Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhthesam
ThamizhthesamSamooka Neethi Thamizh Thesam
ஏப்ரல் 2009
வழக்கறிஞர் போராட்டம்: தடைகளை வென்ற ஒற்றுமை!
செங்காட்டான்

தமிழக வழக்கறிஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இவ்வளவு நீண்ட நாள் இவ்வளவு ஒற்றுமையாகத் தமிழகமெங்கும் வழக்கறிஞர்கள் போராடியதை இப்போதுதான் பார்த்தோம். சென்னை மாநகரக் காவல் துறையின் உயர் அதிகாரிகள் இருவரை இடைநீக்கம் செய்யவும், தடியடி நடத்திய காவல் துறையினர் அனைவர் மீதும் துறைசார் நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை வழக்கறிஞர் போராட்டத்துக்குக் கிடைத்துள்ள வெற்றியாகும். வெற்றியைக் கொண்டாடும் போதே போராட்டப் படிப்பினைகளை எண்ணிப் பார்த்திடவும் வேண்டும்.

வழக்கறிஞர்களின் போராட்டத்தை முறியடிக்க தி.மு.க. வழக்கறிஞர்கள் செய்த கருங்காலித்தனம் பெரிய அளவில் எடுபடவில்லை. வழக்கறிஞர்களிடையிலும் தி.மு.க. செல்வாக்கிழந்து போயிருப்பதைத்தான் இந்தக் கருங்காலித்தனம் வெளிப்படுத்தியது. வழக்கறிஞர் போராட்டத்தால் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடந்தது உண்மைதான்! வழக்காடும் பொது மக்களுக்கு இதனால் இழப்பு என்பதில் ஐயம் இல்லை. அதேபோது வழக்கறிஞர்களின் வாழ்க்கையே நீதிமன்றத்தைச் சார்ந்துள்ளது என்பதையும் மறப்பதற்கில்லை. இந்நிலையிலும் வழக்கறிஞர்கள் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் கட்டுக்கோப்பாகவும் நீடித்துப் போராடினார்கள் என்றால், அதற்கு மிக அழுத்தமான காரணம் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். வழக்கறிஞர் போராட்டத்தைக் குறை கூறுவோரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசின் அணுகுமுறையே இத்தனைச் சிக்கலுக்கும் காரணம். இப்போதும் அதன் போக்கு சிக்கலை வளர்க்கக் கூடியதாகவே உள்ளது. உயர் நீதிமன்ற ஆணையை உரிய நேரத்தில் செயலாக்குவோம் என்று முதல்வர் சொல்வதன் பொருள் உடனே செயலாக்கப் போவதில்லை என்பதுதான். உடனே இடைநீக்கம் செய்திருக்க வேண்டிய இரு அதிகாரிகளையும் அப்படிச் செய்யாமல் பாதுகாக்கும் முயற்சியே அது.

மறுபுறம், நீதித்துறை வழக்கறிஞர்களுக்கு நீதி கிடைக்கச் செய்திட உடனே எதுவும் செய்ய வில்லை. நீதித் துறையின் ஏனோதானோ என்ற அணுகுமுறைக்குச் சான்றாக, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அறவாணர் பி.என். சிறிகிருஷ்ணா அளித்துள்ள இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது. இந்த அறிக்கையைத் திறனாய்வு செய்வதன் ஊடாக வழக்கறிஞர் போராட்டத்தின் நியாயத்தை நாம் உய்த்துணரலாம்.

2009 பிப்ரவரி 19ஆம் நாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிகள் பற்றி விசாரித்து ஒரு வாரத்துக் குள் இடைக்கால அறிக்கை தருமாறு இந்திய உச்ச நீதிமன்றம் 2009 பிப்ரவரி 26ஆம் நாள் சிறிகிருஷ்ணாவைப் பணித்தது. அவர் பிப்ரவரி 28இலும் மார்ச் முதல் நாளும் சென்னையில் வழக்கறிஞர்களையும் நீதிபதி களையும் உயர்நீதிமன்ற அலுவலர்களையும் காவல்துறை அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் பொது மக்களை யும் நேர்கண்டு செய்திகள் சேகரித்தார். அவரிடம் ஏராளமான முறையீட்டு விண்ணப்பங்கள், வாக்கு மூலங்கள் நிகழ்ச்சியைப் படம் பிடித்த குறுவட்டுகள், நிழற்படங்கள் தரப்பட்டன.

