Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
செப்டம்பர் 2007
அணுசக்தி ஒப்பந்தம்
மணிமுகிலன்


இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டு நலனுக்கும், இறையாண்மைக்கும் எதிரானதெனவும், இல்லை இல்லை, நம் நாட்டையும் நாட்டு மக்களையும் அழிவிலிருந்து காப்பாற்றப் போகும் கற்பக விருட்சம் அது எனவும் முன் வைக்கப்படும் இருவேறு கருத்துகளால் இந்திய அரசியல் இரண்டு பட்டு நிற்கிறது. வாதங்கள், பிரதிவாதங்கள், பதவிக்குப் பெருமை சேர்க்காத பொய்கள், வரம்பு மீறும் விமர்சனங்களென வெவ்வேறு வடிவங்களாய்ப் பிரச்சினை பரிணாமமடைந்து கொண்டே உள்ளது. இதில், இந்தியாவிற்கு அணுசக்தித் தேவை அவசியம் தானா? அப்படித் தேவையெனில் அமெரிக்காவை விட்டால் வேறு வழிகளில் அந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாதா? அமெரிக்கா என்ன காரணத்திற்காக இந்தியாவை நெருங்க முயல்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கான உண்மையான விடை இன்னமும் முழுமையாக வெளிப்படவேயில்லை.

Bush and Manmohan இந்தியாவில் தற்போது சற்றேறக் குறைய 12% மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. மத்திய அரசாங்கம் தனது நிறுவனங்கள் மூலமாக 58% மின்சாரத்தையும், மாநில அரசாங்கங்கள் 32 விழுக்காடு மின்சாரத்தையும், எஞ்சிய 10% தனியார் நிறுவனங்களும் உற்பத்தி செய்து வருகின்றன. இதில் பெருமளவிலான மின்சாரம் நிலக்கரி மூலமாகவும் (சுமார் 60%) நீர் மூலம் 26%, வாயுக்கள் மூலமாக 10%, அணுசக்தி மூலமாக 3% மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. எஞ்சிய 1% டீசல் போன்ற எண்ணெய் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனினும் போதுமான அளவு மின் பற்றாக்குறை இருந்த வண்ணம் தான் உள்ளது.

நிலக்கரி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது அவை வெளிப்படுத்தும் அளவுக்கு அதிகமான கார்பன்-டை-ஆக்சைடு சுற்றுச்சூழலை பெருமளவு நாசமாக்கி வருகிறது. தற்போது மட்டும் 1 கோடியே 30 லட்சம் டன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடருமானால் அல்லது அதிகரிக்குமானால் நாம் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரும். இதனால் நிலக்கரி மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதை குறைத்தாக வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள் ளது. இதனால் அணுசக்தி மூலமாகவோ அல்லது எரிவாயு மூலமாகவோ மட்டுமே இந்தியாவின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

இந்தியாவில் அணுசக்தி மூலமாக மின்சாரத்தை உருவாக்கத் தேவையான யுரேனியம் செறிவு மிக்கதாகவும், போது மான அளவிலும் இல்லை. பீகார், மேகாலயா, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலுள்ள சுரங்கங்களில் யுரேனியம் மிகக் குறைந்த அளவே கிடைக்கிறது. எனவே அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை இந்தியா இறக்குமதி செய்தே ஆக வேண்டும். எரிவாயுக்கள் மூலமாக மின்சாரம் தயாரிக்கப் போதுமான இயற்கை வாயுக்கள் இந்தியாவில் இல்லாததால் அவற்றையும் நாம் இறக்குமதி செய்துதான் ஆக வேண்டும். வருங்காலத்தில் உருவாகப் போகும் மின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமெனில் அணுசக்தி மூலமாகவோ அல்லது எரிவாயு மூலமாகவோ மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இந்தியாவின் கவலை மின்உற்பத்தி மட்டுமன்று... அணு ஆயுத உற்பத்தியும்தான்.

