Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
செப்டம்பர் 2007
சிவகாசியில் வெடித்துச் சிதறும் பட்டாசுத் தொழிலாளர் வாழ்க்கை
இரா. உமா


அறிவுக்கும், உண்மைக்கும் புறம்பான கதைகளின் அடிப்படையில் தீபாவளி கொண்டாடப்பட்டாலும், அதை நம்பி மட்டுமே வாழ்க்கையின் ஆதாரமான பொருளாதாரத்தை அமைத்துக் கொண்ட மக்கள் இலட்சக் கணக்கில் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை ஒளிபெற வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது.

Sivakasi குட்டி சப்பான் எனப்படும் சிவகாசியில் சுமார் 15 ஆண்டுகளாக வீடுகளில் பட்டாசு செய்துவரும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை அறியும் முன், பட்டாசுத் தொழிலின் வரலாற்றினைச் சுருக்கமாகத் தெரிந்து கொண்டால், இச்சிக்கலின் ஆணிவேர் எங்கிருந்து தொடங்குகிறது என்பது புரியும்.

இந்தியாவில் 1922ஆம் ஆண்டு முதன்முதலாக மேற்கு வங்கத்தில்தான் பட்டாசுத் தொழில் அறிமுகமானது. இதனைத் தொடர்ந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு 1932இல் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. அய்ய நாடார், கா.கா.சண்முகநாடார் ஆகிய இருவர் சீனா சென்று இத்தொழிலின் நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வந்தனர். இவர்களால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட பட்டாசுத் தொழில் பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சியடையத் தொடங்கியது. வங்கிக்கடன்கள் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டன. இன்று உலகளவில் பட்டாசு உற்பத்தியில் சிவகாசி ஐந்தாவது இடத்திலுள்ளது. ஆண்டொன்றுக்கு இத்தொழிலில் சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் பணம் புழங்குகிறது. இங்கு ஏறத்தாழ 600 பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. உலகளவிலான வணிகப் போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் பல புதிய ரகப் பட்டாசுகளை உற்பத்தி செய்கின்றனர்.

இத்தனை பெருமைக்கும், முன்னேற்றத்துக்கும் பின்னணியில் உள்ள பட்டாசுத் தொழிலாளர்களுக்கென எந்த ஒரு அமைப்பும் இல்லை. பட்டாசுத் தொழில் தொடங்கப்பட்டு 58 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக 1990ஆம் ஆண்டு யூ.ஜி. நாராயணசாமி என்னும் தொழிற்சங்கவாதியால் ‘காமராஜர் மாவட்ட ஜனநாயகப் பட்டாசுத் தொழிலாளர்கள் சங்கம்’ தோற்றுவிக்கப்பட்டது. (அவர் மறைவுக்குப் பிறகு இச்சங்கம் செயல்படவில்லை)

இச்சங்கம், தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, கூலி உயர்வு, அகவிலைப்படி, பி.எப்., இ.எஸ்.ஐ., லீவுச் சம்பளம் இப்படிப் பல கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தியது. இப்போராட்டத்தில் முன்னணியில் நின்ற பல தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப் பட்டனர். வேறு தொழிற்சாலையிலும் வேலைக்குச் சேர இவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு மட்டுமல்ல, இவர்களுடைய குடும்பத்தார், உறவினர்கள் என்று அனைவருக்கும் இதேநிலைதான். வேறு வேலைவாய்ப்புக்கும் வழி இல்லை. விவசாயமும் கிடையாது. காரணம், தவறாமல் பருவமழைகள் பொய்த்துப் போகும் வறட்சியான மாவட்டம் இது. இப்படி எந்த ஒரு தொழிற்சாலையும் இவர்களுக்கு வேலை கொடுக்க முன்வராத நிலையில், வறுமையின் கோரப்பிடிக்கு ஆளானார்கள். தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேறுவழியின்றி தங்களுக்குத் தெரிந்த ஒரே தொழிலான பட்டாசு செய்யும் தொழிலை வீடுகளிலேயே வைத்துச் செய்ய ஆரம்பித்தனர்.

