Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Semmalar
SemmalarSemmalar
டிசம்பர் 2008
ஆனி ஆடி ஆத்தலும் தூத்தலும்
குறும்பனை சி.பெர்லின்


கையில அடிகம்போட தடியனுக்க மகன் அந்திரியாஸ் கடக்கரையில வந்து நிக்கிறான். அவன் நிக்கிற நெலயப் பாத்தா இன்னைக்கு ஏதோ ஒரு வம்புப்பண்ணப் போறான் போலத்தான் தெரியுது. “அட தள்ளையதின்ன தேவுடியா மக்களே! தடியனுக்க மோவன் அந்திரியாச பழைய அந்திரியாசு இல்லைண்ணு நெனச்சு கிலுக்கிப் பாக்க வாறானு வளாக்கும்... இன்னும் அந்த ஆங்காரம் கொறையேல தெரியுமா? நான் அடிச்சா கைய மாறி புடுச்ச முடியாத சோப்புளாங்கி பயலுவ என்னட்ட சரச வெளயாட்டு காட்டுதானுவளாக்கும்... வரட்டும் அவன் கரையில வரட்டும்.”ஓஹோ யாரோ கடல்லபோயிருக்கவன் மரம் கரையில அடையுததுவர காத்துநிக்கான் அந்திரியாசு. அவன் பேசும் பேச்சுக்களை காதுகுடுத்து கேக்க முடியல்ல... அவ்வளவு உண்ட உண்டயா அறுத்திட்டு நிக்கான். இன்னைக்கு எப்பிடியும் ஒரு வென உண்டு.

man ஆனி ஆடி மாசமானதால அப்பப்ப மழை பெஞ்சுகிட்டிருக்கு... கடல் அலையும் பெலமா ஓங்கி அடிச்சுது... போனவாரம் நான் இருந்து சேலுசொன்ன கடக்கர நெலம் இப்ப கடலுக்குள்ள... அந்த அளவுக்கு கடலு உள்ளே வந்திருச்சு. சவரியாருக்க வீடு கடக்கரையில இருக்குது. அவரு வீட்டு அஸ்திவாரத்துல கடலுவந்து தொட்டு வெளயாடுது. வீடு கடல்ல அடிச்சிட்டு போகாம இருக்க சாக்குல மண்ணு நெறச்சு அஸ்திவார சுவருல அடுக்கி.... கத்தாடி கம்ப ஆழமா குழிதோண்டி நட்டுவச்சு கம்பா கட்டி பாதுகாத்திருக்காரு... இப்பிடி கடக்கரையில வரிசையா இருக்குத சனியனுக வீடு, காய்ச்சலுக்க வீடு, செல்வனுக்க வீடு, மடிக்கெட்டிக்க வீடு எல்லாம் சாக்கு மணல் அடுக்கி பாதுகாப்பா வச்சிருக்காங்க....

இப்ப காலம்பற ஆனதால் கடலு அந்த அளவுக்கு பெலமா அடிச்சேல... ஆனா உச்சையானா நல்ல பெலமா அடிச்சும். அதையும் உறுதியா சொல்ல முடியாது. இது ஆனி ஆடி மாசமானதால எப்ப கடலு அடிச்சும் எப்ப சாஞ்சு போவும், எப்ப மழை அடிச்சும், எப்ப வெளிவிடுமுன்னு யாருக்கும் தெரியாது. இந்த ஆத்தலும் தூத்தலும் நேரத்துல இவன் இப்பிடி மழையில நனஞ்சிட்டே அறுப்பு போட்டுட்டு நிக்கானே! என்ன காரியம். காரியம் புரிஞ்சு போச்சு.. போன ரண்டு வாரமா அந்திரியாசுக்க வீட்டுக்கும், பக்கத்துல உள்ள முத்தப்பனுக்க வீட்டுக்கும் எப்ப பாத்தாலும் சண்டையும் தொருவமுமாத்தான் இருந்தது. ரண்டு வீட்டுல உள்ள பொம்பளவளும் மாறி மாறி சாமமும் திட்டும் போடுததும் மாறி மாறி மாப்பிள தொருவம் சொல்லுததும் மாறி மாறி முடிறாந்துததும் நடந்திட்டிருந்தது. இப்ப ஆம்பள சண்டையா மாறியாச்சா? இனி அது ஊரு சண்டையா மாற நெறய நேரம் ஆகாது.

