக்கிற பெரிய மனிதர் ஒருவரின் நட்பால், உதவியால் வெளிவருகின்றனர். தங்களை ஏமாற்றிய கனகுவைப் பழி தீர்ப்பது இவர்களின் இலக்காகிறது. உதவி செய்த சிறை நண்பருக்காக மற்றொரு கொலை என அவர்களின் வாழ்க்கை அடுத்த உயிருக்கும் சொந்த உயிருக்குமான போராட்டமாகிறது. இறுதியாக நண்பன் காசியின் துரோகத்தால் பரமனும், தன் காதலியின் ‘துரோக'த்தால் அழகரும் கொலை செய்யப்படுகின்றனர். இதுவே கதை!

2008ஆம் ஆண்டு மதுரை சிறைச் சாலையிலிருந்து வெளிவருகிற காசி மீதான கொலை முயற்சியே திரையில் முதல் காட்சி. அடுத்த காட்சி 1980இல்! அழகர், பரமனின் வீட்டுச் சூழல் முதலில் காட்டப்படுகிறது. ஊரில் பலருக்கு ஆபத்பாந்தவனாக இருப்பவர்கள் தமது வீட்டாருக்குக் கண்ணீரையே தருகின்றனர். நான்கு பேர் பயத்தால் கைதூக்கி மரியாதை செய்வதில் ஒரு ருசி. அதைக் காப்பாற்றி வைத்துக் கொள்வதில் கவனம். தம் வீரத்தைச் சாதாரண அடிதடிகளில் மட்டுமே வெளிப்படுத்திக் கொள்பவர்கள். வேறு நோக்கம் ஏதுமின்றி அதையே பொழுது போக்காய்க் கருதுகிற வாழ்க்கை!

காவல் துறை, வழக்கு இவற்றிலிருந்து அவ்வப்போது தம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் பின்னணி வேண்டும். இது இவ்வாழ்க்கையில்தானே வந்து சேரும், இல்லையா? கனகே இவர்களைப் பற்றிக் காவல் துறைக்குப் பெயர் குறிப்பிடாமல் தகவல் கொடுப்பதும் அவர்களை மீட்டுத் தம் ‘நன்றி’க்குரியவர்களாக்கிக் கொள்வதும் படத்தில் நுட்பமாகக் காட்டப்படுகிறது. இதுதான் அந்த எளிய, கோபக்கார இளைஞர்களுக்குள் நன்றியுணர்வை ஏற்றி விடுகிறது. முதன்முதலில் கத்தி தூக்குகிறார்கள். மாவட்டத் தலைவராய்ப் பொறுப்பேற்ற பழனிச்சாமியைத் தீர்த்துக்கட்டுகிறார்கள். சாதாரண அடிதடியில் தொடங்கிய வாழ்வு கொலையில் வந்து சேர்கிறது.

அழகர், பரமனின் சிறை வாழ்வில் அறிமுகமாகிற அந்தப் பெரிய மனிதர் சொந்தப் பகையால் இருவரைக் கொன்றுவிட்டு சிறை வந்தவர். மற்றக் கைதிகள் உடலுழைப்பில் ஈடுபட்டாலும் இவருக்கு மட்டும் அங்கே எந்தக் கட்டாயமும் இல்லை. அவர் இருக்கும் இடத்திற்கே எல்லாம் தேடி வருகின்றன. சொந்தபந்தத் தொடர்பின்மையாலும் அன்றாட நடைமுறையிலிருந்து துண்டிப்பதாலும் சிறையாளியை மீண்டும் பழைய வாழ்க்கைக்கான ஏக்கம் தொற்றிக் கொள்ளும். தன் தவற்றை அந்தத் தனிமையால் உணரச் செய்கிற இடமாகவே சிறையை நாம் கருதுகிறோம். ஆனால், அந்த மனிதர் அங்கே சகல வசதிகளோடும் வாழ்கிறார். தான் உள்ளிருந்தபடியே அழகர், பரமனை வெளியில் எடுக்கிறார். பரோலில் வெளிவந்து தான் கொல்ல முடியாமற்போன ஒருவனைக் கொன்றுவிட அவர்களின் உதவியை நாடுகிறார். அவரால் வெளியில் திரியும் இருவரும் அதற்கு உடன்பட்டுக் கொலையும் செய்து விடுகின்றனர்.

