Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஜனவரி 2009
பந்தப்புளிப் போராட்டம்

ஈரோடு தி.தங்கவேல்

"பிராமணர்கள் அடிமையாக முடியாது. பள்ளர்கள் நிலத்தோடு கட்டுண்டவர்கள், பயிர் சாகுபடி தொழிலிலேயே பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட தனியிடத்திலேயே குடியிருப்புக் கொண்டிருந்தனர். அதற்குப் பள்ளச்சேரி என்று பெயர். இவர்கள் குடும்பப்பெண்கள் இடுப்புக்குமேல் எந்த ஆடையும் அணியாது இருக்க வேண்டும். இது அவர்களின் தொடக்கக் காலத்திய அடிமைத்தனத்தின் குறியீடாக உள்ளது"

-எட்கர் தர்ஸடன்

வரலாற்றுக் காலம் குறித்த முரண்பாடுகள் தமிழ் அறிஞர்கள் மத்தியில் இருந்தாலும், பள்ளர்கள் தமிழகத்தின் கொத்தடிமைகளாகவே வாழ்ந்து வந்துள்ளனர் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. பள்ளு இலக்கியங்களும் அதையே உறுதிப்படுத்துவதாக உள்ளது.

முத்தமிழ் நாட்டழகர்

கொத்தடியான் (முக்கூடற்பள்ளு-13)

கொத்தடிமைப்பள்ளர் (திருமலை முருகன் பள்ளு-5)

பண்ணை வளம் பயிரேற்றித்

தொழும்பு செயும் (திருமலை முருகன் பள்ளு-9)

"விடுதலையடைந்த நாட்டில் பறையருக்கும் புலையருக்கும் விடுதலை கிட்டும்" என பாரதியைப் போல், பலரும் நம்பியிருந்தனர். ஆனால், அறிவியல் உலகே வெட்கித் தலைகுனியத்தக்க சாட்சியாய் எழுந்துநின்றன, உத்தப்புரமும், பந்தப்புளியும். தீண்டாமையின் புதுப்புது வடிவங்கள் மனுவின் திருவிளையாடல்களாக மாறி, முற்போக்கு சிந்தனையாளர்களுக்குப் பெரும் சவாலாக எழுந்து நிற்கிறது. மனுவின் இந்த ஆட்டத்திற்கு பந்தப்புளி பள்ளர்கள் எப்படி பலியானார்கள் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பந்தப்புளி ஒரு சின்னஞ்சிறிய கிராமம், நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் ஒன்று, மூன்று பெரிய புளிய மரங்களின் கிளைகள் நெருங்கி இருந்து, ஊருக்கே பந்தல்போட்டாற்போல் இருந்ததால் இவ்வூருக்கு இப்பெயர் வரக் காரணம் ஆகியது. இவ்வூரில் முதன் முதலாக ஏழு தலைமுறைக்கு முன்னால் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள சாத்தூர் என்ற கிராமத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்து குடியேறியவர்கள் ஏழு குடும்பத்தைச் சார்ந்த குடும்பன் அல்லது தேவேந்திரர்கள் என்று சொல்லக்கூடிய பள்ளர்களே.

இவர்கள் புலம் பெயர்ந்து இங்கு குடியேறும் பொழுது தங்களுடன் அவர்கள் அதுவரை வாழ்ந்து வந்த பகுதியில் இருந்து, தங்களுடைய குலதெய்வமான கண்ணனூர் மாரியம்மனின் பிடிமண்ணை எடுத்து வந்து, இங்கு உறைய வைத்துள்ளனர். "தெய்வம் உறைந்திருக்கிறது" என்பது சங்க காலத் தமிழனின் நம்பிக்கையின் நீட்சியாகும். இவற்றின் அடையாளமாக ஒரு உருவமற்ற கல்லை நட்டு, வழிபாடு நடத்தி வந்துள்ளனர். இதன் பிறகுதான், தமிழக வரலாறு நெடுகிலும், மூன்று வர்ணத்தாராலும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சூத்திர சாதியார்களும் ஒருவர்பின் ஒருவராக இந்த ஊரில் குடியேறினார்கள்.