கையில அடிகம்போட நிக்குத அந்திரியாச எப்பிடியாவது சமாதானப்படுத்தியாவணுமே... இல்லேண்ணா ரண்டு கோஷ்டி அடியா மாறி ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா போலீசு வந்து புள்ளி புடுச்சுதோண்ணு சொல்லி யாரையும் ஊருல இருக்க உடமாட்டானுவளே... நான் வெலக்க போனேன்.

“என்ன அந்திரியாசே! விடிஞ்சும் விடியாததுமா இப்பிடி வந்து அறுத்திட்டு நிக்குத... என்ன சமாச்சாரம்”

“வாங்க சேலாளி.. வாங்க.. வாங்க... நான் பாட்டுக்கு பைத்தியக்காரனப் போல பொலம்பிட்டு நிக்கேன்! மாறி கேக்க யாருமே இல்லேண்ணு பார்த்தேன். நீங்க வந்திட்டீ... வாங்க.. வாங்க....”

வேலியில போன ஓணான புடுச்சு வேட்டிக்குள்ள உட்டுட்டேனோ.. யாருமே கேக்காம இருந்து ஏதாவது ஒண்ணு ஆவுட்டதுண்ணா இத்தன ஆளு நிண்ண பெறவும் வெலக்கி விட முடியவில்லையாண்ணு நம்மளையுமில்லே கொறபேச்சு சொல்லுவாவு. என்னவும் ஆவட்டு... இவன சமாதானப்படுத்துதது நம்ம வேலை.

“அது இல்ல அந்திரியாசே! இந்த ஆத்தலும் தூத்தலுமா இருக்குத நேரத்துல மழையில நனஞ்சிட்டு இப்பிடி நிக்குதியேண்ணுதான் கேட்டேன்.”

“இதெல்லாம் ஒரு மழையா... எனக்க ஒடம்பு இண்ணைக்கும் நல்லா ஸ்ட்ராங்காத்தான் இருக்கு... நான் கைய மடக்குனா இந்த ஊருல உள்ள எந்த ஆம்பளயாலயாவது மடக்க முடியுமா?” கைய மடக்கி ‘தம்’ எடுத்துக்காட்டினான். கை மடக்குக்கு மேலே தோளுக்குக் கீழே ஒரு பெரச்சாளி ஓடுததுபோல இருந்தது.

“பொறு டேய்... பொறு... இப்ப என்ன பிரச்சனை ஒனக்கு?”

“சேலாளி கேளுங்க.. நான் எதுக்காப்புல வந்தாலே ஒளிச்சு இடுக்கு வழியா ஓடுத பயலுவளெல்லாம் இண்ணைக்கு இந்த ஊருல பெரிய ஊச்சாளிவளாம். கொள்ளாமா காரியம். நான் எளந்தாரியில காட்டுன சண்டித்தனத்த இப்ப காட்டுனா இவனுவளெல்லாம் இந்த பூமியில இருக்க முடியுமா?”

“இருக்க முடியாது... அதுக்கு இப்ப என்ன?”

“நான் ஒருத்தன அடிச்சா அவனுக்காக மாறிகேக்க இந்த ஊருல ஒரு மீன்குஞ்சு வருமா சொல்லுங்க...”

“வராது...”

“நான் ஓங்கி ஒரு அடிபோட்டா.. எந்த ஆம்பளையா இருந்தாலும் தாங்க முடியுமா சொல்லுங்க....” இதுதான் தெருவுலபோற அடிய முதுகுல வாங்குததுன்னு சொல்லுததோ... தேவையில்லாம இவன்கிட்ட வாய்க்குடுத்து வாங்கிக் கட்டிக்கிட்டேனோ... எப்பிடியிருந்தாலும் புலிவாலப்புடுச்சாச்சு இனி ரண்டுல ஒண்ணு காணாம உட முடியாது.

