Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
ஆகஸ்டு 2008
கல்லூரி மாணவர் ஆசிரியர் போராட்டம்
அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

க.வே.அருள், பூ.சா.கோ. கல்லூரி, கோவை


பண்டைக் காலத்தில் கல்வியில் சிறந்திருந்த தமிழ்நாடு இன்று கல்விக் கொள்ளையில் சிறந்த தமிழ்நாடாக மாறி வருகிறது. தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறது. ஏழைகளுக்குத் தொலைக்காட்சி இலவயம், வறியோர்க்கு வேட்டி சேலை இலவயம் என இலவயப் பட்டியலை நீட்டும் அரசாங்கம் கல்வியை மட்டும் காசுள்ளோருக்குரிய அரிய கடைச் சரக்காக்கியுள்ளது. கல்வியைக் கைகழுவும் அரசாங்க முயற்சியின் ஒரு தொடர் நிகழ்வுதான் அரசு உதவி பெறும் கோவை பூ.சா.கோ கல்வி நிறுவனங்களையும் மதுரை தியாகராயர் கல்வி நிறுவனங்களையும் தனியார் ஒருமைப் பல்கலைக் கழகங்களாகத் ‘தரம்’ (!) உயர்த்தும் அறிவிப்பாகும்.

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தின் இறுதி நாளில் (மே14) பூ.சா.கோ. கல்வி நிறுவனம், தியாகராயர் கல்வி நிறுவனம் ஆகிய இரண்டையும் தனியார் பல்கலைக் கழகங்களாகத் ‘தரம்’ உயர்த்தும் சட்ட முன்வரைவு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்ட முன்வரைவு மிகவும் கமுக்கமாகத் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கே கூட சட்டமன்றத்தில் முன்வரைவு தாக்கல் செய்யப்படும்வரை, இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. செய்தி அறிந்த பேராசிரியர்களும் மாணவர்களும் அதிர்ந்து போனார்கள். ஏனெனில், இது அவர்களின் கழுத்திற்கே கத்தி வைக்கும் செயலாகும். தி.மு.க. தவிர்த்த மற்ற அனைத்துக் கட்சிகளும் இம் முன்வரைவைக் கடுமையாக எதிர்த்ததால் வேறு வழியின்றி அதனைத் தேர்வுக் குழுவுக்கு அரசு அனுப்பி வைத்தது.

இவ்விரு கல்வி நிறுவனங்களும் ஒருமைப் பல்கலைக் கழகங்களாக உயர்வதால் கல்வியின் தரம் உயரும், ஆய்வுத் துறைகள் மேம்படும், உலகத் தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம், வெளிநாட்டு ஆசிரியர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்தலாம் என்கின்றனர். இதனால், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை என அரசும் கல்வி நிறுவன அதிகாரிகளும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மை இதற்கு நேர்மாறாக உள்ளது.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஒருமைப் பல்கலைக் கழகங்களாக மாறும்பொழுது இடஒதுக்கீடு பறிபோகும்; கல்வி உதவித் தொகை கிடைக்காது; கல்விக் கட்டணம் பன்மடங்காக உயரும்; அதிக விலைக்கு விற்க முடியாத பாடப் பிரிவுகள் நீக்கப்படும்; ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் உட்பட அனைத்துச் சலுகைகளும் மறுக்கப்படும்; அவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவர். மேலும், அரசு உதவி பெறும் கல்லூரிகள் பல்கலைக் கழகங்களாக மாறும் பொழுது அனைத்து அதிகாரமும் பல்கலைக்கழக வேந்தர் கைக்குச் செல்லும். இப்பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருக்க மாட்டார். நிறுவன நிர்வாகிகளே இருப்பர். நிர்வாகிகள் பெரும்பாலும் தனி நிறுவன முதலாளிகளாகவே இருப்பார்கள். பல்கலைக் கழகங்களில் அவர்கள் வைப்பதுதான் சட்டமாகும். வேந்தரின் நடவடிக்கைகளைக் கேள்வி கேட்கும் அதிகாரம் கூட அரசுக்கு இருக்காது. மாணவர் சேர்க்கை, ஆசிரியர் அமர்த்தம், நீக்கம் என அனைத்து அதிகாரங்களும் கல்வி நிறுவன நிர்வாகிகளின் கைகளிலேயே எனும் நிலை உருவாகும்.

