Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
டிசம்பர் 2007
பதிவுகள்
சுப.வீரபாண்டியன்

நம்பிக்கைத் துளிர்

கடந்த ஓராண்டாகவே, திராவிட இயக்கக் கொள்கைப் பயிலரங்குகளில் பங்கேற்று வருகிறேன். சென்ற ஆண்டு சூலையில், சென்னை பெரம்பூர், கோவை, உடுமலைப்பேட்டை, நாகை, நெய்வேலி என ஐந்து இடங்களில் பயிலரங்கம் தொடங்கிற்று. பெரம்பூர் தவிர மற்ற நான்கு இடங்களிலும் வெவ்வேறு காரணங்களால் வகுப்புகள் விடுபட்டுப்போயின. மாதம் ஒரு வகுப்புவீதம் 12 வகுப்புகள் எனத் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் ஆறேழு வகுப்புகளில் தடைகள் ஏற்பட்டுவிட்டன. பெரம்பூரில் மட்டும் 11 வகுப்புகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்தப் பட்டறிவு புதிய சிந்தனைக்கு வழிவகுத்தது. மாதம் ஒருநாள் என்பதற்கு மாற்றாகத் தொடர்ச்சியாக இரண்டு நாள்களுக்கு பயிலரங்கை நடத்தலாமா என்ன எண்ணம் வந்தது.

முதல் முயற்சியாக, கோவை மாவட்டம் சூலூரில் கடந்த 10, 11 ஆகிய நாள்களில் கொள்கைப் பயிலரங்கை நண்பர்கள் ஏற்பாடு செய்தனர். 12 வகுப்புகளுக்காக என்று உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தை நான்கு வகுப்புகளுக்கு உரியதாகச் சுருக்கினோம். தமிழக வரலாறு, திராவிட இயக்க வரலாறு திராவிட இயக்கக் கோட்பாடுகள், திராவிட இயக்கத்தின் தாக்கம் என நான்கு தலைப்புகளில் பயிலரங்க அமர்வுகளை அமைத்துக் கொண்டோம்.

பயிலரங்கம் தொடங்கிய 10 ஆம் நாள் காலை சூலூர் எஸ்.ஆர்.எஸ் மண்டபம் நிரம்பி வழிந்தது. தி.மு.கழக ஒன்றியத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தால் தி.மு.வினர் ஆண்களும், பெண்களுமாய் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் திரண்டு வந்தனர். வழக்கம் போலத் தமிழ் உணர்வாளர்களும் தவறாது திரண்டிருந்தனர்.

மிகுதியான எண்ணிக்கைப் பயிலரங்கை ஒரு பொதுக்கூட்டம் போல ஆக்கிவிடுமோ என்னும் சிறு அச்சம் எனக்குள் இருக்கவே செய்தது. தொடர்ந்து அத்தனை பேரும் நான்கு அமர்வுகளிலும் இருப்பார்களா என்ற ஐயமும் எழுந்தது. என் ஐயத்தையும், அச்சத்தையும் சூலூர் பகுதி மக்கள் தகர்த்தெறிந்தனர்.

இரண்டு நாள்களிலும், எந்த ஒலியும் ஆரவாரமும் இல்லாமல் அனைவரும் வகுப்பைக் கவனித்தனர். மிகப்பலர் ஏடுகளில் குறிப் பெடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு அரங்கம் முடிந்த பின்னும் சரமாரியாக வினாக்களையும் தொடுத்தனர்.

மறுநாள் மாலை நிறைவரங்கத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.மோகன் கலந்துகொண்டு அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார். பங்கேற்றவர்களின் பெயர்களையும், எண்ணிக்கையையும் மேடையில் படித்தபோது நான் பெருவியப்பில் ஆழ்ந்து போனேன். 45 பெண்கள் உட்பட 283 பேர் கலந்து கொண்டார்கள் என்பது நம்மை வியக்க வைக்கிறது என்றால், அவர்களில் 113 பேர் முப்பது வயதுக்குட்- பட்டவர்கள் என்னும் செய்தி பெரும் இன்ப அதிர்ச்சியாய் அமைந்தது.

முதல்நாள் தொடக்கவுரையில் புலவர் செந்தலை கவுதமனும், 2ஆம் நாள் தொடக்க உரையில் முன்னாள் பேரவைத்தலைவர் தங்கவேலு அவர்களும், சில அரிய செய்திகளைத் தொகுத்துத்தந்தார்கள். தி.மு.க.வின் நகரச் செயலாளர் செல்வராஜ், முருகேசன், சூலூர் தேவராசன் மற்றும் நகர தி.மு.க. வினர், பாவேந்தர் பேரவையினர் தங்களின் கடும் உழைப்பால் பயிலரங்கைச் சிறக்கச் செய்தனர்.

