Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Sinthanaiyalan
Sinthanaiyalan WrapperSinthanaiyalan Logo
ஜூன் 2009
முதலாளியப் பாதையில் சீனாவின் சந்தை சோசலிசம்
க.முகிலன்

(இந்தியாவில் 15ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிந்து, முன்பு இருந்ததைவிடக் கூடுதலான இடங்களைப் பெற்று காங்கிரசுக் கட்சி நடுவண் ஆட்சியில் அமர்ந்துள்ளது. இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவை நம்பி இருக்கவேண்டிய நிலை இப்போது இல்லை. ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவது என்கிற பெயரால் மன்மோகன் சிங் தலைமையிலான நடுவண் ஆட்சி, தாராளமயம், தனியார் மயம் என்பவற்றை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்திட அணியமாகி வருகிறது. "சந்தை சோசலிசம்' என்கிற பெயரால் சீனாவில் உற்பத்தியில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களும், பணி நிலைமைகளும், சமூக நலப் பாதுகாப்புகளும் சீரழிந்து வருகின்றன என்பதை விளக்குவது இக்கட்டுரையின் முதல் நோக்கம். இப்புரிதலின் அடிப்படையில், இந்திய வல்லாதிக்க அரசு, அந்நிய ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்து புதிய பொருளாதாராரக் கொள்கை என்கிற பெயரால் உழைக்கும் மக்களை மேலும் மேலும் சுரண்டுவதை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிற விழிப்புணர்வையும் எழுச்சியையும் உண்டாக்குவதே இக்கட்டுரையின் இரண்டாவது நோக்கமாகும்.)

சீனாவில், வட அமெரிக்காவின் பேராதரவுடன் சியாங்கே ஷேக் தலைமையில் இருந்த கொடுங்கோலாட்சி மாசேதுங் தலைமையில் நடந்த புரட்சி மூலம் தூக்கி எறியப் பட்டது. 1949 அக்டோபர் முதல் நாள் மாவோ தலைமையில் சோசலிச அரசு நிறுவப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்த பெருநிலப் பண்ணையார்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது. பண்ணையார்-விவசாயி என்கிற உற்பத்தி உறவு முறை தகர்க்கப்பட்டது. நிலம் கூட்டுடமையாக்கப் பட்டது. கூட்டு உழைப்பு மூலம் வேளாண்மை செய்யப்பட்டது. கிராமப் புறங்களில் கம்யூன்கள் அமைக்கப்பட்டன. இவை வேளாண்மையையும், பிற தொழில்களையும் நிர்வாகம் செய்தன. கிராமப்புறத்தில் அரசின் அலகாகச் செயல்பட்டன. நகரங்களில் தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டன. கிராமப் புறங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளான வேலைவாய்ப்பு, இருப்பிடம், கல்வி, மருத்துவம் முதலானவை கம்யூன்கள் மூலம் அளிக்கப்பட்டன.

நகரங்களில் அரசின் பெரிய தொழிற்சாலைகளில் வேலைசெய்த தொழிலாளர்களுக்கு, வாழ்நாள் கால வேலை உரிமை உறுதி செய்யப்பட்டது. இலவயமாக இருப்பிடம், கல்வி, மருத்துவம் முதலானவை அளிக்கப்பட்டன. தாராளமான அளவில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஊதியம் பணமாகத் தரப்பட்டது. உணவுப் பொருள்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன. நகரங்களில் உருவாக்கப்பட்ட பிற கூட்டுடைமை அமைப்புகளில் வேலை செய்தவர்களுக்கு இதைவிடக் குறைவான அளவில் அரசின் உதவிகள் கிடைத்தன. கிராமப் புறங்களில் கம்யூன் அமைப்புக்குள் இருந்தவர்களுக்கு மேலும் குறைவான அளவில் அரசின் உதவிகள் இருந்தன.

கம்யூன்கள், கூட்டுடைமை அமைப்புகள், பெரிய அரசுத் தொழிற்சாலைகள் முதலானவற்றில் நிர்வாகப் பொறுப்புகளில் பெரும்பாலும் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர்களே இருந்தனர். தொழிலாளர்களைவிடக் கூடுதலான வருவாயும், சில சிறப்புரிமைகளும் இவர்களுக்குக் கிடைத்தன. புரட்சிக்குப்பின், உற்பத்திச் சாதனங்களைச் சொந்தமாக வைத்திருத்தல் என்கிற அடிப்படையிலான வர்க்க வேறுபாடு ஒழிக்கப்பட்டது. ஆனால் பணி நிலைமையால், உற்பத்திச் சாதனங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பில் பெற்றுள்ள இடத்தால், ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. கம்யூன்களில் உழைப்புக்கான ஊதியம் பெரும்பாலும் பொருளாகவே அளிக்கப்பட்டது. மத்தியத்துவப்படுத்தப்பட்ட திட்டமிடல் என்பதே இருந்தது. நகரங்களில் உணவுப் பொருள்களை மானிய விலையில் வழங்குவதற்காக, வேளாண் விளைபொருள் களுக்குக் குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டது. கனரகத் தொழில்களுக்கும், பெரிய தொழிற்சாலைகளுக்கும் முதன்மை தரப்பட்டது. இதற்காக கம்யூன்கள்மீது அதிக அளவில் வரிகள் விதிக்கப்பட்டன. கம்யூன்கள் தம் தேவையை நிறைவு செய்துகொள்ள முடியாத நிலைக்கு உள்ளாயின.

இந்நிலையில் 1950களின் இறுதியில் "பெரும் பாய்ச்சல்' திட்டத்தின்கீழ் வேளாண்மை, கல்வி, மருத்துவம் முதலான வற்றைப் பெருக்கவேண்டும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையில், அரசு, நகரங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு கல்வி பெற்றவர்களில் சிலகோடிப் பேர்களைக் கட்டாயப் படுத்தி கிராமப்புறங்களில் குடியேற்றியது. இது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. 1960களின் தொடக்கத்தில் பெரும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இக்கொடிய பஞ்சத்தில் கிராமப்புறங்களில் பட்டினியால் ஒருகோடிப் பேருக்கு மேல் மக்கள் மடிந்தனர்.

எந்தவொரு புரட்சிக்குப் பின்னும், அதற்குமுன் சமூகத் திலிருந்த ஆதிக்க சக்திகள் உடனடியாக மறைந்து விடுவ தில்லை. மீண்டும் ஆதிக்க நிலையைப் பெறுவதற்காகப் பலவழிகளிலும் அவை முயல்கின்றன. குறிப்பாக சீன சமூகத்தில் காலங்காலமாகக் கல்வி உரிமை பெற்று, அரசு நிர்வாகத்தில் உயர்ந்த பதவிகளில் இருந்துவந்த மேட்டுக் குடியினரின் "உடல் உழைப்பை இழிவாகக் கருதும்' சிந்தனைப் போக்கு நீடித்து வந்தது. எனவே 1966இல் மாவோ கலாச்சாரப் புரட்சித் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார். ஒருவர் எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும் ஓராண்டில் குறிப்பிட்ட நாள்களுக்கு உடலுழைப்பு வேலையைச் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. முதலாளிய-நுகர்விய சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் எதிரான பரப்புரைகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ‘முதலாளியப் பாதையாளர்' என்று மாவோவால் விமர்சிக்கப்பட்ட டெங்சியோபிங் போன்றவர்கள் கட்சியின்-நிர்வாகத்தின் பொறுப்புகளிலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள். எண்ணற்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர். 1976 செப்டம்பரில் மாவோ இறக்கும் வரையில் கலாச்சாரப் புரட்சி நீடித்தது. மாற்றுக் கருத்து கொண்டிருந்தோர் மீது கடுமையான ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டன. அரசியலில் தமக்குப் போட்டியாளர்கள் எனக் கருதப்பட்டவர்களைப் பழி தீர்ப்பதற்கான வாய்ப்பாகக் கலாச்சாரப் புரட்சியை அதிகார வெறிபிடித்த சில ஆதிக்கக் கும்பல்கள் பயன்படுத்திக் கொண்டன. நடைமுறையில் கலாச்சாரப் புரட்சி அதன் விழுமிய நோக்கத்திலிருந்து தடம் புரண்டது.

