Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
Samooka Neethi Thamizh Thesam
ஆகஸ்டு 2008
உயிரற்ற உடலும் உரிமைக்குப் போராடும் சோத்துப்பெரும்பேடு : அனு

தலைநகர் சென்னையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் இருக்கும் சிற்றூர் சோத்துப்பெரும்பேடு. பசுமை படர்ந்த நிலத்தில் வெள்ளை மனம் கொண்ட மக்கள். அரசியல் இல்லாமல் அரசியல் நடத்தும் ஜமீன் நிலக் கொள்ளையர் புஜங்கரராவ் என்பவரே அம்மக்களை ஆட்டிப் படைத்து அதிகாரம் செலுத்தி வருகிறார். அவருக்குத் துணைபோகிறவர் ஊராட்சி மன்றத் தலைவராய் இருந்து மக்கள் பணத்தை விழுங்கி ஏப்பம் விட்ட காரணத்தால் இடைக்கால நீக்கம் செய்யப்பட்ட வன்மனத்தவர் வாசு. இந்த இருபெரும் மலைகளுக்கிடையே சிக்கிக் கொண்டு போராடும் ஊர் மக்களுக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வழிகாட்டி வருகிறது.

என்ன இடர் ஊர் மக்களுக்கு? சுடுகாடு - இடுகாடு செல்லப் பாதை கேட்டுப் போராடிப் பல காலம் போன பின்னே, சுடுகாடு - இடுகாடே இல்லாமற் போனதுதான் இப்போதைய பெருந்துயரம். சற்றொப்ப 50 - 60 ஆண்டுகளுக்கும் மேலாக கொற்றலை (குசத்தலை) ஆற்றின் கரையோரம்தான் இந்தச் சோத்துப்பெரும்பேடு சிற்றூர் மக்களுக்கு சுடுகாடு - இடுகாடு என்றிருந்தது. ஆனால், அங்கு போய்ச் சேரப் பாதையில்லாதபடி வழியெங்கும் நெல்வயல்கள், வாழைத் தோட்டங்கள், பூந்தோட்டங்கள். வயல்கள் வழியே ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவாகப் போக வேண்டிய கட்டாயம்.

சாவு விழுந்தால் சர்ச்சையும் சண்டையும் மூண்டு வளரும் அவல நிலை! எல்லாம் சகித்துக் கொண்டு எரியூட்டியோ புதைத்தோ வந்தார்கள். கொற்றலை ஆற்றங்கரை விரிவாக்கம் செய்யப்பட்டுக் கரையை இடித்துச் செப்பனிடும் வேலை செய்யப்பட்டபோது, இருந்த இடுகாடும் இல்லாமற் போனது. ஊர்மக்கள் பலமுறை மனுக் கொடுத்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு மீண்டும் வட்டாட்சியருக்கு வார்டு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சுடுகாடு-இடுகாடு வேண்டி விண்ணப்பித்தனர். இதன் அடிப்படையில் வட்டாட்சியரும் சர்வேயரை அனுப்பி ஜமீன் புஜங்கரராவ் நிலத்துக்கிடையில் அகப்பட்டிருந்த கால்வாய்ப் புறம்போக்கு நிலத்தை எல்லையிட்டு சுடுகாடு இடுகாட்டிற்கு வரையறுத்துக் கொடுத்தார். இந்த இடத்திற்கும் வயல்வெளிகளின் ஊடாகத்தான் செல்ல வேண்டும். பொதுப் பாதை ஏதுமில்லை. அந்த இடத்திலும் மூதாட்டி ஒருவரின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதனை எதிர்த்து ஜமீன் புஜங்கரராவ், தடையாணை பெற்று விட்டதாக வருவாய்த்துறை மக்களிடம் அறிவித்து அவ்விடத்தையும் சுடுகாடு இடுகாட்டிற்குப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறிவிட்டனர். இதனைத் தொடர்ந்து 2008 மே 15ஆம் நாள் காசி என்பவர் இறந்தபோது அவரின் பூதவுடல் சாலை மறியலுக்குக் கன்னிப்போராய்க் களம் கண்டது. அப்போது பொன்னேரி வட்டாட்சியர் இலெனின் ஜேக்கப், சோழவரம் வருவாய் ஆய்வாளர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் உமாகாந்தன், பொன்னேரி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பாலகிருட்டிணன், ஒன்றியர் குழு பெருந்தலைவர் கோபிநாதன் - கோட்ட வளர்ச்சி அலுவலர், உதவிக் கோட்ட வளர்ச்சி அலுவலர், சோழவரம் காவல்துறை ஆய்வாளர் சங்கர் ஆகியோர் ஊர்மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுடுகாட்டுக்குத் தனி இடம் களத்துப் புறம்போக்கு (சர்வே எண் 40) இருப்பதைச் சுட்டி இந்த நிலத்தை எங்களுக்குத் தாருங்கள் என ஊர் மக்கள் கேட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட அந்த அதிகாரிகள், இன்னும் ஒரு சில நாட்களில் விரைந்து உங்கள் விருப்பம்போல் அந்த இடத்திலேயே தனி சுடுகாடு - இடுகாடு அமைத்துத் தருவோம் எனக் கூறினர். அவர்கள் கேட்டுக் கொண்டபடி பழைய இடத்திலேயே காசியின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் சிக்கல் சிகரம் கண்டது தான் மீதம். 30-06-2008 சாலை மறியல் போர் அறிவிக்கப்பட்டு நடந்தபோதும் அரசு அதிகாரிகள் தவணையும் கெடுவும் கூறிப் பேச்சு நடத்தினர். இதை ஏற்க மக்கள் அணியமாக இல்லை. விடுவார்களா கொம்பு முளைத்த அதிகாரிகள்? உடனே 56 பேர்களைக் கைது செய்தனர். 27 பெண்களை மட்டும் மாலையில் விடுவித்தனர். 29 ஆண்களைப் புழல் சிறையில் அடைத்தனர். மக்களின் சீற்றம் பொங்கிற்று. ஆயினும் பொறுத்துக் கொண்டனர்.

