Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

நிமிட்ஸ் - மீண்டும் வருகிறது கொலைகாரக் கப்பல்
இரா. ஜவஹர்


பாரடா உனது மானிடப் பரப்பைப்
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்
என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்!
அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேதமில்லை!
உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!

என்று அறைகூவல் விடுத்தார் பாரதிதாசன்.

அமெரிக்கப் போர்க் கப்பல் அண்மையில் சென்னைக்கு வந்தபோது, அதை எதிர்த்து நடந்த ஆவேச ஆர்ப்பாட்டங்களுக்கு, இத்தகைய மனித நேயமே காரணம். இது வெறுமனே ஒரு கப்பலின் வருகைக்கான எதிர்ப்பு அல்ல. ஈராக் நாட்டில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது இந்தக் கொலைகாரக் கப்பல். அதற்கான எதிர்ப்புதான் இது.

கொலைகார அமெரிக்காவுடன் இந்தியாவின் ராணுவ ஒத்துழைப்பு நாளுக்கு நாள் அபாயகரமாக அதிகரித்து வருகிறது. அதற்கான எதிர்ப்புதான் இது.

ஆசியக் கண்டத்தில் மோதல்களை உருவாக்கித் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வெறித்தனமாகச் செயல்பட்டு வருகிறது அமெரிக்கா. இதில் அமெரிக்காவின் இளைய பங்காளியாய் இந்தியாவை மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதற்கான எதிர்ப்புதான் இது.

உலகம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர எந்தப் பாதகத்தையும் செய்யத் துணிந்து செயல்பட்டு வருகிறது அமெரிக்கா. அதற்கான எதிர்ப்புதான் இது.

இவற்றின் விவரம் என்ன?

சூலை முதல் வாரத்தில் சென்னைக்கு வந்து சென்ற அமெரிக்கப் போர்க் கப்பலின் பெயர் நிமிட்ஸ். உலகின் மிகப்பெரிய போர்க் கப்பல். ஐந்தரை ஏக்கர் பரப்பளவு உள்ளது. 60 போர் விமானங்களையும், அவை ஓடிப் பறப்பதற்கான நீண்ட ஓடு தளத்தையும் கொண்ட பிரம்மாண்டமான கப்பல். இது அணு உலைகளைக் கொண்டு அணுசக்தியால் இயங்குகிறது என்பது கூடுதல் அபாயம்.

உலகின் பல பகுதிகளுக்கும் சென்று ரவுடித்தனம் செய்வது இதன் வாடிக்கை. ஈராக் நாட்டின் மீது அமெரிக்கா இரண்டு முறை போர் தொடுத்துப் பேரழிவை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தது இந்த ரவுடிக் கப்பல்.

முதலில் 1991ஆம் ஆண்டில் நடந்த போலும், அதையடுத்து ஏற்பட்ட சீர்குலைவினாலும் ஆறு ஆண்டுகளில் 5 லட்சம் குழந்தைகள் உள்ளிட்ட 20 லட்சம் மக்கள் செத்துப் போனார்கள்.

அடுத்து 2003ஆம் ஆண்டில் நடந்த போலும், அடுத்த நான்கு ஆண்டு கால ஆக்கிரமிப்பிலும் 6 லட்சத்து 50 ஆயிரம் ஈராக்கியர்கள் இறந்தார்கள். 20 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளானார்கள். மேலும் 20 லட்சம் பேர் உள் நாட்டிலேயே அகதிகளாக இடம் பெயர்ந்தார்கள். ஈராக்கில் மொத்தம் உள்ள 45 லட்சம் குழந்தைகளில் பாதிப் பேர் வறுமையின் காரணமாக, சத்துக் குறைவு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். வேலை செய்யும் தகுதி கொண்ட மக்களில் நூற்றுக்கு 70 பேர் என்ற அளவில் வேலையின்மையால் வாடி வருகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், ஈராக்கின் மொத்த மக்கள் தொகையாக இருந்த இரண்டரைக் கோடிப் பேரில், பாதிப் பேர், அதாவது ஒன்றேகால் கோடிப் பேர் மரணம், ஊனம், படுகாயம், அகதி நிலை, பட்டினி, கொள்ளை நோய்கள், மருத்துவ வசதியின்மை, பதற்றம், மனநோய் போன்றவற்றால் வாடி வதங்கி வருகிறார்கள்.

இதுதான் அமெரிக்காவின் சாதனை!

இந்தச் சாதனையில் பங்கேற்றது நிமிட்ஸ் போர்க் கப்பல். இந்தக் கப்பல் ஏதோ சென்னைக்கு வந்தது, சென்றது, முடிந்தது என்று நினைத்து விடாதீர்கள். இன்னும் இரண்டு மாதங்களில் மிகப் பெரிய விபரீதம் ஒன்று நடக்க உள்ளது.