மாவோவின் இறப்புக்கு முன்னைய இருபது ஆண்டு களில் கிராமப்புற வாழ்க்கைத்தரம் தேக்கமடைந்திருந்தது. 1952 முதல் 1975 வரையிலான காலக்கட்டத்தில் தொழில் துறை உற்பத்தியின் மொத்த மதிப்பு பத்து மடங்கு உயர்ந் திருந்தது. அதே சமயத்தில் வேளாண்மையில் உற்பத்தி இரண்டு மடங்கு மட்டுமே உயர்ந்திருந்தது. பல பகுதிகளில் கம்யூன் அமைப்பின்கீழ் நிலவிவந்த பொதுவான அதிகாரத் தன்மைகொண்ட, நெகிழ்வற்ற வேளாண்மை நிர்வாகம், வேளாண்மை வளர்ச்சியின் தேக்க நிலைக்கும், உழவர் களிடையே கசப்புணர்வு தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது. வேளாண்மையின் தேக்க நிலையை ஈடு செய்யும் வகையில் சிறு தொழில்களும் வளர்த்தெடுக்கப் படவில்லை.

நகரங்களில் அரசுத் தொழிற்சாலைகளில் இருந்த தொழிலாளர்களுக்கும், பிற தொழிலாளர்களுக்கும் இடையில் வாழ்க்கைத் தரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தது. மேலும் தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர்கள் உரிய பங்கு பெறவிடாமல் கட்சியினர் எதிர்த்து வந்தனர். இவற்றால் நகரங்களிலும் தொழிலாளர்களிடையே மனக்கசப்பு வளர்ந்து வந்தது. டெங்சியோபிங் ஒரு தந்திரமிக்க அரசியல் வல்லுநர். மாவோவிற்குப் பின் ஏற்பட்ட நிலையற்ற தன்மையை அவர் பயன்படுத்திக் கொண்டார். "அய்க்கியம் மற்றும் நிலையான தன்மை' என்ற தனது முழக்கத்தின் அடிப்படையில் மிக விரைவில் தனது இழந்த உரிமைகளை மீட்டுக் கொண்டார். 1978இன் பிற்பகுதியில் மாவோவிற்குப் பின் சீனாவின் பெரும் தலைவராக உருவானார்.

வெளியில் சோசலிசத்தின் மீதான தங்களுடைய கடப்பாட்டைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த அதே வேளையில், டெங்கும் அவருடைய கூட்டாளிகளும் அவர்கள் கூறிவந்த சந்தைச் சோசலிசத்தை உருவாக்குவதில் முனைந்தனர். மாவோவின் திட்டங்கள் அதிகமான அளவு சித்தாந்தத் தன்மை கொண்டனவாகவும், புறநிலை உண்மைகளை அறிவியல் நோக்கில் புரிந்துகொள்ளாதன வாகவும் இருந்ததால், சீனாவில் பொருளாதார நிலை மோசமடைந்தது என அவர்கள் கூறினார்கள். எனவே நாட்டின் உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுப்பதே கட்சியின் தலையாய கடமை என்றும். அதற்கு சந்தைச் சக்திகளை அறிமுகப்படுத்தவேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டார்கள். சந்தைச் சக்திகளால் மட்டும்தான் சீனாவின் தற்போதைய தேக்க நிலையை உடைத்து, சோசலிச உற்பத்தி உறவுகளைக் கட்டமைப்பதற்குத் தேவையான பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று அவர்கள் கூறினார்கள். அப்போதுதான் டெங்சியோபிங், "பூனை சிவப்பா? வெள்ளையா? என்று பார்க்காதே; அது எலியைப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்' என்று கூறினார். சோசலிசப் பாதையிலிருந்து முதலாளியச் சந்தைப் பொருளாதாரத்திற்குத் திசைமாறிச் செல்வதற்கு டெங் அளித்த புது விளக்கம் அது.

1978 திசம்பரில் டெங்சியோபிங் தலைமையில் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் 11ஆவது பேராயம் கூடியது. "சீனாவில் வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. உற்பத்தி உறவுகளை வலுப்படுத்த உற்பத்திச் சக்திகளை (நிலம், மூலப் பொருள்கள், உற்பத்திக் கருவிகள், தொழில்நுட்பம் + உழைப்புச் சக்தி) வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கான சிறந்தவழி சந்தைகளை ஆக்க முறையிலும் நெகிழ்வான தன்மையிலும் பயன்படுத்துவ தாகும்' என்று பேராயத்தில் முடிவு செய்யப் பட்டது. இதற்கு சந்தை சோசலிசம் எனப் பெயரிடப்பட்டது.

சீர்திருத்த நிகழ்வுப் போக்கு : முதற்கட்டம் (1978-1989)

இச்சீர்திருத்தங்கள் 1979இன் தொடக்கத்தில் தேர்ந் தெடுக்கப்பட்ட நகரப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. உற்பத்தியின் முதன்மையான நோக்கம், இலாபமே என்ற நிலை உருவாக்கப்பட்டது. எனவே சில தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சாலைகளில் வாழ்நாள் முழுவதும் வேலை என்ற ஒப்பந்தங்களை இரத்துச் செய்யவும், தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தவும், திறனற்ற சில தொழிற்சாலைகளை மூடவும் நிர்வாகிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

1983இல் அரசு ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி, அரசுத் தொழில் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம். அத் தொழிலாளர்களுக்குப் பணிப் பாதுகாப்புக் கிடையாது. நிர்வாகம் அவர்களை எப்பொழுது வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்கலாம். இவ்வாறாக உழைப்புக்கான சந்தை உருவாக்கப்பட்டது. உழைப்பு ஒரு சரக்காக-பண்டமாக மாற்றப்பட்டது.

அதே சமயத்தில், நகர்ப்புறக் கூட்டு நிறுவனங்களுக்கு அரசு ஆதரவு அளித்தது. எளிய நுகர்வுப் பொருள்களை உற்பத்தி செய்யும் சில பெரிய தொழிற்சாலைகளும், மரபான கைவினைப் பொருள்களை அதிக அளவு உற்பத்தி செய்யும் சிறிய தொழில் நிறுவனங்களும், ஒப்பீட்டளவில் பெரிய சில்லறை விற்பனை நிலையங்களும், சேவை நிறுவனங் களும் அவற்றில் அடங்கியிருந்தன. நகர்ப்புறக் கூட்டு நிறுவனங்கள் தொடக்கத்தில் அரசுத் துறையைச் சார்ந்திருந் தாலும், அவை இலாப அடிப்படையில் அமைந்ததாக இருந்தன. அவற்றில், பல தனியார் நிறுவனங்களாக இருந்த போதிலும், பொருள் விற்பனைக்கும், கடனுக்கும், வரிச் சலுகைக்கும், போலியான "சிவப்புத் தொப்பியை' அணிந் திருந்தன. பெயரளவில் மட்டுமே அவை கூட்டு நிறுவனங்களாக இருந்தன. நடப்பில் தனியார் நிறுவனங்களாகச் செயல் பட்டன. கூட்டு உழைப்பாளிகள் அந்நிறுவனங்களில் கூட்டு உடைமையாளர்களாக இல்லை. மாறாக முழுவதும் கூலித் தொழிலாளர்களாக இருந்தார்கள். மேலும் அரசுத் தொழிலாளர்களுக்கு இருந்த வேலைப் பாதுகாப்பும், பயன்களும் அவர்களுக்கு இல்லை.