கொலை செய்யக் கேட்கும் போது அந்த ஒருவனைக் கொன்றால் போதும், மீத வாழ்க்கையை நான் நிம்மதி யாய்ச் சிறையில் கழிப்பேன் என்கிறார். சிறையில் இருப்பதில் அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. கொலை முடித்து வந்த அவர்களைப் பாராட்டுகிற நேரத்தில் வழக்குரைஞர் ஒருவர் வருகிறார். இவர்களுக்குப் பதிலாக வேறு நால்வரைச் சரணடையச் செய்து விட்டதாகவும், விடுப்பு முடிந்து சிறைக்குச் சென்றுவிடும்படியும் தம் ‘வழக்குரைஞர் பணி’(?)யைச் செய்துவிட்டுப் புறப்படுகிறார். திருவிழாக் கொண்டாட்டக் காட்சிகளில் மண்ணின் மணம் வீசுகிறது. இளைஞர்கள் வாழும் முறையில் திருவிழாவில் என்னென்ன செய்வார்களோ அத்தனையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அழகர் கூட்டத்துக்குள் துளசியைத் தேடிக் கண்டுபிடிப்பது கவனமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்தத் திருவிழாச் சூழலில் காதல் நெஞ்சம் வேறு எதைத் தேடும்? திருவிழாக் கமிட்டித் தலைவரான பெரிய மனிதரிடம் இருக்கிற கீழ்த்தரமான அழுக்குகள் போகிறபோக்கில் காட்டப்படுகின்றன. அவர் தன் சின்ன வீட்டிலிருந்து தப்பிக்க வழியின்றி சாக்கடையில் விழுந்து புரண்டு தப்பிப்பது நல்ல குறியீடு. அடுத்த நாள் காலை திருவிழாவுக்கு தோரணையோடு மீசை தடவி வருகிறார் - அந்தப் ‘பெரிய மனிதர்'.

இறப்பு வீட்டில் அழகர், பரமன் செய்கிற கொலை தமிழ் சினிமா கண்டிராத ஒன்று. நம் கதாநாயகர்கள் எத்தனைக் கொலைகளை நொடியில் செய்து முடிப்பார்கள்! ஆனால் இப்படத்தில் கொலைக்கு எடுத்துக் கொள்கிற நேர நீட்சி, அந்த நிகழ்ச்சிக்கு இருக்க வேண்டிய பொறுமை, பதற்றமின்மை, திட்டமிடல், நேரம் அமையும்போது இருக்க வேண்டிய வேகம் அனைத்தும் இயல்பு. நம் திரைப்படங்களில் நாயகர்கள் பயந்து நாம் பார்த்திருக்க முடியாது. நாயகன் அழகரைச் சிலர் கொல்ல வரும்போது கையில் திருப்பித் தாக்கப் பொருள் இல்லை என அறிந்தவுடன் அவன் தலை தெறிக்க ஓடுகிறான். இறுதிக் காட்சியில் பரமனுக்கு அந்த நிலை வரும்போது அவனுள் வரும் அச்சம் நம்மைப் பதறச் செய்கிறது.

