Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

கை நிறையச் சம்பளம் இலவசமாய் மனநோய் - முப்பது வயதில் மூப்படையும் விபரீதம்!
அ. பெரியார்


தகவல் தொழில்நுட்பம் வானளாவ வளர்ந்து நிற்கும் காலம் இது. உலகமே இணையதளத்துக்குள் இணைந்துள்ளது. கணினி இன்றி அமையாது உலகு! என்று சொல்லும் அளவிற்கு கணினித்துறையின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. எங்கும் கணினி, எதிலும் கணினி என்ற இன்றைய நிலையில், அதன் அதீத வளர்ச்சியில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் சமூகச் சிக்கல்கள் குறித்து விவாதிக்க வேண்டிய கட்டத்தில் நாடு இருக்கிறது. அதற்கு முதன்மையான காரணம், அண்மைக் காலமாக, நாளிதழ்களில் வரும் செய்திகள்தான். இந்த வாரத்தில் நாளிதழ் ஒன்றில் இடம்பெற்ற செய்தி, “நண்பர்களுடன் மது அருந்தும்போது பெண்ணிடம் சில்மிஷம்! அடிதடியில் வாலிபர் கடத்தல்!” என்பதாகும். இவ்வாறான செய்திகள் பலருக்கும் சர்வசாதாரணம். தேநீர் குடித்துக் கொண்டே படுகொலைச் செய்திகளை வாசித்துப் பழகி விட்டவர்களுக்கு இதெல்லாம் ஒரு சம்பவமே இல்லைதான். ஆனால் எதிர்காலச் சமூகத்தின் மீது நம்பிக்கை கொண்ட சமூகப் பற்றுடைய யாராலும் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

கால்சென்டல் பகுதிநேரப் பணியாற்றும் திவ்யாவிற்கு நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக மது அருந்தும் பழக்கம் உடையவர் என்று சம்பவத்தை விவரிக்கிறது அந்நாளேடு. குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் ஈட்டும் துறைகளான கால்சென்டர்களும், பிபிஓக்களும் தமிழகத்தில் அதிவேகமாகப் பரவி வருகின்றன. இந்தியாவில் பெங்களூருக்கு அடுத்து சென்னை பெரிய அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வருகின்றது என்கிறார்கள் அத்துறையைச் சார்ந்தவர்கள். கால் சென்டரில் வேலை செய்வதற்கு ஒரு பட்டப்படிப்பு, நல்ல ஆங்கில மொழி அறிவு இவை இருந்தால் போதும் என்கிறார் கால்சென்டர் ஒன்றில் பணியாற்றும் சுகன்யா. மேலும் அவர் கூறும்போது, “இரவு முழுவதும் கண்விழித்து வேலை செய்ய வேண்டியுள்ளது. அதனால் உடல்சோர்வும், மனச்சோர்வும் ஏற்படுகிறது. சரியான நேரத்திற்குச் சாப்பிட முடிவதில்லை. போதிய தூக்கம் இல்லாமல் போவதால் ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு உடலளவில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. மற்றபடி, சம்பளம் நிறைய கிடைக்கிறது” என்கிறார்.

சென்னையில் பி.பி.ஓ. மையம் ஒன்றில் வேலை செய்யும் சீனிவாசன் கூறும்போது, “நாங்கள் வேலை செய்யும் இடம் ஒரு தனி உலகம், வெளியில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. இரவா, பகலா என்றே உணர முடியாது. பகல் 1 மணிக்கு உள்ளே போனால் இரவு பத்து மணிக்கு வெளியே வருவோம். எங்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் யாவும் எங்களைத் தேடி வந்து விடும். எதற்கும் நாங்கள் நேரத்தை விரயம் செய்ய முடியாது. ஒவ்வொரு நிமிடமும் மதிப்புடையது. உரிய வேலையை, உரிய நேரத்தில் முடித்துவிட வேண்டும். அனைத்துச் சலுகைகளும் உண்டு. மூன்று மாதத்துக்கு ஒருமுறை வெளியில் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். அடுத்த வாரம் சிவாஜி திரைப்படத்துக்கு அவர்கள் செலவிலேயே அழைத்துச் செல்கின்றனர்” என்று சொல்லும்போது அவர் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.