அந்தக் கைதுக்குப் பிறகு கோட்ட வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையில் களத்துப் புறம்போக்கையும், மெய்க்கால் புறம்போக்கு நிலத்தையும் இறுதியாகத் தாங்கல் புறம்போக்கு நிலத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். மேய்க்கால் புறம்போக்கு நிலம் குசத்தலை ஆற்றின் கரையோரமே உள்ளது. அங்கே செல்லவும் அதே ஒன்றரை கிலோ மீட்டரைக் கடந்தாக வேண்டும். தாங்கல் புறம்போக்கு நிலத்திற்கு அடுத்த கிராமத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். களத்துப் புறம்போக்கு 100 மீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளதால் அதுவே மக்களின் இறுதி முடிவு.

19.07.2008இல் தனலட்சுமியம்மாள் இயற்கை எய்தினார். அவரது உடலை எங்கே புதைப்பது என ஊர்மக்கள் கூடிப் பேசினார்கள். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தாரும் உடனிருந்தனர். வேறு வழியின்றி மீண்டும் சாலை மறியல் நடைபெற்றது. ஆண் பெண் என நூற்றுக்கு மேற்பட்டோர் முன்னிலையில் வட்டாட்சியர் இலெனின் ஜேக்கப் இயன்றவரை வாதாடியும் பலிக்கவில்லை. மக்கள் விரும்பிய இடமே இடுகாடாயிற்று. அந்த மல்லிகைப் பூந்தோட்டத்தில் அவ்வூர் மகளிர் பிணக்குழி தோண்டினர். சேரி மக்களும் திரண்டு வந்து சேர்ந்தே குழிதோண்டினர். இந்தச் செயலுக்கு ஆண்கள் சிறு துணைதானே தவிர, பெண்களே அனைத்தும் செய்தனர். இடுகாட்டு உரிமைப் போருக்கு வித்தாய் தனலட்சுமியம்மாளின் உடல் மண்ணிற்குள்! சுடுகாடு கேட்டுத் திரண்ட மக்கள் பெருமூச்சுடன் வீடு திரும்பினர்.

