Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
ஜூன் 2009
தோழர் வே.ஆனைமுத்து பணிகளுக்குத் துணையிருப்போம்!
இசையமுது

இடஒதுக்கீட்டின் பயனாக அரசுப் பணிகளில் சேர்ந்து, பதவி உயர்வு பெற்று, வசதிகள் அடைந்துள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பு மக்கள் இதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அண்ணல் அம்பேத்கரையோ, தந்தை பெரியாரையோ நினைத்தும் பார்ப்பதில்லை. நன்றி பாராட்டாத இந்த மக்களுக்கான கடமைகளைத் தன் வாழ்வின் இறுதி மூச்சுவரை ஆற்றி முடிக்கச் சூளுரைத்து அதன்படியே வாழ்ந்தவர் தந்தை பெரியார் ஆவார். அவரின் அணுக்கத் தொண்டராகத் தம்மை வரித்துக் கொண்டு பெரியாரியலை உலகுக்கு உணர்த்தி வருபவர் தோழர் ஆனைமுத்து அவர்கள் ஆவார்.

தந்தை பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் நிரல்படத் தொகுத்து "பெரியார் ஈ.வ.ரா.சிந்தனைகள்' என்ற மூன்று பெரும் தொகுப்புகளை வெளியிட்டதன் வழியாகப் பெரியாரை, படித்தவர் நெஞ்சில் பெரியாரை நிலைக்கச் செய்து விட்டார். தந்தை பெரியாரை மிகச் சிறந்த தத்துவமாகவே உணர்ந்த இவர் எழுதிய "பெரியாரியல்' பல்கலைக் கழகங்கள் பாராட்டிப் பயிலும் நூலாகியுள்ளது. தந்தை பெரியாரின் கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு; சமுதாய மேம்பாட்டிற்கான போராட்ட குணம் ஆகியவற்றோடு சமூக நீதிக்கான குரலையும் ஓங்கி ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர் தோழர் ஆனைமுத்து அவர்களே!

1978இல் பாட்னா, பீகார் மற்றும் வட மாநிலங்களில் இவர் மேற்கொண்ட சூறாவளிப் பயணத்தின் காரணமாக அங்கெல்லாம் "இடஒதுக்கீடு' குறித்த புதிய சிந்தனைகள் சீறிக் கிளம்பின. மண்டல் குழு அமைந்திடவும் நடுவண் அரசிலும் கல்வியில்-வேலை வாய்ப்பில்-இடஒதுக்கீடு வரவும் இவரின் பேருழைப்பே அடிப்படையாக அமைந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுக்கும்போது சாதிவாரிக் கணக் கெடுத்து அதனடிப்படையில் 100 விழுக்காடு இடங்களும் விகிதாசார அடிப்படையில் பகிர்வு செய்யப்படவேண்டுமென்பது இவர் வாழ்நாளிலேயே நடைமுறைப்படுத்தச் செய்திடல் வேண்டும் என்பது இவர் உறுதிப்பாடுகளுள் ஒன்றாகும்.

"இந்திய அரசியல் சட்ட'த்தை முழுமையாக சங்க இலக்கியத்தைக் கற்பதைப் போலக் கரைத்துக் குடித்த ஒரு சிலரில் இவரே முதலாமவர். "இந்திய அரசியல் சட்டம் ஒரு மோசடி' என்ற சிறந்த நூலை எழுதி இந்திய தேசியத்தின் புரட்டுகளை, வெளிக்கொணர்ந்தவர் இவரே. "உயர்கல்வி நிறுவனங்களில் ஒதுக்கீடு' என்ற வஞ்சகச் சட்டத்தை எதிர்த்துக் கிளர்ந் தெழுந்த இவர் வீரப்ப மொய்லி அறிக்கையை எரிக்கச் செய்து இச்சட்டம் வெகு மக்களுக்கு எதிரானது என்பதை மெய்ப்பித்துக் காட்டினார்.