பிப்ரவரி 19 நிகழ்ச்சிகளின் பின்னணியை கிருஷ்ணா தனது அறிக்கையில் எடுத்துக்காட்டும் போதே அவரது காழ்ப்பு வெளிப்பட்டு விடுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் கீழமை நீதி மன்றங்களிலும் வழக்கறிஞர்களாக இருப்போரில் சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின்பால் பற்றுக் கொண்டவர்கள் என்றும், இவர்கள் 2008 நவம்பர் தொடங்கிப் புலிகளுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிராகவும் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங் களும் நடத்தி வந்தார்கள் என்றும் கிருஷ்ணா எழுதுகிறார்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனக்கொலைப் போரை நிறுத்த வேண்டும் என்பது சில வழக்கறிஞர்களின் கோரிக்கை மட்டுமல்ல, அது தமிழக மக்கள் அனைவரின் கோரிக்கையும் ஆகும். அக்டோபர் 14இல் தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முதல் கோரிக்கையே இதுதான். இந்தக் கோரிக்கைக் காகத்தான் மனிதச்சங்கிலி போராட்டமும் நடந்தது.

தமிழக மக்களின் இந்தக் கோரிக்கையை இந்திய அரசு அலட்சியப்படுத்திய நிலையில், மாணவர்கள், வணிகர்கள் என்று பல தரப்பினரும் போராடத் தொடங்கினர். இந்த வரிசையில்தான் வழக்கறிஞர் களும் களத்திற்கு வந்தனர். வழக்கறிஞர் சங்கங் கள், முறையாகக் கூடிப் பேசித் தீர்மானம் இயற்றித் தான் உண்ணாநிலை, ஆர்ப்பாட்டம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றனவே தவிர, இவை ஏதோ சில புலி ஆதரவு வழக்கறிஞர்களால் மட்டும் நடத்தப்பட்டவை அல்ல. வழக்கறிஞர்களில் சிலர் பிரபாகரன் பிறந்தநாளைக் கொண்டாடினார்கள் என்பதைக் கூட கிருஷ்ணா மறவாமல் பதிவு செய்கிறார். பிரபாகரன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் எதிரியாக அறிவிக்கப்பட்டவர் என்பதை யும், அவர் கவனமாக நினைவு படுத்துகிறார். எல்லாம் எதற்காக? இனக் கொலைப் போரிலிருந்து ஈழத் தமிழர் களைக் காப்பாற்ற அனைத்து வழக்கறிஞர்களும் முறைப் படி முடிவெடுத்து நடத்திய அறப்போராட்டங்களை ஏதோ ஒரு சில புலி ஆதரவு வழக்கறிஞர்களின் குட்டிக் கலாட்டாவாகக் குறுக்கிச் சிறுமைப்படுத்த கிருஷ்ணா முயல்கிறார். பின்னர் நிகழ்ந்த காவல் துறையின் கொடுந் தாக்குதலை நியாயப்படுத்துவது அல்லது அத் தாக்குதலின் கடுமையை முடிந்த வரை குறைத்துக் காட்டுவதே அவரது உண்மையான நோக்கம். வெறி நாய் என்று பட்டம் சூட்டி விட்டால் அடித்துக் கொல்வது எளிதாகி விடுமல்லவா?

பிப்ரவரி 19 நிகழ்ச்சியின் உண்மையான பின்னணி என்ன? ஈழத்தமிழர் இனக்கொலைக்கு இந்திய அரசும் உடந்தையாக இருப்பதை அறிந்து தமிழக மக்கள் கொதிப்புற்றார்கள். அந்தக் கொதிப்பின் ஒரு வெளிப்பாடுதான் வழக்கறிஞர் களின் போராட்டம். ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்களைத் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளத் தமிழக ஆட்சித் தலைமை மேற் கொண்ட முயற்சிகள் தோற்றுப் போயின. வழக்கறிஞர் போராட்டத்தைத் திசைமாற்ற முடியாத நிலையில் அப்போராட்டத்தை அடக்கி ஒடுக்கத் துடித்தது அரசு. அடக்குமுறையை ஏவுவதற்கு ஒரு வாய்ப்பு வரட்டும் என அது காத்திருந்தது. இந்த உண்மைப் பின்னணியை வெளிக்கொண்டு வர விடாமல் கிருஷ்ணாவைத் தடுத்தது எது? நிகழ்வின் பின்னணியைத் திரித்துச் சொல்வதில் அவர் சுப்ரமணியசாமியின் குரலாகவே ஒலிக்கிறார்.