சீர்திருத்த நிகழ்வுப் போக்கின் தொடக்கத்திலேயே அந்நியப் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்கு அரசு குறிப்பிடத்தக்க அளவில் முதன்மை தந்தது. முதலாளியத் திசை அமைவைக் கொண்ட சந்தைக் கொள்கைகளை அறிமுகப்படுத்தவும், அவற்றைச் சட்டப்பூர்வமாக மாற்றவும் அந்நிய நிறுவனங்கள் சிறந்த ஊடகமாக அமையும் எனக் கட்சி நம்பியது. அரசுத் தொழிற்சாலைகளை உடனடியாக இலாபம் அதிகரிக்கும் நிறுவனங்களாக மாற்றமுடியும் என்று கட்சி நம்பவில்லை. ஏனெனில் நிர்வாகிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சந்தை நிகழ்வுப் போக்கில் அனுபவம் இல்லை. மேலும் பலர் அவற்றைப் பல்வேறு காரணங் களுக்காக எதிர்ப்பார்கள் என்று கட்சித் தலைமை கருதியது.

எனவே 1979இல் டெங்கியோபிங், "நுழைவுச் சலுகைக் கொள்கையை அறிவித்தார். அதன்படி, ஹாங்காங், தாய்வானுக்கு அருகில் உள்ள குவாங்டாங் மற்றும் ஃபுஜியன் மாகாணங்களில் நான்கு பெரிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. "அந்நிய முதலீடு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்; புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டு வரும்; சந்தைப் பொருளாதாரத்தில் எவ்வாறு செயல்படுவது என்பதைக் கற்றுக் கொள்ளப் "பள்ளிகளாகச் சேவை புரியும்' என்று டெங் கூறினார்.

கம்யூன்கள் கலைப்பு

1980 செப்டம்பரில் சீர்திருத்த நிகழ்வுப் போக்கின் இன்னொரு முக்கிய நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. வேளாண்மை உற்பத்தியில் இருந்த கூட்டுத் தன்மையைக் கலைக்க அரசு ஆணையிட்டது. எனவே கூட்டுப் பண்ணை வேளாண்மை முறை கைவிடப்பட்டது. கம்யூன் அடிப்படை யிலான அமைப்புக்குப் பதிலாக குடும்ப அடிப்படையிலான தனியார் உற்பத்தி அமைப்பு நடைமுறைக்கு வந்தது. தனிக்குடும்பங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிலம் ஒதுக்கப்பட்டது. (House hold responsibilities). அது சமயம் கிராமப்புறக் கம்யூன்களில் 30 விழுக்காடு மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அடுத்த நிலையிலிருந்த 30 விழுக்காடு கம்யூன்களில் சில நிர்வாக-கட்டமைப்புக் குறை பாடுகள் இருந்தன. அடுத்த 30 விழுக்காடு கம்யூன்கள் மோசமாக இருந்தன. மிகவும் மோசமான நிலையில் இருந்த இக் கம்யூன்களின் உழவர்கள் மட்டுமே குடும்பப் பொறுப்பு வேளாண்மை முறையை வரவேற்றனர்; குடும்பப் பொறுப்பு வேளாண்மையில் அவர்கள் விளைவிக்கும் பொருள்களில் ஒரு குறிப்பிட்ட அளவை அரசு நிர்ணயிக்கும் விலையில் அரசுக்கு விற்கவேண்டும். மீதியைச் சந்தையில் விற்பனை செய்துகொள்ளலாம்.

1983 இறுதியில் ஏறக்குறைய 98 விழுக்காடு உழவர் குடும்பங்கள் இந்தப் புதிய அமைப்பின்படிச் செயல்பட்டன. கோட்பாட்டளவில் நிலம் பொதுச் சொத்தாக இருந்தது. ஆனால் நடைமுறையில் அவற்றைப் பயன்படுத்துவதற்காக ஒப்பந்த முறையில் நிலம்பெற்ற உழவர் குடும்பங்களின் தனிச் சொத்தாக அது மாறியது. 1983 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசின் புதிய விதியின்படி, ஒப்பந்தத்தின்மூலம் நிலத்தைப் பெற்றிருப்பவர்கள் உற்பத்திக் காகக் கூலித் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்ளலாம் அல்லது குத்தகை விவசாயிகளுக்காக அவர்களின் நிலத்தைக் குத்தகைக்கு விடலாம். 1980களின் இறுதியில், ஒப்பந்தம் மூலம் நிலங்களைப் பெற்றவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடவும், விற்கவும், அல்லது தமது வாரிசுகளுக்கு வழங்கவும் முழு உரிமை பெற்றவர்களாக மாறினார்கள்.

வேளாண்மைக் கொள்கையில் ஏற்பட்ட இப்படிப்பட்ட மாற்றங்களால் 1978க்கும் 1984க்கும் இடையில் வேளாண்மை உற்பத்தி அதிகரித்தது. வீரிய விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. மாவோ காலத்தில் இவற்றின் பயன்பாட்டால் நீர், நிலம், சுற்றுச் சூழல் பெருமளவில் மாசு அடையும் எனக் கருதி இவற்றின் பயன்பாடு மிகவும் அளவுபடுத்தப்பட்டிருந்தது. 1978-84 காலக் கட்டத்தில் வேளாண்மை வளர்ச்சி பெருகியது. வேளாண்மை வளர்ச்சியின் பொற்காலம் இது எனப் போற்றப்பட்து.

இந்த வெற்றிக்கான காரணம், தனியார் மயப்படுத்துதல், மற்றும் சந்தைப் படுத்துதல் கொள்கைகள்தாம் எனச் சீன அரசாங்கம் கூறியது. ஆனால், வேளாண்மை விளை பொருள்களுக்கு சீன அரசாங்கம் அதிக விலை கொடுத்ததும், வேளாண்மை மற்றும் கிராமப்புறம் சார்ந்த இலகுரகத் தொழில்துறைக்கு முதலீட்டு நிதி அளித்து ஆதரித்துதுமே வளர்ச்சிக்கான உண்மையான காரணங்களாகும். இந்த வளர்ச்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை. 1985 வாக்கில் வேளாண்மை வளர்ச்சி தேக்கமடைந்தது. கம்யூன் அமைப்பு மறைந்ததால் சோசலிச அடிப்படையிலான கிராமப்புற உள்கட்டுமானமும், சமூகப் பாதுகாப்பு முறையும் அழிந்தன. அதிக அளவில் இரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தியதால் நிலத்தின்மண் வளம் குன்றி, தானிய உற்பத்தி குறைந்தது. உழவர்கள் தங்களையும் தங்களுடைய குடும்பங்களையும் காப்பாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதனால் நிலங்களைக் கை விட்டு கிராமப்புற அல்லது நகர்ப்புறத் தொழிற்சாலைகளுக்கு வேலை தேடிச்சென்றனர். கம்யூன்கள் கலைக்கப்பட்டதால் கிராமப்புற மக்கள் கம்யூன்கள் மூலம் பெற்றுவந்த இலவயக் கல்வி, மருத்துவ ஏந்துகள், முதலானவற்றை இழந்தனர். இவை படிப்படியாகத் தனியார் மயமாயின.

நகர மற்றும் கிராமத் தொழில் நிறுவனங்கள் (TVEs)

1982 திசம்பரில் கொண்டுவரப்பட்ட புதிய அரசிய லமைப்புச் சட்டம், முன்பு கம்யூனிடமிருந்த அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரங்களைப் புதியதாக உருவாக்கப்பட்ட நகர மற்றும் கிராம அரசாங்களுக்கு வழங்கியது. இந்த அரசாங்கங்கள் கம்யூனின் தொழிற்சாலைகளைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு நகர மற்றும் கிராமத் தொழில் நிறுவனங்களாக அமைத்தது.

