Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

இலவசத் திட்டங்கள் சரிதானா?: திட்டக் குழுத் துணைத் தலைவர் நாகநாதன்
நேர்காணல்: வசந்தகுமார்


இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச சமையல் எவாயு இணைப்பு எனத் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களுக்கான சமூகநலத் திட்டங்கள் இந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் சரிதானா...? இத்திட்டங்களுக்குத் தேவையான நிதி உள்ளதா? பொருளாதார சிறப்பு மண்டலங்களால் பாதிப்பு ஏற்படுமா? போன்ற வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கிறார் தமிழகத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் பேராசியர் நாகநாதன்.

தமிழ்நாட்டில் திட்டக்குழு என்பது எப்போது உருவாக்கப்பட்டது, அதன் பணிகள் என்ன?

இந்தியாவிலேயே திட்டக்குழு என்ற அமைப்பு முதன்முதலில் தமிழக முதல்வர் கலைஞரால் 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே ஒரு மாநில அளவிலான திட்டக்குழு, தொடர்ந்து இயங்குவதும் தமிழ்நாட்டில் மட்டும் தான். ஆனால் சென்ற ஆட்சியில், எல்லாத் துறைகளும் முடங்கிப் போன மாதிரி, இந்தத் திட்டக்குழுவும் முடங்கிப் போய் விட்டது. ஒரு குறிப்பு சொல்ல வேண்டுமென்றால், 10ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நகல் அறிக்கையைகூட அன்றைய முதலமைச்சர் கிட்டத்தட்ட 8 மாதங்கள் கிடப்பில் வைத்திருந்துதான் கையெழுத்திட்டார்.

திட்டம் என்பது தொடர்ந்து செயல்படக்கூடியது, திட்டக்குழு, மாநில அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் ஆலோசனை வழங்குகிற ஒரு குழுவாக இருக்க வேண்டும். குறிப்பாக ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றுகின்ற காலகட்டத்தில், மத்திய அரசிடமிருந்து வருகின்ற நிதி எவ்வளவு? என்னென்ன திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு கொடுக்கின்ற அந்தத் திட்ட நிதி உதவியை எவ்வாறு மாநில அரசு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதைத் திட்டமிடுவதிலும் திட்டக்குழுவிற்கு பெரும்பங்கு உள்ளது. ஆனால், கடந்த ஐந்தாண்டு காலமாக மாநில அரசுடைய நிர்வாகமே முடங்கிப்போன மாதிரி, திட்டக்குழுவும் முடங்கிப் போய் விட்டது. பெயருக்காகத் தான் திட்டக்குழுவினுடைய துணைத்தலைவர் இருந்தாரே ஒழிய அவர்கள் 10 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அறிக்கையைக்கூட வெளியிடவில்லை. இதனை ஒரு பெரிய சரிவாகவும் பின்னடைவாகவும் கருதுகிறேன்.

நீங்கள் பொறுப்பேற்றதும், தொடங்கி இருக்கின்ற பணிகள், சொன்ன ஆலோசனைகள்....

நான் பொருளாதாரப் பேராசியராக கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி இருக்கிறேன். குறிப்பாக, ஐந்தாண்டுத் திட்டங்களைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் என்னிடம் அளிக்கப்பட்டிருக்கின்றன. என்னுடைய ஆய்வு மாணவர்களுள் ஒருவரான தமிழ்க்கொடி ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினார். அதன் தலைப்பு ‘ஐந்தாண்டுத் திட்டங்களும் நேருவின் அணுகு முறையும்’ என்பதாகும். நேரு, ஐந்தாண்டுத் திட்டங்கள் இந்தியாவிற்கு ஏன் தேவை என்ற ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