வழக்கறிஞர் போராட்டம் தீவிரமாகத் தொடர்ந்து நடைபெற்றதற்கு அவர்களின் சமூக இயைபில் ஏற்பட்டுள்ள மாற்றமும் ஒரு காரண மாகும். முன்பெல்லாம் பார்ப்பனர்களும் பிற மேல்சாதியினருமே பெருமளவில் சட்டத் தொழில் செய்ய வந்தனர். இப்போது அந்த நிலை வெகு வாக மாறி விட்டது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராள மாக இத்தொழிலுக்கு வந்துள்ளனர். மேலும் இன்று வழக்கறிஞர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். ஒடுக்குண்ட சமூகத்தினரும் இளை ஞர்களும் எந்த ஒரு போராட்டத்திலும் முன்னுக்கு நிற்பது இயல்பே.

முன்னாள் நீதிபதி அறவாணர் ராஜிந்தர் சச்சார் கூறி யிருப்பது போல், இளம் வழக்கறிஞர்களும் மற்ற இளைஞர்களைப் போன்ற வர்களே - எண்ணத்திலும் செயலிலும். தமிழ் இன உணர்வோடு நடத்தப்பட்ட போராட் டத்தில் அவர்கள் முனைப் புடன் முன்னுக்கு நின்றதைச் சகித்துக் கொள்ள முடியாத வர்கள்தாம் அவர்களை மட்டும் பொறுக்கி எடுத்துப் பெயர் சொல்லி தனிமைப் படுத்த முயன்றனர். கிருஷ்ணாவும் இதையே செய்கிறார்.

பிப்ரவரி 17ஆம் நாள் நடை பெற்ற சிறியதொரு நிகழ்வைக் காவல்துறைப் பயன்படுத்திக் கொண்டது. இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் அவர்கள் காத் திருந்தனர். தில்லை நடராசர் கோவில் வழக்குத் தொடர்பாக சுப்ரமணியசாமி நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். சமூக நீதிக்கும் தமிழ் இனத்திற்கும் எப்போதும் பகைநிலையில் இருப்பதோடு, அவ்வப்போது தமிழ்இன உணர்வாளர்களைச் சீண்டி ஆத்திரமூட்டுவதும் அவருக்கு வாடிக்கை. முன்பொரு முறை விடுதலைப் புலிகளை “சர்வதேசப் பறையர்கள்” என்று சாடினார். நளினி விடுதலை கோரும் வழக்கில் தேவையில்லாமல் தலையிட்டார். முத்துக்குமார் தீக்குளித்ததைப் பற்றிக் கேவலமாகக் கொச்சைப்படுத்தி அறிக்கை விட்டார். சமய மறுப்பாளரும் கூட சமய நம்பிக்கையுள்ளவர் மனத்தைப் புண்படுத்தும் வகையில் பேசுவதில்லை. ஆனால் இந்த இனப் பகைவர் நம் இன மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதை அன்றாட விளையாட்டாகக் கொண்டவர். அவர் இப்போது நீதிமன்றத்துக்கு வந்ததும் கூட தில்லைக் கோயில் தீட்சிதர்களிடமே இருக்க வேண்டும் என்று வாதிடுவதற்காகத்தான்.

நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த பின்னணியில் ஆணவத்தோடு அநீதிக்காக வாதிட வந்த அவரைக் கண்டு இளம் வழக்கறிஞர்கள் ஆத்திரமுற்றது இயல்பே. அவர்கள் சு.சாமிக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர். அவர் அவர்களைப் பற்றி இழிவாகப் பேசி ஆத்திர மூட்டியுள்ளார். இந்தச் சூழலில் யாரோ சிலர் அவர் மீது முட்டை வீசி உள்ளனர். நீதிபதி அறவாணர் சந்துரு இதைக் கண்டித்து, வழக்கறிஞர் களைக் கலைந்து போகச் செய்தார். சு.சாமி இதுபற்றி முறையீடு எதுவும் தரவில்லை. நீதிபதி சந்துரு தலைமை நீதிபதிக்கு (பொறுப்பு) வழங்கிய அறிக்கையில் எந்த வழக்கறிஞர் பெயரும் குறிப்பிடவில்லை. ஆனால் ஏடு களில் சுப்ரமணியசாமி மீது தாக்குதல் என்று பரபரப்புச் செய்தி வெளியானது.

