Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜூலை 2006
தலைப்பு மரணமுற்ற மூன்று கதைகள்
விஸ்வாமித்திரன்

1
ஆகாய வெளியில் உடலற்று நிற்பதை உணர்ந்தான். மிதத்தலின் லயம் உயிர்ப்பைத் தணித்திருந்தது. இருத்தலுக்கும் இன்மைக்கும் உள்ள உட்பிளவில் காமமுற்ற கொலையுடலின் விறைத்த குறியென நீடித்த நினைவைச் சுமந்திருந்தான் அத்தருணம். இடையிடையில் தானாய் சிரிக்கும் பழக்கமும் தொற்றிக் கொண்டது. அவன் உலவும் பாதைகளில் பூக்கும் மேகங்கள் முதியவனின் சுருங்கின வாயின் வெற்றிலைக் கறைகளென நிறம் பீறிட்டு அவனை சூழ்ந்து சதா வலை துழாவிக் கொண்டிருந்தன. வாழ்வின் நுண்திசைகளில் கண்டிருக்கும் அனுபவங்கள் புதரில் மறைந்து இரைவெறிக்கும் மிருகத்தை சூழல்படுத்திற்று. தான் ஊடுறுவி வெளியேறின எதனுடைய ஆரம்பத்தையும் அவனால் நினைவுகூர முடியவில்லை. அனைத்தையும் மயக்கமடைந்த கனவாக பாறையடைத்திருந்தது அம்மாவின் முலைத்தொடர்பு. ஒரு பொழுதில் தாமரைவடிவ தியானம் இருப்பின் ஓய்வுக் கலவியாகத் துவங்கியது.

Boy அந்நிலையின் தன்மயக்கம் மழைக்கால வனப் பயணம்போல. நிர்வாணமுற்று படுக்கையமர்ந்திருந்த பொழுதுகளில் பயத்தில் அடைத்திருந்த அறைக் கதவினை நோக்கி யாராவது கல்வீசக் கூடும் என்ற நினைவின் முதலடிபட்ட ரத்தக் கசிவு நகுலனுடைய எழுத்தின் சுயம்நசித்தலில் காயம்பட்ட பூனைகளின் கண்ணீர்வடிவை ஒத்திருந்தது. கண்ணாடியில் உடல் மெலிந்த நவீனனை அடிக்கடி சந்தித்தான். புத்தனை பிரதிபலித்தது அவனது நெஞ்சின் எலும்பு வரிகள். இதுநாள் வரையிலான நகுலனை புணர்ந்தெழுந்த அவனது கவிதைகள் பிரசுரிக்கப்படாமலே அவன் பாதுகாத்திருந்த துருப் பெட்டியுள் விந்து துடைத்த கைக்குட்டை மற்றும் மஞ்சள் பத்திரிகையென பாவிக்கப்படுவனவற்றோடு பதுங்கின. குடிப் பொழுதுகளை வேர்தொலைந்து உடன்தொற்றின நண்பனின் மனக்கலக்கப் பேச்சுக்கள் ஆக்கிரமித்துக் கொண்டன.

அவனது மீத நகர்வை தனது சுய இச்சைக்கு வழிப்படுத்தத் திட்டமிட்டு அவனது உறவின் சுவடைப் பின்தொடர்ந்தது நண்பனது துர்நாற்றமடிக்கும் நிழல். அந்த நண்பனது முகத்தினுள்ளே பிதுங்கின தசைநெளிவுகளில் தூக்கம் சிரமறுத்த இரவுகளின் காற்று பொசுங்கும் சப்தத்தை புகைத்தூதும் மூச்சுத் திணறலோடு இவனது காசநோயுற்ற தந்தை நொடிகளின் எலும்புகள் நொறுங்கி விழ இறுமிக் கொண்டிருந்தார். இல்லாது போன அவரை நினைக்கும்போதில் இன்று போலிருக்கும் நேற்று. இதைக் காண சகியாமல் உயிரோடு இருப்பதான பாவனை தனது அழிதல்கணத்தை காம்யூ உடல் கலைந்த விபத்தைப் போன்ற தொரு விபத்தில் எதிர்விழைந்திருந்தது. புணர்ச்சி குறித்த கிளர்வுகளும் பெருகின. சுதா ரகுநாதனின் குரல்பெருகும் ஒலிநதியில் பிணமாய் தவழ்வதாக ஓர் கற்பனை மண்டின நள்ளிரவு இசையின் மடியில் இன்னொரு பிறப்பைக் தந்தது போலிருந்தது.

