Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
செப்டம்பர் 2007
கருஞ்சட்டைத் தமிழர் வெளியீட்டு விழா
தொகுப்பு: மோகன்ராம்

Karunchattai Thamizhar Book Release Function

2007, ஜூலை 26 - சென்னை, அரசர் அண்ணாமலை மன்றத்தில் கருஞ்சட்டைத் தமிழர் மாத இதழ் வெளியிடப்பட்டது. மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த அவ்வரங்கில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் இதழை வெளியிட, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு அதனைப் பெற்றுக் கொண்டார். கவிஞர் மு.மேத்தா, தென்கச்சி கோ. சுவாமிநாதன், வழக்கறிஞர் அருள்மொழி, திரைப்பட இயக்குனர் சீமான், மும்பை அப்பாத்துரை ஆகியோர் இதழை வாழ்த்தி வரவேற்றுப் பேசினர். இதழின் ஆசிரியர் சுப.வீரபாண்டியன் ஏற்புரை கூறினார். பொள்ளாச்சி உமாபதி வரவேற்புரையாற்ற, தமிழ் முழக்கம் சாகுல் அமீது நன்றியுரை கூற, எழுச்சியுடன் நடைபெற்ற விழா நிகழ்ச்சிகளைக் கவிஞர் சாவல்பூண்டி சுந்தரேசனும், அன்புத் தென்னரசனும் தொகுத்து வழங்கினர். கயல் தினகரன், இயக்குனர் செல்வபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கொள்கை ஏடாய் மலர்ந்திருக்கும் கருஞ்சட்டைத் தமிழர் இதழ் வெளியீட்டு விழாவில் பெருமக்கள் ஆற்றிய உரைகளில் இருந்து சில பகுதிகள்:

மு.க.ஸ்டாலின் : ஏற்றமுறச் செய்வதும் மாற்றமுறச் செய்வதும் ஏடே ஆகும் என்று பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்டிருக்கிறார். சரியான கட்டிடங்கள் எழுப்புவதற்கு மேல் விட்டங்களும், தூண்களும் எவ்வளவு தேவையோ அதனைப்போல ஒரு சரியான கட்டமைப்பிற்கு இந்தப் பத்திரிகைகள் அவசியம் என்பதை தந்தை பெரியார் பல நேரங்களில் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு இயக்கத்திற்கு பத்திரிகைகள்தான் படைக்கலனாக அமைந்திருக்கிறது என்று பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். பகுத்தறிவுச் சுடர்விட்டு எரிய வேண்டும் என்று சொன்னால் பத்திரிகைகள் பாடுபட வேண்டும் என்று புரட்சியாளர் இலெனின் குறிப்பிட்டிருக்கிறார். வாள் முனையைவிடப் பேனா முனையே சிறந்தது என்று அறிஞர்கள் குறிப்பிட்டு உள்ளனர். எனவே அந்த அடிப்படையில்தான் பத்திரிகைகள் நாட்டிலே உலாவிக் கொண்டிருக்கின்றன.

திராவிட இயக்கங்கள் தோன்றியபோதே இதழ்களோடுதான் தோன்றியிருக்கின்றன. வளர்ந்திருக்கின்ற நேரத்திலும் இதழ்களோடு தான் வளர்ந்திருக்கின்றன. தமிழ் இதழ் உலகத்தில் ஒரு புரட்சியை ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது தந்தை பெரியார் அவர்களின் குடியரசு நாளேடுதான். அந்தக் குடியரசு ஏட்டினை தந்தை பெரியார் ஒரு சாட்டையாகவே பயன்படுத்தியிருக்கிறார். அதே போல் தலைவர் கலைஞர் அவர்கள் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது தனது மாணவப் பருவத்திலேயே மாணவர் நேசன் என்ற நாளேட்டைக் கையெழுத்துப் பிரதியாக தொடங்கி அதைப்படிப்படியாக வளர்த்து இன்றைக்கு முரசொலியாக நடத்திக் கொண்டிருக்கிறார். எந்த நாட்டில் இதழ்கள் வெளிவரவில்லையோ அந்த நாடு ஒரு பேச்சற்ற, ஊமை நாடாகவேதான் இருந்திட முடியும். எந்த நாட்டில் இதழ்கள் எல்லாம் அடக்கப்படுகிறதோ அங்கே வாக்குரிமை அடக்கப்படுவதாகத் தான் அமைந்திட முடியும். எனவே நாம் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒரு இதழ் நடத்துவது அவ்வளவு சாதாரண காரியமல்ல. எனவே இன்றைக்கு மாத இதழாக வெளிவரக்கூடிய இந்தக் கருஞ்சட்டைத் தமிழர் இதழ், வார இதழாக வரவேண்டும், ஏன் அதையும் தாண்டி நாளேடாக வந்தாலும் ஆச்சரியமில்லை. எனவே இந்த இதழ் வளர்ச்சி பெற வேண்டும் உங்கள் அனைவரின் சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர் நல்லகண்ணு: இன்றைய தேவை பகுத்தறிவும், சுயமரியாதையும் - அறிவியல் சம்மந்தமான கருத்துகளுமே ஆகும். ஏனென்றால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதை வைத்து அரசியல் ஆக்க நினைத்தார்கள். ஆனால் அங்கே அரசியலில் காலூன்ற முடியாமல் மாயாவதி அவர்களால் விரட்டப்பட்டார்கள். சேதுசமுத்திரத் திட்டம் நம்முடைய கலைஞர் அவர்களின் முயற்சியால் இந்தியக் கம்யூனிஸட் கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, திராவிட இயக்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இணைந்து சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