புஜங்கரராவின் பூந்தோட்டத் தால் ஆதாயமடையும் டெல்லி என்பவருக்கும் விலக்கப்பட்ட ஊராட்சித் தலைவர் வாசுவிற்கும் தலையில் மண் விழுந்தது. போராடிய மக்களில் ஒரு சிலரையும் ஊர் துணைத் தலைவர் கண்ணனையும் சேர்த்து 11 பேர் மீது கிராம நிர்வாக அலுவலரை விட்டுப் புகார் கொடுக்க வைத்துள்ளனர் மோசடிக்காரர்கள் மூவரும். வாழ்க்கையே போராட்டம்தான் என்பதை உணர்ந்துள்ள சோத்துப்பெரும்பேட்டு மக்கள் வாழ்க்கை முடிந்தபின் எரிக்கவோ புதைக்கவோ கூட மண் வேண்டும் என்பதற்காகத் தங்கள் உரிமைப் போராட்டத்தை உறுதியுடன் தொடர்கிறார்கள்.

மீண்டும் சுடுகாட்டு-இடுகாட்டுப் போர்

04-08-2008ஆம் நாள் சோத்துப்பெரும் பேட்டைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரின் துணைவியார் இந்திராணிஅம்மாள் (60) காலமானார். இந்த உடல் எங்கே எரியூட்டப்பட வேண்டும் என்பதில் மீண்டும் சிக்கல் எழுந்தது. காவல்துறையும் வருவாய்த்துறையும் வழக்கம் போல் கொசத்தலை ஆற்றங்கரை எடுத்துச் செல்ல வேண்டும் என மிரட்டினர். மக்கள் அதே களத்துப் புறம்போக்கில்தான் எரியூட்டுவோம் என மீண்டும் உறுதி காட்டினர். குறிப்பாகப் பெண்கள் காலையிலிருந்து உணவின்றி தம் கோரிக்கையை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருந்தனர்.

தோழர் சந்திரபாபுவின் மூலம் ததேவிஇ அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சிவ. காளிதாசனுக்குத் தகவல் தரப்பட்டது. உடனே அவரும் தோழர் பாரதியும் சோத்துப்பெரும்பேடு சென்றனர். மருத்துவ அவசர ஊர்தியோடு காவலர்கள் பெருமளவில் அணிவகுத்திருந்தனர். பொன்னேரி காவல்துறைத் துணைக் கண்காணிப் பாளர் பாலகிருஷ்ணன், சோழவரம் ஆய்வாளர் சங்கர், துணை ஆய்வாளர் குமார், வட்டாட்சியர் இலெனின் ஜேக்கப், கோட்டாட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் பிரச்சனை குறித்துப் பேசியபடியே நின்றிருந்தனர். இதில் யாருமே மக்கள் கோரிக்கையின் பக்கம் நின்று பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கும், அதிகாரிகள் - காவலர்களுக்கும் தொடர்ந்து வாக்குவாதம் நடந்தது. மக்கள் காட்டிய உறுதியால் அனைவரும் செய்வதறியாது நின்றனர். துணைக் கண்காணிப்பாளர் “எதுவாக இருந்தாலும் பத்துநாள் கழித்துப் பேசிக் கொள்ளலாம்” என்றார். அதற்கு மக்களில் முன்னணிப் பாத்திரம் வகிக்காத ஒருவர் இப்படிச் சொன்னார் : “இப்போது களத்துப் புறம்போக்கில் எரியூட்டுகிறோம். பிறகு பத்துநாள் கழித்து எது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்.” பெண்கள் உறுதியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பெண்கள் அணியின் வழிகாட்டியாகவே செயல்பட்டவர் தோழர் ஞானசௌந்தரி. காவல்துறையோடு வாக்குவாதம் செய்யும் போதெல்லாம் அவர்கள் மக்களின் கோரிக்கையைக் கைவிடச் சொல்லி மெல்லிய வார்த்தை வெளியிட்டால்கூட தோழர் ஞானசௌந்தரி ‘நானே பூதவுடலை எடுத்து வருவேன்’ என அறிவித்தபடியே இருந்தார். பெண்களும் அவரைத் தொடர அணியமாகவே இருந்தனர்.

