Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

வீரப்பனுக்குப் பிறகு வீரப்பன் காடு - அதிர வைக்கும் உண்மைகள்!
காட்டுராஜா


பச்சைப் பசேல் எனப் படர்ந்து விரிந்து கிடக்கிறது! எங்கு பார்த்தாலும் ஓங்கி உயர்ந்த மரங்கள், மலைக் குன்றுகள், பறவைகள் எழுப்பிடும் இதமான ஒலி அதிர்வுகள். கண்களுக்கெட்டிய தூரம் வரை அடர்ந்த வனம். ஒருபுறம் மிரள வைக்கும் மறுபுறம் அதன் பிரமாண்டத்தில் மனது கட்டுப்பட்டு நிற்கும். இயற்கை மனிதனுக்கு தந்த கொடையாய் காட்சி தரும். அந்த காட்டுப்பகுதி நம் தமிழ்நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலையான சத்தியமங்கலம் காடுதான்!

இயற்கையுடன் பறவைகள், விலங்குகளோடு மனிதர்களும் இங்கு வாழ்கிறார்கள். ஆம் இப்போது அவர்கள் மனிதர்களாக மதிக்கப்படுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்புவரை மலையில் வாழும் மலைமக்கள் புழு, பூச்சிகளாகப் பாவிக்கப்பட்டார்கள். அவர்களின் துன்பதுயரம், கண்ணீர் எல்லாம் இப்போதும் நீங்காத வடுவாகத்தான் இருக்கிறது.

எதனால் என்பது எல்லோரும் அறிந்த செய்திதான். காட்டுக்குள் மறைந்து வாழ்ந்த வீரப்பனைப் பிடிக்கிறோம் என்று காட்டுக்குள் இறக்கிவிடப்பட்ட அதிரடிப்படை என்கிற அந்த விலங்குப்படை மலைமனிதர்களையும், பெண்களையும் வேட்டையாடியது. 1993இல் அப்போதைய ஜெயலலிதா அரசால் தமிழ்நாடு காவல்துறை மட்டுமல்லாமல் இன வெறியர்களான கன்னடக் காவல்துறையையும் இணைத்து தமிழக - கர்நாடகா கூட்டு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு விசுவாசியாக இருந்த தேவாரம்தான் அதன் தலைவராக இருந்து ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களுக்கும், சித்ரவதைகளுக்கும் காரணமாக இருந்தார்.

அப்போது முதல் வீரப்பன் இறப்பு வரை சுமார் 14 ஆண்டுகள் அந்தக் காட்டுப் பகுதி அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில் சிக்குண்டிருந்தது.

அந்தக் காலகட்டம்தான் மலை மக்களின் இருண்ட காலம்! அதிலிருந்து அவர்கள் மீண்டுள்ளார்களா? இப்போது அவர்களின் நிலை என்ன? அந்த வனப்பகுதி எப்படியுள்ளது என்பதையெல்லாம் அறிந்து கொள்ளும் ஆவலில் மலைக்குப் பயணப்பட்டோம்.

தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி எனத் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கர்நாடகா, கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் விரிந்துள்ளது இம்மலைப்பகுதி. தமிழகப் பகுதிதான் அதிக அடர்த்தியான காடுகள், சுமார் ஆறாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டவை. பல நூற்றுக்கணக்கான மலை கிராமங்களில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கிறார்கள்.

கடம்பூர் மலையைச் சேர்ந்த மலைவாசியான மாதனைச் சந்தித்தோம். அவரது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். "காடுகளோடு இங்குள்ள இழை, தலை, மரம், பூச்சி, விலங்கு, பறவையென எல்லாவற்றோடும் வாழப் பழகிக் கொண்டவர்கள் நாங்கள். நான் பிறந்தது முதல் இன்றுவரை காட்டைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. ஒரு காலத்தில் வீரப்பன் நடமாட்டம் இங்கு இருந்தது. அப்போதெல்லாம் வெளியாட்களின் நடமாட்டம் இங்கு இருக்காது. வீரப்பன்தான் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாகவும், யானைகளைக் கொன்று தந்தங்களை வேட்டையாடுவதாகவும் சொல்வார்கள். காட்டுக்குள் வீரப்பன் குழுக்கள் எந்தப் பகுதியில் இருக்கிறார்கள் என்பதே தெரியாது. சாமியைப் போல இங்கும் இருக்கலாம், அங்கும் இருக்கலாம் என நம்பிக் கொள்வோம்.

