Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஜனவரி 2009
யாழ்ப்பாணத் தென்னை
சோலைசுந்தரபெருமாள்

முத்துவேல்பிள்ளையின் வாழ்வை ஒரு தென்னை மரம்தான் மூழ்கடித்து பிரச்சனையாக அமைத்துவிட்டது. இது இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்டதில்லை. இரண்டாம் தலைமுறையாய் இருக்கும் பங்காளி பாகஸ்தர்களோடு வெட்டுகுத்து என்று ஆரம்பித்து, வழக்கு வாய்தா வரை போயும் தீர்ந்த பாடில்லை. இவர் வாழ்வே அந்தத் தென்னை மரத்தோடும் அதோடு எழுந்த பிரச்சனையோடும் பிணைந்து போய் விட்டது. இவரோட அப்பார், யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வந்து போட்ட விதை முதல். இந்த தென்னைமரமும், இவரும், இவர் தம்பிக்காரனும் சேர்ந்தேதான் ஆளானார்கள். இப்படியாகும் என்று முன்பே தெரிந்திருந்தால் கழுத்தை முறித்துப் போட்டு இருப்பார். அவரை அந்த அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.

இந்த தென்னை மரம் ஆளாகி நான்கே வருசத்தில் காய்க்க ஆரம்பித்துவிட்டது. காய்ன்னா காய், ஒரு இளநீயைப் பறித்து ஒருவர் அவ்வளவு சட்டுன்னு குடித்திட முடியாது. அவ்வளவு பெரிசாய் இருக்கும். இத்தனைக்கும் ஒரு குலைக்கு இருவது முப்பது என்று பிதுங்கித்தான் கிடக்கும். அன்றைக்கு இவரும் தம்பிக்காரனும் "நான் நீ" என்று போட்டிபோட்டுக் கொண்டு அந்தத் தென்னைக்கு சவரட்சனை செய்தார்களோ அதைவிட இன்றைக்கு 'உன்னை வச்சேனா பாரு தேவடிக்கா' என்று எதிரும்புதிருமாய் நின்றார்கள்.

'இந்தா பாருடா! இந்தத் தென்னை மரம் என் வீட்டை பாழ்படுத்திக்கிட்டு இருக்கு. ஒழுங்கா வெட்டிப்புடு. இல்ல நான் பொறுத்துக்க மாட்டேன்..' என்று வாய் வார்த்தையாக ஆரம்பித்திருந்தார், முத்துப்பிள்ளை.

'இந்த யாழ்ப்பாணத்து தென்னைமரத்தை நான் பாக்கும் போதெல்லாம் அப்பாவே வந்து நிக்கிறாப்போல இருக்கு. இது என் பங்கு பாகத்துக்கு வந்தப் பிற்பாடுதான் இவ்வளவு சொத்து சேந்து ஊருல பெரிய மனுசனா நிக்கிறேன்...நான், அந்த தென்னை மரத்தை வெட்ட முடியாது' என்று கறாராக நின்றுவிட்டார் அவர் தம்பி சதாசிவம்.

ஊரில் உள்ளவர்கள் ஒருவர் மாறி ஒருவராக பேசிப்பார்த்தார்கள். அண்ணன் தம்பிகள் அவரவர் பேசியதில் விடாக்கண்டனாக பிடித்தப்பிடி தளராமல் நின்று கொண்டார்கள். 'இனிமே ஊர்காரவங்க பேசித் தீர்க்க முடியாது. அது உங்க குடும்பப்பிரச்சனை. உங்களுக்குள்ளேயே தீர்த்துக்க முடியாட்டா அவங்கஅவங்க வழியப் பாத்துக்குங்க' என்று கைகழுவிக்கொண்டார்கள்.