வழக்கறிஞர்களின் ஒன்று பட்ட போராட்டம் உறுதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பகைவர்க்கு வாய்ப்புத் தருவது போல் நடந்துவிட்ட இந்த நிகழ்வை இளம் வழக்கறிஞர்கள் தவிர்த்திருந்தால் நல்லது என்பதே நம் கருத்து. ஆனால் இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதை விடுத்து ஒட்டு மொத்த வழக்கறிஞர்களை யும் பழிவாங்குவதற்கு அரசும் காவல்துறையும் முடிவெடுத்ததுதான் பிப்ரவரி 19 கொடுந்தாக்குதலுக்கு உண்மைக் காரணம்.

பிப்ரவரி 19 நிகழ்வையும் கூட வழக்கறிஞர் களை வன்முறையாளர்களாகப் படம் பிடித்துக் காட்டுவதற்கே கிருஷ்ணா பயன்படுத்திக் கொள் கிறார். முட்டை வீச்சினால் பாதிக்கப்பட்டவர் முறையீடே செய்யாத நிலையிலும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. ரஜினிகாந்த், விஜயேந் திரன், கினி இமானுவேல், புகழேந்தி, வடிவம்மாள், செங்கொடி, கயல் உள்ளிட்ட 20 வழக்கறிஞர்கள் மீது பல்வேறு தண்டனைச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மறுநாள் கினி இமானுவேலை மட்டும் கைது செய்தனர்.

இதற்கிடையில் பிப்ரவரி 19 முதல் நீதிமன்றப் புறக்கணிப்பைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்ப வழக்கறிஞர்கள் முடிவு எடுத்தனர். அன்று நீதிமன்றமும் செயல்பட்டது. 19 பகல் 2.30 மணி யளவில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் கருப்பன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் உயர் நீதி மன்றக் காவல் நிலையத் துக்கு (ஆ4) சென்றனர். சுப்ரமணிய சாமி தன்னை இழிவாகப் பேசினார் என்று வழக்கறிஞர் ரஜினிகாந்த் முறையீடு அளித்தார். இதைத் தொடர்ந்து வாக்கு வாதமும் தள்ளுமுள்ளும் நிகழ்ந்தன.

அப்போதே காவல்துறை யினர் பெருந்தொகையாக நீதிமன்றத்துக்குள் நின்றதை கிருஷ்ணா பதிவு செய்கிறார். அவர்கள் கையில் நீண்ட தடி வைத்திருந்தனர், தலைக்கவசம் அணிந்து இருந்தனர், கல்வீச்சிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான கேடயமும் வைத்திருந்தனர். இதையும் கிருஷ்ணா பதிவு செய்கிறார். ஆனால் இத்தனைக் காவல் துறையினர் தடி, தலைக் கவசம், கேடயத்தோடு அங்கு கொண்டுவந்து குவிக்கப் பட்டு இருந்தது எதற்காக? யாருடைய ஆணைப் படி? என்ற வினாவை எழுப்பி விடை தேடிக் கண்டுபிடித்திருந்தால் கிருஷ்ணாவின் அறிக்கை உண்மையை வெளிப்படுத்தியிருக்கும். ஆனால் அவர் அப்படி எதுவும் செய்யவில்லை.

வழக்கறிஞர்களைத் தாக்கு நிலையிலும், காவல் துறையினரைத் தற்காப்பு நிலையிலும் காட்டுவதி லேயே அவர் குறியாய் இருப்பதற்கு இந்த ஒரு சான்றே போதும். சுப்ரமணியசாமி தாக்குதல் வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட வழக்கறிஞர்களை மட்டும் தளைப் படுத்துவதற்கு மாறாக, காவல் நிலையத்துக்கு வந்த அத்தனை வழக்கறிஞர்களையும் சுற்றி வளைத்து வலுவந்தமாய் வண்டியில் ஏற்றக் காவல்துறை முயன்றது ஏன் என்ற வினாவை யும் கிருஷ்ணா எழுப்பவில்லை.