இப்பயிலரங்கில் வெற்றிக்குப் பெரும் காரணமாக இருந்த ஒருவரை நான் நன்றியோடு குறிப்பிட்டாக வேண்டும். அவர்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி. தன் கையிலிருந்து காசைச் செலவிட்டுப் பயிலரங்கு வெற்றி பெறப் பலவிதத்திலும் பாடுபட்டவர்.

கொள்கைகளின் மீது கொண்ட பற்றினால் அந்த அரங்கை அத்தனை சிறப்புகளோடும் அவர் நடத்திக் காட்டினார். இது போன்ற பயிலரங்குகளை இனிமேல் தொடர்ந்தும் நடத்தலாம் என்றும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது சூலூர் நகரம்.

கடிவாளமற்ற குதிரைகள்

18.11.07ஆம் நாள் தினமணி ‘அரசியல் அரங்கம்’ பகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்தின் நேர்காணல் இடம் பெற்றுள்ளது.

விஜய்காந்தை வளர்த்து விடுவதில், தினமணிக்கு உள்ள ஆர்வத்தை, நேர்காணலின் அறிமுகப்பகுதி நமக்கு விளக்குகின்றது. “சந்தித்த முதல் தேர்தலிலேயே எட்டு விழுக்காடு வாக்குகள். தனக்குச் சம்பந்தமே இல்லாத விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி. தமிழகத்தில் இருக்கும் பஞ்சாயத்து வார்டுகள் வரை பரவிக் கிடக்கும் பலமான கட்சிக் கிளைகள். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு ஒரு மாற்று ஏற்படாதா என்று ஏங்கும் வாக்காளர்களைக் கவரும் வகையில் தனித்துப் போராடும் துணிவு” - என்று அடுக்கிக் கொண்டே போகிறது தினமணி.

இந்த அளவிற்கு அவரைப் பாராட்டும் அந்த நாளேடு, அவர் கட்சியின் கொள்கைகளைப் பற்றிப் பேசும்போது மட்டும், மிக லாவகமாக நழுவுகிறது. “தத்துவ ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தன்னைக் கட்டிப் போட்டுக் கொள்ளாத, அதே சமயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விழையும் விஜய்காந்தின் வேகம் அவரது சொற்களில் தெரிகிறது” என்கிறது தினமணி.

‘தத்துவ ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ தன்னை கட்டிப் போட்டுக் கொள்வதில்லையாம்.’ அடடே... தத்துவமோ, கொள்கையோ அந்தக் கட்சிக்குக் கிடையாது என்பதைச் சொல்வதற்கு எத்தனை ஒப்பனை பாருங்கள்.

விஜய்காந்தும் இளைத்தவரல்லர். “தே.மு.தி.க.வின் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைதான் என்ன?” என்னும் கேள்விக்கு, “பொதுவுடைமை, முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் என்றெல்லாம் பெயர் வைத்து அழைப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும். அதுவும் விரைவில் வந்தடைய வேண்டும். அதற்கு, அந்தந்தப் பிரச்சினைக்குத் தகுந்தவாறு, எது பயன்படுமோ அந்த வழியைப் பின்பற்றுவதுதான் சரி என்று நினைப்பவன் நான். இதுதான் கொள்கை என்று கண்களுக்குக் கடிவாளம் போட்டுக் கொள்ள நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

அதாவது, தங்கள் கட்சிக்குக் கொள்கை கிடையாது என்பது மட்டுமன்று, அப்படி எதையும் தான் வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதையும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். “என்னைப் பொறுத்தவரை, மனசாட்சிதான் எனது கொள்கை, வழிகாட்டி எல்லாமே” என்றும் அவர் கூறுகிறார்.

‘இட ஒதுக்கீடு வேண்டுமா, வேண்டாமா?’ என்று கேட்டால், அவர் தன் மனசாட்சியைக் கேட்டுச் சொல்வார். ‘தாய்மொழி வழிக்கல்வி சிறந்ததா, இல்லையா?’ என்றால், அவர் தன் மனசாட்சி காட்டும் வழியில் நடப்பார்.

எந்தச் சமூகப் பொருளாதாரச் சிக்கலுக்கும், இதுதான் பாதை, இதை நோக்கித்தான் பயணம் என்று எந்தக் கொள்கைக் கடிவாளமும் அவருக்குக் கிடையாது. அந்தந்த நேரத்தில் அவருடைய மனசாட்சி என்ன சொல்கிறது என்று கேட்டு, அதன் வழிநடப்பார். எனவே, எந்த ஒரு சிக்கலிலும், தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன என்பதை, மக்கள் மட்டுமல்ல, அவருடைய கட்சித் தொண்டர்களே கூட அறிய முடியாது. அது அவருடைய அன்றைய மனசாட்சியைப் பொறுத்தது.

