Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
Semmalar
ஜனவரி 2009
தெலக்கப்பள்ளி ரவியுடன் நேர்காணல்
சந்திப்பு : சோழ. நாகராஜன்

தெலங்கு இலக்கியப் பாரம்பரியம், ஆந்திராவில் முற்போக்கு இலக்கிய இயக்கம் தோன்றியது- இவைப் பற்றியெல்லாம் சொல்லுங்களேன்....

ஆந்திர மாநிலம் மிக நீண்ட இலக்கியப் பாரம்பரியம் கொண்டது. 1930களிலேயே மகாகவி ஸ்ரீ ஸ்ரீ புரட்சிகரமான கவிதைகளை எழுதத் தொடங்கினார். அவர் 'மகாபிரஸ்தானம்' கவிதை எழுதினார். அதன் பொருள் 'நெடிய பயணம்' என்பதாகும். முன்பு கந்துகூரி வீரேசலிங்கம், குரஜாடா அப்பாராவ் போன்ற சமூக சீர்திருத்தக் கவிஞர்கள் இருந்தனர். இவர்கள் எல்லோருமே சென்னையை தளமாகக் கொண்டு இயங்கினவர்கள். கந்துகூரி வீரேசலிங்கம் பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்தார். பாரதி தனது சந்திரிகையின் கதையின் கதாநாயகனாக அந்தக் கந்துக்கூரி வீரேசலிங்கத்தைத்தான் வைத்தார். ஆக, குரஜாடா அப்பாராவ், கந்துக்கூரி வீரேசலிங்கம் போன்றவர்களே ஆந்திர மாநிலத்தில் சீர்திருத்த இயக்கத்தின் தீயை மூட்டிவிட்டனர். அவர்களே அதில் முன்னோடிகளாயிருந்தனர். அதன் பின்னர் உருவாகி, வளர்ந்து வந்த கம்யூனிஸ்ட் இயக்கம் இந்த வளமையான பாரம்பரியத்தின் தொடர்ச்சியினைத் தனதாக்கிக் கொண்டது. இதன் காரணமாகவே புரட்சிகர இலக்கியத்தின் அடையாளமாக மகாகவி ஸ்ரீ ஸ்ரீ விளங்குகிறார்.

வீரம்செறிந்த தெலுங்கானா இயக்கம் முன்னுக்கு வந்த சமயம் அது. இந்த இயக்கத்தை ஆதரித்து 'மாபூமி' போன்ற ஏராளமான நாடகங்கள் உருவாகின. அதுபோலவே 'புர்ரகதா' எனும் கலை வடிவமும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மக்கள் மத்தியிலே ஆதரவு கோரி தடம் பதித்தன. அதில் தெலுங்கானா வீரர்களின் வீரம் செறிந்த போராட்டங்களை விவரித்தனர். அவர்களின் உன்னதமான செயல்பாடுகளை மக்களிடையே பிரச்சாரம் செய்தனர். இது மூன்று மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட்டது. கிராமப்புற மக்கள் பெரும் திரளாக இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர். இதுபோன்ற கலை வடிவங்களின் துணையோடு ஆந்திரப் பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக நீண்டகாலம் செயல்பட முடிந்தது.

அது சென்னை ராஜதானியாக இருந்த காலம். கம்யூனிஸ்ட்கள் ஆந்திராவின் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற முடிந்தது. 1940களில் தொடங்கி 1950கள் வரை தெலுங்கில் முற்போக்கு இலக்கியத்தின் பொற்காலமாக இருந்தது என்றே சொல்லலாம். அந்தத் தாக்கத்தின் தொடர்ச்சி இன்று வரையில் பல வகைகளில் தொடர்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இன்று ஆந்திரத்தில் சிரஞ்சீவி கூட தன்னை ஒரு இடதுசாரி தோற்றம் கொண்ட ஒரு ஏழைப் பங்காளனாகவே காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

துவக்க காலத்தில் எழுத்தாளர் இயக்கம் என்பது அப்யூதயா ரஜய்தள சங்கம் என்றிருந்தது. நக்சல்பாரிகள் விப்ளவ ரஜய் தள சங்கம் என்று துவங்கினர். இதன் தாக்கம் சிறிது காலம் இருந்தது. 1970ல் நக்சல்கள் துவங்கிய இந்த இயக்கம் 1975 அவசர காலத்தில் பின்னடைவைக் கண்டது. அந்தக் காலகட்டத்தில் தெலுங்கு இலக்கியத்துறையிலேயே ஒரு வெற்றிடம் ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அப்போதுதான் உள்மன உலகத்துக்குள் சஞ்சரிக்கிற எழுததாளர்கள் முன்னுக்கு வந்தனர். சமூக அக்கறை குறைந்தது.