இன்று இந்த ஊரில் கம்பளத்து நாயக்கர்கள் 120 வீடுகள், குடும்பமார் 70, கம்மாளர் 50, ரெட்டியார் 60, வன்னியர் 35, தேவர் 20, நாடார் 1, அருந்ததியர் 2 என்ற எண்ணிக்கையில் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

ஒவ்வொரு குடும்பமாக குடியேறிய சூத்திர சாதியினர், இத்தெய்வத்தையே வழிபடத் தொடங்கினார்கள். பிடிமண் கொண்டுவந்து, இங்கு உறைய வைத்த தேவேந்திரர்களும் இதைத் தடுக்கவில்லை மாறாக, தங்களுக்கு உரிமையான இத்தெய்வத்தை, தங்களுக்கு மேலான சாதிக்காரர்கள் வழிபடுகிறார்களே என்று பூரித்துப்போனார்கள். உற்பத்திப் பெருக்கமும், குடியேற்றமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அனைவரும் வழிபட்டு வரும் இத்தெய்வத்தின் இருப்பிடத்தைக் கோயிலாக எடுத்துக்கட்டுவது என அனைத்து சாதியினரும் முடிவு செய்து, அனைத்து சாதியினரின் பங்களிப்பில் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. பணம், பொருள் மற்றும் உழைப்பு என்ற வகையில் அனைத்து சாதியினரும் தங்களுடைய பங்களிப்பைச் செய்தனர். கோவிலுடன் சுற்றுச்சுவரும் கட்டி எழுப்பப்பட்டது. சூத்திரச் சாதியினரின் மூளையில் உறங்கிக் கொண்டிருந்த மனு மெல்ல எழுந்து, கண்துடைத்து பார்த்தான். இப்பொழுது அவன் விளையாட்டுக்கான களம் தயாராக இருந்தது. ஆடத்துவங்கினான். குடும்பர்களின் பொங்கல் உள்ளே அனுமதிக்கவில்லை. கிடாய் வெட்டவும் அனுமதிக்கவில்லை. முளைப்பாரியும் உள்ளே செல்ல முடியாது. உள்ளே சென்று தேங்காய் உடைத்து வழிபட முடியாது. படிப்படியாக கோவில் மதில் சுவருக்கு வெளியே நிறுத்தப்பட்டார்கள்.

'மழைக்கஞ்சி விழா' என்ற, மழை இல்லாதபோது, மழை வேண்டி இத்திருவிழா நடத்தப்பட்ட பொழுதுதான் தங்கள் தெய்வத்தைப் பறிகொடுத்துவிட்டோம் என்று உணர்ந்தார்கள். இவ்விழாவில் கஞ்சி தயாரிக்க அனைத்துச் சாதியினரிடமிருந்து அரிசி பெற்று, கஞ்சி காய்ச்சி, அனைவரும் பங்கிட்டு குடித்துவந்த மரபு மாறி, பள்ளர் குடும்பங்கள் மட்டும் தனிப்பானை வைத்து, கஞ்சி காய்ச்ச நிர்பந்திக்கப்பட்டனர். தங்களின் முன்னோர்களால் கொண்டுவரப்பட்டு, உறைய வைத்து, வழிபட்டு வந்த அந்தச் சனங்களின் சாமி, ஆதிக்கச் சுவரால் சிறைவைக்கப்பட்டு, அன்னியமாகிப்போனது.

1990களில் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட தலித் மக்களின் எழுச்சியானது இந்த ஊரில் உள்ள தலித் இளைஞர்களையும் கவ்விப் பிடித்திருக்கிறது. ஆண்டாண்டுகளாக கூனிக் குறுகியிருந்த இவர்களின் முதுகும் மெல்ல நிமிரத் தொடங்கியது. அங்குள்ள இளைஞர்கள், தங்கள் சமூகத்தின் பெரியவர்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, தங்களது பண்பாட்டு அடையாளத்தை, மீட்டெடுக்க நடவடிக்கையில் இறங்கியதுதான் பந்தப்புளியில் காவல்துறையின் அத்துமீறலுக்கும், காட்டுமிராண்டித்தனமான செயல்பாடுகளுக்கும் காரணமாகிப்போனது. ஆதிக்க சாதியினரின் அத்துமீறல்களையும், அகம்பாவத்தையும் கேள்விக்குள்ளாக்கும் முயற்சி 1994ல் தொடங்கி விடுகிறது.