அவர் மனசாட்சி என்பது, பல நேரங்களில் அவருடைய மனைவி அல்லது மைத்துனரின் மனசாட்சியாகவே இருப்பதாக, விபரமறிந்தவர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில், விஜய்காந்த் குடும்ப மனசாட்சி இந்த நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதே அவர் விருப்பம். எந்தக் கொள்கையும் இல்லாத ஒரு கட்சியை வைத்துக் கொண்டு, அரியணையில் ஏறி அமர்ந்துவிட வேண்டும் என்ற அடங்காத ஆசையில், ஆயிரம் கற்பனைகளை அள்ளி வீசுகிறார்.

‘தான் ஆட்சியில் அமர்ந்தால், லஞ்சத்தை ஒழித்துவிட முடியும், வறுமையைப் போக்கிவிட முடியும்’ என்கிறார். “ஏழைகள் இல்லாத தமிழகம்தான் எனது கனவு, இலட்சியம் எல்லாமே. அதை எப்படியும் நடத்திக் காட்ட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்பது அவர் காட்டும் ஆசை வார்த்தைகளின் உச்ச கட்டம். எத்தனை இனிமையான கனவு பாருங்கள்.

ஏழைகள் இல்லாத தமிழகத்தைக் காண நமக்குக் கூடத்தான் மனம் அவாவுகின்றது. ஆனால் அதற்கான வழிமுறைகள் என்ன என்னும் ‘ரகசியத்தை’ இதுவரை அவர் எங்கும் வெளியிடவில்லை. முதலமைச்சராக அவரை ஆக்கினால்தான் அதைக் கூறுவார் போலிருக்கிறது. லஞ்சம், வறுமையை எல்லாம் ஒழித்து விடுவேன் என்று அடிக்கடி கூறும் அவர், ஒரு போதும் ‘கறுப்புப் பணத்தை’ ஒழித்துவிடுவேன் என்று மட்டும் கூறுவதில்லை. அதற்கு அவரின் மனசாட்சி இடம்தரவில்லையோ, என்னவோ!

சரி, விஜய்காந்தை விடுங்கள். யார் ஒருவர் முதலமைச்சர் ஆனாலும் தமிழ்நாட்டின் லஞ்சம், வறுமையை ஒழித்துவிட முடியுமா என்றால் முடியாது. மிகப்பெரிய சமூக, அரசியல் மாற்றங்கள் நிகழாமல், வறுமையை ஒழிப்பது என்பதெல்லாம் வெறும் கற்பனாவாதமே.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநில முதலமைச்சருக்குள்ள அதிகாரங்கள் மிக மிகக் குறைவானவையே. மத்திய அரசுப் பட்டியலிலும் (Central list), பொதுப் பட்டியலிலும் (Concurrent list) மட்டுமே அதிகாரங்கள் குவிந்துகிடக்கின்றன. மாநில அரசுப் பட்டியலின் (State list) அதிகாரங்கள், ஒன்றுக்கும் பயன்படாதவையாகவே இன்று வரை உள்ளன.

கல்வி கூட, பொதுப்பட்டியலில்தான் உள்ளது. இந்நிலை மாற வேண்டும் என்பதே, அறிஞர் அண்ணாவின் ‘மாநில சுயாட்சி’க் கோட்பாடு. எனவே, இன்றைய நிலையில், ஒரு மாநில முதலமைச்சரால், சில சீர்திருத்தங்களைத்தான் நடைமுறைப்படுத்த முடியுமே அல்லாமல், தலைகீழ் மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்திவிட முடியாது.

இந்தியாவின் தலைமை அமைச்சராக விஜய்காந்த் அமர்ந்தால் கூட (அப்படியும் கனவு இருக்கலாம்), நாடாளுமன்றத்திலும், மக்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே, சில அடிப்படை மாற்றங்களைச் செய்ய முடியும்.

இவையெல்லாம் சட்டத்தின் வழி, அரசியலில் செய்யக்கூடிய மாற்றங்கள். இவற்றிற்கு முன்னோடியாக, சமூக மாற்றம் நம் முன் நிற்கிறது. மக்களின் மனப்பான்மை, பொதுபுத்தி, தொலைநோக்கு, பொது நலம் ஆகியனவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்படாதவரை எதையும் எளிதில் செய்துவிட முடியாது.

எனவே யாராலும், எப்போதும், எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்னும் அவநம்பிக்கை விதையை நாம் தூவவில்லை. இத்தனை பெரிய சமூக, அரசியல், பொருளாதார மாற்றங்களை உருவாக்க வேண்டுமெனில், அதற்கான கொள்கை, கோட்பாடு, வழிமுறை, உத்திகள் எனப் பலவும் தேவைப்படுகின்றன என்பதை மக்களோடு பகிர்ந்து கொள்வதே நம் நோக்கம்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com