 |
இந்தியனே வெளியேறு!
காசுமீரம் பற்றி எரிகிறது! காசுமீரம் விளிம்பில் நிற்கிறது!
சிறப்பாசிரியர்
தியாகு
வெளியீட்டாளர் - ஆசிரியர்:
சிவ.காளிதாசன்
தொடர்புக்கு:
சிவ.காளிதாசன்
1434 (36/22), இராணி அண்ணா நகர்,
சென்னை - 600 078
பேசி: 9283222988
மின்னஞ்சல்: [email protected]
ஓரிதழ் ரூ.8
ஓராண்டு ரூ.100
ஆறாண்டு ரூ.500
புரவலர் ரூ.1000
|
கடந்த சில நாட்களாகக் காசுமீரத்தில் நடந்து வரும் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் தந்துள்ள தலைப்புகளில் இரண்டுதாம் இவை. உண்மையில் காசுமீரம் இன்று நேற்றல்ல, அரை நூற்றாண்டு காலமாய் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது! அவ்வப்போது பற்றி எரியவும் செய்கிறது. ஆனால், அமர்நாத் கோயில் வாரியத்துக்கு சம்மு-காசுமீர மாநில அரசு காட்டு நிலம் ஒதுக்கிக் கொடுத்ததே இப்போதைய சிக்கலுக்குத் தொடக்கப் புள்ளி ஆயிற்று. ஆண்டுதோறும் அமர்நாத் பனிலிங்கத்தைக் கண்டு வழிபட வருகை தரும் திருப்பயணிகளின் வசதிக்காக என்று சொல்லி மாநில அரசு 49 எக்டேர் காட்டு நிலத்தைக் கோயில் வாரியத்துக்கு வழங்கியது. மாநில ஆளுநரே அந்த வாரியத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசின் இந்த முடிவுக்குக் காசுமீரத்து மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ‘உரியத் மாநாட்டு'த் தலைவர் சையது அலி சா கீலானியின் தலைமையில் அமர்நாத் நில மீட்சி நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. எதிர்ப்புக்கு இரு காரணங்கள் சுட்டப்பெற்றன:
1. காட்டு நிலத்தை அழித்துக் கட்டடம் கட்டுவதும் வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதும் சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தி விடும்;
2. காசுமீரத்து நிலத்தை வெளியாருக்கு விற்கலாகாது என்பதற்கு 1920ஆம் ஆண்டிலிருந்தே சட்டம் உள்ளது. இதில் வகுப்புவாத நோக்கம் துளியும் இல்லை.
அமர்நாத் குகையில் கடுங்குளிர்ச் சூழலில் குறிப்பிட்ட காலத்தில் இயற்கைக் காரணங்களால் தோன்றிச் சில நாள் இருந்து மறையும் பெரிதுயர்ந்த பனிக்கட்டிதான் அதன் தோற்ற அமைப்பினால் பனிலிங்கம் எனப்பட்டது. பார்க்கப் போனால் இந்தப் பனிலிங்கத்தை முதலில் கண்டு சொன்னவர் ஓர் இசுலாமியர். ஆண்டு தோறும் பனிலிங்கத்தைக் கண்டு வழிபடத் திருப்பயணம் செல்வது நூறாண்டுக்கு மேலாகவே தொடர்ந்து நடைபெறுகிறது. பனிலிங்கக் கோயில் காசுமீரப் பண்டிதப் பார்ப்பனர்களின் பொறுப்பில் இருக்க, திருப்பயணிகளை வழிநெடுகிலும் வரவேற்று ஆதரிப்பவர்கள் பெரும்பாலும் காசுமீரத்து இசுலாமியர்களே. இத்துணைக் காலமும் இது சிக்கலின்றியே நடைபெற்று வந்தது. இதில் அரசுக்கு வேலை இல்லை.
சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக, அரசே ஆளுநர் தலைமையில் அமர்நாத் கோயில் வாரியம் அமைத்து, அதற்கு 49 எக்டேர் காட்டு நிலத்தை ஒதுக்கித் தந்து, அந்த நிலத்தில் இயற்கையை அழித்து நிரந்தரக் கட்டடங்கள் கட்டும் முயற்சி தொடங்கியபோதுதான் காசுமீரத்து மக்கள் பெருந்திரளாய்க் கிளர்ந்தெழுந்தார்கள். கிளர்ச்சியின் வீச்சு காசுமீரத்தில் யாரையும் விட்டு வைக்கவில்லை. பண்டிதர்கள் உட்பட காசுமீரத்து இந்துக்களும் இந்தக் கிளர்ச்சியை ஆதரித்தார்கள்.
சம்மு-காசுமீர மாநிலத்தை ஆளும் காங்கிரசு - மக்கள் சனநாயகக் கட்சிக் கூட்டணியிலேயே பிளவு உண்டாயிற்று. அமர்நாத் நில மீட்சிக் கிளர்ச்சிக்கு ம.ச.க. ஆதரவு தெரிவித்தது. இத்தனைக்கும் மாநில அமைச்சரவையில் நில ஒதுக்கீட்டு ஆணையில் ஒப்பிமிட்டவர்களே அக்கட்சி அமைச்சர்கள்தாம். காசுமீரத்தை இந்தியாவின் பகுதியாகக் கருதும் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியும் கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தது. மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி (சி.பி.எம்.) காசுமீர மாநிலக் குழுவே நில ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை இது முசுலீம் வகுப்புவாதப் போராட்டம் அல்ல என்பதற்குச் சான்றாகக் கருதலாம்.
