Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
செப்டம்பர் 2008
சீன சாதனையும் இந்திய ஏக்கமும்

உலகின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகளின் 29வது அத்தியாயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது மக்கள் சீனம்.

29வது ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பினை டொரான்டோ, பாரீஸ், ஒசாக்கோ, இஸ்தான்புல் ஆகிய நகரங்களைப் பின்னுக்குத் தள்ளி சீனத் தலைநகரம் பெய்ஜிங் பெற்றபோது சீன மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையில்லை. ஏற்கனவே 2000 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பிற்காக போட்டியிட்ட பெய்ஜிங் வெறும் இரண்டு வாக்குகளில் அந்த வாய்ப்பை இழந்தது.

ஆசியக் கண்டத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்றுள்ளது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக 1964 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலும், 1988 ஆம் ஆண்டு தென் கொரிய தலைநகர் சியோலிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்றுள்ளன.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பினைப் பெற்ற சீனா அதற்கான ஏற்பாடுகளை உலகமே வியக்கும் வண்ணம் செய்து முடித்திருந்தது. போட்டிகள் நடைபெற்ற மைதானங்களை வடிவமைத்ததிலிருந்து விளையாட்டு வீரர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பார்வையாளர்கள் ஆகியோருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், உணவு, போக்குவரத்து வசதிகள் இவையனைத்தையும் எந்தவித குறைபாடுமின்றி வெகு நேர்த்தியாக செய்து கொடுத்தது சீன அரசு.

ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்கு முன்பு மக்கள் சீனம் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. சீனாவில் மக்கள் உரிமைகள் மதிக்கப்படுவதில்லை என்ற அமெரிக்கா மற்றும் அதன் ஜால்ராக்களின் பொய்ப்பிரச்சாரம், மாசுக் கட்டுப்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள், திபெத் பெயரைச் சொல்லி உருவாக்கப்பட்ட கலவரங்கள், அதையொட்டி ஒலிம்பிக் ஜோதியை முடக்குவதற்கு செய்யப்பட்ட சதி வேலைகள் இவை போதாதென்று சூறாவளி, பூகம்பம் என்று இயற்கை யின் இடர்பாடுகள். இவை அனைத்தையும் தாண்டி சீனா சாதித்துள்ளது என்பது அந்நாட்டு மக்களின் மன உறுதிக்கும், ஓர் உலகம், ஒரு கனவு என்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் முழக்கத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். ஒரு சோஷலிசக் கட்டமைப்பினால் மட்டுமே இத்தகைய இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இதுபோன்ற மகத்தான சாதனைகளை நிகழ்த்திக் காட்ட முடியும் என்பதற்கு பெய்ஜிங் ஒலிம்பிக் உதாரணமாகும்.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்திக் காட்டியதில் மட்டு மல்லாமல் பதக்கப்பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்து சீனா சாதித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் என்றால் பொதுவாக அமெரிக்காவின் ஆதிக்கமே ஓங்கியிருக்கும். அதுவும் சோவியத் யூனியன் என்ற உன்னத அமைப்பு சிதைந்த பிறகு அமெரிக்காவுக் கொரு சரிநிகர் எதிரி இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாக மாறியது. பதக்கப்பட்டியலில் சீனாவுக்கும் அமெரிக்காவிற்குமான இடை வெளியை அளந்தால் கடந்த 6 ஒலிம்பிக் போட்டி களில் தொடர்ந்து ஒட்டு மொத்தச் சாம்பியனாக வலம் வந்த அமெரிக்கா விற்கு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பலத்த அடி கிடைத்துள்ளதை அறிய முடியும்.

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 36 தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்த சீனா அப்போதே அமெரிக்காவிற்கு கிலியை ஏற்படுத் தியிருந்தது. தடகளப் போட்டிகளில் எப்பொழுதுமே மொத்தக்குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் அமெரிக்கா விற்கு இந்த முறை அதுவும் கைகொடுக்கவில்லை. தடகளப் போட்டி பலவற்றில் பதக்க வாய்ப்பை இழந்த அமெரிக்கா இந்த முறை 36 தங்கப்பதக்கங்களை மட்டுமே பெற்றுள்ளது.

சீனா ஏற்கனவே தான் ஆதிக்கம் செலுத்திவந்த விளையாட்டுகளில் பதக்கங்களைத் தக்கவைத்துக் கொண்டதுடன் புதிதாகப் பல்வேறு விளையாட்டு களில் பதக்கங்களை வென்றுள்ளது. மன உறுதி, கடின உழைப்பு, முறையான பயிற்சி, சாதிப்போம் என்ற தன்னம்பிக்கை இவை அனைத்தையும் செயல்படுத்திய திறமையான நிர்வாகம் ஆகிய இவையே சீனாவின் இந்த மாபெரும் சாதனையின் ரகசியமாகும்.

ஆகஸ்ட் 8 அன்று மிகப்பிரமாண்டமான பறவைக் கூடு எனப்படும் தேசிய மைதானத்தில் நடைபெற்ற துவக்க விழாவும், ஆகஸ்ட் 24 அன்று அதே மைதானத்தில் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சி யும் ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இடம் பெறாத பிரமாண்டங்களாகும். உலகமே வியக்கும் வண்ணம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திக் காட்டி 51——தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ள

சோசலிச சீனா உலக விளையாட்டுக்களின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது.