காட்டுக்குள் விறகு பொறுக்கவோ, ஆடு, மாடு மேய்க்கவோ எங்கள் மக்கள் போய் வருவார்கள் வீரப்பன் ஆட்கள் யாராவது எங்களைப் பார்த்தாலும் எதுவும் செய்ய மாட்டார்கள். மீறினால் உணவுப்பொருட்கள் கேட்பார்கள் அவ்வளவுதான். வெளியாட்கள் யாரும் காட்டுக்குள் நுழையவே மாட்டார்கள். ஏனென்றால் வீரப்பன் பற்றிய பயம்தான். புதிய நபர்கள் யாரும் திருட்டுத்தனமாக மரம் வெட்டவோ, விலங்குகளை வேட்டையாடவோ காட்டுக்குள் நுழைய மாட்டார்கள். இப்போது பாருங்கள் கொள்ளையர்கள் மிக எளிதாக வந்து போகிறார்கள். வீரப்பன் இருக்கும்போது ஒட்டுமொத்தக் காட்டையும் பூட்டி வைத்திருந்தது போல இருக்கும். அந்தப் பாதுகாப்பு இப்போது இல்லை. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளன.

பல சிறுத்தைப் புலிகளைக் கொன்றுள்ளார்கள். சிறுத்தைப் புலியின் தோல் பல ஆயிரத்திற்கு விலை போகிறது. யானைத் தந்தங்களும் அதுபோலத்தான். நமது வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த ஈட்டி, தேக்கு, சந்தன மரங்களும் சூரையாடப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் கர்நாடகாவைச் சேர்ந்த காட்டுக் கொள்ளையர்கள்தான் ஈடுபடுகிறார்கள்'' எனக் கூறுகிறார்.

தலமலையைச் சேர்ந்த சடையப்பன், "வீரப்பன் இருக்கும்வரை வீரப்பனால் எங்களுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை. எல்லாம் அதிரடிப்படையால்தான். ‘வீரப்பனுக்கு அரிசி கொடுத்தாயா? பருப்பு கொடுத்தாயா?' என எங்கள் வீட்டுக்குள் நுழைந்து ஆண்களையெல்லாம் கை, கால்களை உடைப்பார்கள். பெண்களையும் சித்திரவதை செய்வார்கள். ஒரு சில பெண்களைக் கற்பழித்தும் உள்ளார்கள். ராமர் அணை என்கிற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மணி என்பவரைப் பிடித்த அதிரடிப்படை எஸ்.ஐ. மோகன்நிவாஸ், மனைவி கண்முன்னேயே மணியை அடித்துக் கொன்று உடலையும் எரித்து விட்டார். யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. இப்போது அந்த மோகன் நிவாஸ் டி.எஸ்.பி.யாக இருக்கிறார் எனத் தனது உள்ளக் குமுறலை நம்மிடம் கூறியவர், எது எப்படியோ வீரப்பன் இருக்கும் வரை இந்தக் காட்டுக்கே ராஜாவாகத் தான் இருந்தாருங்க. இப்ப பாருங்க ஒரு வீட்டுக்கு குடும்பத் தலைவன் இறந்துட்டாருன்னா எப்படி நமக்கு இழப்போ அதுபோலத்தாங்க இருக்கிறோம்'' என்றார்.

“சரி, சித்திரவதை - அவற்றால் ஏற்பட்ட துயரம் இவைகளைக் கடந்தபின் இப்போது உங்கள் வாழ்நிலை எப்படியுள்ளது?” - இந்தக் கேள்வியை தாளவாடியைச் சேர்ந்த நஞ்சனிடம் கேட்டோம்.

“சுகமா இருக்குதுங்க... உண்மையைச் சொன்னா அப்படியே காலாற நடந்து காட்டுக்குள்ள போனா போயிக்கிட்டே இருக்கலாம்போல இருக்குது. இது நம்ம காடுனு உணர்வு ஏற்பட்டிருக்குது. யாராவது புடுச்சிக்கிடு வாங்களோங்கற பயம் இல்லை....! அப்பல்லாம் அதிரடிப் படையை ரோட்டுலயோ, ஊருக்குள்ளேயோ பார்த்தாலே நாங்க பயப்படுவோம். சோறாக்க விறகு இல்லைன்னா கூட நாங்க காட்டுக்குள் நுழைய முடியாது. ஆடு, மாடு கூட காட்டுக்குள்ள போய் மேய்க்கக் கூடாது. எங்களுக்கு ரேசன் கார்டு இருக்குதோ இல்லையோ அதிரடிப்படை கொடுக்கிற அட்டையை எந்நேரமும் கையில வெச்சுக்கனும். இன்ன வேலை செய்யிறோம்னு அந்த அட்டையில இருக்கும்.