அதேபோல குற்ற உணர்வு மனம்நைந்த தோற்றத்தோடு உறவை தற்காப்பு செய்ய துளிர்படும் தூக்கவேளைகளில் உத்தர வெறித்தல் என்பது அற்புதமான நிலவொளியின்போதான கவிதைவாசிப்பு. மெய்யடங்கிப் போயிருந்த இந்த தருணங்களைத் தவிர்த்த வேளைகளில் நண்பர்களின் உறவுச்சுற்றம் அவனது மொழியின் சமாதானமற்ற கூர்மையை நையப்புடைத்தன. அனைவரது நாக்குகளும் அவனுள் நுழைந்து நரம்பின் உட்குகைகளை ஊடுறுவி நெகிழ்ந்தோடும் குருதியினை உறிஞ்சித் திளைத்தன. சமீபமாக, பேசும் உரையாடலின் இடையிடையே அகவயத்தில் அழுகை குழிவீழ்ந்த யானையென மருள்வதை மதியுணர்ந்து அதிர்வடைந்தான். அந்நிலை யாருமற்ற மாலைத் தனிமையின் மலைசரிவு. கதவுடைந்த கழிவறையில் தன்மைதுனம் செய்யும் சிறுவனின் (மீசைப் பருவத்தில் இவனது கண்ணாடியில் பூனைமுறைத்தது) மனக் கலவரத்தில் சக மனிதர்கள் தன்னுடைய தனிமையுள் பாயமுயல்வதை வழக்கப்படுத்தியிருந்தது நாட்களின் இடப்பெயர்வு. செத்து விடுவோமோ என்ற பயமும் தொடர தியானப் பொழுதுகளில் அடைகாத்தது புத்தனின் கண்கள் மூடின ஒளிமௌனம்.

பாழடைந்த அடுப்பின் கரப்பான்களாய் திரியும் பயத்திற்கும், அவனது பிறப்புறுப்பிற்கும் ஒருமைவடிவம் இருப்பதை அவன் அகப்பட்டுக் கொண்ட நூலகங்களே பிரதானமாக பறைசாற்றின. அவன் விருப்பத்தை பழுதடையாமல் மனதில் தாங்கியிருக்கும் அவளுடனான (அவள் பெயரின்பின் வானம் கைவிரிக்கும் பரப்பில் ஓவியமிருந்தது) கற்பனை உராய்வுத் தோற்றங்களின் மன உலா கண்டு மெலிதான நடுக்கத்திற்கு வந்திருந் தான். அவளைக் காண்பதன் சந்திப்பைத் தவிர்க்கப் பார்த்தான். இயலாவிதமாய் கிழிபட்டு சக்கரமாய்ச் சுருண்டிருக்கும் சுவர்க்காகி தங்கள் அவளது மார்பெழுச்சியை பிரதிபலித்தன. பெண்ணுடலை தொட்டுணரும் முதல்கணம் தசையின் இருப்பு புயல்மரங்களாய் சரியும் என அஞ்சி தஞ்ச மாற்றுக்கென திரைப் படங்களின் இடையே நிர்வாணம் நீலம் போல் வருமெனத் தேடி திரையரங்குகளுக்கு சென்று வந்தான்.