1980களில் கொஞ்சகாலம் 'சுத்ரசாகித்யம்' என்று சொல்லப்பட்ட வகை நாவல்கள், மிகவும் பிரபலமாக இருந்தன. இவை பில்லி சூனியம், மந்திரம் என்று மூடநம்பிக்கை பரப்பின. இவையெல்லாம் மிக விரைவிலேயே எங்கள் மண்ணின் வளமான இலக்கியப் பாரம்பரியத்தின் காரணமாக பின்னுக்குச் சென்றன. 80களின் முடிவில் தலித்தியம், பெண்ணியம், பிரதேசவாதம் மற்றும் பின்நவீனத்துவம் போன்றவை முன்னேவந்தன. 90களில் புதிய பொருளாதாரக் கொள்கை போன்ற மாற்றங்கள் வந்த போது இந்த இலக்கியப் போக்குகளெல்லாம் பெரிதாக நீடிக்க முடியவில்லை. இந்த வகை இலக்கியப் போக்குகள் மக்களைப் பிளவுபடுத்துவதாகத்தான் இருந்தன.

2000வாக்கில் மின்சார மசோதாவுக்கு எதிரான இயக்கம் அரசியல் அரங்கில் தீவிரமானபோது அதன் தாக்கம் இலக்கிய உலகிலும் பிரதிபலித்தது. அந்த நேரத்தில்தான் எங்களின் 'சாகித்ய ஷ்ரவந்தி' (இலக்கிய நதி) என்ற இலக்கிய இயக்கம் துவங்கப்பட்டது. இது 2001ல் நடந்தது. இந்தச் சமயத்தில் நாங்கள் ஒரு விஷயத்தை மக்கள் முன் வைத்தோம். எந்த வகையிலும் நம்மைக் கூறுபோட்டுக் கொள்வது நம்மில் யாருக்கும் உதவாது. மாறாக நமது ஒற்றுமைதான் நமக்கு அவசியம். நம் எல்லோரின் பொதுவான எதிரி ஏகாதிபத்தியம்தான் என்று முழங்கினோம். நீங்கள் பெண்ணியம் பேசுங்கள், தலித்தியம் பேசுங்கள், இவற்றையெல்லாம் கடந்து நாம் ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிராகக் கைகோர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம்.

ஆக, அந்தக்காலகட்டத்தில் உலகமயத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த போர்க்குணமிக்க மக்கள் இயக்கம் ஒருபுறமும், பண்பாட்டு ரீதியிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு மறுபுறம் என்று இருமுனைகளிலும் இந்த எதிர்ப்பியக்கம் கட்டமைக்கப்பட்டது. சாகித்ய ஷ்ரவந்தி இந்த உணர்வுக்கு முன் கையெடுத்தது. இதனை நாங்கள் ஒரு விரிந்த மேடையாகவே நடத்தினோம். எந்த முகாமைச் சார்ந்த இலக்கியவாதியாக இருந்தாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதவெறி எதிர்ப்பு போன்ற பொதுவான லட்சியங்களில் உடன்பாடு உள்ளவர்களை ஒருங்கிணைத்தோம். துவக்கத்தில் உலக மய எதிர்ப்பு என்பது அவ்வளவாக உருவாகியிருக்கவில்லை. ஆனால் பின்பு அது ஒவ்வொருவரின் முதன்மைக் குரலாகவே மாறியது. எனவேதான் புஷ் ஐதராபாத்துக்கு விஜயம் செய்தபோது எங்களால் பல்வேறு வடிவங்களில் எதிர்ப்பியக்கங்களை நடத்த முடிந்தது.

அதேபோலவே வகுப்புவாத எதிர்ப்பு என்பதும் எப்போதும் முன்னணியில் இருக்கிற ஒன்றுதான். பிரதான நகரங்களில் மாதாந்திரக் கூட்டங்கள் நடத்துவோம். நூல்களைப் பிரசுரித்து வெளியிடுவோம். எழுததாளர்கள் தொகுப்புகளை வெளியிடுவதற்கு உதவுவோம். வெளியீட்டு விழாக்களை நடத்துவோம். சாகித்ய ஷ்ரவந்தி சார்பிலேயே நாற்பது, ஐம்பது நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் பலவும் மூன்று, நான்கு பதிப்புகள் கூட கண்டுள்ளன.