நகர்ப்புற மற்றும் கிராமத் தொழில் நிறுவனங்களின் உருவாக்கத்தை சீனச் சீர்திருத்த நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்றாக முற்போக்காளர்கள்-குறிப்பாக சீனாவுக்கு வெளியில் இருந்த முற்போக்காளர்கள் கருதி னார்கள். ஏனெனில் மாவோ காலத்தில் இருந்த மத்தியத் துவப்படுத்தப்பட்ட-கீழ்நிலையில் சனநாயகமற்ற நிலைக்கு இவை சிறந்த மாற்று எனக் கருதினார்கள். இலாப அடிப்படை யில் இவற்றை இயக்குவதற்கு இவற்றின் நிர்வாகிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அரசு நிதி உதவி வழங்கி ஊக்குவித்தது. திறன் குறைவாகவும், உழைப்பு அதிகமாகவும் தேவைப்படும்-மக்கள் பெருமளவில் பயன்படுத்தும் பொருள்களை நகர்ப்புற-கிராமத் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்தன. மலிவான விலையில் வெளிநாடுகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்யும் அளவிற்குத் தேர்ச்சியும் வளர்ச்சியும் பெற்றன. மின்னியல் பொருள்கள், (எலெக்ட்ரானிக் பொருள்கள்) ஆயத்த ஆடைகள், நவீன பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், எழுது பொருள்கள் முதலானவை இத் தொழில் நிறுவனங்களில் உருவாக்கப்பட்டன.

நகர மற்றும் கிராமத் தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் மிகவேகமாக வளர்ந்தன. 1987இல் 15 இலட்சமாக இருந்த அவற்றின் எண்ணிக்கை 1993 இல் 250 இலட்சமாக உயர்ந்தது. 1978இல் அவற்றில் பணிபுரிந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 280 இலட்சமாக இருந்தது. பிற்காலத்தில் 1230 இலட்சமாக இது உயர்ந்தது.

ஆனால், அவை ஒருபோதும் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அமைப்பாகவோ, சோசலிசத்தை மேல் எடுத்துச் செல்லும் அமைப்பாகவோ செயல்படவில்லை. ஒரு சில முடிவுகளை எடுப்பதில் தொழிலாளர்கள் பங்குகொண்ட கூட்டமைப்பாக இருந்தாலும், நடைமுறையில், மறைமுகமாகத் தனியாரின் செயல்பாடாகவே இருந்தன. பல இடங்களில் அரசாங்கத்தின் தலைவர்கள அவற்றை நடத்துகின்றனர். நிர்வாகிகளை நியமிக்கின்றனர். சில கூட்டு முயற்சியாக இருந்தாலும் இயக்குநர்கள் குழுவில் தங்கள் ஆதிக்கத்தின் வாயிலாக அந்நிய மூலதனம் அவற்றில் அதிகாரம் செலுத்தும் நிலை இருக்கிறது.

இவற்றில் வேலை செய்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் தற்காலிகத் தொழிலாளர்களாகவே இருந்தனர். அரசுத் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்குள்ள உரிமைகள் பாதுகாப்பு விதிகளின் கீழ் இத் தொழிலாளர்கள் வராததால், இவர்களின் கூலி குறைவாகவே இருந்தது. இந் நிறுவனங் களில் தொழிற் சங்கங்கள் இல்லை. அல்லது சில இடங்களில் மட்டும் உள்ளன. தொழிலாளர்களின் நலன்கள், உரிமை கள், உடல்நலம், பாதுகாப்பு ஆகியவற்றைக் காப்பாற்றுவதில் இந்நிறுவனங்களின் பங்கு குறைவாகவே இருந்தது.

நகர மற்றும் கிராமப்புறத் தொழில் நிறுவனங்கள் தாம் தயாரிக்கும் பொருள்களை, அரசு நிர்ணயித்த விலையில் அரசுக்கு அளிக்கவேண்டிய அளவுபோக, மீதியை வெளிச் சந்தையில் விற்க அனுமதிக்கப்பட்டன. இந்த இரட்டை விற்பனை முறை ஊழலை வளர்த்தது. அதே சமயம் இந் நிறுவனங்களின் நிர்வாகிகள் உற்பத்தியைப் பெருக்கிட ஊக்குவித்தது.

சீர்திருத்த நிகழ்வுப் போக்கு: இரண்டாம் கட்டம் (1984-91)

இரண்டாவது கட்டச் சீர்திருத்தம் சந்தைச் சக்திகளையும், அரசு-சாராத உற்பத்தியையும் அதிக அளவில் சார்ந்து இருக்கக்கூடிய கொள்கை மாற்றத்தை உள்ளடக்கியதாக இருந்தது. புதிய சீர்திருத்தங்கள், அரசுத் தொழிற்சாலைகள் மீதான மத்தியக் கட்டுப்பாட்டைக் குறைத்தது. அவற்றிற்கான ஆதரவையும் குறைத்தது. கடந்த காலத்தில் அரசுத் தொழில் நிறுவனங்கள் தமக்குத் தேவையான அனைத்து நிதியையும் அரசிடமிருந்து பெற்றன. தற்போது அரசுத் தொழில் நிறுவனங்கள் தமக்குத் தேவையான நிதியை, தமது வருமானத்திலிருந்து வரிகள் செலுத்தியதுபோக எஞ்சியுள்ள நிதியிலிருந்தும். அரசு வங்கிகளிடமிருந்து வங்கிக் கடனாகவும் பெற்றுக்கொள்ளும் முறை கொண்டுவரப்பட்டது.

முதலீடு செய்தல் மற்றும் உற்பத்தி முறையை வடிவமைத்தல் ஆகியவற்றிற்குச் சந்தைச் சக்திகளைச் சார்ந்திருத்தல் என்று அரசு முடிவு செய்ததால், பொருள்களின் விலைகளை சந்தைச் சக்திகளே நிர்ணயிக்கும் நிலை ஏற்பட்டது. 1984இல் கட்சியின் 12ஆவது பேராயத்தில் இதற்கு ஏற்பளிப்பு வழங்கப்பட்டது. ஆயினும் அடிப்படைத் தொழில்துறைப் பொருள்களான இரும்பு, நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்கள் போன்ற முக்கியமான தொழில் துறைப் பொருள்களுக்கு மட்டும் மய்ய அரசாங்கத்தால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 1987இல் 14 கடற்கரை நகரங்கள் அந்நிய முதலீட்டிற்குத் திறந்துவிடப் பட்டன. ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு முதன்மை தரப் பட்டது. அந்நிய நேரடி முதலீட்டிற்கான ஊக்குவிப்புகள் அளிக்கப் பட்டன. எனவே ;விரைவில் உலகில் அந்நிய முதலீட்டை அதிகம் பெறும் இரண்டாவது நாடாக சீனா உருவாயிற்று. முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது.

1985இல் டெங்சியோபிங், "சோசலிசம் என்பது உற்பத்தி யின் வளர்ச்சி மற்றும் பொதுவான வளமைப் பெருக்கம்' என்றார். தொடக்கத்தில், நாட்டின் சில பகுதிகளும், சில பிரிவினரும் பணக்காரர்கள் ஆவார்கள்; பின்னர் இவ்வாறு வளர்ந்த பகுதிகளும், மக்கள் பிரிவினரும் மற்ற பகுதிகளும் மக்களும் வளர்வதற்கு உதவியாக இருப்பார்கள். இறுதியில் பொதுவான வளர்ச்சி என்ற குறிக்கோள் எய்தப்படும் என்று சோசலிசத்திற்கு முதலாளிய விளக்க உரை எழுதினார்.

இலாபத்தைப் பெருக்குவதற்காக அதிக சுதந்தரம் கொடுக்கப்பட்டதால், அரசு நிறுவனங்களும், நகர-கிராமப் புற நிறுவனங்களும் தங்களுடைய பொருள்களின் விலையை உயர்த்தின. தம்முடைய உற்பத்தியை அதிகரிப்பதற்காகக் கடன் வாங்கத் தொடங்கின. உள்ளூர் அரசாங்கங்களும் உழவர்களிடமிருந்து நிலத்தை வாங்கி அவற்றைத் தொழில்துறைக்காகப் பயன்படுத்தத் தொடங்கின.