“அதெயெல்லாம் உடு, இப்ப ஒனக்கு என்னதான் பிரச்சனை?”

“சேலாளி நீங்களே சொல்லுங்க... ஒரு பொம்பளய அடுச்சுதவன் ஆம்பளயா?”

“இல்ல....”

“எனக்குப் பெண்டாட்டிய ஒருத்தன் அடிச்சிருக்கான். அப்பிடி அடிச்சவனுக்க உயிர எடுக்காம இருந்தா இந்த தடியனுக்க மோவன் அந்திரியாசு ஒலகத்துல இருந்து என்னத்துக்கு....”

பல்லைக் கறும்பினான். அது ‘கறும் புறும்னு’ சத்தம் போட்டது. நான் இப்பிடி கறும்புறும்னு கடிச்சா எனக்க நாலஞ்சு பல்லு தவிடு பொடியாயிருக்கும். அவன் பல்லு கறும்புததிலே அவனுக்கக் கோபம் எவ்வளவு உக்கிரமுண்ணு எனக்குத் தெரியுது.

“ஒனக்க பெண்டாட்டி அவன அடிச்சா... அதனால அவனும் மாறி அடிச்சான்.”

“பெம்பள பெம்பளக்குள்ள சண்டையில் இந்த பெண்ணனுக்கு என்ன வேலை. அவனுக்கு அவ்வளவு தந்தேடம் இருந்தா என்னப் போல ஆம்பளக்கிட்ட யில்லகாட்டணும்? பொம்பளகிட்டயா காட்டுதது... அதான் அவன் மரம் அடஞ்சு வரட்டுன்னு பாத்திண்டிருக்கேன்” திரும்பவும் பல்லைக் கறும்பினான்.

“சண்டைய வெளக்க வந்தவன ஒனக்க பெண்டாட்டி அடிச்சிட்டு ‘பெம்பள கையில இருந்து அடிவாங்குன பெண்ணா.....’ண்ணு பேசுனதுனால உள்ள கொறச்சல்ல தான் அவன் அடிச்சான் இத இதோட உடாம இன்னும் சண்டைய வளத்துனா அதுசரியா?”

“சரியோ.. தப்போ...எனக்கப் பெண்டாட்டிய கைநீட்டி அடிச்சவனுக்க கைய ஒடிச்சி அடுப்புல வச்சாம நான் ஒதுங்க மாட்டேன்.” அந்திரியாஸ் அந்த காலத்திலேயே இப்பிடித்தான் அவனுக்க மனசுல ஒண்ணு பட்டதுண்ணா அதச் செய்யாம ஓயமாட்டான். அவன் எளந்தாரியா இருக்கும்பலே ஒரு கோட்டரும் ஒருநேரத்துக்கு பிரியாணியும் வாங்கிக் குடுத்தே அவங்களுக்கு பிடிக்காதவங்கள அடிக்க வச்சிருக்காங்க பலரும். கோட்டரும் பிரியாணியும் உளுங்கிட்டு யாருக்காகவோ யாரையோ அடிச்சு கொட்டு காணாம ஆடுத பேய் கொட்டுகண்டா உடுமாக்கும்? அதுக்குதான் கேரளாவுல இருந்து வந்து ஆடிண்டிருக்கான்.