முற்போக்கு இலக்கியத்துறையில் உங்களின் நீண்ட அனுபவம் வித்தியாசமானதாக உள்ளது. கவிதைகளைத் தாண்டி.... சிறுகதை, நாவல் மற்றும் இலக்கிய விமர்சனத்துறை இவை அங்கே எப்படியிருக்கின்றன.

இயல்பாகவே கவிஞர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். சிறுகதை எழுத்தாளர்களும் கணிசமான அளவில் இருக்கின்றனர். நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களை நாங்கள் கண்டுபிடித்து சாகித்ய ஷ்ரவந்தி மூலமாக ஊக்குவித்திருக்கிறோம். இவர்களில் 20 அல்லது 25 சிறுகதை எழுத்தாளர்கள் இருப்பார்கள். தற்போது பொதுவாக தெலுங்கு மொழியில் குறைவான நாவல்களே வந்துள்ளன. இதுபற்றியெல்லாம் தீவிரமான விவாதங்கள் நடக்கின்றன. சிறுகதைத் துறையில் தெலுங்குமொழி நல்ல வளமை கண்டிக்கிறது. உலகமயம், நுகர்வு கலாச்சாரம் மற்றும் மனித மாண்புகள் குறித்தெல்லாம் தெலுங்கு சிறுகதைகள் நிறையப் பேசுகின்றன. ஏராளமான இளம் சிறுகதையாளர்கள் வந்திருக்கிறார்கள், அதிலும் குறிப்பாக நமது வட்டாரத்திலிருந்து. கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில் சிறுகதைகள் குறிப்பிட்ட அளவு தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. வருடாந்திர சிறுகதைத் தொகுப்புகள் பல்வேறு இலக்கிய அமைப்புகளால் கொண்டுவரப்படுகின்றன.

இலக்கிய விமர்சனத்துறையும் வளர்ந்திருக்கிறது. விமர்சனத்துறை போதுமான அளவு வளர்ச்சி பெறவில்லை என்ற விமர்சனமும் உள்ளது. அதிதீவிரவாத காலத்தில் விமர்சனத்துறை பெருமளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. பிரதேச உணர்வுகள் போன்றவை தலைதூக்கியிருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் எல்லாவற்றின் மீதும் குறுகிய கண்ணோட்டத்துடனான கற்பிதங்கள், விளக்கங்கள் கொடுக்கப்படுவது நிறைய நடக்கின்றன. எனவே, அறிவியல் பூர்வமான, சரியான அணுகுமுறையுடனான விமர்சன இலக்கியம் என்பது இன்னும் பலபடி முன்னேறவேண்டியதிருக்கிறது. சாகித்ய ஷ்ரவந்தி சரியான இலக்கிய விமர்சனங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் பெரிதும் பங்காற்றியிருக்கிறது. நானே ஒரு எழுத்தாளன் என்பதை விடவும் ஒரு விமர்சகனாகத்தான் அதிகம் அறியப்பட்டிருக்கிறேன். நாங்கள் பல விஷயங்களில் எங்களின் தலையீட்டினை செய்திருக்கிறோம். அது வாசகர்களின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. இலக்கிய விமர்சனத்துறையில் நாங்கள் அத்தகைய சமன்பாடான தலையீட்டினை மேற்கொண்டிருக்கிறோம். விமர்சனத்துறை குறித்து இரண்டு, மூன்று நூல்களை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். 'பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்' என்ற ஒரு விமர்சன நூலை நான் எழுதியிருக்கிறேன்.

சாகித்ய ஷ்ரவந்தியை ஒரு முழு ஜனநாயக அமைப்பாக எடுத்துச் செல்லும் யோசனை இருக்கிறதா?

