Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthu Ezhuthu
Puthu EzhuthuPuthu Ezhuthu
ஜூலை 2006
டோபியாஸ் உல்ஃப் - நேர்காணல்
சந்திப்பு - ஜோவன் ஸ்மித் / தமிழில் : ஜி. குப்புசாமி



கதையெழுதுதலைக் கற்றுத்தர முடியுமென்று கருதுகிறீர்களா?

இல்லை.

அப்படியென்றால் ஸிராக்யூஸில் உங்களது எழுத்துப் பயிற்சியரங்கில் என்ன கற்றுத்தருகிறீர்கள்?

Wolff அவர்களுடைய சொந்தப்படைப்பிற்கு அவர்களே மிகச் சிறந்த தொகுப்பாசிரியர்களாக இருக்கவும், அவர்களால் நன்றாகச் செய்யமுடிகிற விஷயங்களை அவர்களே அறிந்து கொள்ளவும், அவர்கள் மேலும் கவனம் செலுத்தத் தேவையான விஷயங்களை அடையாளம் காட்டவும், அவர்கள் இன்னமும் அமிழ்ந்து தேடத் தொடங்காத விஷயக் கிணறுகளைச் சுட்டிக் காட்டவும் நான் உதவிசெய்ய முயல்கிறேன். தம்மிடமிருந்து மேலும் அதிகமாக ஈடுபாட்டைக்கொண்டு வரவும் ஒவ்வொரு வாக்கியத்திலிருந்தும் அதிகபட்ச சாத்தியங்களை எடுக்கவும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். தொடர்பற்ற தகவல் துணுக்குகளைவிட சிந்தனைச்சட்டங்கள்தாம் உண்மையில் இன்றியமையாதவை என்று கருதுகிறேன். எழுத்துப்பட்டறையில் தகவல்களைக் கற்றுத்தர முடியாது.

உங்கள் மாணவர்கள் யார்?

நான் ஒரு வருடத்தில் ஒரு செமஸ்டருக்குத்தான் கற்றுத்தருகிறேன். இந்த வருடம் அந்த செமஸ்டரில் ஒரே ஒரு பாடம்தான் எடுக்கிறேன், ஏற்கனவே கைப்பிரதி ஒன்றைத் தயாரித்து அதை முழுமையாக்க முயன்று கொண்டிருக்கும் பின் இருபதிலிருந்து முன் முப்பது வயது வரையுள்ள பெரிய மாணவர்களுக்கு அதில் ஒரு எழுத்துப்பட்டறை நடத்துகிறேன். நாங்கள் சாதாரணமாக பள்ளியிலிருந்து நேராக மாணவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. வெளியுலகிற்கு வந்து வேலைப்பார்த்துக் கொண்டே எழுதவும் செய்கிறவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறோம், ஏனெனில் இந்தப்பயிற்சியை முடித்தபிறகு அவர்கள் தமது வேலையில்தான் தொடரப் போகின்றனர் என்பாதால் ஓர் இளம் எழுத்தாளனின் ஈடுபாட்டிற்கு இது முக்கியமானதொரு பரீட்சையென்று எனக்குப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் புனைகதை பிரிவில் ஆறு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.

அவர்களோடு மிகநெருக்கமாக நான் பணிபுரிகிறேன். சில வேளைகளில் இலக்கிய வகுப்புகள் எடுக்கிறேன். கடைசியாக நான் எடுத்த வகுப்புகளில் ஒன்று ரஷிய சிறுகதைகள். எனக்குப் பிடித்தமான பாடம்.

செகாவ்வை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?

அவருடைய படைப்புகளை நான் தொகுத்து, சில வருடங்களுக்கு முன் பான்டம் வெளியிட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் அவருடைய கதைகள் அனைத்தையும் சேகரித்து, நான் தேர்ந்தெடுத்த கதைகளின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்புகளை எடுத்து வெளியிட்டிருக்கிறேன். இதற்காக ஏராளமாக படிக்க வேண்டியிருந்தது. ஆனால் சந்தோஷமாக இருந்தது. நான் விரும்பிச்செய்த விஷயம் அது.

அவரிடம் உங்களுக்குப் பிடித்ததென்ன?