“அந்த கமிலியாசு... அவனுக்க றாளு கணவ யாவாரத்துக்குப் போட்டியா வந்தாண்ணு சொல்லி கோணமண்ட தாசனை அடிச்சச் சொல்லி குடிவேண்டி குடுத்து என்ன அடிச்சவச்சான்... அந்த எலியாசு கெட்டுமாஸ்டர் ஆவுறத்துக்க எடஞ்சலா பங்குசாமியாரு இருக்காருண்ணு சொல்லி குடிவேண்டி தந்து பங்கு சாமியாரை அடிச்ச வச்சானுவ.. ஊருல பங்குப் பேரவ தேர்தல்ல நிக்க உடாமச் செய்றதுக்கு குருசுமுத்த அடிச்ச வச்சானுவ.. இதுவர ஒரு பாட்டில் பிராண்டிக்கும் ஒரு பிரியாணிக்கும் இதையெல்லாம் செஞ்சேன். அதுனால எத்தன கேசுல எனக்க பேரு இருக்கு தெரியுமா? இப்ப நான் எனக்க பெண்டாட்டிக்காக இந்த முத்தப்பன இண்ணைக்கு அடிச்சப் போறேன். இன்னும் ஒரு கேசு கூட வரும்... வந்தா எனக்கு அது ஒரு மயிரு பறிஞ்சு போனதுபோல... ப்பூ... தலையிலிருந்து ஒரு முடியைப் புடுங்கி ‘ப்பூ’ என்று ஊதினான்.

எவ்வளவுதான் பேசினாலும் சமாதானமாகமாட்டான் போலத் தெரியுதே! இவன என்ன செய்றது. இப்ப கடலடி பயங்கரமா இருக்கு. சவரியாருக்க வீட்டுல சாக்கு போட்டிருக்க எடத்துல வந்து அலை மோதிட்டிருக்கு. “டேய் ஊருல போய் இன்னும் நூறு சாக்கு வாங்கிண்டுவா.. இன்னும் கொஞ்ச நேரம் கழிஞ்சா கடலு நம்ம வீட இழுத்திண்டு போவுடும்.”சவுரியாரு அவருக்க மகனை வெரட்டிக் கொண்டிருந்தார்.

“யேய்... பாத்தீரா... அந்த சனியனுக்க வீடு இடிஞ்சு உளுது”

சவரியாருக்க விட்டோட சேந்து சிலுவைய்யா குருசடி பாறை இருக்குததால வீடு இடியாம இருக்கு. இல்லேண்ணா போன ஆனி ஆடி மாசத்துலயே சவரியாருக்க வீட கடலு இழுத்திண்டு போயிருக்கும். சனியனுக்க வீடு இடிஞ்சு விழுதத எல்லாரும் வேடிக்க பாத்திட்டு நிக்கத்தான் முடிஞ்சது. வேற ஒண்ணும் செய்ய முடியேல... என்ன செய்ய முடியும் கோபமா இருக்க இயற்கை சக்திய எதுத்து மனுச சக்தியால என்னத்த செய்ய முடியும்? ஒவ்வொரு வருசமும் கடலுக்கு பக்கத்துல இருக்குத ஒரு வரிசை வீடு இப்பிடி கடலுக்குள்ள போறது வழக்கம்தானே! நாம இத என்ன செய்ய முடியும்? அரசாங்கம் ஐநூறு ரூபாயும் ஒரு மாசத்துக்குள்ள ரேசனும் குடுத்துட்டு கண்ண மூடிடுது. நாங்க எங்கதான் போவ முடியும். ஆனி ஆடி மாசம் முடிஞ்சு கடலு கொஞ்சம் உள்வாங்குனதும் இடிஞ்ச எடத்துல திரும்பவும் கடன காப்பவாங்கி வீடு கட்டணும்.

அடுத்த வருசம் ஆனி ஆடியக் கண்டு திரும்பவும் பயந்துகிட்டு கெடக்கணும் அத விட்டுட்டு வடக்கபோய் வீடு கட்ட எங்களுக்கு நெலம்தான் இருக்கா? இல்லேண்ணா வடக்க போய் வீடு போட்டுட்டு நாங்க மண்வெட்டுத வேலயத்தான் செய்ய முடியுமா? கடலுதானே எங்களுக்கு எல்லாமே!

“சொக்கனுக்க பேரன் முத்தப்பன் இப்ப மரம் அடையுவானே! வரட்டும்... அவனுக்க உயிரு எனக்கக் கையில....” ஆவேசமா கத்தினான் அந்திரியாசு. வீடு இடிஞ்ச நேரத்துல அவனுக்க கவனம் வேற பக்கம் திரும்புமுண்ணு நெனச்சா திரும்பவும் தொடங்குதானே! இவன யாராலயும் சமாதானப்படுத்த முடியாது. எப்பிடியும் முத்தப்பன் கடல்ல இருந்து கரைக்கு வரம்ப போய் அடிச்சாம உடமாட்டான் அந்திரியாசு.