அடுத்து நடந்த தாக்குதலின் செய்திகள் அனைவரும் அறிந்தவை. இந்தத் தாக்கு தலை வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்குமான மோதலாகச் சித்திரிக்க கிருஷ்ணா முயல்கிறார். தடியோடும் கேடயத் தோடும் தாக்கிய காவல் துறையினரோடு மோதுவ தற்கு வழக்கறிஞர்களிடம் கருவி ஏதும் இல்லை. தடியடியோடு கல்லடியும் நடத்திய காவல்துறையினரால் விரட்டியடிக்கப்பட்ட போது ஒருசில வழக்கறிஞர் கள் எதிர்த்து நின்று கல் வீசியதில் எந்தத் தவறும் இல்லை. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம் அனுமதிக்கும் சிறும வன்முறை என்ற வரம்பைத் தாண்டிக் கொலைவெறித் தாண்டவம் ஆடிய காவல்துறைக்கு வழக்கறிஞர்கள் காட்டிய எளிய எதிர்ப்பின் சிறிய வடிவம்தான் அவர்களின் கல்வீச்சு. இஸ்ரேலியத் தாங்கிகளை யும் பீரங்கிகளையும் எதிர்த்து பாலத்தீன இளைஞர் களும் இளம் பெண்களும் சிறுவர் சிறுமியரும் கல்வீசுவார்கள் அல்லவா, அதுபோன்ற எதிர்ப்புத்தான் இதுவும். ஆனால் ‘இந்து’ போன்ற நாளேடுகளும் வடநாட்டுத் தொலைக்காட்சி ஊடகங்களும் இந்தக் கல்வீச்சுக் காட்சிகளை மிகையாக முன்னிறுத்தி வழக்கறிஞர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முயன்றன அல்லவா, அதையேதான் கிருஷ்ணாவும் செய்கிறார். வழக்கறிஞர்களின் வன்முறைக்கு எதிர் வினையாகவே காவல்துறையினரின் தடியடித் தாக்குதல் நடைபெற்றது என்று காட்டவே கிருஷ்ணா முனைகிறார்.

தடியடி தொடங்கிய பிறகு காவல்துறை எப்படி வெறியாட்டம் ஆடியது என்ற செய்தியை கிருஷ்ணாவும் பதிவு செய்கிறார். ஆனால் அந்த இடத்திலும் ஒழுங்கற்ற வழக்கறிஞர் கும்பலைப் போலவே காவல் துறையினரும் நடந்து கொண்ட தாகச் சொல்கிறார். திட்டமிட்ட வன்முறைப் பயன்பாட்டுக்கு என்றே பயிற்சி பெற்ற காவல் துறையினரையும் எதிர்பாராமல் வந்த தாக்கு தலுக்குத் திட்ட ஒழுங்கு ஏதும் இன்றி எதிர்வினை யாற்றிய வழக்கறிஞர்களையும் ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியே சரிநிகராக வைத்துப் பேசுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒரு நீதிமன்ற விவாதத்தில் வழக்கறிஞருக்கு எப்படி எந்தக் காவல் துறை அதிகாரியும் நிகர் நிற்க முடியாதோ, அதே போலத்தான் வன்முறை மோதலில் காவல்துறை யினருக்கு எந்த வழக்கறிஞரும் நிகர் நிற்க முடி யாது. கீழமை நீதிமன்றங்களில் காவல் துறை சொல்வதை எல்லாம் நம்பி ஏற்று கொள்ளக் கூடிய நீதிபதிகளை ‘போலீஸ் நீதிபதிகள்’ என்று சொல்வது உண்டு. இந்த அறிக்கையைப் பொறுத்த வரை கிருஷ்ணா வும் அப்பட்டமான போலீஸ் நீதிபதியாகவே செயல்பட்டுள்ளார்.