நேரம் செல்லச் செல்ல மக்களின் கோரிக்கைக்குக் காவலர்கள் எந்த மதிப்பும் தரவில்லை. தங்களுக்குச் சார்பாக இணங்க வைப்பதில் மட்டுமே பிடிவாதமாக இருந்தனர். கோபமடைந்த பெண்கள் பூதவுடலை எடுத்து வீதிக்கு வர அணியமாயினர். காலமான இந்திராணி அம்மாளின் கணவர் நீலகண்டன் மக்களோடு நின்று காட்டிய உறுதி போராட்டத்துக்குத் துணை செய்தது. ஞானசௌந்தரி முன்னால் வர மற்றப் பெண்கள் பின்னால் தூக்கி வந்தனர். காவலர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். பூதவுடலை இறக்கி வைக்கும் எண்ணமே இன்றி அந்தச் சுமையைத் தாங்கிக் கொண்டே தம் நிலையைக் குரலுயர்த்தி உறுதியாக ஒலித்தனர் பெண்கள். பூதவுடலைத் தாங்கியபடியே ஞானசௌந்தரி துணைக் கண்காணிப்பாளரிடம் விரல் நீட்டிச் சொன்னார்: “களத்துப் புறம்போக்குல தான் இத எரிப்போம். முடிஞ்சா தடுத்துக் கங்க. உங்களால முடிஞ்சத நீங்க செய்யுங்க.”

கோபமுற்ற காவல்துறை பெண்களுக்குப் பின்னால் வந்த ஆண்களை வண்டியினுள் இழுத்து வீசினர். பூதவுடல் அருகே வந்த ஆண்களையெல்லாம் அடித்து விரட்டி அராசகம் செய்தனர். பெண்கள் காட்டிய உறுதியால் வேறுவழியின்றி காவல்துறை வழிவிட்டு விலகியது. பெண்கள் உற்சாகமாய்ப் பூதவுடலைத் தூக்கிக் கொண்டு ஓடினர். வெற்றிக் களிப்பில் பூதவுடல் சுமைகூட பஞ்சாய்ப் போனது. அழுகையும் கதறலும் ஒலிக்க வேண்டிய நேரத்தில் அம்மக்கள் விசிலடித்துக் கொண்டாடினர் என்றால் அந்தக் கோரிக்கை எவ்வளவு தீவிரமாகி விட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

களத்துப் புறம்போக்கு சென்றது பூதவுடல். பெண்களே அங்கு நன்கு வளர்ந்திருந்த மல்லிகைச் செடிகளை காலால் அழுத்தி அரிவாளால் வெட்டி அப்புறப்படுத்தினர். வெற்றிகரமாக தனலட்சுமியம்மாள் சமாதி அருகே இவ்வுடலை எரியூட்டினர். தோழர்கள் சிவ. காளிதாசனும் பாரதியும் துணைநின்று உதவிகள் செய்தனர். திரும்பிய 36 பெண்களும் இறந்து போனவரின் இரண்டாவது மகன் சந்தானம் உட்பட 26 ஆண்களும் கைது செய்யப்பட்டு காரனோடை கே.பி.கே. திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

தோழர்கள் சிவ. காளிதாசனும் பாரதியும் கே.பி.கே. மண்டபத்திற்கு விரைந்தனர். கைது செய்யப்பட்டவர்களைக் காண அனுமதி மறுக்கப்பட்டது. ‘சமூகநீதித் தமிழ்த்தேசம்’ இதழுக்கான செய்திக்காக வந்திருக்கிறோம் எனத் தெரிவித்தபின் காத்திருக்கும்படி இழுத்தடித்தனர். வழக்குரைஞர் மோகன் வந்து நம் தோழர்கள் போராட்டக்காரர்களைக் காண உதவினார். அவர்கள் ஞானசௌந்தரி உள்ளிட்டோரைப் பார்த்துத் துணிவூட்டி வந்தனர். காவலில் இருந்த பெண்களிடம் காவல்துறையினர் அச்சுறுத்தும் விதத்தில் பேசினர். “உங்கள் தாலிக்கயிற்றை அவிழ்க்க வேண்டும். வேறு மஞ்சக்கயிறு கட்டிக் கொள்ள வேண்டி வரும். உங்கள் துணிகளை அவிழ்த்து உதைப்போம்” என மிரட்டினர். ஜமீன் புஜங்கரராவ் எனும் தனிமனிதன் நலன்காக்க மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கிற காவல்துறையின் முயற்சி வெட்ட வெளிச்சமாயிற்று.

