Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
ஆகஸ்ட் 2007

நரையாகுதல்
அ. அருள்மொழி


பாடியவர்: கனி சிந்தையார்

யாண்டு பலவாகு முன்நரைதிரை கூடுதல்
யாங்காகியர் என வினவீர் - ஆயினும்
ஆளும் எம்வேந்தரும் உளத்தால் அன்னியர்
அரவெனத் தீண்டுமென் ஆண்டையும் மாண்டிலன்
வளர்ந்த பின் மதியாராகுவர் மக்களும்
இடித்தல் தவிரா விருப்பினர் எம் இளைஞரே
திகைத்து நிற்கினும் துணிந்து நோக்கினும்
தொலைந்த தென் கற்பெனத் தேடும்
நெறியறியவுறுத்தும் சமனிலாச் சான்றோர்
பலர் வாழும் எம் ஊரே.

பாடல் குறிப்பு:

இப்பாடலை இயற்றிய பெண் பாற்புலவர் இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் வாழ்ந்தவர் என்றும், இப்பாடலை ஆய்வு செய்த ஆண்பாற் புலவர் பலர் சங்கப் பெண்டின் உயர் நிலை குறித்துக்கொண்ட கவலையான் இப்பாடலின் உட்கிடக்கை புலம்பல் தன்மையதென்றும், ஆதலின் இப்பாடலைப் பாடிய பெண்பாற் புலவன் இயற்பெயர் கனிசிந்தையராக இருக்க வாய்ப்பில்லை என்றும், அவர் பெயர் சளி சிந்தியார் ஆகத்தான் இருக்கக்கூடும் என்றும் வாதிட்டனர். அவ்வமயம் சங்கத்தில் இருந்த பெண்பாற்புலவர்கள் அதனை மறுத்து இப்பாடலின் உட்கிடக்கை புலம்பல் தன்மையதல்ல என்றும் போர்த் தன்மையதே என்றும் வாதிட்டு வென்றதோடு அப்புலவன் பெயர் கனிசிந்தையாரே என்றும் நிறுவி விட்டனர்.

இவ்வாறு பெண்டிர் வென்றதால் ஊழி பொங்கி இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை கடல் கொண்டு விட்டதென்றும் ஆயின் இனி உலக நலன் கருதி பெண்பாற் புலவர்கள் எழுதும் பாடல்களை சங்கத்தின் கண் வைத்து ஆண்பாற் புலவர்கள் ஆய்வு செய்து முறையாற்றிய பின்னரே அவற்றை அவையில் பகர அனுமதிக்கப்படும் என்ற முடிவும் அது முதல் கொண்டே வழக்கத்தில் வந்ததென்பர்.

நட்புக்கு இலக்கணமாகப் பேசப்படும் கோப்பெருஞ்சோழனின் நண்பர் தான் பிசிராந்தையார் எனும் புலவர். சங்கத் தமிழ்ப்பெருமை பேசும் அறிஞர்கள் அத்துனை பேரும் ஒருவகை செருக்குடனோ அல்லது ஏக்கத்துடனோ பிசிராந்தையாரை அவரது இக்கவிதைக்காக நினைவு கூர்வார்கள். ஒரு மனிதன் வயதாகியும் நரையில்லாமல் இருக்க வேண்டுமானால் அதற்கு எத்தகைய சூழல் தேவை என்று அந்தக் கவிதையில் கூறுகிறார் பிசிராந்தையார். முதலில் மனைவி சிறந்தவளாக, பொறுமை நிறைந்தவளாக இருக்க வேண்டும். அத்துடன் பிள்ளைகளும் அப்படியே அமைய வேண்டும்.

மன்னனோ மக்கள் மீது அன்புடையவன். அவனால் வழி நடத்தப்படும் பொறுப்பு மிக்கவர்களாய் இளைஞர்கள். இத்தகைய மனிதர்களுக்கிடையில் வாழும் வாய்ப்பைப் பெற்றதால் தனக்கு வயது கூடிய பிறகும் தலையில் மயிர் நரைக்கவில்லை என்று செம்மாந்த நடையில் இப்பாடலைப் படைத்திருக்கிறார் பிசிராந்தையார். பல புலவர்கள் தங்கள் குடும்பத்தை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தனக்கும் நரைக்காது என்ற நம்பிக்கையுடன் இந்தப் பாடலைக் கையாளுவார்கள். சில தமிழறிஞர்கள் தன் மனைவி பிசிராந்தையான் மனைவியைப் போல இல்லாததாலும் தன் பிள்ளைகள் தனக்கு அடங்காதவர்களாக இருப்பதாலும்தான் தனக்கு முடி நரைத்து விட்டது என்று கவலையுடன் கூறுவதும் உண்டு. இந்தப் பாடலின் தலைப்பு நரையில வாகுதல் பிசிராந்தையார் வைத்ததோ, மற்ற புலவர்கள் சூட்டியதோ தெரியாது. ஆனால் மிகப் பொருத்தமான தலைப்புதான்.