அவரது மனிதநேயம், அதே நேரத்தில் அவரது இரக்கமின்மை. அவர் ஒரு மிக நல்ல டாக்டரைப் போல-அவர் நிபுணத்துவம் வாய்ந்ததொரு நோய் நாட்ட வல்லுனர், அதே சமயத்தில் மிகவும் கருணை மிக்கவர். ஆனால் மென்மையானவரல்ல. விஷயங்களின் அளவீடுகளில் மனிதர்கள் எங்கே பொருந்திப் போகின்றனர் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. மஞ்சூரியாவிலிருந்து ஒரு போர்க்கப்பலில் திரும்பி வருகிற ஒரு போர் வீரனைப்பற்றிய அவரது அற்புதமான கதை ஒன்று இருக்கிறது. அவன் படுகாயமுற்று மரணப் படுக்கையில் இருக்கிறான், ஆனால் அதை அவன் உணருவதேயில்லை. அந்தளவிற்கு அறிவீனன். மிருகத்தனமான மனிதன், அது நன்றாகவே வெளிப்படுகிறது.

ஆனால் அவனுக்கு மிக மென்மையான பக்கமும் இருக்கிறது. எனவே ஏக்கத்திலும், மீட்டெடுத்துக்கொள்ளா அறியாமையிலும் அவன் இறந்துபோகிறான். பெரும்பான்மையான கதைகள் இங்கே முடிந்துவிடும். ஆனால் செகாவ் கடலில் சவஅடக்கம் செய்கிறார், பின் அந்த உடலைத் தொடர்ந்து செல்கிறார். பாரத்தோடு பிணைக்கப்பட்ட உடல் நீரில் மூழ்கி ஆழமான ஆழத்திற்குச் செல்கிறது, ஒரு சுறாமீன் உடலுக்கருகே நீந்திவருகிறது. நிரடிப்பார்க்கிறது. பின் விலகிச் சென்றுவிடுகிறது.

செகாவ்பார்வையை கடலுக்கு மேலே கொண்டு வருகிறார். மேகங்களுக்கிடையே சூரியன் உதித்தெழுந்து கொண்டிருக் கிறது. நீர்ப்பரப்பில் சூரியக்கதிர்கள் நாட்டியமாடுவதைப் பற்றி-நான் இதைச்சரியாகக் கூற முயல்கிறேன்-மனித மொழிகள் எவற்றின் வார்த்தைகளிலும் இல்லாத பரவசத்தோடு பேசுகிறார். எனவே பரிபூர்ண அறியாமையில் ஒருவன் இறந்து போகும் சோகத்தை, எப்போதுமே வெளிப்பட்டிராத அவன் இதயத்தின் நற்குணங்களை,அவன் மீது ஏற்படும் அம்மகத்தான குவியத்தைக் காட்டி விட்டு பின் திடீரென்று அனைத்தையும் திறந்து விடுகிறார். இவையனைத்திலும் நாம் எங்கே பொருந்தியிருக்கிறோம், எவ்வளவு சிறியவை இவையனைத்துமென்று நமக்கு உறைக்கிறது.

அந்தப் பாத்திரத்தைப் பற்றிய உங்கள் உணர்வுகளை இது குறைத்து விடுவதில்லை ஆனால் இங்கேயமைந்த நமது இருப்பின் கால அளவுக்கும் நமது பிரச்சைனைகளுக்குமான ஒரு வரைநிலையுணர்வை இது தருகிறது. அவர் ஓர் அபாரமான எழுத்தாளர். செகாவ்வை நான் நேசிக்கிறேன். நாள் முழுக்க அவரைப்பற்றி நான் பேசிக் கொன்டேயிருக்க முடியும்.

எதைக் கற்றுதர முன்னுரிமை தருவீர்கள்- இலக்கியமா, எழுதுதலா?

இலக்கியம். ஏனென்றால் நான் இலக்கியம் பயில்விக்கும்போது மனிதர்களின் உணர்வுகளைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எனது நேர்மை பெரும் அழிவையேற்படுத்திவிடாத ஒரு வடிவத்தில் வருகிறதாவென்பதில் மிகச்சுலபமாக அப்படியாகி விடுமென்பதால் நான் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அந்த நிலையில் இருக்கும் எவரும், அந்த உத்தேசம் எதுவுமின்றியே பெரும் நிலைக்குலைவை உண்டாக்கி விடமுடியும். கடந்த காலங்களில் நான் கூட சிலரிடம் சிலநேரங்களில் தவறுதலாக பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.

ஒரு நாவலாசிரியராகத் தொடங்கினீர்கள். பின்னர் சிறுகதைகளுக்கு உங்களை மாற்றியது எது?

