Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
செப்டம்பர் 2008

மலைவிழுங்கி ‘மதன தேவர்கள்’
இவைத் தமிழ்ச் சொற்களே முனைவர் கு.அரசேந்திரன் விளக்கம்

சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ஆனந்தவிகடன் வார இதழில், கேள்வி பதில் பகுதியில் சரண், அரிசி, உயில் ஆகிய அனைத்துச் சொற்களும் சமஸ்கிருதத்தில் இருந்தே தமிழுக்கு வந்தன என்று ‘மாபெரும் மொழி ஆராய்ச்சி மேதை’ மதன் கூறியுள்ளார். தமிழில் எழுதி, தமிழர்கள் தரும் காசிலேயே பிழைப்பு நடத்தி, தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவாளுக்கு எப்போதும் சமஸ்கிருதம்தான் உயர்ந்த மொழி. மதனின் புளுகு குறித்து, வேர்ச்சொல் ஆய்வு அறிஞர் பேராசிரியர் கு.அரசேந்திரனிடம் கேட்ட போது, அவர் தந்த விளக்கங்கள் கீழே உள்ளன.

Mathan தமிழின் ‘சரண்’ சொல்லிற்கும் Surrender சொல்லிற்கும் உறவுண்டா என்பது வாசகர் வினா. இவ்விரு சொல்லிற்கும் வெறும் ஒலியப்புமை மட்டுமே உண்டு. இதெல்லாமல் சொல்-பொருள் உறவு எவையும் இல்லை. சமற்கிருத, ஆங்கில வேர்ச்சொல் அறிஞர் யாரும் இவ்விரண்டிற்குள் உறவிருப்பதாகக் கூறவில்லை. Surrender என்ற சொல்லுக்கு முழுதும் திருப்பிக்கொடு என்பதே பொருள். ‘சரண்’ என்ற சமற்கிருதச் சொல்லிற்குப் பாதுகாப்பு, புகலிடம் என்பன பொருள்கள்.

பாதுகாப்பு, புகலிடம் என்ற பொருளைச் சமற்கிருதம் ‘அரண்’ என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து பெற்றுக் கொண்டது.

“படைகுடிகூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”

என்பது வள்ளுவம். ஒரு நாட்டிற்கு நான்கு வகை அரண்கள் வேண்டும் என வேறொரு குறளில் வள்ளுவர் கூறுவார்.

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்”

என்பதில் நீரரணம், நில அரண், மலை அரண், காட்டரண் என்பன கூறப்பட்டுள்ளன. “பகைவரால் தொலைவு வந்துழி அது தனக்கும் அரசன் தனக்கும் ஏமமாதற் சிறப்புப் பற்றிப் பிறிதோர் அங்கமாக ஓதப்பட்ட அரண்” எனப் பரிமேலழகர் அரண் பற்றி விளக்கும் முன்னுரையில் அரணிற்கும் பாதுகாப்பிற்கும் உள்ள உறவைக் கூறுவார்.

பாதுகாப்புப் பொருள் தரும் தமிழன் ‘அரண்’ சொல் ‘சரண்’ எனத் திரிந்து அதே பொருளில் பிறிதொரு சொல்லாகத் தமிழில் வழங்கப்பெற்று வருகிறது. அமையம்-சமையம்-சமயம்; அந்தி-சந்தி; அவை-சவை-சபை-சபா; அமர்-சமர்; அங்கு-சங்கு என்றெல்லாம் வரும் சொற்களில் நிகழ்ந்த அகர சகர மாற்றம்தான் அரண்-சரணில் நிகழ்ந்துள்ளது.

தமிழின் ‘சரண்’ சொல்லைத்தான் ‘சரண’ எனத் திரித்துக் கீழையாரியச் சமற்கிருதம் பயன்படுத்திக் கொண்டது. சாமியே சரணம் - ஐயப்ப சரணம் என்ற கிடங்களிலெல்லாம் சாமியே, ஐயப்பனே நீயே பாதுகாப்பு என்பனவே பொருள்கள். காடும் அரணாக இருந்தது பற்றிச் சமற்கிருத வாணர் அரண் எனக் காடு குறித்த சொல்லையே அரண்ய-ஆரண்ய எனக் காடு குறிக்கத் தாமொரு சொல்லைத் தமிழிலிருந்து உருவாக்கிக் கொண்டனர். இந்த உண்மையெல்லாம் தங்கள் கேள்வி-பதில் பகுதியில் வாசகர்கட்குக் கிடைக்குமா?