அதனால் தான் இந்தியா அணுசக்தி மூலமாக மின்உற்பத்தி செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் போட்டியில் சீனாவையும், பாகிஸ்தானையும் இந்தியா மிஞ்ச வேண்டுமானால், அதற்கு அணுசக்தி தொழில் நுட்பமும், யுரேனியமும் தான் துணைபுரியும். எரிவாயு ஒருபோதும் அணுகுண்டு தயாரிக்க உதவப்போவதில்லை. எனவேதான் இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தில் இத்தனை தூரம் பிடிவாதமாக இருக்கிறது. இதற்கு இந்தியாவிற்கு அமெரிக்காவை விட்டால் வேறு வழியில்லையா? இதற்கான விடையை பின்னர் பார்க்கலாம்.

அமெரிக்கா, கனடா, ரஷ்யா போன்ற நாடுகள் எரிவாயு மூலமாக மின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதனை மெய்ப்பித்து வருகின்றன. ரஷ்யா மூவாயிரம் மைல் நீள குழாய் அமைத்து மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அளித்து வருகிறது. இந்தியாவும் ஈரானிலிருந்து குழாய் மூலமாக இந்தியாவிற்கு எரிவாயு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 1500மைல் தூரமுள்ள இந்தத் திட்டம் நிறைவேற்றப்படு மானால் எளிதாக இந்தியாவின் மின் தேவையைப் நிறைவு செய்து கொள்ள முடியும். அமெரிக்கா ஒருபுறம் இத்திட்டத்தை இந்தியா நிறைவேற்றி விடாவண்ணம் முட்டுக்கட்டை போடுவதுடன், பாகிஸ்தானும் அந்நாட்டின் வழியாகக் குழாய் அமைத்து எரிவாயுவைக் கொண்டுவர ஆண்டொன்றுக்கு 500 மில்லியன் டாலர் தர வேண்டுமெனக் கூறுகிறது. அப்படி இந்தியா அத்தொகையை அளிக்குமானால், அத்தொகை மூலம் பாகிஸ்தான் போதுமான இராணுவ பலத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடும் என இந்தியா அஞ்சுகிறது. இதனால் ஈரான் எரிவாயு குழாய்த் திட்டம் மந்தமாகவே முன்னெடுக்கப்படுகிறது.

அமெரிக்காவிடம் சரணடையாமல் இந்தியா அணுசக்தி தொழில் நுட்பத்தையும், தேவையான யுரேனியத்தையும் பெற முடியாதா? என்றால் முடியும் என்றே சொல்லலாம். 1974ஆம் ஆண்டிலிருந்து இந்தியா தனக்குத் தேவையான அணு தொழில் நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து தான் பெற்று வருகிறது. அதிலிருந்து தான் மின்உற்பத்தி கொஞ்சமும், அணு ஆயுதங்கள் ஏராளமாகவும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு எவ்விதத் தடையும், கட்டுப்பாடும் இல்லை. அணுசக்தி வழங்கும் 44 நாடுகள் குழுவில் ரஷ்யாவும் அங்கம் வகித்தாலும், அமெரிக்காவின் எந்த வல்லாதிக்கப் போக்குக்கும் ரஷ்யா கட்டுப்படுவ தில்லை. அமெரிக்காவின் நேச நாடாகவும், இந்தியாவின் எதிரி நாடாகவும் இருக்கும் சீனா அணுசக்தி வழங்கும் நாடுகளில் அங்கம் வகிக்கும் போதும், அந்நாடு பாகிஸ்தானுக்கு வேண்டிய அனைத்து நவீன அணு ஆயுதங்களையும், தொழில் நுட்பத்தையும் வழங்கிக் கொண்டுதான் உள்ளது, அமெரிக்காவுடன் பாகிஸ்தான் எவ்வித ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாமலேயே சோதனை, கட்டுப்பாடு எதுவுமில்லாமல் தனது அணு ஆயுதங்களைப் பெருக்கிய வண்ணமுள்ளது. இப்போதும் ரஷ்யா இந்தியாவுக்குத் தொடர்நது உதவி வருகிறது. உதவத் தயாராகவும் இருக்கிறது. எனவே அமெரிக்காவின் உதவி எதுவும் இல்லாமலேயே இந்தியா அணு ஆயுதத் தேவையையும், மின் உற்பத்தித் தேவையையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