1978-84 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு 15 விழுக்காடாக அதிகரித்து வந்த வேளாண்மை வருமானம் 1985-88 காலக்கட்டத்தில் 5 விழுக்காடு என்ற அளவில் குறைந்தது. 1989 - 91 காலக்கட்டத்தில் அது வெறும் 2 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. 1984-87 காலக் கட்டத்தில் ஆண்டுக்கு 37.7 விழுக்காடு என்ற அளவில் வளர்ந்து வந்த கிராமப்புற தொழிற்சாலைகளின் உற்பத்தி, அதனைத் தொடர்ந்துவந்த ஆண்டுகளில், பணவீக்கத் தாலும், நகர்ப்புறத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அரசின் கொள்கை மாறியதாலும் அதிகமான அளவில் நெருக்கடிகளை எதிர்கொண்டன. பணவீக்கம் நகர்ப்புறத் தொழிலாளர்ளையும் கடுமையாகப் பாதித்தது. 1987இல் 20 விழுக்காடு நகர்ப்புறக் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கைத் தரங்களில் வீழ்ச்சியடைந்ததாக அரசு ஒப்புக்கொண்டது.

நகர மற்றும் கிராமப்புறத் தொழில் நிறுவனங்கள் வங்கிக் கடன்களை அதிகம் சார்ந்திருந்ததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கிராமப்புறத்தில் வேலையின்மை, கடுமையாக அதிகரித்தது. பெரும்பாலோர் வேலை தேடி நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். நிலவும் பொருளாதார நிலைமைகளுக்கு எதிராக நகர்ப்புறத் தொழிலாளர்களின் போராட்டம் அதிகரித்தது. இதை எதிர்கொள்ள அரசாங்கம் கடுமையான வழியை மேற்கொண்டது. இந்த வரலாற்றுச் சூழலில்தான் சீனாவில் சனநாயக இயக்கம் தோன்றியது. 1989இல் தலைநகர் பெய்ஜிங்கில் தியன்னன்மென் சதுக்கத்தில் தொழிலாளர்களும் மற்ற பிரிவு மக்களும் தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்திடக் கூடினர். அரசு இவர்களைக் கடுமையாக அடக்கி ஒடுக்கியது.

முதலாளியம், தன் இயல்பிலேயே எவ்வாறு வறுமையை யும், ஏற்றத்தாழ்வையும், நெருக்கடிகளையும், தன்னுடைய பொருளாதார வளர்ச்சியின் நிகழ்வுப் போக்கில் உண்டாக்கு கிறது என்பது சீனாவில் சந்தைப் பொருளா தாரத்தை நடைமுçற்பபடுத்தத் தொடங்கிய பத்தாண்டு காலத்திற் குள்ளாகவே திட்டவட்டமாக வெளிப்பட்டது. இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக மேலும் மேலும் முதலாளியப் பாதையையே தழுவும் நிலை சீனாவில் ஏற்பட்டது.

சீர்திருத்த நிகழ்வுப் போக்கு : மூன்றாவது கட்டம் (1991 முதல் இன்றுவரை)

1991இல் டெங்சியோபிங், "பணத்தை எது கொண்டு வந்தாலும் அது சீனாவுக்கு நல்லதே' என அறிவித்தார். 1992 அக்டோபர் மாதம் கட்சியின் 14ஆவது பேராயம் "சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசப் பொருளாதாரத்தை நிறுவுதல்' என்கின்ற தன் முடிவை அறிவித்தது. ஆனால் உண்மையில் ஏற்கெனவே சீனாவில் சந்தைகள் சுதந்தர மாகச் செயல்பட்டுவந்தன. இப்பேராயத்தின் மிக முதன்மையான முடிவு, சீனப் பொருளாதாரத்தின் அச்சாணியாக அதுவரை விளங்கிவந்த அரசுத் தொழிற்சாலைகள் மீதான அரசின் கட்டுப்பாட்டைக் கைவிடுவது என்பதாகும்.

இதன்படி, குறிப்பிட்ட பெரிய மற்றும் நடுத்தரத் தொழிற் சாலைகளை வரையறுக்கப்பட்டப் பொறுப்புடைய அல்லது பங்குதாரர் நிறுவனங்களாக மாற்றுவது என அரசு திட்டமிட்டது. வரையறுக்கப்பட்டப் பொறுப்புடைய நிறுவனங்கள் என்பவை இரண்டு பேர் முதல் 50 பேர் வரையிலான பங்கு தாரர்களைக் கொண்டவை. 50 பேர்களுக்கும் மேலான பங்குதாரர்களைக் கொண்டவை பங்குதாரர் நிறுவனங்கள் எனப்படும். அவை பங்குகளைப் பொது வெளியீடாக விற்பனை செய்யும். மய்ய அரசால் நடத்தப்பட்டு வந்த நூறு தொழிற்சாலைகளும் உள்ளூர் அளவில் அரசால் நடத்தப்பட்டுவந்த 2500 தொழிற் சாலைகளும் இவ்வாறு மாற்றப்படுவதற்காகத் தேர்ந்தெடுக் கப்பட்டன. 1998 இறுதிக்குள் அவ்வாறே மாற்றப்பட்டன.

தொழிற்சாலையின் பங்குகள் தொழிற்சாலையின் பணியாளர்ளுக்கு மட்டுமே விற்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் பணியாளர்கள் என்ற சொல் நிர்வாகிகளையும் உள்ளடக்கியதாகும். எனவே நடைமுறையில் இலாபம் தரக்கூடிய தொழிற்சாலைகள் பெரும்பாலும் நிர்வாகிகளுக்கு விற்கப்பட்டன. அதே சமயத்தில், தொழிலாளர்கள் தங்களுடைய வேலைகளைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தால் இலாபமற்ற தொழிற் சாலைகளை வாங்க நேரிட்டது.

உண்மையில் இந்நிகழ்வுப் போக்கில், பொது வுடைமைக் கட்சி ஊழியர்கள் தங்களுடைய உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்தி, அரசுச் சொத்துக்களைக் கடனாகப் பெற்றார்கள். தங்களை முதலாளியாக அமர்த்திக் கொண்டார்கள். "சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம்' என்கிற பதாகையின்கீழ் குண்டந்தடியால் தொழிலாளர் களின் "இரும்புச் சோற்றுப் பானைகளை' உடைத்தார்கள். வேலை செய்வதற்கான உரிமை, உறைவிடம், உணவுப் பங்கீடு, பிற நன்மைகள் அனைத்தையும் தொழிலாளர்களிட மிருந்து பறித்தார்கள். கட்சியில் இருந்தவர்களாலும் தொழில் நிறுவனங்களாலும் நடத்தப்பட்ட இந்த "சொத்து அபகரிப்பு' பல்வேறு வழிகளில் நடைபெற்றது.

மோசடி செய்தல், உள்நாட்டிலும் ஹாங்காங்கிலும் உள்ள சுதந்தரமான தொழில் நிறுவனங்களுக்குச் சொத்துக்களைத் தேர்வு செய்து மாற்றம் செய்தல், வரியைத் தவிர்த்தல், வரியை ஏய்த்தல், கூட்டுத் தொழிற்சாலைகளை (பங்குதாரர் தொழிற்சாலைகளுக்கான பெயர் இது) உருவாக்கும்போது அரசின் சொத்துகளுக்குக் குறைவான மதிப்பீடு செய்தல். கூட்டுப் பங்கு கொண்ட கூட்டுறவு வடிவங்கள் போன்ற பங்குத் தொழிற்சாலை வடிவங்களைச் சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல், சட்ட விரோதமாக அரசுச் சொத்துக்களை விற்றல், அல்லது சட்டபூர்வமாக மதிப்பைக் குறைத்துக் குறைவான விலைக்கு விற்றல், மோசமான வங்கிக் கடன்கள் மற்றும் வங்கிக் கடன் வழங்கும் முறை முதலான பல்வேறு வழிகளில் சொத்து அபகரிப்பு நடந்தது.

வழிமுறை எதுவாயினும், சொத்து அபகரிப்பானது, அரசுச் சொத்தை மூலதனச் சொத்தாக மாற்றியது. விடு விக்கப்பட்ட உழைப்புச் சக்தியைச் (பெரும் எண்ணிக்கையிலான கூலித்தொழிலாளர்களை) சுரண்ட அது பயன்பட்டது. "ஆரம்ப மூலதனக் குவிப்பு' என மார்க்சு எதைக் குறிப் பிட்டாரோ. அது நடந்தது. ஆனால் அது சோசலிசச் சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் நடந்தது. "சோசலிசத்தைக் கட்டமைப்பதற்காக முதலாளியத்தைப் பயன்படுத்துவது' என்று சீர்திருத்தக் காரர்கள் கூறிவந்தனர். ஆனால் நடைமுறையில், சந்தை சோசலிசம், "முதலாளியத்தைக் கட்டமைப்பதற்காக, சோசலிசத்தைப் பயன்படுத்திக் கொண்டது'.

