Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelPeriyar
பெரியார் பேசுகிறார்

ஆரிய மத வண்டவாளம் -I


சைவ வைணவ ஆதாரங்கள் சொல்வது

Periyar சைவம் என்பது வைணவம் என்பதும் வடமொழிச் சொற்களேயாகும். எப்படி எனில், சிவமதம், சைவமதம், விஷ்ணுமதம்,வைணவமதம், வேதம் - வைதீகம், புராண-பௌராணிகம், புத்தம் -பௌத்தம், வேதகர்-வைதிகர் என்பன போன்ற வார்த்தைகள் யாவும் வடமொழி வார்த்தைகள் என்பதும் வடமொழி இலக்கணப்படி மருவியவை என்பதும் தெள்ளத்தில் விளங்கும்.

இவை சம்பந்தம்பட்ட வடமொழிக் கடவுள்களும், வடமொழி மதங்களும், ஆரியர்கள் தங்கள் வேதங்களிலிருந்த வார்த்தைகளைக்கொண்டு பிற்காலத்தில் உண்டாக்கிக் கொண்டதோடு, அக்காலத்திலேயே இரண்டாகப் பிரித்துக் கொண்டு, இரண்டு கட்சிக்காரர்களாகி, அக்காலத்திய அவர்களது நாகரிகப்படி ஒருவரை ஒருவர் வைது கொண்ட வண்ணம் இருந்திருக்கிறார்கள் என்பது இவை சம்பந்தப்பட்ட புராண இதிகாசக் கதைகளாலேயே விளங்கும். வேறு மதக்காரர்கள் தோன்றி இவர்களை மானம் போகும்படி வைய ஆரம்பித்தபின்னரே ஒருவருக்கொருவர் சற்று அடங்கி ஒற்றுமைப்பட்டு இருந்துவருகிறார்கள், என்றாலும் இவர்கள் அனாகரிகமாய், ஆபாசமாய் வைது அக்காலத்தில் ஏற்படுத்திக் கொண்டிருந்த ஆதாரங்கள், “இந்துக்கள்” மதமாக ஆகிவிட்டபடியால், அவை இன்னமும் இன்றும் புராணம், இதிகாசம் புண்ணியக்கதை என்பவற்றின் பேரால் இருந்து மக்களுக்கு“ முக்தி” (மானக்கேட்டை) அளித்து வருகின்றன..

அவற்றில் ஒன்று, இரண்டு மாதிரி பார்க்கலாம். அதாவது,

சிவனையும் பார்வதியையும் வைணவர்கள் இழிவு செய்திருக்கும் தன்மையை இராமாயணம், பாகவதம், காஞ்சிப் புராணம் ஆகிய மூன்று முக்கிய ஆதாரங்களில் மாத்திரம் உள்ளவற்றைக்காண்போமாக.

இது வால்மீகி இராமாயணம்; 1877ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17-அம் தேதி திருவல்லிக்கேணி, திருமலை ஈச்சம்பாடி ஸ்ரீனிவாசராகவாச்சாரியார் தமிழ்மொழி பெயர்ப்புப் புத்தகம், பாலகாண்டம் 92-ஆம் பக்கம் 36-ஆவது சருக்கம் “பார்வதியும் சிவனும் புணர்ந்தது” என்ற தலைப்பிலும், 37-ஆவது அத்தியாயம்

‘குமாரசாமியின் உற்பத்தி” என்ற தலைப்பிலும் இருப்பதோடு, சென்ற ஆண்டு காஞ்சிபுரம் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் சுவாமிகளால் மொழி பெயர்க்கப்பட்ட “வால்மீகி இராமாயண வசனம்” என்பதில் பாலகாண்டம் 36,37-ஆவது அத்தியாயம் 75, 76, 77, 78-ஆம் பக்கங்களில் உள்ளவற்றையும் அப்படியே காட்டப்படுவதாகும்.

சிவன்-பார்வதி புணர்ச்சி, பார்வதி தேவர்களுக்கு இட்ட சாபம்

அ. சிவன் மனமயங்கி உவமையவளுடன் தேவ மானம் நூறு ஆண்டு கலவி செய்து கொண்டிருந்தார்.