உற்றார் உறவுக்காரர்கள் முன்னே வந்து தான், மூத்தவராக இருக்கும் முத்துவேலுப் பிள்ளைக்கு பரம்பரையாக வாழ்ந்து வரும் மூன்று கட்டு ஓட்டுவீட்டை ஒதுக்கி அதற்கு சமமாக இருந்த மனையை சதாசிவத்துக்கும் எல்லைப்போட்டுக் கொடுத்தார்கள். அந்த வீட்டை ஒட்டி இரண்டு முழம் தள்ளி இருந்த தென்னை மரத்தை உள்ளே வைத்து சதாசிவம் வேலிபோட்டுக் கொண்டார். அந்த தென்னையால் அப்போதைக்கு பிரச்சனை ஏதும் எழவில்லை. அது வளர வளர அடிக்கடி அந்தத்தென்னை வைக்கும் குரும்பையில் இருந்து மட்டை வரையிலும் அந்த ஓட்டுவீட்டு முதல்சாரியில் விழுந்து ஏராளமான ஓடுகளை நொறுக்கி நாசப்படுத்திக் கொண்டு இருந்தன.

சதாசிவம் தன் பங்குக்கு ஒதுக்கின மனையில் முதலில் சின்னக்கூரை வீட்டைக் கட்டினார். கொஞ்ச காலத்திலேயே ஒற்றைசாரி ஓட்டு வீடாக மாற்றிக் கொண்டார். அவரோட மூத்த மவன் தலை எடுத்து விசாலமான மச்சி வீடு கட்டினான். முத்துவேலு பிள்ளைக்கு பிறந்தது மூன்றும் பொண்ணாப்போயிட்டு. இந்தப் பொண்ணுங்களை மானமரியாதையோட கட்டிக் கொடுக்கணுமேங்கிற கவலையில் இருக்கும் போதுதான் தென்னை மரத்தினால் பிரச்சனை ஏற்பட்டு அவரை அலைக்கழித்தது.

சேதப்பட்ட ஓடுகளை சீர் செய்தால் பத்து நாள் கூட தாங்காது. திரும்பத் திரும்ப தேங்காய் விழுந்து சேதப்படுத்திக் கொண்டு இருந்தன. முத்துவேல் பிள்ளை ஆவேசப்பட்டு கோடாளியைத் தூக்கிக் கொண்டு மரத்தை வெட்டப்போய்விட்டார். சதாசிவமும் அவர் மூத்தமவனும் தடுக்கும்போது அடிதடியோடு முத்துவேல் பிள்ளைக்கு ரணம் விழுந்து ரத்தம் பீரிட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் அப்போதைக்கு அவர்களை அடக்கி ஆவேசத்தை குறையச் செய்தார்கள்.

தென்னைமரம்ன்னா தென்னை மரம் அலுப்பைச் சலுப்பையா இருக்காது. நாற்பது அடி உயரத்தில் இருக்கும் அடிமரத்தை ஒரு ஆள் கட்டிப்பிடிக்க முடியாது. தலை குருத்துப்பாகம் குறுகி போயிருந்தாலும் அடம்புக்கு குறையில்லை. நெருக்கமான மட்டைகள், மட்டைக்கு மட்டை குலை தள்ளியிருந்தது. குலைக்கு இருவது முப்பது குரும்பைகள், தேங்காய்கள். இந்த மரத்தில் ஏறி எல்லோராலும் பறித்துவிட முடியாது. பயப்படுவார்கள். தங்கையாநாடார் தான் துணிந்து ஏறுவார். அவராலும் இப்போதெல்லாம் முடிவதில்லை. அப்படி மலைத்துப்போனார்.

'காய்ந்து குலுங்கிக்கிட்டு இருக்கிற தென்னைமரத்தை வெட்டினா அந்தக் குடும்பம் அல்லல்பட்டு விருத்தியாகாது' என்கிற நம்பிக்கை உள்ளவர்களால் சதாசிவத்தை மிரட்டி உருட்டி வெட்டச் சொல்லவும் முடியவில்லை. 'இனி பொறுத்துக் கொள்ள முடியாது. என் குடும்பத்தையே நாசப்படுத்துற இந்தத் தென்னை மரத்தை சட்டப்படி வெட்டிச்சாய்க்காம நான் தெக்கப்போய் சேரமாட்டேன். இல்லாட்டா நான் என் அப்பனுக்கு பொறக்கிலன்னு வச்சிங்க' என்று பேசிவிட்டுப் போனவர் போலீஸ்ன்னும் கோர்ட்டுன்னும் நடையா நடந்தார்.