முதலாளியத்துக்காகக் கட்சியின் உந்துதல் இராணுவ அதிகாரிகளாலும், மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளாலும் உவப்புடன் ஆதரிக்கப்பட்டது. படிப்படியாக அரசின் அனைத்துச் சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் அனைத்தின் மீதான அரசுடைமை மற்றும் கூட்டுடைமை நீக்கப்பட்டது. 2001இல் உற்பத்தித் தொழிலில் அமர்த்தப்பட்டிருந்த மொத்தப் பணியாளர்களில் 15 விழுக்காட்டினர் மட்டுமே அரசுத் தொழிற்சாலைகளில் இருந்தனர். மற்றும் உள்நாட்டு வணிகத்தில் வேலை செய்துவந்த மொத்தப்பேரில் 10 விழுக்காட்டினருக்கும் குறைவான பேரே அரசுத் துறையில் இருந்தனர்.

சீனாவில் சொத்துடைமை-உற்பத்திச் சாதனங்களை உடைமையாகப் பெற்றிருத்தல் என்ற அடிப்படையில் புதிய வர்க்கம் வலுவாக வளர்ச்சி பெற்றது. 2002இல் முதலாளி களும் கட்சியில் உறுப்பினராகும் வாய்ப்பைத் தந்தது. சீன அரசு இப்பொழுது மே நாளை செல்வச் செழிப்பு மிக்க சுரண்டல்பேர் வழிகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாகக் கொண்டாடுகிறது. 2002, மே நாள் விழாவில், அகில சீனத் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு, "நான்கு தனியார் நிறுவனங்களின் தலைவர்களுக்கு' (முதலாளிகளுக்கு) பதக்கங்கள் வழங்கியது. அதே சமயத்தில், மாவோ ஒரு காலத்தில் தனது புரட்சியின் தலைமையிடமாகக் கொண் டிருந்த வடமேற்கு மாகாணமான சாங்சியில் 17 வணிகர்கள் "முன்மாதிரித் தொழிலாளர்கள்' என அறிவிக்கப்பட்டனர்.

1998இல் கிராமங்களில் குடும்பங்களுக்கு அளிக்கப் பட்ட நிலத்தின் ஒப்பந்தக்காலம் 30 ஆண்டுகள் என ஆக்கப் பட்டது. அதனால் உழவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடல் அதிகமாயிற்று. விற்பது என்பதும் பெருமளவில் நடந்தது. புதிய முதலாளிகள் இந்நிலங்களை வாங்கித் தொழில்களுக்காகப் பயன்படுத்தினர்.

அந்நிய முதலீடு :

தனியார்மயமாக்கலுக்காகத் திட்டமிடப்பட்ட நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் அளவுக்கு உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் போதிய நிதி ஆதாரம் இல்லை. எனவே அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. மேலும் அந்நிய நிறுவனங்கள் பொருளாதாரம் முழுவதிலும் இலாபத்தை அதிகரிக்கும் பண்பை வளர்க்கும் என்று கருதப்பட்டது. மேலும் அவை சீனாவில் அதிகரித்துவரும் வணிகப் பற்றாக்குறையைச் சரிசெய்யும் வகையில் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்றும் நம்பப்பட்டது.

ஆகவே, நாட்டின் புதிய பகுதிகளையும், தொழில் களையும் அந்நிய முதலீட்டுக்காகத் திறந்துவிட்டது அரசு. 1986 முதல் 1999 வரையிலான காலத்தில் அந்நிய நேரடி முதலீட்டில் 90% கடற்கரைப் பகுதிகளில் முதலீடு செய்யப் பட்டது. தொடக்க காலத்தில் அந்நிய முதலீடு வெளிநாட்டில் வாழும் சீனர்களிடமிருந்து வந்தது. ஆனால்1990 முதல் வட அமெரிக்கா, அய்ரோப்பிய, சப்பானிய முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்கைப் பெரும் அளவில் அதிகரித்தனர். இந்தக் காலக் கட்டம்வரை பெரும் பாலான அந்நிய நேரடி முதலீடுகள் தயாரிப்புத் தொழில்களிலேயே ஈடுபடுத்தப்பட்டு வந்தன.

ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் வாழும் சீனர்கள் முதன்மையாக மனித உழைப்பு அதிகம் தேவைப்படுகின்ற-குறைவான கூலி வழங்கக்கூடிய ஏற்றுமதித் தொழில்களில் முதலீடு செய்தனர். இன்னொரு பக்கம், சப்பான் நிறுவனங்கள் சப்பான் சந்தைக்குத் தேவையான இடைநிலைத்தரப் பொருள்களையும், உயர்தரப் பொருள்களையும் தயாரிப்பதில் முதலீடு செய்தன. அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நிறுவனங்கள், சீனச் சந்தையில் விற்கக்கூடிய பொருள்களைத் தயாரிப்பதில் முதன்மையாக முதலீடு செய்தன. குறைவான கூலி வழங்கி ஏற்றுமதிக்காகப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்களில் முதலீடு செய்வதில் அமெரிக்க நிறுவனங்கள் அதிக அக்கறை காட்டின.

இந்த வகையான முதலீட்டின் விளைவாக தயாரிப்புப் பொருள்களின் மொத்த விற்பனையில் 1990இல் 2.3% ஆக இருந்த அந்நிய நிறுவனங்களின் பங்கு 1995இல் 14.3% ஆகவும், 2000இல் 31.29% ஆகவும் வேகமாக அதிகரித்தது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது யாதெனில், அந்நிய முதலீட்டாளர்கள் அரசின் ஆதரவுடன் சீனப் பொருளா தாரத்தை ஓர் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றி யமைக்க உதவினார்கள் என்பதுதான் 1990இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% ஆக இருந்த ஏற்றுமதி 2002இல் 26% ஆக உயர்ந்தது.

மேலும் மேலும் அதிகமான அளவில் அந்நிய நேரடி முதலீடுகள் அரசு நிறுவனங்களை வாங்கி வருகின்றன. அதன் மூலம் சீனருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கு வதற்குப் பதிலாக வேலைகளை அழித்து வருகின்றன. அந்நிய நேரடி முதலீடுகள் புதிய தொழிலைத் தொடங்கும் போது, ஏற்கெனவே அரசு நிறுவனங்களிடமிருந்த சந்தை களைக் கைப்பற்றுவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளன. அதன் விளைவாக சில புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதே சமயத்தில், அதைவிட அதிக அளவில் வேலை இழப்புகள் ஏற்படுகின்றன. காரல் மார்க்சு ஒருமுறை கூறியதுபோல, "முதலாளிகளுக் கிடையிலான தொழில் யுத்தம் நூதனமான தன்மையைக் கொண்டுள்ளது. தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைவிட, அவர்களை வேலையிலிருந்து விலக்குவதன்மூலமே அதிகமான வெற்றிகள் ஈட்டப் படுகின்றன. படைத் தலைவர்களில் (முதலாளிகள்) யார், அதிகமான தொழில்துறைத் தொழிலாளர்களை விலக்குவது என்பதில் ஒருவரோடு ஒருவர் போட்டியிடுகின்றனர்'.

வேளாண்மை நலிவடைந்து விட்டதாலும், நகர-கிராமத் தொழில் அமைப்புகள் சீர்குலைந்ததாலும் சீனாவில் கிராமப் புறங்களில் 30 கோடிப் பேர் வேலையில்லாதவர்களாக இருக்கின்றனர். கிராமங்களிலிருந்து வேலைதேடிச் சென்றவர்களில் 20 கோடிப் பேர் நிலையான வேலையின்றி. மிகக் குறைந்த கூலிக்காக இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளனர். சீனாவில் ஆண்டு வளர்ச்சி வீதம் 10 விழுக்காட்டிற்கு மேல் கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வருவதாகத் தம்பட்டம் அடிக்கப்படுகிறது. ஆனால் இந்த வளர்ச்சியால், கீழ்நிலையில் உள்ள இந்த 50 கோடி மக்களுக்கு உயிர் வாழ்தலுக்கான அடிப்படைத் தேவைகள்கூடக் கிடைக்கவில்லை.