வழக்குரைஞர் மோகன் “உங்களுக்கு வேண்டியவர்கள் சிலர் இருந்தால் அவர்களை விடுவிக்க முயற்சி மேற்கொள்ளலாம்” எனத் தோழர்களிடம் சொன்னார். யாரையாவது விடுவிக்கக் கேட்டுக் கொள்வதாய் இருந்தால் தோழர்கள் முதலில் தோழர் ஞானசௌந்தரியைத் தான் கேட்க வேண்டும். ஆனால் அவர் மீதுதான் காவல்துறை கடுங்கோபம் கொண்டிருந்தது. ததேவிஇ பொதுச் செயலாளர் தோழர் தியாகு பாரதியின் கைப்பேசிக்குத் தொடர்புகொண்டு இப்படிச் சொன்னார்: “எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருந்தாலும் அனைவரையும் வெளியில் எடுக்க வேண்டும். அதற்கான முழுப் பணியையும் நீங்களே ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் இது நம் இயக்கத்தின் கடமை.”

மறுநாள் 5-8-2008 காலை வரை போராட்டக்காரர்கள் விடுவிக்கப்படவும் இல்லை, நீதித்துறைக் காவலுக்கு அனுப்பபப்படவும் இல்லை. வழக்கறிஞர் தோழர் கதிர்க்குமரன் (ததேவிஇ) உள்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அனைவருக்கும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டித் தந்திகள் அனுப்பினார். அதன்பின்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. கைது செய்யப்பட்ட 56 பேரில் பெண்களில் ஞானசௌந்தரி, கோமதி, ஹேமலதா, கஜலட்சுமி, மாலா, முனியம்மா, பரமேஸ்வரி, கலா, கோமலா, விஜயா, சாவித்திரி, செல்வி என 12 பேரையும் ஆண்களில் இரவி, டெல்லி, சுப்பன், இரவி, கண்ணன், சந்தோஷ், எத்திராஜ், பாலாஜி, முத்து, முருகேசன் என 10 பேரை மட்டும் நீதித்துறைக் காவலுக்கு அனுப்பக் காவல்துறை முடிவு செய்திருந்தது. அப்படி அனுப்பப்பட்டால் உடனே வெளியில் எடுக்க அனைத்து ஆயத்தப் பணிகளையும் தோழர் சிவ. காளிதாசன் செய்து கொண்டிருந்தார்.

காலை 11 மணியளவில் தோழர் தியாகு கே.பி.கே. மண்டபம் வந்து சேர்ந்தார். சோத்துப் பெரும்பேடு மக்கள் கோபத்தோடு மண்டபம் முன் திரண்டுவிட்டிருந்தனர். அனைவரும் தோழர் தியாகுவிடம் பிரச்சனை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு, ஏ.எம். கோபு, சேதுராமன், மருத்துவர் சி.ஆர். இரவீந்திரநாத் உள்ளிட்ட தோழர்கள் அங்கே வந்து சேர்ந்தனர். அனைவரும் உள்ளே செல்ல முற்பட்டனர். காவல்துறை தடுத்தது. மக்கள் கோபத்துடன் குரலெழுப்பிய பின் காவல்துறை வழிவிட்டது. நல்லக்கண்ணு உள்ளிட்ட தோழர்களும் தோழர் தியாகுவும் போராட்டக்காரர்களைச் சந்தித்து உரையாடினர். தோழர் நல்லக்கண்ணு துணைக் கண்காணிப்பாளரிடம் பேசி சொந்தப் பிணையில் விடுவிக்கும் முடிவைப் பெற்று வந்தார். போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஜமீன் புஜங்கரராவின் ஆதிக்கத்தில் உள்ள களத்துப் புறம்போக்கில் சுடுகாடு அமைய வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை. பெண்கள் காட்டிய போர்க்குணத்திற்கு உரிய வெற்றி கிடைத்தாக வேண்டும். இது குறித்துச் சரியாகத் திட்டமிட்டு கோரிக்கைத் தெளிவோடு மக்கள் திரள் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வெற்றி காண சேர்ந்து உழைப்போம் எனப் போராட்டக்காரர்களிடம் ததேவிஇ தோழர்கள் உறுதி கொடுத்துத் திரும்பினர். கைதுக்கும் அச்சுறுத்தலுக்கும் பின், போராட்டம் குறித்துத் தோழர் ஞானசௌந்தரியிடம் கேட்டபோது அவர் சொன்னார்:

“காவல்துறையின் மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் பணிய மாட்டோம். இனி நாங்கள் போராட வேண்டியது காவல்துறையிடமல்ல. ஆளும் வர்க்கத்திடம்தான் என்பதைப் புரிந்து கொண்டோம். அதற்கேற்ற முறையில் எமது கோரிக்கை வெற்றிபெறும் வரை தொடர்ந்து போராடுவோம். வெற்றிதான் எங்கள் இலக்கு. அதுவரை எங்கள் உறுதி குலையாது.”


தவறான அணுகுமுறை!

விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியத் தலைவர் தோழர் நீலமேகம் இரவு கே.பி.கே. மண்டபம் வந்தார். காலனி மக்களுக்கு இப்போராட்டத்தில் தொடர்பில்லை. அவர்கள் வேலை முடிந்து வரும்போது பிடித்து வரப்பட்டுள்ளனர். அதனால், அவர்களை விடுவிக்க வேண்டும் என ஆய்வாளர் சங்கரிடம் முறையிட்டார். அதற்காகத் தொடர்ந்து வாதாடினார். காலனி மக்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். மக்கள் ஒன்றுபட்டுப் போராடுகிற தருணத்தில் இவ்விதம் நிலை எடுப்பது சரியாகுமா? இது தவறான அணுகுமுறை என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். இவ்வாறான நடைமுறையைச் சீர்செய்வதே ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும். வெற்றி பெற உதவும்.


பண பலமா வெல்லும்?

சோத்துப்பெரும்பேடு சிற்றூரில் 200 ஏக்கருக்கு மேல் அரசுப் புறம்போக்கு நிலம் இருப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த நிலத்தின் பெரும்பகுதியை தன் நிலமாக்கிய ‘பெருமை'யை உடையவர்தான் ஜமீன் பரம்பரை புஜங்கரராவ். இவர் இந்த ஊரின் முன்சீப்பாகப் பல ஆண்டுகள் இருந்து நிலங்களை வளைத்துப் பட்டா போட்டுள்ளார் எனவும் ஊர்மக்கள் சொல்கிறார்கள். வாசு மூன்று முறை ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது புஜங்கரராவின் பணபலத்தால்தான் என்பது ஊர் மக்களின் ஒப்புதல். ஊர் மக்கள் கேட்கும் களத்துப் புறம்போக்கை புஜங்கரராவ் ஆண்டுக்கு ரூ.40,000 குத்தகையாகப் பெற்றுக் கொண்டு டெல்லி என்பவரிடம் விட்டுள்ளாராம். புஜங்கரராவ், வாசு, டெல்லி ஆகிய மூவருமே களத்துப் புறம்போக்கு நிலம் (சர்வே எண்.40) சுடுகாடு - இடுகாடு ஆக விடாமல் தடைபோட்டு வருகிறார்கள். இந்த மூவர் கூட்டணியே வட்டாட்சியர் போன்றோருக்குக் கையூட்டு தந்திருப்பதாகக் காற்றுவாக்கில் ஒரு தகவல். மக்கள் பணத்தையே மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தி ஆண்டைக்கு வாலாட்டும் அதிகார வர்க்கத்தோடு மோதும் சோத்துப்பெரும்பேடு மக்களின் போராட்டம் வெல்க!

அங்கேயும் புலிப் பூச்சாண்டி!