“இவன் போய் முத்தப்பன அடிச்சா அவனுக்க குடும்பக்காரவுங்க பாத்திண்டு சும்மாவா இருக்குவாவு? அவுங்களும் போய் மாறி கேக்குவாவில்ல... அப்ப ஊர் அடிதான் நடக்கும்”

“ஒரு ஆள அடிச்சா பாத்திண்டு பேசாம போறது பண்டகாலம். இப்ப அப்பிடியில்ல.... நியாயத்த கேக்க கொஞ்ச பேரு இருக்காவுலே”

“இது என்னா வெள்ளரிக்கா பட்டணமா?.... என்னா ஏதுன்னு நியாயம் கேக்காம அடிச்சா மத்தவங்க கை என்ன பூ பறிச்சிட்டா இருக்கும்?”

“எதுக்கும் வீட்டுலபோய் சாமான் தட்டையெல்லாம் ஒதுக்க வேண்டியதுதான். ஊர் அடிவந்தா ஊர உட்டுண்டு ஓடணுமே!”

ஆளாளுக்கு குசுகுசுன்னு பேசிட்டிருந்தாங்க. நானும் அதுக்குமேல அந்திரியாச சமாதானப்படுத்த முடியாம ஒதுங்கிப் போய் எனக்க வீட்டுத் திண்ணையில ஒதுங்கினேன். எனக்க வீட்டுத் திண்ணை ரொம்பவும் விசாலமா இருந்தது. அந்த திண்ணையில் பகல்நேரத்துல எப்பவும் கூட்டமாத்தான் இருக்கும். ராத்திரி நேரத்துல எனக்க வீட்ட முற்றத்துல இருக்கிற மணல்லதான் எல்லாரும் ஒறங்குவாங்க. இப்படி ஆனி ஆடி மாசத்துல ஆத்தலும் தூத்தலும் இருக்கிறதால எல்லாரும் எனக்க திண்ணையிலதான் ராத்திரி தூங்குறாங்க... இப்பணும் மழை பெஞ்சிட்டிருக்கிறதுனால சேலாளிக்க வீட்டு திண்ணையே தஞ்சமிண்ணு எல்லாரும் வந்திருக்காங்க....

“சேலாளி.. முத்தப்பன்தானா அன்னா மரம் தொளந்திட்டு வாறது பாருங்க....”

நான் பாத்தேன்.... அது முத்தப்பன்தான். எனக்க நெஞ்சுக்குள்ள டிக்.. டிக்....க்கு அடிச்சுது. இன்னும் கொஞ்ச நேரத்துல முத்தப்பன் மரம் கரையில அடையும் வெப்புறாளத்துல நிக்குத அந்திரியாசு உடுவானா. அவன... இவன் நிக்க நெலயில... இவன் அடிச்சு அவன் வாய... கீய... பொழந்துட்டா... நெனச்சவே பேடியா இருந்தது.

முத்தப்பன் ஒத்தையாதான் மரந்தள்ளியிருக்கான். இவன் ஒத்துனாமரத்துல தொளவய வச்ச தொளக்குத லாவகத்தப் பாத்தா மரத்துல நெறய மீனு கெடக்கு போல இருக்கு.... இந்த ஆனி ஆடிய பொறுத்தவரையில கடலையும், காத்தையும் சேலுகேடையும் தாண்டி கடலுக்குள்ள போயிட்டா நல்ல மீன்பாடு கெடச்சும். கடலு இருக்குத குளுச்சியில மீனெல்லாம் சூட்டத்தேடி கரையிலயும் கடலுக்க மேல்மட்டத்திலயும் வாறதால எல்லா ஏத்துனத்துக்கும் பெருத்த மீன்பாடு இருக்கும். முத்தப்பனுக்கும் நல்ல மீன்பாடு போலஇருக்கு. அதுதான் உஷாரா தொளந்திண்டு வாறான். அவன் மரம் கரைக்குப் பக்கத்துல வந்திட்டது. அந்திரியாசின் கை அடிகம்பை இறுக்கி இறுக்கிப் பிடிச்சிண்டிருந்தது. பல்லு நற நறன்னு சத்தம் குடுக்குது. “வா... வா... சரியா ஒனக்கு சாப்பாடு தாறேன் இண்ணையோட நீ குளோசு தேவடியா மோனே!” அவன வாய் முணு முணுத்தது.