உலக வணிக அமைப்பில் இணைதல்

ஏற்றுமதியின்மீதும், அந்நிய நேரடி முதலீட்டின் மீதும் அதிகரித்து வந்த சார்பினால், சீன அரசாங்கம், உலக வணிக அமைப்பில் இணையவேண்டிய தேவை உருவாயிற்று. ஆனால் அதற்காகச் சீனா பெரும் விலையைத் தர நேர்ந்தது. உலக வணிக அமைப்புக்குள் காலடி வைப்பதற்காக, அமெரிக்காவுடன் சீனா "இயல்பான வணிக உறவுகள்' (Normal trade relations) என்னும் ஒப்பந்தத்தில் கையயழுத்திட்டது. அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தின்படி, பெரும் பகுதியான தொழில்துறை மற்றும் வேளாண்மைப் பொருள் களின் இறக்குமதி, விநியோகம், ஏற்றுமதி ஆகியவற்றிலும், தகவல் தொடர்புகளின் முக்கியமான பகுதிகள், மொத்த விற்பனை, பராமரிப்பு, பழுதுபார்த்தல் ஆகியவற்றிலும் உள்ள அரசின் ஏகபோக ஆதிக்கத்தை மூன்று ஆண்டு களுக்குள் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள சில பொருள்களைத் தவிர மற்ற வணிகப் பொருள்களுக்கும், ஒவ்வொரு துறையிலும் உள்ள சேவைக்கும் உரிய வேலைகளைச் சந்தைச் சக்திகளே தீரமானித்துக் கொள்வதற்கு சீனா அனுமதித்தது. உலக வணிக அமைப்பின் நிபந்தனைகள் திட்டமிட்ட பொருளாதாரத்தின் கடைசி எச்சங்களையும் மீண்டும் திரும்பப் பெற முடியாத அளவுக்கு முழுமையாக அழிப்பதாக உள்ளன. மேலும் உண்மையான பொருளாதார இறை யாண்மையை ஏகாதிபத்தியத்தின் காலடியில் வைப்பதற்கு வழி வகுப்பனவாகவும் உள்ளன.

தொழிலாளர் நிலை

கம்யூன்கள் கலைக்கப்பட்டதாலும், அரசுத் தொழிற்சாலைகள் மாற்றி அமைக்கப்பட்டதாலும் கூட்டுறவு அமைப்புகள் தனியார் மயமானதாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களுடைய சமூகப் பாதுகாப்பை இழந்தனர். ஓய்வூதியத் தொகைகள், இருப்பிட வசதி, மருத்துவ வசதி, தொடக்க-நடுநிலைக் கல்வி ஆகிய அனைத்தையும் இழந்தனர். அரசுத் தொழிற்சாலைகள் புதிய தொழிலாளர்களுக்கு இருப்பிடவசதிகள் அளிப்பதில்லை. ஏற்கெனவே உள்ள தொழிலாளர்கள் அவர்கள் குடி இருக்கும் வீடுகளுக்கு சந்தை நிலவரப்படி வாடகை தர வேண்டும். அல்லது அவர்கள் குடி யிருக்கும் வீடுகளை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும். அரசு வங்கிகள் அதற்காகக் கடன் வழங்குகின்றன. அப் பொழுதுதான் அவர்கள் அவ்வீடுகளில் குடியிருக்க முடியும்.

கிராமப் பகுதிகளில் கம்யூன்கள் கலைக்கப்பட்டதால் பொது மக்களுக்கான மருத்துவ வசதிகள் அடியோடு ஒழிந்தன. ஒரு காலத்தில் பெருமையாகக் கூறப்பட்ட "கிராமப்புற மருத்துவர்' அமைப்பும், கிராம இலவச மருத்துவமனைகளும் கடந்த 15 ஆண்டுகளில் சிதைந்து போனதால் சீன கிராமப்புறங்களில் வாழும் 80 கோடி மக்களில் பெரும்பாலானோர் மருத்துவ வசதியை இழந்தனர். தேச அளவில் 1978இல் மக்கள் தொகையில் 90 விழுக்காட்டினர்க்குப் பொது மருத்துவ கவனிப்புக் கிடைத்தது. ஆனால் 1997இல் அது 4 விழுக்காட்டினருக்கு மட்டும் எனக் குறைத்தது. மருத்துவ வசதியை அளிப்பதில் சீனா வளரும் நாடுகளில் கடைநிலையில் உள்ளது என உலகச் சுகாதார அமைப்பு வரிசைப்படுத்தியுள்ளது.

மாவோ காலத்திய சமூக நல அமைப்பு எந்த அளவிற்குச் சீர்குலைந்து போயுள்ளது என்பதை 2003இல் சார்ஸ் நோய் தாக்கிய போது ஏற்பட்ட நெருக்கடி தெளிவாக விளக்குகிறது. காச நோயும், எய்ட்ஸ் நோயும் கட்டுப்படுத்தப் பட முடியாமல் இருப்பதற்குக் காரணம் பொது மருத்துவ வசதி சீர்குலைந்தமையும் அதிகரித்துவரும் ஏழ்மையும் தாம். கிராமப்புற ஏழைத் தொழிலாளர்கள் பணத்திற்காக விற்கும் இரத்தத்தின்மூலம் எய்ட்ஸ் நோய் காட்டுத் தீ போலப் பரவி வருகிறது.

சீனாவில் பள்ளிகள் பெரும் எண்ணிக்கையில் தனியார் மயமாக்கப்பட்டன. பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காகச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் கடுமையாக உயர்ந்தன. 1980களிலிருந்து நகர்ப்புற மேல்தட்டுத் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி வேகமாக அதிகரித்து வருகிறது. அவற்றில் அந்நிய முதலீட்டாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பள்ளிகளின் கட்டண உயர்வும், குறைந்த வருமானமும் பெரும்பாலான குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தடுத்தன. குறிப்பாக கிராமப் புறங்களில் இது நடந்தது. மய்ய அரசு 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடக்கக் கல்விக்கான மானியத்தை நிறுத்திவிட்டது. சீனாவில் ஏழ்மையான கிராமங்களில் கல்வி என்பது ஒரு ஆடம்பரப் பொருள் போலாகிவிட்டது.

பிற நாடுகளின் தொழிலாளர்கள் பாதிப்பு

சீனா, திறன்குறைந்த-உழைப்புச் செறிவு மிகுந்த பொருள்களை மட்டுமின்றி, உயர்தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் ஏற்றுமதியிலும் வேகமான முன்னேற்றம் கண்டு வருகிறது. சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சியால் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென் கொரியா, சப்பான் முதலான நாடுகளின் தொழிலாளர்கள் தம் வேலைகளை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. சப்பான், சீனாவில் உள்ள தன்னுடைய நிறுவனங் களில் பொருள்களைத் தயாரித்து இறக்குமதி செய்து கொள்கிறது. இதனால் உள்நாட்டு நிறுவனங்களை மூடிவிட்டது. சப்பானியத் தொழிலாளர்கள் ஒரு மணி நேர உழைப்பிற்காகப் பெறும் கூலிக்கு, ஒரு சீனத் தொழிலாளி இரண்டு நாள்களுக்கு வேலை செய்கிறார். அமெரிக்காவுக்கு, ஏற்றுமதி செய்யும் நாடுகளில் கனடாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் மெக்சிகோ இருந்தது. 2003 ஆண்டு சீனா மெக்சிகோவிட மிருந்து அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டது.