ஆந்திரத்தின் முன்னாளைய அனுபவங்களிலிருந்து நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், அதிலும் நாங்கள் அவசரம் காட்ட விரும்பவில்லை. அல்லது, அதிகமான பரிசோதனை முயற்சிகளைச் செய்யவிரும்பவில்லை. நாங்கள் மிகவும் எச்சரிக்கையாகவே அடியெடுத்து வைக்க நினைக்கிறோம். மேலும் நாங்கள் தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்குவங்க அனுபவங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறோம். தமிழ்நாடு ஒரு நீண்டகால மற்றும் வலுவான அடித்தளமுள்ள இயக்கத்தைக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். ஆனால், ஆந்திரத்தில் அப்படி இல்லை. கலைஞர்களுக்கான இயக்கமாக முழு வளர்ச்சி பெற்ற ஜனநாயக அமைப்பாக 'பிரஜா நாட்டிய மண்டலி' செயல்படுகிறது. இதனை எங்களின் எழுத்தாளர் அமைப்பான சாகித்ய ஷ்ரவந்தியுடன் எவ்வாறு ஒன்றிணைப்பது என்பதற்கு எதிர்காலத்தில்தான் விடைகிடைக்கும். ஆனால் எங்களின் சாகித்ய ஷ்ரவந்தியை ஒரு பரந்துவிரிந்த அமைப்பாகவே நாங்கள் நடத்த விரும்புகிறோம். கொள்கை ரீதியாக அது அவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் இன்னமும் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது.

அதே சமயத்தில் நாங்கள் எங்களது பத்திரிகையில் கவனம் செலுத்தவே முதலில் விரும்புகிறோம். நாங்கள் நடத்தும் இலக்கிய மாத இதழின் பெயர் 'சாகித்ய பிரஸ்தானம்' என்பது. இதனை ஒவ்வொரு இலக்கியவாதியின் கைகளுக்கும், ஒவ்வொரு இலக்கிய ஆர்வலர் கைகளுக்கும் கொண்டு சேர்க்கிற வகையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். மேலும், நாங்கள் தன்னுணர்வும் இலக்கியத்தகுதியும் நிரம்பியவர்களை நோக்கி எங்கள் கவனத்தைச் செலுத்துகிறோம். குறிக்கோளுடன் கூடிய ஒரு இலக்கியப் படையொன்றை வளர்த்தெடுக்கவிரும்புகிறோம். இதற்காக நூற்றுக்கணக்கானவர்களைத் தேர்ந்தெடுத்து பயிலரங்குகளை நடத்துகிறோம். அவர்கள் தங்களுக்குள் இலக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்கிறோம். அவர்களின் சொந்த எழுத்துக்களை நாங்கள் உள்வாங்கிக் கொள்கிறோம். அவர்களுக்கு சரியான வழிகளில் எழுதுவதற்கு உதவுகிறோம்.

இரண்டாவதாக, நாங்கள் சுதந்திரமான ஜனநாயக எண்ணம் கொண்டவர்களை அடையாளம் காண விரும்புகிறோம். அவர்களோடு எங்கள் உறவை வளர்த்துக் கொள்ள விரும்புகிறோம். மூன்றாவதாக, நமது சொந்த வெகுஜன இயக்கங்களுடன் நாங்கள் இணைந்து செயல்பட விரும்புகிறோம். மக்கள் இயக்கங்கள் தனியாகவும், இலக்கிய இயக்கம் தனியாகவுமே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிற சூழலில் இது அவசியம் என்று நினைக்கிறோம். இதற்காக எங்கள் இயக்கத்தை மேலும் ஜனநாயகப்படுத்த விரும்புகிறோம். குரஜாடா அப்பாராவ் சொன்னது போல 'மொழியையும், இலக்கியத்தையும் ஜனநாயகப்படுத்தாமல் ஜனநாயகம் என்பது முழுமை பெறாது!' என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.

இந்த நாட்டில் இன்றும் கூட இலக்கியம் என்பது உயர் வகுப்பினருக்கே உரியது என்ற கருத்து இருக்கிறது. அது பணக்காரர்களுக்கு சேவை செய்வது என்றே உள்ளது. படித்த வர்க்கத்திற்குச் சொந்தமானது என்றே நம்பப்படுகிறது. எனவே அதனை ஜனநாயகப்படுத்துவதன் மூலம் சமுதாயத்தின் கீழ்மட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம். இதன் மீதே நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். பெண்கள் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோர் போன்ற பகுதியினருடன் நாங்கள் இரண்டறக்கலக்க விரும்புகிறோம். இந்த வகையில் எங்கள் பணிகளை விரிவுசெய்ய, பலப்படுத்த மற்றும் கூர்மைப்படுத்த விரும்புகிறோம்.

