Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thaagam
ThaagamThaagam Logo
பிப்ரவரி 2006
நேர்காணல்

உளவுத்துறையின் சதியை உடைத்தெறிவோம்
தோழர் சி.மகேந்திரன்


அரசியலில் ‘மனிதர்'களைப் பார்ப்பது அரிதாகி வருகின்ற காலத்தில், மனிதம் ததும்பும் மனிதராகத் தமிழக அரசியலில் தடம் பதித்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர் தோழர் சி. மகேந்திரன். ‘தாமரை' இதழின் ஆசிரியர், தலை சிறந்த பேச்சாளர், துடிப்புமிக்க இளந்தலைவர் எனப் பல பரிமாணங்களில் பரிணமிக்கும் தோழர் சி. மகேந்திரனிடம் நடப்பு அரசியல், இளைஞர்களின் நிலை, பொருளாதாரச் சூழல் உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பேசினோம்.

C. Mahendran உங்கள் கூட்டணியில் உரசல்- விரிசல் எனத் தொடர்ந்து செய்திகள் வருகின்றனவே உண்மையான நிலைமை என்ன?

தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணிகள் எப்படி அமையும் என்பது தொடர்பான தெளிவற்ற நிலை இருக்கிறது. அதையொட்டித் தான் சில பிரச்சினைகள். தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி எனக் கூட்டணிகள் உள்ள நிலையில் அ.தி.மு.க. கூட்டணியை கம்யூனிஸ்ட்டுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. மாநிலக் குழுவினுடைய தீர்மானத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், இடதுசாரி கட்சிகள், மற்ற ஜனநாயக சக்திகள் அடங்கிய விரிந்த கூட்டணியாக இது அமைய வேண்டும் என்றுதான் செயல்படுகிறோம். இந்தக் கூட்டணியின் மூலமாக மக்களுக்குச் சில முன்னேற்றங்களை செய்ய முடியும் என நம்புகிறோம். இந்தக் கூட்டணி சரியாக இல்லை என்பதாக ஊடகங்கள் மூலம் ஒரு வலிமையான பிரச்சாரம் நடத்தப்படுகிறது. காவல்துறை அதில் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது. எப்படி இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது போல இந்தக் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கும்.

5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சி பற்றிய உங்கள் விமர்சனம் என்ன?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய ஆட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய ஆட்சி என இரண்டுவிதமாக அதனைப் பிரிக்கலாம். முந்தைய ஆட்சி, எவ்வித யோசனையுமின்றி எல்லாவற்றையும் எடுத்துக் கீழே கொட்டுகிற ஆட்சியாகவும், பிந்தைய ஆட்சி என்பது மக்களுக்கான எல்லாவற்றையும் செய்கிற ஆட்சி என்ற மனோநிலையை மக்களிடம் உருவாக்க முயலும் ஆட்சியாகவும் இருக்கிறது. அது தேர்தலுக்கான ஒரு நிலைமைதான். இந்த ஆட்சியில் சட்டங்கள் மதிக்கப்படவில்லை என்பதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களைச் சொல்லமுடியும். அரசு ஊழியர்கள் பலரை ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்தார்கள். அதில் 60 பேருக்கு மேல் செத்துப்போய்விட்டார்கள். உயிரோடு இருப்பவர்களுக்கு மறுபடியும் வேலை தரலாம். செத்துப் போனவர்களுக்கு மறுபடியும் உயிர் தரமுடியுமா? ஊழல் எல்லை மீறிப் போய்விட்டது. ஏரி, குளங்களை ஆக்கிரமிக்கும் போக்கு உள்ளது. அது வெள்ளச் சேதத்திற்கு முக்கிய காரணமாகிவிட்டது. மணல் கொள்ளையும் ஒரு முக்கியமானக் காரணம். மக்களுக்கு நன்மை செய்யும் அரசாக இது இருந்தது என்று சொல்ல முடியாது.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றாவிட்டால் பொருளாதாரமே சரிந்துவிடும், என்று மணிசங்கர் அய்யர் ஒவ்வொரு முறையும் சொல்லி வருகிறார். கம்யூனிஸ்டுகள்தான் அவருக்குக் கடிவாளம் போடுகிறீர்கள். மத்திய அரசின் 5 ஆண்டுகாலமும் இப்படித் தொடர்ந்து கடிவாளம் போடமுடியுமா?

கட்டாயம் செய்ய முடியும். கம்யூனிஸ்டுகளின் கடிவாளத்திற்குக் கட்டுப்படுவதைத் தவிர காங்கிரஸ் அரசுக்கு வேறு வழியில்லை. இந்தக் காங்கிரஸ் அரசாங்கத்தை நாங்கள் ஆதரிப்பதற்குத் தார்மீக ரீதியான அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு. அதனால், நிர்பந்தங்களின் மூலமாக அவர்களின் சில கொள்கைகளை மாற்றப் பார்க்கிறோம்.