பல எழுத்தாளர்களை போல வேறு எதைச்செய்யவும் எனக்கு அதிகம் நேரமில்லாததால் கதைகள் எழுத தொடங்கினேன். கவிதைகள் எழுதுவதைப் பற்றி பிலிப் லெவின் குறிப்பிடும்போது அவர் நாவலாசிரியராக இருப்பதையே எப்போதும் விரும்பிவந்தாலும் அருவடைய கவனத் திட்டத்திற்கு கவிதைகளே பெரிதும் பொருந்தி போயிருப்பதாகக் கூறுகிறார். அவருடைய கவிதைகள் உண்மையில் அழுத்திச் சுருக்கப்பட்ட நாவல்களைப் போலத்தான். அந்தளவிற்கு தெளிவான வர்ணனைகள் தெளிவான மனிதர்கள். அவர் ஓர் அற்புதமான கவிஞர்.

உண்மைதான். வாஸ்தவத்தில் உங்கள் கதைகளும் எனக்கு கவிதைகளைத்தான் நினைவு படுத்துகின்றன.

நல்லது. சிறுகதை என்பது கவிதையைப் போல நாவலிலிருந்து ஒரு வேறுபட்ட வடிவமென்று நான் நம்புகிறேன். சிறந்த கதைகள் என்பவை ஆன்மரீதியில் நாவல்களை விடவும் சிறுகதைகளுக்கு நெருக்கமாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது; அப்படிதான் இருக்கவும் வேண்டும். வர்ணனையில் எந்தவிதமான தளர்த்தலும் இருக்க முடியாது. சிறுகதை முதல் தரமானதாக இருக்க வேண்டுமானால், அனைத்தும் இறுக்கமாக எடையேற்றப்பட்டு விண்ணென்றிருக்க வேண்டும். நாவலில் அதை உங்களால் செய்ய முடியாது. வாசகன் அவ்வளவு நீண்டநேரத்திற்கு இறுக்கமாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதைத் தாங்க முடியாதென்பதால், விலகலையும், பிடியில் கொஞ்சம் தளர்வையும் நாவல் கோருகிறது.

நாவல்கள் வாசிக்க எளிமையானவை.

வாசகர்கள் அவற்றிற்குள் படிந்து கொள்கின்றனர். நீங்கள் அந்தளவிற்கு கவனிப்புடன் இருக்க வேண்டியதில்லை. நம்மெல்லோருக்கும் இருக்கும் நேர நெருக்கடியில் வாசகர்கள் ஏன் சிறுகதைகளை வாசிப்பதில்லையென்று பலரும் என்னைக் கேட்கின்றனர். தர்க்கரீதியாக நமது கலாச்சாரத்திற்கேற்ற வடிவமாக அது தோன்றுவதால் இருக்கலாம். ஆனால் வாசகர்கள் கவிதைகளை வாசிக்காத காரணமேதான் இதற்கும் காரணமென்று நான் கருதுகிறேன். ஏனென்றால் சிறுகதைகள் அவற்றிற்கான மார்க்கத்தில் நம்மைப் பெரிதும் வற்புறுத்துபவை. அவற்றின் மறை செய்திகளோடு ஒருவித பிணைப்பை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவை தமக்கானதொரு தனி உலகத்தில் இருக்கின்றன. மிகச்சிறந்த சிறுகதைகள் நாவல்களை போல கட்டமைக்கப் படுவதில்லை என்பதால் பெரும்பான்மையோர் அவற்றில் ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர். அவற்றில் தெளிவான முடிவுகள் இருப்பதில்லை. அவை உங்களுக்கு எல்லாவற்றையும் கூறிவிடுவதில்லை. உட்குறிப்பாக இருப்பவற்றிற்குள் தான் பெரும்பாலும் அவை நகர்கின்றன. எனவே செகாவ், அல்லது மாப்பஸான், அல்லது ரேமண்ட் கார்வெர் அல்லது ஆலிஸ் மன்றோ அல்லது, மாவிஸ் காலண்ட் போன்றோரின் கதைகளைப் படித்துவிட்டு நிறையப்பேர் ‘சரி அப்புறம் என்ன நடந்தது? என்று வியக்கின்றனர். ஒரு நாவலைப் போல தெளிவாக வழியைக் காட்டி முடிய விரும்புகின்றனர். மிகச்சிறந்த சிறுகதையாசிரியர்கள் அந்த வழியில் பணியாற்றுவதில்லை.

