Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

1950 பிப்ரவரி - சேலம் சிறைத் துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்த உத்தமலிங்கம்


1946 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் கொரில்லா போராட்டத்தில் உழவர் பெருங்குடியினர் இறங்கினார்கள். தெலுங்கானா, புன்னப்புரா, வயலார் போன்றசில இடங்களில் தன்னிச்சையாகப் போராட்டம் தொடங்கியபோது, பல இடங்களில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வழிகாட்டுதலுடன்தான் அது நடைபெற்றது. எனவே பிரிட்டிஷ் அரசு பொதுவுடைமைக் கட்சியை ஒடுக்கத் தொடங்கியது.

1947இல் இந்தியா விடுதலை பெற்றபின்பு, 1948ஆம் ஆண்டிலேயே, ஏ ஆஜாதி ஜூத்தா ஹை (இந்தச் சுதந்திரம் பொய்யானது) என்னும் முழக்கத்தைப் பொதுவுடைமைக் கட்சியினர் முன்வைத்தனர். மேலும் காங்கிரஸ் ஆதரவாளரான பி.சி. ஜோசி தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு, தீவிரவாதப் போக்கினரான பி.டி. ரணதிவே பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

இது போன்ற நிகழ்வுகளால் அக் கட்சியின் மீது காங்கிரஸ் கடும் சினம் கொண்டது. இந்தியாவின் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் 1948 மார்ச் மாதம் அக்கட்சியை வங்காளத்தில் தடை செய்து ஆணையிட்டார். அப்போது ராஜாஜி மேற்கு வங்க ஆளுநராக இருந்தார். அந்தத் தடை மெல்ல மெல்ல பிறமாநிலங்களுக்கும் பரவியது. 1949 அக்டோபரில் சென்னைத் தலை மாகாணத்திலும் பொதுவுடைமைக் கட்சி தடை செய்யப்பட்டது. அதன் விளைவாக மிகக் கடுமையான ஒடுக்குமுறைகள் அக்கட்சியின் மீது ஏவி விடப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சேலம் சிறையில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டனர். 1950 பிப்ரவரி 11ஆம் தேதி அச்சிறையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருபத்தி இரண்டு பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிர்பிழைத்து, இன்றும் உயிரோடு இருக்கும் 86 அகவை நிரம்பிய தோழர் உத்தமலிங்கத்தை, சேலத்தல் உள்ள அவரது இல்லத்தில், மு. அந்தாலனாரும், கவிஞர் தாதை உபதேசியும், திரு காந்தனும் நேரில் சந்தித்து உரையாடினர்.

தோழர் உத்தமலிங்கம் அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே இங்கு விவரிக்கிறார்.

நான் சின்ன வயதிலேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருக்கிறேன். 1949இல் நகர் கமிட்டி உறுப்பினர். அந்த ஆண்டு ஆகஸ்ட் 15இல் சுதந்திரத்தைக் கண்டித்து, நியூ சினிமா அருகில் புலிக்குத்தித் தெருவில் கட்சியின் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டோம். அதற்காக 2000 துண்டறிக்கைகள் அச்சடிக்கக் கொடுத்து இருந்தேன். அச்சகத்திலிருந்து என் முகவரியை வாங்கிக் கொண்டு காவல்துறையினர் நேராக என் வீட்டுக்கே வந்துவிட்டனர். என்னைக் கைது செய்து பதினைந்து நாள் விசாரணைக்குப் பிறகு வெளியே விட்டுவிட்டனர்.

மீண்டும் 1949 செப்டம்பர், 19ஆம் நாள், காவல் நிலையத்தைத் தாக்கச் சதி செய்ததாகப் பொய் வழக்குப் போட்டு கைது செய்யப்பட்ட நான் ஆறு மாதத் தண்டனையில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டேன்.

