Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

அரங்கேறும் அசல் நடிப்பு
மணிமுகிலன்


கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமையுண்டு. அதற்கு விஜயகாந்தும் சரத்குமாரும் மட்டும் விதிவிலக்கா என்ன?

அறிந்தும் அறியாமலும் அரசியல் களம் கண்டு விட்ட இந்த ‘இருவரின்’ கணக்குகளும் கனவுகளும் மெய்யாகுமா? இல்லை ஆசையும் பேராசையும் பொய்யாகுமா? என்பதற்கான தெளிவான விடை வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தெரிந்து விடும். ஆனால், அதற்கு முன் இவர்களின் இப்போதைய அரசியல் எத்தனை தன்னலமிக்கதென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சற்றேறத்தாழ இரண்டாண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த், ஒரு நாள், ஒரு பொழுதில் சோதிடம் பார்த்து, நாள் குறித்து, நட்சத்திரம் கணித்து தன்னுடைய தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். நெற்றியில் பட்டையும், மேடையில் தந்தை பெரியாரின் படமுமென தனது முரண்பட்ட முற்போக்குக் கழகத்தை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். ரசிகர்கள் தொண்டர்களானார்கள். மிகக் கவனமாகத் தனது புது கால்சீட்டின் கணக்கு வழக்குகளை மனைவியிடமும், மைத்துனனிடமும் ஒப்படைத்தார்.

கதராடை அணிந்ததால் காந்தி சாயல் தெரிவதாகவும், கண்ணாடி அணிந்ததால் கருப்பு எம்.ஜி.ஆராகத் தெரிவதாகவும், மங்கலாய் காமராஜர் கண்ணுக்குத் தெரிவதாகவும்... விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்திற்குப் பொழிப்புரைகள் தரப்பட்டன. அவரும் அசரவில்லை. இந்தியை எதிர்த்ததாகவும், வீட்டில் தெலுங்கில் பேசிக்கொண்டே, தமிழை உயிர் போல் நேசிப்பதாகவும், கோடிக் கணக்கில் கருப்புப் பணம் வைத்துக்கொண்டே, ஊழலை ஒழிக்கப் புறப்பட்டு விட்டதாகவும்... இன்னும் இன்னும் என்னவெல்லாமோ சொன்னார். ரட்சிக்கப்பட்டவர்களின் ஆபத்பாந்தவனாக அவதரித்திருப்பதாக அடித்துச் சொன்னார்.

இப்படியான, விஜயகாந்தின் இரண்டாண்டு கால அரசியல் தன்னலமற்றதாக, போரட்டம் நிறைந்ததாக, மக்கள் நலன் சார்ந்ததாக இருந்ததா என்றால் இல்லை என்கிற பதிலே மிஞ்சுகிறது.

அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க படப்பிடிப்பிலிருந்து ஒப்பனை கலையாமல் சட்டப் பேரவை வளாகம் வந்தார் விஜயகாந்த். அவர் அங்கு வந்தபோது சுமார் நாற்பது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய வரிசையில் காத்திருந்தனர். ஆனால் விஜயகாந்திற்குக் காத்திருக்க நேரமில்லை. மீண்டும் படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டார். வரிசையில் காத்திருந்து வாக்குப் பதிவு செய்த ‘வேலை ஏதுமற்ற’ சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குப் பதிவு செய்து முடித்த பின்னர், மீண்டும் வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நொடிப் பொழுதும் வீணாகாமல் உழைக்கிறார்? நாட்டின் முதல் குடிமகனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் கூட அரை மணி நேரம் காத்திருக்க முடியவில்லை. ஆனால் ஏதுமற்ற பாமர மக்கள் மட்டும் இவர் அரசியலில் அடியெடுத்து வைத்தவுடனேயே மணிக்கணக்கில் காத்திருந்து வாக்களித்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்திவிட வேண்டுமென நினைக்கிறார். இது ஆசையா? பேராசையா?

சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க நெடுஞ்சாலைத் துறை சாலைகளை அகலப்படுத்தவும், மேம்பாலங்கள் கட்டவும் முடிவு செய்தது. சாலையை ஒட்டியுள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்த முடிவெடுத்த நெடுஞ்சாலைத் துறை சந்தை மதிப்பிற்கேற்ப சொத்து மதிப்பீடு செய்து விலை நிர்ணயம் செய்தது. நாட்டு நலன் கருதி நடுத்தரக் குடும்பத்தினர் கூட நிலத்தை அரசிடம் ஒப்படைத்தனர். ஆனால் இந்த ‘ஏழை ஜாதி’ விஜயகாந்தோ வானத்திற்கும் பூமிக்குமாகக் குதித்தார்.