இந்திய விவசாயிகளில், செத்த விவசாயிகள் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்று விட்டது பிரிட்டிஷ் அரசாங்கம் என்று சொல்லி, அந்த அளவிற்கு ஒரு சுரண்டல்முறைப் பொருளாதார அமைப்பு வெள்ளையர் ஆட்சியிலே இருந்தது. அதை மாற்ற வேண்டுமென்றால், பின் தங்கிய துறையாக இருக்கின்ற வேளாண்மைத் துறை, தொழில்துறை இவற்றை முன்னேற்றுவது தான் என்னுடைய முதல் விருப்பம் என்று சொன்னார். அதற்காக, பொதுத்துறை சார்ந்த ஒரு பொருளாதார அமைப்புதான் இந்தியாவிற்குச் சரியான அணுகு முறையாக இருக்க வேண்டுமென்றும் கருத்துத் தெரிவித்தார். அந்தப் பொதுத் துறையைச் சார்ந்துதான் தனியார் துறை இயங்க வேண்டும்.

ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அது தலைகீழாக, மாற்றப்பட்டு விட்டது. தனியார் துறையின் ஆதிக்கம் ஊக்குவிக்கப்பட்டது. அதனால், உலக அளவில் இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை வளர்ந்த நாடுகளிலும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. வளருகின்ற நாடுகளில்தான் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். அண்மையில் 2005இல் அமெரிக்க அறிஞர் ஒருவர், வருமான வரி செலுத்துகிறவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு ஆய்வினை நிகழ்த்தினார். ஏனென்றால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வரி வளையத்திற்குள் 95% மக்கள் உள்ளார்கள். நம்மூல் 3% கூட இல்லை. அதில் அதிகப்படியாக 10% வரி செலுத்துகின்றவர்களுக்கும், 40%க்கும் கீழ் குறைவாக வரி செலுத்துபவர்களுக்கும் இடையே 140% வேறுபாடு இருக்கின்றது என்ற பெரும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அங்கே பார்க்கும் போதுதான், இந்தப் பொருளாதாரக் கொள்கையை மாநில அரசு எவ்வாறு அணுக வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் மாநில அரசிற்கு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக போதிய நிதி வருவாய் இல்லை, போதிய அதிகாரப்பகிர்வு இல்லை, மேலும் மாநில அரசு சில நேரங்களில் கடனை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.

தமிழகத்தில் புதிதாக என்னென்ன திட்டங்களைக் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன?

11ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் அணுகுமுறை அறிக்கையை நாம் கொண்டு வந்தோம். வரும் ஐந்தாண்டுகளில் தமிழக அரசு எவ்வாறு முன்னேற்றத்தினைக் காண விரும்புகிறது எனச் சொல்ல வேண்டும். விவசாயம் சந்து வருகிறது. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், அகில இந்திய அளவிலும் விவசாயம் சரிந்து விட்டது. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திலும் விவசாயம் சரிந்து விட்டது. தமிழ்நாட்டில்கூட ஒரு காலத்தில், தஞ்சையை, ‘தென்னாட்டின் நெற்களஞ்சியம்' என்று சொன்னார்கள். அங்குகூட, முதல் முதலாக, கடந்த ஐந்தாண்டுகளில்தான், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுகின்ற அளவிற்குச் சென்று விட்டனர். விவசாயக்கூலிகள் இடம்பெயர்ந்தே சென்றுவிட்டனர். கலைஞர் அவர்கள், தன் ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டக் குழுவிற்கு முன்னுமை அளித்து வருகிறார். விவசாயத்துறை, வளர்ந்து வருகின்ற தொழில்துறை, வளர்ந்து வளர்கின்ற பணித்துறை, இந்த மூன்றையும் இணைத்து, இந்தத் துறைகளில் ஏற்படுகின்ற வளர்ச்சி, ஏழைகளின் வாழ்வில் முன்னேற்றத்தினைக் கொடுக்க வேண்டும் என்பதை இந்தத் திட்டத்தின் அணுகு முறையாக நாங்கள் முன்னிறுத்தி இருக்கின்றோம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இதுவோர் மக்கள் திட்டமாக வரவேண்டுமென்று, முதன் முதலாக மாநில திட்டக்குழு அணுகுமுறை அறிக்கையினைத் தமிழில் முன்வைத்தது. ஆங்கிலத்தை இரண்டாவது பக்கமாகத்தான் வைத்தோம். அதற்கு நல்ல ஆதரவு இருந்தது. இந்தியாவில் தேசிய மொழி இந்தி என்று சொல்லிவிட்டு, அவர்கள் எல்லா அறிக்கைகளையும் - மைய வங்கி அறிக்கையைக்கூட- இந்தியில்தான் தருகிறார்கள். அதனால், நாம் தமிழை செம்மொழி என்று அறிவித்தாயிற்று, ஏன் தமிழில் அணுகுமுறை அறிக்கையினை முதலில் வைத்துவிட்டு பிறகு ஆங்கிலத்தினை வைக்கக் கூடாது என்றுதான் அப்படிச் செய்தோம்.