1996ல் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் கோவில் நுழைவுப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டு, டாக்டர் கிருஷ்ணசாமியும் அவ்வூருக்கு வருகிறார். கோவில் நுழைவுப்போராட்டம் காவல்துறையினரால் தடுக்கப்படுகிறது. பேச்சுவார்த்தை பலனளிக்காமல் திரும்பிச் சென்றுவிடுகிறார். அதன்பின்னர் ஜான்பாண்டியன் தலைமையிலும் ஒரு முயற்சி செய்யப்பட்டது. எனினும் முயற்சி பலனளிக்கவில்லை. கோவில் கதவு அடைக்கப்பட்டு, சீல் வைக்கப்படுகிறது. இந்நிலையில் தேவேந்திரர்கள் நீதிமன்றத்தை அணுகினார்கள். அவர்களுக்கு ஆதரவான தீர்ப்பும் கிடைக்கிறது. தீர்ப்பின் சாராம்சம் "இக்கோவில் எந்த சாதிக்கும் உரிமையானதல்ல; அனைத்து சாதிக்கும் சொந்தமானது, பொதுவானது"

இத்தனை நிகழ்வுகள் நடைபெற்று இருந்தாலும் ஆதிக்க சாதிகளுக்கும், தலித்துகளுக்கும் இடையே நேரடியான மோதல்கள் நடைபெறவில்லை. அதற்கான சமூகக்காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தீர்ப்பு வந்தவுடன் தலித் இளைஞர்கள் மீண்டும் நடவடிக்கையில் இறங்கி முயற்சிக்கும் பொழுது காவல்துறை அவ்வூரில் முகாமிடுகிறது. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய காவல்துறை ஆதிக்க சாதியினருடன் ஊடாடி உறவு கொண்டு கோவிலைத் திறந்துவிடாமல் மௌனம் காக்கிறது. அவ்வூர் கிராம அலுவலர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த அதிகாரம் படைத்தவர் 'கோவில் பூசாரியைக் காணோம்' என்று அறிவிக்கிறார்.

மிகக் கேவலமான முறையில் நடைபெற்ற இந்த நாடகத்திற்கு மனுவே சூத்திரதாரியாக இருந்தான். மேற்கண்ட தாமதப்படுத்தும் நடவடிக்கையெல்லாம் ஆதிக்க சாதிகள் உயர்நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்று வர வாய்ப்பளிக்கும் மிகக்கேவலமான கொழுப்பெடுத்துப்போன நடவடிக்கையாகும். உயர்நீதிமன்றம் இவர்களுக்குத் தடையுத்தரவு வழங்கவில்லை. மாறாக வழக்கு நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் அவ்வூரில் முகாமிட்டு இருந்த அந்த சில நாட்கள் ஊரில் அமைதி நிலவியது.

இந்நிலையில், தேவேந்திரர்களின் வீடுகளின் மீது தினமும் கற்கள் வந்து விழுகிறது. ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் அல்ல, தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேலாக பல்வேறு தேவேந்திரர்களின் வீடுகளின் மீது திட்டமிட்டு கல்வீசப்படுகிறது. தினமும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படுகிறது. காவல்துறை எந்த நடவடிக்கையும் ஆதிக்க சாதியினர் மீது எடுக்கவில்லை. காவல்துறை அதிகாரியின் ஆலோசனையின் பேரிலே இது நடைபெறுகிறது என தேவேந்திரர்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர்.