இந்த 21ஆம் நூற்றாண்டில் மூடப்பழக்கத்திற்கு எதிராகச் சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவு இயக்கமும் அறிவியல் இயக்கமும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். பகுத்தறிவு இயக்கம் தந்த தந்தை பெரியார் அவர்களோடு, ஜீவானந்தம், சிங்காரவேலர் இணைந்து இருந்தது போல், சுயமரியாதை இயக்கத்தோடு, திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் முயன்று தமிழர் நிலைக்குப் பாடுபட வேண்டிய அவசியம் இருக்கிறது. அது காலத்தின் கட்டாயம். கொஞ்சம் அசந்துவிட்டால் பழையவர்கள் மீண்டும் ஆதிக்கத்திற்குத் தலை தூக்குவார்கள் என்பதை எச்சரிக்கையாக உணர்ந்து கொள்ள வேண்டும். கருஞ்சட்டைத் தமிழர் மாத இதழும், நல்ல கருத்துகளை இதழில் கொண்டு வரவேண்டும்.

கவிஞர் மு. மேத்தா: இன்றைக்கு கருஞ்சட்டை தமிழ்நாட்டில் ஒரு வெளிச்சத்தை உண்டாக்கியிருக்கிறது என்று நான் கருதுகிறேன். இருட்டின் நிறமான கருப்பு ஒரு புதிய வெளிச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. அவ்வகையில் வெளியாகியுள்ள கருஞ்சட்டை தமிழர் மாத இதழ் படிப்படியாக வளர்ந்து வார இதழாக வெளிவர வாழ்த்துகிறேன்.

தென்கச்சி கோ. சுவாமிநாதன்: பத்திரிக்கைச் செய்தி என்றால் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒரு நாள் காஞ்சிபுரம் உபய வேதாந்த சாமிகள் தன் வேலைக்காரன் குப்பனைக் கூப்பிட்டு, ‘‘நீ உடனே ஸ்ரீபெரும் புதூர் ஓடிப்போய் அங்குள்ள திருவேங்கடாச் சாரியைச் சந்தித்து, திருநாராயண அய்யங்கார் சாமிகள் திருக்கோயில் திருக்குளத்தில் திருஆராதனைக்குத் திருத்துழாய் கொண்டுவரும் போது திருப்பாசி வழுக்கித் திருவடி தவறி திருக்குளத்தில் விழுந்துவிட்டார் என்று சொல்லிவிட்டு வா’’ என்றார். ‘‘என்ன சாமி, கும்பகோணத்துச் சாமி குட்டையில விழுந்துட்டார்னு சொல்லனும் அவ்வளவுதானே’’ என்றானாம் குப்பன். இப்படிப் பத்திரிகை மொழி சுருக்கமாய் இருக்க வேண்டும்.

திரைப்பட இயக்குனர் சீமான்: எந்த மத நூலும், எந்த இதிகாசப் புராண நூலும் இந்த மனித இனத்தை படிக்கச் சொன்னதே கிடையாது. படிக்கச் சொன்னவன் என் முப்பாட்டன் திருவள்ளுவர்தான். அவர்தான் தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு ன்னு சொன்னான். மன்னர் ஆட்சிக்காலத்தில் அவர்கள் மரத்தடியில் ஒரு பள்ளிக்கூடம் கட்டி எங்களைப் படிக்க வைக்கவில்லை. கல்லணை கட்டிய கரிகால் சோழன் எங்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்டவில்லை. தஞ்சையில் பெரிய கோவில் கட்டியவன் எங்களுக்கு ஆரம்பப் பள்ளிக்கூடம் கட்டி எங்களைப் படிக்க வைக்கவில்லை. படிக்காத இரண்டு பெருந்தலைவர்கள் மாமேதைகள் தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராஜரும்தான் எங்களைப் படிக்க வைத்தார்கள். அப்படியான கல்வியைத் தந்து எங்களை மனிதர்களாக்கியது இந்தக் கருஞ்சட்டைதான்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com