இதனை அறிந்த சில முதலாளிகள் இவர்களைச் சுரண்டத் தொடங்கினர். குறைந்த விலைக்குக் கொள்முதல் செய்யும் நோக்கில், வீடுகளில் செய்வதை இம்முதலாளிகள் ஊக்குவித்ததன் விளைவு ஆயிரம் தொழிலாளர்கள் மட்டும் ஈடுபட்டிருந்த பட்டாசு செய்யும் தொழிலில், மேலும் மேலும் பல குடும்பங்கள் ஈடுபட, இன்று அத்தொழிலாளர்களின் எண்ணிக்கை இலட்சத்தை எட்டியுள்ளது. சிவகாசியைச் சுற்றியுள்ள வெற்றிலையூரணி, தாயில்பட்டி, சல்வார்பட்டி, வெம்பக் கோட்டை உள்ளிட்ட ஐம்பது கிராமங்களில் இத்தொழில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டி காவல்துறையினரால் சோதனை (ரெய்டு) நடத்தப்பட்டு, ஒரு சிலர் கைதும் செய்யப்படுவர், பிறகு ஓரிரு நாளில் அவர்களை விட்டுவிடுவது வாடிக்கையாக இருந்து வந்தது, இதனால் சிரமங்கள் இருந்தாலும் பெரிய அளவில் இடைஞ்சல்கள் ஏதும் ஏற்படவில்லை. மேலும் வீடுகளில் பட்டாசு செய்வதால், சட்டம் ஒழுங்கு கெடுதல் போன்ற பிரச்சினைகள் ஏதும் ஏற்படவில்லை எனக் காவல்துறையின் தரப்பில் சொல்லப்பட்டதால், தொடர்ந்து வீடுகளில் பட்டாசு செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது.

இந்நிலையில், சில முதலாளிகளின் தூண்டுதலால் விஜயகரிசல் குளத்தைச் சேர்ந்த லட்சுமி காந்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, இப்பிரச்சினையைத் தீர்த்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டதன் பேரில், வீடுகளில் பட்டாசு செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. மீறினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இப்பொழுது 20 நாட்களாக இத்தடை நீடித்து வருவதால், வேலையின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். தீபாவளிக்கு முந்தைய மூன்று மாதங்கள்தான் இவர்களின் ஆண்டு முழுமைக்கான வாழ்வாதாரம். இந்நேரத்தில்தான் இப்படி ஒரு தடை.

அண்மைக் காலங்களில் நடந்த வெடி விபத்துகளும், அதிகமான உயிரிழப்புகளும் இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. 2005ஆம் ஆண்டில் மட்டும் தொழிற்சாலைகளில் ஆறு வெடி விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக 16.09.2005 அன்று பட்டாசு உற்பத்தியாளர்களின் கூட்டம் ஒன்றினை, தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளர் கா.அ.முகமது அஜீஸ் சிவகாசியில் நடத்தினார். அதில் பேசிய அவர், ‘விற்பனையை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ள பட்டாசு உற்பத்தியாளர்களின் விதிமுறை மீறல்களே இவ்வெடி விபத்துகளுக்கு முதல் காரணம். அடுத்தது பயிற்சியளிக் கப்படாத தொழிலாளர்கள். எனவே, விதிகளைக் கண்டிப்புடன் செயல்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டிருக்கிறோம்’ என்று தெரிவித்தார். இந்த ஆண்டும் ஜூலை மாதம் நடந்த இரண்டு தொழிற்சாலை வெடி விபத்துகளில் இருபது பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி இதுவரை நடந்த வெடி விபத்துகள் அனைத்துமே உரிமம் பெற்ற தொழிற்சாலைகளில்தான் நிகழ்ந்துள்ளன. வீடுகளில் செய்வதில் இதுவரை எந்தவொரு விபத்தும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டாசுத் தொழில் ஆபத்தான தொழில். இதனை நன்கு அறிந்துள்ள போதும், வீடுகளில் வைத்துச் செய்யும் நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வீடுகளில் வைத்துப் பட்டாசு உற்பத்தி செய்வதை நாமும் ஆதரிக்கவில்லை. ஆனால், பதினைந்து ஆண்டுகளாக இதனை அனுமதித்த பிறகு திடீரென ஒரே நாளில் தடை விதித்தது சரியா? இன்றைக்கு ஏறத்தாழ 75 ஆயிரம் தொழிலாளர்கள் இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். மேலும் இதன் சார்புத் தொழில்களான குழாய் உருட்டுதல், திரி செய்தல் போன்றவற்றை நம்பி இன்னும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் சுற்று வட்டாரங்களிலுள்ள இருபத்தைந்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

மொத்தம் ஒரு லட்சம் தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத்தினரும் இதனை வைத்தே வாழ்க்கையைத் திட்டமிடும் நிலையில் உள்ளனர்.