தடியடி என்ற பெயரில் காவல்துறையினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை விவரிப்பதற்கு கிருஷ்ணா தனது அறிக்கையில் நான்கு பக்கங்களை ஒதுக்கியுள்ளார். அவர்கள் என்னவெல்லாம் செய் தார்கள்? வழக்கறிஞர்களை ஈவு இரக்கம் இன்றித் துரத்தித் துரத்தி அடித்தார்கள், கீழ் தளத்தில் அடித்தார்கள், முதல் மாடித் தாழ்வாரங்களுக்கு விரட்டிச் சென்று அடித்தார்கள், சில வழக்கறிஞர்களைப் பிடித்து இழுத்து வந்து சூழ்ந்து நின்று அடிமழை பெய்தார்கள், வழக்கறிஞர்களை நோக்கிக் கல் வீசினார்கள், நீதிமன்றக் கட்டடங்களின் சாளரங் களை நோக்கிக் கல் வீசினார்கள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த ஊர்திகளை வேண்டுமென்றே அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தி னார்கள், தடியடியில் தலையில் தாக்கக் கூடாது என்ற விதியைப் பற்றிக் கவலைப்படாமல் தலை யில் தாக்கி ஏராளமான வழக்கறிஞர்களுக்கு மண்டை உடையச் செய்தார்கள். நீதிமன்றக் கூடங்களுக்குள் நுழைந்து மேசை, நாற்காலிகள், மின் விசிறிகள், கணினிகள் என்று கண்ணில் பட்ட வற்றை எல்லாம் அடித்து நொறுக்கினார்கள். குழந்தைக் காப்பகம் கூட அவர்களின் கல்லெறிக்குத் தப்பவில்லை.

உயர் நீதிமன்ற வளாகத்திற்கு உட்பட்ட வழக் கறிஞர்களின் பணி அறைகளுக்குள் புகுந்து அனைத் தையும் அடித்து நொறுக்கியதோடு மனநிறைவு அடையாமல், காவல்துறையினர் உயர் நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள லிங்கிச் செட்டித் தெருவிலும், தம்புச் செட்டித் தெருவிலும், ஆர்மீனியன் தெருவிலும், சுங்குராம செட்டித் தெருவிலும், கொண்டிச் செட்டித் தெருவிலும், பேக்கர் தெருவிலும் அமைந்துள்ள வழக்கறிஞர் களின் பணி அறைகளுக்குள் நுழைந்து எல்லா வற்றையும் சேதப்படுத்தி, உள்ளே இருந்த வழக்கறிஞர்களையும் அடித்து நொறுக்கினர். பெண் வழக்கறிஞர்களையும் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. நீதிமன்றப் பணியாளர்கள், உணவகப் பணியாளர்கள் என்று அத்தனைப் பேரையும் கண்மூடித்தனமாக அடித்தனர். உயர் நீதிமன்றநீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தனை யும் அடித்தனர். வழக்கறிஞர் களில் சிலர் தலைமை நீதிபதி அறைக்கு விரைந்து சென்று முறையிட்டனர். அவரும் மற்ற நீதிபதிகளும் பதிவாளர் அலுவலகமும் காவல்துறைத் தலைமை அதிகாரிகளோடு தொடர்பு கொள்ள முயன்றும் பயனில்லை. முடிவில் காவல் துறை ஆணையரின் தொடர்பு கிடைத்த போது காவல் துறையினர் அனைவரும் உயர் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று தலைமை நீதிபதி ஆணையிட்டார்.

காவல்துறையினர் நடத் திய கொடுந்தாக்குதல் பற்றி கிருஷ்ணா பதிவு செய்யத் தவறிய பல செய்திகள் மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு அளித்துள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. மாலை 4 மணி சுமாருக்கு நீதிபதி சுதாகர் வெளியே வந்து தாக்குதலை நிறுத்த முயன்றார். பிறகு தலைமை நீதிபதியும் வெளியே வந்தார். சுமார் 15 நிமிடத்திற்குள் தாக்குதல் நிறுத்தப்பட்டது. குருதி ஒழுக சுமார் பத்து வழக் கறிஞர்கள் வெளியே கொண்டுசெல்லப்பட்டனர். நீதிபதிகள் திரும்பிச் சென்றபின் காவல்துறை யினரின் வெறியாட்டம் மீண்டும் தொடங்கியது. மாலை 5.30 மணி சுமாருக்கு ஐந்து நீதிபதிகள் வெளியே வந்து சமாதானம் செய்ய முயன்றனர். அவர்களில் ஒருவரான ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் காவலர் தடியால் தாக்கப்பட்டுக் காயம் அடைந்தார். மற்ற நீதிபதிகளும் தாக்கப்பட்டனர். “அவர் நீதிபதி, அவரை அடிக்காதீர்கள்” என்று கூவி அவரைக் காப்பாற்ற முயன்ற இளம் வழக்கறிஞர் களும் தாக்கப்பட்டனர். “எந்தத் தேவடியா மகனா இருந்தா என்னடா” என்று சொல்லிக் காவல் துறையினர் அடித்தார்களாம்.