இந்த நிமிட்ஸ் கப்பலுடன் ஏராளமான போர்க் கப்பல்களும், போர் விமானங்களும் பங்கேற்கும் கடற்படைப் போர்ப் பயிற்சி, வருகிற செப்டம்பர் மாதத்தில் வங்கக் கடலில் நடக்க உள்ளது.

வரலாறு காணாத அளவில் மிகப் பிரம்மாண்டமானதாக இது அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் பங்கேற்கிறது. இதற்கு வகை செய்யும் ராணுவ ஒப்பந்தங்களை அமெரிக்காவும் இந்தியாவும் அடுத்தடுத்துச் செய்து வருகின்றன.

இது தொடர்பான ஓர் ஒப்பந்தம் 1995ஆம் ஆண்டில் ஏற்பட்டது. கூட்டுப் பயிற்சிகள் செய்யப்படும், ராணுவத் தொழில்நுட்பங்கள் பரிமாறிக் கொள்ளப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

ஆனால் அமெரிக்க - இந்தியக் கூட்டுப் பயிற்சிகள் மட்டுமே நடந்து வருகின்றன. எந்தத் தொழில் நுட்பத்தையும் இந்தியாவுக்கு அமெரிக்கா அளிக்கவில்லை!

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர் நடத்திய போது, இதற்கு வசதியாக இந்தியத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதாக இந்தியா தெரிவித்தது. அமெரிக்கா மகிழ்ந்தது.

எனவே இந்தியாவுக்கு நவீன ஆயுதங்களை அளிக்கலாம். அணுசக்தி உதவி கூடச் செய்யலாம். இதன் மூலம் இந்திய - அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கலாம். இந்தியாவின் வெளி உறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கு ஆதரவாக மாற்றலாம் என்ற யோசனையை 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்க அரசுக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெவித்தார்கள்.

இதையடுத்து 2005ஆம் ஆண்டு சூலை முதல் வாரத்தில் ராணுவ உறவுக்கான புதிய திட்டம் என்ற ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் கையெழுத்திட்டன. இதன்படி -

கூட்டு ராணுவப் பயிற்சிகள் - பன்னாட்டு ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்பு - மற்ற நாடுகளுடன் கலந்து செயல்படுவது விரிவாக்கம் (அதாவது அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளிகளான ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளுடன் கலந்து, கூட்டுச் செயல்பாடு!) - பேரழிவு ஆயுதப் பெருக்கத்தை எதிர்ப்பதற்கான திறனை அதிகரிப்பது.

ஏவுகணைத் தாக்குதலில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

(மேலே சொன்ன ஒவ்வொரு விஷயமும் எவ்வளவு பயங்கரமானது என்பதை விளக்கத் தனித் தனிப் புத்தகமே எழுதலாம்.)

இதோடு நிற்கவில்லை இந்தியா. அணி சேரா நாடுகளின் இயக்கத் தலைவராகக் கருதப்படும் இந்தியா, இந்த இயக்கத்தில் உள்ள சக நாடான ஈரானுக்குத் துரோகம் செய்து அமெரிக்காவை ஆதரித்த கொடுமையும் நடந்தது.

அதாவது -

ஈரான் நாடு அணு மின்சாரம் தயாரிப்பது என்ற போர்வையில் ரகசியமாக அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளது. எனவே ஈரான் மீது ஐ.நா. சபையின் பாதுகாப்புக் குழு (செக்யூட்டி கவுன்சில்) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியது. குற்றச்சாட்டை ஈரான் ஆதாரபூர்வமாக மறுத்தது.

எனினும், நடவடிக்கை கோரும் தீர்மானத்தை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி என்ற அமைப்பில் அமெரிக்கா கொண்டு வந்தது.

இதை எதிர்த்து கியூபா, வெனிசுலா, சிரியா ஆகிய மூன்று நாடுகள் வாக்களித்தன. இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. சில நாடுகள் நடுநிலை வகித்தன. தீர்மானம் நிறைவேறியது. இது நடந்தது 2006 பிப்ரவயில்.

அன்று முதல் இன்று வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்கா மிரட்டி வருகிறது. ஆத்திர மூட்டும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

மறுபுறம் இந்தியா எங்களது இயற்கையான கூட்டாளி என்று கூறி பாராட்டுத் தெரிவித்து வருகிறார் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் புஷ்!