உரிக்கும் நேரத்தில் அணிந்து கலைந்தனர் நடிகர்கள். அங்கும் விளைந்தது ஏமாற்றம். இடைவேளையில் சற்றும் எதிர்பாராமல் இவனது இடுப்பை வாய்குழியடைந்த கிழவர்கள் தினவுடன் கண்கூர்ந்தார்கள். காற்றின் அபரிமித விந்தாய் சூழ்ந்திருந்தது மூச்சை புதைத்துவிடும் சிகரெட்டுகளின் புகை போக்கம். கழிவறைத் தரையில் செத்த பாம்புகளாய் நீண்டிருந்த சிறுநீர் கோடுகளில் எண்ணை பிசுபிசுப்பில் திரையில் தப்பிவிட்ட நீலம் அலைவதைக் கண்டு உடல் குறுகினான். அகம் வெடிக்கு முன்னே அங்கிருந்தும் இங்கிருந்தும் தப்பிக்க ஆகாயம் இறுதிப் புகலிடமானது. எனினும் மிதத்தல் தரும் கொடும் அயர்வை அவனது உள்ளம் ஏற்கும் நிலையிலில்லை. தொடரும் காலத்தின் பூரான் நகர்வை தவிப்பின் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தான். இடைநேரங்களில் ஓஷோவின் தாடி பிடித்து இழுப்பதற்கான ஞானம் விரல்களில் கிளைபாவின. தலைதவழ்ந்து மேலிருந்து பார்த்ததில் பூமியின் பச்சை ரோமங்களாகத் தென்பட்டன நெடும் மரங்கள். நிலை தன்னுணர்ந்து உடல் நலிவுற வேண்டுமென பேச்சை அழித்தான். உயிர்ப்பைக் காப்பாற்றும் தன்முனைப்பில் மரணம் பூப்படையாத பழைய ஞாபகங்கள் அவனை இன்னும் தொலைகாலம் மிதக்கும்படியே இருக்க சபித்திருந்தன.

2

கதை அல்லது கவிதை எனத் தோன்றியவையுள் உடல் ஒலியற்ற வேதனையை பதுக்கியுள்ளதை கூறும் வயதையடைந்திருக்கும் நனவிலி மனத்தை நேரில் காண தலைப்பட்டான் இருப்பு சலிப்புறத் துவங்கின ஓர் இளம்பருவம். அப்போதைய அயர்வில் கைவிட்டுப் போன இல்லாதவைகளைப் பற்றி நினைவின் நடை தருணங்களில் அசைபோடுவது அவனைத் துரத்திய வண்ணம் இருந்தது. தப்பி யோடும் நோக்கம் பெற்றிருந்தான். இவ்வேளைகளில் மூலிகைகளென கற்பனை தந்த செடிகளின் சாம்பலை விநியோகித்து உடல்காத்தான். பதிலுக்கு கிடைத்த பணத்தில் விரவிக் கொண்ட செடிகளின் கோபம் இதயம் வெறுத்து துப்பின எச்சில் அவனது உடைகளில் அழுக்காய் வழிந்தது. எனினும் தைரியம் குன்றாமல் தற்காலிக உணவை செடிகளின் உயிரிலிருந்து உறிஞ்சுவதாகவே தொடர்ந்தது அவனது இதுவரையிலான வாழ்வியல் முயற்சி. தோல்வியுற்று சருகு எய்தின செடிகள் உதிர்ந்த சாலைகள் அவனது நடமாட்டத்தை மகத்தான குற்றமென பகிரங்கமாகத் தடயப்படுத்தின.

அத்தருணங்களில் பதுங்கித் திரிந்த வீதியோரம் பிம்பம் கசியும் கண்ணாடிகள் வழி தன்னைக் காணும் குணத்தில் இருப்பின் நீட்சியை உறுதிப்படுத்தி தன்னை இணை தொடர்ந்தான் அவன். நிற்கும்போது காணும் காட்சிகளுக்கும் நடக்கும்போது காணும் காட்சிகளுக்குமான உருவபேதம் முதுகில் குத்தப்பட்டுவிடும் அருகிலான கத்தியின் இரும்புவாசனையாய் பயமுறுத்தியது. இடம்பெயர இயலாவிதம் செய்திருந்தது வெயில்கால நாயின் மந்த கதி. பிறப்பெடுத்த வாலின் குறுகுறுப்பை எதிர்படும் நகைச்சுவையம்சங்களுக்கு சிரிக்கத் தலைபட்ட கணங்களில் அசையும் போதிருந்து கண்டுகொண்டான். அவனுக்கு எதிராய் வந்து பின்புறம் கடந்து கொண்டிருந்த பலரது உடல்கள் நகரும் கொலைவாட்களாய் உரசிச் சென்றன.