பெண் நீதிபதி ஒருவரை “நீதிபதியா இவ, ஆயா மாதிரி இருக்கா” என்று சொல்லி அடித்தார்களாம். பெண் வழக்கறிஞர்களை “தேவடியா சிறுக்கிகளா” என்று திட்டிக் கொண்டே அடித்தார்களாம். தடியடி நடந்த போது உயர் நீதிமன்ற வளாகத்தின் வாயிற் கதவுகளைக் காவல்துறையினர் பூட்டி வைத்து யாரையும் வெளியே விடாமல் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியோ தப்பி என்.எஸ்.சி. போஸ் சாலைக்கு வந்து விட்டவர்களையும் விரட்டி வந்து அடித்தனர். வழக்குரைஞர்களுக்குச் சீருடை தைக்கும் தையல் கடை, ஒளிப்படி எடுத்துக் கொடுக்கும் டால்பின் செராக்ஸ் ஆகிய கடைகளையும் உடைத்து அங்கிருந்தவர்களையும் அடித்து நொறுக்கினர். தமிழ் ஓசை கார்த்திக் பாபு, மக்கள் தொலைக்காட்சி ஜோதிமணி, செயராமன், நக்கீரன் நிருபர் தமிழ்ச் சுடர், நிழற்படக்காரர் ஆகியோரும் தாக்கப்பட்டனர். காவல் துறையினரால் அடித்து நொறுக்கப்பட்ட கார்களும் மோட்டார் சைக் கிள்களும் இருநூறுக்கும் மேல். பி4 காவல்நிலையத் திற்கு தீவைத்ததும் காவல்துறைதான் என்று ஐயுறக் காரணம் உள்ளது.

பொதுமக்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டிய வழக்கறிஞர்களே உயர் நீதிமன்ற வளாகத் திற்குள் இவ்வளவு நீண்ட நேரம் - குறைந்தது மூன்றரை மணி நேரம் - இவ்வளவு கொடிய முறையில் தாக்கப் பட்டு இருந்தும், இதை ஓரளவுக் காவது கிருஷ்ணா அறிக்கை ஒப்புக் கொண்டு இருந்தும், இதற்குப் பொறுப்பானவர்களை அடையாளம் காட்டி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அது எவ்விதப் பரிந்துரையும் வழங்கவில்லை.

தடியடிக்கு உத்தரவிட்டது யார்? என்று உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு தமிழக அரசிடமிருந்து பதில் இல்லை. ஜெயலலிதாவிற்கு விட்ட மறுப்பு அறிக்கையில் உச்ச நீதிமன்றத்திற்குப் பதில் சொல்லி விட்டதாக முதல்வர் கருணாநிதி சொன்னது பொய் என்று இப்போது தெரிந்து விட்டது. தடியடிக்கு உத்தரவிட்டது யார் என்ற வினாவிற்கு கிருஷ்ணா அறிக்கை விடை தரவில்லை. விடை காணும் முயற்சிகூட இல்லை என்பது அதிர்ச்சிக்குரியது. வழக்கறிஞர்களால் குற்றஞ்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்கு அரும்பாடுபடும் கிருஷ்ணா, தடியடிக்குப் பொறுப்பானவர்களை மட்டும் சுட்டிக்காட்ட மறுக்கிறார். இவ்வகையில் அவர் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்றத் தவறி விட்டார் என்பதே உண்மை.

தடியடிக்கு உத்தரவிட்டவர் யாராயினும், தடியடி நடைபெற்ற போது எந்த அதிகாரி எத்தனை மணிக்கு அங்கே வந்து இருப்பினும், தடியடியை நிறுத்துவதற்கு எந்த அதிகாரி எப்போது உத்தர விட்டு இருப்பினும், நடந்த கொடுமை களுக்கு யார் பொறுப்பு? நேரடியாகவோ சுற்றடி யாகவோ யாருக்கு என்ன பங்கு இருப்பினும் காவல்துறைத் தலைவரும் மாநகரக் காவல்துறை ஆணையருமே பொறுப்பாக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாக வேண்டும். வழக்கறிஞர்களால் குற்றஞ்சாட்டப்படும் காவல் துறை உயர் அதிகாரிகளை உடனடியாக இடை நீக்கம் செய்தாக வேண்டும். இப்படி எந்தப் பரிந்துரையும் கிருஷ்ணா அறிக்கையில் காணப்பட வில்லை. மாறாக வழக்கறிஞர்களிடமும் நீதிபதிகளிடமும் குற்றங் காணுவதிலேயே அவர் குறியாக இருக்கிறார்.