வன்முறை வாழ்க்கை ரசனைக்குரியதன்று. ஒவ்வோர் இரவும் எதிராளி குறித்த அச்சத்தோடுதான் உறங்க வேண்டும். ஆனால் பகலில் பய மில்லாதவன் போல் மற்றவர் களிடம் நடித்துக் கொண்டிருக்க வேண்டும். எத்தனைக் கொலை செய்திருந்தாலும் அவன் சாகசக்காரனல்ல. முந்துகிறவன் வீரனாய் உயிர் வாழலாம். அடுத்தவன் இவன் எதிர்பாராத நேரத்தில் உயிர் பறிக்க முந்துகிறவரை! திரைப்படத்தில் வாழ்க்கையைக் காட்டுவதைவிட வாழ்க்கையைத் திரைப்படமாக்கிக் காட்டுவதுதான் உயிர்ப்பான படைப்பு எனலாம். காதலும் நட்பும் காவியமாய்க் காட்டப்படுகிற சூழலில் அவற்றிலும் மறைந்துள்ள துரோக முகத்தைக் காட்டிவிடுவதால் சுப்பிரமணியபுரம் அனைவரின் கவனத்திற்கும் உள்ளாகி விட்டது.

‘சிறு பொன்மணி அசையும்’ எனத் தொடங்குகிற இளையராசாவின் திரைப்பாடல் பின்னணியில் அழகரும் துளசியும் பரிமாறிக் கொள்கிற காதல் பார்வை தெளிந்த பனித்துளி தரும் அழகு. தன் காதலன் தெருவில் அடிதடி செய்து கொண்டிருப்பதைப் பார்த்த பிறகு முதன்முதலாக அவனிடம் பேசுகிறாள். தன் எதிர்கால பயத்தினால் ஏதோ ஒரு வேலை தேடச் சொல்கிறாள். அவன் முதல் கொலை செய்துவிட்ட பிறகு அவளுக்குள் ஒரு வெறுமை. அப்போதும் கொண்ட காதலில் அணுவும் பிறழ்வில்லை. துளசியின் தோழி ‘எத்தனையோ பேர் உன் பின்னால் சுற்ற நீ ஏன் அவனுக்காக அழுகிறாய்?’ எனக் கேட்கிறாள். அதற்குத் துளசி, ‘எனக்கு அவரைச் சின்ன வயதிலிருந்தே தெரியும்; அவரைப் பற்றி எனக்குத் தெரியும்; நான் அவரை மாற்றிவிடுவேன்’ என பதிலளிக்கிறாள். மேலும் தோழி வலியுறுத்த, உறுதியின் வெளிப்பாடாய் துளசியிடம் மௌனமே பதிலாய்...

அழகர் சிறையில் இருக்கிற நாட்களெல்லாம் துளசியின் நினைவு அகலாமல் இருக்கிறான். கொலை செய்துவிட்டுச் சிறை வந்தபின் அந்தப் பிரிவும், இனி அவள் நமக்கு இல்லையோ? என்கிற ஏக்கமும் அவனைத் தன்னிலை மறக்கச் செய்கின்றன. அழகர் பரமனோடு விலங்கிடப்பட்டு நிற்கும் செய்தித்தாள் படத்தைத் துளசி பாதுகாத்து வைக்கிறாள். அழகரை அதில் பார்த்துக் கொண்டிருப்பதே பிரிவில் அவளுக்கான ஒரே காதல் நினைவு. அவனுக்காகக் கோயில் சென்று வேண்டுகிறாள்.