இந்தியா

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை வென்று ள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 20. இதில் தங்கப் பதக்கங்கள் 9, வெள்ளிப்பதக்கங்கள் 4, வெண்கலப் பதக்கங்கள் 7. நாம் வென்றுள்ள 9 தங்கப்பதக்கங்களில் 8 ஹாக்கிப் போட்டியில் வென்றதாகும்.

ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் பிரிவில் தங்கம் என்ற இந்தியாவின் கனவு நிறைவேற நாம் 29வது ஒலிம்பிக் போட்டிகள் வரை காத்திருந்தோம் என்பதை எண்ணும்போது சாதனையிலும் வேதனைதான் மிஞ்சு கிறது. முன்பு நமது தங்க மங்கை பி.டி.உஷா வெண்கலப் பதக்கத்தை வென்றும் வெல்லாமல் போனபோது இந்திய தேசமே கண்ணீர் வடித்தது.

சிந்திய கண்ணீருக்கு பிராயச்சித்தம் தேடும் வகை யில் உருப்படியான திட்டங்களைத் தீட்ட நாம் தவறிவிட்டோம். அவ்வாறு திட்டங்கள் தீட்டியிருந்தால் இதற்கு முன்பாகவே எத்தனையோ அபினவ் பிந்த் ராக்களும், விஜேந்தர்களும் உருவாகியிருப்பார் கள். நாம் பெற்ற பதக்கங்களை எண்ணி எண்ணிப் பார்த்து பூரிப்படைந்திருப்போம்.

உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட் வெறும் 28 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட கரீபியன் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ஜமைக்கா ஈன்றெடுத்த கறுப்புத் தங்கமாகும். இவர் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி யில் 3 தங்கப்பதக்கங்களை வென்றார். 28 லட்சம் மக்கள் தொகையிலிருந்து இது போன்ற தங்கங்கள் உருவாகும் போது 110 கோடியிலிருந்து எத்தனை தங்கங்கள் உருவாக வேண்டும்? உருவாகாமல் போனதற்கு யார் பொறுப்பு?

சுதந்திரம் பெற்றதில் சீனா நம்மைவிட இரண்டு வயது இளைய நாடு. அவர்கள் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டி 1952 டோக்கியோ ஒலிம்பிக் ஆகும். நாம் ஒலிம்பிக் போட்டியில் முதல் பதக்கம் வென்ற ஆண்டு 1900. நமது அனுபவத்தோடு ஒப்பிடுகையில் சீனாவின் சாதனை வியக்கவைப்பதாகும்.

சீனாவோடு நம்மை ஒப்பிட்டுப் பேசுவது ஒருபுறம் இருக்க கென்யா, எத்தியோப்பியா, மங்கோலியா, தாய் லாந்து,, இந்தோனேஷியா போன்ற சில குட்டி நாடுகள் பதக்கப்பட்டியலில் நம்டைவிட பல படிகள் மேலே இருப்பதை எண்ணும்போது நம்மால் வெட்கி தலை குனியாமல் இருக்க முடியவில்லை.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் எல்லாவற் றையும் போலவே விளையாட்டிலும் அரசியல் சித்து விளையாட்டுகள் அதிகம் இருப்பது நம்மைப் பிடித்த நோயாகும். இதன் காரணமாக திறமை யிருந்தும் வாய்ப்புக் கிடைக்காமல் ஆரம்பத்திலேயே முடங்கிப் போன எத்தனையோ வீர,வீராங்கனைகள் நமது நாட்டில் உள்ளார்கள். நேர்மையான, திறமையான நிர்வாகம் இருந்தால் மட்டுமே இது போன்ற செயல்கள் தவிர்க்கப்பட்டு உண்மையான திறமைசாலிகள் உருவாக்கப்படுவார்கள்.

திறமையான வீரர்கள் உருவாவதற்கும் அவர்கள் சாதிப்பதற்கும் ஊடகங்களின் பங்களிப்பு என்பது முக்கியப் பங்காற்றக்கூடியதாகும். வீரர்கள் சாதிக்கும் பொழுது அவர்களைப் பாராட்டியும், சில நேரங்களில் தோல்விகளைச் சந்திக்கும் பொழுது அவர்கள் மனம் புண்படும்படி எழுதி அவர்களை மனந்தளரச் செய்யாமல் ஊக்கப்படுத்தியும் எழுதி அவர்களது நம்பிக்கையை தட்டி எழுப்ப வேண்டும். மேலும் அனைத்து விளையாட்டுகளுக்கும் அரசு நிர்வாகம் ஊக்கம் அளிக்க வேண்டும். துரதிருஷ்ட வசமாக கிரிக் கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கு மட்டுமே நமது நாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் நமது ஹாக்கி அணி பங்கெடுக்காமல் போனது போன்ற துயர நிலை இனிமேல் நமக்கு வரக்கூடாது.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்ற சுசில்குமார், குத்துச் சண்டைப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற விஜேந்தர்குமார் போன்ற மேலும் பலர் நமது தேசத்தின் பல்வேறு மூலைகளில் எங்கோ ஒரிடத்தில் இருக்கக் கூடும். அவர்களைக் கண்டறிந்து தேவையான வசதி மற்றும் முறையான பயிற்சி அதிக போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஆகியவற்றை இப்பொழுதி ருந்தே செய்து கொடுத்தால் எதிர்காலத்தில் மேலும் பல பதக்கங்கள் நமது நாட்டைத் தேடிவரும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com