பலர் குடியிருப்பை இழந்த போதும் மௌனமாகவே இருந்தனர். ஆனால் இவரோ கல்யாண மண்டபம் போய்விடக் கூடாதென வழக்குக்கு மேல் வழக்காக போட்டுக் கொண்டேயிருந்தார். அது மட்டுமல்லாமல் தன் கல்யாண மண்டபத்தைப் பாதுகாக்க மாற்றுத் திட்டமொன்றையும் தயாரித்தார். அதன்படி நெடுஞ்சாலைத் துறையின் திட்ட வரைபடத்தில் இல்லாத 127 குடியிருப்புகளை இடித்துத் தள்ளிவிட வலியுறுத்தினார். தி.மு.க.வின் எதிரணி எனக் கூறிக் கொண்டிருந்தவர் கலைஞரிடம் போய் மண்டியிட்டார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அறிக்கை விட்டார். நீதிமன்றம் குட்டு வைத்து, ‘கல்யாண மண்டபத்தை ஒப்படை’ என ஆணையிட்ட பின்பும் மணமக்களின் பெற்றோரை விட்டு மனு போட்டுப் பார்த்தார். இவர் கவலை மறந்து கதாநாயகிகளோடு டூயட் பாடிக் கொண்டிருந்த 2000ஆம் ஆண்டிலேயே இதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டு விட்டன. இப்படி பொதுவாழ்வில் தனது சொத்தைக் காப்பாற்றிக் கொள்ள அடுத்தடுத்து அடித்த அந்தர்பல்டிகளுக்குப் பெயர் தன்னலமா? பொது நலமா?

விஜயகாந்த் பேசும் இன்னொரு வசனம் ஊழல் ஒழிப்பு. தான் நடிக்கும் அல்லது தயாரிக்கும் படங்களின் கணக்கு வழக்குகளையெல்லாம் பெரும்பாலும் கறுப்பிலேயே நிகழ்த்தி விட்டு ஊழலை ஒழிப்பதாகக் கூறுவது எத்தனை பெரிய முரண்பாடு. ஆட்சி, அதிகாரம் எதுவுமே கையில் வராத வேளையிலேயே மனைவியையும், மைத்துனரையும் வைத்து வாரிசு அரசியல் நடத்திக் கொண்டு மேடைகளில் வசனம் பேசிக் கொண்டிருப்பது விஜயகாந்தின் மெருகேறிய அசல் நடிப்பின் இன்னொரு பரிணாமம் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படி வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் எவ்வளவு பெரிய வேறுபாடுகள்! சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்து நின்று கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பதால் விஜயகாந்த்தான் கழகங்களுக்கு மாற்றான அரசியல் சக்தி என்றொரு ஆரூடம் கூறப்படுகிறது. மக்கள் நாயக அமைப்பு முறையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறினாலோ அல்லது தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டாலோ நடுநிலையான வாக்காளர்கள் அவ்வப்போது தலைதூக்கும் உதிரிக் கட்சிகளுக்கு வாக்களிப்பதுண்டு. அப்படித்தான் விஜயகாந்தின் கட்சியும் கடந்த தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. இது ஆளும் அல்லது எதிர்க் கட்சிகளுக்கு வாக்காளர்கள் விடுக்கும் அதிர்ச்சிச் செய்தி அவ்வளவுதான். இதனை விஜயகாந்தின் தலைமைக்கும் பேசும் கொள்கைக்கும் கிடைத்த வெற்றி அல்லது செல்வாக்கு என எடுத்துக் கொள்ள முடியாது.

விஜயகாந்த் தனியொரு மனிதராக கணிசமான சதவிகித வாக்குகளை கையில் வைத்திருப்பதால் அடுத்த கூட்டணியின் வெற்றியை அவர்தான் தீர்மானிப்பார் என்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இதுவும் அவரைச் சுற்றி உலாவரும் மாயைகளில் ஒன்றுதான். கடந்த சில தேர்தல்களில் வாக்குப் பதிவென்பது அதிகபட்சமாக 75 விழுக்காடாகவே இருந்து வருகிறது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பின்னர் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் இந்த விழுக்காடு உயரவில்லை. அப்படியானால் இருக்கின்ற வாக்குகளில்தான் கூட்டல் கழித்தல் நடைபெற்றுள்ளதே தவிர, இவர் புதிதாக, தனியானதொரு வாக்கு வங்கியை ஏற்படுத்திவிடவில்லை.