2009 ஏப்பிரலில் இந்திய உச்சநீதி மன்றம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஒரு கருத்தைத் தெரிவித்தது “இட ஒதுக்கீட்டை எந்தக் குடிமகனும் ஓர் உரிமையாகக் கோரமுடியாது'' என்ற மக்கள் விரோதக் கருத்தைத் தெரிவித்துள்ள நிலையில் இதன் நகலை 29.6.2009 அன்று தீயிலிட்டு எரித்து வெகுமக்கள் எதிர்ப்பினைக் காட்டவும் திட்டமிட்டுள்ளார். 2005 மே-சூன் திங்களில் இதழாளர் என்ற முறையில் இலங்கைப் பயணம் மேற்கொண்டு “தமிழீழத் தமிழரை-இலங்கை மலையகத் தமிழரை நீங்களும் பாருங்கள், நீங்களும் பேசுங்கள்''-என்ற பெயரிலான நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்நூலில், தாம் கண்ட தமிழீழச் சிறப்புகளையும், ஈழத்தின் அழகையும், செழுமையையும், தமிழர்களின் செம்மாந்த வீரத்தையும் பதிவு செய்துள்ளார்.

2009 மே சிந்தனையாளனில் “ஈழ விடுதலையை நோக்கி...'' என்ற இவரின் கட்டுரையில் ஈழ விடுதலையில் ஆர்வம் கொண்டோர் செய்யத் தவறியதையும், ஈழ விடுதலைக்கு நாம் ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய பணிகளையும் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். இவ்வாறு, தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளைத் தூக்கிச் சுமந்து களப்பணி ஆற்றிவரும் போராளியாக-அடுத்த தலைமுறைக்கும் எடுத்துக்காட்டான கொள்கை மறவராக பெரியாரின் தத்துவ விளக்கமாக இயங்கி வரும் தோழர் ஆனைமுத்து அவர்கள் 21.6.2009இல் 84 ஆண்டுகள் நிறைவடைந்து 85ஆம் அகவையில் காலடி வைப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகும்.

இவரிடம் நாம் கற்க வேண்டியவையும் பின்பற்ற வேண்டியவையும் ஏராளமாக உள்ளன. காலையில் எழுந்து எழுதுதல், நடைப் பயிற்சி, செய்தித்தாள்கள் படித்தல், குறிப்பெடுத்தல், கட்சிப் பணிகள், எளிய உணவு, எளிய உடை, எளிய வாழ்க்கை, ஆடம்பரம்-விளம்பரம் விரும்பாத மனம், எவருக்கும் விலைபோகாத சுயமரியாதை, எதற்கும் அஞ்சாமல் கருத்துரைக்கும் நேர்மை, எதையும் திட்டமிட்டுச் செய்யும் ஒழுங்கு-இவைகளில் இவருக்கு நிகர் இவரே!

இளைய தலைமுறையை பெரியார் கொள்கைகளில் நனைத்தெடுக்க ஒரே வழி ஆண்டு முழுவதும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதுதான் என்பதை உணர்ந்ததால்தான் தோழர் ஆனைமுத்து அவர்கள் "பெரியார் ஈ.வெ.ரா.-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை' என்ற நிறுவனத்திற்கு வித்திட்டார். அதை வளர்த்தெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அம்பத்தூரில் “பெரியாரிய-அம்பேத்கரிய'' அடிப்படைக் கல்விக்கான கல்விக்கூடம் விரைவில் திறக்கப்பட உள்ளதன் வழி தந்தை பெரியாரின் தத்துவங்களை மேலும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வழியமைத்தார்.

பெரியார் ஈ.வெ.ரா.-நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளைப் பணிகள்

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் மறுபதிப்பு

தந்தை பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல்

பெரியாரின் கொள்கைச் செழுமைக்கு தோழர் வே. ஆனைமுத்துவின் பங்களிப்பு

எனப் பல்வேறு பெரும் பணிகளைத் தோழர் ஆனைமுத்து அவர்கள் ஏற்றுத் தன் 85 ஆம் ஆண்டு பிறந்த நாளில் தமிழ்ச் சமுதாயத்திற்கான தத்துவ வழிகாட்டியாக-போராளியாக-கருத்தாளராக நல்ல உடல் நலத்தோடு திகழ்ந்து பணியாற்றிட "சிந்தனையாளன்', "பெரியார் ஊழி' மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி, புரட்சிக் கவிஞர் கலை இலக்கியமன்றம் ஆகியவைகளின் சார்பில் மனதார வாழ்த்துகிறோம். மார்க்சியம் பெரியாரியம்-அம்பேத்கரியம் வெல்ல இவர் பணிகளுக்கு எல்லா வழிகளிலும் நாம் துணையாயிருப்போம் என்பதை உளமாரத் தெரிவித்து மகிழ்கிறோம்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com