பிசிராந்தையாரின் தலைப்பு ஒருபுறம் இருக்கட்டும். இவ்வளவு சட்டதிட்டத்துடன் ஒரு புலவர் குடும்பத் தலைவராக இருந்தால் அவர் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் குறிப்பாக அவர்தம் மாண்புடைய மனைவிக்கு வயதாகாமலே தலை நரைத்துவிடும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் மனைவிக்கு நரைப்பது பற்றி யார் கவலைப்பட்டார்கள். யார்தான் அக்கறைப்படுவார்கள்? முதலில் அந்தப் பெண்ணுக்கே அதற்காகக் கவலைப்படவோ, அப்படி தனக்கும் நரைக்காமல் இருக்க வேண்டுமானால் தனது சூழல் எப்படி அமைய வேண்டும் என்று திட்டமிடவோ அதனை வலியுறுத்தவோ உரிமை இருக்கிறதா? ஒரு மனிதனின் நிம்மதி என்று அங்கலாய்ப்பதில் இருந்து தமிழனின் பெருமை என்று பறைசாற்றுவது வரை நாம் ஒவ்வொரு கருத்திலும் ஆண்களைத்தானே முன் நிறுத்துகிறோம்.

தமிழன் வீரத்தில் வேலு நாச்சியாருக்கு இடமில்லை. வீரப் பெண்டிர் என்ற தனி வரலாற்றில்தான் அவர் பெயர் இடம்பெறும். அஞ்சாநெஞ்சன் அழகிரியை அடுத்து மூவாலூர் இராமாமிர்தம் பேசப்படுகிறாரா? அடுக்கடுக்காகப் பகுத்தறிவு வாதம் பேசும் பலர் வாய்ச்சொல் வீரர்களாவது இரண்டு கருத்தியலில் தோற்கும்போதுதான். ஒன்று ஆண் பெண் சமத்துவப் பார்வை, இரண்டாவது ஜாதி மறுப்பு. இவையிரண்டும் தன்னளவில் புரிந்து கடந்து செல்ல வேண்டிய வேகத்தடைகளாகும். 1930இல் தந்தை பெரியார் எழுதியுள்ள குடியரசு இதழ் தலையங்கங்களில் பெண்களைப் பற்றி அவர் வைத்துள்ள வாதங்களை இன்றும் படித்துப் பார்க்கவே அஞ்சும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள். மாற்றங்களை வரவேற்கும் புத்துலக, மனிதனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் பலர், பெண்கள் பிரச்சனையில் சில யதார்த்தமான எதிர்க்கேள்விகளை சந்திக்க நேரும்போது சரிதான்... ஆனாலும் என்று இழுப்பதையும், என்ன இருந்தாலும் என்று கொக்கி போடுவதையும், ஆயிரம் இருந்தாலும் என்று கணக்குப் போடுவதையும் பார்க்கிறோம்.

அதென்ன ஆயிரம் இருந்தாலும், ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டால் போயிற்று. முதலில் தலையில் தொடங்கி இருக்கிறோம். தலை நரைக்காமல் இருப்பதும் இருக்க வேண்டியதும் ஆணுக்கு மட்டும்தானா? ஒரு பெண்ணுக்கு வயது கூடிய பிறகும் தலை நரைக்காமல் இருப்பதற்கு அவள் கணவனும் பிள்ளைகளும் எப்படி நடந்து கொள்ள வேண்டும். நாட்டில் இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும், மன்னன் எத்தகையனாய் இருக்க வேண்டும் என்று சிந்திக்கச் சமூகம் கடமைப்பட்டிருக்கிறதா? இல்லையா? இந்தக் கேள்வியைக் கேட்கும் உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டா? இல்லையா? அப்படிச் சிந்திக்கிற ஒரு பெண் பிசிராந்தையார் காலத்தில் வாழ்ந்திருந்தாலும், இன்றைய கோலத்தில் வாழ்ந்திருந்தாலும் எப்படிப் பாடியிருப்பார் என்பதே நரையாகுதல் என்ற இந்தக் கவிதை.

அண்மையில் பெண்கள் எழுதிய பல கருத்துகளுக்கு எழுந்த எதிர்ப்பு, மறுப்பு, அடக்குமுறை, அறிவுரை எனச் சீறியெழுந்த ஆண் சிந்தனையாளர்களுக்கும் அவர்களை எதிர்த்து நின்ற பெண் சிந்தனையாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த போராட்டத்தை மையமாகக் கொண்டதே பாடல் குறிப்பு.

ஆக பெண்ணியத்திற்கு எதிராக முன் வைக்கப்படும் ஆயிரம் பிரச்சனைகளில் முதலாவது தனது உடல் நலம், அமைதியான வாழ்க்கை என்று பேசும் உரிமை ஆணுக்கு மட்டுமே உண்டு. பெண் என்பவள் இதைப் பற்றி கவலைப்படாமல் பசி நோக்காது, கண் துஞ்சாது, தன்னையே குடும்பத்திற்காக தியாகம் செய்யும் உயர்ந்த பிறவி என்பதுதான்.

இது எந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டது, எப்படி நம் மூளையில் திணிக்கப்பட்டது என்ற வரலாற்றைத் தெரிந்து கொள்வது படிப்பறிவு. இந்த பார்வைக் கோளாறு நம்மிடம் இருந்தால் அதை முதலில் சரி செய்து கொள்வது பகுத்தறிவு.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com