இதனால் இந்த அறிக்கையினைச் சாதாரண பாமரர்கள்கூட படித்தனர். முதன்முதலாக ஆயிரம் மடல்கள் வந்திருக்கின்றன. அந்த ஆயிரம் மடல்களையும் படிப்பதற்கு ஒரு ஆய்வாளரை நியமித்து அவர்கள் அளித்த அறிக்கையினையும் இந்த 11ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதி அறிக்கையில், இணைக்க இருக்கின்றோம். அது மட்டுமல்லாமல் முதன்முதலாக, திட்டக் குழு உறுப்பினர்கள் எல்லோரும் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று, மாவட்டத்தில் என்னென்ன தேவைகள் இருக்கின்றன. தடைகள் இருக்கின்றன என்பதையும் நேரிடையாகக் கண்டறிந்தோம்.

அதற்காகத் தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி மற்றும் நகராட்சித் தலைவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தலித் சமூக பிரதிநிதிகள் போன்றோரை அழைத்துப் பேசினோம். மற்றும் கட்சி வேறுபாடின்றி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துள்ளோம். அறிக்கையினை தமிழ், ஆங்கிலத்தில் இணையத்தில் வெளியிட்டதால், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள்கூட அறிக்கையில் சிலவற்றை, இப்படிச் செய்யலாமே என ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்தப் பொருளாதார அறிக்கையில் மொழி தொடர்பாகவும் மொழி வளர்ச்சி தொடர்பாகவும், சில கருத்துகளை முன்வைக்க இருக்கிறோம்.

தமிழைச் சிறப்பாக உலகம் முழுவதும் ஒரே சீராகப் பயன்படுத்துவதற்கு உள்ள சிக்கல்களை நீக்குவதற்கு, தமிழக அரசு அனைத்துப் பல்கலைக்கழகத்திலும் மொழி ஆய்வாளர்களைக் கொண்ட ஒரு குழுவினை அமைத்திருக்கின்றது. தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி செயலர் மற்றும் தொழிற் நுட்ப அறிஞர்களை வைத்தும் இதை எப்படி விரைவுபடுத்த வேண்டுமென ஆலோசித்து வருகின்றோம்.

இன்றைக்கு ஏற்பட்டுள்ள தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்றவற்றால் உலக நாடுகள் பெரும்பாலும் மரபார்ந்த தன்மையை இழக்கும் நிலை ஏற்படுமென்றும், அதிலும் இந்தியா பன்முகத் தன்மையை இழக்கலாமென்றும் ஒரு கருத்து உள்ளது. இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் தமிழர்களின் அடையாளங்கள் மரபார்ந்த தன்மையை இது பாதிக்குமா? அப்படி இல்லையெனில் அதை பாதுகாப்பதற்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

இதில் இரண்டு கருத்துகள் உள்ளன. உலக மயமாதல் கொள்கையில் சில பின்னடைவுகளும் இருக்கின்றன. வளர்ந்த மாநிலங்களுக்கு சில நன்மைகளும் கிடைத்திருக்கின்றன. அதற்குக் காரணம் தமிழ்நாடு கல்வியில் முன்னிலையில் இருக்கின்றது. ஏழை மக்களுக்கான பல சுகாதாரத் திட்டங்கள், கருவுற்ற தாய் இறக்கும் விழுக்காடு, பெண்கள் கல்வி முன்னேற்றம், தலா வரி வருமானம் இது போன்றபல குறியீடுகளை அடிப்படையாக வைத்துத்தான், மனித வளர்ச்சி அறிக்கை தயார் செய்கிறார்கள். 2001இல்தான் முதன் முதலில் இந்திய அரசு அறிக்கை கொடுத்தது.