“வெலங்கதொள ..... வெலங்க தொளங்க... மாயிரியா வருதுடேய்.....”

கரையில இருந்து நாலஞ்சுபேரு கையில இருந்த தொவர்த்தத் தூக்கி காட்டுனபெறவுதான் முத்தப்பன் திரும்பிப் பாத்தான்.அப்பிடித்தான் குளிஞ்சுவருது ஒரு அலை இவனுக்க தலைக்கமேல... இந்த அலை அடிச்சா மரமும் ஓடையும் இவனும் ஒடையுவான். முத்தப்பன் தொளைவைய எடுத்துட்டு மாறி திரும்பி இருந்து தொளந்தான். பெலங்கொண்ட மட்டும் தொளந்து எப்பிடியோ ஒரு இன்ச் வித்தியாசத்துல இவன் மரம் மாயிரியாவுக்குமேல போவுட்டது.

“படார்...”ணு அடிச்ச அலையோட சத்தம் எல்லாருக்க நெஞ்சுலயும் அதிர்ச்சியா எறங்கிச்சு.

“அடிச்சு குடுக்கேலயே! தலைதெறிச்சு கெடக்கப் பாத்தானே!” அந்திரியாசு சத்தம் போட்டது எல்லாருக்க காதுலயும் கேட்டது. அடுத்த அலையும் குளிஞ்சுவருது... அதுக்கும் வெலங்க பாத்து தொளந்து அலைக்கு மேல் போவுட்டான் முத்தப்பன்.... இன்னும் ஒரு அலை வருது... அதுக்கு மேலயும் போயாச்சு... அது முடிஞ்சு இன்னும் ஒரு அலை வருது. அதுக்கு மேலயும் தொளந்து போயாச்சு. மழையும் பெஞ்சிட்டிருக்கு. நடுக்குற குளிருல நடுங்கிக் கெடக்க முத்தப்பன் தொளந்து தொளந்து கையும் தளந்து கரைக்கு வர முடியாம அலைய பாத்துட்டு மாயிரியாவுக்கு மேல தொளந்திட்டு கிடக்கிறான்.

ஒரு நொடி கூட இடைவெளி உடாம வரிசையா அலை வந்திட்டே இருக்கு.... இதுக்குமேல் பொறுமையா இருந்தா கடலுக்குள்ளதான் கெடக்கணும். மரம் அடையவே முடியாதுண்ணு நெனச்ச முத்தப்பன் ஒரு முடிவு செஞ்சிட்டு மாயிரியாவுக்கு மேல கரையைப் பார்த்து தொளந்தான். அலைக்குமேல் மரம் சில்லி எடுத்துட்டு பாஞ்சு வருது..... “முடிஞ்சது” கரையில நிண்ணவங்களோட கண்ணெல்லாம் கடலையே பாத்தது. முத்தப்பனின் மரத்தை அந்த அலை வாரிச்சுருட்டி ஒரே அடியாக அடிச்சது. அடிச்ச அடியில கட்டுமரத்துல கடியாலும் வடமும் தெறிச்சு மரம் துண்டு பதினாறா கரையில ஒதுங்குச்சு. ஆனா முத்தப்பன காணேல.

“டேய்... முத்தப்பன காணேல டேய்... அடிச்ச அடியில சுளுக்குல மாட்டுனான் போலத் தெரியுது” எல்லாரும் பரபரப்பா கடலுக்குமேல் தலை தெரியுதான்னு நோட்டம் போட்டாங்க...