காரணம், சூத்திரமேல்சாதியினர் எக்காரணம் கொண்டும் நேரடி மோதலுக்கு தயாராக மாட்டார்கள் என்று தேவேந்திரர்கள் நம்புகின்றனர். இது உண்மைதான் என்பதை கள ஆய்வு புலப்படுத்துகிறது. எனவே காவல்துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் சூத்திரமேல் சாதியினர். இவர்கள் அவ்வூர் மேல்சாதியினருக்கு கொடுத்த ஆலோசனையின் பேரில்தான் கல்வீசப்பட்டது. இது தேவேந்திரகுல மக்களை ஆத்திரமூட்டி சட்ட ஒழுங்கு என்ற சட்டகத்திற்குள் சிக்க வைக்க பெருமுயற்சி எடுக்கப்பட்டது என்ற போதிலும் தேவேந்திரர்கள் ஆத்திரம் கொள்ளாமல் புகார் செய்த வண்ணமே இருந்தனர். இப்பொழுது ஆத்திரம் காவல்துறைக்கு ஏற்பட்டது. எனவே புகார் கொடுக்க சென்றவர்கள் மீது "மேல்சாதியினர் வீடுகள் மீது கல்லெறிந்தவர்கள் நீங்கள்தான்" எனக்கூறி கைது செய்தனர். பின்னர் தேவேந்திரர் குடியிருப்புகளுக்குள் காவல்துறை நுழைந்து அட்டகாசத்தை துவக்கியது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று கூட பாராமல் அனைவரும் அடித்து நொறுக்கப்பட்டனர்.

வீட்டில் உள்ள பொருட்கள் நாசமாக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். நிராயுதபாணிகளான தேவேந்திரர்கள் காவல்துறையின் சாதிவெறிப்பிடித்த தாக்குதலின் முன்பு நிலை குலைந்து போனார்கள். தமிழக வரலாறு முழுவதும் பண்பாட்டுத்தளத்தில் நடைபெற்று வரும் வர்க்கப்போராட்டத்தின் ஒரு பகுதியாக பந்தப்புளியும் தன்னை பதிவு செய்து கொண்டது. மீண்டும் ஒரு கொடியங்களும் அங்கே அரங்கேறியது. ஆதிக்க சாதிகளுக்கு எதிரான பள்ளுவின் எதிர்ப்பு, வரலாறு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்றுதான் வந்திருக்கிறது. பள்ளுவின் எதிர்ப்புகளை, முணுமுணுப்புகளை வரலாறு பள்ளு இலக்கியத்தில் பதிவு செய்து கொண்டே வந்துள்ளது.

குட்டை தனிலடிக்க வந்தசார மெதிர்த்து

நின்று கூறினால் தெரியும் வியகாரமங்

கட்டுடனுனது பறையெல்லாம் சொல்வேன் போலீசுக்

கச்சேரி கேசியப்பால் சொல்வேன்

நட்டணை செய்தான் இளம்பங்கண்டோ நமது குற்றம்

நாலுபேர் சொல்லும் சாட்சியுண்டோ? (சாமிநாதபூபதிப் பள்ளு)

பள்ளுவின் எதிர்ப்பு, பந்தப்புளியில் குடும்பஅட்டைகளை அரசிடம் திரும்பக் கொடுத்துவிடுவது என்ற வடிவில் நடைபெற்றது. இது ஒரு சாதாரண செய்தியல்ல. இந்திய குடியுரிமைச் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கிய நிகழ்வாகும். தலைகவிழ்ந்து, வெட்கப்பட வேண்டிய அரசு எந்தவிதமான தாழ்வுணர்ச்சிக்கும் ஆட்படாமல், வேடிக்கை பார்த்தது. சொரணை கெட்டு நின்றது. சங்ககாலப் பெருமைபேசும் திராவிடத் தமிழர்களின் ஆட்சியில் கூட 'கடைசியர்' என்று அழைக்கப்படும் சங்கத்தமிழனின் அடிப்படை உரிமை கேள்விக்குள்ளாக்கப்பட்டது கண்டு யாரும் வெட்கப்படவில்லை. தமிழ்பண்பாடு மீண்டும் ஒருமுறை களங்கப்படுத்தப்பட்டது.

பந்தப்புளியில் உள்ள எழுபது தேவேந்திர குடும்பங்களும் தங்களுடைய இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு எட்டு கிலோ மீட்டர் நடந்து சென்று ஒரு மலையடிவாரத்தில் குடியேறியது. உத்தப்புரம் போலவே இது தோன்றினாலும் அடிப்படையில் வேறுபட்டு நின்றது.

உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டவுடன், ஆதிக்கச் சாதியினர் ஊரைக் காலி செய்துவிட்டு, மலைக்குன்றில் குடியேறினார்கள். பந்தப்புளியில் பள்ளர்கள் ஊரைக் காலி செய்துவிட்டு, மலையடிவாரத்தில் குடியேறினார்கள். உத்தப்புரத்தில் ஆதிக்கச் சாதியினரை சமாதானப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் முதல் அனைத்து அதிகாரிகளும் மலைக்குச் சென்றனர். பக்கத்து கிராம அனைத்து ஆதிக்க சாதிகளும் அனைத்து உணவுப் பண்டங்களையும் கொண்டுபோய் கொடுத்தனர். அனைத்து டி.வி., பத்திரிகை நிருபர்களும் சென்று படமெடுத்து தினமும் அனைத்து ஊடகங்களிலும் பிரசுரித்தவண்ணம் இருந்தனர்.

ஆதிக்கச் சாதியினர் மிகவும் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி தமிழக மக்களின் மனதில் விதைத்தனர். மேல்சாதி ஆதிக்க மீட்டுருவாக்கத்தில் அரசு, ஊடகங்கள், ஆதிக்கச் சாதியினர் என்ற முக்கூட்டு தன்மை வெளிப்பட்டது. ஆனால் மலையடிவாரம் சென்ற பள்ளர்களைத் தேடி மாவட்ட ஆட்சியரோ, வட்டாட்சியரோ, காவல்துறை அதிகாரிகளோ, பத்திரிகை நிருபர்களோ என யாரும் செல்லவில்லை. இரண்டாம் நாள் மாலை காவல் துணைக் கண்காணிப்பாளர் மட்டும் சென்று பெண்களிடம் பேசிவிட்டு வந்துவிட்டார். யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. சுற்றுக்கிராமத்தில் வசிக்கும் சில தேவேந்திரர்கள் மட்டும் அரிசி கொண்டுபோய் கொடுத்து வந்தனர்.

பூச்சிக்கடியாலும், கொசுக்கடியாலும் அவர்களது குழந்தைகள் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. "வேண்டாங்க இந்த தீண்டாமைக் கொடுமை" என படித்த பள்ளிகளின் அலறலும், அடிமைகளாகவே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட முதியவர்களின் கதறுதலும், அந்த இரவில் குன்றுகளில் எதிரொலித்தது. பெரிய கட்சிகளும் சிறிய கட்சிகளும் கூட அங்கு செல்லவில்லை என்பதுதான் உண்மையாகும். உத்தப்புரத்தில் வரிந்து கட்டியவர்கள் எல்லாம், பந்தப்புளியில் ஊமையாகிப்போனது மனுவின் திருவிளையாடலே. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், புதிய தமிழகம் கட்சியும் மட்டுமே அவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு நம்பிக்கையளித்து வருகின்றன.

தேவேந்திரர்கள் தங்களது சாமி, ஊருக்குப் பொதுவானதே என்றுதான் கூறுகிறார்கள். நீதிமன்றமும் இதையே உறுதி செய்துள்ளது. தீண்டாமையின் கோரம் அந்த உழைப்பாளிகளின் பொருளாதார அடிப்படையையே தகர்த்துள்ளது. பொருளாதார இழிநிலையைத் தொடர்ந்து, சமூகக் கலாச்சார இழிநிலையும் நிழல்போல் ஒட்டிக்கொண்டே இருந்த நிலை இன்றும் நீடிப்பதைக் காண்கிறோம். இதுவே இன்றைய தமிழகத்தின் யதார்த்தமாகும்.

இறுதியாக வட்ட ஆட்சியரும், கிராமஅலுவலரும், காவல்துறை துணை ஆய்வாளரும் இடமாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற கண்துடைப்பு நாடகத்தை தவிர, வேறு திடமான நடவடிக்கைகள் ஒன்றுமில்லை என்பதுதான் இன்றைய நிலை.

நன்றி: 1. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி)

அம்பேத்கர் ஆய்வு மையம் கள ஆய்வு அறிக்கை

2. பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை -கோ. கேசவன்

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com