Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruScienceEarth
புவி அறிவியல்

பூமி வெப்பமடைந்தால் மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கை கூடும்

தமிழில் : ஆதி வள்ளியப்பன்

காலநிலை மாற்றத்தால் உலக சுகாதாரம் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏழைகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும், ஊட்டச்சத்து குறைவு பரவலாகும். நில மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதற்கு ஏற்ப மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்கிறார் விஞ்ஞானி அந்தோனி மெக்மைக்கேல். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை சுகாதார மையத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார் மெக்மைக்கேல். அத்துடன் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். உலக சுற்றுச்சூழல் மாற்றங்களால் ஏற்படும் சுகாதார ஆபத்துகள் பற்றி பேசுகிறார்:

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் உருவாகி வரும் நோய்களைப் பற்றி... கடந்த இருபது ஆண்டுகளில், உலகம் முழுவதும் நோய்களின் தோற்றத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இவற்றின் வேர் அமைந்திருப்பது தெரிகிறது. உலகின் வெப்பமான பகுதிகளில் மட்டுமே பரவி வந்த மலேரியா தற்போது கிழக்கு ஆப்பிரிக்க மேட்டுப்பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சிஸ்டோசோமியாசிஸ் (Schistosomiasis) என்ற தண்ணீர் நத்தைகளால் தொற்றும் நோய் சீனாவின் வடக்குப் பகுதிக்கு பரவிவிட்டது. இந்த நத்தைகளை முன்பு இந்தப் பகுதியில் பார்க்க முடியாமல் இருந்தது.

உணவாகப் பயன்படும் சிப்பிமீன் நச்சாவது தொடர்பாகவும் தகவல்கள் வருகின்றன. அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் அவ்வப்போது தென்பட்டுக் கொண்டிருந்த இந்த சிப்பிமீன், தற்போது அப்பகுதியில் மிகச் சாதாரணமாக பார்க்கக் கிடைக்கிறது. அலாஸ்கா பகுதி கடல்நீரின் வெப்பநிலை கோடை காலத்தில் 15 டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டால், சிப்பிமீன் வளரும் தளங்களில் நோய்த்தொற்று நீடித்திருப்பதற்கான உகந்த சூழ்நிலையை உருவாகும். வங்கதேசத்தில் சமீபத்தில் பரவிய காலரா நோய் தாக்குதலுக்கும், எல்நினோ சுழற்சியால் அந்த நாட்டின் கடற்கரை நீர் வெப்பமடைவதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வெப்பஅலைகள் காரணமாக நெருக்குதல்கள் அதிகரிக்குமா? வளர்ந்த நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரித்தால், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அன்றாட வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக, மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாறுகளின் தாக்கம் உயர்வதன் காரணமாகவே இந்த இறப்புகள் பெருமளவு ஏற்படுகின்றன. வளரும் நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பாக இன்னும் அதிக ஆராய்ச்சிகள் நடக்கவில்லை.

இது போன்ற பிரச்சினைகளால் யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்? முதியவர்கள், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், குறைந்த தரமுள்ள வீடுகளில் வாழும் ஏழைகள் ஆகியோர் வெப்பஅலைகளால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 1995ம் ஆண்டு ஏற்பட்ட சிகாகோ வெப்பஅலையால் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள், சிறிய-காற்றோட்ட வசதிகள் இல்லாத அடுக்குமாடிகளில் வாழ்ந்தவர்கள்தான். கடுமையான வெப்பத்தால் சமூக அமைதி கெடும் என்பதாலும் மேலும் சிலர் இறந்ததாக தகவல்கள் வந்தன. வெப்பநிலை அதிகரிப்பால் பெரும்பாலோர் அடுக்குமாடிகளில் குடியிருப்பு வீடுகளுக்குள் அடைந்து கொண்டதால், நடத்தை சார்ந்த மனநோய் பாதிப்புகள் ஏற்பட்டது தொடர்பாகவும் தகவல்கள் வந்தன.