ஆ. இதைக் கண்டு நான்முகன் முதலிய தேவர்கள் பயந்து சிவனை அணுகி, “பரமசிவனே இப்படி 100 ஆண்டு கலவி செய்தால் இதில் பிள்ளை பிறந்தால் உலகம் தாங்க முடியாது, நிறுத்தி விடும். வீரியத்தையும் விடாதீர்” என்று இறைஞ்சினார்கள்.

இ. சிவன் அந்தப்படியே மனமிரங்கி இசைந்து “தேவர்களே எனது கலவியை நிறுத்தி வீரியத்தையும், எனக்குள்ளாகவே அடக்கிக் கொள்ளுகிறேன். ஆனால் சிறிது பாகம் வெளிநோக்குகிறது. அதை என்ன செய்வது?” என்று கேட்டார்.

ஈ. தேவர்கள் “அதைப் பூமியில் விடுங்கள்” என்றார்கள்

உ. சிவன் அப்படியே பூமியில் விட்டார்

ஊ. அது மலைகளும், காடுகளும் நிரம்பி வெள்ளப் பெருக்கம் போலாகி விட்டது.

எ. அதைக் கண்ட தேவர்கள், நடுங்கி அக்கினியை வணங்கி, “ஓ அக்கினி தேவனே! நீ இந்தச் சிவ வீரியத்திற்குள் புகுந்து அதை வற்றவைக்க வேண்டும்” என்று விண்ணப்பித்தார்கள்.

ஏ. அக்கினி வீரியத்திற்குள் நுழைந்தவுடன் அந்த வீரியம் திரண்டு வெள்ளி மலையாகிவிட்டது பிறகு நாணல்காடாயிற்று

ஐ. உடனே பார்வதி ஏமாற்றமடைந்தவளாகித் தேவர்களைக் கோபித்து “என்னைப் போலவே உங்கள் மனைவிமாரும் ஏமாற்றமடைந்து மலடிகளாகக் கடவது” என்று சாபமிட்டு விட்டாள்.

ஒ. பார்வதி, பூமாதேவியையும் பார்த்துக் கோபித்து “என்வயிற்றில் விழ வேண்டியதை நீ ஏற்றுக் கொண்டபடியால் மலடி ஆக ஆகி அநேகருக்கு மனைவியாகக் கடவது” என்று சபித்தாள்.

பிறகு தேவர்கள் கட்டளையால், அக்கினி தான் கொண்ட வீரியத்தை கங்கையில் விட, கங்கை அதைத் தாங்கமாட்டாமல் மலையில்விட்டுவிட, அது தங்கமாகவும், வெள்ளியாகவும், தாமிரம், இரும்பு, எஃகு, தகரம், ஈயம் ஆகவும் ஆகி விட்டது. மீதி இருந்த சிறிதுபாகத்தில் குமரன் (ஸ்கந்தன்-ஷண்முகன்) பிறந்தான் என்பதாக இராமனுக்கு விஸ்வாமித்திரர் சொன்னதாக விஸ்வாமித்திரர் வாக்காகவே இருக்கிறது. இது எவ்வளவு அக்கிரமம் பாருங்கள்

விஷ்ணுவைச் சைவன் இழிவுபடுத்துவது

இதே விஷயத்தை ஆதாரமாய் வைத்து, விஷ்ணுவை இழிவுப் படுத்துவதற்காக காஞ்சிப்புராணத்தில் வட்டியும் முதலுமாய்த் திருப்பிக் கொடுத்து இருப்பதைப் பாருங்கள்.

காஞ்சிப்புராணம் -சுகசரீரப் படலம்

பாட்டு 27.

“கந்தனை நல்க
வேண்டிச் சீர் இமயத்து மடப்பிடியைத்
திருமணஞ் செய்த பின்.. இன்பக் கலவி நடத்துலுற்றான்”.

பாட்டு 28

“இமயவல்லி வனமுலை தாக்க மகிழ்ந்து” பல நாம் கலவிப்
பெருநலம் துய்க்கும் காலை, அண்டர் உணர்ந்து, வெருவி, அஞ்சி,
அம்பிகை தன்பால் கருப்ப வீறுகொண்டிடு முன்னம் சிதைவு செய்யும்
கொங்கையின் அங்கியை ஏவினார்கள்”.