ஆனால் இந்த வாய்ப்பை, தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதை விடுத்து இந்தியா அமெரிக்கா பக்கம் சாய்வதனால், தெற்காசியாவைத் தாண்டி இன்னொரு எதிரி நாட்டை அதுவும் பலம் மிக்க ரஷ்யாவை இந்தியா பகைத்துக் கொள்ள வேண்டிய நிலை வரக்கூடும். இந்தியாவின் அமெரிக்க சார்பென்பது நாட்டு நலனுக்கு மட்டுமன்று... பிராந்திய நலனுக்கும் மிகக் கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடியதாகவே அமையும்.

அமெரிக்கா விரித்திருக்கும் மாயவலையில் வீழ்ந்து மயக்கத்திலிருக்கும் இந்தியா, அந்நாடு கடந்த காலத்தில் இழைத்த துரோகங்களையும், எதிர்காலத்தில் நிகழ்த்தப்போகும் வெறியாட்டங்களையும் நின்று நிதானமாகச் சீர்தூக்கிப் பார்க்கும் நிலையில் இல்லை.

அமெரிக்காவில் 1954ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அணுசக்தி சட்டத்தில் 123ஆம் பிரிவின்படிதான் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்தச் சட்டம் அமைதி வழியில் அணுவைப் பயன்படுத்துவது பற்றி மட்டுமே பேசுகிறதே ஒழிய அணு ஆயுதத் தயாரிப்புக் குறித்தோ, காங்கிரஸ் சொல்வது போல அணுகுண்டு வெடிப்புப் பற்றியோ எதுவும் பேசவில்லை. அமைதி வழி அணுசக்திப் பயன்பாட்டுக்கே கண்காணிப்புக் கட்டுப்பாடு போன்ற கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன. அதோடு ஹென்றி ஹைட் சட்டத்தின் 103ஆம் பிரிவின் படி எந்த நேரமும் அமெரிக்கா தன்னிச்சையாக சோதனை, கண்காணிப்பு, நிர்பந்தமென இந்தியாவை மிரட்ட முடியும். தன்னுடைய பிராந்திய தேவைகளை அதைக் காட்டியே நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஹைட் சட்டத்தின் 103ஆம் பிரிவு மிகத் தெளிவாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுப்பதுடன், அந்த நாடுகளும் அதற்கான தொழில் நுட்பத்தை பிற நாடுகளுக்குத் தரக் கூடாதெனவும் கூறுகிறது. இந்த ஒப்பந்தத்தில் சொல்லாததையும் அமெரிக்கா எவ்வித கூச்சமுமின்றி இந்தியா மீது திணிக்கக்கூடும் என்பது உலகறிந்த உண்மை.

இந்தியா 15 ஆண்டுகளில் 10 மிகப்பெரிய அணு உலைகளை அமைக்குமானால் அதற்கான தொழில்நுட்பம் தொடங்கி, உபகரணங்கள் வரை அமெரிக்க நிறுவனங்களுக்கு சுமார் 15 முதல் 20 பில்லியன் டாலர்கள் வரை கப்பம் கட்டியாக வேண்டும். எஞ்சிய பாதி தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை அணுசக்தி வழங்கும் நாடுகளான பிரான்ஸ், ஜெர்மன், கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து இந்தியா வாங்கிக் கொள்ளலாம். இந்தத் தொகையை பொருட்கள், சேவை போன்றவற்றின் மூலம் திருப்பிக் கட்ட வேண்டும்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்குப் பெருமளவு பணம் ஈட்டிக் கொடுக்கும் என்பதோடு, அமெரிக்காவின் ஏகபோக அரசியலை தெற்காசிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தவும் உதவும்.