சோத்துப்பெரும்பேட்டில் 19.07.2008இல் தனலட்சுமியம்மாள் மறைந்த போது, அவரது உடலை வைத்துக் கொண்டு ஊர் மக்களும் இளைஞர் பெருமன்றத் தோழர்களும் நடத்திய சாலை மறியலில் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் சிவ. காளிதாசனும் கலந்து கொண்டார். ஊர்ப் பெண்கள் மல்லிகைத் தோட்டத்தில் குழிதோண்டி உடலைப் புதைத்த போதும் அவர் உடனிருந்தார். அடுத்து அம்மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாக 2007 சூலை 27ஆம் நாள் ததேவிஇ சார்பில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடாயிற்று. ததேவிஇ பொதுச் செயலாளர் தோழர் தியாகு அக்கூட்டத்தில் உரையாற்றுவதாக இருந்தது. செய்தியறிந்த காவல்துறையினர் பதறிப் போய், ஊர்ப் பெரியவர்களை அழைத்து, ஐயோ, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமா? அவர்கள் தமிழ்த் தேசியத் தீவிரவாதிகள், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தெரியுமா? அவர்கள் நடத்தும் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொண்டால், சுடுகாட்டுப் பிரச்சினையில் எங்களால் உங்களுக்கு உதவ முடியாது என்று அச்சுறுத்தி விட்டனர். ஊர் மக்களும் இளைஞர் பெருமன்றத்தினரும் கேட்டுக் கொண்டதால் ததேவிஇ பொதுக்கூட்டத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. எப்படியோ, சோத்துப்பெரும்பேட்டு மக்களின் சுடுகாட்டு உரிமைப் போராட்டம் வெல்லும்போது, அதில் புலிகளுக்கும் பங்கிருக்கும்! இதற்காகக் காவல்துறைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஊராட்சி மன்றத் தலைவரின் வன்முறை வெறியாட்டம்

சோத்துப்பெரும்பேடு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து நீக்கப் பெற்ற வாசுவின் அண்ணன் மகன் சந்தோஷ், மருமகன் இ. கருணாகரன் ஆகியோர் வாக்காளர் சேர்க்கை நடந்த போது கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் முன்னிலையில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கண்ணனிடம் தகராறு செய்தனர். இதையே காரணமாக வைத்து வாசு, சந்தோஷ், ஏ. கருணாகரன், வி. சரவணன், இராஜா, இராமமூர்த்தி, குமார், பார்த்திபன், சுரேஷ் மற்றும் சிலரும் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தாக்கினர். எதிர்பட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் துணைவி துளசியை வாசு கீழே தள்ளி ஏறி மிதித்து தாக்கினார். அவரை இழுத்து அப்புறப்படுத்திய 14 வயது ஜெயக்குமார் (10ம் வகுப்பு படிக்கும் மாணவன்) தலையில் ஓங்கிக் கத்தியால் தாக்கினார் கருணாகரன். இரத்த வெள்ளத்தைப் பார்த்து அனைவரும் ஓடினர். வெட்டுப்பட்ட ஜெயக்குமாரின் அப்பா இராஜா, சித்தப்பா ஆனந்தன், கோவிந்தசாமி, வட்ட உறுப்பினர் மாலதி, ஜான்சன், சீனிவாசன் ஆகியோரையும் அக்கும்பல் தாக்கியது.

தாக்கப்பட்டவர்களில் ஐவரையும் தாக்கியவர் களில் ஐவரையும் காவல்துறை கைது செய்து சிறையி லடைத்தது. வெட்டுப்பட்ட மாணவன் ஜெயக் குமாருக்கு சரியானபடி சிகிச்சை அளிக்கவிடாமல் அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்புவதில் வாசுவின் ஆட்கள் குறியாக இருந்துள்ளனர். தாய் தந்தை இருவருமே கூலித் தொழிலாளிகள். ஜெயக்குமார் தம்பி எட்டாம் வகுப்பு படிக்கிறார். குடிசை வீடு. பெற்றோர் இருவரின் கண்ணெதிரில் மூத்த மகன் வெட்டப்பட்டதால் அவர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். காவல்துறை வாசு குழுவினர்க்கே ஆதரவாக உள்ளது. அதோடு இந்தச் சுடுகாடு - இடுகாடு சிக்கலைத் திசைத் திருப்பவே இந்தக் கொலைச் செயல்புரிந்திருக்கிறார் வாசு. இதைத் தன் சாதிக்கும் தாழ்த்தப்பட்ட சாதிக்குமான சிக்கலாய் உருவாக்கித் திசை திருப்ப முயல்கிறார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்பே இல்லாத அனைத்திந்திய பெருமன்றத் தலைவர் தோழர் சிவசங்கரும் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப் பட்டார். சிவசங்கரைத் தாக்க முயன்று தோற்றுப் போயினர் வாசு குழுவினர். இன்னொரு நாள் இவரைக் கவனித்துக் கொள்ளலாம் என்றும் கறுவி விட்டுப் போயினர்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com