இன்று அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் 90% இடங்களை ஒற்றைச் சாளர முறையில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்புகின்றனர். பொறியியல் கல்லூரிகளிலும் 90% இடங்களை அரசு நிரப்புகிறது. அக்கல்லூரிகளில் உள்ள சுயநிதிப் பாடப் பிரிவுகளிலும் 70% அரசின் ஒற்றைச் சாளர முறையிலேயே நிரப்பப்படுகிறது. மருத்துவக் கல்லூரியிலும் இதே நிலைதான். கல்லூரி நிர்வாகமும், உயர் கல்வித்துறை அமைச்சரும் ‘கல்விக் கட்டணங்கள் உயராது, இடஒதுக்கீடு பின்பற்றப்படும்' எனப் பரப்புரை செய்கிறார்கள். ஆனால் பூ.சா.கோ. கல்லூரியில் மே 13 வரை உரு 25/-க்கு விற்கப்பட்ட விண்ணப்பப் படிவம் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்ட மே 14ஆம் நாளன்றே உரு.250/- ஆக உயர்ந்தது.

சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நொடியே விண்ணப்பப் படிவக் கட்டணத்தைப் பத்து மடங்கு உயர்த்துபவர்கள் பல்கலைக் கழகமானால் கல்விக் கட்டணத்தை உயர்த்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உறுதி? இக்கல்வி நிறுவனங்களில் உள்ள சுயநிதிப் பாடப்பிரிவு இடங்கள் பல இலக்கங்களுக்கு விற்கப்படுவது ஊரறிந்த உண்மை. இதில் இவர்கள் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. வி.ஐ.டி. (ய.ஐ.ப), அமிர்தா போன்ற நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் தமிழ்நாட்டு மாணவர்களைக் காட்டிலும், இந்தியாவின் பிற பகுதி மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களுமே மிகுதியாகப் பயில்கிறார்கள். அப்பல்கலைக் கழகங்களில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மிகக் குறைவான இடங்களே கிடைக்கின்றன. இன்று பூ.சா.கோ போன்ற அரசு உதவி பெறும் கல்லூரிகளிலேயே குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றன. அவர்கள் கேட்கும் பாடப்பிரிவுகள் மறுப்பின்றி வழங்கப்படுகின்றன. அவர்களுக்கென்றே கல்லூரிகளுக்குள் தனியாக விடுதிகளும் நடத்துகின்றனர்.

கல்லூரியாக இருக்கும்பொழுதே இந்நிலை என்றால் பல்கலைக்கழகமாக மாறும் பொழுது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு அதன் கதவுகள் மூடப்படும் என்பதில் அய்யமில்லை. காமராசரும் பெரியாரும் ஒரு சிலருக்கே உரித்தாய் இருந்த கல்வியைப் பரந்துபட்ட மக்களுக்கானதாக மாற்றினர். திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னர் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் தொடங்குவதற்கு இசைவு அளித்ததன் மூலம் கல்வியில் ஒரு சமச்சீர் இன்மையை உருவாக்கின. அஃது இன்று பெரிதாய் வளர்ந்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை மேலே வளரவிடாமல் தடுக்கிறது. இச்சூழலிலும் போராடிப் படித்து மேலே வரும் மாணவர்களுக்கு ஒரே வாய்ப்பாக அரசுக் கல்லூரிகளும், அரசு உதவி பெறும் கல்லூரிகளும் மட்டுமே உள்ளன. அவற்றையும் தரம் உயர்த்துதல் என்ற பெயரில் தனியாருக்குத் தாரை வார்த்தால் ஏழை மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்பு அறவே அற்றுப் போகும். இது சமூக நீதிக்கு எதிரானது.

கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனை நாம் வரவேற்று ஆதரிக்க வேண்டும். மழலைக் கல்வி முதல் ஆங்கிலம் உள் நுழைந்து தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் புற்றீசல் போல் மெட்ரிக் பள்ளிகள் பரவத் தொடங்கிய அப்பொழுதே இப்போராட்டம் தொடங்கியிருக்க வேண்டும். ஆங்கில வழிக் கல்வியும், கல்வி தனியார்மயமாதலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தாம். தொடக்கக் கல்வியும் பள்ளிக் கல்வியும் ஆங்கில வழிக் கல்வியாகவும் தனியார்மயமாகவும் மாறியதன் உச்சமே இன்றைய தனியார் ஒருமைப் பல்கலைக் கழகங்கள். இந்தப் புரிதலோடு கல்லூரிப் பேராசிரியர்களும் மாணவர்களும் இப்போராட்டத்தை விரிவுபடுத்தி ஆழப்படுத்த வேண்டும். பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இப் போராட்டத்தோடு இணைந்து செயல்பட வேண்டும்.