ஆந்திரத்தில் முற்போக்குக் கலைஞர்களுக்கான 'பிரஜா நாட்டிய மண்டலி' இயக்கம் ஒரு கட்டுப்பாடுகள் மிக்க ஒரு ஜனநாயக அமைப்பாக செயல்படுகிறது. எழுத்தாளர்களின் இயக்கமான 'சாகித்ய ஷ்ரவந்தி' அப்படியொரு அமைப்பாக இல்லாமல் ஒரு விரிவான மேடையாக இருக்கிறது. இத்தகைய இருவகையான இயக்கங்கள் ஏன்?

'பிரஜா நாட்டிய மண்டலி' போல எங்கள் 'சாகித்ய ஷ்ரவந்தி'யையும் ஒரு ஜனநாயக அமைப்பாக மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நமக்கு வெளியே ஏராளமான படைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நம்மோடு இணைத்துக் கொள்ள நாம் இன்னும் பரந்துபட்ட, விரிவான, இன்னும் விரிவான இயக்கத்தைக் கட்டவேண்டியதிருக்கிறது. கலை, இலக்கியம், பண்பாடு என்பவை எல்லாம் மிகவும் விரிவான மற்றும் சிக்கலான தளங்கள். இங்கே எல்லாவற்றையும் ஒரு அளவீட்டின் அடிப்படையில் நீங்கள் அடக்கிவிட முடியாது. அளவு, குணம், நிஜத்தன்மை, அவற்றின் தாக்கம், பரிமாணம் என்று பலவும் இங்கே கணக்கிலெடுக்கப்படும். எனவே, கலைத்துறைக்கும் இலக்கியத்துறைக்கும் வேறுவேறான தன்மையிலான இயக்கங்களின் தேவை என்பதே ஆந்திராவில் எங்களின் துவக்ககால அனுபவத்திலிருந்து நாங்கள் புரிந்து கொண்டதாக இருக்கிறது.

வரலாற்றுக் காரணங்களும் இருக்கின்றன. இருந்தாலும் எங்கள் எழுத்தாளர் இயக்கத்தை எப்படி ஒருமுகப்படுத்தி, ஒரு அமைப்பாக உருவாக்குவது என்ற கேள்வி எங்களிடமும் இருக்கிறது. அதேபோல, எங்களின் கலை அமைப்பான பிரஜா நாட்டிய மண்டலிக்கும் சில பிரச்சனைகள் உண்டு. அது முறையானதொரு அமைப்பாகச் செயல்படுவதனாலேயே கலைஞர்கள் பலர் அதற்கு வெளியே நிற்கின்றனர். எனவே கலை அமைப்பை எப்படி விரிவாக வளர்த்தெடுப்பது என்ற கேள்வியும், இலக்கிய இயக்கத்தை எவ்வாறு ஒரு முறையான அமைப்பாக வளர்த்தெடுப்பது என்ற கேள்வியும் இருக்கத்தான் செய்கின்றன. இவை ஒருபுறமிருக்க, ஓவியக்கலைஞர்கள், படைப்பிலக்கியம் சாராத கட்டுரையாளர்கள், மின்னணு ஊடகத்துறையினர், தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றுவோர் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த பல நூறு எழுத்தாளர்கள் இன்னமும் நமக்கு வெளியேதான் இருக்கிறார்கள்.

அவர்களுக்கெல்லாம் பண்பாடு சார்ந்த பிரச்சனைகளுக்கு அப்பால் தொழில் சார்ந்த பிரச்சனைகள், கோரிக்கைகள் இருக்கும். எனவே, நமது எழுத்தாளர் அமைப்பை இன்னும் விரிவாக எடுத்துச் சென்று, இந்தப்பகுதி படைப்பாளர்களைக் கவர வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும், நம்மை நாமே இன்றைய காட்சி யுகத்திற்கு ஏற்ப, இணையதள யுகத்திற்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கிறது. திரைப்பட இயக்கத்தையும் இதுபோல நாம் உருவாக்க வேண்டியதிருக்கிறது. எனவே, இத்தகைய விரிவான, பரந்துபட்ட இலக்கிய இயக்கத்தையே எதிர்வரும் காலத்தில் உருவாக்கி, வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது ஒன்றே சொல்வேன்.

உங்களது இலக்கிய மாத இதழ் குறித்துச் சொல்லுங்கள்....