சிறைவிட்டு வெளிவந்த பின் இருவரும் யாருமற்ற ஒரு மலைக்கோவிலில் சந்திக்கிறார்கள். அப்போது அழகருக்குத் துளசியின் சித்தப்பா கனகுவைக் கொல்வது நோக்கமாய் உள்ளது. அது துளசிக்கும் தெரியும். அப்போதும் துளசி தன் காதலை உறுதிப்படுத்தி ‘இனிமேலும் என்னைச் சந்தேகிக்காதீர்கள்!' எனச் சொல்லி விடை பெறுகிறாள். இன்னொரு சந்திப்பில் நாமிருவரும் இதையெல்லாம் விட்டு வெகுதூரம் சென்று புதிய வாழ்வு தொடங்கலாம் என இறைஞ்சுகிறாள். கனகுவும் அவன் அண்ணனும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், அழகர் கனகுவைக் குத்தப்போகும்போது தவறுதலாய்த் துளசியின் பெரியப்பா மீது கத்தி பாய்ந்து விடுகிறது. அந்தப் பெரியப்பா அழகர் - துளசியின் காதலை அறிந்து கொண்டவர். காயம்பட்டு சிகிச்சை பெறுகிற பெரியப்பாவின் முன் துளசி அமர்ந்திருக்கிறாள். கனகுவுக்கு இப்பொழுது தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை. இந்த நிலையில் தன்னை சிறுவயதிலிருந்து வளர்த்த, தான் மதிப்போடு பார்த்த சித்தப்பாவும், பெரியம்மாவும் துளசியின் காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள். மற்றவர்களும் துளசி முன் நின்று அழுகிறார்கள்.

அடுத்த காட்சியில்... ‘என்னை சந்தேகிக்காதீர்கள்’ என முன்பு உறுதி கொடுத்த அதே கோயிலில் அழகரும் துளசியும் சந்தித்துக் கொள்கிறார்கள். அழகர் கொலை செய்யப்படப் போகிறான் என்பது துளசிக்குத் தெரியும். அதனால், அவன் பேசுவது எதற்கும் பதிலளிக்காமல் கதறி அழுதபடியே அமர்ந்திருக்கிறாள். திடீரென கனகுவின் ஆட்கள் ஆயுதங்களோடு மறைவிலிருந்து தாக்க ஓடி வருகிறார்கள். அழகர் அவர்களிடம் வசமாய்ப் பிடிபட்டு விட்டபோது துளசி அதை ஏறெடுத்துக் காணாமல் தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுகிறாள். கனகு வந்து துளசியைக் கண்பொத்தி அழைத்துப் போகும்போது அழகரைக் கத்தியால் குத்துகிறார்கள். அவன் பார்வை துளசியின் மீது மட்டும் படிந்திருக்கிறது. கண்களில் கண்ணீர் தேங்குகிறது. ஆனால், வலி அந்தத் தாக்குதல் தந்ததல்ல.

துளசி செய்தது துரோகமா? நம்முடையது பெண்ணடிமைத்தனத்தை அடிப்படை யாய்க் கொண்ட சமூகம். இந்து மதம் பழத்தில் ஊசி செருகுவதுபோல் பெண்ணுக்குள் அடிமை மனப்பான்மையைச் செலுத்துகிறது. அவள் தான் அடிமை என்பதைத் தானே உணராது, அதையே இயல்பான வாழ்வாக வாழப் பழக்கப்படுத்தப்படுகிறாள். பெரியார் சொல்வார்: ‘மலம் அள்ளுபவனுக்கு எப்படி மலத்தின் நாற்றம் தெரியாமல் போய் விடுகிறதோ, அப்படித்தான் பெண்கள் தாம் அடிமை என்பதையே உணராமல் இருக்கின்றனர்.’

இங்கே ஒரு குடும்பத்திற்குள் பெண்ணின் நிலை என்ன? ‘வயதுக்கு வந்த’வுடன் அவளுக்கு முதலில் என்ன கற்பிக்கப்படும்? மழலையாய் வேறுபாடற்றுப் பழகுவது தடை செய்யப்படும். ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் சிந்தனை வெளிப்பாட்டிற்கும் கடுமையான கட்டுத்தளைகள் பிறப்பிக்கப்படும். குடும்பத்திற்குள் தன் கருத்தை வெளிப்படுத்த அனுமதி கிடையாது. தன் விருப்பு வெறுப்புகளுக்கு மாறானவற்றையும் ஏற்றுச் செயல்பட வேண்டி வரும். இந்தக் கட்டுக்குள் அடங்கி வாழ்ந்தால்தான் அவள் ஒழுக்கமான பெண்ணாகக் கருதப்படுவாள்.