இந்தப் போராட்டத்தால் குலாம் நபி ஆசாத் தலைமையிலான மாநில அரசு கவிழ்ந்து போயிற்று. முடிவில் நில ஒதுக்கீடு நீக்கம் செய்யப்பட்டது. மாநில ஆளுநரும் மாற்றப்பட்டார். காசுமீரப் பள்ளத்தாக்கில் கிளர்ச்சி வடியத் தொடங்கியபோதே, அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்முப் பகுதியில் கிளர்ச்சி மூண்டது. ‘அமர்நாத் போராட்டக் குழு' என்ற பெயரில் இந்துத்துவ ஆற்றல்கள் இந்தக் கிளர்ச்சியை வழிநடத்தி வருகின்றன. எடுத்த நிலத்தை அமர்நாத் கோயில் வாரியத்திடம் திருப்பித் தர வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.
அமர்நாத் போராட்டக் குழுவினர் அரசைக் குறி வைக்காமல் இசுலாமியர்களையும், காசுமீரப் பள்ளத்தாக்கில் வாழும் மக்களையும் குறி வைத்தே கலகம் செய்து வருகின்றனர். சிறிநகர்-சம்மு தேசிய நெடுஞ்சாலையை மறித்துப் போக்குவரத்தைச் சீர்குலைத்து அம்மக்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்க முயல்கின்றனர். காசுமீரப் பள்ளத்தாக்கின் மீதான இந்துத்துவப் பொருளியல் முற்றுகையை விலக்கிட இந்திய அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை. இதனால் காசுமீர மக்களின் இயல்பு வாழ்க்கை சிதைவுற்றது. விளைந்த ஆப்பிள் பழங்கள் அழுகி வீணானதால் பேரிழப்பு! உணவுப் பொருள்களும் ஏனைய இன்றியமையாப் பண்டங்களும் சம்முவைத் தாண்டி வர முடியாததால் பற்றாக்குறை! குழந்தை உணவும் உயிர் காக்கும் மருந்துகளும்கூட கிடைக்காத துயரம்!
இந்த நிலையில் சிறிநகரிலிருந்து புறப்பட்டுப் போர்நிறுத்தக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காசுமீரத்தின் தலைநகரம் முசாபராபாத்துக்கு நடைப்பயணம் செல்ல காசுமீரத்து வணிகர்கள் முடிவெடுத்தனர். இந்தப் பயணத்தில் இலட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறிநகர், முசாபராபாத் இரு நகரங்களுமே காசுமீரத் தேசத்தில்தான் உள்ளன. ஒரு நகரம் இந்திய ஆக்கிரமிப்பிலும் மறுநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலும் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் காசுமீரத்தின் தேசிய ஒருமைப்பாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
சிறிநகர் - முசாபராபாத் பயணத்தைத் தடுக்க இந்திய எல்லைக்காப்புப் படை வன்முறையைப் பயன்படுத்தியது. அமைதியாகத் திரண்ட மக்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பதினைந்து பேர் உயிரிழந்தனர். காசுமீரப் பள்ளத்தாக்கு எங்கிலும் இந்தியப் படை ஏவிய அடக்குமுறையும், இந்தியத் தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டு சம்முவில் இந்துத்துவ வெறியர்கள் இசுலாமியர்கள் மீது நடத்திய தாக்குதலும் காசுமீரத்தைப் பணிய வைத்துவிடவில்லை. காசுமீரத்து மக்கள் மீண்டும் பேரெழுச்சியாகத் திரண்டு போராடி வருகிறார்கள்.
அமர்நாத் கோயில் வாரிய நில ஒதுக்கீட்டின் எல்லையைத் தாண்டி சிக்கல் தீவிரமாகிவிட்டது. சிறிநகரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை நோக்கி காசுமீரத்து மக்கள் இலட்சக்கணக்கில் அணிவகுத்தார்கள். ஐ.நா. தலையிட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
பேரணியில் இளைஞர்கள் ‘எங்களுக்கு விடுதலை வேண்டும்' என்று முழங்கக் கண்டோம். தமிழ்நாடு தமிழருக்கே! என்று தந்தை பெரியார் வழியில் முழங்கிடும் நாம் ‘காசுமீரம் காசுமீரிகளுக்கே!' என்பதை ஏற்றுக்கொள்வது இயல்பானதே. காசுமீரம் இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ அல்லவே அல்ல! காசுமீரம் காசுமீரிகளுக்கே! இன்று காசுமீரத்தில் சிலர் ‘நாம் பாகிஸ்தானியரே!' என்றும் ‘பாகிஸ்தான் நமதே!' என்றும் முழங்குவதற்கும், சிறிநகரில் பாகிஸ்தான் கொடியைப் பறக்க விடுவதற்கும் அடக்குமுறைத்தனமான இந்திய அரசே முழுப்பொறுப்பு.
விடுதலைதான் காசுமீர மக்களின் பெரும்படியான பேராவல் என்பதில் நமக்கு எவ்வித ஐயமும் இல்லை. காசுமீர விடுதலையை ஆதரிப்பது நம் சனநாயகக் கடமை. சிறிநகருக்கே சென்று காசுமீர விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கும் அருந்ததிராயின் வழியில் சனநாயக ஆற்றல்கள் காசுமீர விடுதலைக்கு ஆதரவாகப் போராட வேண்டும். அயலாதிக்கத்தை எதிர்த்து 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு!' என்ற முழக்கம் இந்தியத் துணைக் கண்டமெங்கும் ஒலித்தது போலவே, இன்றைய காசுமீரத்தில் ஒலிக்கும் முழக்கம்:
கொடுங்கோலனே வெளியேறு!
அடக்குமுறையாளனே வெளியேறு!
இந்தியனே வெளியேறு!
காசுமீரத்திலிருந்து புறப்பட்டுள்ள இந்த முழக்கம் கன்னியாகுமரியில் எதிரொலிக்கும் காலம் வரும்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|