ஒரு நாவலுக்குள் நீங்கள் தடம் பதிக்க முயல்கிற இடத்திலேயே சிறுகதைகள் பெரும்பாலும் முடிவடைந்து விடுவதாகத் தோன்றுகிறது.

அது சரிதான். ஒரு தினத்தின் முடிவில் அதே மனிதர்களிடம் திரும்பி வந்து வாழ்க்கைக்குள் அவர்கள் மேலும் ஆழமாக நுழைவதை கவனிப்பதில் ஒருவித சுகம் இருக்கிறது. இப்போது ஐரிஷ் எழுத்தாளர் கோம் தோய்பின் என்பவரின் ‘The Heather Blazing’ என்ற அற்புதமானதொரு நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ‘The Death of Ivan llynch’ ல் வருகிற அந்த மகத்தான வரி என்ன? - இவான் இலிச்சின் வாழ்க்கை மிகவும் எளிமையானது, மிகவும் சர்வசாதாரணமானது; அதனால் மிகவும் பயங்கரமானது - இந்த உணர்வைத்தான் இந்தப் புத்தகத்திலிருந்து நீங்கள் அடைகிறீர்கள். இந்தப் பயங்கரமான, துர்ச்சகுனமான பாரத்தை மெதுவாக ஏற்றுக்கொள்வது தினசரி வழமைகள்தாம். அத்தகையதொரு, அழகான நாவல். அதை வாசிக்க உங்களுக்குப் பொறுமை வேண்டும்.

ஒரு கதையை எழுத எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள்?

ஆறு வாரங்களுக்கு குறைவாக எப்போதுமில்லை. வெகு காலத்திற்கு அதனுடன் நான் வாழ்கிறேன். அந்தக் கதை எப்படிப்பட்டதென்று முடிவெடுத்துக் கொள்ளவே சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று வாரங்கள் பிடிக்கிறது.

ரொம்ப நேரத்திற்கு எதிரே சுவரை முறைத்துக் கொண்டிருப்பீர்களா அல்லது கடமையாக தட்டச்சு இயந்திரத்தின் முன் உட்கார்ந்து விடுவீர்களா?

பல்வேறு வகைகளில் முயன்று பார்க்கிறேன், துருவித்துருவி ஆராய்கிறேன். தொப்பியில் விளக்கைப் பொருத்திக் கொண்டு குகை ஆராய்ச்சி செய்வதைப்போல, வெவ்வேறு அறைகளுக்குள் போய் வந்து கொண்டே யிருக்கிறீர்கள். கடைசியில் சரியானவொன்றிற்கு வந்தடைந்து விட்டதைப் போலப்படுகிறது; இருட்டிற்குள், முன்பின் அறிந்திராத பிரதேசத்திற்குள் இறங்குகிறீர்கள். உங்களுக்கு முன்பு கொஞ்ச தூரத்திற்கப்பால் எதுவும் கண்ணிற்குத் தெரிவதில்லை.

இது போகப்போக சுலபமாகிவிடுகிற வேலை கிடையாது, இல்லையா?

இல்லை. ஒரு விதத்தில் கடினமாகிவிடுகிறது. கடினமாகி விடுவதோடு மேலும் திருப்தியளிக்கக் கூடியதாகிவிடுகிறது. ஏனெனில் அதிகமாக நீங்கள் எழுத, எழுத, உங்கள் மரபின் பாரத்தையும், வடிவத்தில் உள்ள சிரமங்களையும், ஏற்கனவே அதிகமும் நீங்கள் செய்தவற்றை மீண்டும் செய்ய விரும்பாததையும் அறிந்து கொள்கிறீர்கள். எனவே நீங்கள் கூறும் கதையை மிகப்பரிபூரணமாக அடக்கி வெளிப்படுத்தும் புதுப்புது கதை வடிவங்களுக்காக தொடர்ந்து தேடிக் கொண்டேயிருக்கிறீர்கள். ஆர்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள இலக்கில் உயரத்தை ஒவ்வொரு முறையும் கொஞ்சம் உயர்த்திக் வைத்துக் கொள்கிறீர்கள். சில எழுத்தாளர்கள் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப எழுதத் தொடங்கி,ஏறக்குறைய தவிர்க்கவியலாமல் சுய எள்ளலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.

அவர்கள் தம்மைத்தாமே எளிதில் வெறுத்துக் கொள்வதில்லை போலிருக்கிறது.