கணவனுக்கு ஓர் உடைமைப் பொருளாய் தானே ஒப்புக் கொடுத்து வாழ்கிற தாயைத் தினம் தினம் பார்த்து வளர்ந்த பெண் ஒவ்வொருத்திக்கும், அதுவே இயல்பான வாழ்க்கை எனும் மனநிலை ஊன்றி விடுகிறது. முன்பின் அறிமுகமற்றுக் காட்டப்படுகிற மனிதனை மறு சொல்லின்றி மணமுடிக்க வேண்டும். ஒரு கருவறையில் உதித்த இரு மகவுகளுக்கே இரு வேறு கருத்தோட்டங்கள் நிலவுகிறபோது, ஒரு பெண் தன் கணவனின் கொள்கையை, சிந்தனையை, விருப்பங்களைத் தனதாக்கிக் கொண்டு வாழ்ந்தாக வேண்டும். அந்தப் பெண்ணுக்கென்று இருக்கிற உணர்வுகள் அவளாலேயே சாகடிக்கப்படும். அப்படி ஆணுக்குப் பெண் நல்ல அடிமையாக வாழ்ந்தால்தான் அவள் பதிவிரதையாம்.

இதுதான் சமூகத்தில், அதன் ஓர் அங்கமான குடும்பத்தில் உள்ள நடைமுறை. இந்தச் சூழலில் பாடம் கற்று வளர்கிற பெண் தனக்குள்ளான காதலை வீட்டில் சொல்வதே ஆபத்துக்குரியது. காதல் என்று பேசுதலே ஒழுக்கமின்மையாகக் கருதப்படும். அதற்காக வாதாடுவது என்ன, பேசுவதே அவளுக்குத் தவறான முத்திரை பதிக்கச் செய்யும். தன் மனத்தில் ஒருவனை ஆழப்பதித்து வைத்துக் கொண்டே திருமண ஏற்பாடுகளுக்குத் தலையசைக்க வேண்டும். வீட்டில் தன் எண்ணங்களை வெளிப்படையாய்ப் பேசும் சமத்துவமான உறவென்று யாருமில்லை. பெண்ணை வளர்த்த முறையில் அவள் மீது குடும்பத்தாருக்கு ஒரு படிமம் ஏற்பட்டு விடுகிறது. அதை உடைத்து வெளிவருவதும் பெண்ணுக்குச் சாத்தியமில்லாது போகிறது. வேறு வழியின்றி திருமண நாளுக்கு முந்தைய நாள் பெண் பிணமாய்த் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பாள். இது நடப்பதுதான்; நடந்தது தான்! துளசியின் காதல் தெரிந்தவுடன் படத்தில் கனகு சொல்வான்: ‘ஒரு பொம்பளப் புள்ளைக்கு என்னண்ணே இம்புட்டு சலுகை?’ இதுதான் அன்றும் இன்றும் நடைமுறை.