இவ்வாறு ராணுவத் துறையில் மட்டும் அல்ல, உள்நாட்டு, வெளிநாட்டு பொருளாதாரத் துறையிலும்கூட அமெரிக்காவை இந்தியா ஆதரிப்பது என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்குக் கைம்மாறாக, இந்தியாவில் அணு மின்சாரம் தயாரிப்பதில் அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்று இந்தியா கேட்டது. அமெரிக்கா ஒப்புக் கொண்டது. ஆனால் ஏற்க முடியாத பல்வேறு நிபந்தனைகளை விதித்து இந்தியாவை நிர்ப்பந்தித்து வருகிறது. இறுதிக்கட்டப் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

இதில் ஒரு வேடிக்கை பாருங்கள்!

ஈரான் ரகசியமாக அணுகுண்டு தயாக்ரிகிறது என்று குற்றம் சாட்டி, அதன் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமாம்!

உலகம் அறிய வெளிப்படையாக அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ள இந்தியாவுக்கு நவீன அணு சக்தித் தொழில் நுட்பத்தையும், அதற்கான எரிபொருளையும் (பதப்படுத்திய யுரேனியம்) அமெரிக்கா கொடுக்குமாம்! சரி, யார் எக்கேடு கெட்டால் என்ன? இந்தியாவுக்கு நல்லதுதானே? என்று சிலர் நினைக்கக் கூடும்.

இல்லை. இது இந்தியாவுக்கும் நல்லது இல்லை. இது வெறும் சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் சூழ்ச்சிதான்!

அணுசக்தித் தொழில் நுட்பத்துக்காக விதிக்கப்படும் ஏற்க இயலாத கடும் நிபந்தனைகள் முதல், இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அமெக்காவின் வால்மார்ட் நிறுவனத்துக்குக் கதவு திறந்து விடுவது வரை விரித்தால் பெருகும்.

எனினும் அமெரிக்கா தனது உடனடி எதிரிகள் என்று கருதும் சில நாடுகளைத் தாக்குவதற்கு இந்தியாவின் நேரடியான அல்லது மறைமுகமான உதவி இப்போதைக்குத் தேவை என்று கணித்துள்ளதால் சில சின்ன மீன்களைப் போட்டு வருகிறது.

எடுத்துக்காட்டாக, அமெரிக்க அரசின் ராணுவத் துறைகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதைப் பாருங்கள்.

உலகம் தழுவிய அளவில் உள்ள அமெரிக்காவின் நலன்களுக்கு இந்தியா ஒரு முக்கியமான அடிப்படையான கூட்டாளியாக உள்ளது. சீனா எதிரியாக மாறும் சக்தி கொண்டுள்ளது. ரஷ்யா அபாயமாகும் சக்தி கொண்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல.

அமெரிக்க ஜனாதிபதி புஷ், கடந்த ஆண்டு மார்ச் 3 அன்று இந்திய மண்ணில், டெல்லியில், நின்று கொண்டே பல நாடுகளைத் தாக்கிப் பேசினார்.

"மானுட விடுதலைக்கான இயக்கத்தில் இந்தியா எங்களுடைய சகோதரர், எங்களுடைய இயற்கையான கூட்டாளி. வட கொரியா, மியான்மர், சிரியா, ஜிம்பாப்வே, கியூபா, ஈரான் ஆகிய நாடுகளின் மக்கள் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களை எதிர்த்து விடுதலைக்காக ஏங்குகிறார்கள். சுதந்திரத்துக்காக ஏங்கும் உலகத்துக்கு இந்தியாவின் தலைமை தேவை'' என்று புஷ் பேசினார்.

எனினும் அமெரிக்காவின் சதி வேலைகளை உணர்ந்ததாலோ, என்னவோ இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலின் ஆலோசனைக் குழுத் தலைவரான ரஸ்கோத்தா எச்சரிக்கை விடுத்தார்.

டெல்லியில் கடந்த மாதக் கடைசியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன் சிங்கை உட்கார வைத்துக் கொண்டே அவர் எச்சரித்தார்.

இந்த நூற்றாண்டானது ஆசியாவின் நூற்றாண்டு என்றே உலக அளவில் அழைக்கப்படுகிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் வேகமான வளர்ச்சியே இதற்குக் காரணம்.

ஆனால், அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஸ்கோத்ரா, "இந்த நூற்றாண்டானது ஆசியாவில் அமெரிக்காவின் நூற்றாண்டு என்னும் வகையில் அமையவே அதிக வாய்ப்பு உள்ளது'' என்று கூறினார்.

அதாவது ஆசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் ஏற்படும் ஆபத்து அதிகமாகவே உள்ளது என்று அவர் எச்சரித்தார்.

பிறகு பிரதமர் மன்மோகன்சிங் சொன்னார்: "சர்வதேச விவகாரம் என்பது நீதி, நேர்மை விளையாட்டல்ல.''

மன்மோகன்சிங் சொல்வது இருக்கட்டும்

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com