சாகித்ய ஷ்ரவந்திக்கு முன்பு இருந்த அமைப்பின் பெயரும் சாகித்ய பிரஸ்தானம்தான். எங்களின் மாத இதழின் பெயரும் 'சாகித்ய ப்ரஸ்தானம்தான், அப்போது ஒரு படைப்பின் உள்ளடக்கத்திற்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வந்தோம். வடிவத்தில் அவ்வளவு கவனம் செலுத்தவில்லை. சாகித்ய ஷ்ரவந்தி உருவானதன் பின்பு எங்களது இலக்கிய இதழான 'சாகித்ய பிரஸ்தானம்' அழகியல் ரீதியிலும் வடிவ நேர்த்தியை நோக்கியும் நகர்ந்தது. ஒருவர் மார்க்சிய அடிப்படையில் ஒரு படைப்பினை முன்வைக்கிறாரோ, இல்லையோ இதனைத் தாண்டி அவருக்கு அந்த உணர்வு இருந்தால் போதும்.

வாழ்க்கையின் முழுமையை, அதன் முடிவில்லாத் தன்மையை, அறிவியலை மறுக்காத, சமூக முன்னேற்றத்தை மறுதலிக்காத எல்லா வகையான படைப்புகளையும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இலக்கியம் உள்ளிட்டு 15 முதல் 20 வரையிலான விஷயங்களை எங்களது மாத இதழில் பிரசுரிக்கிறோம். குறைந்தபட்ச முற்போக்கு சிந்தனை உள்ள எந்த எழுத்தாளரும் இந்த உள்ளடக்கங்களில் ஒன்றில் தன்னை - தனது படைப்பை இணைத்துக் கொள்ள முடியும். சிறுகதை, கவிதைகளைத் தாண்டி ஒருவர் இலக்கியத்துறையில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை எவ்வாறு கொண்டுவருவது என்பது குறித்துக்கூட எழுதலாம். புதிய, இளம் எழுத்தாளர் முதல் அனுபவ முதிர்ச்சியுடைய மூத்த எழுத்தாளர் வரை ஒவ்வொரு வரும் தனக்கானதொரு இடத்தை எங்களின் 'சாகித்ய பிரஸ்தானம்' இதழில் கண்டடையலாம்.

இந்த அம்சங்களினால் எங்களால் பரவலாக படைப்பாளர்களை ஈர்க்கமுடிகிறது. இதனால் எங்களின் இதழுக்கு மதிப்பு கூடியிருக்கிறது. அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. முன்பு பொதுவான இலக்கியம் பேசிய 'ஸ்வாதி' இதழ் 60 ஆண்டுகளுக்கு மேலாக புகழ்பெற்றுள்ளது. அது மரபார்ந்த தெலுங்கு இதழாக இருக்கிறது. 'சாகித்ய பிரஸ்தானம்' துவங்கப்பட்ட பின்னர்தான் ஏற்கெனவே வந்து கொண்டிருந்த இதழ்கள் தங்கள் வடிவமைப்பில் மாற்றம் கொண்டுவந்ததோடல்லாமல், புதிதாக அரை டஜன் இலக்கிய இதழ்கள் வெளிவரத் தொடங்கின. இவற்றில் ஒன்றிரண்டு இதழ்கள் பொருளாதார ரீதியில் வெற்றிகரமாகவும் வருகின்றன. இவையெல்லாமே 'சாகித்ய பிரஸ்தானம்' ஏற்படுத்திய தாக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள் எனலாம்.

ஆந்திராவில் வெகுஜன பத்திரிகைகள் எப்படி இருக்கின்றன?

வார, மாத இதழ்கள் ஆந்திராவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வளர் முகத்தில் இல்லை. ஒன்றிரண்டு வெகுஜன பத்திரிகைகள் தவிர மற்றவற்றின் விற்பனை பெரிய அளவில் இல்லை. 'ஸ்வாதி'தான் அதிக விற்பனையாகும் தெலுங்கு வார இதழ். வார இதழ்களில் பல காணாமல் போய்விட்டன. தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் இந்த வகையில் பெரிய வேறுபாட்டினை நாம் காணலாம். ஒன்றிரண்டு மாத இதழ்கள்தான் சிறுகதைகள் வெளியிடுகின்றன. எனவே, சிறுகதை எழுத்தாளர்களுக்கு மிக, மிக சொற்பமான வாய்ப்பே கிடைக்கிறது என்பது இங்கே ஒரு சோகம்தான். அதே நேரத்தில், மாயாஜாலக் கதைகளையும், புரியாத கதைகளையும் எழுதிக் கொண்டிருந்த ஆசாமிகளெல்லாம் இப்போது சுயமுன்னேற்றம், உளவியல் போன்ற கட்டுரைகளை எழுதப்போய்விட்டனர். இதில் மிகப்பிரலமான எழுத்தாளர்களும் அடங்குவர்.