‘அனைவர்க்கும் கல்வி, அனைத் தும் தமிழில்!’ என்ற முழக்கத்தின் கீழ் அனைவரும் ஒன்றுபடும் பொழுதே, இப்போராட்டம் முழுமையடையும்; வெற்றி பெறும்; மெய்யான சமூகநீதி நிலை நாட்டப்படும். போராடும் ஆசிரியர் மாணவர் ஒற்றுமை ஓங்குக! போராட்டம் வெற்றி பெறுக!

மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறை

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் சட்டக் கல்லூரியைத் தொடங்கக் கூடாது எனவும், தமிழ்நாடு அரசும், தில்லி அரசும் உடனடியாகத் தலையிட்டு சாஸ்த்ரா தனியார் நிகர் நிலைப் பல்கலைக் கழகம் தொடங்க இருக்கும் சட்டக் கல்லூரியைத் தடை செய்யக் கோரியும் 6.8.2008ஆம் நாள் கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் முதல் கட்டமாக வகுப்புகளைப் புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து மறு நாள் (7.8.2008) மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு கல்லூரி உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கினர்.

உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கிய அந்நாள் கோவை பூ.சா.கோ. கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரிகளைப் பல்கலைக் கழகமாக மாற்றுவது குறித்துக் கருத்து கேட்புக் கூட்டம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று பூ.சா.கோ. கல்லூரியைப் பல்கலைக் கழகமாக மாற்றம் செய்யக் கூடாது என கருத்துத் தெரிவிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூ.சா.கோ. கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் அங்கே திரண்டிருந்தனர்.

இந்நிலையில் பகல் 12.00 மணி வரை பூ.சா.கோ. கல்லூரி மாணவர்களையும் சட்டக்கல்லூரி மாணவர்களையும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காவல்துறை அனுமதிக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கருத்து சொல்லக் காத்திருந்தனர். உயர்கல்வி அமைச்சர் பொன்முடியிடம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை மனு கொடுக்க இருந்தனர். பொன்முடியை சந்திக்கக் காவல்துறையினர் அனுமதி தர மறுத்த நிலையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் காவல் துறையினர் போட்டிருந்த தடுப்பு வளையங்களை உடைத்து நொறுக்கி கூட்டரங்கினுள் நுழைய முயன்றபோது ‘75% ஈரல் கெட்டு விட்ட’ காவல்துறை மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அதனால் படுகாயம் அடைந்த மாணவர்களைக் கைது செய்து காவல்துறை தமது வாகனத்தில் ஏற்றியது.

வாகனம் புறப்பட்ட நிலையில் வெகுண்டெழுந்த பூ.சா.கோ. கல்லூரி மாணவர்கள் காவல் துறை வாகனத்தை மறித்து ‘தனியார் வசம் கல்லூரியை ஒப்படைக்காதே! சட்டக் கல்லூரி மாணவர்களை விடுதலை செய்!’ எனும் முழக்கங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் காவல்துறை தடியடி நடத்தி கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுதலை செய்தது. கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தினைக் கண்டித்து அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் கோவை, சேலம், மதுரை, திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்களும் சாலை மறியல் செய்தபோது காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

மறுநாள் கோவை சட்டக்கல்லூரி மாணவர்களைக் காவல்துறை தாக்கியதைக் கண்டித்தும், தஞ்சையில் தனியார் சட்டக்கல்லூரி தொடங்கக் கூடாது எனும் கோரிக்கையை வலியுறுத்தியும் மறியலில் ஈடுபட்ட திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் கல்லூரிக்குள் நுழைந்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். அதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மண்டை உடைந்தும், உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இக்கொடுஞ் செயலைக் காவல்துறை செய்து விட்டு மாணவர்கள் மீது பொய் வழக்கும் புனைந்துள்ளது.

6ஆம் தேதி கோவை சட்டக் கல்லூரி மாணவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட போராட்டம் இன்றைக்கு தமிழகம் முழுவதும் உள்ளிருப்பு, பட்டினிப் போராட்டம், தொடர் பட்டினிப் போராட்டமாக தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் அரசு மவுனம் சாதிக்கிறது. கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்துள்ளது. இச்செயல் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி : தோழர் தொல்காப்பியன்.
சட்டக்கல்லூரி. கோவை,


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com