Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelPeriyar
பெரியார் பேசுகிறார்

7. இந்தியப் பொருளாதாரம் சீரடைய வர்ணாசிரம முறையை ஒழிக்க வேண்டும்

Periyar E.V. Ramasamy

‏இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் குறைந்தது அல்ல. இந்தியாவில் ராஜாக்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் மற்ற நாட்டிலுள்ளவர்களுக்குக் குறையாமல் உள்ளார்கள். விவசாயத் துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமாக நீர் வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதார்கள் 1000 ஏக்கர், பதினாயிரம் ஏக்கர், சிலர் லட்சம் ஏக்கர் நிலங்களை உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாக உள்ளது.

இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திரமான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப்பட்டு வருகின்றது? முதலாவது, மேற்கண்ட வளமுள்ள செல்வம் எல்லா மக்களும் அடையத்தக்க மாதிரியான சமூக அமைப்பு இல்லாமல் செல்வங்கள் சில வகுப்பு மக்களுக்கே உரியவையாகவும் அனுபவிக்கத் தக்கவையாகவுமான சமூக அமைப்பு முக்கிய காரணமாகும்.

அதாவது, வருணாசிரம தருமப்படி இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன தொழில், இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே, நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைபடுத்திக் கொண்டிருக்கிறது என்பது முதல் காரணம். வெள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்த தர்மங்கள் சிறிது சிறிது மாற்றமடைந்து ஏதோ நூற்றில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் செல்வவான்கள் ஆகவும், வருணமுறை தவறிப் பணம் சம்பாதிக்க உரிமை உடையவர்களாகவும் ஆனாலும்கூட, அந்தப் பணமானது மநுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் அதாவது, ‘சூத்திரன் செல்வத்தைப் பிராமணன் எந்தவிதத்திலானாலும் கொள்ளை அடிக்கலாம்' என்கின்ற தர்மப்படி, சூத்திரன் செல்வத்தைக் கொள்ளை கொள்ளவே ஸ்தலம், கோவில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங்களின் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டு விடுகின்றன.

இந்தக் காரணத்தாலேயே சூத்திரர்களில் 100க்கு 75 பேர்கள் கடன்காரர்களாகவே இருக்க நேரிட்டு இருக்கின்றது. மேலும், நமது மக்களின் மதத் தத்துவமே இவ்வுலக வாழ்க்கை "பொய்' என்பதும் "மாயை' என்பதும்; செல்வத்தை மோட்சத்தில் இடம்பிடித்து வைக்கவும், அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவியாய் பிறக்க ஏற்பாடு செய்துகொள்ளவும் செலவழிக்க வேண்டும் என்கின்றதுமான எண்ணங்கள், செல்வங்களைப் பாழாக்கி விடுகின்றன.

அன்றியும், பாடுபடுகின்ற மக்களுக்குத் தங்கள் மதக் கடமை, சாதிக் கடமை என்பது மாத்திரமல்லாமல் முன் ஜென்மக் கர்மத்தின் பயன் என்றும் எண்ணும் எண்ணங்களே புகுத்தப்பட்டு, தங்கள் கஷ்டங்களையும் தரித்திர நிலைமையையும் உணராமல் இருந்து வருகின்ற குணமும் தகுந்த பயனை அடைய முடியாமல் செய்து விடுகின்றன.

சாதாரணமாக, சென்னை மாகாணத்தின் சர்க்காரார் வரி எவ்வளவு இருக்குமோ, அதில் 4இல் 1 பங்குக்குக் குறையாமல் இம்மாகாணத்தில் வரும்படி வரத்தக்க சொத்துகள் கொண்ட தர்ம ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவற்றின் மற்ற செலவுகளுக்கென்று நமது மக்களால் செய்யப்படும் செலவுகளின் மொத்தம், நாம் செலுத்தும் வரித் தொகைக்குக் குறையாதென்றே சொல்லலாம். இவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படாததோடு வீண் செலவினமாகவே ஏற்பட்டுவிடுகின்றன.

அன்றியும் தர்ம ஸ்தாபனங்களில் வரும்படி இல்லாமல் வெறும் முடக்கமாய் இருக்கும் சொத்துகள் தங்கம், வெள்ளி, கல் நகைகள், இடங்கள் முதலியன கோடிக்கணக்கான ரூபாய் வரும்படி வரக்கூடிய அளவு உள்ள சொத்துகள் யாதொரு பிரயோசனம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இவ்வளவும் தவிர, இந்திய மக்களின் வருமானம் என்பதே அவர்கள் தங்களது தொழில் முறைகளைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாததால் பிரயாசை அதிகமும், சாமான் யோக்கியதைக் குறைவும், உற்பத்திக் குறைவும் இதனால் வரும்படி குறைந்ததுமாக இருப்பதுடன், மனிதனுடைய தேவைக்கும், போக போக்கியங்களுக்கும் வேண்டியவைகளுக்கெல்லாம் ஏழை முதல் செல்வவான், மகாராஜாக்கள் வரை, வெளிநாட்டுப் பொருள்களையே உபயோகிக்க வேண்டியவர்களாகி, அதன் மூலம் செல்வம் ஏராளமாய் வெளியில் போய் விடுவதால், ஒருவித நஷ்டத்தையும் அடைய வேண்டியதாக ஏற்பட்டு விடுகின்றது.

இந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு முதலாவது, வருணாசிரம முறை ஒழிய வேண்டும்; இரண்டாவது, மதசம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும்; இன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான் ‘சனி விலக்கு' ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.

பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால், அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்காமல், மக்களுடைய மதியீனத்தையும் பகுத்தறிவற்றத் தன்மையையும் ஆதரவாய் உபயோகித்துக் கொண்டு, வெளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக் கடைகளை மூடி விடுவதாலும், பொருளாதாரத் துறையை சரிப்படுத்திவிடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமானதும், அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லிவிட முடியாது.

(‘குடி அரசு' இதழில் 13.9.1931 அன்று எழுதிய தலையங்கம்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com