Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஜனவரி 2009
விவசாயிகளின் எழுத்தாளர்க்கு விருது
தி.வரதராசன்

இவ்வாண்டு தமிழ்ப்படைப்புக்கான இந்தியாவின் உயரிய இலக்கிய விருதாகிய சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய "மின்சாரப் பூ" சிறுகதைத் தொகுப்பு நூலுக்குக் கிடைத்திருப்பது, தமிழ் இலக்கிய உலகுக்கு- குறிப்பாக, முற்போக்கு இலக்கிய உலகுக்குக் கிடைத்த மகத்துவம் மிக்க கௌரவமும் பெருமையுமாகும்.

இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் அவரை நாம் உளமாரப் பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்.

பாரதி, "எமக்குத் தொழில் கவிதை" என்றதுபோல் "எமக்குத் தொழில் இலக்கியம் படைத்தல்" என்று கடந்த 36 ஆண்டுகாலமாக ஒரு முழுநேர இலக்கியப் படைப்பாளியாகப் பணியாற்றிவரும் - அந்த இலக்கிய உழைப்புக்குக் கிடைத்துள்ள ஓர் உயரிய, மதிப்பு வாய்ந்த அங்கீகாரமாகும் இந்த விருது.

பிப்ரவரியில் நடைபெறவுள்ள விருது விழாவில் அவருக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் பாராட்டு தாமிரப் பட்டயமும் கொண்ட விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் தமிழக அரசும் பல பத்திரிகைகளும் பல அமைப்புகளும் பல பரிசுகள், விருதுகள் வழங்கி அவரை கௌரவித்திருக்கின்றன.

செம்மலரில் 1972 செப்டம்பர் இதழில் பிரசுரமான "பரிசு" என்கிற மேலாண்மை பொன்னுச்சாமியின் முதலாவது சிறுகதை 5ஆம் வகுப்புவரை மட்டுமே படித்த அந்த கிராமத்து ஏழை இளைஞனை ஓர் எழுத்தாளனாக தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது.

"ஆடிக் காலமாகையால் மேல்காற்று பேய்த்தனமாக வீசிக் கொண்டிருக்கிறது. சின்னராசு சைக்கிளை எத்தனை வேகத்தோடு மிதித்தாலும் மேற்குநோக்கி நகர மறுத்தது. சீட்டைவிட்டு எழுந்து வேகமாக மேலும் கீழுமாக பெடலை அழுத்திக் கொண்டே வானத்தைப் பார்க்கிறான்" - இவ்வாறு அந்தப் பரிசு கதை தொடங்குகிறது.

சாகுபடி செய்த பயிருக்கு உரம் வாங்கிப்போட கையில் பணமில்லாமல் பரிதவிக்கும் சின்னராசு என்கிற ஓர் ஏழை விவசாயியைப் பற்றிய சிறுகதை அது. மேலாண்மையின் முதலாவது கதையின் நாயகனே ஒரு விவசாயிதான்!

எழுதிய முதலாவது சிறுகதையே அச்சேறிவிட்ட வெற்றி அவரை ஓர் எழுத்தாளனாக அவருக்கே அடையாளப்படுத்தியது. அதில் அவர் பெற்ற உற்சாகம், நம்பிக்கை அவரைத் தொடர்ந்து எழுத வைத்தது. எழுதிய முதலாவது சிறுகதையே பத்திரிகையில் அச்சேறுகிற இலக்கியத் தகுதி அபூர்வமாக ஓரிருவருக்கே வாய்க்கும். அந்த வாய்ப்பைப் பெற்றவர் மேலாண்மை. பிறகு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது... என அவரது சிறுகதைகள் பழுதின்றித் தொடர்ந்து செம்மலரில் பிரசுரமாயின. அவரின் மனத்தில் சுரந்திருந்த படைப்பு ஆற்றல் வற்றாத ஊற்றாகப் புறப்பட்டது.