“கை நிறையக் காசு கிடைக்கிறது, அதை எப்படிச் செலவு செய்வது என்றே தெரியவில்லை. இவர்களுக்குத் தரப்படும் பத்தாயிரம், இருபதாயிரம் என்பது நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தில் வெகுசிறிய பங்குதான். சென்னையில் அண்மைக்காலமாக சாதாரண நடுத்தரக் குடும்பங்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதுவும் குறைந்த வாடகையில் வீடுகள் கிடைப்பதில்லை. காரணம், எவ்வளவு வாடகையானாலும் கொடுப்பதற்கு, கால் சென்டர்களிலும் பி.பி.ஓ.களிலும் வேலை செய்யும் இளைஞர்கள் காத்திருக்கிறார்கள் என்பதுதான்” என்று ஆதங்கப்படுகிறார் கணினி துறையில் பட்டங்கள் பல பெற்றும் கால்சென்டர்களில் வேலை செய்வதில்லை என்ற வைராக்கியத்தில் வேலை தேடும் இளைஞர் சத்தியநாராயணன்.

எந்த வேலையாக இருந்தாலும் எட்டு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யக் கூடாது என்பதற்காக உயிர்த் தியாகம் செய்து பெற்ற உரிமையை, மே நாள் கொண்டாடி ஆண்டுதோறும் நினைவுபடுத்திக் கொள்வது வழக்கமானவைகளில் ஒன்றாகி விட்டது. பல மணி நேரம் இரவு பகலின்றி உழைப்பதற்கு இளைஞர்களை வேலைக்கு அமர்த்துகின்றனர். பொருளாதாரத் தேவையின் காரணமாக இளைஞர்கள் எதற்கும் சம்மதிக்கின்றார்கள். இரவுப் பணி என்பதன்றி பெண்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அதுவும் வீட்டிலிருந்து அழைத்துச் சென்று வீட்டில் கொண்டு வந்து விடுவதற்கு வாகன வசதி இருந்தால் அதிலும் சிரமம் இல்லை. திரைகடலோடியும் திரவியம் தேடியது போய் செல்வம் தேடுவதில் வசதிகள் வளர்ந்திருக்கிறது. ஆனால் உழைப்பாளிகள் உரிமை பறிபோய்விட்டன.

இதில் சில நிறுவனங்கள் அதிக ஊதியம் கொடுத்து அதிக நேரம் வேலை வாங்குகின்றன. அத்துடன் வாரக் கடைசியில் ஆண், பெண் பேதமின்றி மகிழ்ச்சியில் திளைத்து மகிழ்வதற்கும் வழிசெய்கின்றன. தன்னலம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு பொருளீட்டும் வாழ்வாக மாற்றப்பட்டு வருகிறது இன்றைய இளைஞர் வாழ்வு என்றால் இதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

ஆங்கிலம் படித்தால் உலகம் முழுவதும் வேலைக்குப் போகலாம் என்றது போய், தமிழ்நாட்டில் சம்பாதிப்பதற்கு நுனிநாக்கு ஆங்கிலம் தேவை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. தமிழகம் எங்கும் ஆங்கில வழிப்பள்ளிகள். போதாக் குறைக்கு மழைக் காளான்கள் போல் ஆங்கிலம் கற்றுத்தரும் பயிற்சிக் கூடங்கள். ஆங்கிலேயரின் ஆண்டது போய் இன்று ஆங்கிலம் புதியபுதிய வடிவங்களில் ஆளுகிறது தமிழர்களை.

அமெரிக்காவில் போய் அந்நியருக்கு உழைத்தவர்கள் இப்போது அடையாற்றிலேயே அந்நிய நிறுவனங்களுக்கு உழைக்கிறார்கள். இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்று மைக்ரோ சாப்டுவேர் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் சான்றளிக்கிறார் என்றால் பாருங்களேன்!

தமிழர்களின் நுனிநாக்கு ஆங்கிலம் சம்பாதிக்க உதவுகிறது என்பதில் நமக்கொன்றும் வயிற்றெச்சல் இல்லை. ஆனால் அதிவேகமாக வளர்ந்து வரும் இந்த கால்சென்டர், பி.பி.ஓ.க்களால் ஏற்படவிருக்கும் பக்க விளைவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

“மேலை நாட்டார் வேலை செய்ய முடியாமல், போய் அந்த வேலையை நாம் செய்து தருவதாகச் சொல்லுவதில் பொருள் இல்லை. காரணம், அவர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதில்லை. அத்துடன் அதற்கு அவர்கள் பெறும் ஊதியம் ஒப்பீட்டு அளவில் மிக அதிகம், இந்தியர்கள் 1000 ரூபாய்க்கு செய்யும் வேலையை வெள்ளையர்கள் 4000 ரூபாய்க்குத் தான் செய்வார்கள்.