நான்கைந்து ஆண்டுகளில் அந்தச்செலவு இந்தச்செலவு என்று கொஞ்சம் கொஞ்சமாய் சுவாதின உரிமையோடு இருந்த ஒரு வேலி நஞ்சையையும் பத்துப் புளியமரத்தோடு இருந்த புஞ்சையையும் விற்று சாசனம் செய்து கொடுத்தது தான் அவர் கண்டபலன். 'காய்ப்புக்குள் இருக்கிற தென்னை மரத்தை வெட்ட உத்தரவு கொடுக்க முடியாது' என்றும் கலெக்டரை பார்வையிட்டு இரு தரப்பினருக்கும் பாதகம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வழிகாட்டியாகிவிட்டது.

கலெக்டரும் பார்வையிட்டு ஊரில் உள்ளவர்களை வைத்துக்கொண்டு இந்த தென்னை மரத்தால் ஏற்படும் சேதத்தை தடுக்க தடுப்பு மூங்கித்தட்டிப் போட்டு கொடுக்கவும் மேற்கொண்டு சேதம் ஏற்பட்டால் சதாசிவமே அதை சீர் செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவு சொல்லப்பட்டது. இந்து ஏற்பாடு தொடராமல் ஒருவருக்கு ஒருவர் சளைக்கவில்லை. வம்படியில் நின்று கொண்டு இருந்தார்கள்.

முத்துவேலுப்பிள்ளைக்கு பெத்தப்பேராய் மிஞ்சி இருப்பது மூன்று கட்டு ஓட்டு வீடுதான் சொத்தாய் தங்கியிருந்தது. அதைக்கூட அவரால் ஒழுங்காக பராமரித்து வைத்துக் கொள்ள முடியாதபடி வருவாய் இல்லாமல் போனது. கடைசி பெண்ணும் கல்யாணத்திற்கு நிற்கிறாள். அவர் மனைவி அவருடைய செயலைச் சொல்லி சொல்லி அவர் மனசை ரணப்படுத்தி வருகிறாள். அவர் நொந்துபோய் கொண்டிருந்தார். கூடவே அவருடைய மூத்தப்பொண்ணைக் கட்டிக்கொடுத்த இடத்தில் சொன்னபடி, 'சீர்செனத்தி' செய்யவில்லை என்று ஏற்பட்ட பிரச்சனையில் மருமகனையும் வீட்டோடு அழைத்துக் கொண்டு வந்து வைத்துக் கொண்டார்.

அந்த மருமகனும் மாமனார் இழுத்த இழுப்புக்கெல்லாம் நின்று கொண்டு இருந்தான். இப்போது தன்னுடைய மகளும் கல்யாண வயதில் நிற்கும்போது வேறு வழியில்லாமல் ஒரு நெல்வியாபாரியிடம் போய் கணக்கனாய் இருக்கிறான். கிடைக்கும் வருவாய் நித்தியாபாட்டுக்கே இழுபறியாக இருந்து கொண்டு இருக்கும்போது முத்துவேலுப்பிள்ளையும் யார் முகத்திலும் விழிக்க கூச்சப்பட்டு வீட்டோடு அடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று. ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும் அவர் விட்ட சவுடாலை நிலைவேற்ற முடியவில்லை என்ற ஏக்கம் அவர் அடிமனசில் கிடந்து வெக்கையைத் தந்து கொண்டு இருந்தது. அதற்கு ஏற்றாற்போல அவர் தம்பிக்காரன் சதாசிவம் சொத்துபத்து சேர்த்து மூத்த மகனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் போட்டுக் கொண்டுவிட்டார்.

அந்த யாழ்ப்பாணத் தென்னைமரம் நாளுக்கு நாள் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அது தலைகுறுகி குலைத்தள்ளுவதை நிறுத்திவிடும என்று பலரும் எதிர்பார்த்தது வீண்போயிற்று. சதாசிவத்தின் மருமகள் தன்னுடைய பெரிய மாமனார் குடும்பம் இப்படி இளக்காரமாகப் போனதைப் பற்றி ஊராரிடம் இதே பேச்சாக இருப்பதை காதில் வாங்கும்போது, என்ன இருந்தாலும் அந்த இழிவு நமக்கும் இல்லாமலாப்போகும் என்ற நினைப்பில் அந்த நாத்தியிடம் சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் பேச்சுக் கொடுத்துப் பார்ப்பாள். அவள் மூஞ்சைத் திருப்பிக் கொண்டு இருந்துவிடுவாள்.