இந்த மனித வளர்ச்சி அறிக்கையினை நான் ஏற்கெனவே சொன்ன குறியீடுகளின் அடிப்படையில் பார்த்தால், 2001இலிருந்து இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. அதற்குக் காரணம், இங்கே பொறியியல் கல்லூரிகள் அதிகம் இருப்பதால் அம்மாணவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று வேலை வாய்ப்பினைப் பெறுகின்ற தன்மை ஏற்பட்டு இருக்கின்றது. இதையெல்லாம், உலகமயமாதல் கொள்கைக்காக நாம் செய்யவில்லை. தமிழ்நாட்டில் நீதிக்கட்சி காலத்தில் இருந்தே, கல்விக்கு இட ஒதுக்கீடு அளித்து, கல்வியறிவை எல்லாச் சமூகத்தினரும் பெறுகின்ற ஒரு நிலை ஏற்பட்டது. மத்திய அரசு கூட்டிய 11ஆம் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு நீதிக் கட்சி காலத்தில் இருந்தே, கல்விக்கு இட ஒதுக்கீடு அளித்து, கல்வியறிவை எல்லா சமூகத்தினரும் பெறுகின்ற ஒரு நிலை ஏற்பட்டது. நீதிக்கட்சி காலத்தில் தொடங்கிய கல்விப்புரட்சி, காமராஜர் காலத்தில் தொடர்ந்தது. அண்ணா, கலைஞர் காலத்தில் அது உறுதிப்படுத்தப்பட்டது.

இன்றைக்கு தமிழ் செம்மொழியாகிவிட்டது. தமிழில் ஊடகம் மிகவும் செல்வாக்கோடு இருக்கின்றது. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில், இந்திப்படம் அதிகம் ஓடியது. இன்றைக்கு இந்திப்படங்கள் ஓடவில்லை. இன்றைக்கு ஆங்கில மொழிப்படங்களைக் கூட தமிழில் மொழிபெயர்த்தால்தான் அரங்குகளில் ஓடும் நிலை ஏற்பட்டு உள்ளது. அண்மையில் வந்த புள்ளிவிவரப்படி அமெரிக்காவில் ஏடுகளைப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது. புகழ் பெற்ற ஏடுகளைக்கூட மூடுகின்ற நிலை ஏற்பட்டு விட்டதாக ஏடுகளில் படித்தேன். ஆனால் தமிழகத்தில் தமிழ்ப் பதிப்பகங்கள் நல்ல செல்வாக்கினைப் பெற்று உள்ளன. புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் தான் அதிகம் இடம் பெறுகின்றது. தமிழ் நூல்கள் தான் அதிகம் விற்கின்றன. இது ஒரு நல்ல அடையாளம் என்று நினைக்கின்றேன். இதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் வளர்ச்சி, தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சி, தமிழில் தொழில்நுட்பங்களைக் கொண்டு வருகின்ற முயற்சிகளை எல்லாம் நாங்கள் மேற்கொள்ளலாம் என்று நினைக்கின்றோம்.

அதனால்தான் தமிழக முதல்வர், தமிழ் வளர்ச்சித் துறை ஒன்றையே உருவாக்கி இருக்கின்றார். அவர் காலத்தில்தான், அத்துறை உருவாகி சென்ற ஆட்சிக் காலத்தில் தமிழ்க்குடிமகன் அமைச்சர் ஆனார். இன்றைக்கு முதல்வரே அந்தப் பொறுப்பினை வகிப்பதால், நிச்சயமாகத் தமிழ் வளர்ச்சியை மையப்படுத்தி, பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஓராண்டில், பல தமிழறிஞர்களின் குடும்பத்திற்கு நிதி உதவிகள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் பல தமிழ்ப் படைப்புகள் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் ஒரு நல்ல வளர்ச்சிப் பாதையில் செல்கின்ற, உறுதியான போக்கு எனக் கருதுகிறேன்.