அந்த விதத்தில் அவர்களைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன். தம்மின் மீதும் தமது படைப்புகளின் மீதும் அதிருப்தியுறுகிற வழக்கம் அவர்களுக்கிருப்பதில்லை. ஆனால் பல எழுத்தாளர்கள் - நானும் அவர்களில் ஒருவன் - சுலபமாக அதிருப்தியுற்றுவிடுகிறோம். இப்படிப் பட்ட குணத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவது கொஞ்சம் கடினம்தான். ஆனால் அது ஒரு தாற்றுக் கோல் போல. உங்களை அது விழிப்போடும் அமைதியற்றும் வைத்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் கூடுதலாக உங்களை முள் தள்ளிக் கொள்கிறீர்கள்.

மேலும் அதிகமாக விழைகிறீர்கள். அவ்வாறிருக்கும் எழுத்தாளர்களை உங்களால் கூறிவிட முடியும்.

உதாரணத்திற்கு ராபர்ட் ஸ்டோன். ஒவ்வொரு புதிய நாவலிலும் புதியதாக எதையோ செய்கிறார். வேறு சில எழுத்தாளர்களிடமும் இதை நான் காண்கிறேன்.

மிகவும் பிரயத்தனம் தேவைப்படுகிற வேலையாகத்தான் தெரிகிறது.

எழுதுவதே பிரயத்தனமிக்கதுதானே? மற்றவர்கள் வேலை என்று கூறப்படும் ஒன்றிற்குச் சென்று, மேசையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு, புள்ளி விபரங்களைப் பார்த்துவிட்டு, மின்னஞ்சலை சரிபார்த்து பதிலளித்துவிட்டு, சில அறிக்கைகளைப் படித்துவிட்டு, அடுத்தக் கட்டிடத்திலுள்ள அலுவலகத்திற்குச் சென்று, வியாபாரம் பேசிவிட்டு, கொஞ்சம் அரட்டையடித்து விட்டு, திரும்பச் சென்று உட்கார்ந்து, கொஞ்சம் படித்துவிட்டு, சில மெமோக்கள் டைப் அடித்துவிட்டு, மீட்டிங்கில் கலந்து கொண்டு, சாப்பிட்டு விட்டு, திரும்ப வந்து, காலையில் செய்தவற்றையே மீண்டும் செய்யத் தொடங்கி..., பலருக்கும் வேலை என்பது உண்மையில் மிகவும் குழுவாகவும், கூட்டாக செயல்படுவதுமாகவே உள்ளது. ஒருவர் மட்டும் தனியாக அமர்ந்து ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறுமணி நேரங்கள் கடுமையாக சிந்தித்து ஆற்றுகிற வேலைகள் மிகச்சிலவே இருக்கின்றன. ஆனால் அதற்காகத்தானே நீங்கள் எழுத்தாளனாக விரும்பியதே, இல்லையா? அதைச் செய்கிற சுதந்திரம் உங்களுக்கிருக்கிறது. அந்த சுதந்திரம் வந்தவுடன், அதைச் செய்து முடிக்க கட்டாயமும் கூடவே வந்துவிடுகிறது.

ஒரு கதையை நீங்கள் கூற முற்படுவதற்கு குறிப்பிட்ட நடை ஒன்று இருப்பதாக கருதுகிறீர்களா? உங்களது நினைவுக் குறிப்புகள் புனைவுகள் அல்லவென்றாலும், அவை தன்மைக் கூற்றிலேயே சொல்லப்பட்டிருந்தாலும் உங்கள் கதைத் தொகுப்புகளில் காணப்படும் உருவமும், லயமும் அவற்றில் இருக்கின்றன.

அது நான் ஒரு சிறுகதையாசிரியராக இருப்பதனால் இருக்கலாம். கடந்த கால ஞாபகங்களை நான் கதை கூறல் வடிவத்தில், கதை வடிவத்தில் நினைவு கூற முனைகிறேன். நாளெல்லாம் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் நான் வளர்ந்தேன். அவர்களுக்கு நிகழ்ந்த சம்பவங்களை அப்படித்தான் அவர்கள் வெளிப்படுத்தினர். நாமெல் லோருமே வேலையிலிருந்து வீட்டிற்கு வந்து நமக்கு என்ன நடந்ததென்று கதையாகத்தான் கூறுகிறோம்.

நமது வாழ்க்கைகளை நாவல்தனமாக இல்லாமல் அத்தியாயத்தனமாக நினைத்துப்பார்க்க முனைகிறோம் இல்லையா?

