Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruRebelPeriyar
பெரியார் பேசுகிறார்

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்

மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக் (வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

கடவுள் மனித நலத்துக்காகக் கண்டு பிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுப்பிடிக்கவில்லை. அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து கொண்டான். இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும். இவற்றின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஆனால், கடவுள் அப்படி அல்ல; ஒருவன் சொல்லி அதுவும் சொல்லுவது மாத்திரமல்ல, நம்பும்படி செய்து, நம்பும்படி செய்வது மாத்திரமல்ல, நம்பும்படி கட்டாயப்படுத்தி மனித மூளைக்குள் புகுத்தியாக வேண்டும். இந்தக் கதி சர்வ சக்தியுள்ள "கடவுளுக்கு" ஏற்பட்டது பரிதாபம்! மகா பரிதாபம்!

கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கிவிட்டது. அதாவது சிறு குழந்தை கையில் கிடைத்த நெருப்புப்பந்தம் வீட்டையே, ஊரையே எரித்து சாம்பலாக்கியது என்பது போல் கடவுள் எண்ணம் அறிவையே கொன்று விட்டது என்று சொல்லலாம். கடவுள் என்பது "பிடிக்குப்பிடி நமசிவாயம், (நமசிவாயம் என்றால், இங்கு ஓன்றும் இல்லை; சூனியம் என்றுதான் பொருள்)

அது "கடவுள்" என்றால் ஒரு "சக்தி," "சக்தி கூட அல்ல;" "ஒரு காரணம்" "காரணப் பொருள்கூட அல்ல" அப்படி நினைப்பது, நினைத்துக் கொள்வது மனிதனுக்கு ஒரு "சாந்தி" என்பதாக கா.சு.வும் ( M.L .பிள்ளை), திரு.வி.க.வும் சொன்ன விளக்கம் - இதை பழைய "குடிஅரசு" இதழில் காணலாம். ஆனாலும் இவர்கள் விக்கிரக பூசையும், பட (உருவ) பூசையும் செய்து வந்தார்கள். கடைசியாக மாற்றிக் கொண்டார்கள்.

மனிதனுக்கு எதற்காக கடவுள் தேவைப்பட்டது என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதிலும், கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைப்பதே இல்லை. எவனும் சம்பிரதாயத்திற்காக "கடவுள் செயல்" என்கிறானே தவிர, காரியத்தில் மனிதன் செயல் என்றும், இயற்கை என்றும், அகஸ்மாத், தற்சம்பவம், ஆக்சிடெண்ட் என்றும் தான் முடிவு செய்து கொண்டவனாகிறான். சர்வம் கடவுள் செயல் என்று சொல்லுகின்ற எவனும் சர்வத்திற்கும் தற்காப்பு செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது நாஸ்திகன் - கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.

மற்றும் சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள் மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதை சிந்திக்கவே மாட்டேன் என்கிறான். கிருஸ்து பாதிரி இந்தக் கேள்விக்குப் பதிலாக "கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்துவிட்டான்; அந்த அறிவைக் கொண்டு கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதன் கடமை" என்று சொல்லிவிட்டார்.

உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று கேட்டதற்கு, "பாபஜன்மங்களுக்கு எட்டாது" என்று சொல்லிவிட்டார். அந்த பாபஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால் பாபஜன்மங்களை ஏன் படைத்தார்? கடவுள் பாபஜன்மங்களைப் படைக்கவில்லையானால், பாபஜன்மங்களைப் படைத்தது யார்? என்று கேட்டேன். "சாத்தான் படைத்தான்" என்றும், மற்றும் அவருக்கே புரியாத எதை எதையோ யோசித்துப் பேசினார்.

இஸ்லாத்தின் கதியும் இப்படித்தான். இந்துவின் கதியே மும்மூர்த்திகள் ஓங்காளி, மாரி, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ணன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமாதி, கல்லுகள், படங்கள், பட்சிகள், மிருகங்கள், மரங்கள், சாணி (மூட்டை உருவ), உருண்டைகள், செத்துப்போன மனிதர்கள் முதலிய எத்தனையோ பண்டங்கள் கடவுள்களாக வணங்கத்தக்கவைகளாகவும் இருந்து வருகின்றன. இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளுக்குத் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ள - தன் உருவத்தை விளக்க சக்தியில்லை என்பதைக் காட்டத்தான்.