ஆனால், தமிழ் சந்துவிடும் என்று பாரதி காலத்திலிருந்தே சொல்லி வருகிறார்கள். ஆனால் பல தளங்களில் விரிவடைந்திருக்கிறது. வெற்றி பெற்று வருகின்றது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஒரு தெளிவான வழிகாட்டுதல் இல்லாமலே, அமல் நடத்தப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், அரசின் சட்டங்கள் எதுவும் செல்லுபடி ஆகாது என்றும் ஒரு கருத்து இருக்கின்றது, இது எந்த அளவிற்கு உண்மை?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இதற்குச் சிறப்பு கவனம் அளிக்காமல், பல திட்டங்களில் இதுவும் ஒரு திட்டம் என்று ஏற்றுக் கொண்டால் ஒரு பாதிப்பும் வராது என்பது என் கருத்து. பொதுவுடைமைச் சீனாவில்கூட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றன. அதை ஒருங்கிணைப்பதிலும், ஒருமுகப்படுத்துவதிலும் அங்கேயும் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. கடற்கரையை ஒட்டிய நகரங்களில்தான் சீனாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைந்தன. இந்தியாவில்கூட, இயற்கையிலே துறைமுகங்கள் இருந்த நகரங்களில்தான் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் வெள்ளையர் ஆட்சிக் காலத்திலிருந்தே சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்கள் தெரிந்தோ தெரியாமலோ சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவே இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் கலைஞர் அதை, தென் மாவட்டங்களுக்கும் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றார். அதற்காக தமிழ்நாடு அரசு மிகவும் கவனமாக இருக்கின்றது. ஏனெனில், வேளாண்மையை முன்னிலைப்படுத்துவது, ஏற்கனவே வளர்த்தெடுத்த தொழில்களை ஒருங்கிணைப்பது, தொழிற்நுட்பப் புரட்சியால், கணினி இணைய தளத்தினுடைய பயன்பாட்டினையும் பெருக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பது.

இந்த மூன்று துறையிலும் ஒரு சமமானப் போக்கினை கவனத்தில் கொள்கிறது. திட்டக்குழுவே மாவட்டங்களுக்கு இடையே உள்ள வேறு பாட்டினைக் கண்டறிந்திருக்கிறது. அதாவது கல்வி வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், தலாவாரி வருமானத்தில் உள்ள வேறுபாடுகள் போன்றவற்றை அறிமுக அறிக்கையிலேயே நாங்கள் முன்னெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த அடிப்படையில்தான் கலைஞர் அவர்களும் கடந்த ஓராண்டாகக் கவனம் செலுத்தினார்கள். எனவேதான் மாவட்டங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டினை அகற்ற தென் மாவட்டங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலம் வருவது எந்த விதத்திலும் மற்றத் தொழில்களைப் பாதிக்காது. ஏனெனில், தென் மாவட்டங்களில் பெரிய வளர்ச்சியே இல்லை.

அதனால்தான் நாங்குனேரியில் தொழில்நுட்பப் பூங்காவினையும், மாவட்ட அளவில் தொழில்நுட்பப் பூங்காக்களையும் ஆயத்த ஆடைகளுக்காக நெசவுப் பூங்காக்களையும் கொண்டு வர உள்ளோம்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், அரசின் சட்டங்கள் எதுவும் செல்லுபடி ஆகாது என்றும் ஒரு கருத்து இருக்கின்றது, இது எந்த அளவிற்கு உண்மை?