சரியாகக் கூறுகிறீர்கள். நாவல்தனமான வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிற வாழ்க்கையை நம்மில் பலரும் வாழநேர்வதில்லை. ஏனெனில் நம் வாழ்வு துண்டு துண்டாக்கப்பட்டுள்ள ஒன்று. ஒரு நாவலில் குறிப்பிப்ட்ட ஒரு சமுதாயத்தின் நீண்ட அனுபவச் சங்கிலிக்குப் பதிலாக இத்தகைய தருணங்கள்தான் அமைந்திருக்கின்றன.

ஒரு வேளை இதனால்தான் இங்கிலாந்தில் நாவல் செழிப்பாக வளர்ந்திருக்கலாம். ஒரேயிடத்தில் ஸ்திரமாகத் தங்கியிருக்கும் சமூகங்கள், காலகாலமாக ஒருவரையொருவரே பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள், ஒருவருக்கு நேர்கிற மாற்றம் காலப்போக்கில் தலையெடுக்கும் விதத்தை கவனித்தறியும் வாய்ப்பு - இவையெல்லாம் ஆங்கிலேய அம்சங்கள். ஆனால் சிறுகதை என்பது பரிபூரணமாக அமெரிக்க வடிவம்.

எப்படி?

ஏனென்றால் பெரிதும் குடிநிலவரமற்ற நாடோடிகளாக நாம் இருப்பதுதான். அமெரிக்கர்களில் 80 சதவீதமானோர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை குடிபெயருகின்றனர். இந்தக் கலாச்சாரத்தில் ஓர் அசாதாரணமான சமுதாயப் பெயர்வும், அதனால் ஏராளமான சமுதாயக் கலவைகளும் கலந்திருக்கின்றன. அவர்களுடைய வாழ்நாளில் தமது சமுதாய நிலையங்களைப் பெரும்பாலும் அவர்கள் மாற்றிக் கொள்கின்றனர், அல்லது அவர்களுடைய புதல்வர்கள் மாற்றுகின்றனர். இது மற்ற இடங்களில் இந்தளவிற்கு நடைபெறுவதில்லை.

இவற்றில் பெரும்பாலானவை உங்களது நினைவுக் குறிப்புகளில் காணப்படுகின்றன. உங்கள் அப்பா அவரது பிண்ணனியைப் பற்றி ஏன் உங்களிடம் பொய் சொன்னதாக நினைக்கிறீர்கள்? உதாரணத்திற்கு யூதக் கலப்பினராக இருந்ததை மறைத்தது.

அவராக இருந்ததைத் தவிர வேறொருவராக இருப்பதன் ஆழ்ந்த சுயசோகத்தில் அவர் ஏமாற்றிக் கொண்டிருந்ததாக நான் நினைக்கிறேன். அவருக்கு இந்தப் பரிதாபகரமான WASP (White Anglo-Saxon Protestant)கற்பனை இருந்தது. யூத எதிர்ப்பு அதிகமாக இருந்த தொடக்கப் பள்ளிகளில் அவர் ஆரம்பத்தில் பயின்றது இதற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் என் சகோதரர் எங்கள் அப்பாவைப்பற்றிய ஆராய்ச்சிப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கும் போது, என் அப்பா சந்தித்த மிக மோசமான யூத எதிர்ப்பு அவர் யூதர் களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தபோதுதான் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். ஏனெனில் அவருடைய உறவினர்கள் ஜெர்மனிய யூதர்களும் மருத்துவர்களும். எங்கள் பாட்டனார் ஒரு மருத்துவர், எங்கள் முப்பாட்டனார் ஒரு மருத்துவர், அவரது முப்பாட்டனார் நெப்போலியனுக்கு மருத்துவர். அவர்கள் அனைவருமே மற்றவர்களுடன் கலக்காமல் மிகுந்த கர்வமும் குறுகிய மனப்பாங்கும் கொண்டிருந்தவர்ள்.

நூற்றாண்டின் தொடக்கத்தில் போலந்திலிருந்தும் ரஷியாவிலிருந்தும் பெருமளவில் அலையலையாக யூதர்கள் அகதிகளாக இங்கே வரத்தொடங்கியதும் ஜெர்மானிய யூதர்கள் அவர்களை யித்துகள் என்றும் ஹீபீக்களென்றும் இகழ்ச்சியாக அழைக்கத் தொடங்கினர். ஜெர்மனானிய யூதர்கள் மிகவும் மதச்சார்பு கொண்ட, மிகவும் சனாதனமான, மிகவும் குழுமனப்பான்மை கொண்ட இனத்தினர். இந்த சமாச்சாரங்கள் பலவற்றை என் அப்பாவும் ஸ்வீகரித்துக் கொண்டார். இது மிக விநோதமானதொரு விஷயம்.