அருப்புக்கோட்டையைச் சுற்றியுள்ள இருபது கிராமங்களிலும் வெடிகளுக்கான திரிகளைச் செய்வதே முக்கியத் தொழிலாக உள்ளது. சிவகாசியின் பெரும்பாலான தொழிற்சாலைகளுக்குத் தேவையான 90% திரிகளின் தேவையை இக்கிராமங்களில் செய்யப்படும் திரிகளே நிறைவு செய்கின்றன.

இன்று தங்களுக்குத் தெரிந்த ஒரே தொழிலும் முடக்கப்பட்டுவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் பரிதவித்து நிற்கின்றனர். குழந்தைகளின் படிப்பு, வயதுவந்த பெண்களின் திருமணம் போன்ற கனவுகள் கேள்விக்குறியாகியுள்ளன. இதனை கவனத்தில் கொண்டு, இந்த ஆண்டு மட்டும் வீட்டில் பட்டாசு செய்ய அனுமதித்துவிட்டு, அடுத்த ஆண்டின் தொடக்கத்திலேயே, இதற்கான மாற்றுவழிகளை ஆராய்ந்து, அவர்களின் நிலையான வாழ்க்கைக்கு ஆவன செய்யலாம்.

கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கும், பாலியல் தொழில் செய்வோருக்கும் அவர்கள் திருந்திவாழ ஒரு வாய்ப்பு அளித்து, வங்கிக் கடன்களுக்கும், தொழில் பயிற்சிகளுக்கும் அரசாங்கம் ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளது.

இப்பிரச்சினைக்கும் இதே மாதிரியான வழியில் தீர்வுகாண அரசு முயலவேண்டும். வங்கிக் கடன்களை கட்ட முடியாமல் பல தொழிற்சாலைகள் சிவகாசியில் மூடிக்கிடக்கின்றன. ஏற்கனவே தொழில் தெரிந்த இவர்களுக்கு முறைப்படி உரிமம் வழங்கி, மேலும் சில பயிற்சிகளை அளித்து, மூடிக்கிடக்கின்ற அத்தொழிற்சாலைகளை அவர்களிடம் ஒப்படைக்கலாம். வங்கிக் கடன்களுக்கும் ஏற்பாடு செய்து தரலாம். இதனை அரசே முன்நின்று ஒருங்கிணைத்து உதவினால், இலட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களில் நம்பிக்கை ஒளியேற்றிய பெருமை வந்துசேரும். தமிழக அரசு அதனைச் செய்யுமென்று அந்த மக்கள் நம்புகின்றனர்.

குழந்தைகளைப் படிக்க வைக்க முடியவில்லை

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு யு.ஜி.நாராயணசாமி தலைமையில் காமராசர் மாவட்ட பட்டாசுத் தொழில் சனநாயக தொழிலாளர் சங்கத்தில் இணைந்து பல போராட்டம் செய்தோம். இப்போராட்டத்தில் முன் நின்று செய்ததால் என்னைப் பணிநீக்கம் செய்து விட்டார்கள்.

உயிர் பிழைப்பதற்காக வீட்டின் அருகே ஒரு கூரை செட் அமைத்து, நாங்களே பட்டாசு தயாரித்தோம், அதை விற்று பிழைப்பு நடத்தி இப்போது பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறோம். இத்தொழிலை வைத்துதான் எனது குழந்தைகளைப் படிக்க வைத்து வருகிறேன். இப்பொழுது இத்தொழில் செய்யக்கூடாது என்று சொல்லி நிறுத்திவிட்டனர். அதை மீறி செய்தால் ஐந்து வருடம் சிறை தண்டனை என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார். நாங்கள் வேலை செய்து சுமார் 15 தினங்களுக்கு மேலாகிறது, எங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் உள்ளோம்.

இத்தொழில் செய்வதற்காக வாங்கிய கடனையும் திரும்பக் கட்ட முடியாத சூழ்நிலையில் உள்ளோம். வேறு எந்தத் தொழிலாவது செய்து பிழைக்கலாம் என்றால், எங்கள் மாவட்டம் மிகவும் வறட்சி நிறைந்த மாவட்டம். ஆகையால் வேறு தொழில் செய்வதற்கு எந்தவொரு சாத்தியமும் இல்லை. இதுவரை 15 வருடகாலமாகச் செய்து வந்துள்ளேன். இதுவரை எந்த ஒரு சிறு விபத்துகூட நடந்ததில்லை. ஆனால் பட்டாசுத் தொழிற்சாலையில்தான் பயங்கர விபத்து நடக்கிறது. பத்து பேர் இருபது பேர் என்று வெடித்துச் சிதறுகின்றனர் தொழிலாளர்கள்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com