வேறு என்ன சுகாதார பிரச்சினைகள் ஏற்படும்? ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் வாழும் இனுயிட் மக்களிடம் ஏற்படும் உடல் பருத்தல் மற்றும் காலநிலை மாற்றம் இடையிலான சுவாரசியமான தொடர்பாகள் தொடர்பாக ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. வெப்பநிலை அதிகரிப்பால் ஆர்டிக் பகுதியில் உறைபனி, மிதக்கும் பனிப்பாறைகள் கண்மூடித்தனமாக உருகி வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு உயிரினங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் இனுயிட் மக்கள் தங்கள் பாரம்பரிய உணவு ஆதாரங்களைச் சார்ந்திருக்க முடியாமல் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு பதிலாக பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை அவர்கள் அதிகம் உண்ண ஆரம்பித்துள்ளனர். இதிலிருந்து காலநிலை மாற்றம் நமது உணவு சங்கலியையும் சீர்குலைக்கிறது என்பது தெரியவருகிறது.

இந்தியா எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்? இந்தியாவின் பெருநகரங்களில் வெப்பஅலை வீசுவதன் கடுமையும், தாக்குதல் எண்ணிக்கையும் அதிகரிக்கும். கோடை காலங்களில் சுற்றியுள்ள கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் இரவு நேர வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். இதனால் சேரிகள் மற்றும் தரமற்ற வீடுகளில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்படுவர். காலநிலை மாற்றம் பயிர் மகசூலை குறைக்கும், நீர்நிலைகள் வறண்டு போகும். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கிழக்கு மகாராஷ்டிராவில் வாழும் 20-30 லட்சம் மக்கள் வறட்சியால் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு, காலரா, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற நோய்களின் தாக்குதல் பெருகிவிடும்.

காலநிலை மாற்றத்துக்கு தகவமைத்துக் கொள்ள எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? 10 ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்டதைவிட மாற்றங்கள் தற்போது அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. எதிர்கால ஆபத்துகள் தொடர்பாக நமக்கு முழுமையான புரிதல் இல்லை என்றாலும்கூட, ஆபத்துகளின் தாக்கத்தை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிகரித்து வருகிறது. அனைத்து ஆராய்ச்சிகளையும் நடத்துவதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று நெருக்கடியை உருவாக்குவது சாதகமான ஒரு சூழ்நிலை அல்ல.

குறிப்பாக தெற்கு ஆசியாவின் உணவுதானிய மகசூலில் காலநிலை மாற்றம் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மக்கள்தொகை அதிகரிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டால், நிலைமை இன்னும் மோசமாகி விடும். மண்வளம் அதிகமாக சுரண்டப்படும், நீர்நிலைகள், நன்னீர் ஆதாரங்கள் வறண்டு போகும். இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கெனவே பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலை நிலவுகிறது. காலநிலை மாற்றம் இப்பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கும். எனவே, ஊட்டச்சத்து குறைவு பிரச்சினையில் தகவமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.

காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்களின் நிலை என்ன?
பொருளாதார வளர்ச்சி பிரச்சினைகள் தொடர்பாக மட்டுமே உலக வங்கி முதன்மை அக்கறை செலுத்தி வந்தது. மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள் மேம்பட வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்களும் அதற்கு ஈடான முக்கியத்துவம் கொண்டவை என்று தற்போதுதான் உணர ஆரம்பித்திருக்கிறது. காலநிலை மாற்றத்தை உலக சுகாதார நிறுவனம் பழைமை மனப்பான்மையுடனே அணுகுகிறது. இந்த ஆண்டுதான் அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்து, காலநிலை மாற்றம் முக்கிய பிரச்சினை என்று முதன்முறையாக கூறியுள்ளது. இது மிகப் பெரிய முன்னெடுப்பு.

தமிழில் : ஆதி வள்ளியப்பன்
நன்றி: டவுன் டு எர்த்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com