நீங்கள் யூதக் கலப்புடையவர் என்பதை அறிந்ததும் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

ஒரு விதத்தில் அது எனக்குப் பிடித்திருந்தது. ஐரிஷ்ஷீம், யூதமும் நல்லதொரு கலப்பாக எப்படியோ எனக்குப்பட்டது. நாய்களில் கோலியும், லாப்ராடரும் எப்படி ஒரு நல்லக்கலப்போ அதைப் போல! அதில் ஏதோவொன்று நிச்சயமாக இருக்கிறது.

விவரணைகளில் உங்களுக்கு அபாரமான ஞாபகசக்தி இருப்பதாகத் தெரிகிறது. சிறுவயதில் மற்றவர்களை விட நீங்கள் அதிகமாக கவனிப்பவராக இருந்திருக்கிறீர்கள் என்று சொல்லலாமா?

மற்றவர்களை உன்னிப்பாகப் பயின்று வந்திருக்கிறேன். ஏனென்று தெரியாவிட்டாலும் நான் கூர்ந்த அவதானிப்புடன் இருந்திருக்கிறேன். ஞாபகம் என்பது வேடிக்கையானது. ஒரு நரம்பைத் தட்டிவிட்டால் எப்படி நினைவிற்கு கொண்டுவருவது என்பதில் இல்லை பிரச்சனை. எப்படி அந்த பிரவாகத்தைக் கட்டுப்படுத்துவது என்பதில்தான். அனைத்தும் வெடித்துக்கொண்டு வெளிவர அனுமதிக்க வேண்டும். ஞாபக வெள்ளத்தில் வரும் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்ததோ, சுவாரசியமானதோ அல்லவென்பதால் இந்த ஞாபக வெடிப்பை எவ்வாறு உருவப்படுத்தி, உங்களது கடந்த அர்த்தத்தைத் தருகிற கதைக்கூற்றாக்குவது என்பதுதான் பிரச்சனை. ஞாபகத்திலிருந்து எடுத்தாள்வதில் நான் மிகவும் கவனத்துடன் இருக்கிறேன். ஆனால் அதே தருணத்தில் இருந்த வேறொருவர் என்னுடையதிலிருந்து வேறுபட்டதாக ஒன்றை எழுதுவார் என்பதையும் அறிந்திருக்கிறேன்.

நீங்கள் எழுதப்போகிறீர்கள் என்பதை எப்போதுமே அறிந்திருந்தீர்களா?

எனக்கு 14 அல்லது 15 வயதாக இருக்கும்போது ஓர் எழுத்தாளராக வேண்டுமென்று நான் முடிவெடுத்தேன். அதிலிருந்து வேறு எதைச் செய்யவும் நான் விரும்பியதில்லை.

அந்த எண்ணத்தை உங்களுக்குத் தந்தது எது?

உண்மையில் என் நண்பனால் தான். என்னுடைய ஆறு வயதிலிருந்தே நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். என் நண்பர்கள் அவர்களது ஆங்கில வகுப்புகளில் அதிகப்பாராட்டு பெற வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு நான் கதைகள் எழுதித்தருவதுண்டு. அவர்களில் ஒருவன் ஒருநாள் என்னிடம், ‘‘உனக்குத் தெரியுமா, நீ ஒரு எழுத்தாளனாக இருக்க வேண்டியவன்’’ என்றான். நான் கதைகள் எழுதினாலும், வாசிப்பதில் விருப்பம் இருந்தாலும், நான் எழுதுவதும் எழுத்தாளர்கள் எழுதுவதும் இருவேறு விஷயங்கள் என்று நான் உறுதியாக நம்பியிருந்தேன். அதற்கு முன்பு என் ஆசிரியர்கள் உட்பட யாருமே என்னிடம் அதைப்போல ஒன்றைக் கூறியதில்லை. அதுதான் முதல்முறை. ஏனென்றால் கான்கிரீட் உயர்நிலைப் பள்ளியிலிருந்து எந்தவொரு ஆசிரியருக்குமே தமது மாணவர்களில் ஒருவன் எழுத்தாளனாக வரப்போகிறானென்று தோன்றியிருக்கப் போவதில்லை. ஆனால் அந்தச் சிறுவனுக்குத் தோன்றியிருக்கிறது, அவனும் சொல்லிவிட்டான். வேடிக்கை என்னவென்றால் இந்த விஷயம் எனக்குள்ளே வியாபித்து பூராவும் பற்றிக் கொண்டதுதான். அவன் என்ன சொல்கிறானென்பதை அவனே அறிந்திருக்கவில்லை. ஓர் எழுத்தாளனாக முயற்சிப்பது எத்தகையது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. ஆனால் ஒரு சிறுவன் இன்னொருவனிடம் வெகுளித்தனமாக, பிரியத்தோடு சொன்ன ஒரு விஷயம் முக்கியத்துவம் பெற்று நிறைவேறியிருப்பது மிகவும் இனிமையானவொன்றுதான்.