ஒவ்வொரு நொடியும் காதலனை நினைத்தே தன்னைக் கரைத்துக் கொண்ட பெண், அவன் கொலைகாரனாய் இருந்தபோதும் அடிப்படையில் அவன் மீது நம்பிக்கையோடு காதலைச் சுமந்த பெண் துளசி. அவளுக்குத் தன் காதலன் கொல்லப்படுவது உவப்பானதா? கனகு கண்பொத்தி அழைத்துப் போகும்போது ‘பாவி, என்ன இப்படி ஒரு காரியம் செய்ய வைச்சுட்டியே’ எனக் கதறுவாள். கண்ணீர் சிந்தியபடியே குற்றவுணர்வுக்கு ஆட்பட்டுப் போகும் துளசியின் அடுத்த கட்ட வாழ்வின் பின்னால் பயணம் செய்வதாய் எண்ணிப் பாருங்கள். அவள் குடும்பம் ஒரு ராஜகுமாரனையே கட்டி வைக்கட்டும். எவ்வளவு உயர்ந்த வாழ்க்கை வேண்டுமானாலும் தரட்டும். கடந்த கால நினைவுகள் அடிமனதை அறுக்கும் வலி மிகுந்த வாழ்க்கை அதை நரகமாக்கிவிடும் என்பதே உண்மை. இந்த நாள் தூக்கிலிடப்படுவோம் என அறிந்த பின்னும் அக்கைதி மகிழ்ச்சியோடு நாட்களைக் கழிக்க முடியும். ஒரு நாளின் இரவில் உறங்கப் போகும் தனிமை தரும் மனபாரம் அவன் மட்டுமே அனுபவிக்கக் கூடியது. ஏறக்குறைய இரண்டும் ஒன்றுதான். பெண்ணுக்கு நல்வாழ்வைத் தந்துவிட்டோம் எனத் திருப்தியுறுகிறவர்கள் ஏமாளிகள். பெண்ணின் வலி மிகுந்த வாழ்க்கையில் இருந்து பார்த்தால் அவர்கள் கொடுங்கோலர்கள்.

நண்பன் காசியின் துரோகத்தால் பரமன் கொல்லப்படுகிறான். காசி நட்பை மீறிய தன்னலமி. காசி அப்படி செய்யக்கூடியவன்தான் என்பதைப் படத்தின் முந்தைய பல நிகழ்வுகளே நமக்கு உணர்த்திவிடுகின்றன. கால் ஊனமுற்றவராக வருகிற டும்கன் உணர்வுப்பூர்வமாக அழகர், பரமனிடம் பிணைப்புக் கொண்டவர். தெருவில் அடிதடி செய்கிறபோது காவலர்கள் வந்து அழைத்துப் போகிறார்கள். கூடி நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள் கலைந்து போய் விடுகிறார்கள். டும்கன் மட்டும் தனியே நிற்பார். துணைக்குப் பார்வையாளர்கள் மட்டுமே.

இறுதியில் 2008ஆம் ஆண்டு மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் துரோகி காசியைக் கொலை செய்துவிட்டு டும்கன் நடந்து போகிறபோது திரையெங்கும் அமைதி நிலவுவது, அது குறித்த உணர்வுச் சுமையை நமக்குள் ஏற்படுத்தும் நல்ல உத்தி. நட்பின், நன்றியின் அடையாளமாய் டும்கன். மொத்தப் படத்தின் பாத்திரங்களில் அவரே உயர்ந்தவர்! உடலில் மட்டுமே ஊனம்!

கொலை செய்யும்போது நாத்தள்ளிக் காட்டுகிற வெறித் தனம் - இடுகாட்டுக் கொலைக்காக இறுதி ஊர்வலத்தில் கலந்து வந்து ஓரமாய் ஒதுங்கி நிற்கும்போது தலையில் கிடக்கிற பூக்களை உதறுகிற அந்த நொடி - உயிருக்குத் தப்பி ஒரு பெண்ணின் காலில் விழுந்து அழுவது - அந்த அவமானத்தால் தன்னிலை மறந்து அவர்களைக் கொல்ல வேண்டும் எனக் கதறுவது - இவற்றில் ஜெய் சிறந்த நடிகராய்ப் பரிணாமம் பெறுகிறார். சசிக்குமார் தனியாக நடிக்கவில்லை எனச் சொல்லும் அளவில் இயல்பாக வருகிறார்.

சமுத்திரக்கனியின் கண்களும் பேச்சின் உருக்கமும் அது போலியானவை என்பதைக் காட்டி விடுவது அவர் நடிப்பின் சிறப்பு. படத்தின் ஒவ்வொரு காட்சிப்படுத்தலிலும் கதைக்குரிய இடத்தை அல்லது குறிப்பிட்ட காட்சியில் மையப்படுத்தப்பட வேண்டிய மாந்தர்களைச் சுற்றியுள்ளவர்களும் கவனமாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது எதார்த்தமான படம் என்பதற்குச் சிறந்த இலக்கணம். இவை அனைத்திற்கும் மூலகாரணம் இயக்குநர் சசிக்குமாரின் படைப்பாற்றலே!

