தொழில்நுட்பம்
கட்டுச்சோறை கெடாமல் பாதுகாக்க...
மு.குருமூர்த்தி
பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை பைகளிலும், டப்பாக்களிலும் அடைத்து சீல் செய்து கடைகளில் விற்கிறார்கள். இந்த பொட்டலங்களுக்குள் தீமை செய்யும் Salmonellosis, ஈகோலி பாக்டீரியாக்கள் இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழிப்பதற்காக பொட்டலங்களை சீல் செய்வதற்கு முன்னால் உள்ளே இருக்கும் வாயுவை உறிஞ்சி எடுத்துவிட்டு ஓசோன் வாயுவை அடைக்கும் நடைமுறை இப்போது வழக்கத்தில் இருக்கிறது. ஓசோன் வாயுவிற்கு பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் உண்டு.
பர்டியூ பல்கலைக்கழக ஆய்வாளர் கெவின் கீனர் என்பவர் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார். நம்முடைய சுற்றுப்புறத்தில் நிரம்பி இருக்கும் ஆக்சிஜன் வாயுவை எளிய முறையில் அயனியாக்கம் செய்து ஓசோன் வாயுவாக மாற்றும் முறைதான் அது. பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பொட்டலங்களில் அடைத்து சீல் செய்தபிறகும்கூட உள்ளே இருக்கும் தீமைசெய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் தொழில் நுட்பம் இது. உணவின் மூலம் கடத்தப்படும் நோய்க்கிருமிகள் ஆரம்ப நிலையிலேயே அழிக்கப்பட்டுவிடுவதால் ஒரு பயனுள்ள தொழில்நுட்பமாக இது கருதப்படுகிறது.
இரண்டு உயர் மின் அழுத்த, குறைந்த வாட் கம்பிச்சுருள்களை சீல் செய்யப்பட்ட பொட்டலங்களுக்கு வெளியே வைக்கும்போது ஒரு காந்தப்புலம் உருவாகிறது. இந்த காந்தப்புலம் பொட்டலங்களுக்குள் இருக்கும் ஆக்சிஜன் வாயுவை அயனியாக்கம் செய்து ஓசோன் வாயுவாக மாற்றிவிடுகிறது. 30 வினாடிகளில் இருந்து 5 நிமிடநேரத்தில் பாக்டீரியாக்களை அழிக்கும் பணி முடிவடைந்துவிடும். இறுதியில் அயனியாக்கம் செய்யப்பட்ட ஆக்சிஜன் வாயுவும் அதனுடைய பழைய நிலைக்கு திரும்பிவிடும். 30 வாட் முதல் 40 வாட் வரையிலான மின் ஆற்றலில் இந்தக் கருவி செயல்படுவதால் சிக்கனமானது. பொட்டலத்தின் வெளிப்புறம் மிகச்சிறிய அளவிற்கே வெப்பமடைவதால், உள்ளே இருக்கும் உணவுப்பொருளின் சுவை மாறிப் போய்விடுவதில்லை.
கீனரின் கண்டுபிடிப்பில் ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட பொட்டலங்களை பிரிக்காமலேயே பாக்டீரியா நீக்கம் செய்யமுடியும் என்பதுதான் சிறப்பு. “ஒரு பாட்டரியை மின்னேற்றம் செய்வதுபோன்ற எளிய முறை இது” என்கிறார் கீனர். ஆக்சிஜனை அயனியாக்கம் செய்வதற்காக எந்த மின்வாய்களும் பயன்படுத்தப்படுவதில்லை. கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற நெகிழ்வுப்பைகளுக்குள் அடைக்கப்பட்டவற்றைக்கூட இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாக்டீரியா நீக்கம் செய்ய இயலும். இன்னும் சொல்லப்போனால் சீல் செய்யப்பட்ட மருந்துகளில் இருந்துகூட பாக்டீரியா நீக்கம் செய்ய இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது.
அதெல்லாம் இருக்கட்டும். நம்முர் சாமானியனுக்கு இந்த கண்டுபிடிப்பு உதவுமா?
ஒரு கட்டுச்சோற்று பொட்டலத்தையோ, தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தையோ நீண்ட நாட்கள் பாதுகாக்க இந்த கண்டுபிடிப்பு உதவும் என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/03/090302183323.htm
தகவல்: மு.குருமூர்த்தி ([email protected])
வாசகர்களின் கவனத்திற்கு...
நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. |
|