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில், வரி விலக்கும் வரிச் சலுகையும் உண்டு. ஆனால் சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான். சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற கருத்து வருவதற்கு முன்பே, ஓசூர் போன்ற வளர்ச்சி இல்லாத பகுதிகளை மேம்படுத்தும் பணியினை அரசு மேற்கொண்டது. அதனால்தான் தமிழகத்தில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் குறித்து எந்தப் பயமுறுத்தலும் வரவில்லை. இந்தப் பகுதிகளில் தொழிலாளர்கள் மேல் எந்தச் சுரண்டலும் இல்லை. பிற மாநிலங்களில் சம வளர்ச்சி இல்லாததால்தான் சிக்கல்கள் வருகின்றன. ஆனால் தமிழகம் அப்படி இல்லை.

பெருமுதலாளிகள் ரிலையன்ஸ், வால்மார்ட் போன்றோரும் வெளிநாட்டினரும் முதலீடு செய்வதனால், சில்லரை வணிகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகாதா?

தமிழ்நாட்டில் உழவர் சந்தைகள் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளன. வேளாண்மையில் இடைத் தரகர்களின் ஆதிக்கத்தினைக் குறைக்க வேண்டும். சிறு வணிகர்களும் மக்களும் விழிப்படைந்தாலே இந்தப் பெருவணிகங்கள் எடுபடாது. இங்குள்ள வணிகத்தளம் அவர்களுக்குச் சரிப்பட்டு வராது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் குறித்து எல்லாமே வெளிப்படையாகத்தான் நடைபெறுகின்றன. எனவே வெள்ளை அறிக்கை தேவையில்லை. ஒரு பெரிய பாதிப்பு வந்தால் வெள்ளை அறிக்கை கேட்கலாம். ஒரு பொருளாதார வளர்ச்சியில் முழுமையான வளர்ச்சியினை எந்த நாட்டிலும் பெற முடியாது. தமிழகத்தில் ஒரு நல்ல அரசு செயல்படுகின்றது.

இலவசத் திட்டங்கள் சரியா?

மக்களின் சமூகநலத் திட்டங்களை இலவசம் என்று சொல்ல முடியாது. ஒரு நல்ல அரசு மக்களின் கல்வி, சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இதைத் தமிழகம் முழு மூச்சில் நிறைவேற்றி வருகிறது. இலவசம் என்ற ஒன்றே கிடையாது. ஊடகங்கள் மூலமாக அப்படிச் சித்தரிக்கப்பட்டு விட்டது. வரலாற்று - சமூகத் தளத்தில் தொடர்ச்சியானதொரு சீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நீதிக் கட்சி காலத்திலிருந்தே தொடர்ச்சியான சமச்சீரான வளர்ச்சி காணப்படுகிறது. கருவுற்ற தாய்மார்களின் நலனுக்காக ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது.

இதனால் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது. அதேபோல் எரிவாயு அடுப்பு வழங்கப்படுவதால் நுரையீரல் நோய் பாதிப்புக்குள்ளாகாமல் தாய்மார்கள் பாதுகாக்கப் படுகிறார்கள். இதனால் வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. விலைவாசி உயர்வு என்பது தமிழகத்தில் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. விவசாயக் கூலிகள் மத்தியில் பண வீக்கம் என்பது அகில இந்திய அளவில் 8 விழுக்காடு உள்ளது. தமிழகத்தில் அது 4 விழுக்காடாக இருக்கிறது. இரண்டு ரூபாய் அரிசி குறைந்த விலையில் பருப்பு போன்றவை வழங்கப்படுவதால் பண வீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் வண்ணத் தொலைக் காட்சிகள் என்பது மக்களுக்குத் தகவல் பெறும் உரிமையை நிலைநாட்டும் முயற்சியாகும். நகர்ப்புறத்தில் 33 விழுக்காட்டு மக்களும் கிராமப் புறங்களில் 67 விழுக்காட்டு மக்களும் தொலைக்காட்சி இல்லாமல் இருக்கின்றனர். எனவே சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை பாமர மக்கள் தெரிந்து கொள்ளும், அறிந்து கொள்ளும் உரிமையை மறுக்கக் கூடாது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com