தொழில்நுட்பம்
தொப்புள் கொடியில் இருந்து இதய வால்வு.
சில குழந்தைகள் பிறக்கும்போதே இதயவால்வுகளில் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள். அறுவை சிகிச்சைகளினால் இந்த வால்வுகளை சீரமைக்க முடியாதபோது, உறுப்புதானங்கள், செயற்கை வால்வுகள் என்ற மாற்றுவழிகளை தேடிப்போக வேண்டியுள்ளது. ஆனால் பொருத்தமான மாற்று வால்வுகள் கிடைப்பதில்தான் சிரமம் இருக்கிறது. பிராணிகளின் திசுக்களில் இருந்துகூட மாற்று வால்வுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாற்று வால்வுகள் குழந்தைகளின் வளர்ச்சியோடு இணைந்து செயல்படுவது இல்லை. இதனால் குழந்தை தன்னுடைய ஆயுட்காலத்தில் பல அறுவை சிகிச்சைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
மேலும் பிராணிகளில் இருந்து பெறப்படும் இதய வால்வுகளில் விறைப்புத்தன்மை காணப்படுகிறதாம். இதனால் குழந்தைக்கு அடிக்கடி இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும் சிகிச்சையும் அளிக்க வேண்டியுள்ளதாம். அமெரிக்க வல்லுநர்கள் இந்த பிரச்சினைக்கு ஒரு மாற்றுவழியாக தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்பட்ட இரத்தம் பயன்படுகிறது என்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியில் இருந்து இரத்தம் சேகரிக்கப்படுகிறது. இதிலிருந்து ஸ்டெம் செல்களைப்பிரித்தெடுத்து இதய வால்வுகள் உருவாக்கப்படுகின்றன. தேவைப்படும்போது இந்த வால்வை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொப்புள் கொடியின் இரத்தத்தில் இருந்து CD133+ cells என்னும் ஸ்டெம் செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு உறைநிலையில் பாதுகாக்கப்பட்டன. 12 வாரங்கள் கழித்து, இந்த செல்கள் சிதையக்கூடிய ஒரு தளத்தில் பதியமிடப்பட்டன. இந்த பதியன்கள் ஆய்வுக்கூடத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு எலெக்ட்ரான் நுண்ணோக்கியால் ஆராயப்பட்டன. தளத்தின் நுண்துளைகளில்கூட் செல்வளர்ச்சி காணப்பட்டது. திசுக்களின் கட்டமைப்புக்கு தேவையான extracellular matrix இவற்றில் காணப்பட்டது. மனிதர்களின் இதயவால்வு திசுக்களோடு, இவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்ட திசுக்கள் பெரும்பாலும் ஒத்துப்போயின. மேலும் desmin, laminin, alpha-actin ஆகிய புரதங்களும், CD31, VWF and VE-cadherin என்னும் இரத்தக்குழாய்த்திசு படலங்களும் வளர்த்தெடுக்கப்பட்ட செல்களில் காணப்பட்டன.
வெற்றிகரமான திசையில் இந்த ஆய்வு போய்க்கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ரத்த திசுக்கள் மட்டுமல்லாது எலும்பு மஜ்ஜை, பனிக்குட நீர் இவற்றின் திசுக்களில் இருந்தும் இதய வால்வுகளை உருவாக்க முடியுமா என்று ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. திசுமாற்ற தொழில் நுட்பத்தின் மூலம் நோயாளின் வாழ்நாள் முழுவதும் சிக்கல் இல்லாமல் பயன்படக்கூடிய இதய வால்வுகளை உருவாக்குவது சாத்தியம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இன்னும் படிக்க: (www.sciencedaily.com/releases/2008/11/081110163754.htm)
- மு.குருமூர்த்தி ([email protected])
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|