அனைத்தும் புத்தி பேதலித்து புதிராய் உலவும் நகரநகர்வில் அரிதாகப் பார்வையில் படும் ரயிலின் வேகம் அவனை பிரமிப்பைத் தந்தது. ரயிலின் தற்கொலைகளில் உயிரின் வலி நினைவில் பிடிபடாதது போல. அதற்கடுத்தாற்போல் பெண்களின் பின் அசைவுகளில் அவனது கண்கள் நிலைகுத்தி அலைந்தன. ஒருமுறை பெண்குறியை பெரும் சோழி என்று கூறி நகைத்த நண்பனை உயிருடன் நிர்வாணமாக பிரேத அறைகளுள் பூட்டிவிட்டு சாவியைத் தொலைத்துவிடும் மூர்க்கம் வெகுண்டது பால்யகாலம். அவனது பாலியல் நுகர்வை இவன் பெறமுடிந்ததில்லை. இதன் ஞாபக இடைச் செருகலில் ஏற்பட்டுவிடும் நள்ளிரவு விழிப்பு பெரும்கொடூரம். அருகில் பல பெண்ணுடல்கள் தீரா கற்பனையில் நெளியும். பல குறிகளிணைந்து நீண்டுவிட்ட காமப் பாம்பை மரணப்படுத்துவது என்பது சூழ்ந்தவற்றிலிருந்து விலக்கம் பெறக் காத்திருக்கும் அவனுக்கு மிகவும் வலிகளாலானது.

அத்தருணம் மூண்டெழும் உடல்களின் பாரம் சுமக்கவியலாமல் வீரிடும் மயானத்தின் நெடிய காக்கைக் கூக்குரல். நகுலனிலிருந்து ஓஷோவை அவன் மாற்ற சப்தம் அடைந்ததும் இவ்விதம்தானா என்று சமீபமாய் ஆச்சர்யத்தை அவ்வப்போது எண்ணிக் காணும்படி மனவியப்பு பெற்றிருந்தான். அடிக்கடி தலை சுற்றுவது போல் தோன்ற அகத்தில் சிரிப்பு ஒளியோடியது. ஓஷோவின் தாடிக்குள் மறைந்துகொள்ள துடித்தான். மீண்டும் மேகங்கள் அவனை உறிஞ்சிவிடுவது போல பாவனைப் படுத்தி மேல்தொடர்ந்தது. நீண்ட காலத்தை தன்வயப்படுத்தின சிலநொடிகளுக்கு முன் தலைநசுங்கி இறந்த பெண்ணை சாலையோரம் தென்படக் கண்டான். அவனது இதுவரையிலான பிராயத்தில் இவ்விபத்து எதிர்பாராத முதன்முறை. சற்றே அவள் கால்கள் புரண்டு கொலுசுகள் குலுங்கின. அவளது இருப்பிற்கு முன்னும் பின்னுமாக தன்னைத் தொடரும் காற்றின் ஊளையிடல் சஞ்சலப் படுத்தியது.

அவளை இனித் திரும்பவும் காணவே காணஇயலாது என்ற யதார்த்தம் அவனது கதை கவிதைகளில் ஊடுறுவி ரத்தம் வழிய நின்றது அவன் மீதமிருந்த தற்காலம். காகிதத்திலிருந்து கண்களுக்குள் விரவிச் செல்லும் சொற்புற்றாய் எழுத்தைக் கொன்றால் இறைமை பெறலாம் என்ற வாசகம் அவனை அவ்விடம் விட்ட கன்றுவிட முறையீடு செய்தன. ஓர் அச்சம் சிதிலமடைந்த மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று இவ்வரி களைத் தான்தான் கையளித்ததாக கூறின வெகு கணமே ஓஷோ ஒட்டடை படர்ந்த சிற்பமாக மாறிவிட்டிருந்தார். தாடி மாத்திரம் தொலைவில்காணும் அருவியென அசைந்து கொண்டிருந்தது. தியான நேரம் விறைக்கும் குறியை பொழுதுபோகாமல் வாசலில் நின்றிருக்கும் அயலான்போல வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து அறைமுழுக்க சிதறிவிட்ட புத்தகங்களைத் தூசுதட்டி அலமாரிப்படுத்தும்படி நண்பர்களென சூழ்ந்திருந்த நண்பர்கள் வேண்டுகோளிட்டார்கள்.