இந்தக் கூட்டல் கழித்தல் அவ்வப்போது மாறுபடலாம், வேறுபடலாம். இந்த வாக்குகள்கூட தனித்து நிற்பதற்காகவே விழுபவைதான். கூட்டணி என்றால் அவை சிதறு தேங்காய் போலாகிவிடும். எனவே விஜயகாந்த் கூட்டணி சேரும் அணியே வெற்றி பெறும் என்பதெல்லாம் வெற்று வசனங்கள்தான்.

விஜயகாந்தை மையப்படுத்திக் கட்டப்படும் கனவுக் கோட்டைகளும், அலங்காரப் பொய்களும், கற்பிக்கப்படும் கணக்குகளும், சொல்லப்படும் கூட்டல் கழித்தல்களிலும் ‘சாணக்கியத்தனம்’ வேண்டுமானால் வெளிப்படலாம். அதில் உண்மை ஓரளவுக்குக்கூட ஒளிந்திருக்கவில்லை என்பதனை வருங்காலம் உணர்த்தத்தான் போகிறது.

இனி, இருவரில் இன்னொருவரான சரத்குமாரின் அரசியலைப் பார்க்கலாம். சரத்குமாரின் அரசியல் பிரவேசமே அதிரடியாய்த் தான் தொடங்கியது. தான் நடித்த நாட்டாமை படத்தின் பிரதி ஒன்றை மிக முக்கிய தலைவரொருவருக்குப் பார்க்கக் கொடுத்திருந்தார். படத்தைப் பார்த்த அந்தத் தலைவர் பின்னர் அப்படத்தைத் தன்னுடைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிட்டார். வெகுண்டெழுந்து விட்டார் ஊருக்கே தீர்ப்பளித்த நாட்டாமை. அந்தத் தலைவரிடம் நீதி கிடைக்கவில்லை என்பதால் ஓடோடிப் போய் தி.மு.கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

குறுகிய காலத்திலேயே நாடாளுமன்றஉறுப்பினரானார். ஆனால் அதோடு ஆசை விடவில்லை. அதையும் தாண்டி எதையோ எதிர்பார்த்தார். அது கிடைக்கவில்லை. அதனால் அ.தி.மு.க.வுக்குத் தாவினார். அங்கும் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே தற்போது தனிக் கட்சியே கடைசி வாய்ப்பென முடிவெடுத்து அதை நோக்கிக் காய்களை நகர்த்திக் கொண்டுள்ளார்.

விரைவில் தனிக்கட்சிக்கான அறிவிப்பை வெளியிடவுள்ள சரத்குமார், தற்போது காமராசர் மணிமண்டபம், நாடார் சமூக முன்னேற்றம் குறித்தெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபொழுது இது குறித்தெல்லாம் அவர் பேசியதுண்டா? தனது உறுப்பினர் நிதியிலிருந்து எத்தனை இலட்சம் அம்மக்களின் முன்னேற்றத்திற்காகச் செலவு செய்துள்ளார்? அவர்களின் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியிலும் இப்படிப் பேசி இருக்கிறாரா? என்ற பல கேள்விகளுக்கு முதலில் அவர் விடையளிக்க வேண்டி இருக்கிறது.

நாடார் சமூக மக்கள் எந்தத் தலைவரையும் நம்பி இல்லை. அவர்கள் தலைமைப் பஞ்சத்திலும் இல்லை என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் காமராசரின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர் சண்முகராஜேஸ்வர சேதுபதி கூறியதை இங்கு நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். ‘‘காமராசரால்தான் நாடார்கள் முன்னேறினார்கள் என்று பலர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இது உண்மை இல்லை. அவர்கள் தங்கள் உழைப்பால் முன்னேறியிருக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமை கொள்கிறார்கள். நாம் அவர்களிடமிருந்து படிக்க வேண்டும். நாடார்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.’’

