 |
அய்யப்ப மாதவன் கவிதைகள்
சாகசம்
அப்பையனின் காகம்
கதவைக் கொத்திக்கொண்டிருக்கிறது
இரும்புச் சதையைக் கடித்துக் குதறுகிறது
விழுங்குகிறது
கதவை முழுதும் விழுங்கிய அது
பறக்க முடியாமல் பறக்கிறது
அச்சிறுவன் பறக்கும் கதவை
பார்த்துக்கொண்டிருக்கிறான்.
3366 க்வாலிஸ்
3366 என்ற எண் கொண்ட க்வாலிஸ் காரைத் தேடும்
பிழைப்பாகிவிட்டது இன்று
பார்க்கவிருக்கும் அவனை இதுவரைப் பார்த்ததில்லை
போனில் அழைத்துப் பேசிக்கொண்டே இருக்கிறேன்
பச்சை நிறத்தில் சட்டையணிந்து
முதல்வரிசையில் 3366 எண் கொண்ட
க்வாலிஸ் கார் அருகில் இருப்பதாகக் கூறுகிறான்
எந்தப் பக்கத்து முதல் வரிசையென்று
கேட்கத் தவறிவிட்டேன்
ஒவ்வொரு வரிசையாய் வேர்வை கொட்ட
‘இப்படியும் ஒரு பிழைப்பா’
என்ற பெரும் வெறுப்பில்
கார் பைத்தியம் போல
இருக்கிற QUALIAS CAR ஐ எல்லாம்
பார்க்கிறேன்
எந்த வரிசையிலும் எங்குமே இல்லாத
வருத்தத்தில் ஒரு சிகரெட்டைப் புகைக்கிறேன்
மறுபடியும் போனில் பேசுகிறான் பச்சை சட்டைக்காரனிடம்
அவன் வேறொரு பிரச்சினையில்
அங்கிருந்து கிளம்பிவிட்டதாகக் கூறுகிறான்
3366 போய்விட்டது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|