கிருஷ்ணா அறிக்கை சில உண்மைகளை வெளிப்படுத்து கிறது, பல உண்மைகளை மறைத்து விடுகிறது. அனைத் துக்கும் மேலாக, காவல் துறைக்குத் தலைக்கவசமும் கேடயமும் போதாது என்று, உண்மைகளிலிருந்தும் சட்டத்திலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள அறிக்கைத் தாயத்தும் வழங்குகிறது. காக்கிகளைக் காக்க ஒரு கறுப்புத் தாயத்தோ? இந்தப் பின்னணியில்தான் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வழக்கறிஞர் போராட்டத் துக்கு முதல் வெற்றியைத் தந்துள்ளது. இது முதல் வெற்றியே தவிர முடிவான வெற்றியல்ல என்பதில் வழக்கறிஞர்கள் தெளிவாய் உள்ளனர்.

கிருஷ்ணா அறிக்கையும், நீதிமன்ற நடவடிக்கை களும் ஒருபுறம் இருக்க, இந்தக் கொடுமைகளை நிகழ்த்தியதிலும் கொடுமைக்காரர்களைப் பாதுகாப்பதிலும் அரசியல் தலைமையின் பங்கு என்ன என்ற வினாவிற்கும் விடை காண வேண் டும். முதல்வர் கருணாநிதி சில ஆண்டுகளுக்கு முன்பு, “தமிழகக் காவல்துறையின் ஈரல் அழுகி விட்டது” என்று கூறியதை மறக்க முடியாது. ஈரல் அழுகிய காவல்துறை ஈரமின்றிச் செய்த கொடுமை களை நிகழ்த்துவதற்கு மருத்துவமனையில் இருந்தபடி கருணாநிதிதான் கட்டளையிட்டார் என்றும், இதற்கு சோனியாகாந்தியின் தூண்டுதலே காரணம் என்றும் குற்றஞ்சாட்டுவதற்கு நம்மிடம் ஆதாரம் இல்லை.

ஆனால் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற தடியடித் தாக்கு தலை சன் உள்ளிட்ட தொலைக் காட்சிகள் நேரலையாகக் காட்டிக் கொண்டிருந்த போது முதல்வர் என்ன செய்து கொண்டு இருந்தார்? அவர் எல்லாவற்றை யும் பார்த்து ரசித்துக் கொண் டிருந்தாரா? உடல் நலிவினால் எதையும் பார்க்க முடியவில்லை என்றால், மற்ற அமைச்சர்கள் என்ன செய்து கொண்டு இருந் தார்கள்? அரசின் உயர் அதிகாரி கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் நடப்பதை யாரும் அவர்களுக்குச் சொல்ல வில்லையா? காவல்துறை அதி காரிகள் ஆட்சித் தலைவர் களுக்கும், அதிகாரிகளுக்கும் எதையும் அறியத் தரவில்லையா?

சரி, இப்போது எல்லாம் தெரிந்து விட்டது. எப்படியும் முதல்வருக்கு எதுவும் தெரியாது என்று இப்போது சொல்ல முடி யாது. தடியடியின் பெயரால் நடைபெற்ற கொடுந்தாக்கு தலுக்கு ஆணையிட்டவர்கள், வழிநடத்தியவர்கள், தடுக்கத் தவறியவர்கள், நிறுத்த மறுத்தவர் கள் யார் யார் என்பதை முதல்வரால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால் பதவியில் நீடிக்கும் தகுதியை அவர் இழந்து விட்டார் என்று பொருள்.

எப்படிப் பார்த்தாலும் வழக்கறிஞர்கள் மீது காவல்துறை நடத்திய கொடுந்தாக்குதல் நீதித் துறையின் மீது தொடுக்கப்பட்ட வன்கொடுமைக்கும், இக் கொடுஞ் செயல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத் தத் தவறியதற்கும் பொறுப் பேற்று கருணாநிதி முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் கெட்டுப் போனது காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, கருணாநிதியின் இதயமும்தான் என்ற முடிவுக்குத் தமிழ் மக்கள் வருவார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com