எங்களுடைய பூர்வீக பூமி இந்தக் காடு. ஆனா இதுக்குள்ளேயே நாங்க ஏதோ அந்நியர்கள் போல திருட்டுத்தனமா வாழ்றதைப் போல நடத்தப்பட்டோம். இப்ப பாருங்க ஆடு மேய்க்கிறோம், மாடு மேய்க்கிறோம். காட்டுக்குள்ள நெடுந்தூரம் போய் தேன் எடுக்கிறோம். சீமார் புல் அறுக்கிறோம், கடுக்காய் பொறுக்கறோம், வனக் குழுக்கள் மூலமா வனப் பொருட்களைச் சேகத்து கூட்டுறவு சங்கத்துக்கு விற்பனை செய்யறோம். வறுமை இருந்தாலும் வாழ்க்கை ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் இருக்குது. இந்த இன்பத்துக்கெல்லாம் காரணம் அதிரடிப்படை எங்க காட்டை விட்டு ஓடியது தாங்க'' என்றார் மகிழ்ச்சியுடன்.

வீரப்பன் இறப்புக்குப் பிறகு தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப் படைகளும் காட்டை விட்டு விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டன. இப்போது யாரும் காட்டுக்குள் சென்று வரலாம் என்ற நிலை உள்ளது. இதை பயன்படுத்தும் வனக் கொள்ளைக் கும்பல்கள் காட்டுக்குள் ஊடுருவியுள்ளன. காட்டைக் கொள்ளையடித்தானோ இல்லையோ அப்போது வீரப்பன் என்கிற ஒரே குழுதான். ஆனால் இன்று ஏராளமான சிறுசிறு குழுக்கள் காட்டுக்குள் உள்ளன. இவையெல்லாம் மக்கள் யுத்த குழுக்களல்ல. எல்லாமே கொள்ளைக் கும்பல்தான். பெரும்பாலும் கேரளா மற்றும் கர்நாடகா குழுக்கள் ஏராளமாக உள்ளன. தாளவாடி, தலமலை, ஆசணர், கெத்தேசால், காடட்டி, கடம்பூர், பர்கூர், தேவர்மலை, தண்டா என அடர்த்தியான வனப்பகுதி நம்மிடம் உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இங்குள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டி தலைச் சுமையாகவே அவர்கள் காட்டுக்கு நடந்தே செல்கிறார்கள். கர்நாடகக் கும்பல் மரங்களை வெட்டுவதோடு தந்தத்துக்காக யானைகளையும் தோலுக்காகச் சிறுத்தைப் புலிகளையும் வேட்டையாடுகிறது. அண்மையில்கூட கர்நாடகாவைச் சேர்ந்த சிலர் ஒரு யானையைக் கொன்று தந்தங்களை வெட்டியுள்ளனர் எனப் பல தகவல்களைக் கூறுகிறார்கள் மலைமக்கள்.

ஆசனூரைச் சேர்ந்த சடையன், “பெரிய அளவுக்கு எங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஒன்றும் வரவில்லை. இப்போது நிம்மதி உள்ளது அப்போது அது இல்லை. அன்று அதிரடிப்படையின் வாகனங்கள் ஊருக்குள்ளும், காட்டுக்குள்ளும் அணிவகுத்துப் போகும், போலீஸ் அதிகாரிகள், சர் புர்ரென இப்படிப் பறப்பார்கள் ஜீப்பில் பறப்பார்கள். துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு சடசடவென ஓடுவார்கள். மிருகத்தைப் பார்த்தால் ஓட்டம் எடுப்பது போல அவர்களைப் பார்த்தால் மக்கள் வீட்டுக்குள் ஓடி ஒளிவார்கள். ஒருவித மரண அச்சம் நாங்கள் தூங்கும்போதுகூட இருந்து கொண்டே இருக்கும். இப்போது அந்தக் கவலை இல்லை. வீரப்பன் சட்டத்துக்கு மாறாக எவ்வளவோ தப்பு செஞ்சிருக்கலாம்.