முந்தாநாள் காற்றும் மழையும் தொடங்கியபோது அந்த தென்னமரம் அலைக்கழித்து இரண்டு மூன்று தேங்காய்குலைகள் பிய்த்துக் கொண்டு முத்துவேலுப்பிள்ளையின் ஓட்டுவீட்டின்மேல் வந்து விழுந்து ஓடுகள் சிதறி சின்னாபின்னமாகப் போய்விட்டன. இந்த முறை வீட்டின் ஒரு பகுதியே பெரிதாக சேதப்பட்டுப் போய்க்கிடந்தது. முத்து வேலுப்பிள்ளையின் மனைவி ஓவென்று ஒப்பாரியே வைத்துவிட்டாள். சதாசிவத்தின் மருமகள் பதறிப்போய்விட்டாள். ஆனால் அதை யாரிடமும் காட்டிக்கொள்ள முடியவில்லை. அப்படி இப்படி வெளியே வந்த பார்த்து யாருக்கும் சேதம் இல்லை என்று தெரிந்துகொண்டபின் தான் அவருக்கு நல்ல இருப்பு வந்தது. அதுவும் அவளுக்கு நீடிக்கவில்லை. அன்றைய விடியலில், முத்துவேலு பிள்ளையின் பேத்தி தையல் நாயகியை காணவில்லை என்றதும், நானும் என் குடும்பமும் நாசமாப்போயிட்டோம் என்று அவர் மனைவியும் அவரும் வயிற்றில் அடித்துக் கொண்டு அழுதுதேடிக் கொண்டு அலைந்தார்கள். ஊரே தையல்நாயகியைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. மழையும் காற்றும்விடவில்லை.

'இவ்வளவு பஞ்சத்திலயும் பசியிலயும் கிடந்த அந்தக்குட்டி எப்படி மொழுமொழுன்னு வளர்ந்து கிடந்தா, தெனவு எடுத்துருக்கும். 'அப்பனும் பாட்டனும் எங்க கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்க' ன்னு எவனையாவது புடுச்சிக்கிட்டு ஓடிப்போயிருப்பா...' என்று பேசிக் கொண்டிருப்பதை காதில் வாங்கும்போதும் தன்னோட மாமனாரும் மாமியாரும் ஏன் அவள் கணவரும் கூட வெளிக்கிளம்பாமல் கிடப்பதைப்பார்த்தாள். அவளுக்குப் பற்றிக் கொண்டுதான் வந்தது. அவள் ஆத்திரத்தை யாரிடமும் காட்டமுடியவில்லை.

அன்று இரவு முழுவதும் காற்றும் மழையும் அடித்து ஓய்ந்திருந்தது. பொழுது விடிந்து நீண்டநேரம் கழித்து சதாசிவம் அந்த யாழ்ப்பாணத்து தென்னைமரம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து விடுபட அப்போதுதான் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். அவர் மருமகள் காபியை எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்துவிட்டு, 'மா...மா..' என்ற அவள் அழைப்பு வார்த்தை வெளிப்படுவதற்குள் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது.

சதாசிவம் எழுந்து வெளியே தலைநீட்டிப் பார்த்தார். காரிலிருந்து அவருடைய சொந்த மச்சினர் இறங்கினார். தொடர்ந்து அவர் சின்னமகனும் அவர் அண்ணன் முத்துவேலுப் பிள்ளையின் பேத்தி தையல் நாயகியும் மாலையும் கழுத்துமாக இறங்கினார்கள். சதாசிவம் அப்படியே பிரமை தட்டி நின்றுவிட்டார்.

வாசலில், இரவு அடித்த பேய் காற்றில் யாழ்ப்பாணத்து தென்னை முறிந்து மச்சி வீட்டின் மீது விழுந்து அதன் குறுத்தோலைகள் விரிந்து வாசலில் தொங்கிக் கிடந்தன. தையல்நாயகியும், அவள் கையைப் பற்றியிருந்தவனும் அண்ணாந்து பார்த்தார்கள். வெளிர் வாங்கிக்கொண்டு இருந்த மானத்திற்குக் கீழ் பிரம்மாண்டமான அந்த யாழ்ப்பாணத்து தென்னைமரம் முறிந்து மொட்டையாக நின்று கொண்டு இருந்தது.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com