“அன்னா எழும்பினான் முத்தப்பன். அவனை புடுச்சு உள்ளுக்கு இழுக்குது பாருங்க...”

“யாராவது கம்பால கொண்டு குளிச்சுபோய் காப்பாத்துங்க....”

“யாரு போறது... வெலங்க வெலங்க இழுத்திட்டிருக்கு... மாயிரியாவும் மாறி மாறி அடிச்சிண்டிருக்கு. இதுல நாம மாட்டுனா நம்ம நெலமையும் முத்தப்பன மாதிரி ஆயிடும்.

“நான் போவுல்லப்பா..... எனக்கு மூணு பெம்பள மக்க இருக்கு. நான் போனா அதுகளுக பாவத்த யாரு பாக்கிறது” இப்பிடி பேசிட்டிருக்கும்பலே நாலஞ்சு எளந்தரிமாரு கடல்ல குளிச்சாங்க... அவுங்க ஒரு எட்டு முன்ன வச்சா நாலு எட்டு பின்னால வந்தாங்க.... கடக்கரை முழுக்க மக்கள் கூட்டம் என்ன செய்றதுண்ணு தெரியாம முழுச்சிட்டு நிக்குது.

“ஐயோ......... என் மவராசனே! ஒங்களுக்கா இந்த நெலம.. என் கண்ணு முன்னாலயே இந்த கொடும நடக்கணுமா? ஒங்கள பொன்னொரு தட்டம் பூவொரு தட்டமால்ல பாத்தேன்.... ஒங்களுக்கு இப்பிடி ஒரு கஷ்டமா? ஐயா... ராசாமாரே... என் புருசன காப்பாத்துங்க....” கடற்கரை மணலில் புரண்டு புரண்டு அழுதா முத்தப்பனுக்க பெண்டாட்டி.....

முத்தப்பன கடலு இன்னும் இன்னும் உள்ளால இழுக்குது. அவன இப்ப காப்பாத்தலைன்னா உயிரோடயே பாக்க முடியாது. அந்த நேரம் - அடிகம்பை இறுக்கமா புடுச்சிருந்த அந்திரியாசின் கை தளர்ந்து அடிகம்பு கீழே விழுந்தது. சுத்திச் சுத்தி பார்த்தான். தட்டுமடி கம்பா வளைச்சு வச்சிருந்ததக் கண்டான். கம்பாலுக்க ஒரு முனையை எடுத்து தன் இடுப்போட கட்டினான்.

“எந்த சிக்கலும் வராம கம்பால தெருவெடுத்து உடுங்க....” ஒரே ஓட்டமா ஓடி கடலில் குளித்தவனை கொஞ்சநேரமா காணல்ல. ஆனா கம்பா மட்டும் கடலுக்குள்ள போயிட்டே இருந்தது. கொஞ்ச நேரம் கழிச்சு கடலுக்குமேல் தலையைத் தூக்கி மூச்சு விட்டுட்டு அலை இழுப்புக்கு புடி கொடுக்காம நீந்திப் போய் முத்தப்பனை பிடிச்சிட்டான் அந்திரியாஸ். முத்தப்பனை தோளில் தூக்கிப் போட்டுட்டு கையைத் தூக்கிக் காட்டினான் அந்திரியாஸ். இப்ப கம்பாவ இளக்கி விட்டிட்டிருந்தவங்க அதப் புடிச்சு இழுத்தாங்க.

“அப்பாடா... ஒரு உசுர காப்பாத்துனான் அந்திரியாஸ். அவன் மட்டும் இல்லேண்ணா முத்தப்பன் செத்திருப்பான்” எல்லாரும் ஓடிப்போய் அந்திரியாசின் தோளில் சுயநினைவில்லாமல் கிடந்த முத்தப்பனைத் தூக்கினார்கள். அந்திரியாஸ் இடுப்பில் கட்டியிருந்த கம்பாவை அவுத்திட்டு வடக்கே பாத்து நடந்தான்.

செம்மலர் மின்னஞ்சல் முகவரி ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com