இந்த அரசு போடும் திட்டங்கள் எல்லாம் உலக முதலாளிகள், அந்த முதலாளிகளுக்கு ஏஜெண்டாக இருக்கக்கூடிய இந்திய முதலாளிகள் ஆகியோருக்கே பலனளிக்கக்கூடியதாக இருக்கிறது. அவை மக்களுக்கு பலனளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். அன்னிய முதலீடுகளின் வரவு செலவு பலன் மக்களுக்குப் போய்ச் சேர்கிறதா? பட்டினிச் சாவுகளைத் தடுத்திருக்கிறதா? இல்லையே! பெட்ரோலைப் பொறுத்தவரை நம் நாட்டிலேயே பல இடங்களில் பெட்ரோல் கிடைப்பது அதிகரித்துள்ளது. ஆனால், பல இடங்களில் அதை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட்டு விட்டார்கள். வெளிநாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யவும் ரிலையன்சுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் இறக்குமதி செய்வதாகக் கணக்கு காட்டிவிட்டு, கூடுதலாக இறக்குமதி செய்ய வழி இருக்கிறது. இதுபோன்ற குறைபாடுகளின் விளைவுதான் பெட்ரோல் விலை உயர்வு.

உலகத்திலேயே அதிகமாகப் பெட்ரோல் விற்கக்கூடிய நாடு இந்தியா. இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல் மீது அதிக வரி போடக்கூடிய நாடும் இந்தியாதான். 3 விதமான வரிகள் போடுவதால் விலை உயர்கிறது. இந்த வரிகளைப் போடாமல், வருமானவரிப் பாக்கி, அரசாங்கத்திலிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் இவர்களிடம் வசூலித்து பட்ஜெட் போடுங்கள் என்கிறோம்.

சூழல் மாறுவது போன்ற ஒரு உணர்வு எனக்கு உள்ளது. உதாரணமா, எங்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாணவர் அமைப்பான AISF இன் அகில இந்திய மாநாடு சென்னையில் அண்மையில் நடந்தது. எங்கள் மதிப்பீட்டின்படி இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் இதுவரை மாணவர்கள் வந்ததில்லை. சமூகத்தின் நிர்ப்பந்தம் அவர்களை அரசியலை நோக்கி நகர வைக்கிறது. அதற்கு தேவையான களத்தை எங்களால் உருவாக்கித் தர முடியும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த தலைமுறையின் மிகப்பெரிய வரப்பிரசாதம், இணையத்தளம். அதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெற்றுச் சிந்திக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஒரு பக்கம் சினிமா மோகம் இருந்தாலும், இன்னொரு பக்கம் நிறையச் செய்திகளைத் தெரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு ஈடு கொடுக்கும் தலைமை உருவாக வேண்டும். வெறும் வாழ்க, ஒழிக என்ற இரண்டு கோஷங்களுக்குள் இளைஞர்களை அடக்கிவிடமுடியாது. அத்தகைய இயக்கங்கள் வரும்போது இளைஞர்கள் அதை நோக்கி வருவார்கள். அதற்கான தகுதி இல்லாத இயக்கங்கள் காணாமல் போய்விடும்.

சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் வசந்தா கந்தசாமியின் பிரச்சினையைப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச்செல்வோம் என்றும் தெரிவித்தீர்களே?

ஐ.ஐ.டி. ஒரு விதத்தில் இந்தியாவில் மதிப்பு மிகுந்தது என்ற நிலைமை மாறி இன்று ஐ.ஐ.டி. என்பது இந்தியாவின் அவமானத்திற்குரியதாகியுள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன். நிறைய அறிவாளிகளை அங்கு உருவாக்கியதாகச் சொன்னாலும் கூட இன்னொரு பக்கம் வகுப்புவெறியின் உச்சமாக, வகுப்புவாதத்தின் அடித்தளமாக அது மாறியுள்ளது. மத்திய அரசிடம் திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், முற்போக்கு இயக்கங்கள் ஆகியவை நிர்ப்பந்தம் கொடுத்துத்தான் அரசு - தனியார் என்ற பாகுபாடு இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தோம். அதில் ஐ.ஐ.டியும் சேர்ந்து வரும். நாடாளுமன்றத்திலும் எங்கள் உறுப்பினர் சுப்பராயன் இது குறித்துப் பேசியிருக்கிறார்.

ஐ.ஐ.டி. நிர்வாகம் தங்களை எதிர்ப்பவர்களையெல்லாம் சட்டத்திற்குப் புறம்பான வழியில் வெளியேற்றுவது என்பது அதன் தந்திரங்களில் ஒன்றாக இருக்கிறது. இதை விடக்கூடாது. பேராசிரியர் வசந்தா கந்தசாமிக்கு ஆதரவான கருத்துகளை ஒன்றாகத் திரட்டி, போராட்டத்தை வலிமையோடு நடத்துவதற்கு AISF மாநாட்டில் தனித்தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஒரு பெண் என்ற முறையில், அவர்களுக்கு ஏற்படக்கூடிய அவமதிப்பு மற்றும் பிற கொடுமைகளை முன்னிறுத்தி டெல்லி வரை இதனைக் கொண்டு சென்று இயக்கமாக நடத்தவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com