ஒரு மாபெரும் மக்கள் தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்தபோதே தனது ஒற்றுமையால் உழைப்பால் உயர்ந்த மக்கள், தற்போது தலைமைப் பஞ்சத்தால் தவிப்பது போன்றதொரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார் சரத்குமார். சரத்குமாருக்குப் பதவி ஆசையோ, முதலமைச்சர் கனவோ இருக்குமானால், அதற்கு கொள்கைகளை முன்வைத்து மக்களிடம் போக வேண்டும், அவர்களுக்காகப் போராட வேண்டும், வாதாட வேண்டும். அதற்காகச் சமூக மக்களையும், மக்கள் தலைவரையும் முகமூடியாகப் பயன்படுத்தக் கூடாது.

முதலமைச்சர் நாற்காலி காமராசரைத் தேடிவந்த போது, ‘ஏழைகளின் துயரம் நீங்கவே நான் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளேன். இல்லையென்றால் எனக்கு இந்தப் பதவி தேவையில்லை’ என்றார். பெற்றோர் ‘காமாட்சி’ என குலதெய்வத்தின் பெயரை காமராசருக்குச் சூட்டியிருந்தபோதும், சாதி மதமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டே அவர் வாழ்ந்துவந்தார். எனவே அப்படிப்பட்ட தலைவரை மீண்டும் கண்ணாடிக் குடுவைக்குள் அடைக்க முயலும் சரத்குமாரின் முயற்சியை அம்மக்கள் நிச்சயம் நிராகரிக்கவே செய்வார்கள்.

விஜயகாந்தும், சரத்குமாரும் அரசியல் கட்சி நடத்துவதிலோ, அவர்கள் ஆட்சியைப் பிடிக்க சூளுரை மேற்கொள்வதிலோ நமக்கு எவ்வித மறுப்புமில்லை. அதற்கு முன்னர், தன்னலம், பொதுநலம், அர்ப்பணிப்பு, தியாகம் போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்பதனையாவது கொஞ்சமாய்த் தெரிந்து கொள்வது நல்லது.

தமிழகத்தில் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது நடைபெற்ற வரலாற்று நிகழ்வு ஒன்றைச் சில வினாடிகளாவது இருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காக மகாத்மா காந்தி மதுரைப் பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். காரைக்குடியில் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு திருப்பத்தூர் வழியாக மதுரை திரும்பிக் கொண்டிருந்த காந்தி வழியில் அழுக்கு வேட்டியுடன், தூசும் தும்புமாக கல்லுடைத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களைப் பார்த்தார். இப்படி அழுக்குப் படிந்து பழுப்பேறியிருக்கும் வேட்டியைக் கட்டிக் கொண்டிருக்கிறீர்களே, தினமும் வேட்டியைத் துவைத்துக் கட்டி, குளிக்கிற பழக்கம் கிடையாதா? எனக் கேட்டார்.

இருக்கிறதே ஒரு வேட்டி. இதனை எப்படித் துவைப்பது? குளித்து விட்டு மாற்றிக் கட்ட வேறொரு வேட்டி ஏது? என அந்தத் தொழிலாளர்கள் பதிலளித்தனர். இதைக் கேட்ட காந்தி பதறிப்போனார். மாற்றிக் கட்ட வேட்டி இல்லாத ஏழைகளின் தேசத்தில் பகட்டாக உடை அணிவது ஏழை எளியவர்களுக்குச் செய்யும் துரோகமென எண்ணினார். மறுநாள் காலையில் தனது எட்டு முழ வேட்டியை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை இடுப்பிலும், அதன் மறுபாதியைத் தோளிலும் போட்டுக் கொண்டார். ‘குறைந்தபட்சம் சட்டையாவது போட்டுக் கொள்ளுங்கள்’ என அவரின் நண்பர்கள் வற்புறுத்தியபோது, ‘‘நான் சட்டை போட வேண்டுமானால் நாற்பது கோடி சட்டைகள் தேவை’’ என்றார்.

வெள்ளித்திரையில் நடிப்பை மக்கள் ரசிப்பதென்பது பொழுதுபோக்கு. அது மக்களின் கலை, இலக்கிய ரசனை சார்ந்தது. ஆனால் அரசியல் பொழுதுபோக்கல்ல. அது ஆயிரமாயிரம் கோடி மக்களின் அடிப்படை வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஆணிவேர். அங்கு பொழுதுபோக்குக்கு இடமில்லை. தற்போது மக்கள் மன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த இருவரின் அசல் நடிப்பை மக்கள் ரசிக்கவுமில்லை, சகித்துக் கொண்டிருக்கப் போவதுமில்லை என்பதை வரும் தேர்தல்கள் உணர்த்திவிடும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com