அந்தக் காலகட்டத்தில்தான் அப்படியொரு பயங்கரமான நிகழ்வு நடைபெற்றது. பொதுவாகவே எங்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். கழிப்பறையைச் சுத்தம் செய்வது, கவலை இழுப்பது, ரோடுரோலர் இழுப்பது முதலான கடுமையான வேலைகளில் எங்களை ஈடுபடுத்தினார்கள். மற்றகிரிமினல் கைதிகளைப் போல தொப்பியும் நெம்பர் கட்டையும் அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

நாங்கள் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தோம். ஒவ்வொரு நாளும் வற்புறுத்தல் மிகுதியாகிக் கொண்டிருந்தது. என்றாவது ஒரு நாள் இது பெரிய சிக்கலாகக் கூடும் என்று எதிர்பார்த்த நாங்கள், தற்காப்புக்காக செங்கற்களையும், ஜல்லிக் கற்களையும் எங்கள் அறைகளில் சேமித்து வைக்கத் தொடங்கினோம். எங்கள் தொகுதிகளில் ஏறத்தாழ இருநூற்றி எழுபது பேர் இருந்தோம். மலையாளிகள் மிகுதியாக இருந்தார்கள்.

அன்று ஜெயிலராக இருந்த கிருஷ்ணன் நாயர் என்பவரும் மலையாளிதான். கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடியவர்.

நிகழ்வு நடந்த நாள் அன்று (1950 பிப்ரவரி 11) நம்பர் கட்டை அணிய மறுத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அவர் எச்சரித்தார். சொன்னபடியே, முதலில் தடியடிக்கு ஆணையிட்டார். நாங்களும் ஜல்லிக் கற்களால் திருப்பித் தாக்கினோம். ஜெயிலர் மீது ஒரு கல் சென்று தாக்கியிருக்கிறது. அவ்வளவுதான். காவல்துறையினர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

முன்னணித் தோழர்கள் பலர், எங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர்கள் துப்பாக்கிக்கு மார்புகாட்டினர்.

சடசடவென்று துப்பாக்கிச் சூடு. பதினேழு பேர் அந்த இடத்திலேயே பிணமாயினர். அந்தக் கொடுமையை எதிர்த்துக் காவலர்களோடு மோதிய ஐந்து பேர் அடித்தே கொல்லப்பட்டார்கள். என்னைப் போன்றபலர் படுகாயங்களோடு உயிர் பிழைத்தோம். பிணங்களைச் சட்டவிரோதமாக சிறையின் ஒரு பகுதியிலேயே புதைத்துவிட்டனர். மறுநாளே அந்த நிகழ்வைக் கண்டித்து ஜெயப்பிரகாஷ் நாராயணனும், தந்தை பெரியாரும் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.

அடுத்த வாரம் திராவிட நாடுó ஏட்டில், கேட்டது வாழ்வு கிடைத்தது சாவு என்னும் தலைப்பில் அண்ணா தலையங்கம் எழுதினார். ஆதித்தனார்தான் தன்னுடைய தினத்தாள் பத்திரிகையில் 22 செம்பிடாரிகள் சாவு என்று தலைப்பிட்டிருந்தார். எங்களுக்கெல்லாம் மிக வருத்தமாக இருந்தது.

அந்தக் கொடூரத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகும், சிறையிலிருந்த நாங்கள் தொப்பியும், நெம்பர் கட்டையும் அணிய மறுத்து விட்டோம். அதற்குப்பிறகு அவர்களும் பெரிதாக வலியுறுத்தவில்லை.

துப்பாக்கிச்சூடு பற்றி விசாரித்த கமிஷன், அது வன்முறைக்கு எதிராகவே நிகழ்த்தப்பட்டது என்பதால் யாரையும் தண்டிக்க வேண்டியதில்லை என்று கூறிவிட்டது. பிறகு நான் என்னுடைய தங்கச்சங்கிலியை விற்று ஜாமீனில் வெளியே வந்தேன். இன்றைக்கும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

குற்றம் செய்தவர்களை விசாரிக்க, தண்டனை வழங்க நீதிமன்றங்கள் இருக்கின்றன. நாச வேலைகளில் ஈடுபட்டோரை விசாரித்துத் தீர்ப்பு வழங்க நீதிபதிகளும் இருக்கிறார்கள். ஆனால், இந்த நேர்மைப் பாதை ‘ராமராஜ்ய' நண்பர்களுக்குப் பிடிக்காதது வியப்பூட்டும் சம்பவமல்ல. வேதனை நிரம்பியது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com