தொழில்நுட்பம்
உலோக ரப்பர்
மு.குருமூர்த்தி
உலோகம், ரப்பர் இரண்டும் கலந்த கலவையில் உருவான புதிய தயாரிப்புதான் உலோக ரப்பர். இதை ‘ஸ்மார்ட் ஸ்கின்’ என்று அழைக்கிறார்கள். மெல்லிய தோல்போன்று இருக்கும் இந்த உலோக ரப்பர் வெகுஜால வேலைகளை செய்யுமாம்.
ஒரு சிறு மில்லிமீட்டர் தடிமன் அளவிலான இந்த உலோக ரப்பர் பளபளப்பான காகிதம் போன்ற தோற்றம் கொண்டது. இதை சுருட்டலாம், மடக்கலாம், இரண்டாக மடித்து பைக்குள் வைத்துக்கொள்ளலாம். சுமார் 200 டிகிரி செண்டிகிரேடு வெப்ப அளவுகொண்ட நெருப்பில் அல்லது கொதிக்கும் நீரில் போடலாம். அதன்மீது பெட்ரோல் தீ வைக்கலாம். தனது இயல்புநிலையை இழக்காது; கருகாது; உருகாது; உடையாது. அதே நேரத்தில் மின்சார கடத்தியாகவும் செயல்படக்கூடியது.
தீயில் கருகும்பொருள் அல்லது பல துண்டுகளாக மடக்கப்படும் பொருள் மின்கடத்தியாக இருக்கமுடியாது. மாறாக இந்த உலோக ரப்பர் மின்சாரத்தைக்கடத்தும் தன்மையைக்கொண்டுள்ளது. அற்புதமான சக்திகள் நிறைந்த இந்த இரப்பர் செயற்கைத்தசைகள், இறக்கை விமானம், ஆடைகள், கம்ப்யூட்டர் பாகங்கள் போன்றவை செய்யும் நவீன தொழில்நுட்பத்தில் பயன்படுகிறது. அபாயகரமான பணிகளில் ஈடுபடும் எந்திர மனிதனை தயாரிக்கமுடியும். கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சிறிய அளவில், குறைந்த எடையில் தயாரிக்கமுடியும்.
ஆனால் உலோக இரப்பர் தயாரிக்கும் பணி மிகவும் கடுமையானது. இந்தப்பணியை பெரும்பாலும் ரோபாட்டுகள்தான் செய்கின்றன. நேர் மின்னூட்டம் செய்யப்பட்ட உலோகத்தின் அயனிகலவை, எதிர் மின்னூட்டம் செய்யப்பட்ட எலாஸ்டிக் பாலிமர் கலவை இவற்றுடன் அச்சாக கண்ணாடி தகட்டினையும் பயன்படுத்துகிறார்கள். தற்போது சோதனை முறையில் உலோக ரப்பர் தயாரிக்கப்பட்டாலும் தொழில் ரீதியாக தயாரிக்கும் காலம் தொலைவில் இல்லை.
நன்றி: கலைக்கதிர்
தகவல்: மு.குருமூர்த்தி ([email protected])
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|