உடையிலிருந்து உள்ளுடலுக்குத் தாவிவிட்ட செடியின் சாம்பல் வாசனை தகிக்கப் பெற்ற இவன் அவர்களின் திடீர் வருகையை புதிராகப் பார்த்தான். அவர்களது குரல்கள் வலியற்றதாக இருந்தது ஆச்சரியம் கொள்ளச் செய்தது. வார்த்தைகளும் அவர்களும் கொண்டிருந்த தொடர்பு பணம் கொடுத்து பாலுணர்ச்சி தணித்த உடலின் சுகத் தளர்வை ஒத்ததாயிருந்தது. வாழ்வை பரிட்சிக்காத அவர்களிடமிருந்து தனிமைப்பட்டு தன் மைதுனம் போல் எழுத்தென தோன்றினவை களை எழுதிப்பெற்ற பரவசத்தை மீண்டும் இசைவழி இனம் கண்டான். அவன் சுழலும் சுற்றில் வேறு இணையென மாற்றுக் காணமுடியாத இளையராஜாவின் இசைப்பகிர்வில் பிறந்த மகிழ்வு இக்காலகட்டத்தின் பல சந்தர்ப்பங்களில் இவனது இதயத்தில் வானுயரும் செடிகள் நட்டன. உடலம் குறுகி உயிர் பெருகியது. அன்பின் அணையா சுடர்வினை. ஓஷோவின் கல் குளிர்ச்சி மீண்டும் இவனுள் சிலைவிடத் துவங்கியது. தாடி வளர்க்க முயன்றான். இவனது வசிப்பை ஜீரணப்படுத்திக் கொண்டது மனம் சூன்யப்பட்ட தற்காலிக உலகம்.

3

தொடர்வது எதற்கான பயணம் என்பது அறிதலுக்குப் பிற்பாடு தெளிவாகக் கூடும். வாழ்வு ஒரு நுட்பமான கற்பிதம். இசைவும் மறுப்பும் ஒருசேர அதன் சிதைவை உற்பத்தி செய்து விடுகின்றன. இதற்கெல்லாம் நடுநாயகமாக அமர்ந்து கொண்டிருக்கும் சிந்தனை தான் அனைத்தையும் பேணும் கூன்விழந்த குரூரம். வரலாற்றின் முதல் கொலையாளி. சிந்தனை தொலைந்தால் சீர்படும் உலகம். எனவே சிந்தனை பின்னும் கொடும்வலையில் அகப்படாது மனம் தப்ப அவனுக்குத் தென்பட்ட ஒற்றைவழி சிற்பங்களின் மௌனம் புதையுண்டிருக்கும் கோவில்களுக்குச் செல்வது என ஆனது. அங்கு துயிலும் அமைதி உவப்பாயிருந்தது. எனினும் பக்தர்களின் இச்சை களனைத்தும் ஒன்று திரண்டு உருக்கொண்ட ஆவேசப் பறவையென வெளவால்கள் காலத்தின் கைகளுக்கெட்டாத சுதந்திரத்தின் சாப வாசனையுடன் சலசலத்தன. அவற்றின் அலையடிப்பை ஒற்றைத் துணையெனக் கொண்டிருக்கும் சுவர் சிற்பங்களின் அசைவற்ற கனிவு அவனது மனத்தை நிதானப்படுத்திற்று.