பெருமளவு கடற்பரப்பை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியா அரபிக்கடல், வங்காள விரிகுடா என்ற இருபெரும் கடற்பரப்பைக் கொண்டுள்ளது. இந்தக் கடல் வழியாகத்தான் வளைகுடா நாடுகளுக்கும், தென் மேற்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கும் ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. உலகிலேயே அதிக அளவிலான கப்பல் போக்குவரத்து இந்தக் கடல் பரப்பில்தான் நிகழ்கிறது. இந்த மிகப்பெரிய கடல்பரப்பை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென விரும்புகிறது. அதற்கு இந்தியாவின் ஆதரவும், தளமும் அவசியமாகும். எனவே இந்த அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுமானால் இந்தக் கடல் பரப்பில் தனது ஆளுமையைச் செலுத்துவதுடன், ஈரான் அச்சுறுத்தல், ஒசாமா பின்லேடன் நடமாட்டம் முதலியனவற்றைக் கடலிலிருந்தும் முறியடிக்க முடியுமென அமெரிக்கா நம்புகிறது. சூயஸ் கால்வாய் முதல் சிங்கப்பூர் வரையிலுள்ள நாடுகள் அனைத்தையும் கடலிலிருந்தும் கண்காணிக்கும் வாய்ப்பு அமெரிக்காவிற்கு எளிதாகவே உருவாகிவிடும்.

பணம், தெற்காசிய நாடுகளைக் கண்காணிப்பது என்பதைத் தாண்டி தனக்கு கொஞ்சமும் அடிபணிய மறுக்கும் ரஷ்யாவைப் பழிவாங்க வேண்டுமென்ற அமெரிக்காவின் எண்ணமும் இந்த ஒப்பந்தம் மூலம் நிறைவேறும் வாய்ப்புள்ளது. தெற்காசிய நாடுகளில் சீனாவை அமெரிக்கா எளிதாக வீழ்த்தி விட முடியும். ரஷ்யாவிற்கு எதிராக சீனாவிற்கு வேண்டிய அனைத்து ஆயுதங்களையும் 1972ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இஸ்ரேல், பிரான்ஸ், பாகிஸ்தான் மற்றும் துருக்கி வழியாக அனுப்பி வருகிறது. ஐ.நாவின் பாதுகாப்புக் குழுவிலும் சீனாவிற்கு இடமளித்துள்ளது.

வணிகம், முதலீடு, இராணுவ பலம் போன்றவற்றில் சீனா அமெரிக்காவையே சார்ந்து இருப்பதால், துப்பாக்கி, குண்டு எதுவுமில்லாமல், அமெரிக்காவினால் சீனாவைச் சமாளித்துவிட முடியும். ஆனால் இராணுவ மற்றும் பொருளாதார பலம்மிக்க ரஷ்யாவை அமெரிக்காவினால் அசைக்கக் கூட முடியவில்லை. அமெரிக்காவால் ரஷ்யாவின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றவும் முடியவில்லை, காலூன்றவும் முடியவில்லை. எனவே பலம் மிக்க ரஷ்யாவை வீழ்த்த வேண்டுமானால் தெற்காசியாவிலுள்ள அனைத்து நாடுகளையும் தனது கண்ணசைவிலும், கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க வேண்டுமென விரும்புகிறது அமெரிக்கா. அதற்காகவே இந்தியாவிற்கு பொருளாதார ஒத்துழைப்பு, இராணுவ ஒத்துழைப்பு, அணுசக்தி ஒப்பந்தம் என்பன போன்ற ரொட்டித் துண்டுகள் வீசப்படுகின்றன.