சம்பாதிப்பது போக, மீதி நேரத்தை விளையாட்டு, கண்டுபிடிப்பு, பொழுதுபோக்குதல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்” என்கிறார் சமூக ஆர்வலர் அஸ்வின் குமார்.

பணத்தேவையை மட்டும் நிறைவு செய்ய வழி செய்யும் கால்சென்டர், பி.பி.ஓ.க்களை நம்பியிருக்கும் பல லட்சம் இந்திய இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே வளைகிறது.

கால்சென்டர்களில் வேலை செய்பவர்கள் 12 மணி நேரம் 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. அதனால் உடலும், மனமும் பலவீனப்படுகின்றன. பல மணி நேரம் கணினி முன் அமர்ந்து பணி செய்யும் இவர்களால் குறைந்தது 35 அகவைக்குமேல் தொடர்ந்து அந்த வேலையைச் செய்ய முடியாத நிலை ஏற்படும். ஓய்வின்றி வேலை செய்யும் இளைஞர்களின் எதிர்காலம் நடைப் பிணமாகப் போய்விடும்.

கால்சென்டர்களில் வேலை செய்பவர்கள் மனத்தளவில் பாதிக்கப்பட்டுத் தனிமையில் பேசும் பழக்கம் உடையவர்களாகவும் மாறிவரும் ஆபத்து உள்ளதாக உளவியல் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, இதில் வேலை செய்பவர்களுக்கு நேரக் கட்டுப்பாடு தேவையாகிறது.

இந்நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் இல் வாழ்க்கை பெரும்பாலும் சிக்கலுக்கு உரியதாகவே அமைந்து விடுகின்றது. தேவையற்ற சந்தேகங்கள், தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு இவர்களின் இல்வாழ்க்கை சிறப்பதில்லை. அத்துடன் வாழ்க்கை விவகாரத்திலோ அல்லது விவாகரத்திலோ முடிகின்றன.

இப்போது உள்ளதைக் காட்டிலும் மேலும் அதிக அளவில் முதியோர் இல்லங்கள் உருவாகும். அதிலும் 30 வயது, 35 வயதுக்காரர்களை அதிகம் இவ்வில்லங்களில் சேர்க்க வேண்டி வரும்.

கால்சென்டர்கள் சிலவற்றில் வாரத்தில் ஒருநாள் ஓய்வு தருவதாகச் சொல்லிக் கொண்டு இளைஞர்களை போதையில் மூழ்க வைக்கின்றனர். இவ்வாறான போக்குகள் நம் வருங்காலச் சமூகத்தைப் பாழாக்கும் என்பதில் அய்யமில்லை.

பெரும் செலவு செய்து தனியார் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று வெளியே வரும் இளைஞர்களுக்கு இவர்கள் தரும் ஊதியம் மிகக் குறைவே! என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இத்துடன் நம் இளைஞர்களை அதிர்ச்சி அடையச் செய்யும் செய்தியும் உள்ளது. இந்தியர் களைக் காட்டிலும் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்ய சீனர்களும், ஜப்பானியர்களும் தீவிர முயற்சியில் உள்ளனர் என்கிறது அந்தச் செய்தி. அப்படியானால் வரும் சில ஆண்டுகளில் கால் செண்டர்களின் கதி என்ன! நுனி நாக்கு ஆங்கிலத்தை நம்பியிருக்கும் இளைஞர்களின் நிலை என்னவாகும்? கைத்தொழில் எதையும் கற்காமல், தாய்மொழி மறந்து ஆங்கிலம் படித்தோர் கதியென்னவாகும்!

தாய்மொழியைப் புறக்கணித்து, பண்பாட்டைச் சிதைத்து, தன்னலம் வளர்த்து ஆடம்பரத்தை தேடும், இந்த பொருளில்லாரையும் பொருளாகச் செய்கிறது இவர்கள் தேடிய பொருள்!

வளர்ந்து வரும் இத்துறையில், பெருகி வரும் சிக்கல்களைத் தீர்க்க, நல்ல நோக்கத்துடன் அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

இந்நிறுவனங்கள் முறையாக நடக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, இடஒதுக்கீட்டு அடிப்படையில் வேலை கொடுத்துச் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். இல்லையென்றால், இந்த மண்ணும், நீரும், காற்றும், இங்கு விளைந்த உணவும், இந்தத் தேசத்தின் இளைஞர் சக்தியும் கொள்ளையடிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க அரசுகள் எதற்கு என்ற கேள்வி எழும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com