(அங்கி =அக்கினி)

அக்கினிப் பகவான் அதை மறுத்து, அந்த வேலை எனக்கு வேண்டாம்
“நீவீர்களே அவணெய்தி ஊறு நிகழ்த்திடு மின்களெனக் கரைந்தான்” .

பாட்டு 29

உடனே, விஷ்ணு, பிரம்மா, தேவர்கள் மந்தர மலை சென்று நேரில் அந்த நிலையில் சிவனைக் கண்டு கும்பிட்டு நிறுத்து!நிறுத்து! என்று கதறினார்கள். சிவன் என்ன செய்தார்? கலவியில் இருந்து திமிறிக் கொண்டு அம்மணத்தோடு வந்துவிட்டார்.

பாட்டு 30.

“தெரிவையோடு ஆடும் புணர்ச்சி நாப்பண் சென்றனன் வெற்றரையோடும் அங்கண்” அப்படி அம்மணத்தோடு வந்த சிவன், விஷ்ணு முதலிய தேவர்களை உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.

பாட்டு 35

“வேண்டுவ கூறுமின் உங்களுக்கு இன்னே மேவர நல்குதும்” என்று அருள, “ஈண்டிய மாயனை உள்ளிட்டோர் தம் ஏவலினால் முகன் ஏந்தி எந்தாய், மாண்ட மலைமகள் பால் கர்ப்பம் வாய்ப்பது வேண்டிலர் மால் முதலோர்..”.

இதற்குச் சிவன் சொல்லுகிறார், “ஓ தேவர்களே! அந்தக் கர்ப்பம் தரிக்கக் கூடாது என்பீர்களாகில், அந்தக் குளிர்ந்த, முத்தை உருக்கினால் போல் வெண்மையாக வெளியாகப் போகும் நீரைக் குடியுங்கள்” என்றார். உடனே அக்கினி பகவான் கையேந்தி வாங்கினான். அப்புறம் என்ன ஆயிற்று என்றால்,

பாட்டு 36

“பனித்த முத்துருக்கியன்ன வெண்புனல் பருகுமின்கள் எனப்புகன்று அருள வல்லே எரி இரை அங்கை ஏற்றான்”.

பாட்டு 37

“அதனை .... உண்ண, விண்ணவர் எவர்க்கும் அந்நாள் மேவருங்கர்ப்பம் நீட்டி...... வெப்பு நோயினில் தொடங்குண்டார்கள்” .

அப்புறம் என்ன நடந்தது என்றால், பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் கர்ப்பமடைந்து விட்டார்கள். அந்த கர்ப்பத்தோடு சிவனை அணுகி வணங்க அவர் காஞ்சிபுரத்தில் உள்ள சுரகரி தீர்த்தத்தில் குளியுங்கள் உங்கள் கர்ப்பம் அழிந்துபோகும் என்றார். அந்தப்படி அவர்கள் அத்தீர்த்தத்தில் குளித்துத் தங்கள் கர்ப்பங்களை அழித்துக் கொண்டார்கள். ஆகவே வைணவன், சிவன் சில பல ஆயிரம் வருஷம் விடாமல் தொடர்ந்து பார்வதியுடன் கலவி செய்தான் என்று இராமாயணத்தில் புகுத்தினால், சைவன் அதை ஒப்புக்கொண்டு ஆமாம் அந்தக்காலத்தில் ஏற்பட்ட இந்திரியத்தை விஷ்ணு குடித்தார் என்று திரும்பி அடித்தான். என்ன நம்முடைய முதற்கடவுளாகிய திருமால், சிவபெருமான் ஆகியவர்கள் யோக்கியதை என்பதைப் பாருங்கள்? இதை சு.ம.காரன் சொல்லவில்லை. இராமாயணமும், காஞ்சிப் புராணமும் சொல்லுகின்றன.

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் 30.10.1943- குடிஅரசில் எழுதியது.

நூல்:-“இந்துமதமும் தமிழர்களும்” பக்கம் 4-8)

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com