அதிகமான தொலைக்காட்சி சேனல்களும் இன்று ஆந்திர இலக்கிய உலகத்தின் மீது தாக்குதல்களை நடத்துகின்றன. பொழுதுபோக்கிற்காக படிக்கிறவர்கள் தொலைக்காட்சிக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். அதே நேரத்தில் தீவிர வாசிப்பு என்பதும் வளர்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வப்போது இலக்கியத்துறையில் பேசப்படக்கூடிய ஒரு படைப்பு வெளிவரும் பொழுது அதை நோக்கி வாசகர்கள் குவிவதும் நடைமுறையில் உள்ளது. தொடர்கதை வாசிக்கிற பழக்கத்தையும் தொலைக்காட்சித் தொடர் மழுங்கடித்துவிட்டதால் தெலுங்கு பத்திரிகைகள் தொடர்கதை வெளியிடுவதையும் நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று பொதுவாக எல்லாமே களிப்பூட்டும் பொழுதுபோக்கு என்பதாகவே ஆகிவிட்டன. ஆந்திராவில் பல திரைப்பட அரங்குகள் திருமண மண்டபங்களாக, பொருட்களை வைக்கும் கிட்டங்கிகளாக மாறிவிட்டன. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கிய காரணமாக தொலைக்காட்சி சேனல்களின் பரவலைச் சொல்லலாம்.

புத்தக வாசிப்புப் பழக்கம் குறித்தும் அதன் எதிர்கால சமூக விளைவுகள் குறித்தும் எப்படிக் கணிப்பீர்கள்?

என்ன மாற்றம் வந்தாலும் புத்தகங்களுக்கு எப்போதும் ஒரு தனித்த மரியாதை என்பது இருக்கவே செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் புத்தகங்கள் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுத்து வந்தவண்ணம் இருக்கின்றன. இணையதளம் உள்ளிட்ட எதுவும் புத்தகங்களுக்கு மாற்றாக முடியாது என்பதே என் எண்ணம். எனவே, புத்தகங்கள் எப்போதும் ஜீவித்திருக்கும். அதனாலேயே, இலக்கியமும் ஜீவித்திருக்கும். இன்றைக்கு நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளே சிந்தனையாளர்களின் எழுச்சிக்கு வித்திடும், எழுத்தாளர்களுக்கு எழுச்சியூட்டும். கற்றோர் எழுந்து வருவர்.

இந்த நெருக்கடிகளை அமைதியாக இருந்து கொண்டு, அனுமதிக்க அவர்களால் இயலாது. எனவே, ஏராளமான மோதல்களும், போராட்டங்களும் உருவாகும். இதுவும் கண்டிப்பாக இலக்கியத்தில் பிரதிபலிக்கும். எனவே சிறுகதைகளும், கவிதைகளும் மேலும் மேலும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. உருவாகிக் கொண்டேயிருக்கும். எழுத்தாளரும் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. வாசகருக்கும் கற்றுத்தரவேண்டியதிருக்கிறது. பொதுவான கல்வியறிவு என்பது வேறு. இலக்கியத்தில் ஈடுபடு, இலக்கியத்தைச் சுவைப்பது என்பது வேறு. இந்தப்புரிதலோடு பொறுமையாக மக்களைப் பயிற்றுவிக்க வேண்டியது அவசியமாகிறது.

இலக்கியப் படைப்பாக்கம் மற்றும் கலை உருவாக்கம் மக்களை நிச்சயமாகக் கவ்வி இழுக்கும் தன்மையுடையன; அவர்களை உன்னதமான செயல்பாடுகளுக்கு ஊக்கப்படுத்தும் இயல்புடையன. அவர்களை வீரம் செறிந்த போராளிகளாக்கும் தன்மை நல்ல கலை - இலக்கியத்திற்கு நிச்சயமாக உண்டு என்பதுதான் உண்மை.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com