பிறகு - முன்ஜென்மம் - பின் ஜென்மம், கருமம், விதி, நரகம், சொர்க்கம், வைகுண்டம், கைலாயம் இப்படி இன்னும் பல பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினது போல் உளறல் மேல் உளறல்கள்.

மனிதனுக்குப் பிறகு முதல் சாவுவரை எதத்னையோ துன்பமும், தொல்லையும், இருக்க இந்தக் கடவுள் கருமம் மோட்ச - நரகத் தொல்லைகள் ஒருபுறம் மனிதனைச் சித்திரவதை செய்கிறது. மனிதன் (ஜீவ கோடிகள்) பிறப்புக்கும், வாழ்க்கைக்கும், சாவுக்கும் இடையில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், கவலை, தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம் என்ன? காரணம் என்ன? என்பதை எவனாலும் இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையே! இத்தனைக்கும் மனிதன் கழுதை, குதிரை, நாய், நரி, எருமை, யானை, புலி, சிங்கம், ஈ, எறும்பு முதலான எண்ணிறந்த ஜீவராசிகளைவிட அதிகமான அறிவு (பகுத்தறிவு) படைத்தவனாவான்.

இந்தப் பகுத்தறிவின் பயனால்தான் மற்ற ஜீவப்பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை மனிதன் அனுபவிக்கிறான். காரணம் இந்தப் பாழாய்ப்போன கடவுளால் தான் அதிகத் தொல்லை என்பேன். "உள்ளத்தைப் பங்கிட்டு உண்பது," "உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது" என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு, வேலையோ, அவசியமோ இருக்காது. இப்போது கையில் வலுத்தவன் காரியமாகவும், அயோக்கியன் ஆதிக்கமாகவும் இருப்பதால், மனிதன் அறிவு இருந்தும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான் - அடிமையாக வாழ்கிறான்.

இனி ஒரு அய்ம்பது ஆண்டுக்குள் மனிதனுக்கு சராசரி வயது 100 – ஆகப் போகிறது. இது உறுதி. இப்பொழுதே பல நாடுகளில் சராசரி மனித வயது 67- முதல் 74- வரை இருந்து வருகிறது. நமது நாட்டில் 1950- ல் சராசரி வயது 32- ஆக இருந்தது. இன்று 50- ஆக ஆகிவிட்டது. இதற்குக் காரணம் 1940- ல் படித்த மக்கள் நம்நாட்டில் 100- க்கு 9- பேராக இருந்தவர்கள் காமராசர் முயற்சியால் 100- க்கு 50- பேராக ஆனதுதான். அதோடு கூடவே, "கடவுளும்," "கடவுள் செயலும்" வெகுதூரம் குறைந்து மறைந்து வருவதும் தான் என்று சொல்லுவேன்.

கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும். சுதந்திரம் அதிகமாகும். நமது பெண்களுக்குப் அந்த பாப ஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால் பூரண சுதந்திரம் இருக்குமானால் - வாழ்வில் சுயேச்சையும், சமத்துவமும் ஏற்படுதமானால், மனிதன் அறிவும், ஆயுளும் எல்லை இல்லாமல் வளர்ந்து கொண்டே போகும்.

முதலில் கடவுள் எண்ணம் மறையட்டும். இன்னும் நம்நாட்டு ஆட்சியாளர்களுக்கு (உண்மையான) தி.மு.க. காரருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர்கள் (தி.மு.க.காரர்) இனியும் இரண்டு லட்சம் மெம்பர்களைச் சேர்க்க வேண்டும். பிறகு இவர்களை அசைக்க எந்த மாஜிகளாலும் முடியாது. இது தான் கடவுள் இரகசியம்.


"விடுதலை" - 03-11-1970 நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com