'மக்களின் வாழ்க்கையானது, இலக்கியப் படைப்புக்கான கருப்பொருள் வழங்கும் ஒரு சுரங்கம்' என்றார் மாக்சிம் கார்க்கி. அவ்வாறு மேலாண்மை பொன்னுச்சாமிக்கு தான் சார்ந்த கிராமத்து மக்களின் - விவசாயிகளின் வாழ்க்கை என்பது கதைப்பொருளுக்கான வற்றாச் சுரங்கமாய்க் கிடைத்தது. அங்கே கதைதான் கருப்பொருளை தனது தேடல்-தேர்வு எனும் கருவிகொண்டு அள்ளியெடுத்து இலக்கியம் ஆக்கினார் - ஆக்குகிறார்.

செம்மலரில் எழுதத் தொடங்கியிருந்த ஆரம்ப காலத்தில் மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முதலாவது அமைப்பு மாநாட்டிலேயே சிறுகதை இலக்கியம் பற்றி மேலாண்மை உரையாற்றியிருக்கிறார். 'பள்ளிக்கு வெளியே படிக்க வேண்டியது நெறய இருக்கு' என்று பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை சொன்னது போல ஆரம்பக்கல்வியே அரைகுறையாக நின்றுவிட்ட போதிலும், தான் பிறந்து வாழும் மண்ணின் மக்களை, அவர்களது கஷ்ட-நஷ்டங்களை - கண்ணீரை - இரக்க குணத்தை அப்பாவித்தனத்தை அநீதிக்கு எதிரான அவர்களின் ஆவேசத்தை எல்லாம் படித்தார்.

அந்த வாழ்க்கைக் கல்வியும், தன் முனைப்பாய்க் கற்ற நூலறிவும், கம்யூனிஸ்ட் இயக்கமும், முற்போக்கு இலக்கிய இயக்கமும் எல்லாம் சேர்ந்து அவரை ஒரு சிறந்த முற்போக்கு இலக்கியப் படைப்பாளியாக உருவாக்கியது. இவரது படைப்புகளில் அசலான கிராமத்து மாந்தர்களையும் அவர்களது வாழ்க்கையையும் தரிசிக்கலாம். வறட்சியும் வறட்சி சார்ந்ததுமான மானாவாரி கரிசல் கிராமங்களே இவரது கதைக்களம்.

"விழிப்படையாமல், இன்னும் அமைப்பாகச் சங்கமித்துச் சக்தி பெறாமல், ஆடிக்காற்றில் சிக்கிய சருகுகளாகத் துன்ப சாகரத்தில் புலம்பிக் கொண்டே வாழ்க்கையில் அலைகிற என் சக மானாவாரி சம்சாரிகளுக்கு" என்று தனது மானுடப் பிரவாகம் சிறுகதைத் தொகுப்பை ஏழை விவசாயிகளுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார் மேலாண்மை. "செம்மலரே எனது நாற்றாங்கால்" என்று சொல்வதில் மிக சந்தோசமும் பெருமையும் அடைகிறவர் மேலாண்மை.

1972 இல் மதுரை வடக்குச் சித்திரை வீதியில் செயல்பட்ட தீக்கதிர் அலுவலகத்தில் ஒரு நாள் நான் செம்மலர்ப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது வாசலில் இருந்த தோழர் ஒருவர் வந்து என்னிடம், "தோழர், செம்மலர்ல சிறுகதை எழுதியிருக்கிறாராம். பேரு பொன்னுச்சாமியாம். ஆசிரியரைப் பார்க்கணுங்கறார்...."

"அவரை வரச் சொல்லுங்க" என்றேன். அப்போது ஆசிரியர் கே.முத்தையா வெளியே சென்றிருந்தார்.

பொன்னுச்சாமி உள்ளே வந்தார். ஆள் ஒல்லியாகவும் சிற்று உடலாகவும் ஒரு சிறுவனைப்போல் கிராமத்து அசலாக வந்து நின்றார். 'கிராமத்திலிருந்து பொன்னுச்சாமி என்றால்.... ஆள் உயரமாகவும் ஓங்குதாங்காகவும் இருப்பார்' என்று நினைத்திருந்தநான் அவரது தோற்றத்தைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் அசந்து போனேன். 'இவரா அந்த 'பரிசு'க் கதையை எழுதியவர்....!' உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்ற திருக்குறள்தான் அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. இதுதான் நான் முதல் தடவையாக மேலாண்மையைச் சந்தித்த அனுபவம். ஆரம்பத்தில் அவர் செ.பொன்னுச்சாமி என்ற பெயரிலேயே செம்மலரில் கதை எழுதுவார். பிறகுதான் தனது ஊர்ப்பெயரையும் இணைத்து எழுதத் தொடங்கினார். மேலாண்மை பொன்னுச்சாமி என்ற பெயரில்.

