Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008
ஆளுமைகளின் கீழ் நசுங்கிய குரல்கள்
- புதூர் சிபி

‘டி.எம்.சௌந்தர ராஜனுக்கு பாராட்டுவிழா’ என்றபெயரில் எங்கு பார்த்தாலும் முதல்வர் கருணாநிதி, அவரது மகன் மு.க.அழகிரி படங்களோடு விளம்பர போர்டுகளால் கடந்த மாதம் திக்குமுக்காடிப்போனது மதுரை. ஊறுகாய்போல டி.எம்.சௌந்தர ராஜனின் படங்கள் போர்டுகளில் ஆங்காங்கே சிறிதாகக் காட்சித்தந்தன.

ஒரு பெரும் பாடகருக்கு, அதுவும் மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா என்று கூறப்பட்டாலும் வருகிற நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவே மதுரை முழுவதும் பேசப்பட்ட விழாவாக இது அமைந்து விட்டது.

மின்வெட்டிற்கு எதிராக மதுரையில் சிறுகுறுந்தொழில் முனைவோர் கண்டனப்பேரணி நடத்திக் கொண்டிருந்த வேளையில், எங்கு பார்த்தாலும் பாராட்டுவிழா என்ற வாசகங்களுடன் பிரகாச விளம்பரங்கள் நியானில் மின்னிக் கொண்டிருந்தது. இதைவிட, விழா நடந்த மதுரை தமுக்கம் மைதானத்தில் 50 அடி உயர சீரியலில் சிரித்துக் கொண்டி ருந்தார்கள் முதல்வரும், அவரது மகனும்!

மதுரையில் வாழும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் இவ்விழா நடத்தப்பட்டதாக பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டாலும், கூட்டம் கூட்ட வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து ஆள்திரட்டியதாகவும் கூறப்படுகிறது.

தமிழக இசை உலகினை தனது கம்பீரக் குரலால் கட்டிப்போட்ட டி.எம்.சௌந்தர ராஜன் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் மேல் என விழா மேடையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கயல்விழி அழகிரி கூறினார். ஆனால் ஒரு பாடல்கூட பாடாமல் தனது பேச்சை டி.எம்.சௌந்தர ராஜன் முடித்துக் கொண்டது பார்வையாளர் களை திகைக்க வைத்தது. பாராட்டுவிழா மேடையில், தாம் எழுதிவைத்ததை அட்சரம் பிசகாமல் வாசித்தார். பாடுங்கள் என மேடையின் கீழ் இருந்து எழுந்த குரல்களின் சத்தங்கள் ஆளுமைகளின் கீழ் மூழ்கடிக்கப்பட்ட பரிதாபமும் நிகழ்ந்தது.

தமிழ்த்திரையுலகில் தியாகராஜ பாகவதர், கிட்டப்பா, சின்னப்பா ஆகியோர் கோலோச்சிய காலத்தில் நுழைந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக முடிசூடா மன்னனாக விளங்கிய டி.எம்.சௌந்தர ராஜனுக்கு பாராட்டுவிழா என்ற பெயரில் மதுரையில் உள்ள நகைக்கடைகளில் வசூல் வேட்டை நடத்தப்பட்டதாக செய்தித் தாள்களும், தொலைக்காட்சிகளும் சேதி சொன்னது தனிக்கதை. இம்மேடையில் டி.எம்.சௌந்தர ராஜனுக்கு 5 லட்ச ரூபாய், பாடகி பி.சுசிலாவிற்கு 3 லட்ச ரூபாய் ஆகியவற்றுக்கான காசோலைகளைத் தமிழக முதல்வர் கருணாநிதி வழங்கினார். விழாவில் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி ,இயக்குநர் கே.பாலச்சந்தர். கவிஞர்கள் வாலி, வைரமுத்து, நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

டி.எம்.சௌந்தர ராஜனுக்கு பாராட்டுவிழா நடந்த அதே தமுக்கம் மைதானத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் மாபெரும் பாராட்டுவிழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற அவ்விழாவில் நா தழுதழுக்க டி.எம்.சௌந்தர ராஜன் பேசிய வார்த்தைகள்: “எல்லாரும் என்னை மறந்த வேளையில், ஞாபகத்தோடு அழைத்து பாராட்டுவிழா நடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை என்றென்றும் மறக்கமாட்டேன்” என்று நெகிழ்ச்சியோடு கூறினார். திமுக தலைவர்கள் முன்னின்று நடத்திய பாராட்டுவிழா என்பதால், கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற உயரிய நோக்கத்தோடு செயல்பட்டு வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நினைகூர டி.எம்.சௌந்தரராஜன் மறந்திருக்கலாம்.

இவ்விழா முடிந்த சில நாட்கள் கழித்து வெளியான ஒரு வார இதழில், இசைமுரசு நாகூர் அனிபாவிற்கு மதுரையில் பாராட்டுவிழா நடத்த உள்ளார்கள் என்று வந்த செய்தி வர்த்தகர்கள் மத்தியில் மீண்டும் அச்ச உணர்வலைகளை எழுப்பியுள்ளது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com