எங்களுக்கு எந்தத் துன்பமும் செய்யலே. ஊருல ஒரு காவல் தெய்வம் இல்லைனா எப்படியிருப்போமோ அதுபோலத்தாங்க வீரப்பன் இல்லாத இந்தக் காடு இருப்பதாகத் தெரிகிறது'' என்றார்.

தமிழகப் பசுமை இயக்கத்தின் தலைவரான டாக்டர் ஜீவானந்தம், "வனக் கொள்ளையனான வீரப்பன் ஒரு குழுவாகத்தான் செயல்பட்டான். அவனை ஒழித்து விட்டது காவல்துறையும் அரசும். ஆனால் இப்போது பல கொள்ளைக்காரர்கள் வனத்துக்குள் ஊடுருவி விட்டார்கள். இவர்களை எப்படி விரட்டப் போகிறது அரசு? மலைப் பகுதிகளுக்காக, அம்மக்களின் மேம்பாட்டுக்காக அரசு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருகிறது. ஆனால் எதுவுமே அம்மக்களுக்குச் சென்றடையவில்லை. வனத்துறையில் சில நல்ல அதிகாரிகள் உள்ளார்கள். ஆனால் பல கெட்ட அதிகாரிகளும் உள்ளார்கள். வனத்தைப் பற்றியும் மலைமக்கள் பற்றியும் அதிகாரிகளுக்கு முறையான பயிற்சியை அரசு கொடுக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் தலைவரான வி.பி. குணசேகரன் அப்போது வனம் வனத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. வீரப்பன் மறைவுக்குப் பிறகு மக்களுக்கான அச்சம் நீங்கியுள்ளது. ஆனால் இப்போதும் மக்கள் வாழ்க்கை மேம்பாடடையச் செய்வதற்கான புதிய திட்டங்கள் ஏதும் இல்லை. அப்போது வீரப்பனைக் காரணம் காட்டி அரசு அதிகாரிகள் மலைப் பகுதிக்கு வரமாட்டார்கள். அரசு திட்டப்பணிகள் எதுவும் நடக்காது. இப்போதுதான் பிரச்சனை இல்லையே. ஆனாலும் அதிகாரிகள் மலைமக்களை மாற்றாந்தாய் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறார்கள். சாலை வசதி இல்லை. மருத்துவமனைகளில் டாக்டர்கள் வருவதில்லை. பள்ளிகளில் ஆசியர்கள் வருவதில்லை. இப்படிக் கல்வி, சுகாதாரம் அடிப்படை வசதிகள் எதுவும் நடப்பதில்லை.

வனத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் இந்த வனப் பகுதியில் வாழும் மலை மக்களிடம் வனத்தைக் கொடுக்க வேண்டும். கொள்ளையர்களிடமிருந்து வனத்தைப் பாதுகாக்க மலைவாசிகளால் மட்டுமே முடியும். வனம் மக்கள்மயமாக்கப்பட வேண்டும். அரசு இம்மக்களைப் பற்றி அக்கறை கொள்ளாததற்குக் காரணம், இங்கு குறைந்த வாக்காளர்கள் இருப்பதால்தான். வாக்குகளை வைத்து வனத்தையும் மலை மக்களையும் சிந்திக்கக் கூடாது. அரசு புதிய சிந்தனைக்கு வரவேண்டும்” என்றார்.

‘எங்க ஊர் கோயிலில் எல்லா சாமியும் இருக்கிறது. ஆனால் காவல் தெய்வம் மட்டும் இல்லை’ என்ற தவிப்பு வீரப்பன் இல்லாத காட்டு கிராம மக்களின் உணர்வாக உள்ளது. மறுபுறம் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுக் கொள்ளையர்களின் ஊடுருவல் தொடர்ந்து நடக்கிறது.

காடும் மலையும் அழியாமல் இருக்க வேண்டுமென்றால், அது அங்கு வாழும் மக்களின் முன்னேற்றத்தில்தான் இருக்கிறது. அரசு இதைக் கவனத்தில் எடுத்துப் பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் குணசேகரன் கூறுவதுபோல் புதிய திட்டம், புதிய சிந்தனைக்கு வர வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com