‘உயில்’ பற்றி Will என்ற ஆங்கிலச் சொல்லே ‘உயில்’ எனத் தமிழர் நாவில் திரிந்து வழங்குகின்றது. Car- கார் Hospital - ஆசுபத்திரி போன்ற வகையே இது. will எனும் மேலையாரியச் சொல்லின் மூலம் என்ன தெரியுமா?

will விருப்பப் பொருளது. தமிழில் இவ் ‘வில்’ உண்டு.
வில்-விள்-விளை-விழை (விழைவு-விருப்பம்)
வில்-விய்-வெய்-விழை (வெய்யோள்-விருப்பமானவர்)
வில்-வெல்-வெம் (‘வெம்மை வேண்டல்’-தொல்காப்பியம்)
வில்-விள்-வெள்-வேள் (விருப்பம்) - வேட்கை
வில்-விள்-வெள்-வேள்-வேண்டு (விரும்பு)
விருப்பம் பொருள் தரும் பல தமிழ்ச் சொற்கள் தமிழின் ‘வில்’ வேரிலிருந்து இவ்வாறுதான் பிறந்தன.

Willa (old Frisian)
Willian, wellian (Old saxon)
Willen (Middle Dutch and Modern Dutch)
Wellan (Old High German)
Ville (Danish and Norweigian)

இப்படிப் பல மேலையாரிய மொழிகளின் ‘வில்’கள் விருப்பப் பொருளில்தான் வழங்குகின்றன. இம் மேலையாரிய வடிவுகளோடு இணையாகக் காட்டப்படும் சமற்கிருத வடிவம் rrnoti என்பது.

Philander, Philanthropy, Philosophy போன்ற ஆங்கிலச் சொற்கள் விருப்பப் பொருள் மூலத்தனவே. இவை வ-ப மாற்றத்தில் தமிழின் வில்-பில் ஆன வகையில் அமைந்தவை. வ-ப மாற்றத்திற்கு வங்கம்-பங்கம், வெற்றிலை - Betal, வெக்கு - Bake வெளிச்சம் – Bleech போல் பல கூறலாம்.

தமிழில் விருப்பமான ஊர் ‘வேட்களம்’ என அழைக்கப்பெறும். அதே பொருளில்தான் அமெரிக்காவின் Philadeplhia நகரம் பெயர் பெற்றதும்.

இறுதியாக ‘அரிசி’. ‘அரிசி’ மிகப்பல மொழிகளில் வழங்குவதை ஆங்கில வேர்ச்சொல் அகராதிகள் எடுத்துரைக்கின்றன. ஆனால் ‘அரிசி’ச் சொல்லின் மூலத்தை அவ் அகராதிகள் விளக்கி உரைக்கவில்லை. உங்களால் மட்டும் அது சமற்கிருதத்திற்கு உரிய சொல் என எப்படிச் சொல்ல முடிகின்றது.

நூறாண்டிற்கு முன் மாமேதை கீற்று (Skeat) ஆங்கில வேர்ச்சொல் அகராதி வரைந்தார். ஜான் அயிட்டோ (John Ayto) அண்மையில் வேர்ச்சொல் அகராதி செய்தார். சி.டி.ஆனியன் அகராதியும் குறிப்பிடத்தக்கது. இவ்வகராதிகள் ‘rice’ சொல்லுடன் ஒத்த பிறமொழி ஆட்சிகளை மட்டுமே கூறின. சேம்பரார் அகராதி Chamber’s Dic முன்னோர் தொகுத்த பல அகராதிகளையும் சேர்த்து வெளிவந்த சிறப்பானது. இவ் அகராதி ‘rice’ இன் வேர் தெரியவில்லை என்று உரைத்துள்ளது.

Rice-1234 ris,rys; later ryce (before 1475); borrowed from ild French ris, from Italian riso, leamed borrowing from latin oriza, oryza, from Greek oryzarice, from an Indo-Iranian from (Compare Pashto vrize and Sanskrit vrihi-s, both meaning rice if unknown-origin
-Chambers Dictionary of Etynology

ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி ‘rice ’ சொல், கீழை நாட்டு மூலத்தது என்று கூறியுள்ளது.

Rice- (middle English rys via old French ris from Italian riso ultimately from Greek oruza, of oriental origin) C.U.D.

தமிழில் ‘அரி’ என்ற சொல் பண்டு அரிசியைக் குறித்தது. சங்க நூல்களில் நான்கு இடங்களில் ‘அரி’ வடிவம் அரிசியைக் குறித்துள்ளது. “அரி உலைப் பெய்து” என்பது சங்கப் பாடல். மலையாளத்தில் இன்றும் ‘அரி’ வடிவமே அரிசியைக் குறிக்கும். பர்ரோ, எமினோ தொகுத்த திராவிட மொழி வேர்ச் சொல் அகராதி ‘அரி’ என்னும் சொல் தமிழில் மலையாளத்தில் துளுவில் அரிசியைக் குறிப்பதைப் பதிவு செய்துள்ளது. ‘கரி’ என்பது குறிப்பது. இதுவே ‘கரிசு’ எனவும் பிறிதொரு வடிவம் பெறும். இதே முறையில்தான். ‘அரிசி’ச் சொல் அரி-அரிசு-அரிசி எனப் பிறிதொரு வடிவம் பெற்றது.

