நூல் மதிப்புரை
கவிவாணன் எழுதிய அனிச்சங்கள் கிளைத்த கொடி
(கவிதைத்தொகுப்பு)
"உணர்வில் வல்லார் உரைப்பது செய்யுள்" என்கிறது நமது நன்னூல். உணர்வு இல்லையேல் கவிதை ஏது?
உணர்வுத் திறம் கொண்டோர் இயற்றுவது தான் கவிதையாக மலர்கிறது. அவ்வாறு உணர்வு தோய்த்து எழுதப்பட்டவையாக விளங்குகின்றன இந்நூலில் கவிவாணன் கவிதைகள்.
ஒரு மகனின் பார்வையில் அம்மாவின், அப்பாவின் அருமை பெருமைகளையும் அந்த இருவரிடையே உள்ள பாசபந்தங்களையும் சொல்லும் கவிதைகளில்தான் எவ்வளவு உணர்வின் நெகிழ்ச்சி....
"அம்மாவின் விருப்பம்", "காலக்கண்ணாடி" போன்ற கவிதைகளில் இதை மனம் சேர்த்து வார்த்தைப்படுத்தியுள்ளார் இக்கவிஞர்.
"தண்ணீர்
எடுத்துக் கொண்டிருக்கும்
என்னிடம்
ஆம்பளைகளா
இந்த வேலையச் செய்யுறது
என்று
சொல்லிச் செல்பவளிடம்
எப்படிச் சொல்வது
வேலையில்
ஆண் பெண் பேதமில்லையென்று..."
ஒரே விதமான வேலையைச் செய்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் வைத்து கூடுதல் - குறைச்சல் என இருவிதமாகக் கூலிதரும் இச்சமூகத் தீர்மானிப்புக்குக் கருத்தியல் ரீதியாக ஆட்பட்டுள்ள பெண்ணின் கேள்வியில் திகைத்துப்போகிற - புதிதாய்ச் சிந்திப்பவனின் ஒருமன நெருக்கடியை வெளிப்படுத்துகிறது இக்கவிதை. கோக் - பெப்ஸி பன்னாட்டுக் குளிர்பானக் கம்பெனிகளின் தண்ணீர்க் கொள்ளையில் சிக்கிய தாமிரபரணியின் வேதனைக்குரலாய் வெளிப்படும் "நதியின் கண்ணீர்" உள்பட சமூகச் சிந்தனையும் - சமூகத்தின் மீதான அக்கறையும் கொண்ட பல கவிதைகள் மனத்தைத் தொடுகின்றவை.
"தீட்டி முடித்தபின்
தூரிகை கேட்டது
என்வலி தெரியுமா?
விரல்கள் கேட்டன
என்வலி தெரியுமா?
தூரிகையும் விரல்களும்
சொன்னது
ஓவியம் அழகு...
கலையின் பயன்பாடு
வலியில் இல்லை!"
ஆஹா! அற்புதமான கற்பனை! பொருள் புதிது; சுவை புதிது!
கவிவாணனின் கவித் தொகுப்பில் சாதாரண சொற்கள்தாம்; ஆனால், உணர்வுதளத்தில் பொருளோடு கைகோர்த்துச் சொற்கள் அமைகிறது போது சாதாரண சொற்களில் ஒரு சக்தி பிறந்து விடுகிறது.
நூல் கிடைக்குமிடம் : தடம் பதிப்பகம், 13-2-2, பள்ளிவாசல்தெரு, வத்தலக்குண்டு - 624 202. விலை ரூ. 40
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|