இந்தியா 1974ஆம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்தியதிலிருந்தே அமெரிக்கா மெல்ல மெல்ல இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகிறது. இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் நேரடியாகவே அணு ஆயுதங்களையும் நவீன இராணுவத் தளவாடங்களையும் அமெரிக்கா வழங்கி வருவதுடன், அந்நாடுகளிடம் கண்டிப்பு எதனையும் காட்டுவதில்லை. ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அமைப்பில் இந்தியா இடம்பெறப் போராடி வருகிறது. இதற்கு பெரும் தடைக்கல்லாக இருந்து வருவதுடன், மற்ற நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவளிக்கக் கூடாதென மிரட்டி வருவதும் அமெரிக்காதான். அதோடு இந்தியாவின் மிக உயர்ந்த உளவு அமைப்பான ரா-வில் குழப்பங்கள் விளைவித்து அங்கிருந்து ரகசியங்களைத் திருடியதும், அந்தத் திருடர்களுக்கு அடைக்கலம் தந்து கொண்டிருப்பதும் அமெரிக்கா தான் என்பதனை உலகறியும்.

இந்தியாவிற்கு எதிரான சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் அமெரிக்கா எந்த அளவுக்கு ஆதரவாகவும், நெருக்கமாகவும் இருக்கிறதென் பதை சுட்டிக் காட்டி பல்வேறு நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம். 1978ஆம் ஆண்டு அப்துல்கதிர்கான் ஹாலந்து நாட்டிலிருந்து அணுசக்தி தொடர்பான முக்கியக் கருவிகளை திருடி வந்தது முதல் 25 ஆண்டுகளாக பாகிஸ்தானின் உளவு அமைப்பு அணு ஆயுதங்கள் தயாரிப்பில் எவ்வளவு முனைப்பாக ஈடுபட்டுள்ளது என்பது வரை அமெரிக்கா நன்கறியும். ஆனாலும் சீனாவையோ, பாகிஸ்தானையோ அமெரிக்கா இந்தியாவை மிரட்டுவதைப் போல மிரட்டுவதில்லை.

அமெரிக்காவின் வல்லாண்மை அரசியல் எல்லை மீறியதாகவும், மனித நேயமற்றதாகவும் இருக்கும் என்பதனைக் கண்டு உலகமே அஞ்சி நிற்கும் வேளையில் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் பேராபத்தை வரவழைத்துக் கொள்வது எங்கு போய் முடியுமென்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

இருபது பக்கங்களைக் கொண்ட 123 எனப்படும் அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா தெளிவாகவும், தீர்க்கமாகவும் 17 சட்டப் பிரிவுகளை வகுத்துள்ளது. நாற்பது ஆண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கப் போகும் 123 ஒப்பந்தத்தை ஓராண்டு கால முன் அறிவிப்பின்படி அமெரிக்கா தன்னிச்சையாகவே நீக்கி விடலாம். அணு ஆயுதமற்ற நாடு (Non - Nuclear State ) தரப்படும் தொழில் நுட்பத்தை, அணுசக்தியை அமைதி வழிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீறி ஆயுதம் தயாரித்தாலோ, பாதுகாப்பு விதிகளை மீறினாலோ அமெரிக்கா அமைக்கும் குழு ஒப்பந்தத்தை நீக்கம் செய்யும் நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும். அதோடு அமெரிக்கா அளித்த தொழில்நுட்பம், உபகரணங்கள், அணு ஆயுதத் தளவாடங்கள் போன்றவற்றை அமெரிக்காவே திரும்பி எடுத்துக் கொள்ளும் உரிமை படைத்ததாகும்.

அமெரிக்கா முன்மொழியும் இந்த ஒப்பந்தத்தின் பிரிவுகள் தெளிவாகவும், தீர்க்கமாகவும் அமெரிக்காவுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக உள்ளது. அமெரிக்காவின் செயலும், நோக்கமும் என்றைக்கும் இந்தியாவுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது என்பதனை நடப்புக்காலச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆட்சி போனாலும் பரவாயில்லை அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டே தீருவேன் என்பதையும், அமெரிக்காவுக்கு அடிமையாய் இருப்பதே பெருமையும் கௌரவமும் என்பது போல செயல்படுவதையும் மக்கள் விரும்பவுமில்லை, ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com