உமி நீக்கிய மணியே அரிசி. அரிசி சிவந்த நிறமாய் இருக்கும். இதன் காரணமாகவே உமிநீக்கிய மணி, அரி-அரிசி எனப் பெயர் பெற்றது. ‘அர்’ என்னும் வேருக்குச் சிவந்தது என்பது மூலப்பொருள்.
அர்-அரக்கு, அர்-அரத்த-அரத்தம்
அர்-அரு-அருக்கன் (ஒளிரும் கதிரவன்)
என்றெல்லாம் சிவப்பு நிறப் பொருள்களைக் குறிக்க ‘அர்’ வேர் சொல்லளிக்கும்.

அரக்கு-அலக்கு-லக் எனத் திரிந்து ‘Shellac’ சொல்லில் ‘அர்’ இருக்கிறது. அரத்தம்-அரத்த-ரத்த - ved என வடக்கிலும் வடமேற்கிலும் ‘அர்’ திரிந்து சிவப்பாய் உள்ளது. இதே போக்கில்தான் அரிசி - rice என மேலை உலகில் ஒலிக்கிறது. அரத்த-ரத்த, அரசன்-ராஜன்-ராஜ்-Reg-Region (அரசனுடைய தொடர்புடைய பகுதி) என்றெல்லாம் தமிழ் திரிவதற்கு முதல் உயிர் இழப்பு (loss of initian vowel) என்பது கோட்பாடு.

‘அருவி’ riv-vus என இலத்தீனில் திரிந்து ‘river’ என ஆங்கிலத்தும் சென்றது. கால்டுவெல் இதனைக் காட்டுகிறார். தமிழின் அரசு-அரசன் சொல் arch, archon என்று இலத்தீன் கிரேக்கத்தில் ஒலிக்கப் பெறுகிறது. Monarch சொல்லில் உள்ள ‘arch’ தமிழின் அரசுதான். இந்த arch-rich எனவும் திரிவதை ஆங்கில வேர்ச்சொல் அகராதிகள் வழி அறியலாம். ‘rich’ என்பது அரசனுடன் தொடர்புடையதென்பதை மேலை மொழி அறிஞர்கள் விளக்கியுள்ளனர். அரசு - rich ஆனதும் அரிசி - rice ஆனதும் ஒப்புநோக்கதக்க சான்று.

தமிழ் இந்தியா முழுவதும் நான்காயிரம் ஆண்டின் முன் பேசப்பட்ட மொழி. பிரித்தானிய கலைக்களஞ்சியமும் இதனைக் கூறுகிறது. 20-25 ஆயிரம் ஆண்டின் முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட தமிழ் வடமேற்கை நகர்ந்து திரிந்து ஆரியமாகத் திரிந்தது. அவ்வாறு திரிந்த ஆரியத்துள் ஒரு குறுங்கிளையே சமற்கிருதம் என்ற பெயரில் மீண்டும் திரும்பி புறப்பட்ட இடத்திற்கே வந்தது. திரும்பி வந்த சமற்கிருதம் வந்தபின் மீண்டும் தமிழை - தமிழிய மொழிகளை உட்கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டது.

தமிழ் ஒட்டுமொத்த ஆரிய மொழிகட்கும் மூலம் என்பதை நான் பல நூல்களில் எழுதியுள்ளேன். ‘கல்’ என்ற ஒரு வேர்ச்சொல் தமிழிலும் உலக மொழிகளிலும் விரிந்த வரலாற்றை ஆயிரம் பக்கம் எழுதியுள்ளேன். தமிழின் உண்மை ஒளியை உலகில் உணர்ந்தவர் சிலர் - மிகச் சிலர். 10 விழுக்காட்டளவு கூட அதன் பெருமை இன்னும் நிலைநாட்டப்படவில்லை, ஆய்ந்து வெளிப்படுத்தப்படவில்லை. உலகில் நடந்த மோசடிகளிலேயே மிகப்பெரிய மோசடி சமற்கிருதம் தேவபாசை என்று சொல்லப்பட்டதுதான் என்பார் பாவாணர். அவரின் கூற்று முற்றிலும் உண்மை.

‘பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய்போலும்மே மெய்போலும்மே’

‘மெய்யுடையருவன் சொலமாட்டாமையால்
பொய் போலும்மே பொய்போலும்மே’

என்ற கூற்றுப்படியே சமற்கிருதம் - தமிழ் பற்றி உலக அளவில் கருத்து நிலைபெற்றுள்ளது. தமிழன் அடிமையானதும் தமிழ்நாடு அடிமை நாடானதும் தொடரும் வகையில் தமிழின் மேன்மையை உணர்த்த முடியாது. வரலாறு திரும்பலாம். தமிழின் உண்மையை ஒரு நாள் உலகம் உணரலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com