1980ஆம் ஆண்டை கனக்கச்சிதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். துளசியாக நடிக்க ஸ்வாதியைத் தேர்ந்தெடுத்ததே இயக்குநரின் முதல் வெற்றி எனலாம். ஜேம்ஸ் வசந்தன் இசையில் அறிமுகம். கண்கள் இரண்டால், காதல் சிலுவையில் பாடல்களின் ராகங்கள் இரு வேறு புத்தம் புதிய இசை வார்ப்புகள். கனகு விடுதியில் பேசும் பேச்சின் போது ஒலிக்கிற பின்னணி இசையே அவர் சூது நிறைந்தவர் என்பதைக் காட்டிவிடுவது குறிப்பிடத்தக்கது. கவிஞர் தாமரையின் ‘கண்கள் இரண்டால்' பாடல் வரிகள் தேர்ந்தெடுத்த வார்த்தைச் சிக்கனத்தோடு செதுக்கி வடித்தவை. அந்த வரிகளில் காதல் வழிகிறது எனில், ‘காதல் சிலுவையில்' எனும் கவிஞர் யுகபாரதியின் பாடல் வரிகளில் கதையும் அந்தச் சூழலின் சோகமும் இணைந்து காட்சிக்கு வலுச்சேர்க்கின்றன. பாடல்களுக்கான காட்சியமைப்பு படத்தின் தொடர்ச்சியிலிருந்து நம்மை விலக்குவதே இல்லை. செயற்கையற்ற வாழ்வின் நிகழ்வுகளே பாடலுக்கான காட்சிகள். ஒளிப்பதிவாளர் கதிரின் காட்சிப் படைப்பு இயக்குநரின் அகக் காட்சிகளை, அவற்றின் கோணங்களைத் துல்லியமாய்த் தருகிறது.

வாளெடுத்தவன் வாளால் சாவான் என்ற பழைய அச்சுறுத்தலுக்கு மேல், சுப்ரமணியபுரம் திரைப்படம் சமூகத்திற்கு எந்தச் செய்தியையும் பெரிதாகத் தந்துவிடவில்லை. ஒட்டுமொத்தத் தமிழ்த் திரை ஊடகத்தின் சீரழிவைக் கருதிப் பார்க்கும்போது இப் படம் நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மக்களின் வாழ்வு படைப்புகளில் வெளிப்படாவிட்டால் அது கால ஓட்டத்தில் கரைந்தழிந்து போகும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால், இன்றைக்கு இதற்குத் தொடர்பே இல்லாத படங்கள் வெற்றி பெறுவதும் உண்டு. இந்த வெள்ளத்தில் அடித்துப் போய்விடாமல் இருக்கிற இயக்குநர்கள் சிலரே. பாலா, பாலாஜி சக்திவேல், அமீர், வசந்தபாலன்... இதோ சசிக்குமார். இவர்களின் படைப்புகள் பெருவெற்றி பெற்றுவிட்டதை எண்ணிப் பார்க்கலாம். இன்றைய சமூக அமைப்பு குறித்த கேள்வி எழுப்புதலோ, புதிய சமூகம் படைப்பதற்கான பயணப்படுதலோ இவர்களின் படங்களிலும் இல்லைதான். ஆனால், மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் எனும் பொய்மை வாதத்திற்கு இவர்கள் ஓங்கி அடி கொடுத்திருக்கிறார்கள். திரையூடகத்தைப் புதிய திசைக்குக் கட்டி இழுத்துப் போக சசிக்குமாரும் வடம் பிடித்திருக்கிறார். அழுத்தமான பிடி!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com