உங்கள் கதைகளைத் தொகுக்கும் போது அவற்றை ஒரு தொகுப்பாக திட்டமிட்டுத் தேர்ந்தெடுப்பீர்களா அல்லது சமீபத்தில் நீங்கள் எழுதிய கதைகளின் மாதிரிகளாகவா?

‘The Night in Question’ ல் நான் தொகுத்திருந்த கதைகளை விட அதிகமான கதைகளை உண்மையில் நான் எழுதியிருந்தேன். அவற்றைத் தேர்ந்தெடுக் கும்போது கதைகளின் குரல் அல்லது சித்தரிக்கப்பட்ட பிரச்சனை போன்ற வற்றிலுள்ள ஏதோவொன்று இந்தத் தொகுப்பில் ஒரு கதைகயை சேர்க்க வைக்கிறது. பாத்திரங்கள் ஒருவித சமுதாயத்தைச் சார்ந்தவர்களைப் போலவும் நினைத்துக் கொண்டேன். பொதுவான் ஓர் இடத்தைச் சார்ந்த சமுதாயமல்ல, அவர்களைப் பீடித்திருக்கும் கேள்விகளின் அடிப்படையில் கதையின் வேகத்திலும் ஏதோ இருக்கிறது. மொட்டவிழ்கிற ஓர் உணர்வு இருக்க வேண்டும். ஒரு தொகுப்பை உண்டாக்கும் போது எல்லாவித விஷயங்களும் நடைபெறுகின்றன. அந்தப் பிரச்சனையில் எழுத்தாளர்கள் பெரும் சிரமத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

‘The Night in Question’ என்பது எவ்வாறு தலைப்புச் சிறுகதையாக ஆனது?

ஒரு படைப்பைத் தொடங்கும்போது அதன் தலைப்பு எதுவாக இருக்கப் போகிறதென்று பெரும்பாலும் எனக்குத் தெரிவதில்லை. ஆனால் அக்கதையை நான் எழுதிக்கொண்டிருக்கையில் அந்தப்பாத்திரம் ‘The Night in Question’ என்ற அச்சொற்றொடரை பயன்படுத்துகிறது. வழக்கறிஞர்களும், அல்லது காவல்துறை அதிகாரிகளும் நடந்த ஏதோ அசம்பாவிதத்தோடு இணைத்து உபயோகிக்கிற சொற்றொடர்! அந்த வரியை நான் எழுதியபோது அந்தப் பிரயோகம் மட்டும் பிற வார்த்தைகளிலிருந்து மாறுபட்ட வண்ணத்தில் இருப்பதைப்போல அந்தப் பக்கத்திலிருந்து மேலெழும்பி வந்தது. அதை என் தலையிலிருந்து அகற்ற முடியாமற் போய்விட்டது.

ஒருகதையைத் தொடங்க அது ஓர் அற்புதமான சொற்றொடராகப்பட்டது. ஏதோ ஓரு துர்ச்சகுனத்தைக் குறிப்பது போல, ஒரு வித கட்டவிழ்க்கும் வாசகமாகத் தோன்றியது. ‘நமது கதை தொடங்கும் போது’ அல்லது ‘முன்னொரு காலத்தில்’ அல்லது ‘ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர்’ என்பவற்றைப் போலவே ‘பிரச்சனைக்குரிய அந்த இரவு’ என்ற அந்தத்துவக்கம் ஒரு முழுத் தொகுப்பிற்கு முதல் படியைப் போல, ஒரு முழுமையான ஷெஹரஸாத் அம்சம் பொருந்தி எனது கதைப்பிரதேசத்திற்கு உங்களை வரவேற்கிறாற் போல எனக்குத் தோன்றுகிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com