அழிவடைந்த சிற்பங்களில் தென்படும் முலைத் தோற்றம் போன்று பெருகின வடிவங்கள் இவனைக் கவர்ந்தன. எண்ணெய் பிசுக்கேறிய எறும்புகள் அவ்வடிவ நேர்த்திகளை கால் சுகித்தபடி நடமாடித் திரிந்தன. இவனது உடலிலும் எறும்புகளின் குறுகுறுப்பு கற்பனையிட்டது அக்கணம். சுற்றியிருந்த வர்கள் பாரம்பரிய சிதறல் வயப்பட்ட கண்களோடு இவனை உற்றுப்பார்த்தார்கள் அந்நியன் எனும்படி. தன்னலம் மட்டுமே பிரார்த்தனையாக தனக்கிணையாக வேறு ஒன்று இருக்கிறது என்பதே அவர்களுக்கு அருவெறுப்பைத் தருவதானது. அவர்களது ஒவ்வொரு சொல்லிலும் வெருண்டோடின எலிகளின் தற்காப்பு. அங்கிருக்கும் அவனுக்கு சமயங்களில் இவனாக தானிருப்பதே ஆதுரமான புகலிடமாக இருந்தது. உள் இருள் கூடி பார்வையின் புறமாகவும் விரவத் துவங்கினது போலிருந்தது தூண்களின் பாழடைந்த கரியபூச்சு.

சுற்றில் தென்பட்ட யாளியின் வாய்பிளவின் இருட்துளையுள் இவனது மனம்நலிவுற்ற நண்பன் முகம் நீண்டான். (ஒருமுறை யாளியின் விதவிதமான வடிவம் சிற்பிகளின் தன்குணச் சாயலை வெளிப்படுத்துவதாக அதே நண்பன் காரணப்படுத்தியிருந்தான்). அந்த நண்பன் உடன்வந்திருந்தது இப்பொழுதுதான் நினைவில் உறைத்தது. அவன் தன்னுள் உரையாடிக் கொண்டிருந்த சமயம் நண்பன் பலமுறை குறுக்கிட்டு பல சொல்லியபடியே உடன்தொடர்ந்திருந்தான் போல. இவன் அரிதாய் கவனித்து எதிர்வினையாற்றும்போது உடனே பதிலீடு செய்துவிட ஏகும் பதற்றத்தை மௌனமாக அடைகாத்து உள்ளடர்ந்த சிரிப்புடன் கண்கூர்ந்தான் நண்பன் பதுங்கின புலியின் வன்ம அடிப்படையில்.

யாளிகளின் விதவிதமான குறிவிழிப்புக்கள் இவனது உள்மோகம் தூண்டின. தூரம் கடந்த இகவயம். உடனடியாக இருப்பதான விஷயங்கள் இல்லாதனவாக சாயை அடைந்தன. நண்பன் சுவரொலியின் அசரீரியாக தொடர்ந்த வண்ணமிருந்தான். இவன் நின்று அமர்ந்து நடந்தான். நிற்பதன் வலி அமர்வதில் பெருகியது. பெற்றோரோடு வலமிட்ட சிறுவர்கள் கோவிலை விளையாட்டு மைதானமாக்கும் தவிப்பிலிருந்தனர். அவர்களது மழலைத் துடிப்பை துல்லியமிடும் முகவெட்டுக்களில் இவனுக்கு அவன் கடந்துவந்திருக்கும் பல கலைஞர்கள் நெரிசலாகத் தென்பட்டார்கள். வெகுநேரம் நடந்த அயர்வில் எண்ணத்தின் பிடிபடாத குறியீட்டுப் புதிர்களின்வழி நிலை விட்டகலத் தோன்றியது. இளைய தலைமுறையாய் ஊற்றெடுத்த சிறுவர்களின் மனதை ஈடுசெய்யாத உடலின் அசூர வளர்ச்சி நிழலாய்த் துரத்த வானம் தெரிந்த கடல் வெளியில் சற்றுப்பொழுது அலைந்தான்.

வழிநாய்கள் முகம்சுணங்கி ஏதேச்சையான முறைத்தலை கையாண்டன. எங்கு சென்றிடினும் விடுபட எண்ணுவதிலிருந்து விடுபட முடியவில்லை. காற்று மூச்சு திணறும்படி கடலலைகள் பதறியெழுந்தன. கடல்நீர் கால்களை அரித்து சூட்சமமாக உள்ளிழுத்தது. துயரத்தை தசைகளாய் பெருக்கி பெரும்சிறுவனென வளர்ந்துவிட்ட இவனது உடல் சிறுபடகாக அலைபடும் என இரைதேடும் வேட்கையில் சிற்பங்களின் எண்ணெய் ருசி சலித்த எறும்புகள் இவனது இருப்பிடம்நோக்கி இடம்பெயரத் தலைபட்டன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com