தென்கொரிய நாட்டின் முதலாளிகள், அந்நாட்டில் உள்ள அதிகக் கூலி மற்றும் தொழிலாளர்களின் போராட்டக் குணம் ஆகியவற்றின் காரணமாகவே வெளிநாடுகளுக்குத் தம் உற்பத்தியைக்கொண்டு செல்வதாகக் கூறியுள்ளனர். தொழிற்சங்கங்களை வலுவிழக்கச் செய்திடவும், கூலியைக் குறைக்கவும், பணி நிலைமைகளை மாற்றியமைக்கவும் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தென்கொரிய அரசு முழு ஆதரவு தரவேண்டும் என்று முதலாளிகள் கோரி வருகின்றனர். முதலாளிகளின் கோரிக்கையைத் தென் கொரிய அரசு முழுமையாக ஏற்காததால், சாம்சங், எல்.ஜி. மற்றும் தேவு முதலான மின்னணுவியல் நிறுவனங்கள், பாதிக்கும் மேலாகத் தங்களுடைய நீண்ட காலத்திற்கான நுகர்வுப் பொருள்கள் உற்பத்தியைக் கொரியாவுக்கு வெளியில் கொண்டு சென்றுவிட்டன. அவற்றில் பல சீனாவுக்கும் இந்தியாவுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அமெரிக்காவுடனான சீனாவின் வணிகத்தில் சீனாவுக்கு வணிக மிகை (Trade surplus) மற்ற நாடுகளை விட அதிகமாக இருப்பதற்கு முதன்மையான காரணம், ஆசியாவில் உள்ள பிற நாடுகளிலிருந்து உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துவந்த ஆசிய உற்பத்தி யாளர்கள், தற்போது சீனாவிலிருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறார்கள். உண்மையில் சீனாவில் நிலவும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க நிறுவனங்களும் தங்களுடைய முதலீட்டை சீனாவில் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் பல சிறிய நிறுவனங்களும், துணி உற்பத்தியாளர்களும் சீனாவின் போட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே சமயம், ஜி.எம், ஜி.இ, டியூபாண்ட், கே.எஃப்சி, பிராண்ட்ஸ், முதலான பெரிய அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. சீனாவுடனான அமெரிக்க வணிகத்தின் பற்றாக்குறைக்கு இந்த முதலீடுகள் காரணமாக உள்ளன.

அந்நிய முதலீட்டை எவ்வகையிலேனும் பெற வேண்டும் என்ற நிலையில் உள்ள நாடுகளின் அரசுகள், "போட்டியிடும் திறன்' என்ற பலிபீடத்தில் அந்நாடுகளின் தொழிலாளர்களின் வாழ்க்கையையும், பணி நிலைமை களையும் தொடர்ந்து பலியிட்டு வருகின்றன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டிற்கு 10 விழுக்காடாகத் தொடர்ந்து இருந்துவருகிறது. வணிக ஏற்றுமதி மிகையால், நடப்புக் கணக்கு மிகை (Current account Surplus) ஓராண்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 8.5% ஆக உள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு இரண்டு இலட்சம் கோடி டாலராக உள்ளது. வணிக மிகையால், அமெரிக்காவின் கருவூலப் பங்குப் பத்திரங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. இவ்வாறாக சீனாவின் வளர்ச்சி குறித்து ஊடகங்கள் வானளாவப் புகழ்கின்றன.

இடதுசாரி சிந்தனையாளர் பலரும் சீனாவின் சீர்திருத்தத் திட்டம் முதலாளியத்துக்கும், மத்தியத்துவப் படுத்தப்பட்ட அரசு சோசலிசத்துக்கும் இடையிலான மூன்றாவது பாதை எனப் புகழ்கின்றனர். குறிப்பாக 1991இல் சோவியத் வீழ்ச்சிக்குப் பின், சீனாவின் சந்தை சோசலிசம் ஒரு சரியான மாற்றுவழி எனக் கூறினார்கள். நகர மற்றும் கிராமப்புறத் தொழில் அமைப்புகள் சீனாவில் உருவாக்கப் பட்டபோது அதைச் சிறந்த முன்னோடி என வரவேற்றனர். ஆனால் அவர்களின் கண் எதிரிலேயே அந்த அமைப்புகள் சீர்குலைந்து விட்டன. சீனாவின் சந்தைச் சீர்திருத்த நிகழ்வுப்போக்கு ஒரு புதிய சோசலிச வடிவத்துக்கு இட்டுச் செல்லவில்லை. மாறாக மேலும் அதிகமான படிநிலை அமைப்புகொண்ட-ஏற்றத்தாழ்வான இரக்கமற்ற முதலாளிய வடிவத்துக்குள் தான் இட்டுச் சென்றுள்ளது.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் பயன்கள் வெகுமக்களுக்குக் கிடைக்கவில்லை. இன்றைய சீனாவின் கல்விமுறை இளைஞர்களை, "பணக்காரனாவதே பெருமைக்குரியது' என்ற மனப் போக்கிற்கு உள்ளாக்கியுள்ளது. தொழிலாளர்களின் வாழ் நிலையில் துன்பங்கள் நீடிக்கின்றன. வேலை நாள்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, முறையாக வேலை கிடைக்காமை, குறைவான கூலி வீதங்கள், வேலைதேடி நகரங்களை நோக்கி இடம் பெயர்தல், சமூகப் பாதுகாப்புகள் இல்லாமை முதலானவற்றால் உழைக்கும் மக்களில் பெரும்பாலானோர் கொடிய துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

1970களில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு அற்ற-சமத்துவம் மிக்க நாடாக சீனா விளங்கியது. ஆனால் 1995க்குள் ஆசியாவில் மிகவும் ஏற்றத்தாழ்வு கொண்ட நாடாக சீனா தாழ்ந்தது. 2002இல் உலகில் ஏற்றத்தாழ்வு மிக்க நாடுகளில் ஒன்றாக மேலும் தாழ்ச்சியுற்றது. எனவே சீனாவில் சந்தை சோசலிசம் என்பது மேன் மேலும் முதலாளியத்தைக் கட்டமைப்பதாகவும், உழைக்கும் மக்களைச் சுரண்டுவதாகவும், ஒடுக்குவதாகவுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முழு நிறைவான சோசலிசத்திற்கு மாறிச் செல்லும் பாதை இடறு குழிகளும், முரண்பாடுகளும் நிறைந்த-மேடு பள்ளங்கள் கொண்ட நீண்ட பாதையாகும். நிலவுகின்ற உற்பத்திச் சக்திகளை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களின் உற்பத்திச் சக்திகளாக மாற்றவும், அனைத்து மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் புதிய உற்பத்தி சக்திகளை உருவாக்கவும், கூட்டுறவு அடிப்படையில் அமைத்த பொதுநல அமைப்புக்கு ஏற்ற சட்ட-அரசியல்-கலாச்சார மேற் கட்டுமானத்தைக் கட்டமைக்கவும் காலம் தேவைப்படுகிறது. அதற்குக் குறுக்கு வழிகள் கிடையாது. எல்லா நாடுகளுக்கும் பொருத்தமான, வரலாற்றின் ஒவ்வொரு மாற்றத்தையும், திருப்பத்தையும், முன்கூட்டியே அறிந்திடக்கூடிய பொதுவான செயல்திட்டம் ஒன்றை வடிவமைக்க முடியாது. "சோதனை மற்றும் தவறுகளிலிருந்து கற்றல்' என்னும் நிகழ்வுப் போக்கிற்கு இடம் அளிக்கக்கூடிய வழிமுறையில்தான் சோசலிசத்தைக் கட்டமைக்க முடியும்.

(இக்கட்டுரை எழுதத் துணை செய்தவை, 1. "சீனாவும் சோலிசமும்-சந்தைச் சீர்திருத்தமும் வர்க்கப் போராட்டமும்'. நூலின் ஆசிரியர்கள் மார்டின் ஹார்ட்-லேண்ட்ஸ்பர்க் மற்றும் பால்பர்க்ஃப்-தமிழில் : க. வெங்கடேசன், விடியல் வெளியீடு, கோயம்புத்தூர்.

2. Economic and politicas weekly, December 27, 2008)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com