ஒரு சிறந்த எழுத்தாளராக வளரக்கூடிய படைப்பாற்றல் இவரிடம் உள்ளது என்பதை அடையாளம் கண்டு அவருக்குத் தேவையான ஆலோசனைகளும் அரவணைப்பும் ஊக்கமும் தந்தவர் ஆசிரியர் கே.முத்தையா அவர்கள் என்றால் அது மிகைக்கூற்று அல்ல.

ஆரம்ப காலத்தில், சினிமா சுவரொட்டிகளை சதுரத்துண்டுகளாகக் கிழித்து அதன் வெள்ளை பின்புறத்தில்தான் பொன்னுச்சாமி கதைகள் எழுதி செம்மலருக்கு அஞ்சலில் அனுப்புவார். இதைக் கவனித்த ஆசிரியர் கே.முத்தையா ஒரு சமயம் அலுவலகத்திற்கு வந்த பொன்னுச்சாமியிடம் "இனிமேல் நீங்கள் இப்படியெல்லாம் எழுதி அனுப்பக்கூடாது. நல்ல வெள்ளைத்தாளில்தான் எழுதணும்" என்று சொல்லி செய்தி, கட்டுரைகள் எழுதுவதற்காக வெட்டி வைத்திருந்த 'நியூஸ் பிரின்ட்' வெள்ளைத்தாள்களை பொன்னுச்சாமிக்குக் கைநிறையக் கொடுத்தனுப்பினார். அதற்குப்பிறகு அவர் வரும் போதெல்லாம் அவருக்கு ஒரு 'தாய் வீட்டுச் சீதனம்' போல் கதை எழுதுவதற்கு கை நிறைய வெள்ளைத்தாள்கள் கிடைத்துவிடும்!

செம்மலரில் எழுதுவதோடு அவரது படைப்பு வெளியீட்டுத்தளம் அதற்கு அப்பாலும் விரிந்தது. இதர பத்திரிகைகளில் எழுதினாலும் அந்தந்தப் பத்திரிகைக்குத் தகுந்தவாறெல்லாம் அவரது படைப்பு முகம் மாறுவதில்லை. அதில் அவர் உறுதியாக உள்ளார்.

1975ல் துவக்கப்பட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவராகவும், தற்போது அதன் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராகவும், செம்மலர் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் உள்ள எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் 24 சிறுகதைத் தொகுப்புகளும், 6 நாவல்களும், 6 குறுநாவல்களும், இளம் எழுத்தாளர்களுக்கு உதவும் விதத்தில் படைப்புக் கலைப்பற்றி விவரித்துச் சொல்லும் "சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்" என்கிற கட்டுரை நூல் ஒன்றும் இதுவரை வெளிவந்துள்ளன.

இன்னும் தொகுப்புக்கு வராத அவரது ஏராளமான சிறுகதைகளும் உண்டு.

அடுத்து ஒன்று : மேலாண்மை பொன்னுச்சாமியின் முதல் படைப்பாகிய "பரிசு" சிறுகதையை தபாலில் வந்த உடனே நான் அதைப் படித்துப் பார்த்து நல்ல கதையென்று தேர்வு செய்து அதை ஆசிரியர் கே.எம்.அவர்களிடம் தெரிவித்து அவரது ஏற்புடன் பிரசுரம் செய்த பெருமையும் மகிழ்ச்சியும் எனக்கு எப்போதும் உண்டு. இதை மேலாண்மையிடமும் மற்ற தோழர்களிடமும் பல சந்தர்ப்பங்களில் சொல்லி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது உண்டு. இப்போது அந்த மகிழ்ச்சிப் பகிர்வு செம்மலர் வாசகர்களோடு.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com